விடுவிப்பு..:-

Spread the love

நீங்கள் அவளை அனுப்பத்
தீர்மானித்து விட்டீர்கள்..
முதல்கட்டமாக அவளது
வேலைகளைப் பிடுங்குகிறீர்கள்.

சமைக்கக் கற்கிறீர்கள்..
துலக்கிப் பார்க்கிறீர்கள்.
பெட்டிபோடுபவனை விடவும்
அழகாய்த் துணி மடிக்கிறீர்கள்.

குழந்தைகளைப் படிக்கவைக்கும்
வித்தை கைவருகிறது.
அவள் செய்வதை விடவும்
அட்டகாசமாய் செய்வதாய்
மமதை வருகிறது உங்களுக்கு.

இதுவரை வாழ்ந்ததற்கான
பணத்தைக் கணக்கிட்ட
தூக்கி வீசுகிறீர்கள்..
அவள் முன்.. அவளைப் போல..

இரவுகளில் உங்கள் கழிவுகளையும்
பகலில் உங்கள் பேச்சுக்களையும்
உள்வாங்கியவள் அவள்.
உங்களிடம் இருக்கும் பணத்துக்கு
அவளை விட இளமையானவர்கள்
கிடைக்கிறார்கள் இரவைக் கழிப்பதற்கு.

உங்களை எதிர்த்துப் பேசினாள் என்றோ
உங்களைப் போல நடக்க முற்பட்டாள் என்றோ
வெறுக்கத் துவங்குகிறீர்கள்.
எந்தச் சொத்துக்களும் அவள் பேரில்
வாங்கவில்லையென பூரிக்கிறீர்கள்.

எல்லாவற்றிலிருந்தும் நீக்கிவிட்டதாக
செய்தித்தாள்களில் பிரகடனப்படுத்துகிறீர்கள்.
உங்களால் நிறைவேற்ற முடியாத
ஸ்தானம் ஒன்று மட்டும் உறுத்துகிறது
அவள் உங்கள் குழந்தைகளின் தாய் என்பது.

Series Navigationஎனது இலக்கிய அனுபவங்கள் – 20 எழுத்தாளர் சந்திப்பு – 7. சுரதாகிளம்பவேண்டிய நேரம்.: