வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -42

Spread the love

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு

அல்லவை செய்தொழுகும் வேந்து

தொடரை இத்துடன் முடிக்க எண்ணியிருந்தவளைத் தொடரும் தொல்லைகள் தடுத்துவிட்டன.

ஆரம்பம் என்றிருந்தால் அதற்கு ஓர் முடிவும் உண்டு என்று சொல்வோம். பெண்ணின் அவல நிலைமட்டும் இன்னும் தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. அதற்கு ஒர் முடிவு இல்லை.

டில்லி சம்பவம் எல்லோரும் அறிந்ததே. கடந்த 41 வாரங்களாக நான் எழுதி வரும் தொடரின் மையக் கருத்தும் பெண்ணின் நிலைபற்றியதே. பல உண்மைச் சம்பவங்கள் எழுதப்பட்டன.. எனவே பாலியல் கொடுமைபற்றி விளக்க வேண்டிய தில்லை.

ஆனால் சம்பவத்தன்று நடந்த சில நிகழ்வுகளும் அதனைத் தொடர்ந்து நடந்து வருபவைகளும் பார்க்கும் பொழுது மனத்தின் வேதனை அதிகரித்துவிட்டது.சில எண்ணங்களையாவது பதிய வேண்டியது என் கடமை .இவைகளுக்கு அடிப்படை காரணங்கள் என்ன? ஒவ்வொரு பிரச்சனையும் விஸ்வரூபம் எடுத்துப் பயமுறுத்த ஆரம்பித்துவிட்டது. இதற்குத் தீர்வு கிடையாதா? ஏன், இந்த நிலைக்குத் தள்ளப்பட்டோம்? சிந்திக்கிறேன். ஒரே மலைப்பு!.

கற்றது கையளவு. கல்லாதது உலகளவு

இருப்பினும் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது. இன்னும் சில நல்லவர்கள் இருக்கின்றார்கள். என் அனுபவங்களில் சில ஆலோசனைகள் எழுத முயல்கின்றேன். அறிஞர்கள் இன்னும் சிந்தித்து ஆக்க பூர்வமான வழிகளைக் கண்டுபிடிக்கலாம். முயற்சி செய்வோம். நம்பிக்கையை மட்டும் நாம் இழந்து விடக் கூடாது.

ஓரளவு வெளிப்படையான அலசல். யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நோயைப் புரிந்து கொண்டால்தான் தகுந்த சிகிச்சை அளிக்க முடியும்.

கடுமையான சட்டங்கள் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அரசு அதற்கான முயற்சிகளிலும் இறங்கியிருக்கின்றது .கடுமையான சட்டங்கள் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சட்டங்கள் மட்டும் நிலைமையைச் சீர் திருத்த முடியாது.

என்னுடைய துறையில் ஒருவன் பல பெண்களைக் காதலிப்பதாகச் சொல்லி சுற்றி வந்தவன் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டான். அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தன. அவன் குணம் மாறவில்லை. அதனால் தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை. ஒரு நாள் மனைவியின் மேல் மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தினான். அம்மாவின் நிலையை நேரில் பார்த்த குழந்தைகள் கதறின. அவன் வீட்டை விட்டு ஓடினான். பிள்ளைகளின் கதறலால் சிலர் வந்து நெருப்பை அணைத்தனர். அதற்குள் அவள் உடல் வெந்துவிட்டது. ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப் பட்டாள். காவலர்கள் வந்து விசாரணை செய்த பொழுது சாகும் நிலையிலும் அவள் தன் கணவனைக் காட்டிக் கொடுக்க மனமின்றி அதனை ஓர் விபத்தாகக் கூறிவிட்டாள். . காவலர் சென்றவுடன் அதுவரை அங்கு இருந்த அவள் கணவனும் அங்கிருந்து போய்விட்டான். தன்னுடன் வேலை பார்த்துவரும் பெண்களிடம் நடந்த உண்மைகளைக் கூறி, பிள்ளைகளை அவள் சகோதரினிடம் சேர்க்கும்படி வேண்டிக் கொண்டு உயிரைவிட்டாள். அவள் செத்த உடம்பிற்குப் புடவை வாங்கி போர்த்தியவர்கள் உடன் வேலை பார்த்தவர்கள்தான். உடன் பிறந்தான் வந்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தான். கொடியவன் சிறைப் பிடிக்கப்பட்டு விசாரணயும் நடந்தது. ஆனால் விடுதலை செய்யப்பட்டான். காரணம் அவனுடைய மனைவியின் சாட்சி. குழந்தைகள் கூற்றை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டங்களுக்கு சாட்சிகள் முக்கியம். நம் பெண்களும் உணமையைக் கூற மாட்டார்கள்.

ஜெனிவாவில் நடந்த மகளிர் கூட்டத்திற்குச் சென்ற பொழுது இந்திய நாட்டில் ஆணின் அடக்கு முறைகளால் பெண் தொல்லைப்படுகிறாள் என்று கூறிய பொழுது நான் சில மறுப்புகளைத் தெரிவித்தேன். பொதுப்படையாகப் பேசக் கூடாது என்றும் சொன்னார்கள். இந்த மண்ணுக்குத் திரும்பியவுடன் ஆய்வு செய்தேன். சென்னையிலிருந்து கன்னியா குமரிவரை 1000 பெண்களிடம் விசாரணை செய்தோம். முறைப்படி தயாரித்த கேள்வித்தாள். அவர்கள் கையொப்பம் கூடப் போடத் தேவையில்லை. அப்படியிருக்க சில கேள்விகளுக்கு யாருமே பதில் கொடுக்கவில்லை. கணவனைப்பற்றி எதுவும் கூற அவர்கள் விரும்பவில்லை. இது நடந்தது 1987. இதுதான் பெண்ணின் நிலை. சட்டம் மட்டும் போதுமா?

வீட்டைவிட்டு வெளி வரும் பொழுதே பார்வைக் கணைகள், மோதல்கள் இவைகளைத் தாண்டி அலுவலகம் சென்றால் அனுதாபம் காட்டி அதிகாரம் காட்டி பாலியல் உறவிற்கு ஏற்படும் நிர்ப்பந்தம் பற்றி புகார் கொடுக்க முடிவதில்லை. சாட்சிகளை வைத்துக் கொண்டா ஆண்மகன் ஒரு பெண்ணின் கையைப் பிடித்து இழுக்கின்றான். வலிமையுள்ளவர்கள் தங்கள் இச்சையைச் சாமர்த்தியமாக நிறைவேற்றிக் கொண்டு தப்பிக்கின்றார்கள். உணர்ச்சி வேகத்தில் தவறு செய்கின்ற அசடுகள்தான் மாட்டிக் கொள்கின்றார்கள். ஆனால் அதனையும் நிரூபிப்பது கடினம். வழக்கு மன்றத்திற்கு உறுதியான, நிலையான சாட்சிகள் வேண்டும். கிராமங்களில் நடக்கும் வன்முறைகள் பற்றி வாய் திறக்க முடியாது. அங்கே பணம், சாதி, இன்னும் பல சக்திகளும் பெண்களை ஒடுக்கிவிடும். இது செய்தி பார்த்து கூறுவதல்ல.

பெரியவள் ஆன என்னைப் பள்ளிக்கு அனுப்பவும் கிராம மக்களின் கூக்குரல்

“இது உருப்படுமா? சீரழிந்துபோகும். ஓடுகாலியாகப் போகும்”. எனக்குக் கிடைத்த ஆசிகள். அப்படியிருக்க களப்பணிக்குச் செல்வது எவ்வளவு கடினம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம் தேடல் , ஆராய்ச்சி எல்லாம் நுனிப்புல் மேய்வதைப் போல் அமைகின்றன. அக்கால சிலப்பதிகாரக் கண்ணகியை இக்காலச் சூழ்நிலையை வைத்து விமர்சிக்கும் கூட்டம்.

டில்லி நிகழ்வுக்குப் பிறகு கூட உத்திரபிரதேசத்தில் ஓர் கற்பழிப்பு. அந்தப் பெண் கெடுத்தவனைக் காட்டிக் கொடுத்ததால் அவனும் அவன் உறவுகளும் அந்தப் பெண்ணுக்குத் தீயிட்டனர். புகார் செய்ய காவல் நிலையம் சென்ற பொழுது அவர்கள் புகாரைப் பதிவு செய்ய மறுத்தனர். இதுவும் சமீபத்தில் நடந்தது. ஆனால் இது புதிதல்ல. எனக்கு வயது 78 முடிந்துவிட்டது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஒன்றா இரண்டா, எத்தனை பெண்களை நிர்க்கதியான நிலையில் பார்த்திருக்கின்றேன். என்னை பயமுறுத்தினார்கள். எனக்கும் அந்த நிலை வரும் என்றார்கள். தீய சக்தி என்னைச் சுடும் முன்னரே என்னைச் சுற்றிப் பாதுகாப்பு வளையங்கள் அமைத்துக் கொண்டேன். அழிக்கபட்ட பெண்களுக்குப் புனர்வாழ்வு கொடுக்க வந்த பெண்களையும் அழித்தனர். ஆரம்ப காலத்தில் மகளிர் நலத்துறையே ஓர் புனர் வாழ்வில்லமாயிற்று. ஒன்று கெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது கெட்ட பெயர்களையாவது சுமத்தியிருப்பர். சிலர் மட்டும்தான் இதில் தப்பியவர்கள்.

இந்தக் கொடுமையின் எண்ணிக்கை இப்பொழுது கூடிவிட்டது. ஏன்? நாம் எங்கே தவறு செய்தோம். ?.ஆம். தவறுகள் ஒன்றல்ல. பல வடிவங்களில் தோன்றி நம் பண்பாட்டுக் கூறுகளைச் சிதைத்துவிட்டன. இது சீர்திருத்தமல்ல. சீரழிவு.

நான் எல்லோரையும் குறை கூறவில்லை. இந்த சூழல் நம்மிடையே வளர்ந்து வருவதை நாம் பார்க்கின்றோம். ஓரளவாவது காரணங்களை நாம் உணர்ந்துதான் ஆகவேண்டும். எங்கோ இந்தக் கொடுமை என்று இருப்பது அசட்டுத் தனம். நம் வீட்டு வாயிலைத் தட்ட ஆரம்பித்துவிட்டது. இனியும் உணஃராவிட்டால் நாம் மனிதர்கள் என்று சொல்வதில் அர்த்தமில்லை. பேச்சிலும் சினிமாவிலும் மயக்கப்பட்டு கிடக்கும் மனிதன் , இதையும் கூத்தாக நினைத்து பார்த்து ரசித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றான். சிந்திக்கத் தெரிந்தவர்கள், நல்ல மனம் படைத்தவர்களாவது உணர்ந்து ஒன்று சேர்வோம். ஒருமித்து முயற்சி செய்வோம்.

சினிமா பார்த்துவிட்டுவரும் அப்பனும் மகளும் காம உணர்வில் நெருங்கியதும் அவர்கள் மகிழ்ந்ததும் கதை .அதிலும் அந்த வருணனைகள் அப்பப்பா. ஓர் எழுத்தாளன் அவன் திறமையை இதிலா காட்ட வேண்டும். சீர்திருத்தச் செம்மல் என்று கூறிக் கொண்டு இப்படி ஒரு கதை. அப்பனும் மகளும் சேர்ந்து வாழ முடியாதவர்கள். கதையின் பெயரும் அதுதான் “வாழ முடியாதவர்கள்” அப்பொழுது நான் பள்ளி மாணவி. அக்காலத்தில் இத்தகையப் புத்தகங்களின் விற்பனை அதிகம். ஆசிரியர் காரணமல்ல. அதில் எழுதப்பட்ட விஷயங்களின் சுவர்ச்சி கொள்கைகளை வளர்க்கப் பண்பாட்டு கொலையா? .

கூத்து என்றால் கதை மட்டுமல்ல, மனிதன் நிம்மதியாக வாழ்வதற்கு ஓர் செய்தியும் சேர்த்துக் கதைகள் அமைப்பார்கள். இராமனின் மன உறுதியை அவன் விரோதியின் மனைவியின் வாயிலாகப் புகழும் கவிஞன் , அவன் தன் எழுத்தில் கொஞ்சம் சிருங்காரரசம் சேர்த்ததை அதையே ரசமாக்கி விமர்சனம் செய்த படைப்புகளும் வர ஆரம்பித்ததே! கம்பராமயணம் முழுமையும் பாடல்களாகப் படித்தது 1970 ஆண்டில் தான். நான் விரும்பிய அண்ணா அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் அவருடன் அவர் எழுதிய கம்பரசம் புத்தகத்தைப் பற்றி விவாதித்திருப்பேன். இலக்கியம்பற்றி விவாதிக்க நான் என்றும் தயங்கிய தில்லை. இராமாயணம்பற்றி கி.வ.ஜ அவர்களுடனும், சிலப்பதிகாரம்பற்றி ம.பொ.சி அவர்களுடன் விவாதித்தவள்தான் நான். என்னுடைய தேடல் அர்த்தமற்றதல்ல. ஒரு முடிவை மனத்தில் வைத்துக் கொண்டு இறங்க மாட்டேன். அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் இறங்குவேன். புரிந்து தெளிவடையும் வரைவிடமாட்டேன்.

இன்று பத்திரிகைகளாப் பாருங்கள். நான் தமிழகம் சென்ற பொழுது சில இல்லத்தரசிகள் என்னிடம் குறைபட்டுக் கொண்டனர். பாலியல் கல்வியென்று பாலியல் உறவுகளை படங்கள் போட்டு விளக்கமாக சில பத்திரிகைகளில் வருகின்றன. சிறுவர்களும் அப்புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கும் பொழுது அந்தப் படக் காட்சிகள் அவர்கள் மனத்தைப் பதிக்காதா? அதனால் தான் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் உடன் படிக்கும் இன்னொரு குழந்தைப் பெண்ணுடன் செயல்முறையில் இறங்குகின்றான். கேட்டால் அப்பா, அம்மா விளையாட்டு என்கின்றான். பாலியல் கல்வி முக்கியம்தான் அதனை முறைப்படி எப்படி செய்ய வேண்டுமென்று அறிந்து செயல்பட வேண்டும். இதிலும் வணிகமா?

பெண் ஒரு காட்சிப் பொருளாகி விட்டாள். சிகரெட் விளம்பரத்திலும் கவர்ச்சியான பெண். வயதானவர்களும் ஆன்மீகவாதிகளும் பெண்ணை அடக்கமாக இருக்கச் சொல்கின்றார்கள். அந்தப் பெண்ணை விளம்பரத் துறைக்கு அனுப்பி பணம்பெற்று ஆடம்பர வாழ்க்கை வாழ நினைப்பவர்கள் பெற்றோர். தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யாமல் ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகி விட்டோம். இன்றைய அவல நிலைக்கு இப்படி எத்தனை காரணங்கள் ?!

பண்பாடு என்பது பண்படுத்துதலும் கூட. நிலம் வரண்டு விடாமல் அடிக்கடி பண்படுத்துவோம். அது போல் மனிதனைப் பண்படுத்துவதற்கு ஓர் கருவியாக வந்த கூத்தும் நாளடைவில், இருக்கும் பண்பாட்டையும் குலைக்கும் நிலைமை வந்து விட்டதே. ஏற்கனவே சமுதாயத்தில் வன்முறைகளும் பாலியல் கொடுமைகளும் இருக்கத்தான் செய்தன. ஆனால் இன்று அதன் விகிதாச்சாரம் இமயமென வளர்ந்து விட்டது. வெட்கப்பட வேண்டிய விஷயம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற பேச்சு காற்றோடு போய்விட்டது.

சீர்திருத்தம் என்று சொல்லிக் கொண்டு அதனைக் கையாண்ட உத்திகள் சரியானதா? மேடைப் பேச்சிலும் பெண் அரசியல்வாதிகளை விமர்சனம் செய்வது, கொச்சைப் பேச்சுக்களால். மக்கள் குடித்துவிட்டு உட்கார்ந்து இந்த பேச்சுக்களைக் கேட்டு கைதட்டுவார்கள். கூட்டத்தை வசீகரிக்க கையாண்ட முறை இது சரியா ? அரசியலில் பிரிவினைகள் எப்பொழுதும் உண்டு. ஆனால் அசிங்கம் நுழைந்தது எப்பொழுது? வரலாற்று எழுத்தாளர்கள் விருப்பு வெறுப்பின்றி ஆய்வு செய்யட்டும். இனி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

ஒரு பெண் அரசியலில் இருந்துவிட்டால் அவளை மேடையில் எவ்வளவு விரசமாகப் பேசுகின்றார்கள். தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கின்றார்கள். பேசுகின்றவன் அதே மேடையில் உட்கார்ந்திருக்கும் தலைமை முதல் மற்றவரைப் பார்க்கட்டும். அவர்களில் எத்தனை பேர்கள் சொந்த வாழ்க்கையில் சுத்தமாவர்கள்? பேசுகின்றவனே தன்னைப்பற்றி நினைத்துப் பேசட்டும். இது கற்பனைச் செய்தியல்ல. இது போன்று 1990 இல் ஒரு முறை நடந்த மேடைப் பேச்சு பற்றி கேள்விப்பட்டு சாகக் கிடந்த பெற்றவளை வீட்டில்விட்டு சென்னை சென்று பெண்களைக் கூட்டி கண்டனக் கூட்டம் போட்டேன். அதுமட்டுமல்ல கண்டன அறிக்கையும் பத்திரிகையில் கொடுத்து அது அச்சில் வந்தது. பெண்ணைக் கேவலப் படுத்தினால் பெற்ற பிள்ளையாயினும் உற்றவராயினும் என்னால் அவர்களைக் கண்டனம் செய்யாமல் இருக்க முடியாது. மூலையில் உட்கார்ந்து புலம்புகின்றவள் அல்ல நான். இப்பொழுது முடங்கிக் கிடக்கின்றேன். எனக்கு வயதும் சக்தியும் கிடைத்தால் இப்பொழுது எழும்பிய உணர்வுக்கு நான் முன்னின்று செல்வேன். ஒரே நேரத்தில் முடிக்க முடிந்த பிரச்சனையல்ல. எல்லோரும் ஒன்று சேர்ந்து அமைதியாக அதே நேரத்தில் எங்கெல்லாம் இந்த தீமை நடக்கின்ற்தோ அங்கு சென்று குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். அவன் உச்ச நிலையில் இருந்தாலும் இக்கொடுமை வெளிச்சத்திற்கு வர வேண்டும். அரசியல்வாதிகளும் மற்றவர்களும் என்னை மன்னிக்க வேண்டும். நல்லவர்களும் உடன் இருப்பது தெரியும். ஆனால் தீமையின் சூட்டிலே கடலில் கரைத்த பெருங்காயம் போன்று அவர்கள் நிலை ஆகிவிடுகின்றது.

உலகில் தேர்தல் பற்றி பெரிய சட்டங்களே இல்லாத காலத்தில் ஒரு சின்ன கிராமத்தில் தேர்தல் விதிகள் வகுக்கப்பட்டன. அதிலே கொலை, கொள்ளை யடிப்பவர்கள், குற்றவளிகள், தேர்தலில் நிற்க முடியாது. தேர்தலில் நிற்க வேண்டிய தகுதிகள் வகுக்கப் பட்டன. அதுமட்டுமல்ல, தேர்தல் முடிந்து பதவிக்கு வந்த பின்னர் தவறு செய்தால் பதவி நீக்கம் மட்டுமல்ல தண்டனையும் அளிக்கப் படும். உத்திரமேரூர் கல்வெட்டைப் பாருங்கள். அவர்கள் நிறைய படித்துப் பட்டம் பெற்றவர்கள் அல்ல. வாழ்வியல் புரிந்தவர்கள். அந்த நாணயம் படித்தவர்களிடம், அறிவில் சிறந்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் உணர வேண்டாமா? ஏனிந்த பேராசை? கொள்ளையடித்து சொத்து சேர்த்து வைத்தால் சக்கரை வியாதி வரும் பொழுது சாப்பிடக் கூட முடியாதே. சொத்தின் பலன் என்ன? கால்கள் முடமாகி படுக்கையில் வீழ்ந்தால் பெற்ற பிள்ளைகளும் மற்றவர்களும் எப்பொழுது சாவாய் என்று சுற்றி சுற்றி வருவார்களே, அதைப் பார்த்து துடிக்க வேண்டிவரும்.. இந்த வயதில் தெரியாது. இளமையில், சக்தி இருக்கும் பொழுது எல்லாம் தாங்க முடியும். ஆனால் முதுமையில்தான் நாம் வாழ்ந்த லட்சணத்தின் பலன்கள் தெரியும். செத்த பின் சொர்க்கமா நரகமா என்று பேசவில்லை. பேராசைக் காரனுக்கும் பெண் சபலக்காரனுக்கும் முதுமையில் நிம்மதி இருக்காது.

“எல்லோரும் கெட்டவர்கள் இல்லை. ஆனால் கெட்டது எப்பொழுது நடக்கும் என்று சொல்ல முடியாது “

எனக்கு கிடைத்த முதல் படிப்பினை. நான் எழுதும் எல்லாத் தொடர்களிலும் இதனைக் குறிப்பிடத் தவறுவதில்லை. பணிக்குச் சென்ற முதல் நாளே அவலச் செய்தி. தங்கள் விருப்பத்திற்கு வளையாதவளை வதந்திகளால் கேவலப்படுத்தி விரட்டிய ஆண் கூட்டம்தான் என்னை வரவேற்றது. அடுத்த நாளே ஓர் ஆண் மிருகத்தால் கெடுக்கப்பட்ட அப்பாவி பெண்ணொ ருத்தியைப் பார்த்தேன். பணிக்களத்தில் தினமும் ஏதாவது ஓர் கண்ணீர்க் கதை கேட்டவள் நான். சில பெண்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை. சிலரைக் காப்பாற்றி யிருக்கின்றேன். எனக்குள் எரிமலையாக இருந்துவரும் அந்தக் குமுறல்கள் தான் வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்களை எழுதத் தூண்டியது. முடிக்கும் நேரத்தில் கூட எங்கிருந்தோ ஓர் கதறல். ஆம் டில்லி சம்பவம்தான். எங்கும் அது பற்றிய பேச்சு. மேலை நாட்டவர்கள் வந்து உதவி செய்வதாகக் கூறும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். இந்தியப் பண்பாடு அதிலும் குறிப்பாக தமிழர் பண்பாடு உயர்த்திப் பேசப்பட்ட காலம் போய், நம் பண்பாட்டுக் கூறுகள் இறந்தகாலச் செய்திகளாக மாறிவிட்டதைப் பார்க்கும் பொழுது வேதனை வராமல் என்ன செய்யும்!.

கொதித்து எழுந்த கூட்டங்கள், ஓங்கி எழும்பிய குரல்கள் இவைகளை நான் மவுனமாகப் பார்த்தேன். இதன் ஆயுள் குறைவு என்று தெரியும். ஓர் கிருஷ்ண வேணியைக் கூடக் காப்பாற்ற முடியாதவர்கள் நாம். ஆரம்பத்தில் காட்டும் துடிப்பு பின்னர் வலுவிழந்து போகின்றதே?! மனிதனின் எழுச்சியும் வேகமும் அவ்வளவு தானா?

விசாரணைக் கமிஷன்கள் வைத்தால் அதுவும் வருடக் கணக்கில் விசாரணை நடத்தி அதன் வலிமை இழந்து ஏதோ ஒர் தீர்ப்பு அல்லது முடங்கிப் போய் மூலையில் கிடப்பதைப் பார்க்கின்றோம். நீதி மன்றம் செல்லும் வழக்குகளும் வாய்தாக்காளிலேயே வருடங்களைக் கடத்திவிடும். புதுப் புது சாட்சிகளால் குற்றக் குறிப்பின் திசையும் மாறலாம். அதுதான் நம் நிலை. அதற்காகச் சட்டங்கள் வேண்டாம் என்று கூறவில்லை. எழுச்சியும் வேண்டாம் என்று சொல்லவில்லை. குற்றங்களுக்குக் காரணமனாவைகளையும் ஒழிக்க வேண்டும். முற்றிலும் முடியா விட்டாலும் முதலில் முயற்சியைத் தொடங்க வேண்டும்

மனிதனுக்குள் உறங்கும் மிருகத்தை உசுப்பும் சக்தி மதுவிற்கு உண்டு. முதலில் தமிழ் நாடு முழுவதும் மதுவிலக்கு வர வேண்டும்.

எத்தனை குடும்பங்கள் மது அரக்கனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கிடைக்கும் சிறிய ஊதியத்தையும் குடிக்கக் கொடுத்துவிட்டு மனைவியை அடிக்கும் கணவர்கள் எத்தனை பேர்கள்? அவள் தாலியைக் கூட விடுவதில்லை. பணம் வேண்டி மனைவியை, மகளைப் பிற ஆண்களிடம் அனுப்பும் கொடுமை தொடரலாமா? சட்டத்தின் பிடிகளுக்குள் இவைகள் செல்ல முடியாத நிலை. மகள் என்றும் பாராமல் கெடுக்கும் அப்பன்மார்களுக்குத் தண்டனை எப்படி தருவது? குடும்பச் சண்டகளுக்கு சாட்சிகள் வராதே.குழந்தையையும் கசக்கின்றான். கிழவியையும் விட்டு வைப்பதில்லை. மது வியாபாரத்தால் அரசுக்கு நிறைய வருமானம் கிடைக்கின்றது. அந்தப் பணத்திலிருந்து மக்கள் நலத்திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்பது செத்த பிணங்களுக்குப் பூமாலை போடுவதைப் போல இருக்கின்றது. ஒரு மாநிலத்தில் மட்டுமல்ல , இந்திய நாடு முழுவதும் மதுவிலக்கு வரவேண்டும். ஒரு மாநிலைத்தில்மட்டும் என்று இருந்தால் அந்த ஊர்களில் போய்க் கொட்டமடிப்பான்.

மதுவிலக்கு என்று சொல்வது எளிது. மதுவில் பழக்கமாகிவிட்டால் அதை நிறுத்துவது அவனுக்கு சுலபமல்ல. நரம்பு பலஹீனம் ஏற்பட்டிருக்கும். அவன் போதை வேண்டி எந்தக் காரியத்தையும் செய்யத் துணிவான். குடிகாரர்களுக்கு சிகிச்சை தர புனர் வாழுவு இல்லங்கள் தேவை. இப்பொழுது இருப்பவைகள் போதாது. குடிகாரனுக்கு மது கிடைக்கவில்லையென்றால் அவன் கரங்கள் நடுங்குவதையும், அவனிடம் தோன்றும் பதட்டத்தைப் பார்த்திருக்கின்றீர்களா? கள்ளச் சாராயம் வியாபாரம் தொடங்கப்படும். அவைகளையும் முளைக்க விடாமல் கண்காணிக்கப்படவேண்டும். ஒரு பெண்ணைக் கொளுத்தியவளைப் பற்றிய புகாரைக் கூட எடுத்துக் கொள்ளத தயங்கும் காவலர்களில் எத்தனை பேர்கள் கள்ளச் சாரயச் சந்தையை ஒடுக்குவர்?ஆலோசனைகளைக் கூறுவது எளிது. பக்கவிளைவுகள் அனைத்தையும் சேர்த்து எண்ணித் திட்டமிட வேண்டும். பல நல்ல திட்டங்கள் முழுமையாக ஆராய்ந்து திட்டமிடாமல் செயலுக்குக் கொண்டு வருவதால் பயனற்றுப் போகின்றது. வரவரப் பெண்களால் இக்கொடுமை தாங்க முடியாமல் குடிகாரப் புருஷனை உலக்கையாலும் கல்லுரல் குழவியாலும் அடித்துக் கொல்ல ஆரம்பித்திருக்கும் செய்திகளையும் பார்க்கின்றோம். ஏற்கனவே வன்முறைகள் பெருகிவரும் காலத்தில் பெண்களையும் கொலை செய்யத் தூண்டுவது சரியா?

கடுமையான சட்டங்களும் வர வேண்டும். மதுவிலக்கும் வர வேண்டும். அதனுடன் இடையூறாக வருபவைகளையும் அடக்குவது பற்றி சிந்தித்து சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

மதுவைவிட மனிதனை ஆட்டிப் படைக்கும் இன்னொரு சக்தி வேகமாக வளர்ந்து விட்டது. மதுவாவது குடித்த பொழுது அவனைத் தன் வசப்படுத்துகின்றது. ஆனால் இந்த புதிய சக்தி அவனுக்குள் விதை விதைத்து ஊக்கமளித்து அவனை வன்முறைத் திடலுக்கு அனுப்புகின்றது. இந்த மாபெரும் சக்தி உலகம் முழுவதும் நிறைந்திருக்கின்றது. மாற்றங்கள் தோன்றுவது இயல்புதான் ஆனால் வேகமாக வளர்ந்து வரும் சில மாற்றங்கள் அச்சத்தைக் கொடுக்கின்றது !

ஊடகங்கள் தான் இந்த சக்திக்கு ஊர்தி. பல வடிவங்களில் மனிதனை மயக்குகின்றது. விஞ்ஞானம் அறிவின் பிள்ளை. ஒரு கதைபற்றி நினைத்துப் பார்ப்போம். ஈடன் கார்டனில் இருந்த பகுத்தறிவுக் கனியை மட்டும் சாப்பிடக் கூடாது என்று ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இறைவன் கூறியிருந்த அறிவுரை. மனிதன் மீறினான். அன்றுமுதல் அவர்கள் சாத்தானின் வசமானார்கள். இதன் உட்கருத்தைப் பாருங்கள். இன்றைய வாழ்க்கைக்கு அது எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது. விஞ்ஞானத்தால் பல வசதிகளைப் பெற்று மகிழ்ந்திருக்கின்றோம். அதே நேரத்தில் மனத்திற்குள் ஓர் விரசம் நுழைய ஆரம்பித்திருக்கின்றதே! அது வளர்ந்து உடல் அரிக்கப்படும் பொழுது அலருகின்றோம்.

ஊடகங்களில் கட்டுப்பாடுகளை எப்படி கொண்டு வருவது? சிந்தித்து செயலாற்றப் பட வேண்டிய விஷயம். மக்கள் அதிகம் சிந்திக்கமல் இருப்பது அரசியல்வாதி களுக்கு லாபம். அரசு இயந்திரங்களுக்கும் அப்படியே. தங்கள் கடமைகளைச் செய்வதற்குச் சோம்பித்திரியும் எல்லாதரப்பின்ருக்கும் மனிதன் ஏதோ ஓர் மயக்கத்தில் இருப்பது நல்லது. இப்படி திட்டமிடுபவர்களும், காக்க வேண்டியவர் களும் நினைத்தால் நிலைமை எப்படி சீர்திருந்தும்? இவர்கள் எல்லோரும் யார்? நம்மைச் சேர்ந்தவர்கள் நம்மில் ஒருவர்தான். தனித்து சாடமுடியாது. வீட்டிலே அரசியல்வாதி இருக்கலாம், அரசுப்பணியாளன் இருக்கலாம். சினிமா ரசிகன் இருக்கனலாம். பிரித்து எண்ணுவது சரியல்ல.

டில்லி நிகழ்ச்சியில் 17 வயது இளைஞன் எவ்வளவு கொடூரமாக நடந்திருக் கின்றன. என்னை நொருக்கிய செய்தி இதுதான். இரும்புக் கம்பியைக் கொண்டு அந்தப் பெண்ணை வதைக்கும் எண்ணம் ஒரு நிமிடத்தில் தோன்றியதாக இருக்க முடியாது. அவன் பெற்றோர்கள், அவன் வளர்ந்த சூழல் ஏதோ ஒன்று அவனுக்குள் இந்த தீக் கருவைப் புதைத்திருக்க வேண்டும். என்ன கொடுமை?! இந்தத் தொடரை நிதானமாகப் படித்துப் பார்க்கவும். பெண்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. குழந்தை வளர்ப்பு, சிறுவர்களைக் கவனிக்க வேண்டிய முறைகள் எழுதப் பட்டிருக்கின்றன. நான் உதாரண சம்பவங்கள் காட்டி வரும் பொழுதே நம் கண்முன்னே நடந்திருக்கும் இந்த கொடிய செயலும் ஓர் உதாரணமாக நிற்கின்றதே! பெற்றோர்கள், ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை உணர வேண்டாமா?

டில்லி சம்பவத்தில் இன்னொரு காட்சி. அனைத்துக் கட்சிகளும் அப்பொழுது ஒருமித்த குரல் கொடுத்தது. இதனை நான் அரசியல் ஆக்க விரும்பவில்லை. போகப் போக இது அரசியல் ஆகாமல் இருக்க இறைவனை வேண்டுகின்றேன். அப்பொழுது இருந்த உணர்வில் போராட்டம் தொடர்ந்திருந்தால் பல உயிர்கள் போயிருக்கும். நாட்டிற்கு மிகவும் மோசமான கெட்ட பெயர் வந்திருக்கும்..மற்ற பணிகளும் முடங்கின. வாகனங்கள் கூட நிறுத்தப்பட்டன. ஓரளவு வன்முறைகள் குறைக்கப்பட்டன. பெண்களிடையே எழுந்த உணர்ச்சி அடங்கக் கூடாது. அமைதியான முறையில் தொடர வேண்டும்.கொடுமைகள் நடக்கும் இடங்களில் நடவடிக்கை எடுக்க அமைதியான முறையில் செயல்படவேண்டும். டில்லி சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களுக்குள் ஒரு பெண்ணை கெடுத்தது மட்டுமின்றி அவளை கெடுத்தவனும் அவன் உறவினர்களும் தீயில் அந்தப் பெண்ணைக் கொளுத்தியதும் நடந்தது. புகாரை வாங்க மறுத்த காவலர்களும் உண்டு. அங்கு பெண்கள் கூடி புகாரை வாங்க வைத்திருக்கின்றனர். ஆனால் இந்தப் புகார் விசாரணை சரியாகச் செல்லுமா என்பது கேள்வி. இது போன்று ஒன்றல்ல, நாட்டில் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. காக்க வேண்டிய கடமைப் பட்டவனும் ஒதுங்கினால் எங்கே போய் நிற்பது? அதிகாரமும் பணமும் நீதி மன்றம் செல்ல முடியாமல் தடுப்பதும் , அப்படிச் சென்றால் சாட்சிகளை முடக்குவதையும் யார் சரிப்படுத்துவது? பெண்ணிற்கு மட்டுமல்ல, இம்மண்ணில் இனி நியாத்திற்கு இடமில்லையா?

“செக்ஸ்” தவறில்லை. திருமணத்தில் நம்பிக்கையில்லை. விருப்பம் உள்ளவரை ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம். பாவிகளா, உங்களுக்குக் குழந்தைகள் வேண்டாம். பிஞ்சு மனத்தைச் சிதைக்க வேண்டாம். ஆஸ்திரேலியாவில் இப்படிப்பட்ட குழந்தைகளின் குமுறல்களை நான் நிறைய பார்த்திருக்கின்றேன். இங்கும் உண்டு. ஆனால் வெளியில் சொல்லாமல் தங்களுக்குள் குமுறும் குழந்தைகள் உண்டு. நம் ஜெயகாந்தன் அவர்கள் ஒரு பிள்ளையின் மனக் குரலை எழுதியிருக்கின்றார். தெருக்குழந்தைகள் புனர்வாழ்வுத் திட்டங்களில் குழந்தைகளின் உணர்வுகளைப் பார்த்திருக்கின்றேன்.திருமணமின்றி சேர்ந்து வாழ நினைப்பவர்கள் குழந்தைப் பேறில்லாத அறுவை சிகிச்சை செய்து கொள்ளட்டும் .குடும்பக் கட்டுப்பாடுதிட்டத்தில் மணமானவர்களுக்கு அதிகக் குழந்தைகள் இருப்பவர்களுக்கு நாம் கூறும் ஆலோசனைதானே. மக்கள் பெருக்கம் குறையும். இதில் ஆண், பெண் என்ற பேதமின்றி இருவருக்கும் கருத்தடை சிகிச்சை செய்துவிடலாம். பெற்றோர் இருந்து வளரும் குழந்தைகளின் நிலையே பரிதாபகரமாக மாறிக் கொண்டிருக்கின்றது. உறவில்லா இருவருக்குப் பிறக்கும் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்?!

அய்யா, நான் பத்திரிகைகள் செய்தி படித்து எழுத வில்லை. இலக்கியம் படைக்க வில்லை. யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் வரலாற்றையும் எழுதவில்லை. இந்த சமுதாயத்தில் பாதிக்கப்பட்டு , சிதைந்து சமுதாயத்தால் தூக்கி எறியப்பட்ட வர்களுடன் அவர்கள் நல வாழ்விற்காக முடிந்தவைகளை செய்பவள் நான். இது ஒரு மூதாட்டியின் புலம்பல்

“நாட்டு நலனிலும், மக்கள் நலனிலும் அக்கறை கொண்டவர்கள் இப்போது கவலைப்பட ஆரம்பித்துள்ளனர். சத்தியம், அகிம்சை, நாகரிகம், பண்பாடு என்னும் இந்த வார்த்தைகள் பொருளற்றுப் போய் விட்டனவா? இவற்றைப் பற்றியே கவலைப்படாத ஒரு சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கிறதா? நாடு இப்படியே போய்க் கொண்டிருந்தால் எதிர்காலம் என்ன ஆகும்?

இந்த பூமி எவ்வளவு பழமையானதோ அந்த அளவுக்குக் கடலும், மலைகளும் பழமையானவை. மக்களின் நாகரிகமும், பண்பாடும் கூட அப்படித்தான். இவற்றைப் பழமையானவை என்று ஒதுக்கலாமா? இது ஒரு சமுதாய முன்னேற்றத்தின் அடையாளமா, சமுதாயச் சீர்கேட்டின் அறிகுறியா?”

உதயை மு.வீரையன் என்பவரின் புலம்பல். என் நெஞ்சைத் தொட்ட வரிகள். இப்படி கோடிக்கணக்கான நெஞ்சங்கள் மவுனக் கண்ணீர் வடிக்கும் நிலை வந்து விட்டதே! என்ன செய்யலாம்?

இன்னும் சில பிரச்சனைகளையும் அலசிப் பார்த்துப் பின்னர் வழிவகைகள் காணலாம்

புத்தர் ஐந்து போதனைகள் ( பஞ்சசீலம் )

1. கொலை கூடாது

2. களவு கூடாது

3. ஒழுக்கமின்மை கூடாது

4. பொய் கூடாது.

5. மது கூடாது

[புலம்பல் தொடரும்]

படத்திற்கு நன்றி

Series Navigationதேவமுகுந்தன் – ஒரு புதிய வரவு ஒரு புதிய குரல்இட்லிப்பாட்டி