வாழ்வு எனும் விளையாட்டு மைதானம்

Spread the love

மூலம்  : கலீல் ஜிப்ரான்

தமிழாக்கம் : புதுவை ஞானம்

அழகையும் அன்பையும் நாடிய ஒரு மணி நேரப் பயணம்,

வலியோரைக் கண்டு அஞ்சி நடுங்கும்

நூறு ஆண்டு கால

வாழ்வை விட மேன்மையானது.

அந்த ஒரு மணிக் கணத்தில் இருந்து பிறக்கிறது மனிதனின் உண்மை .

ஓய்தலற்ற கைகளுக்கும் நச்சரிக்கும் கனவுகளுக்கும் இடையில்

உறங்குகிறது உண்மை

நூறாண்டு காலம்.

அந்த ஒரு மணி நேரப் பயணத்தில்

இயற்கையின் விதிகளுக்கு கட்டுண்ட  போதிலும்

தன்னைத்தானே தரிசித்துக் கொள்கிறது ஆன்மா_

அந்த நூற்றாண்டுக்கான

மனிதனின் விதிகளில் விலங்கிடப்பட்டு

சிறைப்பட்டு கிடந்த போதிலும்..

சாலமனின் சங்கீதத்துக்கு தூண்டுகோல்

அந்த ஒரு மணி நேரம்,

பால்பெக்கின் கோயிலை அழித்தொழித்த குருட்டு அதிகாரத்தின் காலம்

அந்த நூற்றாண்டு ,

பனைமரக் கோட்டைகளையும் பாபிலோன் கோபுரத்தையும் தகர்த்த மலைப்பிரசங்கத்தின் பிறப்பு

அந்த ஒரு மணி நேரம் முஹமது ஹெஜிராவின் நேரம்

அந்த நூற்றாண்டு

அல்லா கொல்கதா சியானி ஆகியோரை மறந்து போன காலம்.

 

திருடு போன சமத்துவத்தை எண்ணி

துக்கத்துக்கும் புலம்பலுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட

அந்த ஒரு மணி நேரம்

பேராசையும் சுரண்டலும் நிரம்பியிருந்த

நூற்றாண்டை விட பெருந்தன்மையானது.

அந்த ஒரு மணி நேரத்தில் தான்

இதயம் சுத்திகரிக்கப்பட்டது

கொழுந்துவிட்டெரியும் சோகத்தினாலும்

ஒளியூட்டிய அன்பெனும் தீவர்த்தியாலும்.

அந்த நூற்றாண்டில் தான்

பூமியின் அடியாழத்தில் புதைக்கப்பட்டது

உண்மயைத் தேடும் ஆர்வம்.

அந்த ஒரு மணி நேரம்

மலர வேண்டிய சிந்தனைகளின் வேர்

அந்த ஒரு மணி நேரம்

ஆழ்ந்த சிந்தனைகளை

அசைபோடும் நேரம்.

அந்த ஒரு மணி நேரம்

தியானத்துக்கும் வழிபாட்டிற்கும் ஆன

கடவுளின் புதிய சகாப்தத்துக்கும் ஆனது.

அந்த ஒரு நூற்றாண்டு பூமியில் இருந்து

திரட்டப்பட்ட சுயநிதியால் சுயலாபம் பெற்ற

நீரோவின் நூற்றாண்டு.

இது தான் வாழ்க்கை

காலங்களின் மேடையில் அரங்கேற்றப்பட்டது

நூற்றாண்டுகளாக இப்புவியில் பதிவு பெற்றது

பல ஆண்டுகளாக அந்நியமாய் வாழப்பட்டது

பல நாட்களாக கீதமாக இசைக்கப்பட்டது .

ஒரு மணி நேரம் மட்டும்

ஆனால் அந்த ஒரு மணி நேரம் மட்டும்

நித்தியத்தின் அருமணியாய்

போற்றப்படும் என்றென்றும்

—————————————

9.7.2013

Series Navigationஉமா மகேஸ்வரி கவிதைகள்: ‘இறுதிப் பூ’ தொகுப்பு வழியாக…