விசாரணை

Spread the love

சிறகு இரவி
0
வெனிஸில் விருதுகளைக் குவித்த படம், வெகு ஜன ரசனைக்கு வித்திடுமா? வலிக்க வலிக்க காட்சிகள் ரணமாக நெஞ்சில் அறையும் நிதர்சனமாக ஒரு திரை அனுபவம்.
0
c-720x480ஆந்திர குண்டூரில் பிழைப்புக்காக குடியேறும் பாண்டி, முருகன், அப்சர், மூவரும் கோவை மாவட்டத்தின் கிராமத்து இளைஞர்கள். ஆந்திர காவல்துறை அநியாயமாக மேலிடத்தின் உத்திரவின் பேரில், இவர்கள் மீது பொய்யான களவுக் குற்றச்சாட்டைச் சுமத்துகிறது. குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்து வழக்கை முடிக்க தீவிரம் காட்டுகிறது. நீதிமன்றத்தில் பாண்டி உண்மையை உடைத்து விடுவதால் அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். ஊழல் ஆடிட்டர் கே.கே.யை தேடிவரும் காவல் அதிகாரி முத்துவேல், அவர்கள் ஊர் திரும்ப உதவி செய்கிறார். ஆனால், அவர்களைக் கொண்டே கே.கே.யை அவர் கடத்துவதால், தமிழக காவல்துறையின் நெருக்கடியில், கடத்தலுக்கு சாட்சிகளான அவர்களை தீர்த்துக் கட்ட அவருக்கு உத்திரவு. இறுதியில் பாண்டியின் கதி என்ன என்பதை நெருப்பாக சொல்லியிருக்கிறது படம்.
வெற்றிமாறன் விருது பெறக்கூடிய இயக்குனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவலங்களையே தொடர்ந்து அவர் காட்சிப்படுத்தினால், ரசிகன் சிதைந்து போவான். உண்மைக்கு நெருக்கமாக, இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் வெளிக் கொணரும் காட்சிப் படிமங்கள், விருப்பைத் தாண்டி வெறுப்பை விதைக்கின்றன.
மேலிடத்து உத்திரவால் கைகள் கட்டப்படும் காவல் அதிகாரிகளின் செயல், அருவருப்பைத் தருகிறது. மனித உயிர்களுக்கு தரப்படும் மதிப்பு, காவல் துறையைப் பொறுத்த மட்டில் பூஜ்யம் என்பது டூ மச்! / கொஞ்சம் அதிகப்படி.. இனிவரும் படங்களில் இவைகளைக் குறைத்துக் கொண்டால், மாறன் பெயருக்கேற்றாற்போல் வெற்றி பெறுவார்.
பாண்டியாக ‘அட்டக்கத்தி’ தினேஷ் வலிக்க நடித்திருக்கிறார். ஆனால் முத்துவேலாக சமுத்திரக்கனி,, லட்சியத்தை தியாகம் செய்து, மன உளைச்சலுடன், உத்திரவுகளுக்கு கட்டுப்படும் அதிகாரி பாத்திரத்தில் தனி முத்திரை பதித்திருக்கிறார். ‘ ஆடுகளம் ‘ முருகதாஸ், முருகனாக இன்னொரு கட்டத்திற்கு முன்னேறியிருக்கிறார். கிஷோரின் கே.கே. பாத்திரம், செல்வாக்கு நிறைந்த ஆடிட்டர் சீரழிவதை பிரமாதமாகக் காட்டியிருக்கிறது. கண் இமைக்க்கும் நேரத்தில் வந்து போகும் காதலி சாந்தியாக ஆனந்தி, விருது படத்தில் இடம் பெற்றதற்காக பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அவ்வளவே.
மு.சந்திரகுமாரின் உண்மை கதையான ‘லாக்கப்’ திரை வடிவத்தில், ரணகளமாக மாறியிருப்பது அவலம். அதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் இயக்குனர் வெற்றிமாறனும் தயாரிப்பாளர் தனுஷும்.
காவல் துறையை கருப்பு ஆடுகளின் மந்தையாக சித்தரித்திருக்கும் இந்தப் படத்தில் நியாயமான ஒரு வெள்ளாடு கூட இல்லை என்பது ‘ஆடுகளம்’ இயக்குனருக்கு சறுக்கல்.
தன் வலியை தானே ரசிக்கும் சேடிஸ்ட், அதை ரசிகனுக்கு கடத்துவதில் நியாயமேயில்லை.
0
பார்வை : ரணம்
மொழி : சமுத்திரக்கனி இனி குணச்சித்திரத்தில் முதல் இடத்தை பிடிப்பார்
0

Series Navigationபிளந்தாயிற்றுபெங்களூர் நாட்கள்