வெங்கட் சாமிநாதன் – உயர்ந்த மனிதர்

Spread the love

venkat-saminathan

இந்த ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் நாளன்று சஹகார் நகரில் நண்பர் மகாலிங்கம் ஒற்றை அறையைக் கொண்ட ஒரு புதிய வீட்டைக் கட்டி அதற்கு புதுமனை புகுவிழா நடத்தினார். அது ஒரு வேலை நாள். விடுப்பெடுக்கமுடியாதபடி வேலைகளின் அழுத்தம் இருந்தது. நானும் என் மனைவி அமுதாவும் காலையிலேயே சென்றிருந்தோம். முகம்மது அலி, சம்பந்தம், அழகர்சாமி என பல நண்பர்கள் வந்திருந்தார்கள். வெங்கட் சாமிநாதன் வருவதாகச் சொல்லியிருந்தார். இன்னும் வந்து சேரவில்லை. பார்த்துவிட்டுச் செல்லலாம் என்பதற்காக நான் காத்திருந்தேன்.

ஒரு சின்ன அலுவலகம் இயங்குவதற்குப் போதுமான அளவுக்கு மகாலிங்கம் அந்த வீட்டை வடிவமைத்திருந்தார். எஞ்சிய நிலப்பகுதியில் பலவகையான கீரைப்பாத்திகள். பூச்செடிகள். தக்காளி, மிளகாய், வெண்டைச்செடிகள் வைக்கப்பட்டிருந்தன. மதிலோரம் சின்ன முருங்கை மரம் வைத்திருந்தார். தோட்டத்தில் நண்பர்களை நிற்கவைத்து விதவிதமாக படங்களை எடுத்தபடி பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தேன். காலை நேரத்து இளவெயில் படம்பிடிக்க வசதியாக இருந்தது. நேரம் வேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. அவர் வரவில்லை. அங்கிருந்து ஒன்றரை மணி நேர பயண தூரத்தில் எங்கள் அலுவலகம் இருந்தது. பன்னிரண்டு மணிக்குள் வந்துவிடுவேன் என்று அலுவலகத்தில் சொல்லிவைத்திருந்ததால், அதற்கும் மேல் காத்திருக்க முடியாமல் என் மனைவியை மட்டும் அவர் வீட்டிலேயே விட்டுவிட்டு நான் கிளம்பிவிட்டேன். மாலைவரைக்கும் விழாவில் அவள் பங்கெடுத்துவிட்டு, அதற்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பினாள்.

நான் வீட்டுக்குத் திரும்ப ஒன்பது மணிக்கும் மேல் ஆகிவிட்டது. சாப்பிடும்போது ”சாமிநாதன் சார் உங்கள ரொம்ப விசாரிச்சாரு. ஏன் கெளம்பிப் போனாரு ஏன் கெளம்பிப் போனாருன்னு கேட்டுட்டே இருந்தாரு. ஒரு நாள் அவரயும் அழச்சிகிட்டு வீட்டுக்கு வாம்மான்னு சொன்னாரு” என்றாள் என் மனைவி. ”கண்டிப்பா ஒரு வாரம் போய்வரணும்” என்று நானும் சொல்லிக்கொண்டேன். சொன்னேனே தவிர, அந்த ஒரு வாரம் இதோ இதோ என்று தள்ளித்தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

20.10.2015 அன்று தொலைபேசியில் பேசிய மகாலிங்கம் காய்ச்சலும் மூச்சுத்திணறலும் இருப்பதால் சாமிநாதனை மருத்துவ மனையில் ஆழ்கவனச்சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருப்பதாகவும் அடுத்த நாள் மாலையில் பார்வையாளர் நேரத்தில் பார்க்கச் செல்லலாம் என்றும் தெரிவித்தார். நண்பர் சம்பந்தத்துக்கு தகவலைச் சொன்னபோது அவரும் வருவதாகச் சொன்னார். இருவரும் சேர்ந்து செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தோம். துரதிருஷ்டவசமாக 21.10.2015 அன்று அதிகாலையிலேயே உறக்கத்தில் சாமிநாதனின் உயிர் பிரிந்துவிட்டது. அந்த மரணச்செய்தியை மகாலிங்கம் தெரிவித்தபோது எனக்குள் பெருகிய குற்ற உணர்வுக்கு அளவே இல்லை. “நீயெல்லாம் ஒரு மனுஷனே இல்லைடா” என்று என்னை நானே திட்டிக்கொண்டேன். சிறிது நேரம் பித்துப் பிடித்ததுபோல இருந்தது. அவரைச் சந்திக்க நினைத்த வாரம் இனி பிறப்பதற்கான வழியே இல்லாமல் போய்விட்டதே என்னும் ஆற்றாமை பொங்கிப்பொங்கி வழிந்தது.

வாழ்க்கையில் பல தருணங்களில் எளிய சின்னச்சின்ன திட்டங்கள்கூட நிகழாதபடி பல வேலைகள் முன்னுரிமை பெற்றுவிடுகின்றன. அலுவலக வேலைகள்போல, பல சமயங்களில் குடும்பம்சார்ந்தும் உறவுசார்ந்தும் எழும் வேலைகள்கூட கடமையாக மாறிவிடுகின்றன. அலுவலகக் கடமையையும் உறவுக்கடமையையும் இணையாக நீண்டிருக்கும் தண்டவாளங்களாகவும் அவற்றின்மீது நேரம் பிசகாமல் ஓடிக்கொண்டிருக்கும் ரயில்பயணமாக வாழ்க்கையும் மாறிப் போய்விட்டதாக பல சமயங்களில் தோன்றும். எவ்வளவு கசப்பான உண்மை இது. இந்த ரயில் பயணத்தின் விளைவாக ஏராளமானவை இழப்புக்குள்ளாகிவிட்டன. பயணங்கள். நாடகங்கள். திரைப்படங்கள். இலக்கிய நிகழ்ச்சிகள். கண்காட்சிகள். சந்திப்புகள். இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம். சமீபத்திய இழப்பு வெங்கட் சாமிநாதன்.

வெங்கட் சாமிநாதனைப் பார்ப்பதற்காக சேர்ந்துபோவதாக வைத்திருந்த திட்டம், கடைசியாக சாமிநாதனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளச் செல்வதாக மாறிவிட்டது. ஒன்பதரை மணிக்கு நானும் சம்பந்தமும் அவருடைய வீட்டுக்குப் புறப்பட்டோம். எங்கள் வீட்டிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில்தான் அவருடைய வீடு இருந்தது. இவ்வளவு அருகில் இருந்தும் சந்திப்பதை தள்ளித்தள்ளிப் போட்ட பிழையை நினைத்து உள்ளூர நிலைகுலைந்திருந்தேன். முன்னும்பின்னுமாக அவரைப்பற்றிய பல நினைவுகள் மனத்தில் அலைமோதின.

நான் எழுத வந்த எண்பதுகளில் அவர் மிகப்பெரிய கலைவிமர்சகராக அறியப்பட்ட ஆளுமை. இலக்கியம், ஓவியம், சிற்பம், நாட்டார்கலைகள், நாடகம் என கலைத்துறைகள்மீது அவருக்கிருந்த ஞானம் ஆழமானது. பாரதியாரோடு மட்டுமே ஒப்பிடத்தக்க ஆளுமை என அவரை ஒரு கட்டுரையில் சுந்தர ராமசாமி மதிப்பிட்டதுண்டு. கறாரான மதிப்பீடுகளால் ஆனவை அவருடைய விமர்சனங்கள். பாலையும் வாழையும், அன்றைய வறட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை ஆகிய இரு நூல்களைமட்டுமே நான் அப்போது படித்திருந்தேன். எப்போதாவது தில்லிக்குச் சென்றால் அவரைச் சந்தித்துப் பேசவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

1990 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதெமி இளம்படைப்பாளிக்கென ஒரு சிறுகதைப்பட்டறையை ஏற்பாடு செய்திருந்தது. அசோகமித்திரனின் தலைமையின் கீழ் சென்ற குழுவில் திலீப்குமார், கார்த்திகா ராஜ்குமார், லதா ராமகிருஷ்ணன் ஆகியோருடன் நானும் இருந்தேன். திலீப்குமாரைச் சந்திப்பதற்காக அவர் அங்கே வந்திருந்தார். திலீப்குமார்தான் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். கண்களைச் சுருக்கி அரைக்கணம் என்னைப் பார்த்தார். மெதுவாக “உங்க கதைகளை தீபம், கணையாழியில படிச்சிருக்கேன்” என்று சொன்னார். தொடர்ந்து “ரொம்ப சின்ன பையனாட்டம் இருக்கிங்க. நல்லா எழுதறிங்க. தொடர்ந்து எழுதுங்க” என்றார். நான் மிகவும் மெதுவாக “எங்க தலைமுறையைப் பத்தியெல்லாம் நீங்க எழுதவே இல்லையே சார்” என்று சொன்னேன். அவர் மீண்டும் என்னை உற்றுப் பார்த்தார். சட்டென நான் எதிர்பாராத கணத்தில் வெடிப்பதுபோல சிரித்தார். “எதுவும் எழுதலைன்னா, எல்லாம் நல்லா போயிட்டுருக்குதுன்னுதான அர்த்தம்” என்றார்.

அந்த நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடைபெற்றன. மூன்று நாட்களும் மாலை வேளைகளில் பேசிக்கொண்டிருப்பதற்காக அவர் எங்கள் இடம்தேடி வந்தார். பூங்காவிலும் அறையிலும் உட்கார்ந்து நேரம் போவது தெரியாமல் பேசினார். ஏதோ ஓர் இந்தி நாடகமொன்றைப்பற்றி அவர் மிகவும் பாராட்டுணர்வோடு பேசினார். அதைத் தொடர்ந்து நான் சமீபத்தில் பார்த்திருந்த கன்னட நாடகங்களைப்பற்றி பகிர்ந்துகொண்டேன்.

”தமிழ் நாடகங்கள் பார்த்ததில்லையா?” என்று கேட்டார். “பார்த்ததில்லை சார். அதற்கான வாய்ப்பே கிடைத்ததில்லை” என்று ஏமாற்ற உணர்வோடு சொன்னேன். “உங்களுக்கே எவ்விதமான நஷ்டமே இல்லைன்னு வச்சிக்குங்க. கன்னட நாடகங்களையே பாருங்க. அது போதும்” என்றார் அவர். தொடர்ந்து “எங்கனா ஒங்க ஊரு பக்கம் தெருக்கூத்து நடந்தா போயி பாருங்க. தமிழ் நாடகங்களைவிட அது நல்லா இருக்கும்” என்று சொன்னார்.

அந்த முதல் சந்திப்பின் இனிமையும் இயல்பான தன்மையும் கடைசி வரைக்கும் மாறாத ஒன்றாக இருந்தது. நண்பர்களிடம் அதைச் சொல்லும்போது அவர்கள் அதை நம்ப மறுத்ததுண்டு. “இல்லயே, ஏதாச்சிம் அதிர்ச்சியா ஒன்ன சொல்லி உங்கள வெட்டி பேசாம இருக்க மாட்டாரே” என்று சொல்வார்கள். ஆனால் அப்படியெல்லாம் ஒருநாளும் எங்களிடையே நேர்ந்ததே இல்லை.

தில்லியிலிருந்து தெற்குப்பக்கம் வரும்போதெல்லாம் பெங்களூருக்கு வராமல் போகமாட்டார். இங்கே இருக்கும் நாட்களில் எல்லாம் மாலை நேரத்தில் நானும் மகாலிங்கமும் முகம்மது அலியும் ராமச்சந்திரனும் அவரைச் சந்தித்து பேசுவோம். ஒருமுறை மல்லேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் சிமென்ட் பெஞ்ச்சில் உட்கார்ந்து பேசினோம். மறைந்த மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்னாத் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புச்சொற்பொழிவாளராக அவரை அழைத்திருந்தோம். பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடகங்கள் குறித்து ஏறத்தாழ ஒருமணி நேரத்துக்கும் அதிகமாக அன்று அவர் பேசினார். நிகழ்ச்சிக்குப் பிறகு ஏரிக்கரையைப் பார்த்தபடி அன்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இன்னொரு முறை உட்லண்ட்ஸ் விடுதி. அப்புறம் ஒருமுறை சிவானந்தா விடுதி. பிறகொரு முறை ராமச்சந்திரன் வீட்டில். அவரும் சென்னைக்குக் குடிபெயர்ந்து வர, அவருடைய மகனுக்கு பெங்களூரில் வேலைகிடைத்து வசிக்கத் தொடங்க, அதற்குப் பிறகு அவருடைய மகனுடைய வீடே சந்திக்கும் இடமானது. எத்தனை முறை சந்தித்தாலும் எவ்வளவு பேசினாலும் சந்திக்கவும் பேசவும் விஷயங்களுக்குக் குறைவே இருந்ததில்லை.

ஒரு கறாரான அளவுகோலை அடிப்படையாகக் கொண்டுதான் அவருடைய ஒவ்வொரு மதிப்பீட்டுப்பயணமும் தொடங்கும். ஒரு படைப்பின் எல்லா அம்சங்களையும் அவர் கணக்கில் எடுத்துக்கொள்வார். பிறகு அவை ஒவ்வொன்றும் தன்னுடைய அளவுகோலுக்கு எவ்வளவு நெருக்கமாக அல்லது அந்த அளவுகோலிலிருந்து விலகி இருக்கிறது என்பதை தர்க்க அடிப்படையில் அடுக்கிக்கொண்டே செல்வார். இறுதி மதிப்பீட்டை எழுதும் கட்டம் நெருங்க நெருங்க, அதை வாசிக்கும் வாசகனும் அந்த மதிப்பீட்டை தன் மனத்துக்குள் தொட்டுவிடுவான். விமர்சனமே என்றாலும் அவருடைய படைப்புகளைப் படிப்பது என்பது மிகப்பெரிய கலையனுபவம் என்றே சொல்லவேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவர் தன்னுடைய அளவுகோலை ஒருபோதும் மாற்றிக்கொண்டதில்லை என்பதுதான் வெங்கட் சாமிநாதனின் பலம். தமிழ்ப்பண்பாட்டின் மனசாட்சியாக அவர் குரல் காலமெல்லாம் ஒற்றைக்குரலாக ஒலித்தபடி இருந்தது. தனிமரம் தோப்பாகாது என்பது சொலவடையாக இருக்கலாம். ஆனால் தமிழ்ச்சூழலில் சாமிநாதன் போன்ற தனிமரங்கள்தான் பண்பாட்டின் அடையாளமாக காற்று, மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் வெட்டவெளியில் நின்றுகொண்டிருக்கின்றன.

ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக இடைவிடாமல் தமி்ழ்க்கலைத்துறையில் தீவிரமான வகையில் செயலாற்றிவரும் வெங்கட் சாமிநாதனின் அரிய பங்களிப்பைப் பதிவு செய்யும் வகையில் ஒரு பெரிய தொகைநூலை திலீப்குமார் உருவாக்கி வெளியிட்டார். அத்தொகுப்பில் நானும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். நாஞ்சில் நாடன், செங்கதிர், ஜெயமோகன் ஆகியோரைத் தொடர்ந்து அன்று அவர் தன்னைத்தானே மதிப்பிட்டுக்கொள்ளும் வகையில் ஆற்றிய சொற்பொழிவு மறக்கமுடியாத அனுபவம். மறைந்த தன்னுடைய துணைவியாரை நினைவுகூர்வதிலிருந்து தொடங்கி, தன்னுடைய வாழ்க்கைப்பயணத்தையும் இலக்கியப்பயணத்தையும் இணைத்து நினைவில் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையிலான ஒரு சொற்பொழிவை அவர் நிகழ்த்தினார்.

கிட்டத்தட்ட இத்தருணத்தில்தான் திண்ணை இதழில் அவர் தன் சுயசரிதையை எழுதத் தொடங்கினார். அவருடைய நினைவாற்றல் வியப்பளிப்பதாக இருந்தது. எழுபது எழுபத்தைந்து ஆண்டுகள் பின்னால் சென்று நினைவின் ஆழத்திலிருந்து அகழ்ந்தெடுத்து வந்து அவர் சித்தரித்த காட்சிகள் மனத்தைக் கவர்வதாக இருந்தன. கல்விக்கூடங்களின் காட்சிகள். குடும்பக்காட்சிகள். நிலக்காட்சிகள். அரசியல்காட்சிகள். ஒவ்வொன்றையும் அதற்கே உரிய வண்ணமுடன் சின்னச்சின்ன சொல்லோவியங்களாக அவர் தீட்டிவந்தார். அவர் புனைவெழுத்தாளர் அல்ல. ஆனால் புனைவெழுத்தாளனுக்கு வேண்டிய ஆழ்ந்த கவனிப்புத்திறன் அவர் எழுத்தில் பதிந்திருப்பதைப் பார்த்தேன். ஒரு சந்திப்பில் அதை அவரிடம் குறிப்பிட்ட போது “அப்படியா, அப்படியா?” என அவர் மகிழ்ச்சியோடு கேட்டு, அந்தப் பாராட்டுகளை ஏற்றுக்கொண்ட விதம் எனக்கும் சந்தோஷமாக இருந்தது. அந்தத் தொடரில் என் நினைவில் பதிந்துபோயிருந்த பல விஷயங்களை என்னமோ நேற்றுத்தான் படித்ததுபோல ஒவ்வொன்றாக அவரிடம் எடுத்துச் சொன்னபடி இருந்தேன். அவரும் அதை மனநிறைவோடு கேட்டுக்கொண்டார். எழுதாமல் விடுபட்டுப்போன ஒரு சில விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்.

சம்பந்தம்தான் வண்டியை ஓட்டினார். நான் அவருக்குப் பின்னால் உட்கார்ந்திருந்தேன். வாய் எதையோ பேசிக்கொண்டிருந்தாலும் மனத்துக்குள் ஏராளமான நினைவலைகள் ஒன்றுகொன்று தொடர்பற்ற வகையில் அலைமோதியபடி இருந்தன. பேச்சின் போக்கில் கவனமின்றி, சாமிநாதனின் வீட்டுக்குச் செல்லும் வழியைத் தவறவிட்டு, பத்துப்பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவு விமானநிலையச் சாலையிலேயே சென்றுவிட்டோம். ஏதோ ஒரு தருணத்தில் எங்கள் பிசகு நினைவுக்கு வந்தது. ஆயினும் சட்டென திரும்ப முடியாதபடி இருந்தது அந்தச் சாலையமைப்பு. நீண்ட தொலைவு சென்று மறுபடியும் திரும்பி கிளைப்பாதை வழியாகவே வந்து அவருடைய வீட்டை அடைந்தோம். நாங்கள் சென்ற தருணத்தில் மருத்துவமனையிலிருந்து அவருடைய உடல் எடுத்து வரப்பட்டது. மகாலிங்கமும் அவருடைய சகோதரரும் குடும்பத்துடன் வந்திருந்தார்கள்.

சாமிநாதன் தன் விழிகளை தானமாக அளித்திருந்தார். அவருடைய மகனும் மருமகளும் அதற்கு இசைவு தெரிவித்திருந்தார்கள். விழிகளை சிகிச்சைமூலம் எடுத்துச் செல்வதற்காக மருத்துவர் குழுவொன்று அவர் வீட்டுக்கு வந்திருந்தது. அக்குழு சென்ற பிறகு நாங்கள் சாமிநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினோம். கண்கள் மூடியிருக்க அவர் முகம் இறுகியிருந்தது. தில்லியில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக என்னை அவர் பார்த்தபோது தெரிந்த அதே முக அமைப்பு. அதைத் தொடர்ந்து இதோ உதடு பிரித்து சிரிக்கப் போகிறார் என நினைத்தது மனம். அது நடக்கவில்லை. ஒருவித சோர்வும் குற்ற உணர்வும் என் நெஞ்சைப் பாரமாக்கின.

வெங்கட் சாமிநாதனை தமிழ்ச்சமூகம் எப்படி தன் நினைவில் தக்கவைத்துக்கொள்ளப்போகிறது என்று நினைத்துக்கொண்டேன். தமிழில் விமர்சனமே இல்லை என்ற குரலுடன் எழுந்த ஆளுமை வெங்கட் சாமிநாதன். தர்க்கங்களுடன் அந்தக் கருத்தை அவர் நிலைநாட்ட நிலைநாட்ட அக்கருத்தை எதிர்கொள்ள இயலாதவர்கள் அவரை வசைபாடினார்கள். தன் குறையை மறைத்துக்கொள்ள அவரையே ஒரு பெரிய வசைபாடி என்றும் குற்றம் சுமத்தினார்கள். எந்தப் பழியுரைக்கும் அஞ்சாமல் அவர் தன் பயணத்தை இடைவிடாமல் தொடர்ந்தார். காலம் நகர நகர, அவர் கண்டடைந்து சுட்டிக்காட்டிய உண்மையை உண்மைதான் என வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டது இலக்கிய உலகம். பற்பல தத்துவங்கள் சார்ந்ததாகவும் சாராததாகவும் விரிவான துறையாக விமர்சனம் இன்று ஒரு பெரிய துறையாகவே காலூன்றிவிட்டது. தரிசைக் கொத்திக்கொத்தி விளைநிலமாக்கி, தன் வேர்வையைச் சிந்தி முதல் பயிரை வளர்த்து அறுவடை செய்யும் விவசாயியைப்போல, இந்த விமர்சனப்பார்வையை உருவாக்கி இம்மண்ணில் நிலைபெறச் செய்தவர் வெங்கட் சாமிநாதன். அவர் நினைவுகள் எப்போதும் நம்முடன் வாழும். அவருக்கு அஞ்சலிகள்.

Series Navigationநானும் ரவுடிதான்இரும்புக் கவசம்