வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 4-நீலமலையின் நினைவலைகள்


என்னை தனக்குள் அழுத்திவிடும் வல்லமை படைத்தது நீலமலை. துரைராஜ் பற்றி சொல்ல வேண்டு மென்றால் நீலமலைக்கு நான் செல்ல வேண்டும். என் பயணம் திசைமாறிப் போக நேரிடும். பெரியகருப்பனுடன் என் மனத்தில் உறையும் துரைராஜ் பற்றி பின்னர் தெரிந்து கொள்ளலாம். இப்பொழுது என் பணிக்களம் செல்லலாம்.

சில இடங்களில் ஊர்ப் பெயர்கள், சம்பந்தப்பட்ட மனிதர்களின் பெயர்கள் கூறுவதைத் தவிர்த்திருக்கின்றேன். . சில நிகழ்வுகள் கூட உண்மைகளின் ஆழத்தை மட்டும் காட்டும். நமக்கு வேண்டியது செய்திகள் மட்டுமே.

முதல் நாள்

வட்டார அலுவலகத்தில் சமூகக் கல்வி அமைப்பாளராகப் பணியேற்கச் சென்றேன்.

வேலையில் சேர்ந்த கடிதம் சமர்த்தபின் என்னைச் சந்தித்தவர்கள் சொன்ன செய்தி

இப்பொழுது இருக்கும் அதிகாரி எனக்கு முன் வேலை பார்த்த பெண்ணைக் கெடுத்து விட்டார். அதனால் பொதுமக்கள் நோட்டீஸ் அடித்து சுவர்களில் இவர்களின் கள்ள உறவை எழுதிவிட்டார்கள். அத்துடன் மேலதிகாரிகளுக்கும் புகார் செய்து விட்டார்கள். எனவே நான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

எனக்கு அப்பொழுது 21 வயது. கிராமப்புறத்துப் பெண். இதைக் கேட்டவுடன் அஞ்சியிருக்க வேண்டும். ஆனால் அச்சம் வரவில்லை. பதிலாக ஆத்திரம் வந்தது. எடுத்தவுடன் வம்பா? ஆரம்பதிலேயே பயமுறுத்தலா? வம்பர்களின் முகத்தை நான் பார்த்த விதத்தில் என்ன கண்டார்களோ வந்தவர்கள் நகர்ந்தனர். சிறிது நேரம் கழித்து இருவர் வந்து இவர்களைக் குறை கூறினர். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. நோட்டீஸ் அடித்தது, சுவற்றில் எழுதியது, புகார் மனு அனுப்பியது எல்லாம் உண்மை. ஆனால் அதிகாரி ஓர் காந்திய வாதி. அந்தப்பெண்ணைக் காப்பாற்ற அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளை அசிங்கப்படுத்தியவர்கள் முதலில் என்னைப் பார்க்க வந்தவர்கள்தான்.

வேலையில் சேர்ந்த ஒரு மணி நேரத்தில் நடந்து விட்ட சம்பவம். இன்னொரு பெண்ணாக இருந்தால் வேலை வேண்டாம் என்று அழ ஆரம்பித்திருப்பாள். நான் சொல்லுவது அந்தக் காலத்தில் பெண்ணின் நிலை. ஆனால் நான் அயர வில்லை.
அரசுப் பணியில் வெளியில் தெரியாத பல சாக்கடைகள் உண்டு.

நேர்மையாக, கண்டிப்பாக நிர்வாகம் செய்பவர்களுக்கு முதல் பரிசு இந்த வம்புக் கணைகள்.

லஞ்சம் கேட்கிறார். பெண்களிடம் முறை தவறி நடக்கிறார். மேலதிகாரிகளைக் காக்காய்ப் பிடிக்கின்றார் (இந்தக்காலத்தில் இன்னொன்றைச் சேர்க்கலாம். இவர் எதிர்க்கட்சி சார்பானவர் ) இவ்வாறு மொட்டைக் கடுதாசிகள் எழுதி மிரட்டுவது, பெயரைக் கெடுப்பது ஓர் வாடிக்கை. இது இன்றும் தொடர்கதை.

அடுத்த நாள் முதல்பாடம் கற்றுக் கொண்டேன்

இராட்டை கற்றுக் கொடுக்கும் பணியாளர் லட்சுமி ஓர் வீட்டிற்குப் போயிருந்த பொழுது கெடுக்கப்பட்ட செய்தி. இது வதந்தியல்ல. உண்மைச் சம்பவம். பாதிக்கப்பட்டவள் என் முன்னால் அழுது கொண்டிருந்தாள். ஓர் ஆண்மகன் அருகில் தவறான நோக்கத்தில் வந்தால் கை நகங்களை உபயோக்கிக்கும்படி காந்திஜி சொன்னதைக் கூறவும் அவள் பொங்கி எழுந்து சொன்னவைகள்தான் எனக்கு முதல் பாடம்

“பேசறது சுலபம்.வெறி வந்துட்டா ஆம்புள்ளங்களுக்கு யானைப் பலம் வருதே. அவன் பிடிச்சவுடன் நம்மகிட்டே இருக்கற கொஞ்ச பலமும் போய்டுதே. என்ன நடக்கறதுன்னு புரியறதுக்குள்ளே எல்லாம் போய்டுத்தே மனுஷங்க எல்லாரும் கெட்டவங்க இல்லே. ஆனால் கெட்டது எப்போது வரும், எப்படி வரும்னு தெரியாது .இப்போத்தான் புதுசா வேலைக்கு வந்திருக்கீங்க. உங்களுக்கு முன்னாலே இருந்தவங்க நல்லவங்க. எப்படி பேரைக் கெடுத்தாங்க. பெண்கள் ஜாக்கிரதையா இருக்கணும்.யாரையும் நம்பக் கூடாது. யாரையும் விரோதிச்சிக்கவும் கூடாது. நீங்க என்னைவிடப் படிச்சவங்க. ஆனால் உங்களைவிட எனக்கு வயசு அதிகம். நான் அடிபட்டு அழிஞ்சு போனவ. புத்தி சொல்றதா தப்பா எடுத்துக்காதீங்க”
பிறர் அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்த முதல் பாடம். என்னிடம் இருந்த துணிச்சல் அசட்டுப் பட்டம் வாங்காமல் இருக்கக் கிடைத்த வைர வரிகள்.

துணிச்சல் மட்டும் போதாது. விவேகத்துடன் கலந்த துணிச்சலே பாதுகாப்பு.

சின்ன வயதில் அந்தளவு விவேகம் வந்துவிடாது. அன்பவங்களிலிருந்து பெற வேண்டிய ஒன்று.

பயிற்சிக்கு முன் குறைந்த காலமாயினும் களப்பணி பெற வைக்கும் திட்டம் அர்த்தமுள்ளது. முடிந்தவர் பணியில் தொடரலாம் அல்லது மனை நோக்கிச் சென்றுவிடலாம்.

தனிக் குடித்தனம் ஆரம்பம். கிடைத்த வீட்டில் மின்வசதி கிடையாது, சிம்மினி விளக்குதான் கண்சிமிட்டும்.

பெருந்தலைவரின் குரல் மனதுக்குள் ஒலித்தது

“கிராமங்களீல் மின் வசதி கூட கிடையாது”.

அடுத்து ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமம்செல்ல சில மைல்கள் நடக்க வேண்டும். வரப்புகளில், கரடு முரடான பாதைகளில் செல்ல வேண்டும். நடக்கும் பொழுது கால் வலித்தது. முதல் பழக்கம். மீண்டும் குரல் ஒலித்த்த.

“சரியான ரோடு கிடையாது. நிறைய இடங்களுக்கு பஸ் கிடையாது”.

வீட்டுப் பெண்மணிகளைச் சந்தித்துப் பேசிய பொழுது தங்கள் பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை என்பது மட்டுமல்ல அது தேவையில்லை என்றே பேசினர்.

வயலுக்குப் போகப் போறான் படிப்பெதுக்கு?

அடுத்த வீட்டுக்குப் போற பொட்டைப் புள்ளங்களுக்கு படிபெதுக்கு?. நல்லா சமைக்கத் தெரிஞ்சா போதும். வீட்டு வேலைகள்தான் கத்துக்கணும். மீண்டும் மனத்தில் குரல் ஒலித்தது.

“நிறைய ஊர்களில் பள்ளிக்கூடம் கிடையாது. இருக்கும் ஊர்லெயும் பள்ளிக்கூடம் அனுப்பறதில்லே. வேலைக்காகப் படிக்கணும்னு இல்லே. உலகத்துலே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க நாலு எழுத்து தெரிய வேணாமா”.

அர்த்தமுள்ள வார்த்தைகள்! அனுபவத்தின் வெளிப்பாடு !

கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் பெரும் தலைவர். பள்ளி வேலையி லிருந்த என்னைக் களப்பணிக்கு அனுப்பியவரின் ஆத்மாவின் குரல். அதிகம் படிக்காதவரின் ஆதங்கம். பசியினால் படிப்பில் கவனம் சிதறுவதைக் கூட சிந்தித்து பள்ளியில் மதிய உணவு கிடைக்க வழிசெய்தவர் பெரும் தலைவர் காமராஜ் அவர்கள்.

நான் அரசியல் பேசவில்லை. நான் பார்த்த காட்சிகளை, என் அனுபவங்கள் உணர்த்தியதைக் கூறுகின்றேன்.
ஒரு சாதாரணத் தொண்டனின் மகளுக்குக் கூட அயராமல் அறிவுரை கூறிய அந்தப் பெருந்தகையை நான் வணங்குகின்றேன்.

அங்கிருந்தது மூன்று மாதங்களுக்கும் குறைவான காலம்தான். கிடைத்த அனுபவங்கள் எனக்குப் படிப்பினை
பயிற்சிக்கு காந்தி கிராமம் சென்றேன்

டாக்டர் செளந்திரம் ராமச்சந்திரன் அவர்களின் நிறுவனம்..

கிராமப் பணிக்குச் செல்ல அனுப்பியவர் காந்தியவாதி. இப்பொழுது பயிற்சி கொடுக்க இருப்பவரும் காந்தியவாதி. வரலாற்று மனிதர்களை நாம் எட்ட நின்று பார்க்கலாம். பத்திரிகைளில் புத்தகங்களில் படிக்கலாம். ஆனால் எனக்கோ அவர்களே பயிற்சி கொடுத்ததும், பலர் தங்களுடன் வைத்திருந்து பணிகளுக்கு வழிகாட்டியாக இருந்ததுவும் எனக்குக் கிடைத்த வாய்ப்புகளே!
காந்தி கிராமத்தில் பல அனுபவங்கள் !

எங்கெங்கிருந்தோ வந்த சகோதரிகள். அவர்களுக்கும் எத்தனை அனுபவங்கள் ! எல்லாம் கசப்பானவை. பள்ளிக்குக் கூடப் பெண்களை அனுமதிக்காத காலம். ஓரிடத்தில் அமர்ந்து செய்யும் பணியல்ல. இது களப்பணி. புதிய இடங்கள், புதியவர்கள் என்று எல்லாம் புதியவை. பல தருணங்களில் அனுபவங்கள் மிரட்டும். தடுமாறித் தன்னைக் காத்துக் கொண்டவர்களும் உண்டு. இடறி வீழ்ந்தவர்களும் இருந்தனர்.. அவர்களில் ஒருத்தியின் சோகக் கதை.

பெயர் கமலா.

உடன் வேலை பார்ப்பவனால் கெடுக்கப் பட்டாள்.. அவனுக்கு ஏற்கனவே மணமாகி குழந்தைகளும் இருக்கின்றார்கள். இவளை அவன் சேர்த்து வைத்துக் கொள்ளப் போகின்றானாம். கழுத்தில் கயிறு கட்டவும் சம்மதமாம். அந்த முரடன் அவளுடன் வேலை பார்க்கின்றவன். எதற்கும் துணிந்தவன். காந்தி கிராமத்தை விட்டு வெளியில் போகப் பயந்தாள். தற்கொலை செய்து கொள்ளும் மன நிலையில் இருந்தாள். அவளை எப்படியும் காப்பாற்றியாக வேண்டும் என்று தோன்றியது. தைரியம் சொன்னால் போதாது. அவளைச் சுற்றிவரும் தீமையை ஒழிக்க வேண்டும். (என்னைப்பற்றிக் கூறிய பிறகு என் செயல்பாடுகளைக் கேள்விக் குறிகளுடன் பார்க்காமல் புரிந்து கொள்ள இயலும். என் குறைகளையும் மறைக்காமல் கூறுவேன் .கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் )

அன்று முதல் இன்று வரை ஏனோ வாழ்க்கையில் சோதனைப் புயலில் சிக்கித் தவிப்பவர்கள் என்னைப் பார்க்கவும் தங்கள் துயரத்தைக் கொட்டி விடுகின்றார்கள். முன்பெல்லாம் பெண்கள்தான் துன்பத்தில் துவண்டவர்களாக வருவர். சமீப காலமாக ஆண்களும் வர ஆரம்பித்திருக்கின்றனர். நான் இருப்பதோ அமெரிக்காவில். உலகில் எங்கிருந்தாலும் என்னிடம் தொடர்பு கொண்டு பேசுகின்றார்கள். என் பணி ஓயவில்லை. சமூக சேவைக்கு ஓய்வு கிடையாது. இங்கிருந்து கொண்டே இன்னும் தமிழகத்தில் சில நற்காரியங் களைச் செய்ய முடிகின்றது. சென்னைக்குச் சென்றாலோ ஒரு நாள் கூட ஓய்வில் இருக்க முடியாது.

அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டால் பின்னர் அவர்களுகு எந்த மரியாதையும் இருப்பதில்லை. மாறுதல் உத்திரவு வந்தாலே வருகின்ற வருக்குத் தான் வரவேற்பும் மரியாதையும். ஆனால் என் காலத்தில் என்னுடன் பணியாற்றியவர்கள் கீழ் நிலை முதல் மேல் நிலையில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் என்னை மறக்கவில்லை. நான் கூறுவதைக் கேட்டு ,அவர்களால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றார்கள். சமுதாய நிலை பற்றிய புள்ளிவிபரங்கள் கேட்டாலும் அறிக்கை அனுப்புகின்றார்கள். எங்கோ ஓர் கிராமத்து மூலையில் நடந்திருந்தாலும் அயராமல் விபரம் அறிந்து எனக்கு எழுதுகின்றார்கள். ஆம் நான் இன்னும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன். என் கடைசி மூச்சு நிற்கும் வரை நான் என் கடமையைச் செய்வேன். இது என் இயல்பு மட்டுமல்ல, என் வழிகாட்டிகள் என் உயிரில் கலந்து நின்று ஊக்கம் கொடுக்கின்றார்கள். அந்த வழிகாட்டிகளில் ஒருவர் டாக்டர் செளந்திரம் ராமச்சந்திரன்.

கலங்கித் தவிக்கும் அவளைக் காப்பாற்ற வேண்டும். இது அம்மாவால்தான் முடியும். அவளை அம்மாவிடம் நான்தான் அழைத்துச் சென்றேன். அவள் சுலபமாக வரவில்லை. பயமும் கூச்சமும் அதிகமாய் இருந்தன.
“அம்மா” எங்கள் அம்மா. . ஆம் அப்படித்தான் அவர்களை அழைப்போம். மிகப் பெரியவர்கள். அனால் எங்களுக்கு அம்மா. எங்களால் பார்க்க முடியும். பேசமுடியும். அவர்களிடம் அழ முடியும். நான் விபரம் கூறியவுடன் அவளை அழைத்து வரச் சொன்னார்கள்.

அம்மா உட்கார்ந்திருந்தார்கள் உள்ளே சென்ற கமலா அப்படியே அம்மா காலில் விழுந்து கதறி அழ ஆரம்பித்தாள். அவள் தலையைப் பிடித்து அவர்கள் மடியில் சாய்த்துக் கொண்டார்கள்.. அழுகை சப்தம் அதிகமானது. அம்மா ஒன்றும் பேச

வில்லை. அவள் முதுகைத் தடவி விட்டுக் கொண்டிருந்தார்கள். சில நிமிடங்கள் கழித்து அந்த மனிதனின் விபரங்களை கேட்டார்கள். அவளிடமும் கொஞ்சம் நிதானம் வந்திருந்தது. எல்லாம் பொறுமையாகக் கேட்டபின் “கவலைப்பட்தே. அவன் இனிமேல் உன்னைத் தொந்திரவு செய்யாமல் நான் பார்த்துக் கொள்கின்றேன்.” என்றார்கள். அவள் தலையாட்டி விட்டு எழுந்தாள். நாங்கள் இருவரும் புறப்படத் திரும்பிய பொழுது “சீதா” என்று கூப்பிட்டார்கள். நான் நின்று அவர்களைப் பார்த்தேன்.

“சீதா, நீ இன்னும் பலர் பிரச்சனைகளைப் பார்ப்பாய். எப்பொழுதும் தயங்காதே. சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி. செய்ய வேண்டியதை சாமர்த்திய மாகச் செய். ஆதரவற்றுப் போகும் பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதுதான் முக்கியபமானது. .துணிச்சலா இரு.”

பாரதியின் பாட்டால் முளைத்த பயிர் பலரால் வளர்க்கப்பட்டது. பாதுகாக்கப் பட்டது.

அம்புஜம்மாள் அவர்கள் நினைவு இப்பொழுது வருகின்ற ஸ்ரீனிவாசகாந்தி நிலையத்தின் உரிமையாளர். அதுவும் ஆதரவற்ற பெண்களுக்குத் தொழில் கற்றுக் கொடுத்து காப்பாற்றும் நிறுவனம். காந்திஜி அவர்களைத் தனது அப்பா என்பார்கள். ஒரு முறை நான் நேரில் கண்ட காட்சி

ஒரு பெண் அந்த நிலையத்திற்கு வந்து அழுது கொண்டிருந்தாள். முகம் வாடியிருந்த்து. அப்பொழுது அலுவலகத்தில் இருந்த ஓர் ஊழியர் அவளிடம் அவள் பற்றிய விபரங்களைக் கேட்க ஆரம்பித்தார்கள். உடனே அங்கிருந்த அம்மா “அவளே அழுதுண்டிருக்கா, இப்போ என்ன கேள்வி. முதல்லே சாப்பாடு போடு. கவலைப் படாதேன்னு சொல்லு. சாப்பிட்டப்பறம் அவளா சொன்னா சரி. இல்லேன்ன ஒரு நாள் கழிச்சு சொல்லட்டும். முதல்லே அவ பயம், கவலை போகணூம். நீயும் கஷ்டப்படுத்தாதே” என்றார்கள்.
அனாதரவான நிலையில் உடனே என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்தவர்களிடம் வேலை பார்த்ததை இப்பொழுது நினைக்கும் பொழுது கூட மனத்தில் ஓர் நிறைவை உணர்கின்றேன்
இப்பொழுது உயர் நிலையில் இருக்கின்றவர்களை அவ்வளவு எளிதில் நெருங்க முடியுமா ? அரசியல்வாதிகளாயினும் சரி, அரசாங்கத்து மனிதர்க ளாயினும் சரி துயர் துடைக்க உடனே ஆவன செய்துவிடுவார்களா ? கால வெள்ளத்தில் அடிப்பட்டுப் போனவைகளில் கருணை மனமும் ஒன்றா ? இன்று எல்லா இடங்களும் வியாபாரச் சந்தையாகி விட்டதே. கடவுளைக் கூட நம் தவறுகளுக்குக் கூட்டாளியாக்கிக் கொள்கின்றோமே !

“எனக்கு இதை நீ செய்து கொடுத்தால் உனக்கு நான் இதைச் செய்கின்றேன்.”

கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்ற வாதத்தில் நான் இறங்க விரும்ப வில்லை. நம்முடைய எண்ணங்களின் சிதைவையே சுட்டிக் காட்டுகின்றேன்.

காந்தி கிராமத்தில் மாலையில் நடக்கும் சர்வோதயப் பிரார்த்தனை மறக்க இயலாது. பல நாட்களில் சியாமளாவின் பாட்டு இருக்கும். சியாமளா வேறு யாருமில்லை. பத்மா சுப்பிரமணியம் அவர்களின் சகோதரரின் மனைவி. விராலிமலைப் பகுதியில் கிராமியப் பாடல்களை ஆராய்ச்சி செய்தவர்கள். பிரார்த்தனையின் கடைசியில் அம்மா பேசுவார்கள்.
காந்தி கிராமத்திற்கு எத்தனை பெரியவர்கள் வருகை புரிந்தார்கள். நம் நேருஜி அவர்கள் வந்ததை மறக்க முடியுமா ! அருகில் பார்க்க முடிந்ததே!

காந்தி கிராமம் என்றாலே ஓர் அரிய சம்பவம் பேசப்படும். மகாதமா காந்திஜி அவர்கள் மதுரைக்கு ரயில் மூலம் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். கிராமத்து மக்களுக்கு அவரைப் பார்க்க ஆசை. ரயிலை எப்படியாவது நிறுத்தி அந்த மகானைத் தரிசித்தாக வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது. கிராமத்தினர் ரயில் பாதையில் கூடிவிட்டனர். அவர்களைத் தாண்டி ரயில் போக முடியாது. வந்து கொண்டிருந்த ரயில் நிறுத்தப்பட்டது. செய்தி அறிந்த காந்திஜி பாதையில் நின்று தரிசனம் கொடுத்தார். கிராமத்து மக்களின் உற்சாகக் குரல் ஓங்கி ஒலித்தது. அங்குதான் காந்தி கிராமம் அமைந்துள்ளது.
செளந்திரம் ஓர் அழகான பெண். டி.வி. எஸ் குடும்பத்தின் செல்ல மகள். இளவயதில் திருமணம். ஆனால் இல்லறம் நல்லறமாக இல்லை. சிறு வயதிலேயே அந்த அழகுப் பெண் விதவையானாள். அதற்குப் பிறகு படித்து டாக்டர் பட்டம் பெற்றார்கள். காந்திஜியின் ஆசிர்வாதத்தால் ராமச்சந்திரன் அவர்களை மறுமணம் செய்து கொண்டார். அது ஓர் கலப்புத் திருமணம். ராமச்சந்திரன் அவர்கள் நல்ல சிந்தனையாளர். அவர் பேசும் ஆங்கில, மொழி மட்டுமல்ல, வார்த்தைகள் அத்தனையும் அறிவுப் புதையல். அவரை நாங்கள் எல்லோரும் மாமா என்றுதான் அழைப்போம். சில சமயங்களில் மாமா வந்து சொற்பொழிவாற்றுவார்.

காந்திகிராமத்தில் இருந்த மற்றவர்களும் அன்பே உருவானவர்கள். வாசன் ஜி அண்ணா, தேவகி அக்கா, சுந்தரி அக்கா என்று சொல்லிக் கொண்டே போகலாம். பக்கத்தில் இருந்த ஆத்தூர் கிராமத்திற்குக் கூட்டிப் போய் என்ன செய்ய வெண்டுமென்ற பயிற்சியும் கொடுத்தார்கள். ஐந்து மாத காலம்தான் பயிற்சி காலம். ஆனால் கற்றுக் கொண்டவை பல ஆண்டுகள் கற்றத்தைப் போல் அமைந்தது

அங்கே எனக்குப் பல தோழிகள் கிடைத்தாராயினும் முக்கியமானவர்கள் இருவர். ஒருத்தியின் பெயர் கஸ்தூரி. காந்தி கிராமத்தில் குழந்தைப் பருவ முதல் வளர்ந்தவள். அவளுக்குத் திருமணம் அம்மாதான் செய்து வைத்தார்கள். நான் காட்டாறு என்றால் கஸ்தூரி மெல்லிய ஓடை. அவள் எனக்கருகில் வேலை பார்த்ததால் எனக்குக் கடிவாளமாக இருந்து என் வேகத்தைக் கட்டுப் படுத்துவாள்.

இன்னொருத்தியின் பெயர் தெளலத்பீ. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவள். அந்த காலத்திலேயே கிராமத்தில் சைக்கிள் ஓட்டியவள். இதென்ன பெரிய விஷயம் என்று நினைக்கின்றீர்களா? எட்டயபுரத்தில் நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும் பொழுது கிராமத்தின் புலம்பல் என்னை பாதியிலேயே பயிற்சியை நிறுத்த வைத்து விட்டது.

1956 ஆம் ஆண்டு.

ஓர் பெண் படிப்பது கடினம் அதுவும் ஓர் முஸ்லீம் பெண் படித்து முடித்து இது போன்ற வேலைக்கு வரமுடிந்தது அதிசயம் அப்படியிருக்க சைக்கிள் பயின்று அதில் கிராமங்களுக்குச் சென்றாள் என்பது சாமான்யமானதல்ல. மன உறுதி மிக்கவள்.
எத்தனை பேர்கள் ! எத்தனை விதங்கள் !

வரலாற்று வெள்ளத்தில் திடீரென்று எழுந்தது ஒரு பிரச்சனை .திகைத்து மருண்டு போன நிலையில் காப்பாற்ற உதவியவைகளில் முதற் பெருமை காந்தி கிராமத்திற்குரியது.

வரலாற்றுச் சம்பவம் ஒன்றை நோக்கிச் செல்லப் போகின்றோம்.

“நீங்கள் செல்லும் வழியில் பெரிய கல் கிடந்தால் அது தடைக் கல்லாகவோ, படிக்கல்லாகவோ ஆவது உங்களைப் பொறுத்தே உள்ளது.”

ஓஷோ.

(பயணம் தொடரும்)

Series Navigationஅரிநெல் – பிச்சினிக்காடு இளங்கோதாகூரின் கீதப் பாமாலை – 4 என்னை நினைப்பாயா ?