வாழ்க்கை ஒரு வானவில் -26

This entry is part 16 of 16 in the series 26 அக்டோபர் 2014

குழந்தை ஊர்மிளா கோமதியின் முழுப் பொறுப்பு ஆனதில் அவளுக்குப் பொழுது மிக நன்றாய்ப் போய்க்கொண்டிருந்தது. தன் அம்மாவுக்குத் தானே ஒரு குழந்தை என்பதாய் அதுகாறும் நினைத்துக்கொண்டிருந்த கோமதி அந்தக் குழந்தையைக் கொஞ்சும் போதெல்லாம் தாய்மை உணர்ச்சிக்கு ஆளானாள். தன்னை வயதில் பெரியவளாய் நினைக்கவும் தலைப்பட்டாள்.
முன்பின் அறிமுகமே இல்லாத பிற குடும்பத்துக் குழந்தையிடம் இவ்வளவு ஒட்டுதல் ஏற்படுமா என்னும் வியப்பு அவளுக்கு அடிக்கடி வந்துகொண்டிருந்தது. அவளுள் ஏதேதோ கற்பனைகள் விரிந்தன. அப்போதெல்லாம், ‘சேச்சே’ என்று அவள் தலையைக் குலுக்கிக்கொண்டாள். …
கோமதி ஒரு நாள் குளியல் அறையில் இருந்த போது, பருவதம் மாலாவிடம், “உன்னை அந்தப் பிள்ளை ரமணி நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பான்னுதான் தோண்றது. கோமதி அந்தக் குழந்தைகிட்ட உசிரா யிருக்கிறதைப் பார்க்கிறப்போ அந்தப் பிள்ளை சேதுவுக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக் குடுக்கலாமேன்னு ஒரு எண்ணம் வருது. நம்ம ராஜாவை விட்டு சேதுவோட அது பத்திப் பேசச் சொல்லணும்…..” என்றாள்.
‘”ஆமாம்மா. நல்ல யோசனைதான்!” என்று மாலாவும் அம்மாவின் எண்ணத்தை அங்கீகரித்தாள்.
“ஆனா நீ ஒண்ணும் அவசரப்பட்டு கோமதிகிட்ட இது பத்தி எதுவும் பேச வேண்டாம். முதல்ல ராஜா சேதுகிட்ட பேசட்டும். அவன் சம்மாதிச்சா, அதுக்கு அப்புறம் அவ கிட்ட சொல்லிக்கலாம். …” “கரெக்டும்மா…”
…… “அன்னைக்கு ராத்திரி உங்ககிட்ட, ‘எனக்கு இன்னொண்ணு கூடத் தோணுது, ஆனா அதை அப்புறமாச் சொல்றேன்’னு சொன்னேனில்லையா?” என்ற ரமணியைத் தூக்கம் கலைந்துபோன சேதுரத்தினம் வியப்பாக ஏறிட்டான்.
“ஆமா. சொன்னீங்க. நானே அது பத்திக் கேக்கணும்னு இருந்தேன். என்ன சொல்லணும்னு நினைச்சீங்க, ரமணி?”
“… ஆமா? நீங்க ராஜாவுடைய தங்கை கோமதியைக் கல்யாணம் பண்ணிக்கலாமே, சேது! உங்க குழந்தை மேல அவ உசிரா யிருக்கா. குழந்தையும் அவ கிட்ட நல்லா ஒட்டிண்டு இருக்கு… என்ன சொல்றீங்க? …”
“ஊர்மிளா இருந்த இடத்துல இன்னொரு பொண்ணா! என்னால நினைச்சே பார்க்க முடியாது, ரமணி!”
“அப்படிச் சொல்லக் கூடாது நீங்க…காலம் எப்படிப்பட்ட காயத்தையும் ஆத்திடும், சேது. இப்ப உடனே நீங்க அவளைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு இல்லே. குறைஞ்சது ஒரு வருஷமாவது ஆகட்டும். உங்க மனசும் கொஞ்சம் ஆறட்டும். அதுக்கு அப்புறம் யோசிக்கலாம். உங்க மனைவியோட கடைசி விருப்பமும் அதானே? உங்களுக்கும் ரொம்பச் சின்ன வயசு. இல்லையா? இப்படியே ஆயுசு முழுக்கவும் இருந்துட முடியாது. இருக்கவும் கூடாது….யோசியுங்க, சேது. கொஞ்ச நாள் கழிச்சு ஒரு நல்ல முடிவாச் சொல்லுங்க. நீங்க கோமதியைக் கல்யாணம் பண்ணிக்கிறதுதான் நல்லது.. குழந்தையும் அவகிட்ட ஒட்டுதாலாயிருக்கு. அதையும் நாம் பார்க்கணும் இல்லையா? … உங்க செண்ட்டிமெண்ட்டைக் கொஞ்சம் ஒதுக்கி வையுங்க, சேது… உங்க நன்மைக்காக மட்டுமில்லே. உங்க குழந்தை உங்களை விடவும் அதிக முக்கியம், இல்லையா?”
“நீங்க சொல்றது சரிதான், ரமணி. யோசிக்கிறேன். ஆனா கொஞ்ச நாள் போகட்டும்….”
“அது போதும், சேது. கண்ணை மூடிண்டு தூங்குங்க…. அப்புறம் நான் ராஜா கிட்ட இதைப் பத்திப் பேசறேன்….”
“எனக்காக இவ்வளவு கவலைப்படுறீங்களே, ரமணி! ரொம்ப தேங்க்ஸ்! என்ற சேதுரத்தினம் ரமணியின் கையைத் தன்னுடையதுடன் கோத்துக்கொண்டான். …. தான் சொன்னபடியே இரண்டு நாள்களுக்குப் பிறகு, ஒரு தோதான நேரத்தில் ரமணி ராமரத்தினத்தின் வீட்டுக்குப் போய் அவனைச் சந்தித்தான். அன்று விடுமுறையல்லாத ஒரு திங்கள் கிழமை. சேதுரத்தினம் காலை நேரத்தில் வரமாட்டான் என்பதால் அரை நாளுக்கு அன்று விடுப்பு எடுத்துக்கொண்டு அவன் அங்கே சென்றான்.
“அடா! வா, வா. … நானே உன்னைச் சந்திச்சுப் பேசணும்னு இருந்தேன். ரெண்டு விஷயம். முதல் விஷயம் – எனக்கு ஒரு துணிக்கடையில சூப்பர்வைசர் வேலை கிடைச்சிருக்கு….” என்றபடி ராமரத்தினம் அவனை வரவேற்றான்.
“அப்படியா! ரொம்ப சந்தோஷம்… ரெண்டாவது விஷயம் என்ன?”
“அது எங்கம்மாவுடைய யோசனை… அது செயல்படுமா இல்லையான்னு தெரியல்லே… செயல்பட்டா சந்தோஷமான விஷயமா யிருக்கும்.” “என்னது?”
“நம்ம சேது சாருக்கு கோமதியைக் குடுக்கலாமேன்னு அம்மா நினைக்கிறாங்க. நீதான் இப்ப சேது சாரோட அதிக நெருக்கமாப் பழகிண்டு இருக்கேங்கிறதால, உன்னை விட்டு அவரைக் கேக்கச் சொல்லலாமேன்னு!”
“அட! அதைப் பத்திப் பேசுறதுக்குத்தான் நானே இப்ப அரை நாள் லீவ் போட்டுட்டு வந்தேன். சேது இல்லாத நேரத்துல பேசணும்னுதான் காலை வேளையில வந்தேன்…..”
“உனக்கு இந்த யோசனை எப்படி வந்தது, ரமணி? சேதுசாரே ஏதாவது சொன்னாரா?”
“இல்லேல்லே. இது என் மனசில தோணின யோசனைதான். ஆனா ரெண்டு நாளுக்கு முந்தி நான் மிஸ்டர் சேது கிட்ட சொன்னப்ப அவர் சம்மதிக்கல்லே. ஊர்மிளா இருந்த இடத்துல இன்னொருத்தியான்றாப்லதான் பேசினார். ஆனா நான் எடுத்துச் சொன்னேன். இப்படியே ஆயுசு பூரா இருந்துட முடியாதுன்னு… அப்புறம் ஒரு வழியா யோசிக்கிறேன்னார்….அவர் யோசிக்கிறேன்னு சொன்னதே பெரிய விஷயம். அதே யோசனை உங்கம்மா மனசிலேயும் தோணியிருக்கிறதால், இது கடவுளோட அருள் பெத்ததுன்னு தோண்றது…. பார்க்கலாம்…. அப்புறமா மிஸ்டர் சேதுவோட பேசு….அப்ப நான் கிளம்பறேன்…”
“அதெப்படி உடனே கிளம்புவே? மாலா கிட்ட அந்த லெட்டரோட காப்பி கேட்டியாமே எழுதி வெச்சிருக்கா. வாங்கிண்டு போ…மாலா, மாலா!”
“உங்கம்மா இல்லையா?”
“இல்லே. காய் வாங்கக் கடைக்குப் போயிருக்கா..”
“அதானே பார்த்தேன்?”
அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த மாலா கடிதத்துடன் முகம் சிவக்க அங்கு வந்தாள். ”மொட்டை மாடிக்கு வேணாப் போங்க.” “இல்லேல்லே. இங்கேயே வாங்கிக்கறேன்… அது சரி, அந்த லெட்டரை எழுதுறதுக்கு உன் தங்கைக்கு இத்தனை நாள் ஆச்சா?” “எங்கம்மாவுக்குத் தெரியாம எழுதணும் இல்லையா! சமய சந்தர்ப்பம் பார்த்துத்தானே எழுதணும்? அதான்ன்னு நினைக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு முகம்0 திருப்பி ராமரத்தினம் மாலாவைப் பார்த்தான். அவள் கத்துச் சிவப்புடன் தலை குனிந்துகொண்டிருந்தாள். எனும், “சாப்பிட்டுட்டுப் போங்களேன்” என்று உபசரித்தாள். “சேது சார் வீட்டிலே சாப்பிட்டுட்டுக் கையில மத்தியானத்துக்கு டிஃபனும் எடுத்துண்டுதான் கிளம்பினேன். நான் அரை நாள் லீவ் போட்டது அவருக்குத் தெரியாது…. அப்ப நான் கிளம்பறேன்….” “எங்கம்மா வந்துடட்டுமே? அவங்ககிட்டேயும் ஒரு வார்த்தை பேசிட்டுப் போங்களேன்,” என்று மாலா சொன்னதும், “அம்மா மேல எதுக்குப் பழி போடுறே? இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போங்கன்னு சொன்னா ஆச்சு!” என்று ராமரத்தினம் அவளைச் சீண்டினான். அவனது சீண்டலுக்குப் பதில் சொல்லாமல்,, “அம்மா திரும்பி வர்றதுக்குள்ள லெட்டரைக் குடுத்துடறேன்,” என்ற மாலா அதை ரமணியை நோக்கி நீட்டினாள். ரமணி அதை வாங்கி வைத்துக்கொண்டான். பிறகு நாற்காலிகளில் அமர்ந்து ரமணியும் ராமரத்தினமும் பேசத் தொடங்கினார்கள். “அந்தத் துணிக்கடை வேலை உனக்கு எப்படிக் கிடைச்சுது, ராஜா?” “முருகன் விலாஸ் ஓட்டல் ஃப்ரண்ட் கணபதி மூலமாக் கிடைச்சது. அவனோட சித்தப்பா அந்தத் துணிக்கடை முதலாளிக்குப் பழக்கமானவர். அவன் தான் சிபாரிசு பண்ணினான். அவனோட சித்தப்பா மூலமா அது கிடைச்சுது. கொஞ்சம் கணக்கு வழக்கு வேலையும் இருக்குமாம். மாசம் இப்போதைக்கு ரெண்டாயிரம் தர்றேன்னிருக்காங்க….நாளைலேர்ந்து போகணும்.” “கணபதியே அந்த வேலையை ஏத்துண்டிருந்திருக்கலாமே?” “அவன் ஒம்பதாம் வகுப்போட நிறுத்திட்டானே! கணக்கு வழக்குப் பார்க்கிறதுக்கெலாம் அந்தப் படிப்புப் போதாது. அதான் எனக்கு உதவி பண்ணினான்.” இதற்குள் அடுக்களைக்குச் சென்றிருந்த மாலா குழந்தைக்குப் புட்டிப்பால் புகட்டிக்கொண்டிருந்த கோமதியின் முகத்துப் பரவசத்தைக் கவனித்துத் தனக்குள் சிரித்துக்கொண்டாள். கோவிலில் அன்று ‘நிகழ்ந்தது’ கோமதியை மிகப் பெரும் அளவுக்குப் பாதிக்கவில்லை என்பது சட்டென்று அவளுக்கு ஞாபகம் வந்தது. அதில் தான் ஆற்றியுள்ள பங்கு பற்றிய பெருமிதம் அவளுக்கு ஏற்பட்டது. அவள் நிம்மதியுடன் பெருமூச்சு விட்டாள். அவள் அம்மாவுக்கு அது தெரியாது என்று நினைத்துப் பார்த்து அவள் தலையைக் குலுக்கிக்கொண்டாள். ரமணியும் ராமரத்தினமும் பேசிக்கொண்டிருந்த போது, கறிகாய்ப் பையுடன் பருவதம் திரும்,பிவந்தாள். ரமணியைப் பார்த்ததும் மகிழ்ந்து போய், “வாங்க, வாங்க!” என்றாள். ”எதுக்கு எந்தப் புது மரியாதையெல்லாம் – வாங்க போங்கன்னுட்டு. முந்தி மாதிரி பேர் சொல்லியே கூப்பிடுங்க. நீன்னே பேசுங்க…” என்ற ரமணி சிரித்தான். ”அதெப்படி? வருங்கால மாப்பிள்ளையாச்சே! … இன்னைக்கு லீவா?” ”இல்லே. அரை நாளுக்கு லீவு போட்டிருக்கேன். ஒரு முக்கியமான விஷயம் சொல்றதுக்காக வந்தேன்….” என்று அவன் தொடங்கியதும், குரலைத் தணித்துக்கொண்ட ராமரத்தினம், “அதாம்மா – நீ சொன்னியே, அதே யோசனை ரமணிக்கும் தோணியிருக்கு. சேது சார் கிட்ட அது பத்திப் பேசினானாம். கொஞ்ச நாள் கழிச்சு சரின்னுடுவார்னு ரமணி நினைக்கிறான். அது பத்திப் பேசறதுக்குத்தான் வந்திருக்கான். என்னை சேதுசாரோட பேசச் சொல்றான். பேசட்டுமா?” தன் குரலைத் தணித்துக்கொண்டபின், ”அதான் சொல்லிட்டேனேடா? பேசு. ஆனா நான் ஏற்கெனவே சொன்னபடி கோமதிக்கு இப்போதைக்கு விஷயம் தெரிய வேண்டாம். அவர் சரின்னு சொன்ன பிற்பாடு அவ கிட்ட சொல்லிக்கலாம்…” என்ற பருவதத்தின் கூற்றை இருவருமே, “ஆமாம்மா!”, என்றும், “நீங்க சொல்றது கரெக்ட்டும்மா!” என்று ரமணியும் முறையே ஆமோதித்தார்கள். ”சாப்பிட்டுட்டுப் போலாமே!. பாதிச் சமையல் ஏற்கெனவே ஆயிடுத்து. இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல ஆயிடும்…..” ”இல்லேம்மா. நான் சாப்பிட்டாச்சு. அப்ப கெளம்பறேன், ராஜா….. போயிட்டு வறேன். …. சேது சார் கிட்ட ராஜாவும் பேசட்டும், நானும் இன்னும் அப்பப்ப பேசறேன். அவர் தயங்கினாலும்,. இந்த விஷயத்துல அவரை மசிய வைக்க வேண்டியது என்னோட பொறுப்பும்மா. கவலையே படாதீங்க….” ”சரி. ரொம்ப தேங்க்ஸ்… ராஜாவுக்கும் இப்ப வாங்குறதைவிட அதிகச் சம்பளத்துல புதுசா ஒரு வேலை கிடைச்சிருக்கு. சொன்னானா?” ”சொன்னான்மா. வேளைன்னு வந்துட்டா நல்லதெல்லாமும் வரிசையா நடந்தேறிடும். அப்ப நான் கெளம்பறேன்….” ரமணி புறப்பட்டான். அடுக்களை வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்த மாலாவிடம் ஒரு புன்சிரிப்புடனும். கண்ணசை[ப்புடனும் விடை பெற்றுக்கொண்டு வாசலுக்குப் போனான். ராமரத்தினம் அவனது பைக் புறப்படும் வரை இருந்து பார்த்துவிட்டு உள்ளே வந்தான்….
…தன் அலுவலகத்தை யடைந்ததும் பக்கத்தில் எவரும் இல்லாத நேரத்தில் ரமணி மாலாவின் கடிதத்தை எடுத்துப் படித்தான். தன் அப்பாவுக்கு அவள் மீது தப்பு அபிப்பிராயம் ஏற்படும்படியான எதுவும் அதில் இல்லை என்று நினைத்து அவர் மீது சினங்கொண்டான். அவளை அவர் ‘தேவடியா’ என்று விமர்சித்ததுதான் உடனே ஞாபகத்தில் நெரடியது. ‘ஆம்பளைதான் முதல்ல காதலைச் சொல்லணும்கிறதெல்லாம் என்ன சட்டம்?’ என்று எண்ணித் தன்னுள் அவன் சிரித்துக்கொண்டான்.
அன்றே மாலையில் ராமரத்தினம் சேதுரத்தினத்தின் வீட்டுக்குப் போனான். ரமணியும் அப்போது உடனிருந்தான். கதவு திறந்த ரமணியுடன் உள்ளே சென்று அமர்ந்த ராமரத்தினம், சேதுரத்தினம் சமையற்கட்டில் வேலை செய்துகொண்டிருந்ததைப் பார்த்தான். “வா, ராமு.” என்று அங்கிருந்தவாறே குரல் கொடுத்த சேதுரத்தினத்திடம்,, “சமையல்கட்டுல என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்டபடி அங்கு சென்ற ராமரத்தினம், “ராத்திரி ஓட்டலுக்குப் போறதில்லையா?” என்று விசாரித்தான். “இல்லே, ராமு. நீ வேலையை விட்டு நின்னதுலேர்ந்தே நான் போறதில்லே. ஆனா தினமும் உப்புமா, தோசைன்னு பண்ணிண்டிருக்கிறதில்லே. என்னிக்கானும்தான். சில நாள் ரமணியும் நானும் வேற ஓட்டலுக்குப் போறதுண்டு. இன்னைக்கு உப்புமா கிளறிண்டிருக்கேன். ரவை மிச்சம் இருந்தது. வெச்சா, வண்டு வந்து வீணாயிடும். அதான். நீயும் சாப்பிடலாம்….”
“இல்லே. அம்மா இன்னிக்கு எனக்கும் சேர்த்து இட்டிலி வார்த்து வெச்சிருக்காங்க. நீங்க அப்ப ராத்திரி அங்க வர மாட்டீங்க, இல்லியா?”
“ஆமா. ஆஃபீஸ் வேலை வேற வீட்டுக்கு எடுத்டுண்டு வந்திருக்கேன். அதனால இன்னிக்கு வர மாட்டேன். திடீர்னு வந்த வேலை. அதான் முன் கூட்டிச் சொல்ல முடியல்லே. அம்மாகிட்ட சாரி சோன்னேன்னு சொல்லிடு.”
“அதனால என்ன? இட்டிலிதானே? நாளைக்குக் காலை அது உப்புமாவா அவதாரம் எடுத்துடும், ஒண்ணும் வேஸ்ட் ஆயிடாது….”
“அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதான் இங்க வந்தேன். எங்க வீட்டுல வெச்சு கோமதி எதிர்ல பேச முடியாது. அதான்…” சேது ரத்தினம் சட்டென்று திரும்பிப் பார்த்தான். “ரமணி வந்து அது பத்திச் சொன்னானா?”
“அவன் சொல்லி இது பத்தி நான் பேசல்லே, சேது சார். எங்க அம்மாவுக்குத் தானாவே தோணின யோசனை இது. ரமணிக்கும் அதே யோசனை வந்திருக்கு. கடவுள் சித்தம் அதுல கண்டிப்பா யிருக்கணும். இல்லாட்டி ரெண்டு பேருக்கும் ஒரே யோசனை வராது… நீங்களும் இப்படியே காலத்தைக் கடத்திட முடியாது, சேது சார். அது கூடவும் கூடாது…நீங்க சரின்னு மட்டும் சொல்லிட்டாப் போறும். ஆனா அவளுக்கு நேர்ந்துட்ட அவ;லத்தைப் பொருள்படுத்தாம நீங்க அவளை ஏத்துக்கணும்னு நான் நினைக்கிறது கூட ஒரு விதத்துல சரி இல்லேதான்.”
“அது மாதிரி குறுகின மனப்பான்மை யெல்லாம் எங்கிட்ட கிடையாது, ராமு. அப்படிப் பார்த்தா, நான் இன்னொரு பொண்ணோட வாழ்ந்து ஒரு குழந்தையும் பெத்தவனில்லையா? … நானும் நேத்து ராத்திரி பூரா நல்லா யோசனை பண்ணிப் பார்த்தேன். குழந்தை மேல உசிராய் இருக்கிற கோமதியைக் காட்டிலும் நல்ல பொண்ணு எனக்குக் கிடைக்க மாட்டா. குழந்தையும் அவ கிட்ட ஒட்டிண்டு இருக்கா. ஊர்மிளாவுடைய எண்ணமும் அதுதான். அதனால நான் சரின்னு சொல்லலாம்னுதான் இருக்கேன்… ஆனால், ஒரு வருஷமாவது போகட்டும்… இப்பவே வேண்டாம்…”
ராமரத்தினம் கண் கலங்கிப்போய்ப் பாய்ந்து சென்று சேதுரத்தினத்தின் தோள்களைப் பின்புறமாக அணைத்துக்கொண்டான்.
“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ், சேதுசார்…..” என்ற அவன் சொற்கள் குழறின.
“சேச்சே! என்ன இது?” என்று அவன் திரும்பி அவனைப் பார்த்தான். ராமரத்தினம் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்.
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின் ராமரத்தினம் விடை பெற்றான்.
….
இரண்டு நாள்கள் கழிநத பிறகு சேதுரத்தினத்துக்குப் பழக்கம் இல்லாத புதுக் கையெழுத்தில் அவனுக்கு ஒரு கடித உறை வந்தது. அன்று ரமணியின் பைக்கில் அவன் வந்திருக்கவில்லை. தனக்கு வேலை இருப்பதால் வர நேரமாகும் என்று காலையிலேயே அவன் சொல்லியிருந்தான். அதனால் அவன் பேருந்தில் வீடு திரும்பியிருந்தான். தபால்காரர் சன்னல் வழியே வீசிப் போட்டிருந்த அந்த உறையை ஆவலுடன் அவன் எடுத்துப் பிரிக்கலுற்றான்.

Series Navigationஆத்ம கீதங்கள் -2 மங்கையர் “சரி” என்றால் .. !
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *