விஜய் நந்தாவின் ‘ விளையாட வா ‘

சித்தார்த் நடித்து, இந்தியில் ஸ்ட்ரைக்கர் என்றொரு படம் வந்தது. சுமாரான வெற்றி என்று சொன்னார்கள். அதேபோல் இதுவும், தெருவில் காரம்போர்ட் விளையாடுபவர் களைப் பற்றிய படம்.
சீனிவாசபுரத்தில், குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிக்கும், கம்பி மேஸ்திரி பொண்வண்ணன், அவரது நண்பர்கள் லிவிங்ஸ்டன், மயில்சாமி, அவர் மனைவி லட்சுமி. பொன்வண்ணனுக்கு காரம் விளையாடுவதில் ஆர்வம். கூடவே இருக்கும் நண்பர்களுக்கு, அதற்குப்பின், வென்ற பணத்தில் தண்ணியடிப்பதில் விருப்பம். அனாதையான சிறுவனை தத்தெடுக்கும் பொன்னு, அவனை எப்படி தன்னைப்போலவே தென்னிந்திய காரம் சாம்பியனாக மாற்றுகிறார் என்பது கதை. இடையில் முதலாளி மகளுடன் காதல், அதற்கொரு வில்லன், அவனோடு சேரும் கதாநாயகனின் தம்பி, கோப்பை வெல்லும்போது பார்க்க, வளர்ப்பு தந்தை இல்லை என்கிற சோகம். பட முடிவில் கதாநாயகன் இன்னொரு அனாதைச் சிறுவனை தத்தெடுப்பதாக ஒரு முடிவு.
நாயக நடிகர், சின்ன வயது (அழகர்சாமி) அப்புக்குட்டியைப் போலவே இருக்கிறார். எந்தவித மெனக்கெடலும் இல்லாமல் ஆடுகிறார், பாடுகிறார், மிச்ச சொச்ச நேரம் காயன் அடிக்கிறார். நாயகி புதுமுகம். கொஞ்சம் நடிக்க முயற்சி செய்கிறார். தொலைக்காட்சியில் பார்த்த மீரா கிருஷ்ணன், இன்னும் சில பேர் வருவதாலும், காமிரா புதிய கோணங்களை எல்லாம் அனாவசியமாகத் தேடாமல், இரண்டு மூன்று கோணங்களிலேயே வலம் வருவதாலும், ஒரு டிவி சீரியல் பார்ப்பது போலவே இருக்கிறது.
அறிமுக இசையமைப்பாளர் சிரிமுரளியும், பழைய இளையராஜா டியூன்களையே காப்பி எடுத்து, கொஞ்சம் நவீனப்படுத்தி ஒப்பேற்றி விடுகிறார்.
கே எஸ் கோபாலகிருஷ்ணன் படம்போல, இன்னமும் முகத்தில் காபி கொட்டுவது, கன்னத்தில் அறைவது என்று எடுத்துக் கொண்டிருக்கிறார்களே என்று ஒரு கவலை கப்பிய முகத்தோடு வெளியே வந்தேன்.
டிஜிட்டலில் எடுப்பதால் செலவு கம்மிதான். அதற்காக கண்ட குப்பையையுமா எடுப்பது?
0

Series Navigationராஜ்கிருஷ்ணாவின் ‘ ஒரு நடிகையின் வாக்குமூலம் ‘மாதா+ பிதா +குரு < கொலைவெறி