வீடு

விடுமுறை நாளொன்றில்
வீடு சுத்தம் செய்யுகையில்
விடுபட்ட இடங்களில்
விரல்கள் துலாவியதில்

தொலைந்துபோன
பொம்மைக்காரின் ரிமோட்
தீர்ந்துபோன
பேட்டரிகள்

மூடிகள்
மூடிகளற்றப் பேனாக்கள்

பொத்தான்கள்
பொத்தான் குறைந்த சொக்காய்கள்

ஓரிரண்டு
உலர்ந்த
உணவுத் துணுக்குகள்

என
எல்லாவற்றையும்
அகற்றியும்
கைப்பற்றியும்
தொடர்ந்து

அத்தனைப் பொருட்களையும்
அதனதன் இடத்தில்
அடுக்கியும் நிறுத்தியும்
அழகுற வைத்த்தும்

ஏனோ
ஷாப்பிங் மாலின்
நடைபாதை கடைகளின்
கட்டுக்குள் இருப்பதுபோலொரு
உணர்வு
வியாபிக்க

பிள்ளைகள்
பள்ளிக்கூடம்விட்டு
வரும்வரைக்
காத்திருக்கலானேன்
மீண்டும்
கலைத்துப் போட்டு
வீடாக மாற்ற!

Series Navigationஅலைகளாய் உடையும் கனவுகள்அதில்.