வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 15

This entry is part 9 of 11 in the series 4 ஜூன் 2017

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)

15.

கிஷன் தாஸ், பிரகாஷ் ஆகியோரின் அறைகளில் உள்ள சுவர்க் கடிகாரங்கள் சில நொடிகளின் இடைவெளியோடு நள்ளிரவு தாண்டிய 1:30 மணி என்பதைக் குறிக்க ஒரு முறை அடிக்கின்றன. திடுக்கிட்டுத் தூக்கம் கலைந்த நிலையில் கிஷன் தாஸ் எழுந்து உட்காருகிறார். அவர் கண்கள் மூடி இருக்கின்றன. அவர் தம்மிரு கைகளாலும் முகத்தைப் பொத்திக்கொள்ளுகிறார். சில கணங்கள் போல் மவுனமாக அப்படி உட்கார்ந்திருந்ததன் பிறகு எதனாலோ அஞ்சி நடுங்குபவர் போல் அவர் இரைந்து கூச்சலிடுகிறார்.   ‘இல்லை! இல்லை! என்னை அடிக்காதீர்கள். இது போல் இனிமேல் செய்ய மாட்டேன்.  தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்.  தயவு செய்து விட்டுவிடுங்கள்! இனிமேல் இது போல் நான் செய்யவே மாட்டேன்…சத்தியமாக! சத்தியமாக!’ … எதிர் அறையில் படுத்து உறங்கிக்கொண்டிருக்கும் பிரகாஷ் அவரது கூச்சலால் உறக்கம் கலைந்து கண் விழிக்கிறான். கட்டிலிலிருந்து இறங்கி அவரது அறைக்கு விரைகிறான்.

கிஷன் தாசின் கட்டிலில் அவரருகே அமர்ந்து, அவரது கழுத்தைத் தன் கையால் சுற்றி வளைத்து, “அப்பா! அப்பா! கண்விழித்துப் பாருங்கள். கண் விழித்துப் பாருங்கள், அப்பா! உங்களை யாரும் அடிக்கவில்லை. யாரால் உங்களை அடிக்க முடியும்?….” என்று ஆதரவாய்ப் பேசுகிறான்.

கிஷன் தாசிடம் எந்த மாற்றமும் இல்லை. அவர் கண்கள் மூடியபடியே இருக்கின்றன. தம் முகத்தில் இருந்த கைகளை அவர் அகற்றிக்கொள்ளவும் இல்லை. கத்துவதையும் நிறுத்தவில்லை. அதே சொற்களைத் திரும்பத் திரும்பச் சொன்னவாறு இருக்கிறார். அவரது நெற்றியில் வேர்வை துளிக்கிறது. வழக்கம் போல், பிரகாஷ் கட்டிலிலிருந்து இறங்கி அருகில் இருக்கும் முக்காலியில் உள்ள ஜாடியிலிருந்து ஒரு கோப்பையில் தண்ணீரை எடுத்து அவரது முகத்திலும் கழுத்திலும் தெளிக்கிறான். அதன் பின் மீண்டும் அவன் கிஷன் தாசின் அருகே அவர் கழுத்தைத் தன் கையால் வளைத்தவாறு உட்காருகிறான்.

“அப்பா! அமைதியாய் இருங்கள்! யாரும் உங்களை அடிக்கவில்லை! கண் விழித்துப் பாருங்கள்”

சில கணங்களுக்கு இது போல் பிரகாஷ் தேறுதலாய்ப் பேசிய பிறகு அவர் தம் முகத்திலிருந்து கைகளை அகற்றிக்கொண்டு நடுத் தூக்கத்தில் எழுப்பப்பட்டவர் போல் திருதிருவென்று விழிக்கிறார்.

கூச்சத்துடன் தலை தாழ்த்தி, “சாரி, பிரகாஷ்! நான் அவ்வப்போது இப்படி அலறி உன்னைப் பயமுறுத்திக்கொண்டிருக்கிறேன். உன் தூக்கத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறேன்!” என்று மன்னிப்புக் கோரும் குரலில் கூறுகிறார்.

“என் தூக்கம் கிடக்கிறது, அப்பா! அதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை. நீங்கள் என்னைப் பயமுறுத்துவதும் இல்லை. நான் உங்கள் நிலை பற்றிக் கவலை மட்டுமே படுகிறேன், அப்பா.  மிகச் சிறிய வயதில் பெற்றோரை இழந்து சித்தப்பா வீட்டில் வளர்ந்த உங்கள் குழந்தைப் பருவம் மகிழ்ச்சியாக இல்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் அது பற்றிய முழு விவரங்களையும் நீங்கள் சொன்னதில்லை.  உங்கள் சிறு வயதில் ஏதோ மிக மோசமானது நிகழ்ந்திருந்திருக்க வேண்டும். மறக்க முடியாத அளவுக்கு யாரேனும் உங்களை அடித்ததுண்டா? உங்கள் குழந்தைப் பருவம் பற்றிய முழுக் கதையையும் நீங்கள் எனக்குச் சொல்லக் கூடாதா?”

கழுத்தையும் முகத்தையும் கைத்துணியால் ஒற்றித் துடைத்துக்கொண்ட பின், கசப்பாய்ப் புன்னகை செய்து, “உன் கணக்குப்படி நான் ஒரு பொய்யன்! எனது மகிழ்ச்சியற்ற குழந்தைப் பருவம் பற்றி நான் ஏதேனும் கட்டுக்கதையை உனக்குச் சொல்லக்கூடும்தானே! நான் சொல்லுவது உண்மையா பொய்யா என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று வினவுகிறார்.

“அப்பா! உண்மையில் நான் மிகவும் வருந்துகிறேன். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். நான் சொன்னது எதையும் மனத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள். உங்களை இப்படி இடைவிடாது அலைக்கழித்து வரும் விஷயம்தான் என்ன என்பதை மட்டுமாவது சொல்லுங்கள். உங்கள் சித்தப்பாவும் அவர் மனைவியும் உங்களை அடித்துத் துன்புறுத்தினார்களா? எதற்காக?”

ஒரு பெருமூச்சுடன் சில நொடிகளுக்கு மவுனமாக இருந்ததன் பிறகு, “நான் சொல்லப்போவது உன் இரக்கத்தைச் சம்பாதிப்பதற்காகக்   கூறும் கற்பனைக் கதை இல்லை என்றும் முழுக்க முழுக்க உண்மையானதே என்றும் முதலில் சத்தியம் செய்கிறேன். …”

“அப்பா! தயவு செய்து நான் பேசியதை யெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் ஏதேதோ சொன்னீர்கள். நானும் பதிலுக்கு ஏதேதோ சொன்னேன். அத்துடன் விட்டுவிடுவோம்… சொல்லுங்கள், அப்பா!  உங்கள் குழந்தைப் பருவம் பற்றிய சோகக் கதையை முழுவதுமாய்ச் சொல்லுங்கள்…” என்று கழிவிரக்கத்துடன் வேண்டுகிறான்.

சில கணங்களுக்குப் பேசாதிருந்த பிறகு, கிஷன் தாஸ் வாய்திறக்கிறார்: “எனக்கு ஒரு வயசு முடிவதற்கும் முன்னாலேயே என் அப்பா காலமாகிவிட்டதை நான் ஏற்கெனவே உனக்குச் சொல்லியிருக்கிறேன்.  ஏதோ மோசமான காய்ச்சலால் அவர் இறந்து போனதாகத் தெரிந்துகொண்டேன். வறுமையால் போதுமான மருத்துவ சிகிச்சை இன்றி அவர் இறந்தாராம். எனக்கு இரன்டு வயசு ஆன போது நான் அம்மாவையும் இழந்தேன். ஆக? எனக்கு அம்மாவும் தெரியாது, அப்பாவும் தெரியாது. தாய்-தந்தையரின் அன்பைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது!….”

கண் கலங்கும் கிஷன் தாசைப் பிரகாஷ் இரக்கம் தோன்றப் பார்க்கிறான்.

ஒரு நீள் மூச்சுக்குப் பின் கிஷன் தாஸ் தொடர்கிறார்: “என் அப்பாவுக்கு ஒரு தம்பி இருந்தார்.  எங்கள் கிராமத்து மக்களாலும், பிற உறவினர்களாலும் குற்றம் காணப்படுவதைத் தவிர்ப்பதற்காக அவர் என்னைத் தாம் வசித்து வந்த ஹைதராபாத்துக்கு உடனழைத்துச் சென்றார். நான் அவரைக் குறைசொல்ல மாட்டேன். அவரும் ஏழைமையில் உழன்றுகொண்டிருந்தவர். அவர் ஒரு கூலிக்காரரரக வேலை செய்துகொண்டிருந்தார்.  ஒரு நாளுக்கு ஐந்து அல்லது பத்து ரூபாய்தான் அவரது வருவாய்.  அதுவும் கூட நாள்தோறும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.  சராசரியாக, வாரத்தில் ஐந்து நாள்களுக்குத்தான் அவருக்கு வேலை கிடைக்கும். அவரது குடும்பம் மனைவி, இரண்டு குழந்தைகள் ஆகியோர் அடங்கியது.  என் சித்தி ஆஸ்த்மா நோயாளி. அவளால் வெளி வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க முடியவில்லை. எனவே நான் வரவேற்கப்படாத விருந்தாளி யானேன். அவள் என்னைக் கொடுமையாக நடத்தலானாள். காரணமே இல்லாமல் என்னை வைவாள். எனினும், சாப்பாடு போடும் போது, என் சித்தப்பாவும் வீட்டில் இருக்கும் வழக்க மாதலால், அப்போதெல்லாம் எனக்குரிய உணவுப் பங்கு கிடைத்துவிடும்.  சில நாள்களில் அவர் இருக்க மாட்டார். அப்போதெல்லாம் எனக்கு உரிய பங்கு கிடைக்காது. தன் குழந்தைகளுக்குப் போடுவதில் பாதிதான் என் சித்தி எனக்குப் போடுவாள்…”

“சே! இதயம் இல்லாத பெண்பிள்ளை!”

கசப்பான புன்சிரிப்புடன், “அவளைக் குற்றம்சொல்ல முடியாது, பிரகாஷ்! அவள் தன் பிள்ளைகளுக்கு மட்டும் வயிறார உணவு படைத்தாள் என்று சொல்ல முடியாது. அவள் என்னை முழுப்பட்டினி போட்டிருந்தால், அவளை நான் கொடுமைக்காரி என்று சொல்லுவேன்.  ஆனால், அப்படி இல்லையே! தன் மைத்துனரின் குழந்தையை விடவும் அவளுக்கு அவள் பெற்ற குழந்தைகள் அதிக முக்கியமானவை யல்லவா!”

“அப்படியானால், மிகவும் குறைவான உணவு தரப்படும் நாள்களில் நீங்கள் என்ன செய்தீர்கள்?”

“என்னை விட அதிகம் சாப்பிடும் என் ஒன்றுவிட்ட சகோதரர்களைப் பார்த்தபடி சும்மா இருப்பேன். வேறென்ன செய்திருக்க முடியும்? எனவே குழந்தைப் பருவத்தில் நான் மிகவும் நோஞ்சானாகவும் அடிக்கடி இருமலுக்கும் சளிக்கும் ஆளானபடியும் இருப்பேன். மருந்தோ மாயமோ எதுவும் கிடையாது. ஆனாலும் ஒரு விஷயத்தில் நான் என் சித்தப்பாவுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்! அது அவர் என்னையும் தம் குழந்தைகளுடன் கல்வி பயிலப் பள்ளிக்கு அனுப்பினார் என்பதுதான்.  ஆனால் என்னை வேறொரு பள்ளியில் சேர்த்திருந்தார்!”

“ஏனாம்?”

“அது என் சித்தியின் கட்டளை. பள்ளியில் சாப்பிடுவதற்குத் தன் குழந்தைகளுக்கு அவள் சாப்பாடு கட்டிக் கொடுப்பாள்.  ஆனால் எனக்கு எதுவும் கிடையாது. ஒரே பள்ளி என்றால் மற்றவர்களுக்கு விஷயம் தெரிந்து போகுமே! அதற்காகத்தான்.”

“அப்படியானால் பிற்பகல் சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள்?”

“குழாயிலிருந்து தண்ணீரை ஏந்திக் குடிப்பேன்!” என்று பழைய நினவுகளால் கிளறப்படும் கிஷன் தாஸ் கண்ணீருடன் பதில் அளிக்கிறார்.

தானும் கண் கலங்கும் பிரகாஷ், “இந்த அளவுக்கா நீங்கள் துன்பப்பட்டிருக்கிறீர்கள்? பெற்றோரை இழந்து சித்தப்பாவின் பராமரிப்பில் வறுமையில் சரியான சாப்பாடு இல்லாமல் வாழ்ந்திருப்பது பற்றிச் சொல்லி யிருக்கிறீர்கள்தான்.  ஆனால் இந்த அளவு மோசம் என்பதை நீங்கள் சொன்னதில்லையே! எனவே, மாலை வீட்டுக்குப் போன பிறகுதான் உங்களுக்கு ஏதேனும் சாப்பாடு கிடைக்கும்! இல்லையா?”

கண்களில் இன்னும் ஈரம் கசிந்தபடியே இருக்க, “சாப்பாடா! சரிதான், போ! மாலையில் வீட்டுக்குப் போனதும் நீர்த்த தேநீர் ஒரு தம்ப்ளர் கிடைக்கும். இரவில் சிறிது அரிசிச் சோறு கிடைக்கும்…. ஒரு முறை தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு எனக்கு எதுவும் சாப்பிடக் கிடைக்கவில்லை. குழாய்த் தண்ணீரைக் குடித்துக் குடித்தே வயிற்றை நிரப்பிக்கொண்டிருந்தேன். இரண்டாம் நாள் மாலையில் வயிற்றைக் கிள்ளிய பசியைத் தாங்க முடியாமல், என் பள்ளிக்கு அருகில் இருந்த பெட்டிக்கடை ஒன்றில் இரண்டு வாழைப்பழங்களைத் திருடிவிட்டேன். ஆனால் கடைக்காரனின் பார்வையில் என் செய்கை பட்டுவிட்டதால் மாட்டிக்கொண்டேன். அவன் தன் கைத்தடியால் என்னை விளாசித் தள்ளிவிட்டான்…” என்று கிஷன் தாஸ் விவரிக்கிறார்.

“ஓ! அதுதான் உங்கள் பிரச்சினையா! அந்தக் கொடும் நிகழ்ச்சி பற்றிய நினைவு உங்களின் அடி மனத்தின் ஆழத்தில் அப்படியே பதிந்து போயிருக்கிறது. நீங்கள் தூங்கும் போது அது பயங்கரமாய்க் கிளர்ந்து எழுந்துவிடுகிறது. ஹிப்நாடிஸம் தெரிந்த ஒரு மனத்தத்துவ வல்லுநர் இதை முற்றும் சரிசெய்துவிடுவார், அப்பா!”

கையை உயர்த்தி அவன் பேச்சைத் தடுத்த பின், கிஷன் தாஸ், “என் விஷயத்தை முதலில் முடிக்கிறேன்…. கடைக்காரனிடம் நான் வாங்கிய அடிகள் ஜென்மத்துக்கும் மறக்க முடியாத அடிகள்! இரக்கமில்லாத அவனால் இரத்தக்கசிவுக்கு ஆட்பட்ட காயங்களுடன் அரை மயக்க நிலையில் நான்  தெரு ஓரத்தில் தூக்கிப் போடப்பட்டேன். யாரோ என் சித்தப்பாவுக்குத் தகவல் தெரிவித்தார்கள். அவர் உடனே ஓடி வந்து என்னைத் தோளில் தூக்கிக்கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். அங்கே எனக்குச் சிகிச்சை அளித்தார்கள்.  இப்போதும் கூட, என் உச்சந்தலையில் தையல் போட்டதன் தழும்பைப் பார்க்கலாம். இரண்டு நாள்களுக்குப் பிறகு என்னை வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள்…”

“உங்களை அவ்வளவு கொடூரமாய்த் தாக்கியதற்கு உங்கள் சித்தப்பா அந்தக் கடைக்காரனோடு சண்டை போடவில்லையா?”

“இல்லை. ஏனெனில், அவன் ஒரு ரவுடி. மாஜி சிறைக் கைதியும்கூட. எனவே ஒரு வார்த்தை கூட அவர் அவனிடம் பேசவில்லை.”

“அப்போது உங்களுக்கு எத்தனை வயசிருக்கும், அப்பா? தெரியுமா?”

“நான் அப்போது இரண்டாம் வகுப்பில் இருந்தேன். அப்படியானால். எனக்கு ஆறு அல்லது ஏழு வயசு இருக்கலாம். … என் காயங்கள் முழுவதும் ஆறுவதற்குப் பதினைந்து நாள்கள் ஆயின.  … பரீட்சை முடிவுகள் விரைவில் வந்தன. நான் தேறி மூன்றாம் வகுப்புக்குப் போனேன். அவ்வகுப்பில் இருந்த ராமதாஸ் எனும் மாணவன் என் மிக நெருங்கிய நண்பன் ஆனான். ராமதாஸ் மட்டும் என் வாழ்க்கையில் வந்திராவிட்டால், நான் இந்த உயர்நிலைக்கு வந்திருக்கவே மாட்டேன்!”

“ஆமாம். நீங்கள் அடிக்கடி அவரைப் பற்றிச் சொல்லி யிருக்கிறீர்கள். உங்கள் மாணவப் பருவத்தில் அவர் உங்களுக்கு நிறைய  உதவிகள் செய்திருப்பதாக. அவர் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவரா?”

“இல்லை. நடுத்தரக் குடும்பம்தான். தனியாரின் தொழிற்சாலை ஒன்றில் அவனுடைய அப்பா கணக்கராக நல்ல சம்பளத்தில் வேலை செய்துகொண்டிருந்தார்.  … ஆங்… என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்? ம்… ராமதாசும் நானும் நெருங்கிய நண்பர்களானோம்.  தினமும் அவன் தான் கொண்டுவரும் உணவில் பாதியை எனக்குக் கொடுத்துவிடுவான். சில நாள்கள் கழித்து அவன் எனக்கும் சேர்த்துத் தனியாக உணவு எடுத்துவரத் தொடங்கினான்….”

“உண்மையில் மிகப் பெரிய மனசுதான் அவருக்கு!”

“ஆமாம்… ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று அவன் என்னைத் தன் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனான். ராமதாசின் அப்பா, பீமண்ணா, மிக நல்ல, அன்பான மனிதர். என்னைப் பற்றி அறிந்துகொண்டதும், அவர் தாமே என் படிப்பைக் கவனித்துக்கொள்ளுவதாய்ச் சொன்னார். தினமும் பள்ளி விட்டதும் ராமதாசோடு நானும் அவர் வீட்டுக்கு வந்து சிற்றுண்டி, காப்பி அருந்தலாம் என்றும் கூறினார். என் மகிழ்ச்சிக்கு ஓர் அளவே இல்லை. … பிரகாஷ்! உனக்கு எப்போதாவது பசி எடுத்ததுண்டா?”

“இதென்ன கேள்வி, அப்பா! பசிக்காமலா தினமும் மூன்று வேளைகளும் சாப்பிடுகிறேன்? சாப்பாடுகளுக்கு இடையே காப்பி, பழச்சாறு, நொறுக்குத் தீனி போன்றவற்றை யெல்லாம் பசிப்பதால் தானே அருந்துகிறேன்?”

சிரிக்கும் கிஷன் தாஸ், “அதற்குப் பெயர் பசியா! இல்லை, பிரகாஷ்! நம்மைப் போன்ற பணக்காரர்கள் அட்டவணைப்படியும் தங்கள் சுவைக்கு ஏற்றவாறும் கடிகாரம் பார்த்து அடிக்கடி சாப்பிடுகிறவர்கள். அதைப் பசி என்றே சொல்ல முடியாது, பிரகாஷ்! காலை 6:30-க்குக் காப்பி,  8:30-க்குக் காப்பி அல்லது தேநீருடன் காலை உணவு, 11:30-க்குப் பழச்சாறு, 12:30-க்கு மதிய உணவு, 3:30-க்குக் காப்பி அல்லது தேநீருடன் மாலைச் சிற்றுண்டி, பின்னர் 7:30-க்கு இரவு உணவு, 9:30-க்குப் பால் அல்லது கோக்கோ போன்ற வேறு ஏதாவது! இடையிடையே நாக்கின் சுவைக்காக நொறுக்குத் தீனிகள் வேறு! பிரகாஷ்! உண்மையான பசியால் கிண்டப்படுபவர்கள் புல்லையும் தின்னத் தயாராக இருப்பார்கள் எனும் உண்மை உனக்குத் தெரியுமா?” என்று தம் விளக்கத்தின் இறுதியில் வினவுகிறார்.

“பசிக்கொடுமையை அனுபவித்தவர் என்கிற முறையில் நீங்கள் சொல்லுவது சரியாகத்தான் இருக்கும்!… அது சரி, உங்களுக்கு நன்மை புரிந்து வந்த அவர்கள் எல்லாரும் இப்போது எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? அவர்களோடு நீங்கள் இப்போதும் தொடர்பில் இருக்கிறீர்களா?”

“அதைத்தான் இப்போது சொல்ல வருகிறேன்… நான் ஐந்தாம் வகுப்பில் இருந்த போது, என் சித்தப்பா, சித்தி, அவர்களின் இரண்டு பிள்ளைகள் எல்லாரும் ஒருவர் பின் மற்றொருவராய்க் காலமானார்கள். அவர்கள் மரித்தது பசிக்கொடுமையால்தான்…”

“ராமதாஸ் உங்களுக்காகத் தினமும் பள்ளிக்கு மதிய உணவு எடுத்து வந்து கொடுத்துக்கொண்டிருந்ததும், அவர்கள் வீட்டில் நீங்கள் மாலைச் சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருந்ததும் அவர்களுக்குத் தெரியுமா?”

“ஓ. தெரியும். நான் அவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன். மாலையில் வயிறார ராமதாசின் வீட்டில் நான் சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருந்ததால் சித்தி அளித்த இரவு உணவை மறுத்துவந்தேன். ‘ஓ! அதுதான் சதை போட்டிருக்கிறாய்! நீ வெவ்வேறு கடைகளில் பிடிபடாமல் சாமர்த்தியமாய் வாழைப்பழம் திருடித் தின்றுகொண்டிருக்கிறாய் என்றல்லவா எண்ணினேன்?’ என்று என் சித்தி நக்கலடித்தாள். …”

“கொழுப்புதான் உங்கள் சித்திக்கு!… ‘நீங்கள் எனக்குப் போதுமான சாப்பாடு கொடுத்திருந்தால் நான் ஏன் திருடப் போகிறேன்?’ என்று நீங்கள் சுடச்சுடக் கேட்டிருந்திருக்க வேண்டும்!”

“அவ்வளவு வெளிப்படையாக நான் எப்படிப் பேசுவது? மனசுக்குள் அப்படித்தான் சொல்லிக்கொண்டேன்!”

“சித்தப்பாவும் சித்தியும் காலமானதன் பிறகு அந்த ராமதாசின் அப்பா பீமண்ணா உங்களைப் பார்த்துக்கொண்டாரா?”

“ஆமாம். அந்தக் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே அவர் என்னை ஏற்றுக்கொண்டார். பீமண்ணாவின் மனைவியும் அவரைப் போலவே நல்ல மனம் கொண்ட பெண்மணி. அந்தத் தம்பதிக்கு நானும் ஒரு தத்துப் பிள்ளையானேன் என்றே சொல்லிவிடலாம். பள்ளி இறுதி வகுப்பு வரையில் பீமண்ணா என்னைப் படிக்க வைத்தார்.  ராமதாசை அவர் கல்லூரியில் சேர்த்தார்.  ஆனால் என்னையும் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைப்பதற்கு அவருக்குப் பொருளாதார வசதி இல்லை. எனினும், அது பற்றி என்னிடம் வருந்திய அவர் எனக்கு ஒரு நல்ல வேலை தேடித்தருவதாய் வாக்களித்தார். ஆனால் நானோ என் படிப்பைத் தொடரப் பெரிதும் அவாவினேன். எப்போதுமே நான் எந்த வகுப்பிலும் முதல் மாணவனாகவே இருந்து வந்தேன். பள்ளி இறுதி வகுப்பிலும் நான் மிக உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். எனினும் அவரது கஷ்டம் எனக்குப் புரிந்ததால் படிப்பை நிறுத்திவிட்டு ஒரு வேலையில் அமர நான் ஒப்புக்கொண்டேன். ஆனால், என் அதிருஷ்டத்தின் விளைவாகவோ என்னவோ, கிறிஸ்துவ மதத்தைப் பரப்பும் நோக்கத்தில் ஒரு போதகர் ஹைதராபாதுக்கு அப்போது வந்தார். அவரது கூட்டம் ஒன்றுக்கு வெறும் பொழுது போக்காய் நான் போயிருந்தேன். கிறிஸ்துவ மதத்தில் எனக்கு ஈடுபாடு எதுவும் கிடையாது. நான் கிறிஸ்துவ மதத்துக்கு மாறினால் என் உயர் கல்வியைத் தாம் பார்த்துக் கொள்ளுவதாய் அந்தப் பாதிரியார் ஆசை காட்டினார். எனது மேற்படிப்பைச் சர்ச்சு பார்த்துக்கொள்ளும் என்பதால் நான் கிறிஸ்துவ மதத்துக்கு மாற முடிவு செய்தேன்.”

“பீமண்ணா அதற்குச் சம்மதித்தாரா?”

“இல்லை! அப்படி ஓர் எண்ணத்திலிருந்து என்னை விடுவிக்கவே அவர் முயன்றார். நல்லவர்களாகவும், அண்டை-அயலார் அனைவரையும் நேசிப்பவர்களாகவும், துன்பப்படுபவர்களுக்கு உதவுபவர்களாகவுமே இருக்குமாறு தம் பின்பற்றாளர்களுக்கு எல்லா மதங்களுமே போதிப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார். அனைத்து மதங்களின் அடிப்படைத் தத்துவங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியானவையே என்றும் விளக்கினார். எனவே மதம் மாறுவது என்பது அர்த்தமற்றது என்றும் கூறி எனது முடிவை மாற்ற முயற்சி செய்தார். ஆனால் அவரது அந்தப் போதனையை என்னால் ஏற்க முடியவில்லை. என் வருங்காலம் பற்றிய கவலை எனக்கு மிகுதியாக இருந்தது.  நான் பிறந்த வறுமைச் சூழல், வாழ்ந்த அவலம், குழந்தைப் பருவத்துப் பசி முதலியவை என்னை எப்போதும் வதைத்தவாறு இருந்தன.  பணமும் செல்வாக்கும் உள்ளவனாக முன்னேற நான் துடியாய்த் துடித்தேன். அதற்கு உயர்கல்வியே முதல் படி என்பதை நான் அறிந்திருந்ததால் என்னால் விட்டுக்கொடுக்க முடியவில்லை.”

“எனவே, நீங்கள் கிறிஸ்துவ மதத்துக்கு மாறினீர்கள்!”

“ஆமாம். எனக்கு அப்பாவைப் போல் இருந்த – என்னைக் காத்த கடவுள் என்பதாகவே கருதி நான் மதித்த – பீமண்ணா அவர்களின் விருப்பத்துக்கு எதிராக! மேல் படிப்பின் மேல் எனக்கிருந்த தாகத்தையும், என் உறுதியையும் பார்த்ததும், கஷ்டத்தோடு கஷ்டமாக என்னையும் எப்பாடு பட்டாவது கல்லூரியில் சேர்த்து விடுவதாய் அவர் கூறினார். பிரகாஷ்! நீ நம்ப மாட்டாய்! அப்போது ராமதாஸ் என்ன சொன்னான், தெரியுமா? ‘அப்பா! நான் சராசரி மாணவன் தானே! எனக்குக் கல்லூரிப் படிப்பு வேண்டாம். திறமைசாலியான கிஷன் தாஸ் படிக்கட்டும். அவனைக் கல்லூரியில் சேர்த்து விடுங்கள்’ என்று பீமண்ணாவிடம் கூறினான்!”

“வியப்பாக இருக்கிறது – இப்படியும் நல்லவர்கள் இருப்பார்களா! அப்பாவைப் போல மகனும்! இதற்குப் பீமண்ணாவின் மனைவி என்ன சொன்னார்?”

“சாரி, பிரகாஷ்! ஒன்றைச் சொல்ல மறந்தே போனேன். நானும் ராமதாசும் பத்தாம் வகுப்பில் இருந்த போது அவர் காலமானார். அதன் பின் பீமண்ணாதான் வீட்டில் சமையலும் செய்துவரலானார். … எனக்கும் மனச்சாட்சி என்பதாய் ஒன்று இருக்கிறதல்லவா! எனவே ராமதாஸ் எனக்காகத் தன் உயர் கல்வியை விட்டுக்கொடுக்க முன் வந்ததை நான் ஏற்கவில்லை. எனவே, பீமண்ணாவிடமோ ராமதாசிடமோ கூடச் சொல்லிக்கொள்ளாமல் அந்தப் பாதிரியாருடன் நான் தில்லிக்குப் பயணமானேன். நான் எத்தகைய நன்றி கெட்டவன்!” என்னும் கிஷன் தாஸ் தம் கண்களில் துளித்த கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுகிறார்.

பிரகாஷ் ஆறுதலாய் அவரது முதுகைத் தட்டிக்கொடுக்கிறான்: “இல்லை, அப்பா, நீங்கள் நன்றி கெட்டவர் அல்லர்! பீமண்ணா குறுக்கிட்டு உங்களைத் தடுத்துவிடுவாரோ என்கிற கவலையால்தான் நீங்கள் அவரிடம் சொல்லாமல் ஓடிப் போனீர்கள்!”

மீண்டும் கண்களில் துளித்த நீரைக் கிஷன் தாஸ் துடைத்துக்கொள்ளுகிறார்: “நீ என்னதான் சொல்லி என்னைச் சமாதானப்படுத்த முயன்றாலும், அடிமட்ட வறுமையில் உழன்ற என்னைத் தம் குடும்பத்தில் ஒருவனாய் ஏற்றுத் தங்க வைத்துப் படிக்கவும் வைத்த ஒருவரிடம் விடைபெறாமல் நான் கிளம்பியது நன்றிகெட்ட செயல்தான்!”

“அப்புறம்?”

“எனக்குப் பாதிரியார் திருமுழுக்குச் செய்து வைத்தார். என் பெயரை ஜோசப் கிஷன் தாஸ் என்று மாற்றிக்கொள்ளச் சொன்னார்.  நான் மறுத்துவிட்டேன். நான் முகமறியாத என் பெற்றோர் எனக்கிட்ட பெயரை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை. … சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால், நான் என் பட்டப் படிப்பை மிகச் சிறப்பாக முடித்தேன்…”

“மிகவும் சுவையான வரலாறுதான். இத்தனை விவரங்களையும் இதற்கு முன்னால் நீங்கள் எனக்குச் சொன்னதே இல்லை! ஏன் அப்பா?”

”அதற்குத் தேவை இருக்கவில்லை. மேலும் நீ என்னை நன்றி கெட்டவன் என்று கணிப்பாயோ என்கிற அச்சமும் தயக்கமும் இருந்தன. இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டதாய் நான் நினைப்பதால் சொல்லுகிறேன்…. என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்? ஆங்! நல்ல மதிப்பெண்கள் பெற்று மிகச் சிறப்பாகத் தேறிப் பட்டம் பெற்றேன். பின்னர் ஒரு தனியாரின் தொழிற்சாலையில் வேலையில் அமர்ந்தேன். வேலையில் இருந்துகொண்டே தனிப்பட்ட முறையில் அஞ்சல் மூலம் மேலும் மேலும் படித்துப் பட்டங்கள் பெற்றேன். மிகக் குறுகிய காலத்துக்குள் அத் தொழிற்சாலையின் மேற்பார்வையாளர் ஆனேன். மேலும் மேலும் நன்றாக உழைத்து அதன் மேலாளர் பதவிக்கு உயர்ந்தேன். சொந்தமாய்த் தொழில் செய்வதன் அனைத்து நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்தேன்.  கொஞ்ச நாள் கழித்து, நானே ஒரு சிறு தொழிலகம் தொடங்கினேன்.”

“என்ன தொழிலகம் அப்பா, அது?”

“ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் தொழிலகம். சிறியதே யானாலும் நாளுக்கு நாள் வளர்ந்து மிக விரைவில் அது பெரிய தொழிலகமாக உருவெடுத்தது. மூன்றே ஆண்டுகளில் அது போன்ற மூன்று தொழிலகங்களுக்கு நான் உரிமையாளன் ஆனேன்.  மூன்று நான்காகி, நான்கு ஐந்தாகி நான் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே போனேன். ஆயத்த ஆடைத் தயாரிப்பில் மட்டுமல்லாமல், வேறு சில துறைகளிலும் நான் முன்னேறியவாறே இருந்தேன். ராமதாசும் பீமண்ணாவும் என் வாழ்க்கையில் குறுக்கிடாமல் இருந்திருந்தால், நான் தெருவில் பிச்சை எடுத்துத் திரியும் ஓர் அநாதையாகத்தான் மாறி யிருந்திருப்பேன்.  வாய்ப்பான நேரங்களில் திருடுபவனாகவும் இருந்திருப்பேன். என்னுடையது போன்ற மோசமான சூழலில் வளரும் பிள்ளைகள் அப்படி ஆகாமல் தடுக்க நான் விரும்பினேன். அதன் விளைவாகத்தான் தெருவில் சுற்றும் அநாதைக் குழந்தைகள், வறுமையால் சோறு போட முடியாமல் பெற்றோரே விற்றுவிடும் குழந்தைகள் ஆகியோரை என் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தத் தொடங்கினேன். இவ்வாறு தெருச் சிறுவர்களையும் விற்கப்படும் சிறுவர்களையும் வேலையில் அமர்த்துவதன் வாயிலாக அவர்கள் திருடர்களாகவும், பின்னர் பெரும் போக்கிரிகளாகவும், கொள்ளைக் காரர்களாகவும் – ஏன்? சமயங்களில் கொலைகாரர்களாகவும் கூடத்தான் – மாறுவதைத் தடுத்து வந்திருக்கிறேன் என்பதை நீ நினைத்துப் பார்க்கவேண்டும்…”

பிரகாஷ் அவர் மீது தன் ஆழ்ந்த பார்வையைச் செலுத்துகிறான். தம் வரலாற்றிடையே அவர் குழந்தைத் தொழிலாளிகள் பற்றிய பேச்சை எடுத்தது பொருள் பொதிந்த ஒன்றாக அவனுக்குப் படுகிறது.

“அப்பா! அப்படியானால் சிறுவர்களை உங்கள் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தி வருவதை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா?”

“ஒரு விதத்தில், ஆமாம் என்றுதான் சொல்லுவேன். உனக்குத் தெரியுமா, பிரகாஷ்! பட்டினி கிடக்கும் இந்தக் கைவிடப்படும் சிறுவர்களும், அநாதைச் சிறுவர்-சிறுமிகளும்தான் பின்னாளில் போதைமருந்து விற்பவர்களாகவும், திருடுபவர்களாகவும், பயங்கரவாதிகளாகவும், விபசாரம் செய்பவர்களாகவும், மாறுகிறார்கள்! கொலை செய்யவும் துணியும் கூலிப்படையினராகவும் கூடத்தான். நானே ஒரு தரம் ஒருவனைக் கொலை செய்யத் துணிந்ததுண்டு…யாரைக் கொல்ல நினைத்தேன் என்பதை உன்னால் ஊகிக்க முடிகிறதா?”

“ஏன் முடியாது? உங்களை அடித்துத் தெருவில் போட்ட அந்தக் கடைக்காரனைத் தானே?”

“ஆமாம். அவனைத்தான்.  ஆனால் அந்தக் கொடூரச் செயலைத் தடுத்தது எது, தெரியுமா? நான் பெற்ற கல்வியால் என்னிடம் விளைந்திருந்த நன்னடத்தையும் நற்தன்மைகளும்தான்!”

“பீமண்ணா உயிரோடு இருந்தால் அவருக்கு இப்போது மிகவும் வயதாகி யிருக்கும். இல்லையா? நீங்கள் தில்லிக்கு வந்த பிறகு ராமதாசுடன் கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டீர்களா? அவர்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?”

“நான் தில்லிக்கு வந்த பிறகு சில நாள் நாங்கள் கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டிருந்தோம். ராமதாசுக்கு மிக இளவயதிலேயே கல்யாணம் ஆகிவிட்டது. அவன் எனக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தான். ஆனால் ஆண்டு இறுதித் தேர்வு சமயமாக இருந்ததால் என்னால் போக முடியவில்லை.  சில நாள் கழித்து ராமதாசிடமிருந்து கடிதம் வருவது நின்று போயிற்று. எனக்கு அது கவலையை அளித்தது.  எனவே எனது முகவரியை உறைக்கு வெளியே எழுதி ராமதாஸ், பீமண்ணா ஆகிய இருவருக்கும் தனித்தனியாகக் கடிதம் எழுதினேன். ஆனால் ‘ரெயில் விபத்தில் இவர் உயிர் இழந்துவிட்டார்’ எனும் குறிப்புடன் இரண்டுமே எனக்குத் திரும்பிவிட்டன.”

“அய்யோ! ஆனால் நீங்கள் ராமதாசின் மனைவியைச சந்திக்க முயற்சி செய்யவில்லையா? சந்தித்து உதவி யிருந்திருக்கலாமே?”

“ஆனால் அப்போது நான் படித்துக்கொண்டல்லவா இருந்தேன்? எனக்கு வேலையோ சம்பாத்தியமோ அப்போது இல்லையே? ராமதாசின் மனைவியுடைய முகவரியைக் கண்டுபிடிக்கக் கேட்டு நான் அவ்வூர் அஞ்சல் தலைவருக்குத் தனிப்பட்ட கடிதம் எழுதினேன்.  ராமதாஸ் இறந்த பிறகு அவர் மனைவி தன் குழந்தையுடன் ஊரை விட்டுப் போய்விட்டதாய்த் தெரிந்ததென்றும் ஆனால் முகவரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர் எனக்குப் பதில் அனுப்பினார். இப்போது அவர்களைக் கண்டுபிடிக்க முடிந்தால் கண்டிப்பாக உதவுவேன். அவனுடைய மகன் உன்னைவிட மூத்தவனாக இருப்பான்….”

“ஆக, இதுதான் உங்கள் கதையா? …அப்பா! இப்போது சொல்லுங்கள் – உங்கள் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளிகளை எப்படி அடைகிறீர்கள் என்பதை!”

“ஏன் கேட்கிறாய்? எதற்காக அதைக் கேட்கிறாய் என்பதை நான் தெரிந்துகொள்ளலாமா?” என்று கேட்கும் கிஷன் தாஸ் அவன் மீது சந்தேகப் பார்வையைச் செலுத்துகிறார்.

“சும்மாதான் கேட்கிறேன். சென்ற ஆண்டு நீங்கள் குழந்தைத் தொழிலாளர்களை நியமிப்பதாய் ஒரு புலனாய்வு இதழ் குற்றஞ்சாட்டி யிருந்தது.  தொழில்துறை அமைச்சகத்திலிருந்து ஆய்வாளர்கள் உங்கள் தொழிற்சாலை ஒன்றைச் சோதிக்க வந்த போது அவர்களுக்கு ஒரு தொகையைக் கையூட்டாகக் கொடுத்து அவர்கள் வாயை அடைத்து அனுப்பி விட்டீர்கள்…. அவர்களும் அந்தச் செய்தி பொய்யானது என்று பொய் அறிக்கையை வெளியிட்டார்கள்!”

“அதற்கென்ன வந்தது இப்போது?” என்று வினவும்  கிஷன் தாசின் குரலில் எரிச்சல் ஒலிக்கிறது.

“அது சட்டவிரோதமானது என்பது உங்களுக்குத் தெரியாதா, அப்பா?”

“துரதிருஷ்டம் பிடித்த இந்தக் குழந்தைகளை ஒன்று கூட்டி அவர்களுக்கு இருப்பிடம், உணவு, உடை, கல்வி ஆகியவற்றை அளிக்காமல் அலட்சியமாக இருப்பது அரசாங்கத்தின் சட்டமா! என்னைப் பொறுத்த வரையில், கடைசியாய்க் குறிப்பிட்ட கல்வி என்பதைத் தவிர மற்றவற்றை நான் செய்து வருகிறேன்!” என்று கிஷன் தாஸ் ஆத்திரமாய்க் கூறுகிறார்.

“உங்களிடம் அவர்களை என்றென்றும் வைத்துக் கொள்ளுவதற்காகத்தானே அப்படிச் செய்துகொண்டிருக்கிறீர்கள்! இது கொத்தடிமைத்தனம் அல்லவா! மிகக் குறைந்த சம்பளத்துக்கு மிக அதிக அளவில் இரக்கமற்ற முறையில் அவர்களிடம் வேலை வாங்கப்படுவது எனக்குத் தெரியும், அப்பா! அது மனிதத்தனம்தானா?” என்று பிரகாஷ் அவரைக் கேலியாய்க் கேட்கிறான்.

“மனிதத்தனம் பற்றி எனக்குப் போதிக்கிறாயா! அநாதைக் குழந்தைகளுக்கு நான் செய்யக்கூடிய அதிகப் பட்சமான சேவை இதுதான். வேறு எவராலும் இதற்கு மேல் மனிதத்தன்மையோடு நடந்து கொள்ள முடியாது. எனக்கு எந்தக் குற்ற உணர்வும் கிடையாது….நான்  அவர்களுக்கு நல்லதே செய்து வருகிறேன்!”

“இந்த அநாதைச் சிறுவர்களையெல்லாம் எப்படித் தேடிப் பிடிக்கிறீர்கள் என்று கேட்டேனே?”

“அதற்கென்று ஆள்கள் இருக்கிறார்கள். சோறு போட முடியாததால் சுமை என்று நினைத்துத் தங்கள் குழந்தைகளை விற்கத் தயாராக இருக்கும் பெற்றோரிடமிருந்து அவர்களை விலைக்கு வாங்கும் முகவர்கள் அந்தக் குழந்தைகளை எனக்குத் திரும்பவும் விற்பார்கள். ஐந்நூறு ரூபாய் கொடுத்து வாங்கும் ஒரு சிறுவனை இரண்டாயிரத்துக்கு விற்பார்கள். குழந்தை இல்லாத பணக்காரர்களும் இத்தகையோரை விலைக்கு வாங்குவதுண்டு. என்னைப் போன்ற தொழிலதிபர்கள் இவர்களுக்கு இருப்பிடம், சாப்பாடு, சம்பளம் என்று கொடுத்து வேலையில் அமர்த்திக்கொள்ளுவார்கள்.”

“உங்கள் தொழிற்சாலைகளுக்குப் போய் எப்போதாவது நீங்கள் அந்தக் குழந்தைகளைப் பார்த்து அவர்களுடன் பேசியதுண்டா? அவர்கள் அங்கே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று கேட்டதுண்டா? அவர்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளனவா என்று விசாரித்ததுண்டா? போதுமான உணவு தரப்படுகிறதா என்று கண்டறிந்ததுண்டா? அவர்கள் விளையாட அனுமதி உண்டா?”

“நடுக் கூடத்தில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. அதில் குழந்தைகளுக்கென்றே வரும் கதைகள் போன்ற நிகழ்ச்சிகளை அவர்கள் பார்க்கும் வசதி உண்டு.”

“நீங்கள் நேரில் அங்கு போய் அவர்களைச் சந்தித்துப் பேசியதுண்டா என்று கேட்டேனே?”

“நான் ஏன் அவர்களைச் சந்தித்துப் பேச வேண்டும்? அதற்கென்று நிர்வாகிகள் இருக்கிறார்கள், மற்ற ஊழியர்கள் உள்ளார்கள்… அது சரி நீ என்ன தொழில்துறை ஆய்வாளரா? இத்தனை கேள்விகள் கேட்கிறாயே!”

“நான் உங்களைப் பற்றிய கவலையால் கேட்கிறேன், அப்பா! சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடும் தொழிலதிபர்களுக்கு எதிராய் அவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் நோக்கத்துடன் சுமதி செயல்பட்டுக்கொண்டிருக்கிறாள். அவள் உங்களைப் பற்றிக் கண்டுபிடித்து எதையாவது எழுதிவிட்டால்….”

“என்னை வம்புக்கு இழுப்பது என்பது குட்டிச்சுவரில் முட்டிக்கொள்ளுவது போல! அவள் எனக்கு என்ன தொல்லை கொடுத்தாலும் அதை என்னால் சமாளிக்க முடியும்! உனக்கு என் மீது அவ்வளவு கரிசனம் என்றால் அந்தப் போக்கிரிப் பெண்ணை மணக்கும் எண்ணத்தை நீ கைவிடு!”

“நாக்கை அடக்கிப் பேசுங்கள், அப்பா!” என்று பிரகாஷ் உதடுகள் துடிக்கக் கூறுகிறான். மேற்கொண்டு அவருடன் எதுவும் பேசாமல் கட்டிலிலிருந்து இறங்கும் பிரகாஷ் தன்னறைக்குள் புகுந்து படீரென்று கதவைச் சாத்திக்கொள்ளுகிறான்.

jothigirija@live.com

 

Series Navigationநினைவில் உதிர்தல்திருகுவளையில் உதித்த சூரியன்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *