வாழ்வின் கோலங்கள் மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’

பாவண்ணன்

ajnabiஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு திண்ணை இணைய இதழில் மீரான் மைதீன் எழுதிய ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு, அதைப்பற்றி பல நண்பர்களிடம் திரும்பத்திரும்பப் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. அக்கதையின் பெயர் ’மஜ்னூன்’. அரபுமொழியில் அது ஒரு ஏளனச்சொல். பைத்தியம் என்பதுபோல. அரபு சிறையில் அகப்பட்ட ஒருவன், விடிந்தால் தண்டனை என்கிற நிலையில் தன் பிரியமான மனைவிக்குக் எழுதும் கடிதம்தான் அச்சிறுகதை. வேலை தேடிச் சென்ற அரபுநாட்டில், உரிய பதிவுச்சீட்டு இல்லாமல் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு தப்பித்தப்பி ஓடி, இறுதியில் காவல்துறையிடம் அகப்பட்டு சிறைப்பட்டுவிடுகிறான். அரபுநாட்டுக்கு வருவதற்காக அவன் பட்ட துன்பங்கள், அங்கு வந்தபிறகு அவன் பட்ட துன்பங்கள் அனைத்தையும் ஒருவிதமான சுயஎள்ளல் மொழியில் தொகுத்துச் சொல்லும் விதமாக இருந்தது அச்சிறுகதை. பொருளீட்டுவதற்காக ஒரு மானுடன் படும் வேதனைகளும் அவமானங்களும் எத்தகையவை என்பதை நுட்பமான மொழியில் கதை விரிவாக முன்வைத்திருந்தது. அயல்மண்ணில் குப்பை வாகனங்களில் திருட்டுப்பயணம் செய்து, அலங்கோலமான தோற்றத்தில், நகருக்குள் நடமாடும் அவனைத்தான் அந்நாட்டுச் சிறுவர்களும் பெரியவர்களும் பைத்தியம் பைத்தியம் என ஏளனம் செய்து சிரிக்கிறார்கள். விரட்டுகிறார்கள். கல்லால் அடிக்கவும் செய்கிறார்கள். யார் பைத்தியம், எது பைத்தியக்காரத்தனமானது என்கிற விவாதத்துக்கான வித்தை விதைத்துவிட்டு அச்சிறுகதை முடிந்திருந்தது. மேலும் சில ஆண்டுகள் கழித்து அவர் எழுதிய ’கவர்னர் பெத்தா’ என்கிற சிறுகதையைப் படித்தேன். அவருக்கென ஒரு சிறுகதைமொழி அழகான முறையில் கைகூடி வந்திருப்பதைக் கண்டேன். என் மனத்தில் நான் குறித்துவைத்திருக்கும் சிறந்த சிறுகதையாசிரியர்கள் பட்டியலில் அவர் பெயரை அன்றே குறித்துக்கொண்டேன். ’ஓதி எறியப்படாத முட்டைகள்’ படைப்பு அவரைச் சிறந்த நாவலாசிரியராகவும் முன்வைத்தது. அடுத்ததாக இப்போது ‘அஜ்னபி’ நாவல் வந்துள்ளது. கடந்த பதினாறு ஆண்டுகளாக எழுதி வரும் அவருடைய சீரான வளர்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது.
’அஜ்னபி’ ஒருவகையில் மஜ்னூன் போன்றவர்களின் கதைகளைத் தொகுத்து முன்வைத்த முயற்சி என்றே தோன்றுகிறது. விசா தாளுக்காக தன் சக்திக்கு மீறி கடன் வாங்கிக் கொடுத்துவிட்டு, பாலைவன தேசத்தில் ஒட்டகம் மேய்ப்பவர்கள், ஆடுகள் மேய்ப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், வாகனங்கள் ஓட்டுகிறவர்கள், சின்னச்சின்ன ஏவல்வேலைகள் செய்கிறவர்கள், தையல் தொழில் செய்பவர்கள், கட்டடத்தொழில் செய்பவர்கள், கறிக்கடையில் வேலை செய்பவர்கள், உணவுவிடுதிகளில் வேலை செய்பவர்கள் என நாவலில் இடம்பெறும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் மஜ்னூன் போன்றவர்கள். ஆனால், அவர்கள் தாயக மண்ணில் வாழ வேறு வழியில்லை. தன் குடும்பம் பசியின்றி உணவுண்ணவும் சகோதரசகோதரிகளை கைதூக்கிவிடவும் தேவையான பணத்தைச் சம்பாதிக்க அவர்கள் அரபுதேசம் செல்கிறார்கள். ஒரு காலத்தில் தேயிலைத்தோட்டத் தொழிலாளியாக இலங்கை, மலேசியா, பிஜி தீவுகளுக்குச் சென்றவர்களைப்போல, நம் காலத்தில் அரபுதேசத்தை நோக்கிச் செல்கிறார்கள். யோசித்துப் பார்த்தால், மானுடகுலம் வாழ்க்கைக்கான வழிதேடி ஆதிகாலத்திலிருந்து ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். பொருள்வயின் பிரிந்திருக்கும் இவ்வாழ்க்கை, அவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் எப்படி வடிவமைத்திருக்கிறது என்பதை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பார்க்கவைக்கிறது அஜ்னபி.
அரபுதேசத்தில் அரேபியர்கள் அல்லாத மற்றவர்கள் அனைவரையும் குறிக்கும் பட்டச்சொல்தான் அஜ்னபி. வட இந்தியாவில் தென்னிந்தியர்களை மதராசி என்பதுபோல, கேரளதேசத்தில் தமிழர்களை பாண்டிகள் என்பதுபோல, கர்நாடகத்தில் கொங்கரு என்பதுபோல, தெலுங்கு தேசத்தில் அரவாடு என்பதுபோல, அஜ்னபி ஒரு அடையாளச்சொல். அதைப் பொருட்படுத்தாமல், எழுபதுகளிலும் எண்பதுகளிலும் அரபு தேசத்தை நோக்கி ஏராளமானவர்கள் சென்றார்கள். ஊருக்கு ஊர் ஏஜெண்டுகள் வாடகை வீட்டில் அலுவலகம் நடத்தி, ஆள்களை ஆசைகாட்டி வலைவீசிப் பிடித்து, கடவுச்சீட்டு வாங்கிக் கொடுத்து, விசா வாங்கி, பம்பாயில் (அப்போது மும்பை அல்ல) மெடிக்கல் முடித்து விமானத்தில் ஏற்றிவிடுவார்கள். ஆண்களுக்கு ஆபீஸ்பாய் வேலை, பெண்களுக்கு ஆயா வேலை என்ற ஒப்பந்தப் பேச்சுக்கு, அந்தப் பாலைவன மண்ணில் இறங்கிய பிறகு ஒரு பொருளும் இருப்பதில்லை. கண்ணீரிலும் வேர்வையில் நனைந்தபடி கிடைத்த வேலையைச் செய்து, வாங்கிச் சென்ற கடனை அடைக்கும் வேகத்தில் மூழ்கத் தொடங்கிவிடுவார்கள் அவர்கள். ஒவ்வொருவரைச் சுற்றியும் ஏராளமான கனவுகள். அவஸ்தைகள். வலிகள். வேதனைகள். தூக்கமற்ற இரவுகள். மனநிலைப் பிறழ்ச்சியின் விளிம்புவரை சென்று ஒவ்வொருவரும் மீண்டு வருவார்கள். பொருளாதார அளவில் சிறிதளவேனும் முன்னெறுவதற்கு அரபுதேச வாழ்க்கை துணையாக ஒருபக்கம் இருந்ததென்றாலும், இன்னொரு பக்கத்தில் அவர்களைக் கசக்கிப் பிழிந்து சக்கையாக்கியது என்பதும் உண்மை.
காலி பெப்ஸி டின்களை உதைத்துக்கொண்டே நடக்கும் சிறுவர்களையும் பெரியவர்களையும் இந்த நாவலில் பல இடங்களில் மீரான் மைதீன் சித்தரிக்கிறார். தெருவைப்பற்றிய ஒவ்வொரு சித்தரிப்பிலும் இது இடம்பெறுகிறது. அரபியர்கள் கால்பந்தாட்டத்தில் ஆர்வம் மிகுந்தவர்கள். அவர்களுக்கு சாலையில் கிடக்கும் ஒவ்வொரு பொருளும் கால்பந்தாகவே தெரிகிறது. தனியாக நடப்பவன் அதை உதைத்துக்கொண்டே செல்கிறான். கூட்டமாகச் செல்பவர்கள் கால்களிடையே தள்ளித்தள்ளி, அதை ஒரு ஆட்டமாக மாற்றிவிடுகிறார்கள். அரபுப்பகுதிகளில் வாழ நேர்ந்த அஜ்னபிகள் வாழ்க்கையும் கிட்டத்தட்ட இந்தப் பெப்ஸி டின்கள்போன்றதுதான். பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் அவர்கள் நடக்கும்போது தடுத்து நிறுத்தலாம். அவர்களை அடிக்கலாம். காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அடைக்கலாம். முதலாளிகள் வேலையிடங்களிலேயே அவர்களை இருட்டறையில் வைத்து வதைக்கலாம். தெருவில் நடக்கும்போது கல்லால் அடித்துத் துரத்தலாம். அயல்தேச வாழ்வின் அவலங்களை ஒருவித நகைச்சுவை உணர்வோடு மைதீன் சித்தரித்துச் சென்றாலும் வாசிக்கும்போது மனம் கனத்துவிடுகிறது. சிரிக்கப் பழகாதவர்கள் மனம் சிதைந்து பைத்தியமாகிவிடக்கூடும் என்றொரு பாத்திரம் நாவலில் சொல்லும் இடமொன்றுண்டு. அது நூற்றுக்குநூறு சத்தியம்.
நாவலின் மையப்பாத்திரமாக இருப்பவன் ஃபைசல். பல இடங்களிலிருந்து ஆபத்துமிகுந்த பயணங்கள் செய்து, ஜித்தாவுக்கு வந்து சேர்ந்து, அங்கே அமைந்த நண்பர்கள் உதவியால் எமெர்ஜென்ஸி பாஸ்போர்ட் வாங்கி, இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல முயற்சி எடுக்கப்படுகிறது. ஃபைசல் நாவலின் மையச்சரடு. அவனைச் சுற்றி பல மனிதர்கள் வாழ்கிறார்கள். அவனைப்போலவே அவர்களும் அஜ்னபிகள். எல்லா அஜ்னபிகளும் அரபிகளை வெறுப்பதில்லை. அதுபோல எல்லா அரபிகளும் அஜ்னபிகளை வெறுப்பதில்லை. நபியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, உழைப்பவனின் உடல்வியர்வை உலர்வதற்கு முன்பாக, சம்பளத்தைக் கொடுத்துவிடும் அரபிகளும் இருக்கிறார்கள். கைகால்களைக் கட்டிப் போட்டு, இருட்டறையில் வைத்து வேளாவேளைக்குச் சோறு போடும் அரபிகளும் உண்டு. பொதுமைப்படுத்திவிட முடியாதபடி அமைந்திருக்கிறது மனிதவாழ்க்கை.
வேலைநேரத்தில் உழைப்பு அவர்களை வேறெதையும் சிந்திக்க முடியாதபடி வைத்திருக்கிறது. வேலையை முடித்துக்கொண்டு அறைக்குத் திரும்பியதும் தனிமை அவர்களை வாட்டியெடுக்கிறது. தனிமையை நினைவுகளால் விரட்ட முயற்சி செய்கிறார்கள். குடும்பத்தைப்பற்றிய நினைவுகளாலும் ஊரைப்பற்றிய நினைவுகளாலும் மனத்தை நிரப்பிக் கொள்கிறார்கள். அள்ளியள்ளிக் கொட்டினாலும் நிரம்பாத மனம் அவர்களைப் பைத்தியம் பிடித்தவர்களாக மாற்றுகிறது. குழுவாக நண்பர்கள் சேர்ந்து பாலியல் கதைகள் பேசுகிறார்கள். நீலப்படம் பார்க்கிறார்கள். அரசியல் பேசுகிறார்கள். மது அருந்துகிறார்கள். சீட்டு விளையாடுகிறார்கள். தொலைபேசியில் பாலியல் விஷயங்கள் பேசுகிறார்கள். தூங்குகிறார்கள். ஃபைசலைச் சுற்றிலும் பல விதமான மனிதர்கள் இடம்பெறுகிறார்கள். துன்பமாக இருந்தாலும் இன்பமாக இருந்தாலும், எதிலும் ஒரு நிரந்தரமற்ற தன்மையே ஓங்கியிருக்கிறது. நிரந்தரமற்ற கணங்களைத் தொகுத்துச் சொல்லும் போக்கில் மானுட வாழ்வின் நிரந்தரமின்மையையே நாவல் அடையாளப்படுத்துகிறது.
நாவலில் இடம்பெறும் எண்ணற்ற பாத்திரங்களில் மறக்கமுடியாத ஒரு பாத்திரம் அரூஷா. அவளும் ஓர் அஜ்னபிதான். இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு பெண். ஃபைசல் அடிவாங்கி இருட்டறையில் அடைபட்டுக் கிடக்கும்போது, அவனுக்கு உணவைக் கொண்டுவந்து கொடுப்பவள். ஃபைசலும் அவளும் ஒரே முதலாளியிடம் வேலை செய்பவர்கள். கடமை ஒரு கட்டத்தில் இரக்கமாக மாறி, பிறகு கனிவாக மாற்றமுற்று, மெல்லமெல்ல காதலாக உருமாறி, அவனிடம் தன்னையே இழக்கிறாள் அவள். “ஏமாற்றி விடுவாயா?” என்கிற அச்சம் ஒருபக்கம். “உன்னோடுதான் நான் வாழவேண்டும்” என்கிற ஆவல் மறுபக்கம். அச்சத்துக்கும் ஆவலுக்கும் இடையே ஊடாடி ஊடாடி தினமும் வீடு உறங்கும் வேளையில் அவன் அறைக்குள் வந்து மோகத்துடன் தழுவிக்கொள்ளும் அவள் காதல், ஒருவித கனவுச்சாயலுடனும் காவியத்தன்மையுடனும் அமைந்திருக்கிறது. ஈடு இணை சொல்லமுடியாதது அந்தக் காதல். ஆனால், அக்கனவையும் நம்பிக்கையையும் சிதைத்துவிட்டு, அவ்விடத்திலிருந்து தப்பித்து வெளியேறுகிறான் ஃபைசல். கணவன் மனைவியென பரிமாறிக்கொண்ட அன்பும் முத்தங்களும் காதலும் வெறுமையான ஒரு புள்ளியில் கரைந்துபோய்விடுகின்றன. அவளுக்கு இழைத்த துரோகத்தைப்பற்றிய குற்ற உணர்வோடு அவனும், அவனைப்பற்றிய நினைவுகளோடு அவளும் வெவ்வேறு திசைகளில் பிரிந்துபோய்விடுகிறார்கள். பிரித்து விளையாடுகிறது வாழ்க்கை விதி.
மம்மிலி இன்னொரு முக்கிய பாத்திரம். அரபு முதலாளியின் பிள்ளைகளை தன் சகோதரிகளாக எண்ணி நடந்துகொள்கிறான் அவன். அவர்களுக்குரிய மரியாதையையும் லாபப்பங்கையும் அளிக்க அவன் மனம் ஒருபோதும் தயங்கியதே இல்லை. விசாலமான அவன் அன்பும் ஆதரவும் வாழ்க்கைச்சுழலில் சிக்கித் தவித்த ஃபைசலுக்கு துடுப்புகள்போல அமைகின்றன. அரபு நாட்டிலிருந்து வெளியேறமட்டுமல்ல, அவனுக்கு தன் தங்கையை மணம்முடித்துக் கொடுத்து மைத்துனனாக மாற்றிவைத்துக் கொள்ளவும் அவன் விரும்புகிறான். கடையின் வாசலில் கூடிவிடும் பூனைகளுக்கு ஒவ்வொருநாள் அதிகாலையிலும் அவன் பால் ஊற்றி அருந்தவைக்கும் காட்சி நெகிழ்ச்சியானது. வழங்குவதற்கு அவனிடம் அன்பு உள்ளது. மன்னிக்கும் குணமும் உள்ளது. பூனைகளைப் படமெடுத்து, தன் அன்புத் தங்கைக்கு அனுப்பிவைக்கிறான் அவன். அந்தப் படத்தைப் பார்த்து அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தொலைபேசியில் அதைக் குறிப்பிடும் அவள் அம்மா, தங்கச்சங்கிலியையே கொண்டுவந்து கொடுத்தாலும் பொங்கிவராத அளவுக்கு அந்தச் சந்தோஷம் அவள் முகத்தில் பொங்கி வழிந்ததாகச் சொல்லிச்சொல்லிப் பூரித்துப்போகிறாள்.
கருத்தான் காதர் இன்னொரு முக்கிய பாத்திரம். ஊருக்கு அடங்காமல் திரிகிறவனை ஒரு வேலையில் அமர்த்தி, நல்வழிப்படுத்தலாம் என எண்ணிய அண்ணன் ஏற்பாட்டின்படி, அரபு தேசத்துக்கு வந்தவன் அவன். வந்த இடத்திலும் அவன் அவனாகவே இருக்கிறான். மது, புகை, சூது என எல்லாவற்றையும் தொட்டு ஒரு வலம் வருகிறான். சூதாட்டத்தில் ஒரே இரவில் பதினஞ்சாயிரம் ரியால் சம்பாதிப்பது, சிறைக்குச் செல்வது, மீண்டும் திரும்பி ஊருக்குச் செல்வது, எதிர்பாராத விதமாக குரான் படிக்க ஆரம்பிப்பது, எல்லாவற்றையும் ஒரே கணத்தில் துறந்து பள்ளிவாசல் முக்கியஸ்தராக மாறுவது என அவன் வாழ்க்கை முழுக்கமுழுக்க அசாதாரணமான சம்பவங்களால் நிறைந்திருக்கிறது.
முகமே இல்லாமல் ஒரு புகைப்படமாகமட்டுமே அறிமுகமாகி, மறைந்துபோகும் ஒரு பாத்திரம் ஜாஸ்மின். ஃபைசலுக்காக அவன் வாப்பா பார்த்துவைத்திருக்கும் பெண். அவள் புகைப்படம் அவர் கடிதத்துடன் அவனுக்கு வருகிறது. அரூஷாவை தன் நெஞ்சிலிருந்து அகற்றிவிட்டு, அவ்விடத்தில் ஜாஸ்மினை வைக்கிறான் அவன். முதலில் பட்டும்படாததுமாக முளைவிடும் ஆசை, ஒரு மரமென வளர்ந்து நிழல்பரப்பி நிற்கிற சமயத்தில் சூறாவளியென வீசிய காற்றில் அந்த மரம் முரிந்துவிடுகிறது. இந்தியா வரும் தேதி உறுதியாகத் தெரியாத நிலையில் அந்தச் சம்பந்தம் கைவிட்டுப் போய்விடுகிறது. கடைசியில் ஜாஸ்மின் படம் நிறைந்திருந்த அவன் நெஞ்சில் பிர்தெளஸாபானுவின் முகம் அவன் நெஞ்சை அடைத்துக்கொள்கிறது.
அரபு தேசத்தில் முருங்கைமரம் வளர்த்துக்கொண்டு, நாடகம் எழுதி இயக்கும் கனவோடு இருக்கும் குமரி இக்பால், தொழுகை நேரத்தில் வேலை செய்ததால் உதைபட்டு வலியில் புரளும் டைலர், தனிமையின் வெறுமையைப் போக்கிக்கொள்ள, தூக்குப் போட்டுப் பழக விளையாட்டாக முயற்சி செய்யும் ஹபீப் முகம்மது, மம்மனியா, மம்மக்கண், கண்காணிக்கவேண்டிய காவல் பொறுப்பில் இருந்தபடி, பாஸ்போர்ட்டைத் திருடிக்கொண்டு ஊரைவிட்டு ஓடிவிடும் பிலிப்பைனி, மிஷரி கிழவன், ஊரிலிருக்கும் நான்கு பெண்பிள்ளைகளுக்கும் நல்லதுசெய்யும் கனவோடு அரபுதேசம் வந்து, கிட்டும் மிகச்சிறிய ஊதியத்தில் எதையும் செய்ய இயலாத குற்ற உணர்வோடு அழும் பணியடிமை, நாசர் என நாவலுக்குள் ஏராளமான மனிதர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.
நாசரின் தந்தையாரின் மறைவுச்செய்தி வரும் இடம், நாவலின் மிகமுக்கியமான ஒரு கட்டம். அரபு தேச வாழ்வின் அவலக்காட்சிகளில் அதுவும் ஒன்று. மரணம் இயல்பானது என்று மிகச்சாதாரணமாகச் சொல்லிவிட்டு, விடுப்பு கொடுக்க மறுக்கிறான் அவன் அரபி முதலாளி. அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாத அவன் உடல்நிலை மெல்லமெல்ல குன்றுகிறது. நாசர் சார்பில், பல நண்பர்கள் கூடி அவனுடைய முதலாளியிடம் பேசுகிறார்கள். அங்கே வசிக்கும் இன்னொரு அரபுமுதலாளியும் நாசருக்காகப் பரிந்து பேசுகிறான். எதற்கும் மசியாத கருங்கல்லாக இருக்கிறான் அந்த அரபி. நாசரின் இடத்தில் தன்னுடைய வேலைக்காரனை அனுப்புவதாக அரபி வாக்களித்த பிறகுதான் பதினைந்து நாட்கள் விடுப்பு கிடைக்கிறது. என்ன சம்பாதித்து என்ன பயன், பெற்றெடுத்த தந்தையின் இறுதி ஊர்வலத்தில்கூட கலந்துகொள்ள இயலாத நெருக்கடியான வாழ்வுதானே என்கிறபோது அயல்தேச வாழ்வின்மீது கவிகிற கசப்பும் விரக்தியும் நாவலில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது.
குளிர்சாதனப் பெட்டியின் கதவிடுக்கில் படிந்துவிடும் மணல்துகள்போல அரபுதேசத்துக்கு வந்தவர்கள் நெஞ்சில் ஏராளமான அனுபவங்கள் ஒட்டிக்கொண்டுவிடுகின்றன. சாதாரண மனிதர்களின் சாதாரண அனுபவங்கள். சாதாரணத்தின் கவித்துவமும் கலையுச்சமும் அந்த அனுபவங்களில் வெளிப்படும்வகையில் தன் வலிமைமிக்க மொழியால் வசப்படுத்தியிருக்கிறார் மைதீன். மைதீனின் பதினாறு ஆண்டு கால இலக்கிய முயற்சிகளில் இந்த நாவல் மிகப்பெரிய திருப்பம். ஒரு நல்ல உச்சம்.

(அஜ்னபி- நாவல். மீரான் மைதீன். காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். விலை.ரூ275)

Series Navigation