விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூற்றி ரெண்டு


 

1939 ஃபெப்ருவரி 6 வெகுதான்ய தை 24  திங்கள்கிழமை

 

துர்க்கா, மூட்டையக் கட்டு. பிரயாணம் போற வேளை.

 

வேதையன் துர்க்கா பட்டனிடம் சொல்லும்போதே மெய் தளர்ந்து தாங்க முடியாத அசதி. குத்திருமல் வேறே. என்ன ஔஷதம் கழிச்சும், தயிரை விட்டொழித்து எடத்வா கேசவன் மூஸ் வைத்தியர் கொடுத்த ஆயுர்வேதப் பொடியை தேனில் குழைச்சு தினசரி நாலு வேளை விழுங்கியும் ஒழிஞ்சு போகாமல் கூடவே வந்து உசிரெடுக்கிறது. இருமித் துப்பினதில் ரத்தம் இருந்ததாக மனது பேதலிக்கிறது..

 

போய்த்தான் ஆகணுமா?

 

பரிபூரணம் வேதையன் கால் மூட்டில் தைலம் புரட்டியபடி கேட்டாள். அவள் குரல் மெதுவாக ஒலித்தது விசேஷம் தான். வீடு முழுக்கப் பரந்து பரவி அதிகாரம் செய்ய அந்தக் குரலும் இல்லாவிட்டால் இந்த வீட்டுக்கே வாசஸ்தலம் என்ற மரியாதை போய் விடும். துர்க்கா பட்டன் நிசப்தமான கட்டடங்களுக்குள் எல்லாம் இருக்க மாட்டான். மங்களூர் தேவாலயமா என்ன, சத்தம் போட்டால் பாதிரி கோபிக்க? சத்தம் தானே மனுஷர்களை ஸ்தாபிக்கிறது.

 

வரேன்னு வாக்குத் தத்தம் செய்தாச்சு. ஒடுவிலத்து யாத்ரை. தி லாஸ்ட் ஜேர்ணி.

 

வேதையன் சிரித்தான்.பட்டன் அவனை முறைத்துப் பார்த்தபடி விறைப்பாக நின்றான்.

 

அண்ணா, அச்சானியமா இன்னொரு வார்த்தை சொன்னா இந்த உறவே வேண்டாம்னு இறங்கிப் போயிடுவேன். எழுபத்தொண்ணு வயசுலே அந்திம யாத்திரையைப் பத்தி என்ன யோசனை? பாதிரியாருக்கு நூறு வயசு ஜன்ம ஆகோஷம் கொண்டாட நேத்துத்தான் பணம் பிரிக்க வந்தது. உங்க நூறுக்கு பணம் பிரிக்காட்டாலும்.

 

வாயு பிரிக்கலாம்னு சொல்றியா?

 

வேதையன் உரக்கக் கேட்டு மறுபடி சிரிக்க, இந்தத் தடவை பரிபூரணம் அடக்கினாள்.

 

விவஸ்தையே இல்லாம ஏதாச்சும் பேசியே ஆகணுமா? வாசல் திண்ணையில் விருந்து வந்தவங்க இருக்கற ஓர்மை இல்லையா என்ன? துருக்கா, அவங்களுக்கு ஆகாரம் ஏதும் கழிக்க விளம்பியாச்சா?

 

பரிபூரணம் துர்க்கா பட்டனிடம் விசாரித்தபடி கொடியில் மடித் துணியை மாற்றி உலரப் போட்டாள்

 

பிராதல் கழிச்சுத்தான் இறங்கினதா சொன்னதாலே பச்ச வெள்ளம் தான். பானகம் கலந்து எடுத்துப் போகட்டா மன்னி?

 

என்னை என்ன கேள்வி? உன் வீடு. பானகமும் சம்பாரமும் உன் ராஜ்யம்.

 

பரிபூரணம் உலர்ந்த துணியை எல்லாம் துர்க்கா பட்டன் தோளில் போட்டாள். ஒட்டகம் போல அவன் நகர்ந்து உள்ளே போய் அதை எல்லாம் உதிர்த்து மடித்துக் கொண்டிருந்தான்.

 

வாசலில் நாற்காலி போட்டு நடேசனும் அம்பலப்புழை ஓட்டல்கார ஏகாம்பர அய்யரும் காத்துக் கொண்டிருந்தார்கள். வேதையனோடு புறப்படத் தயாராக செருப்பைக் கூடக் காலில் இருந்து கழற்றாமல் இருந்தார் அய்யர். அவர் வாசல் அலமாரியில் எடுத்த பெரிய எழுத்து பைபிளை திறக்கிற இடத்தில் வாசித்தார்.

 

கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கெம்பீரமாக அறுக்கிறார்கள்.

 

கிறிஸ்துநாதர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. புரியாவிட்டால் என்ன? தேவ வார்த்தை. அதையும் நாலு தடவை உருப்போட்டால் நல்லதே நடக்கும். கிறிஸ்தியானி கடவுள் என்றால் என்ன? அப்படி எல்லாம் கூட இருக்கா என்ன?

 

அம்பலப்புழையை விட்டு கண்ணூர் வந்து உடனே அம்பலப்புழை திரும்ப வேண்டியதை நினைத்தாலே அய்யருக்கு அசதி. வேலை இருக்கே. கெம்பீரமாக அறுக்க கிளம்பியாச்சு இனி கண்ணீர் எதுக்கு? தூக்கம் வந்தால் பரவாயில்லை.

 

காஜேஜ் புரபசர் வேதையன் உள்ளே இருந்து வரும் வரைக்கும் சித்தே இளைப்பாறலாம். கண்ணை மூடிக் கொண்டார். அவரும் நடேசனும் அரிவாளும் கையுமாக அம்பலப்புழை அம்பல நடையில் நிற்கிற காட்சி மனதில் வந்தது. என்னத்துக்கு அங்கே நிற்கணும்? நடேசனைக் கேட்க நினைத்து நினைவு தடுமாறியது.

 

பக்கத்தில் மாத்ருபூமியில் ஜோசியப் பக்கத்தில் தன் லக்னத்துக்கு இன்றைய பலன் பார்த்த நடேசன் திருப்தியாகச் சிரித்தார் –  வாகன யோகம், வெட்டி அலைச்சல். கிருஷ்ணா இவ்வளவு தானா இன்னும் இருக்கா?

 

பேப்பர்லே தேதியைப் பாருடா நடேசா.

 

பகவான் சிரிக்கிறார். திரும்பப் புரட்டி அவசரமாக நடேசன் பார்க்க, அது போன கொல்லத்து பேப்பர். பரணில் இருந்து யாரோ காரியமாக இறக்கி வைத்தது.

 

அவருடைய வாகன யோகமும் அலைச்சலும் ஒரு வாரம் முன்பு உச்சத்தில் இருந்தது. மதராஸில் இருந்து வெறுங்கையோடு திரும்பியிருந்த நேரம்.

 

வெறுங்கையோடு வரவில்லைதான். இங்கிலீஷில் நாலைந்து தடி தடியான புஸ்தகங்களை  நீலன் வக்கீலுக்காக சுமந்து கொண்டு வந்ததில் கை நிறைந்து தான் இருந்தது. மூர் மார்க்கெட்டில் கோஷி வக்கீல் வாங்கி அனுப்பியது எல்லாம்.

 

ஆவியோடு பேசறதாம். அசட்டுத்தனம்.

 

மூர்மார்க்கெட்டில் இருந்து திரும்பும்போது கோஷி வக்கீல் தீர்மானமாகச் சொன்னதுக்கு அடுத்த நிமிஷம் அவருடைய பர்ஸை யாரோ களவாடி விட்டார்கள்.

 

அதெல்லாம் மதராஸியிலே சர்வ சாதாரணம், நடேசன்.

 

நீலன் வக்கீல் புத்தகத்தைப் புரட்டும்போது ஓட்டல்கார ஏகாம்பர அய்யர் வந்ததும், வக்கீல் அவருக்கு ஆலோசனை சொல்லி கண்ணூர் போகச் சொன்னதும் அடுத்து நடந்தேறியது. தன் பங்கு தான் இதிலெல்லாம் என்ன என்று நடேசனுக்குத் தெரியவில்லை.

 

நீரும் கொஞ்சம் இவர் கூட போய் வந்துடும். நாளை மறுநாள் கோர்ட் ஆரம்பிச்சுடுத்துன்னா வேலை நமக்கு மும்முரமாயிடும்.

 

கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக நீலன் வக்கீல் நடேசனையும் ஓட்டல்காரரோடு கண்ணூருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

 

ஓட்டல் காரர் இந்தப் பிரயாணத்துக்கு ஒத்துக் கொண்டதே ஆச்சரியம் தான். ஒரு நாள் தான் ஊரில் இல்லாவிட்டால் ஓட்டலை இழுத்து மூட வேண்டியிருக்கும் என்று அவருக்கு மனசில் திடமான நம்பிக்கை. அதையும் கடந்து அந்நிய மனுஷர்களை சந்திக்கிறதில் அவருக்கு இருக்கப்பட்ட சங்கடம். தேடிப் போகிறவர்கள் தான் இருப்பார்களா?

 

நாற்பது வருஷம் முந்தி என் பூஜ்ய பிதாவிடம் நீங்க ஒப்படைச்ச காரியத்தை நிறைவேற்ற முடியாமல் போச்சு. நீங்க ஒப்பிச்ச பத்திரத்தை வேறே காணலை.

 

இதை நூறு முறை சொல்லிச் சொல்லி அப்பியாசம் செய்து கொண்டபோது கேட்க வேண்டியவர் இருப்பாரா, கேட்டதும் அவர் கோபப் படுவாரா, ஒன்றும் பேசாமல் எழுந்து போய்விடுவாரா, இல்லை வம்பு வழக்கு என்று போக முஸ்தீபு செய்வாரா என்பது அய்யருக்குப் புலப்படவில்லை. பயமாக வேறே இருந்தது.

 

ஆனால் இங்கே வந்த பிறகு அதெல்லாம் போய் அவருக்கு திரும்ப மன சமாதானம் உண்டானதற்கு புரபசர் வேதையனின் பிரியமான உபசரிப்பு தான் முக்கியக் காரணம்.

 

போன தலைமுறைக்கார புரபசர் பூர்ண சௌக்கியமாக கொஞ்சம் இருமிக் கொண்டு இருக்கிறார். அவர் கொடுத்த டோக்குமெண்ட் காகிதம் மட்டும் இருக்க எழுத்தெல்லாம் உதிர்ந்து விட்டது என்று நடேசன் சொன்னபோது ஹாஸ்யத்தைக் கேட்டது போல் சிரித்தார் புரபசர்.

 

துர்க்கா இதை கொஞ்சம் கேளு.

 

உள்ளே இருந்து வந்த இன்னொரு வயோதிகன் பிராமணன் மாதிரி இருந்தான். கிறிஸ்தியானி வீட்டில் சமையல் காரியத்துக்கு வைத்திருக்கார்களோ என்னமோ என்று நடேசன் யோசித்தார்.

 

கேட்டு விட்டு அந்த கன்னடக்கார பட்டன் சொன்னது நடேசன் சதா சர்வ காலமும் உச்சரிக்கிறதுதான்.

 

கிருஷ்ணார்ப்பணம், அண்ணா. அதுவும் இதுவும் எதுவுமெல்லாம் கிருஷ்ணார்ப்பணம்.

 

நிலத்தை விற்க ஏற்பாடு ஏதும் செஞ்சிருக்கீங்களா?

 

வேதையன் ஓட்டல்காரரைக் கேட்டான். தமிழ்ப் பிராமணர்களில் இந்த வயதுக் காரர்களுக்கு கட்டாயம் கல்யாண வயதில் ஒரு பெண் இருப்பாள். அரசூர் சாமா தான் விதிவிலக்கு. அவனுக்கு பிள்ளைகள் தான் ரெண்டும். ஆகவே கல்யாணச் செலவு பற்றி யோசிக்க வேண்டியதில்லை. ஓட்டல்காரர் தானமாக வந்ததோ, சுயார்ஜிதமாக வந்ததோ நாலு காணி நிலத்தை விற்று மகளைக் கரையேற்ற உத்தேசித்திருக்கலாம். அதுக்காக வேதையன் ஒத்தாசை செய்ய முடியும் என்று இருந்தால் சந்தோஷமே.

 

அதெல்லாம் ஒரு பிக்கல் பிடுங்கலும் இல்லே சார். அந்த இடத்திலே எங்க அப்பா வாக்கு தத்தம் செய்த படிக்கு திரும்ப பயிர் செய்யணும். கோவிலுக்கும் குரிசுப் பள்ளிக்கும் சொல்லப்பட்ட விகிதத்தில் வர்ற தொகையைப் பிரிச்சுக் கொடுக்கணும். எங்க அப்பா ஒரு தப்பு செய்துட்டார்.

 

வேதையன் அவரை ஆச்சரியமாகப் பார்த்தான்.

 

நீங்க நாற்பது வருஷம் முந்தி ஒரிஜினல் டோக்குமெண்டும் கூடவே அதை எப்படி அனுபோக பாத்தியதை கொண்டாடறதுன்னு விவரமான கடுதாசியும் கொடுத்திருந்தது ஓர்மை இருக்கலாம். அப்பா அதை ரிஜிஸ்தர் செய்யாமல் பீரோவிலேயே வச்சுப் பூட்டி.

 

அவர் கைப்பையைத் திறந்து ஒரு பழுப்பு கவரை வேதையன் கையில் கொடுத்தார். வேதையன் அதை பிரித்தபோது நாலைந்து பகுதியாக உதிர்ந்து வெளியே வந்தது அவன் நாற்பது வருடம் முன்னால் எழுதியது.

 

அட, எழுத்து எத்தனை நேர்த்தியா அச்சு எடுத்த மாதிரி இருக்கு?

 

தனக்குத்தானே ஒரு பாராட்டு செலுத்திக் கொண்டு அந்த பழைய கடிதத்தை படிக்க ஆரம்பித்து முடித்த போது வேதையன் ஒரு முடிவுக்கு வந்தாகி விட்டது.

 

இந்தக் கடுதாசி எங்கிட்டேயே இருக்கட்டும்.

 

ஓட்டல்காரரும் நடேசனும் நம்ப முடியாமல் பார்த்தார்கள். கிணறு வெட்ட பூதம் தான் கிளம்பி விட்டதா?

 

ஒரு குழப்பமும் இல்லே. இதையும் சேர்த்து புதுசா ஒண்ணு எழுதி நோட்டரி பப்ளிக் வக்கீலன்மார் மூலமா நோட்டரைஸ் பண்ணிக் கொடுத்திடறேன்.

 

வேதையன் சொன்னது ஓட்டல்காரருக்கு சுத்தமாகப் புரியவில்லை. நடேசனுக்கு அரைகுறையாகப் புரிந்தது.

 

எல்லாம் சரி, அந்த ஒரிஜினல் பத்திரம்? அது இல்லாமல் மற்ற ஆயிரம் காகிதம் இருந்தாலும் என்ன மதிப்பு அதுக்கெல்லாம்?

 

ஓட்டல்காரர் தயங்கித் தயங்கிக் கேட்க, வேதையன் உள்ளே போனான்.

 

அவன் வெளியே வந்தபோது கையில் அந்த டாக்குமெண்ட் இருந்தது.

 

எனக்கே ஆச்சரியமா இருக்கு. பட்டிணம், பாண்டி பிரதேசம், வடக்கே காசி இப்படி யாத்திரை செய்துட்டு என்கிட்டே வந்திருக்கு பத்திரமா.

 

அவன் சுருக்கமாகச் சொல்ல, நடேசன் பத்திரத்தை அவசரமாகப் படித்து விட்டு இதேதான் இதேதான் என்றார்.

 

அசடுடா நீ என்றான் கிருஷ்ணன்.

 

ஆவியோட பேசறவங்களை விடவா?

 

அதை விடவும் கூடுதல் பிராந்தன்.

 

இருந்துட்டுப் போறேன் போடா கிருஷ்ணா.

 

நடேசன் வேட்டியை உதறிக் கட்டிக் கொண்டு எழுந்தார்.

 

கிளம்பலாமா?

 

உள்ளே இருந்து சலவை முண்டும் சால்வையுமாக புரபசரும், கூடவே மூட்டை முடிச்சுகளோடு துர்க்கா பட்டனும் வெளியே வந்தார்கள். துர்க்கா பட்டன் தோளில் ஒரு குடை தன் பாட்டில் பின்னால் முளைத்த கருப்புக் கையாக, சாதுவாகத் தொங்கிக் கொண்டிருந்தது.

 

யாருமே எதுவுமே பேசாமல் அந்தப் பயணம் அம்பலப்புழையில் முடிந்தது.

 

மூட்டை முடிச்செல்லாம் ஓட்டலில் இறக்கி வைத்து ஒரு சிரம பரிகாரம். கொஞ்சம் காப்பி. வேதையனுக்காக எடை கட்டாத பால் கேட்டு வாங்கி துர்க்கா பட்டன் ஆற்றி ஆற்றி இளம் சூட்டில் கொடுத்தான்.

 

இன்னும் எத்தனை வருஷம் இந்த கன்னட பட்டன் இந்த ஊழியம் செய்வான் கிருஷ்ணா?

 

நடேசன் கேட்டார்.

 

அதெல்லாம் உனக்கு எதுக்கு? வேறே எதாவது இருந்தா கேளு,

 

கிருஷ்ணா இப்போ என்ன செய்யணும்?

 

நடேசன் கேட்டார். உரக்கவே கேட்டார். யாரும் தப்பாக நினைக்க மாட்டார்கள். பதில் சொல்லக் கூடியவனிடம் எதுக்காக ரகசியமாகக் கேட்கணும்?

 

முதல்லே போய் அந்த இடத்தைப் பார்த்துட்டு வரலாமே.

 

இது எங்கே இருக்கு கிருஷ்ணா?

 

அவசரக் குடுக்கை. போய்ப் பார்த்துட்டு வாடா.

 

நடேசன் டாக்குமெண்டை இன்னொரு தடவை படித்து இடம் எங்கே என்று ஒருவாறு தீர்மானம் செய்து கொண்டார்

 

புரபசர் கிருஷ்ணன் முன்னால் நடந்தார். தோளில் குடை ஆட கிருஷ்ண பட்டன் பின்னால் நடந்தான். ஹோட்டல்காரக் கிருஷ்ணனும், கிருஷ்ணன் வக்கீலுடைய குமஸ்தன் கிருஷ்ணனும் அவர்களுக்கு வழி காட்டுகிற மாதிரி கூடவே போனார்கள்.

 

புரபசர் கிருஷ்ணனின் ஆறாவது விரல் துடித்தது. மனசு படபடக்கும்போதும், ஆச்சரியமும் அதிசயமுமாக ஏதாவது நடக்கப் போகிறது என்று தோன்றும்போதும் அது அப்படித்தான் அவன் பிறந்து விழுந்ததில் இருந்து அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கிறது.

 

இந்த இடம் தான்.

 

கிருஷ்ணன் சொன்னார்.

 

கிருஷ்ணன் நின்றார்.

 

ஆள் ஒழிந்த பூமி அது.

 

இது மசானமாச்சே.

 

கிருஷ்ணன் ஆச்சரியத்தோடு சொன்னான். கிருஷ்ணன் ஏமாற்றத்தோடு கூவினான். கிருஷ்ணன் நம்ப முடியாத திகைப்போடு திரும்பத் திரும்பச் சொன்னான். கிருஷ்ணன் அடக்க முடியாமல் சிரித்தான்.

 

புதைக்கவும், எரிக்கவுமாக அந்த இடம் எத்தனை காலமாகவோ மாறி இருக்கிறது. சமாதிகளும், கிறிஸ்தியானி சவக் குடீரங்களும், ஓரமாக வேலி போட்டு இஸ்லாமிய கபர்ஸ்தானுமாக ஒரு பூமி.

 

கிருஷ்ணா என்னடா இது?

 

வக்கீல் குமஸ்தன் கிருஷ்ணன் திரும்ப உரக்கக் கேட்டார்.

 

நீ எப்பவும் சொல்வியே அதேதான்.

 

கிருஷ்ணன் சத்தம் இல்லாமல் உச்சரித்தது என்ன என்று கிருஷ்ணனுக்கு அர்த்தமானது.

 

புரபசர் கிருஷ்ணன் மண் தரையில் மண்டி போட்டு ஒரு நிமிடம் பிரார்த்தித்தார்.

 

எது நடக்கணுமோ அதுவே நடந்தது.

 

அவர் முன்னால் போக மற்றவர்கள் தொடர்ந்தார்கள்.

 

அம்பலத்தில் செண்டை மேளச் சத்தம். சாயங்கால பூஜைக்கு சங்கீதமில்லாத சங்கீதத்தால் அழைக்கிற மாரார் குரல். நடேசன் அம்பலக் குளப் படிகளில் மெல்ல இறங்கினார்.

 

வெள்ளம்.

 

மூடிய கண்ணுக்குள் பச்சை வாடையோடு வெள்ளம் மெல்ல அலையடித்து விளிம்பு உயர்கிறது. குளம் விரிந்து விரிந்து நீளமும் அகலமும் ஆழமும் கூடிக் கொண்டே வர நடேசன் அதில் ஒரு துரும்பாக அடித்துப் போகப்படுகிறார். போகிறது எங்கே என்று தெரியவில்லை. இயக்கம் மட்டும் சீராக நடந்தபடி இருக்க, பழைய நிலைக் கதவு போல் நினைவு இறுக்கமாக அடைத்துத் தாழ்போட்டுக் கொள்கிறது.  இருட்டு ஒரு பொதியாகச் சரிந்து விழிப் படலில் கருமையை அழுத்தமாக அப்புகிறது. வெள்ளத்தின் பச்சை வாடை நாசியில் அப்பி இருக்க, இந்த இருட்டுக் கருமையைப்  பாளம் பாளமாகக் கடித்துச் சுவைத்து உள்ளே இறக்கும்போது அப்பு மாராரின் சோபான சங்கீதச் சத்தம் கைக்கு அருகே பிடி கூடாமல் மிதந்து வருகிறது.

 

வந்தே முகுந்த ஹரே ஜெய ஷவ்ரே

 

எய்ய் நடேசன். தியானமா  இல்லே உறக்கமா?

 

மேல்சாந்தி உரக்க விசாரிக்கிற சத்தம். நடேசன் கண் திறந்தபோது நடுக் குளத்தில் அவர் மட்டும்  இருந்தார்.

 

(முற்றும்)

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 56