வெறும் தோற்ற மயக்கங்களோ?

அதற்கப்புறம்
ஆறேழு மாதங்களாகியும்
அம்மாவுக்கு
அப்பாவின் மறைவு குறித்து
தீர்மானமாக ஏதும்
புரிந்துவிடவில்லை

அன்றாட வாழ்க்கையில்
அதிகப்படியான உரையாடல்களை
அம்மா அப்பாவிடம்
சொல்லிக் கொண்டுதானிருந்தாள்

அப்பா வாழ்ந்த வீட்டின்
அத்தனை இடங்களிலும்
நின்றதுவும் நடந்ததுவும்
மொத்த நேரமும்
கூடவே இருந்ததுவும்
சில்லறைக் காரியங்களைச்
செய்து தந்ததுவும்

மாடியில்
தண்ணீர்தொட்டி நிரம்பி
அருவியாய் கொட்டும்போதெல்லாம்
மோட்டாரை நிறுத்தச்சொல்வதும்

காய்கறிக் கடையில்
மறக்காமல் புதினா மல்லியோடு
கறிவேப்பிலைக் கொத்தும்
கிள்ளிப்போட்டு வாங்கிவரச்சொல்வதும்

அடமான நகைக்கு
வங்கியில்
கெடு முடிவடையப்போவதை நினைவுறுத்துவதும்

மாமா வீட்டில்
மண்ணெண்ணெய் வாங்க
இரவல் கொடுத்த
குடும்ப அட்டையை
மறவாமல்
அன்றாவது திரும்ப வாங்கச் சொல்வதும்

என
அப்பாவை
ஏதாவது சொல்லிக்கொண்டிருக்கும்
அம்மாவுக்கு
வீடு முழுவதும் அப்பா இருப்பதாக
தோன்றல்கள்
எனினும்

வீடே உறங்கும்
விடிகாலையில்
ஃபிளாஸ்க்கில் முக்கால்வாசிச் சூடு
நீர்த்துப் போன
காஃபி ஊற்றி
பிஸ்கோத்து நனைத்து
தனியாக
உண்ணும்போது மட்டும்
அம்மாவுக்கு
விழிகளில் நீர் கோர்த்துக்கொள்ளும்.

-Sabeer

Series Navigationசோவின் ‘ என்று தணியும் இந்த சுதந்திர தாகம் _ மேடை நாடகம் (நகலச்சு)பஞ்சதந்திரம் தொடர் 36 – இரந்துண்ணும் நிலை எப்படி?