வேறெந்த சொற்களும் அவனிடம் மிச்சமில்லை

This entry is part 19 of 34 in the series 17 ஜூலை 2011


ஒரு சொர்க்கத்தை சம்பாதிப்பதற்காக
நகரங்களை உருவாக்குபவன்
என்வீதிவழியே வந்து
என்னை தட்டி எழுப்பிச் சென்றான்.
கறுப்புவடுவோடு கண்டுணர்ந்த பேரழகு
கீற்றாய் சிறுகோடாய் தேய்ந்து
இரவின் கதையை எழுத
பிறையின் ஒளியை முத்தமிட்டு
அதிசயித்து பார்க்கும் கண்கள்
மின்னல் வாகனத்தில் பறந்து சென்றது.
தொடமுடியாத ஏழுவானங்களும் அதிர
அவன் கூக்குரலிட்டான்.
நிரம்பிய கண்ணீரில்
ஒளுவெடுத்து புனிதப்படும் உள்ளங்கைகளும்
நெடுவெளி மணற்காட்டில்
தய்யம் செய்யும் விரல்களும்
அறிந்திராதொரு வன்மத்தின் தீண்டலில்
அவனின் அபயக்குரல் தொடர்ந்தது.
லாத்தும் உஜ்ஜாவும் மனாத்தும்
உடைபட்டு கீழேவிழுந்து புலம்பினகுரல்
திரும்பவும் கேட்கிறது.
மூசாவையும் ஈசாவையும் குறித்து
அறிவித்த தீர்ப்பால்
சிலுவையிலிருந்தும் போர்வாள்கள் முளைத்து
அவனின் குரல்வளையை நெருங்கிவந்தன.
யுத்த இருளின் புகைமூட்டத்தில்
எதிரே கண்டால் வெட்டச் சொன்ன புனிதவசீகரம்
எதிரியின் கைகளிலும் துப்பாக்கிகளைத் திணித்தன.
போதையூட்டப்பட்ட சொற்கள்
எப்போதும் பைஅத்திற்கு தயார்
பைசாகோபுரங்களை தகர்த்தும் எறியலாம்
அதன் அடுத்தடுத்த பக்கங்களில்
தினந்தோறும் கவனிப்பாரற்று
துயரம் மேலிட கண்ணீர் சிந்தி கிடக்கிறது
லக்கும்தீனுக்கும்வலியதீன்.
குண்டுகள் வெகுஅருகாமையிலும் வெடிக்கின்றன.
மறைக்கப்பட்ட வரிகளினூடே
அர்ஷின்முத்திரை ஒன்று தவறிப்போனதை
எல்லோராலும் அறிந்து கொள்ள முடியவில்லை
சொல்லி முடிப்பதற்குள்
லாத்தும் உஜ்ஜாவும் மனாத்தும்
ரத்தத்திலிருந்து முளைக்கத் தொடங்கின.
ஜிகாதின் சொற்களைத்தவிர
இப்போது அவனிடம்
வேறெந்த சொற்களும் மிச்சமிருக்கவில்லை


ஹெச்.ஜி.ரசூல்

Series Navigationஉருமாறும் கனவுகள்…பழமொழிகளில் திருமணம்
author

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts

Comments

  1. Avatar
    Kalai says:

    Please explain what all these words mean:

    லாத்தும் உஜ்ஜாவும் மனாத்தும்

    அர்ஷின்முத்திரை

    மூசாவையும் ஈசாவையும் குறித்து

    ஒளுவெடுத்து

    பைசாகோபுரங்களை

    லக்கும்தீனுக்கும்வலியதீன்.

    Thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *