வாப்பாவின் மடி


ஹெச்.ஜி.ரசூல்
எனக்கு தொப்புள் கொடியறுத்த
அம்மச்சியைப் பார்த்ததில்லை …
கர்ப்பப் பையிலிருந்து கிழித்தெடுக்கப்பட்டு
பூமியின் முதற்காற்றை சுவாசித்தபோது
என்காதுகளில் பாங்கு இகாமத் சொன்ன
எலப்பையின் குரல் ஓர்மையில் இல்லை…
சுட்டுவிரலால்
சேனைதண்ணி தொட்டுவைத்தபோது
அந்த முதல்ருசி எப்படி இருந்திருக்கும்…
நோட்டுப் புத்தகங்களின் பக்கங்களில்
பாதுகாப்போடு வைத்திருந்த மயிலிறகு
இன்னமும் குட்டிப் போடவில்லை
நாலெழுத்து படிக்கவும்
நாலணாசம்பாதிக்கவும் சொல்லித்தந்த வாப்பா
ஒரு துறவி போல
உறவுகடந்து கடல்கடந்து
கண்ணுக்கெட்டாத தூரத்தில்
என்றேனும் ஒருநாள்
வாப்பாவின் மடியில் தலைவைத்து
ஓர் இரவு முழுதும் தூங்கவேண்டும்
Series Navigationதமிழ் விக்கிப்பீடியா ஒரு ஊடகப் போட்டிப்ளாட் துளசி