வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 25

Spread the love
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு.

 

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் என்றோ பார்த்து பாதிக்கப்பட்ட உணர்வுகள் இதயத்தில் ஆழமாகப் புதைந்து தங்கிவிடுகின்றன. அதன் எதிரொலி பிற்காலத்தில் வரலாம் அல்லது வராமலும் போகலாம்.

கல்லூரிப் படிப்பை முடிக்கவும் படித்த பள்ளியிலேயே வேலை கிடைத்தது எனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு. அப்படியே தொடர்ந்திருந்தால் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆகும்வரை நீடித்து அங்கேயே இருந்திருக்கலாம். பிள்ளைப் பருவம் முதல் ஓடி விளையாடிய பூமியில் அமைதியான வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கலாம். காலம் என்னைப் போராட்ட களத்தில் தள்ளியது. அதற்குக் காரணமானவர் யார்?

உயர்திரு காமராஜ் அவர்கள்.

எத்தனை முறை சொன்னாலும் எழுதினாலும் மீண்டும் மீண்டும் நினைக்கத் தோன்றுகின்றது.

“என் பொண்ணு பி.ஏ படிச்சுட்டா” பெற்றவனுக்கு பெருமை தாங்கவில்லை. அக்காலத்தில் கிராமத்திலிருந்து ஓர் பெண் படித்து பட்டம் வாங்குவது அரிய செயலாக இருந்தது. பார்ப்பவரிடமெல்லாம் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார் என் அப்பா. அப்படியும் குறை இருந்தது. மகளை இழுத்துக் கொண்டு சென்னைக்குப் போய் திரு காமராஜ் முன்னால் சென்று நின்றார். தன் மகிழ்ச்சியைத் தன் தலைவனிடம் கூறினார். ஆனால் தலைவர் முகத்தில் மகிழ்ச்சி தெரியவில்லை.

“பள்ளிக்கூட வேலையா? உம் பொண்ணு மட்டும் படிச்சா போதுமா?” இது என் அப்பாவை நோக்கிக் கூறியது. என்னிடம் திரும்பி பேசியதுதான் இன்னும் என் மனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

“நீ பள்ளிக்கூடம் போனா அங்கே வரும் புள்ளங்களுக்கு மட்டும் பாடம் சொல்லித் தருவே. கிராமத்துலே இன்னும் எத்தனை புள்ளங்க படிக்காம வெட்டியிலெ அலையறாங்க. அந்தப் பொம்புள்ளங்களைப் பார்த்துப் பேசு. அவங்க புள்ளங்களே படிக்க அனுப்பச் சொல்லு. நாலு எழுத்து தெரிஞ்சாத்தான் உலக நடப்பு தெரியும். உனக்கு டீச்சர் வேலை வேண்டாம். கிராமத்துக்கு போய் வேலையைப் பாரு. போவியா?”

அவர் என்ன வேலை பற்றி பேசுகின்றர் என்று கூடத் தெரியாது. பெரியவர் சொல்லுகின்றார். நான் சரியென்று தலையாட்டினேன். பதில் பேசாமல் தலையாட்டியதற்கு அவருக்குக் கோபம் வந்துவிட்டது. கோபக்காரத் தலைவர்.

“வெள்ளைத்துணி அழுக்குபடும்னு பாக்குறியா கிராமத்துக்கு சரியான ரோடு கிடையாது. லைட்டு கிடையாது. குடிக்கக் கூட சரியான தண்ணி கிடையாது. ஆஸ்பத்திரிக்குப் போகக் கூடத் தெரியல்லே. அங்கே போய் பாடம் சொல்லிக் கொடு அந்தப் பொம்புள்ளங்க ஒண்ணும் தெரியாமல் இருக்காங்க. போவியா   ?”

அவர் குரலுக்கு நடுங்கியல்ல, அவர் உணர்சிக்கு மயங்கி “நிச்சயம் போவேன் அய்யா,” என்றேன்

13 வயதில் என் தோழி சுப்புலட்சுமி பெரியவளாகவும் பள்ளிக்கு அனுப்ப மறுத்தார்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்று அவளை அனுப்பும்வரை சாப்பிடமாட்டேன் என்று என் முதல் உண்ணா விரதத்தைத் தொடங்கியவள் நான். போராட்டம் என்றால் உடனே எழுச்சி பிறந்துவிடும். பாரதியின் பெண்ணாயிற்றே !

திரு காமராஜ் அவர்கள் அப்பொழுது கட்சி பிரச்சாரம் செய்யவில்லை. கட்சித் தொண்டரிடம் சொல்லவில்லை. ஓர் 20 வயதுப் பெண்ணிடம் கூறும் அறிவுரைகளுக்கு அரசியல் வர்ணம் பூசுவது அநாகரீகம். அவருக்குள் அடங்கியிருந்த ஆதங்கம் “படிப்பு” எல்லோரும் படிக்க வேண்டும். அதுவும் இந்தியாவின் உயிர்நாடியான கிராமங்கள் அறியாமையிலிருந்து விழிப்புணர்வு பெற வேண்டும். அந்த எண்ணத்தில்தான் பார்ப்பவரிடமெல்லாம் கூட படிப்பைப் பற்றி பேச வைத்திருக்கின்றது.

அறியாமையால்தானே ஏழைகள் கொத்தடிமைகளாக வாழ நேரிடுகின்றது

மேலக்கால் பெரியகருப்பன் நினைவு வருகின்றது. எஜமான் குத்தச் சொன்னாலும் வெட்டச் சொன்னாலும் செய்வான். அவன் எஜமான் கஞ்சி ஊத்தறாரே. அவன் அம்மாவே சொன்னது. குடிக்கக் கஞ்சி, உடுத்த துணி, தங்க ஒரு குடிசை. அது போதும். அந்தக் கால கிராம வாழ்க்கை.

அன்று அறியாமையால் ஏமாளிகளாக அடிமையாக வாழ்ந்தனர். இன்றோ மதியை மயக்க எத்தனை வழிகள்! சரியாகக் கூட சிந்தனை செய்ய விடுவதில்லை. கைப்பாவையாக அலையும் மனிதர்கள் இன்று எத்தனை எத்தனை? யாரை நோவது? இதற்கு விடிவு காலம் வராதா?

அறியாமைபற்றி எழுதவும் மனம் எங்கோ ஓடுகின்றது. நான் அந்தக் காலத்தைச் சேர்ந்தவள். சுயநலத்தையும் சுரண்டலையும் பார்த்துத் தாங்க முடியாமல்தான் அன்றைய மனிதர்கள் பொங்கி எழுந்து புலம்புகின்றார்கள். எங்களால் அதுமட்டும்தான் முடியும். சொல்ல வந்ததை விட்டு மனம் எங்கோ ஒடுகின்றது. பெரியவரைப் பற்றி பேசலாம்.

அவர் ஒரு படிக்காத மேதை. நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வல்லமை படைத்தவர். அவர் வாழ்க்கையில் எத்தனைபேர்களைச் சந்தித்திருப்பார்?!.  படித்திருந்தால் இன்னும் பல திட்டங்கள் கொண்டுவந்து நிறைய நன்மைகளை நாட்டிற்குச் செய்திருக்கலாமே என்ற ஆதங்கமும் தோன்றியிருக்கலாம்.

பள்ளிக்குப் போனால் மட்டும் போதுமா? தொடர்ந்து படிக்க வேண்டும். ஆரம்பத்தில் சென்றுவிட்டு இடையில் படிப்பை நிறுத்துபவர்கள் எண்ணிக்கை  எத்தனை.? நான் இப்பொழுது வாழும் அமெரிக்காவிலும் கூட இந்த பிரச்சனை இருக்கின்றது. அன்றே திரு காமராஜ் அவர்கள் சிந்தித்தார். சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போகும் பிள்ளைகள் வீட்டிலேயே தங்கி விடுவதுண்டு. சாப்பாடு இல்லையென்றாலும் பசியினால் படிப்பைவிட்டு ஓடுபவரும் உண்டு.

பள்ளிகளில் பிறந்தது  “மதிய உணவுத் திட்டம்”

இன்னொரு காட்சியைக் காட்டப் போகின்றேன். அதனையும் பாருங்கள்

சமூக நலத்துறையில் அப்பொழுது செயலாளராக இருந்தவர் திருமதி அஞ்சனி தயானந்த் அவர்கள்.

முதல்வரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது.

அப்பொழுது தமிழ்நாடு முதல்வராக இருந்தவர் உயர்திரு. எம்.ஜீ. ராமச்சந்திரன் அவர்கள்.

மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர்.

அவர்களுக்கிடையில் நடந்த உரையாடலின் சுருக்கம் கூறுகின்றேன்.

கிராமங்களின் பழக்கம்  — அதிகாலையில் வேலைக்குச் சென்று அந்தி மயங்கும் நேரம் வீட்டிற்குத் திரும்புவார்கள். இரவிலேதான் சமையல். அவர்களால் இரவில்தான் சுடு சோறு சாப்பிட முடியும். எஞ்சிய சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்துவிடுவார்கள். காலையில் போகும் பொழுது தனக்குக் கொஞ்சம் எடுத்துக் கொண்டு மீதியை வைத்து விட்டுப் போவார்கள். கைக்குழந்தைகளை வேலை செய்யும் இடங்களுக்குத் தூக்கிச் சென்று அங்கே மரத்தில் தூளி கட்டி தொங்விடும் பழக்கமும் உண்டு. மற்ற சிறுபிள்ளைகள் வீட்டிலே இருக்க வேண்டும். சமைக்கும் பொழுது கல்யாணச் சாப்பாடா செய்கின்றார்கள் ? அதிலே மிச்சம் என்றால் எவ்வளவு இருக்கும்?. இருக்கும் கஞ்சியைப் பிள்ளைகள் சாப்பிட வேண்டும். மதியத்திற்கு ? பசி வந்தாலும் சொல்ல அம்மா அருகில் இல்லை.  பசி வந்தால் தண்ணீர் குடிக்க வேண்டும் அவ்வளவுதான்.

பசியில் வாழும் அந்தக் குழந்தைகளைப் பற்றிப் பேசினார் முதல்வர்.  மனம் வெதும்பி காட்சிகளைக் கூறியிருக்கின்றார். அந்தக் குழந்தைகளுக்குச் சாப்பாடு போட வேண்டும். தமிழ் நாட்டில் எல்லாக் குழந்தைகளுக்கும் சாப்பாடு போட வேண்டும். அதற்கு ஒரு திட்டம் வேண்டும். நிதி ஒதுக்குவது பற்றி பார்த்துக் கொள்ளலாம்.

முதல்வரிடம் பேசிய பின்னர் திரும்பிய செயலாளர் உடனே வசந்த குமாரியைக் கூப்பிட்டனுப்பினார்கள். குழந்தைகள் நலன் அதிகாரி அவர்கள் தான். செயலாளர் பேசும் பொழுது  உணர்ச்சி வயப்பட்டு பேசி யிருக்கின்றார்கள். விபரம் அறிந்த பின் வசந்தகுமாரி அலுவலகம் திரும்பவும் என்னைக் கூப்பிட்டனுப்பினார்கள். வசந்தகுமாரி என்னுடன் பேசும் பொழுது யதார்த்தமாகத்தான் சொன்னார்கள். நான்தான் உணர்ச்சி வயப்பட்டேன். அவரவர் இயல்பு.

எங்கள் செயளாளர் மிகவும் உணர்ச்சி வயப்படுபவர் என்பதற்கு இரு உதாரணங்கள் காட்ட விரும்புகின்றேன்.

“குழந்தைகள் கல்வி” பயிற்சிக்கு வந்த பொழுது நடந்த சம்பவம் மறக்க முடியாதது. எங்களுக்கு எந்த ஊர்களுக்குப் போக வேண்டும் என்று உத்திரவு கொடுக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட ஊருக்குப் போகச் சொன்ன பொழுது எல்லோரும் மறுத்தனர். அந்த ஊரில் பிரச்சனைகள் என்று கூறியதால் பயம். நான்மட்டும் போவதாகச் சொல்லவும் அவர்களுக்கு வியப்பும் மகிழ்ச்சியும் தோன்றியது. அந்த உணர்ச்சிகளின் விளைவால் உடனே எனக்குப் பதவி உயர்வு கொடுத்துவிட்டார்கள். 60 நாட்களுக்குள் எனக்கு உத்திரவு வந்தது. நேர்காணலோ, விதிகளோ பார்க்காமல் செய்த முடிவு. உடனே துறையில் பணியாற்றிய மற்றவர்கள் கேள்வி கேட்டு கடிதங்கள் அனுப்பினர்.  அதன் பின்னர்தான் எனக்குப் பதவி உயர்வு தந்தது சரியா என்று பார்த்தனர். பல துறைகள் ஒருங்கிணைக்கப்பட விட்டுப் புதுவிதிகள் இன்னும் முடிவாக வில்லை. மகளிர் நலத்துறையில் இருந்த பழைய விதிப்படி மாவட்ட மகளிர் நல அதிகாரி பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும். அதன்படி நான் பட்டதாரி.

அடுத்து நடந்த ஒருசம்பவம் என்னை ஆட்டி வைத்துவிட்டது. வட ஆற்காடு மாவட்டத்தில் மாவட்ட மகளிர்நல அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்பொழுதும் எனக்கு இயக்குனராக இருந்தவர் திருமதி அஞ்சனி தயானந்த் அவர்கள்தான்..

ஒரு நாள் என் அலுவலகத்திற்கு ஓர் பெண் வந்தாள். அவளை ஒர் வட்டாரத்திற்கு முக்கிய சேவிக்காவாகப் போட்ட உத்திரவுடன் வந்திருந்தாள். அதன்படி அவள் இன்னும் தன் கல்விச் சான்றிதழ்களைக் காட்டவில்லை யென்றும், தற்போது உள்ள அவள் நிலமை கருதி உத்திரவு கொடுத்தி ருப்பதாகவும் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அவள் கல்விச் சான்றிதழ்கள் காட்டப்பட வில்லையென்றால் அவள் பதவி உத்திரவு ரத்தாகிவிடும் என்றும் எழுதியிருந்தது.

பார்ப்பதற்கு அவள் ஓர் அழகி. பேசும் பொழுது ஆங்கிலம் விளையாடியது. பேச்சிலும் கவர்ச்சி. அவள் திரும்ணம் காதல் மணமாம். மணமான ஒரு வருடத்தில் அவள் கணவன் இறந்துவிட்டான். இப்பொழுது அவள் ஓர் விதவை. அவள் சொல்லிவரும் பொழுது ஏனோ அது பொய்யுரையாக இருக்குமோ என்று தோன்றியது. அவள் சொன்ன காரணங்களால் இரக்கம் சம்பாதித்து விட்டாள். மேலும் படித்த பெண் என்பது பேச்சிலே காட்டினாள். எங்கள் இயக்குனர் உணர்ச்சி வயப்பட்டு உத்திரவு வழங்கியிருக்கின்றார்கள். இருப்பினும்  உத்திரவில் விதிகளும் கூறப்பட்டு விட்டன.

வேலைக்குப் போகும் இடத்தில் வீடு கிடைக்கும்வரை அங்கு வசிக்கும் அமைப்பாளருடன் தங்கிக் கொள்ளலாம் என்று கூறி அந்தப் பெண்ணை அனுப்பினேன். ஏனோ அவளைப் பற்றி அறிய இந்த கூட்டுக் குடும்பம் உதவி செய்யும் என்று எனக்குத் தோன்றியது.

அந்தப் பெண் வேலையில் சேர்ந்த மறுவாரமே அந்த ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஓடிவந்தார். அவர் முகத்தில் பதட்டம். அந்தப் பெண்ணைப் பற்றி சில புகார்கள் சொன்னார். அவளைத் தேடி யார் யாரோ வருகின்றார் களென்றும் நள்ளிரவில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக பல ஆண்களுடன் இவள் பேசுவதைக் கண்டவர்கள் புகார்கள் கூறினார்கள் என்றும் சொன்னார். நான் மறுநாளே வருவதாகக் கூறி அவரை அனுப்பி வைத்தேன்.

சொன்னபடி மறுநாள் சென்றேன். அந்தப் பெண் அப்பொழுது அங்கில்லை. அமைப்பாளரிடம் விசாரித்தேன் ஆணையாளர் கூறுவதைப் போலவே அவளும் சொன்னாள். அவள் வந்தவுடன் என்னைப் பார்க்க வேண்டுமென்று கூறச் சொன்னேன். அவளைப் பார்த்து விட்டுத்தான் நான் வேலூர் திரும்புவேன் என்பதைக் கூறி இத்தகவலைப் பக்குவமாகச் சொல்லச் சொன்னேன்.

அந்தப் பெண் என்னைப் பார்க்க வந்தாள் தோற்றம் மாறியிருந்தது. கூந்தலை வெட்டி “பாப்” செய்திருந்தாள் முன்னாலும் முடியைச் சுருள் சுருளாக வெட்டி யிருந்தாள். தனிப்பட்டதைக் கேட்கக் கூடாது ஆனாலும் நான் சிரித்துக் கொண்டே கேட்கவும் அவள் கணவன் இறந்து ஒரு வருடமாகி விட்டதாம், மொட்டை அடிப்பதற்குப் பதிலாகக் கொஞ்சம் கூந்தலை வெட்டிக் கொண்டாளாம். அவளிடம் ஏதோ பெரிய விஷயம் இருக்கின்றது என்பது புரிந்தது. புகார்கள் பற்றி எதுவும் கேட்கவில்லை. அவள் ஊர், உற்றார் , உறவினர்கள் பற்றி அனுதாபமாகக் கேட்பது போல் கேட்டேன். கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் இரு வீட்டாரும் ஒதுக்கிவிட்டனர் என்றாள்.

வந்த அன்று  அவள் கூறியது ஒன்று நினைவிற்கு வந்தது. வேலூர் சிறை அதிகாரியின் குடும்பம் தெரியுமென்றும், அவர் மகன் அவளுக்கு நல்ல நண்பன் என்றும் சாதாரணமாகத் தெரிவித்திருந்தாள். இப்பொழுது அவளிடம் எதுவும் கேட்கவில்லை.

முதலில் அவள் யார் என்று கண்டு பிடிக்க வேண்டும்.

அவளிடம் வேறு எதுவும் கேட்காமல் கிராமங்களைப் பார்வையிட அழைத்துச் சென்றேன். அங்கே ஊர் மக்களைப் புகைப்படம் எடுப்பதைபோல் எடுத்தேன் சில படங்களில் முக்கிய சேவிகா என்ற பொறுப்பில் நின்றாள். அது போதும் அவள் புகைப்படம் இப்பொழுது என்னிடம் இருக்கின்றது.

வேலூர் திரும்பவும் சிறைச் சாலைக்குச் சென்று அந்த அதிகாரியிடம் பேசினேன். பெரிய கதையே கிடைத்தது.

அந்தப் பெண் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கூட்டத்தில் ஒருத்தியாக சிறைக்கு வந்திருக்கின்றாள். படித்தவளாயிருக்கின்றாள் என்பதனால் தன் வீட்டுப் பணிகளைக் கொடுத்திருக்கின்றார். அவளும் குடும்பத்தாருடன் முதலில் நன்றாகப் பழகி இருக்கின்றாள். ஆனால் நாளாக ஆக அவருடைய மகனுடன் நெருங்கிப் பழக ஆரம்பிக்கவும் வீட்டிற்கு வருவதை நிறுத்தி யிருக்கின்றார். அப்பொழுதும்  அவருடைய மகன் திருட்டுத்தனமாக சில சமயங்களில் பார்த்திருக்கின்றான். என்ன செய்யலாம் என்று முடிவு எடுப்பதற்குள் அந்தப் பெண் கொலை சமபவத்தில் சம்பந்தப்பட்டிருப்பது நிரூபிக்கப்படவில்லை யென்று விடுதலை செய்யப்பட்டாள். சிறை அதிகாரிக்கும் நிம்மதி வந்தது என்றார்.

அந்த ஊர் ஆணையாளருக்கு ஓர் தகவல் கொடுத்தேன். அவருடைய முக்கிய சேவிக்கா என்னைப் பார்க்க வேலூருக்கு வரவேண்டும் என்று கூறியிருந்தேன். அவள் வரவில்லை. அதுமட்டுமல்ல அவள் அதற்குப் பிறகு அலுவலத்திற்கும் வரவில்லை. ஓடிவிட்டாள்.

என் துணிவைப் பாராட்டி எனக்குப் பதவி உயர்வு.

கலப்புத் திருமணம் செய்து கொண்டு உற்றார் உறவினர் எல்லோரும் ஒதுக்கி வைத்த நிலையில் கணவனின் மரணம். அப்படி ஒரு விதவைப் பெண்., படித்த பெண். கெட்டிக்காரத்தனமாகப் பேசும் பெண். அவள் நிலைகண்டு இரக்கப்பட்டு பணி உத்திரவு.

எங்கள் அம்மாவின் கருணை யுள்ளம் முதல்வர் கூறிய செய்திகளில் கசிந்துருகியது அதிசயமல்ல.

வசந்தகுமாரியும் நானும் கலந்து பேசினோம். என் அனுபவத்திற்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை.

சாப்பாடு மட்டும் கொடுத்தால் அது சத்திரம். நோக்கம் சிதைவுற பல வாய்ப்புகள் வரும். வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகளுக்கு ஓர் காப்பகம் வேண்டும். ஏற்கனவே பல நிலைகளில் துறையில் காப்பகங்கள் இயங்கி வருகின்றன. உடனே திட்டம் வரையப்பட்டது. திட்டத்தை வரைந்தவர் திருமதி வசந்த குமாரி.

குழந்தைகளுக்கு காப்பகம் என்பது சிறந்தது. அதில் அவர்களுக்கு விளையாட்டுத் தோழர்களும் இருப்பார்கள். திறன் வளர்க்க, இயல்புகளைப் பண்படுத்தும் கல்வியும் உண்டு. கவனிக்க டீச்சர் உண்டு. சமைத்துப் போட ஆயா உண்டு. அவர்கள் இருவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள். எனவே அந்தக் குழந்தைகளின் குடும்பங்களை அறிந்தவர்கள் . பிரச்சனைகளில் இருக்கும் குழந்தைகளிடம் பக்குவமாக அன்புடன் நடக்கவும் டீச்சருக்கு அறிவுரை வழங்கப்பட்டு அவர்களூக்கு அதற்குரிய பயிற்சிகளும் தரப்பட வேண்டும்., குறைந்த படிப்பு எட்டாவது வரை இருக்க வேண்டும். இப்பொழுது ஒவ்வொரு கிராமத்திலும் கிராமக் குடும்பங்களுக்கு வழி சொல்லும் ஓர் வழிகாட்டி, அவர்களை அறியாமலேயே ஏற்பட்டு விடும். குழந்தைகளூக்கு மட்டுமல்ல எல்லாக் குடும்பங்களுக்கும் ஓர் தொடர்பாளராக அமைந்து விடுவாள். குழந்தைகளால் அவர்களைப் பெற்றவர்கள் உரிமையுடன் குடும்பப் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்வர். அவளுக்குத் தெரிந்த அளவில் அவர்களைப் போய்ப்பார் என்று கைகாட்ட ஒருத்தி அவர்களுக்கிடையின் வந்து விடுகின்றாள். உணவிலும் காய்கறிகள். சில நாட்களில் முட்டைகள் என்று சத்துணவாகக் கொடுக்கலாம் .இந்தத் திட்டத்தைப் பார்க்கவும் முதல்வருக்கு மட்டில்லா மகிழ்ச்சி ஏற்பட்டதாம். எல்லாக் கிராமங்களிலும் ஆரம்பிக்க ஆணை யிட்டுவிட்டார்

பிறந்தது  முதல்வர் சத்துணவுத் திட்டம்.

பின்னர் அதனைச் சத்துணவு மையம் என்றும் குழந்தைகள் காப்பகம் என்றும் அழைக்கலாயினர்.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவும் மற்ற மாநிலங்களின் கவனம் தமிழ் நாட்டை நோக்கித் திரும்பியது. காலம் செல்லச் செல்ல மற்ற மாநிலங்களிலும் இதே போன்ற திட்டங்களைத் தோற்றுவித்தனர். அவர்களின் நோக்கம் தெரியாது. ஆனால் நம் தமிழகத்தில் ஓர் மனிதரின் கருணையில் பிறந்தது இந்தத் திட்டம்.  தான் முதன் முதலில் போட்டுக் கொண்ட தங்க மோதிரம் எட்டயபுர மன்னரால் அளிக்கப்பட்டது என்று நான் ஏன் பிறந்தேன் என்ற தொடரில் குறிப்பிட்டிருக்கின்றார். தங்கத்தில் பொருள்வாங்கும் வசதியில்லா வாழ்க்கையை அவர் மறைக்கவில்லை. நன்றியையும் மறக்காமல் கொடுத்தவர் யார் என்பதையும் எழுதியது அவரின் தன்மையைக் காட்டுகின்றது.

எம்.ஜி. ஆர் அவர்களின் திரையுலக வாழ்க்கை, அரசியல் வாழ்க்கைபற்றி நான் பேசவில்லை. நான் பங்கெடுத்த ஓர் நிகழ்வினைப் பற்றிக் கூறுகின்றேன்.

திருச்சி திரு சவுந்திரராஜன் அவர்கள் அமைச்சராக வரவும் சத்துணவுத் துறையைப் பிரிக்க எண்ணி நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தார். தொழிற்சங்கம் மூலமாக சில பேர்களை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்குப் போய் முதல்வரை நேரில் கண்டு பேசி மனுவைக் கொடுத்தோம். அப்பொழுது அவர் சொன்னதை இப்பொழுதும் என்னால் மறக்க முடியாது

“தாயையும் சேயையும் பிரிக்க மாட்டேன். திட்டம் ஆரம்பிக்கும் பொழுதே எல்லாம் சிந்தித்து எடுத்த முடிவு. கவலைப் படாதீர்கள் “

ஆக திட்டத்தின் வரைவினை முழுவதும் படித்து, அவருக்கு திருப்தி வரவிட்டே அனுமதித்திருக்கின்றார். அந்த உணர்வை அரசியல் ஆக்குவது சரியல்ல.

திரு காமராஜ், திரு எம்.ஜி.ஆர் இவர்கள் இருவர் கொண்டு வந்த திட்டங்களும் அரசியலுக்காக அல்ல. மேலும் வெவ்வேறு நோக்கங்களில் தோன்றிய திட்டங்கள். பயனடைபவர்கள் வயதும் வெவ்வேறு. மனங்களில் இருந்த ஆதங்கம். அன்பு, இவைகளால் தோன்றிய திட்டங்கள்.

மதிய உணவுத் திட்டம்

பள்ளிக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தப்பட்டது.

கல்வி கற்க வேண்டும் என்பதற்காக வந்த திட்டம்.

கல்வி தொடர்ந்து கற்க வேண்டும் என்று வந்த திட்டம்.

கற்பதற்கு பசி தடையாக இருக்கக் கூடாது என்று வந்த திட்டம்

கற்பதற்கு உடல்வலிமை சேர்க்க வந்த திட்டம்.

வயதும் பள்ளியில் சேர்பவர்களுள்ளதே.

 

முதலமச்சர் சத்துணவுத் திட்டம்

குழந்தைகளின் பாதுகாப்பிற்காக வந்த திட்டம்.

பணிக்குச் செல்லும் தாயைப் பிரிந்து பசியினால் வாடக் கூடாது என்று வந்த திட்டம்.

ஏழைக் குழந்தைகளுக்கும் குழந்தைக் கல்வி கொடுக்க வந்த திட்டம்.

தனிமையைப் போக்கி ஒத்த வயதுக் குழந்தைகளுடன் உற்சாகமாக இருக்க வழி செய்த திட்டம்.

தாய் அருகில் இல்லாவிட்டாலும் ஓர் காப்பாளர் கிடைக்க வந்த திட்டம்.

இங்கே 3 வயது முதல் 6 வயதுக் குழந்தைகள் சேரலாம். திட்டம் அப்படி கூறினாலும் அதற்கும் குறைந்த குழந்தை வரின் உணவு கொடுக்கப்படும்.

அரசியல் மேடைகளின் பேச்சைக் கேட்டதால் இதனை விளக்கமாக எழுதியுள்ளேன். நல்ல மனிதர்கள் உயர்ந்த எண்ணத்தில் தோற்றுவித்த திட்டங்களைத் தயவு செய்து அரசியலாக்க வேண்டாம் என்று பணிவுடன் வேண்டிக் கொள்கின்றேன்.

நான் அரசியல்வாதியல்ல. எந்தக் கட்சிக்கும் நான் அனுதாபியல்ல.

எனக்கு எல்லாம் சமுதாய நலனே.

எனக்கு பயிற்சி தந்தவர்கள், உடன் இருந்தவர்கள், வழிகாட்டிகள் பலரைப்பற்றி எழுதிவிட்டேன். நான் ஒரு வேலைக்காரி. அந்த நல்லவர்கள் இட்ட பணிகளைச் செய்தேன். இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கின்றது.

ஒரு காட்சி மனத்தை உறுத்தினால் அதன் காரணம் அறிந்து உடனே செயல் படவேண்டும். தள்ளிப் போடக் கூடாது. இந்த எண்ணத்தை என்னிடம் விதைத்தவரும் ஓர் பெண்பமணி.

சமுக நலப்பணி என்பது பட்டியல் போட்டு செய்யும் பணியல்ல. பிரச்சனைகள் வரும் பொழுது மட்டுமல்ல வரும் முன்னர்கூட செயலாற்ற வேண்டும். இந்த எண்ணத்தையும் மனத்தில் புதைத்தவர் ஒரு பெண்மணி.

என் பணிக் காலத்தில், தேவை வரும் காலங்களில், இடங்களில், இருக்கும் நேரத்தைப் பயனுறச் செய்ய வேண்டுமென்று எனக்கு உதவியாக இருந்தவரும் ஓர் பெண்மணி.  அவர் என் துறையில் பணியாற்றியவரல்ல.

அந்த மூவரைப்பற்றியும் கூறினால்தான் என் மனத்தில் ஓர் நிறைவு ஏற்படும். அடுத்து அம்மூவரைப்பற்றியும் காணலாம்.

 

“அன்பு, இரக்கம் காட்டு. தூய்மையுடனும், நேர்மையுடனும், இனியவனாக இரு. அடக்கத்துடன் இரு. ஏழைகளிடத்தில் பரிவு காட்டு. அவர்களுடன் கலந்து வாழ். அவர்களுக்குத் தொண்டு செய். அவர்களுடைய கஷ்டங்களில் அவர்களைத் தேற்று. உன் வாழ்க்கையில் ஆடம்பரமற்றிரு. எல்லாவற்றிலும் உன்னையே காண். வேற்றுமை உணர்ச்சியை விட்டுவிடு. சம நோக்குடன் இரு. கடும் வார்த்தைகளை உபயோகியாதே. தன்னலத்திற்காக பிறரை உபயோகிக்காதே. வீண் பேச்சிலும் ஊர் வம்பிலும் உன் சக்தியைச் செலவிடாதே.”

சுவாமி சிவானந்த மகரிஷி

(தொடரும்)

படத்திற்கு நன்றி

Series Navigationமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 38ஆர். மாதேஷின் “ மிரட்டல் “