”முந்தானை முடிச்சு.”

வரும்போது மகளுக்கு
பலகாரம் வாங்கியாங்க..
ராட்டையில் பட்டு கோர்த்தபடி சொன்னாள்.
சுற்றுலா வண்டி கும்மாளக்குரலில்
குற்றாலத்துக்கு குளிக்கப்போனவனுக்கு
சரியா காது கேக்கல போலும்.

அப்படியே எனக்கும் வயித்துவலி
மாத்திரை ஏதாவது வேணும்..
தறியில் நெய்துகொண்டு கேட்டாள்.
சினிமா கொட்டகை
சீட்டி ஒலியில் மறந்து விட்டான் போலும்

பாவி மகளை பத்தாவது அனுப்ப
பணத்துக்கு வழியில்ல..
சரிகை சிக்கெடுத்தவள் குரலை
மேலத்தெரு ராக்கம்மா மடியில்
கரைத்து விட்டான் போலும்

ஓடிப்போன மகளை
எங்காவது பார்த்தீங்களா..
புடவையை நீட்டி மடித்தவள்
தேம்பலை சீட்டுக்கட்டுக்குள்
ஒளித்துவைக்க போய்விட்டான் போலும்.

ஒத்த ரூவா ஊறுகாயோடு
பனைமரத்தடியில் படுத்திருப்பான்.
பார்த்தா சொல்லி அனுப்புங்க..
உத்தரத்துல கட்டிய புடவையில்
கழுத்து மாட்டி தொங்குனவள
அவுத்து கிடத்த சீக்கிரம் வான்னு..

வெங்கடேசன்.செ

Series Navigationகுதிரே குதிரே ஜானானா361 டிகிரி – காலாண்டு சிற்றிதழ் – ஒரு அறிமுகம்