வேர் மறந்த தளிர்கள் 4-5

This entry is part 20 of 21 in the series 2 ஜூன் 2013

4 காலையில் வெற்றி

குளிர்சாதனப்பெட்டியின் கதவைத் திறந்து உள்ளே இருந்த போத்தலிலுள்ள குளிர்ந்த நீரை எடுத்து வாயில் ஊற்றிக் கொள்கிறான்! வயிற்றில் சில்லென்று இறங்கிய நீர் அவனுக்குச் சிறிதளவு இதமான உணர்வைக் கொடுத்திருக்க வேண்டும்.தன்னுள் எதையோ நினைத்துக் கொண்டவனாகத் தலையை ஆட்டிக்கொள்கிறான் .

ஆரோக்கிமான காலை உணவு அன்றையப் பணிகளைத் தொடங்க எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டவனாக இருந்தும் எந்தவொரு சத்துமில்லா உணவு எதனையும் உண்ணாமல் காலியான வயிற்ரோடு அலுவலகம் செல்வதை எண்ணி நொந்து கொள்கிறான்! நேற்று இரவு பத்து மணிக்கு படுக்கச் செல்லும் போது ஒரு கிளாஸ் பால் அம்மா வற்புறுத்திக் குடிக்கக் கொடுத்ததுதான்!

ஆறிப்போன நெஸ்க்காப்பியைக் கீழே ஊற்றிவிட்டு கிளாசைச் சுத்தமாகக் கழுவிப் பாத்திரங்கள் வைக்க வேண்டிய இடத்தில் ஒழுங்காக வைத்தான்.மேசை மீது இருந்த மற்ற பொருட்கள் எதனையும் விட்டுவைக்காமல் அப்புறப்படுத்திவிட்டு மேசையைச் சுத்தமாக துடைத்தான்.அம்மா பார்த்தால் சந்தோசப்படும் சூழல் தெரிந்த பின்னரே, மனதுக்குள் சிரித்தபடி அறையை விட்டு அகலுகிறான்.

வாசல் கதவைக் பூட்டிச் சாவியைத் தன் சட்டைப் பைக்குள் வைத்துக் கொள்கிறான் . வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கதவைத் திறந்து உள்ளே உட்கார்ந்து காரை இயங்குகின்றான்.

அண்மையில் வாங்கியப் புத்தம் புதியக் கார் தயார் நிலையில் இருப்பதைப் போல், எந்தவொருப் பிரச்னையும் இல்லாமல் காரின் இயந்திரம் இயங்கத் தொடங்குகிறது. சிறிது நேரம் இயந்திரம் நிதானமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பார்த்திபன் அந்தக் காரின் இயந்திரத்தின் ஓசையை மிகக் கவனமுடன் செவிமடுக்கிறான்.

கார் சரியான நிலையில் இருப்பதை உறுதிச் செய்வதற்குக் காலையில் காரின் ஓசை சரியான முறையில் இயங்குவது முக்கியம் என்பதை அறிந்து எஞ்சினைச் சிறிது நேரம் ஓடவிடுகிறான்.அது சீராக ஓடுகிறது. முகத்தில் சிறு புன்னகை தவல்கிறது. அவன் அதிகம் விரும்பும் கார் சரியாக இயங்கியது என்றால் அவனைப் பொறுத்தமட்டில் காலையில் கிடைக்கப் பெற்ற முதல் வெற்றியாகும்!

தன் வயிற்றுப் பசியைப் பற்றிக் கூடப் பெரிதுப் படுத்திக் கொள்ளாதவன் காரின் இயந்திரத்தில் எந்தவொரு கோளாறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் அக்கறையுடன் செயல்படுகிறான்.எந்தப் பிரச்னையும் காரில் இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்டவன் கையிலுள்ள கருவியின் விசையை அழுத்துகிறான். வீட்டின் நுழைவாயிலிருந்த கேட் ஒலியின்றி தானாகத் திறந்து கொள்கிறது.

அடுத்த சில வினாடிகளில் பார்த்திபன் கார் கேட்டை நோக்கி மெதுவாக நகர்கிறது! கார் கேட்டைத் தாண்டியவுடன் மீண்டும். கேட் தானாக மூடிக் கொள்கிறது ! நவீன வாழ்க்கை மனிதனைச் சொகுசாக வாழ தடம் பதித்துள்ளது! நவீனக் கண்டுபிடிப்புகள் இன்று மனிதர்களைச் சோம்பேறிகளாக வாழவும் துணைப் போய்க் கொண்டிருக்கின்றன என்றால் அது மிகை இல்லைதானே !

அவன், ஒரு கட்டிளங்காளை இருபத்தைந்து வயதைக் கடந்து கொண்டிருந்தான்.குடும்பப் பொறுப்பு ஏதுமின்றி காலத்தை வெறுமனமே ஓட்டிக் கொண்டிருக்கிறான்! பல்கலைக்கழகப் படிப்பு முடிந்தவுடன் தனியார் நிறுவனம் ஒன்றில் சுலபமாக வேலையில் சேர்ந்துவிட்டான். ஆரம்பச் சம்பளமே மூவாயிரம் ரிங்கிட்டை நெருங்கியது!

பெற்றோர் இருவரும் பொறுப்பான வேலைகளில் தனியார் நிறுவனங்களில் தத்தம் பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். காலையில் கடைசியாகப் பார்த்திபன் வீட்டைப் பூட்டிவிட்டு தன் பணிமனைக்குச் செல்கிறான். மீண்டும் அம்மூவரும் வழக்கமாக மாலையில் இருட்டும் வேலையில்தான் இல்லம் திரும்புவார்கள்!

அலுவலகத்தில் பணியுனூடே உணவு உண்டுவிட்டால், அவர்களுக்கு வீட்டில் உணவு உண்ணும் நிலை இருக்காது.பெரும்பாலும் பெற்றோர் நேரம் கடந்தே இரவில் வீடு திரும்புவார்கள். சமயத்தில் மாலையில் நேரத்திலேயே இல்லம் திரும்பிவிட்டால், மிக எளிமையான சமையல் மட்டுமே வீட்டில் நடக்கும்.பார்த்திபன் தினம் மாலை வேளைகளில் நேரத்திலேயே வேலை முடிந்து வீடு திரும்பிவிடுவான்.பெற்றோர் வீடு திரும்பும் வரும் வரையில் வீட்டில் தனியாகவே இருப்பான்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பது மூலமே அவன் தனது பொழுதைப் போக்குவான்.

5 உழைக்கும் கரங்கள்

அதிசயமாக பெற்றோர் இருவரும் சொல்லி வைத்தது போல் அன்று சில நிமிட இடைவெளிக்குப்பின் ஒருவர் பின் ஒருவராக இல்லம் திரும்புகின்றனர்.சில வேளைகளில் அப்படி அபூர்வமாக நடப்பதுண்டு. வந்து சேர்ந்ததும் சேராததுமாகப் பசியுடன் காத்திருக்கும் பார்த்திபனைப் பார்க்கிறார் அம்மா.அவன் அமைதியுடன் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.சோர்வுடன் காணப்பட்டான்! பெற்ற வயிறு அல்லவா? அம்பிகைக்கு மனசு அடித்துக் கொள்கிறது!

நீண்ட நேரம் மகனைப் பிரிந்திருந்த சோகம் அவர் முகத்திலும் தெரிந்தது.செக்கச்சிவந்த மேனி,மூக்கும் விழியுமாக இருக்கிறான்.தனக்குப் பிறந்த பிள்ளையா இப்படி அழகாக இருக்கிறான்? தன் கண்ணே பட்டுவிடும் போல இருக்கு! மனதுள் தோன்றிய எண்ணத்துடன்,மகனை
நோக்கிச் செல்கிறார்.அருகில் அம்மா வருவதுகூடத் தெரியாமல் சோர்வுடன் தொலைக்காட்சியில் ஏதோ நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மகனின் தலையைப் பாசமுடன் தடவிக்கொடுக்கிறார்.

“வந்து நேரம் ஆயிடுச்சா பார்த்திபா… ?” மிகுந்த பாசமுடன் கேட்கிறார்.
“வந்து கொஞ்ச நேரம் ஆவுது…..!” அமைதியாகக் கூறுகிறான்.
“ஏதும் சாப்பிட்டியாப்பா?” கரிசனத்துடன் கேட்கிறார்.
“இல்லம்மா…..!” எந்தவிதச் சலனமும் இல்லாமல் சுருக்கமாகப் பதில் கூறுகிறான்.

தனக்கு அம்மா என்ற தகுதியைக் கொடுத்தவன் ஆயிற்றே! முப்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் என்ற பந்தத்தில் காலடி எடுத்து வைத்தபோது புதிய சொந்தங்களையும் உற்றார் உறவினர்களையும் சந்தித்த அன்றே, வாழ்வு எனக்குப் புதுப்புது அர்த்தத்தைக் கொடுத்தது!

தெம்பையும், தெளிவையையும், நம்பிக்கை விதையை வாழ்வில் விதைத்தது! எனக்கு முன்னால் உடன் பிறந்த அண்ணனோ அல்லது அக்காளோ இருந்ததில்லை. எனக்குப் பின் தம்பியோ அல்லது தங்கையோ பிறந்ததில்லை! குடும்பத்தில் நான் ஒரே பிள்ளை. சொல்லவும் வேண்டுமா? சீருடனும் சிறப்புடனும் வளர்ந்தேன்.நான் நினைத்தது நடந்தது.கேட்டது கிடைத்தது. எந்தக் குறையும் இல்லாமல் வளர்ந்தேன்.

எனது பெற்றோர், கிள்ளான் பட்டணத்திற்கு அருகிலிருக்கும் மிட்லண்ஸ் தோட்டத்தில் அப்பா அரிகிருஷ்ணன் ‘டிராக்டர்’ ஓட்டுனராகவும் அம்மா இருசம்மாள் வெளிக்காட்டு வேலை செய்யும் சாதாரண தொழிலாளிகளாகத் தொழில் புரிந்தாலும் என்னை வளர்ப்பதில் அவர்கள் தனிக்கவனம் செலுத்தி வந்தனர்.எங்களோடு என் சித்தப்பா அறிவுமதி இருந்தார்.என் அப்பா குடும்பதிலும் இருவர் மட்டுமே. அப்பாவுக்குத் தம்பி அறிவுமதி மட்டும் இருந்தார்.

“அரிகிருஷ்ணன்…….! டக்க….வேகமா ஓட்டுப்பா……. மணி ஆயிடுச்சு……! வெட்டுக்கு ஆளெல்லாம் சீக்கிரமாக் கொண்டு போய் விடனும்!” மற்ற தொழிலாளர்களோடு முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் முருகன் கங்காணி துரிதப்படுத்துகிறார்.

“கங்காணி…….! கவலைப் படாதிங்க…….இன்னும் பத்து நிமிஷத்துல அவரவர் வெட்டுலக் கொண்டு போய் விட்டுடுறேன்! நேற்றா….இன்றா…. டக்கு ஓட்டுறேன்…..! சொன்னபடி வேலைக்காட்டுல ஆட்களை விட்டிடுறேன்……! நீங்க……எதுக்கும் கவலைப் படாதிங்க கங்காணி!
“ அட…..நீ ஒன்னுப்பா…..! நேற்று கொஞ்சம் லேட்டா போனதுக்கு, நாக்கப் பிடிங்கிகிட்டு சாகரமாதிரி திட்டினாரே….சிங்கம்கிராணி அதுக்குள்ள நீ மறந்துட்டியா அரி…?” “இரவு மழை பேஞ்சதால, காலையில ரோடு ஈரமா இருந்துச்சு.அதனால, டக்க மெதுவா ஓட்ட வேண்டியதாச்சி…அதான் நேற்றுகொஞ்சம் லேட்டு! இன்றைக்கு….. அந்தப் பிரச்னை இல்லை…..! இதோ……! ” டிராக்டரைச் சற்று வேகமாக இயக்குகிறார் அரிகிருஷ்ணன்.

காலை மணி ஆறரையை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆறரை மணிக்கெல்லாம் அவரவர் வெட்டுகளில் தொழிலாளர்கள் வேலைகளைத் தொடங்கிவிட வேண்டும்.சில நிமிடங்கள் தாமதம் என்றாலும் சிங்கம்கிராணி விட்டுக் கொடுக்கமாட்டார்! தொழிலாளர்கள் முன்னிலையிலேயே தயவு தாட்சண்ணியம் இல்லாமல் கடுமையாகத் திட்டத்தொடங்கிவிடுவார்.
கடிமனம் நிறைந்த அவரிடம் திட்டு வாங்க அவர் தயாராகவில்லை! காலையில் ஆண்களும் பெண்களுமாக இரப்பர் மரம் சீவும் இருபது தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்த டிராக்டரில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். காலைப் பொழுது பளபளவென விடிந்து கொண்டிருந்தது!

வலப்புறம் மேட்டு நிலத்திலிருந்து, இடப்புறம் கீழ்நிலத்திற்குச் செல்ல சாலையை மின்னல் வேகத்தில் குறுக்கே பாய்ந்தது முரட்டுப் பன்றி ஒன்று! இதைச் சிறிதும் எதிர்பாராத டிரைவர் நிலைத் தடுமாறினார்! வலப்பக்கமாக அமர்ந்திருந்தப் பெண் தொழிலாளர்கள் அதர்ச்சியில் அந்தக் காடே அதிரும் படியாகக் கூச்சலிட்டனர்!

சமயோசிதமாக வண்டியை வலதுப் புறமாகத் திருப்பியதால் பன்றி வண்டியில் மோதுவதிலிருந்து தவிக்கப்பட்டது! எனினும்,வண்டி வலது புறத்தில் அமைந்துள்ள சிறிய கால்வாயில் இறங்கிவிட்டது! இரண்டு பெண் தொழிலாளர்கள் வண்டியிலிருந்து வெளியே தூக்கி எறியப் பட்டனர்! கை,கால் மற்றும் முகங்களில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது!

இரும்புச் சட்டத்தில் மோதிக்கொண்ட முருகன் கங்காணியின் நெற்றியில் காயம் பட்டு இரத்தம் பீரிடுகிது!

“ஐயோ….! கங்காணிக்கு மண்டை ஒடைஞ்சிடுச்சு…..!” பெண் தொழிலாளி பேச்சாயி அலறத்தொடங்கி விட்டார்!
“ பேச்சாயி…..! உன்னோடத் துண்டைச் சீக்கிரம் கொடு……!” முகம் துடைக்கத் தோளில் போட்டிருந்த பேச்சாயின் துண்டை வெடுக்கென எடுத்து கங்காணியின் முகத்தில் பீரிட்டுக்கொண்டிருக்கும் இரத்தத்தை நிறுத்தும் முயற்சியில் அவசரம் காட்டுகிறார் காசியம்மாள்! கட்டுப் போட்டும் இரத்தம் நிற்கவில்லை! இரத்தம் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருந்தது!அவரது முயற்சியில் ஒரளவு வெற்றியும் பெறுகிறார். எனினும், முருகன் கங்காணி மயக்கமடைகிறார்! இதைப்பார்த்தப்பெண்தொழிலாளிகளில் சிலர் அழத்தொடங்கிவிட்டனர்! டிரைவர் அரிகிருஷ்ணன் யாதொரு காயமுமின்றி தப்பியது அதிர்ஸ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். சகதொழிலாளர்களுக்குத் தைரியம் சொல்லி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருகிறார்.

ஆண் தொழிலாளர்கள் டிரைவரோடு சேர்ந்து கொண்டு அடுத்தக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு நிலைமையைச் சமாளிப்பதில் மும்முறம் காட்டினர்! கறுப்பு நிறத்தில் ஏறத்தாழா மூன்றடி உயரத்திலிருந்த அந்தப் பன்றி எங்கோ ஓடி மறைந்திருந்தது! எனினும்,பெண் தொழிலாளிகள் அந்த மிருகத்தைக் கண்ட அதர்ச்சியில் மீளாமல், நடுங்கிபடி வண்டியைவிட்டு இறங்காமல் இருக்கையிலேயே அமர்ந்திருந்தனர்!

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 9.அறிவால் உல​கை வியக்க ​வைத்த ஏ​ழை….அக்னிப்பிரவேசம்-36
author

வே.ம.அருச்சுணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *