14 வேண்டாம் அந்த முரட்டுப் பெண்!

This entry is part 1 of 19 in the series 28 மே 2017

ஜோதிர்லதா கிரிஜா
(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)
14girja
அடுத்த நாள். கிஷன் தாஸ் தம் அலுவலகத்துக்குப் போயிருக்கிறார். எம்.பி.ஏ. தேர்வுக்குரிய பாடத்தைப் படித்தபடி பிரகாஷ் நடுக்கூடத்துச் சோபாவில் அமர்ந்திருக்கிறான். காப்பிக் கோப்பையுடன் நகுல் சமையலறையினின்று வருகிறார். அவரைப் பார்த்ததும் பிரகாஷ் நிமிர்ந்து உட்கார்ந்துகொள்ளுகிறான்.
பிரகாஷிடம் காப்பியைக் கொடுத்துவிட்டு, “பரீட்சைக்குப் படிக்கிறீர்கள் போலிருக்கிறது!” என்று சொல்லும் நகலை நோக்கித் தலையசைத்துவிட்டுக் காப்பியைப் பிரகாஷ் பருகுகிறான்.
“காப்பி மிகவும் பிரமாதம். ஆனால் மதராஸ் காப்பி அளவுக்கு இல்லை!”
குறும்பாய்க் கண்சிமிட்டும் நகுல், “அந்த உங்கள் மதராஸ் பெண் போட்டது போல் இல்லையாக்கும்! அப்படிச் சொல்லவேன்டியதுதானே?” என்கிறார், சிரிப்புடன்.
வெட்கப் புன்னகையுடன், “உங்களுக்கு யார் சொன்னது, நகுல்? அப்பா சொன்னாரா?” என்று கேட்கிறான்.
“இல்லை.”
“பின் எப்படித் தெரிந்தது? சரி. வந்து என்னுடன் இந்தச் சோபாவில் உட்காருங்கள். நிற்பது, நெளிவது, கைகளைப் பிசைவது போன்ற மரியாதைச் சேட்டைகளையெல்லாம் உங்கள் பெரிய அய்யாவிடம் வைத்துக்கொள்ளுங்கள்!”
தயங்கி நிற்கும் நகுலைப் பிடித்து இழுக்கும் நகுல் அவரைத் தனக்கு அருகில் உட்கார வைக்கிறான். பிறகு, காலிக்கோப்பையை வைத்துவிட்டு, “என் கேள்விக்குப் பதில் சொல்லவில்லையே நீங்கள்? அந்த மதாராஸ் பெண்ணைப்பற்றி எப்படி உங்களுக்குத் தெரிந்தது? வழக்கம் போல் ஓற்றுக் கேட்டா?” என்று வினவுகிறான்.
முகத்தில் போலியான சினம் காட்டி, “என்ன இது, சின்னய்யா! நான் எப்போதாவது ஒற்றுக் கேட்டதுன்டா? நீங்கள் இருவரும் அப்படி ஒற்றுக்கேட்க வேன்டிய தேவையே இல்லாமல் உரக்கத்தானே கத்திக்கொள்ளுகிறீர்களாம்! நான் ஒன்றும் செவிடு இல்லையே, சின்னய்யா!” என்கிறார் சிணுங்கலாக.
“சரி, சரி. நீங்களும் காப்பி எடுத்து வந்து குடியுங்கள். எழுங்கள்!”
“இல்லை, வேண்டாம். அடிக்கடி காப்பி குடித்தால் பித்தமாகிவிடும். நீங்களும் ரொம்பவும் காப்பி குடிக்கக்கூடாது, சின்னய்யா. அளவுக்கு மேல் குடித்தால் சீக்கிரமே தலை நரைத்துவிடும். அதை இளநரை என்பார்கள்.”
“ஓ. நன்றி.”
மதராஸ் பெண்’ பற்றிய உரையாடலை எப்படித் தொடர்வது எனும் தயக்கத்தில் இருவரும் சில கணங்கள் போல் ஒன்றும் பேசாதிருக்கிறார்கள். நகுல்தான் அதை உடைக்கிறார்.
“உங்களுக்குச் சொல்லாமல் அய்யாதான் முதலில் மதராசுக்குப் போனார். இல்லையா?”
“ஆமாம். ஆனால் உங்களிடம் சொல்லிவிட்டுப் போனாரா?”
“இல்லை, சின்னய்யா. உங்களுக்கே சொல்லவில்லையே! என்னிடம் சொல்லுவாரா என்ன! ஆனால் புறப்படுவதற்கு முந்தின நாள் அய்யா எதையோ தேடுபவர் போல் உங்களுடைய மேசை இழுப்பறையில் குடைந்துகொன்டிருந்தார். ஒருகால் அந்தப் பெண்ணின் முகவரியைத் தேடுவதற்காக இருக்கலாம். .. எனக்கு அந்தப் பெண்ணைப் பற்றி அப்போது தெரியாதாகையால் நீங்கள் தூங்கும் போது அவர் எதைத் தேடுகிறார் என்று எனக்கு வியப்பாக இருந்தது…”
“ஆமாமாம். நானும் ஊகித்தேன். எனது நாள் குறிப்பேட்டிலிருந்து அவள் முகவரியைக் கன்டுபிடித்து அவள் வீட்டுக்குப் போயிருந்தார் என்பதை! என்னையே அவர் கேட்டிருந்திருக்கலாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
“கேட்டிருந்தால் நீங்கள் ஆட்சேபித்திருந்திருப்பீர்கள்! அதனால்தான் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிப் போய்விட்டார். திடீரென்று போய் நிற்கவும் ஒரு திடீர்ச் சோதனை செய்யவும் போய் நின்றிருக்கிறார்!”
“ஓ! ஆக, உங்களுக்கு எல்லாமே தெரியும்!”
“எல்லாம் என்று சொல்ல முடியாது. ஓரளவு தெரியும். மற்றதை நானாக ஊகித்துப் புரிந்துகொண்டேன்…. நீங்கள் எம்.பி.ஏ. பரீட்சைக்கு அஞ்சல் மூலம்தானே படித்துவருகிறீர்கள்?”
“ஆமாம். உங்களுக்குத் தெரியாதா என்ன! என்னிடம் ஏதோ பேச விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். சரிதானா? மனம் விட்டு நீங்கள் என்னிடம் எதுவும் பேசலாம். நீங்கள் எனக்கு மாமா மாதிரி!”
“மாமா இல்லை! நான் உங்களுக்கு அப்பா மாதிரியாக்கும்! நான் தானே சின்னஞ்சிறு வயதிலிருந்தே உங்களை வளர்த்து வருபவன்? உங்கள் அப்பாவின் பங்களிப்பு அவ்வளவாக இல்லை. நான் அவரைச் குறைசொல்லவில்லை. அவரது தொழில்சார்ந்த அலுவல்கள் அப்படி. யாராலும் ஓர் அம்மாவின் இடத்தை இட்டுநிரப்ப முடியாதுதான். இருந்தாலும் அதையும் என்னால் முடிந்த அளவுக்குச் செய்திருக்கிறேன். எனவே, நான் உங்களுக்கு இன்னோர் அப்பா என்று சொல்லிக்கொள்ளலாம். ஒரு தரம் ‘நீங்களும் எனக்கு ஒரே அப்பாதான்’ என்று அய்யாவிடம் நீங்கள் சொன்னது என் காதில் விழுந்தது!”
“என் குற்றச்சாட்டை மறுத்தாலும், நன்றாய்த்தான் ஒற்றுக் கேட்கிறீர்கள்! வேடிக்கைக்காக நான் இப்படிச் சொல்லுவதைத் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்….அன்று நான் எனக்கு நீங்கள் ஒரே அப்பா என்று என் அப்பாவிடம் விளையாட்டாகச் சொன்னது தவறுதான். நீங்கள் சொல்லுகிறபடி எனக்கு இரன்டு அப்பாக்கள்! ஒருவர் கிஷன் தாஸ்; மற்றவர் நகுல்! சரியா?”
“சரிதான்!”
“என்னிடம் ஏதாவது பேச விரும்புகிறீர்களா என்று கேட்டேனே?”
“ஆமாம், சின்னய்யா!”
கண்களில் மறுப்பைக் காட்டியபடி, “எதற்கு இந்தச் சின்னய்யா வெல்லாம்? எத்தனையோ தடவை என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடும்படி உங்களிடம் சொல்லியிருக்கிறேன் அல்லவா! ஓர் அப்பா தன் மகனை எங்கேயாவது சின்னய்யா என்று அழைப்பாரா?”
“ஏன் அழைக்கக் கூடாது? ஓர் அப்பாவுக்கு மிகவும் வயதாகிப் போகும் போது, அவர் மகன் தானே குடும்பத்தில் எசமானன் ஆகிறான்? இல்லையா?”
“நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். இனி என்னைச் சின்னய்யா என்று நீங்கள் அழைத்தால் எனக்குக் கெட்ட கோபம் வரும்…”
“சரி, சரி…. விஷயத்துக்கு வருகிறேன். நேற்று நான் இங்கு திரும்பி வருவதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது அங்கே இரண்டு இளம் பெண்கள் இருந்தார்கள். அவர்களின் பேச்சில் கிஷன் தாஸ், பிரகாஷ் எனும் பெயர்கள் அடிபட்டது என் காதில் விழுந்ததும் நான் உஷாரானேன். உங்களால் சாட்டப்படும் குற்றத்தை – அதாவது ஒற்றுக் கேட்பதை – நான் செய்தேன்தான்!”
பிரகாஷ் தன் மடியில் இருந்த நோட்டுப் புத்தகத்தை அப்பால் வைத்துவிட்டு முதுகை நிமிர்த்திக்கொள்ளுகிறான்: “அப்படியா! யார் அந்தப் பெண்கள்? அவர்களின் பெயர்களைத் தெரிந்துகொள்ள வாய்த்ததா? என்ன பேசிக்கொண்டார்கள்? அவர்கள் பேச்சில் அடிபட்டது அப்பாவும் நானும் என்று தெரிந்துகொண்டதால்தான் நீங்கள் என்னிடம் அவர்களைப் பற்றிப் பேச நினைக்கிறீர்கள். சரிதானே?”
“முழுக்க முழுக்கச் சரி, சின்னய்யா!….சாரி… பிரகாஷ்! ஒருத்தியின் பெயர் சுமதி. மற்றொருத்தியின் பெயர் சுந்தரி…”
“என்னது! சுமதியும் சுந்தரியுமா! என்ன பேசிக்கொண்டார்கள் இருவரும்? உங்களால் கேட்க முடிந்ததா?”
“ஓ! தெளிவாகவே என் காதில் விழுந்தது. நேற்று அவர்கள் இருவரும் இங்கே வந்திருந்தார்களாம்!”
“இங்கே என்றால்? நம் வீட்டுக்கா!” என்று பிரகாஷ் ஆவலில் விழிகள் விரிய வினவுகிறான்.
“ஆமாம், பிரகாஷ்! நேற்று ஞாயிற்றுக்கிழமை யாதலால், நம் வீட்டுக்குக் காவலாளி இல்லை. நம் வீட்டு நுழைவாயில் கதவு வரை இருவரும் வந்திருக்கிறார்கள். அப்போது நீங்களும் அப்பாவும் இரைந்த குரலில் சண்டை போட்டுக்கொண்டிருந்தது அவர்கள் காதுகளில் விழுந்திருக்கிறது. நானும் இல்லை, அன்று வேலைக்காரர்களுக்கும் விடுமுறை யாதலால் யாரும் இருக்கவில்லை. எனவே உங்கள் வாக்குவாதம் முடிந்த பிறகு அழைப்பு மணியை அழுத்த நினைத்து வெளியே தோட்டத்தில் உள்ள சிமெண்ட் பெஞ்சியில் உட்கார்ந்திருக்கிறார்கள். அது கூடத்து ஜன்னலுக்குக் கீழே வெளியில் இருந்ததால் உங்கள் வாக்குவாதம் முடிவதற்குக் காத்திருந்திருக்கிறார்கள். ஆனால் பின்னர் இருவரும் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள் என்று தோன்றுகிறது. அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து நான் இப்படி ஊகிக்கிறேன். இப்போது நான் சொன்னது அவர்கள் பேச்சின் சுருக்கமான சாரம். இருவரும் பேசிக்கொண்டது உங்களையும் அப்பாவையும் பற்றித்தான் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமே இல்லை! அவர்கள் யார்?”
சிந்தனை தேங்கும் முகத்துடன், “அவர்களில் சுமதிதான் நான் மணக்கப் போகும் பெண். இன்னொருத்தி அவளுடைய நெருங்கிய தோழி. … அவர்கள் பேச்சில் முக்கியமான வேறு ஏதேனும் விஷயம் இருந்ததா? எதுவாக இருந்தாலும், தயங்காமல் சொல்லுங்கள், நகுல்!”
“கட்டாயம்! சொல்லுவதாய்த்தான் இருக்கிறேன். நான் ஏன் எதையும் மறைக்க வேண்டும், சின்னய்யா – சாரி – பிரகாஷ்? … நேற்று இருவரும் இங்கு வந்திருந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் கல்யாணத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தீர்கள் என்று ஊகித்தேன்.”
“உங்கள் ஊகம் சரிதான், நகுல்.”
“நீங்கள் பேசிக்கொண்டது முழுவதையும் இருவரும் கேட்டிருந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது…”
“கடவுளுக்கு நன்றி! சுமதியின் மேல் நான் வைத்துள்ள அன்பு உண்மையானது என்பது அதன் பின் அவளுக்குப் புரிந்திருக்கும்!”
“ஆமாம். அது பற்றியும் இருவரும் பேசினார்கள்தான்! உங்களைப் புரிந்துகொண்ட சுமதிக்கு அதில் மிகவும் மகிழ்ச்சி. அந்த மற்றொரு பெண் சுமதியின் கையைப் பிடித்துக் குலுக்கோ குலுக்கென்று குலுக்கித் தள்ளிவிட்டாள். அப்பாவின் சொத்தில் ஒரு காசு கூட வேண்டாம் என்றும் அவளை மணப்பதற்காக எந்தத் தியாகத்துக்கும் தான் தயார் என்றும் சொன்ன பிரகாஷைக் கணவனாய் அடைய அவள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் அவள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள். …”
நகுல் சொன்னதைக் கேட்டதும் பிரகாஷின் முகம் மலர்கிறது.
“ஆனால் அவர்கள் அப்பாவைத் திட்டித் தீர்த்திருப்பார்களே!”
“இல்லை. ஆனால் அவரைப் பற்றி விமர்சித்து இருவரும் விலாப்புடைக்கச் சிரித்தார்கள். சுந்தரி, ‘அந்தக் கிஷன் தாஸ் பெரிய நடிகர்தான். அவர் நடிகனாகி யிருந்தால் ஒரு சிவாஜி கணேசனாகவோ, அமிதாப் பச்சனாகவோ வந்திருப்பார்!’ என்று கூறிச் சிரித்தாள்.”
அதற்கு முன்னால் புரியாமல் இருந்த ஒன்றைச் சட்டென்று இப்போது புரிந்துகொண்டுவிட்ட உணர்வுடன் தலையைச் சில முறைகள் மேலும் கீழுமாக ஆட்டிய பின், பிரகாஷ், “ஓ! அது தான் விஷயமா! இப்போது புரிகிறது. இப்போதுதான் புரிகிறது!” என்கிறான்.
திகைக்கும் நகுல், “என்ன புரிகிறது, பிரகாஷ்!” என்று ஆவலுடன் கேட்கிறார்.
“எல்லாவற்றையும் பிறகு உங்களுக்குச் சொல்லுகிறேன், நகுல்! என் இரண்டாம் தகப்பனாகிய உங்களிடமிருந்து நான் எதையும் மறைக்க மாட்டேன்! இன்னும் ஏதேனும் முக்கியமான விஷயம் இருந்தால், அதையும் சொல்லுங்கள்!”
“வேறு ஒன்றுமில்லை…. அதன் பின் வந்த பேருந்தில் நாங்கள் மூவருமே ஏறிக்கொண்டோம். இருவரும் முதலில் இறங்கிக் கொண்டார்கள். அருகில் இருந்த அசோகா ஓட்டலுக்குள் இருவரும் நுழைந்ததை நான் பார்த்தேன்… அந்த ஓட்டலில் அறை எடுத்து இருவரும் தங்கி யிருக்கிறார்களோ என்னவோ!… நான் சற்றுப் பொறுத்து எனது இலக்கு வந்ததும் இறங்கிக்கொண்டேன்.”
“உங்கள் ஊகம் சரிதான். இருவரும் தில்லிக்கு ஏதோ அலுவல் நிமித்தம் வந்திருக்கிறார்கள். அப்படியே இங்கும் திடீரென்று வந்து நம்மை வியப்பில் ஆழ்த்த நினைத்திருந்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இருவரும் செய்துகொண்டிருந்த வாக்குவாதத்தைக் கேட்டதும் மகிழ்ச்சியற்ற மனநிலையில் திரும்பிப் போய்விட்டிருக்கிறார்கள். நகுல்! தொலைபேசி வழிகாட்டிப் புத்தகத்தைக் கொஞ்சம் எடுத்து வருகிறீர்களா?”
நகுல் எழுந்து சென்று அதை எடுத்து வந்து பிரகாஷிடம் தருகிறார். பிரகாஷ் அதைப் புரட்டி அசோகா ஓட்டலின் இலக்கம் பார்த்து அத்துடன் உடனே தொடர்பு கொள்ளுகிறான்.
“வணக்கம்! உங்கள் ஓட்டலில் சுமதி சுந்தரி எனும் இரண்டு பெண்கள் தங்கி யிருக்கிறார்கள் அல்லவா?…. என்னது! அவர்கள் இன்று காலையில் கிளம்பிப் போய்விட்டார்களா! … ஜெய்ப்பூருக்கா?… மிகவும் நனறி….” என்ற பின் பிரகாஷ், “நகுல்! இன்று பிற்பகல் இரண்டு பெண்களும் இங்கே வந்து ஒரு மணி நேரம் இருந்துவிட்டுப் புறப்பட்டுப் போனதாய் நான் அப்பாவிடம் ஒரு பொய் சொல்லப் போகிறேன். அப்பா கேட்டால் நீங்களும் ஆமாம் என்று கூறி என்னோடு ஒத்துழைக்க வேண்டும்….” என்று நகுலிடம் வேண்டுகிறான்.
“ஓ! கண்டிப்பாய்ச் சொல்லுகிறேன், உங்களுக்காக ஒரு சின்ன பொய் சொல்லமாட்டேனா என்ன?”
இவ்வாறு சொல்லிவிட்டு நகுல் தன் வேலையைக் கவனிக்கச் சமையல் அறைக்குப் போகிறார். தன் எம்.பி.ஏ. நோட்டுப் புத்தகத்தை எடுத்து மடியில் வைத்துக்கொள்ளும் பிரகாஷ் படிப்பு ஓடாமையால் சிந்தனையில் ஆழ்கிறான்.
அதே நாள் இரவு பத்து மணிக்குக் கிஷன் தாஸ் வீடு திரும்புகிறார். சோபாவில் களைப்புடன் பொத்தென்று சரிகிறார். பிரகாஷ் தான் பார்த்துக்கொண்டிருக்கும் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு அவருக்கு முன்னால் உள்ள மற்றொரு சோபாவில் புன்னகையற்ற முகத்துடன் உட்கார்ந்துகொள்ளுகிறான்.
“நீங்கள் இருவரும் சாப்பிட்டு விட்டீர்கள்தானே?” என்று வினவும் கிஷன் தாசைப் புன்னகையற்று நோக்கும் பிரகாஷ், “அதுதான் சொல்லிவிட்டீர்களே உங்களுக்கு ஏதோ விருந்து இருப்பதாகவும் நாங்கள் சாப்பிட்டுக்கொள்ளுமாறும்? அதனால் எட்டுமணிக்கெல்லாம் சாப்பிட்டு விட்டோம்… கூட்டம் நன்றாய் நடந்ததல்லவா?”
“உம். வழக்கம் போல!” என்று சொல்லிவிட்டுக் காலுறைகளைக் கழற்றும் கிஷன் தாஸ், “ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? என்ன விஷயம்?” என்று வினவுகிறார்.
“சுமதி இன்று மதியம் பன்னிரண்டரை மணிவாக்கில் தன் தோழி சுந்தரியுடன் இங்கு வந்திருந்தாள். கொஞ்ச நேரம் இருந்தார்கள். நான் சாப்பிடச் சொன்னேன். மறுத்துவிட்டுப் போய்விட்டார்கள். அசோகா ஓட்டலில் தங்கி யிருக்கிறார்களாம்!”
வியப்புடன், “சுமதியா வந்திருந்தாள்? இங்கே தில்லிக்கா வந்திருக்கிறாள்?” என்று கிஷன் தாஸ் விழிகள் விரிய வினவுகிறார்.
“தெரியாதது போல் கேளுங்கள்!” என்று பிரகாஷ் வெடுக்கென்று பதிலளிக்கிறான்.
கணம் போல் விழிகளைத் தாழ்த்திப் பின் உயர்த்திக்கொள்ளும் கிஷன் தாஸ், “அவர்கள் தில்லிக்கு வந்திருப்பது எனக்கு எப்படித் தெரியும்? நான் அண்மையில் அசோகா ஓட்டலுக்கும் போகவே இல்லையே!” என்கிறார்.
இரைந்து கசப்புடன் சிரிக்கும் பிரகாஷ், “ஆனால் தோட்டத்துப் பெஞ்சியில் நேற்று அவள் சுந்தரியுடன் உட்கார்ந்திருந்த போது நீங்கள் பார்த்தீர்களே!” என்கிறான் கிண்டலாக.
நாக்கைப் புரட்ட முடியாத அளவுக்குக் கிஷன் தாசுக்கு வாயடைத்துப் போகிறது. முகம் சிவந்து விடுகிறது. அவரது தொண்டைக் குமிழ் மேலும் கீழும் ஏறி இறங்குகிறது.
இருப்பினும் சமாளித்துக்கொண்டு, “என்ன இது உளறுகிறாய்! நம் வீட்டுத் தோட்டத்தில் நான் அவர்களைப் பார்த்தேனா!” என்கிறார்.
இரைந்து சிரிக்கும் பிரகாஷ், “நான் ‘தோட்டத்தில்’ என்று மட்டும்தானே சொன்னேன்? அசோகா ஓட்டலின் தோட்டத்தில் என்று சொல்லவில்லை! ஆனால் நீங்களோ ‘நம் வீட்டுத் தோட்டத்தில்’ என்று உண்மையை உளறிவிட்டீர்கள்! அப்பா! ஏன் இப்படிப் பொ…. வேண்டாம்! அந்த வார்த்தையை நான் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்….” என்கிறான்.
இதற்குள் தம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் கிஷன் தாஸ், “நான் ஒரு பொய்யன் என்று சொல்ல வந்தாய்! அதுதானே? இருக்கட்டுமே! நான் அவளைப் பார்த்திருந்தால்தான் என்னவாம்?” என்று ஆத்திரத்துடன் வினவுகிறார்.
“ஆக, நீங்கள் அவளைப் பார்த்தீர்கள்!”
“நான் இல்லை என்று சொன்னாலும் நீ என்னை நம்பப் போகிறாயா என்ன!” என்று கிஷன் தாஸ் குரலை உயர்த்திக் கூவுகிறார்.
”குரலை உயர்த்திக் கத்தினால் பொய் உண்மையாகி விடாது. ஜன்னலருகே சென்ற நீங்கள் அவளைக் கவனித்தவுடன் உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு நாடகம் போட்டீர்கள் என்பதை அவள் ஊகித்துவிட்டாள். தன்னைப் பார்த்த பிறகுதான் அதற்கு முன் நீங்கள் பேசியதெல்லாம் எனக்கு நீங்கள் வைத்த பரீட்சை என்பதாய் நீங்கள் சொன்ன பொய்யைத் தான் புரிந்துகொண்டுவிட்டதாக அவள் சொன்னபோது அவமானத்தில் எனக்கு உயிரே போய்விட்டது….”
“உன் வருங்கால மனைவியை நம்புகிறாய்! ஆனால் உன் அப்பாவை நம்பவில்லை! அப்படித்தானே?”
“வருங்கால மனைவியா, அப்பாவா என்பதெல்லாம் நான் கேட்கிற கேள்வியோடு தொடர்பில்லாத விஷயம்! யார் பக்கம் உணமை இருக்கிறது, யார் பக்கம் பொய் இருக்கிறது என்பதே முக்கியம்!”
“சரி! நான் ஒரு பொய்யன் என்று ஏற்கெனவே சொல்லிவிட்டாய்! அதனால் என்ன? மகனின் நன்மைக்காக அவன் மீது அன்பு வைத்துள்ள ஒரு தகப்பன் எத்தனை பொய்கள் வேண்டுமானாலும் சொல்லுவான்!…”
“ஓ! உங்களது அந்தப் பொய் எந்த விதத்தில் என் நலனுக்கு உகந்தது என்பதை விளக்குங்கள்!” என்று பிரகாஷ் கிண்டலாய் வினவுகிறான்.
உரிய பதிலைச் சொல்ல இயலாமையால் கிஷன் தாஸின் தொண்டைக்குமிழ் மீண்டும் ஏறி இறங்குகிறது. சில கணங்கள் கழித்து, “பிரகாஷ்! ஒரு தகப்பன் தன் மகனுக்கு ஒரு போதும் கெடுதி செய்ய மாட்டான்! தன் முப்பதுகளில் மனைவியை இழந்து மகனின் நலனுக்காக மறுமணம் செய்துகொள்ளாத ஒரு தகப்பன் மீது நீ சேற்றை வாரி இறைக்கிறாய்!” என்கிறார். அவரது குரல் தழுதழுக்கிறது.
எரிச்சலுறும் பிரகாஷ், “இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் இதே பல்லவியை நீங்கள் பாடிக்கொண்டிருக்கப் போகிறீர்களோ, தெரியவில்லை! கேட்டுக் கேட்டு எனக்குக் காது புளித்துப் போய்விட்டது. இனிமேலும் அதைப் பாடினால் அது மதிப்பிழந்து போகும்!… அப்பா! நான் இப்படிச் சொல்லுவது கேட்டு மனம் புண்படாதீர்கள்!’ என்கிறான்.
“சரி, பிரகாஷ்! பல்லவி என்று சொல்லிவிட்டாய்! இனி அதை நான் சொன்னால் என்னை நாய் என்றோ, கழுதை என்றோ, முட்டாள் என்றோ சொல்லு!” என்று குரல் அடைக்கக் கோபத்துடன் கூறிய பின் கிஷன் தாஸ் விருட்டென்று எழுந்து தமது படுக்கை அறைக்குப் போகிறார். பிரகாஷும் அவரை முறைத்துப் பார்த்த பின் தன் படுக்கை அறைக்குள் நுழைகிறான்.

jothigirija@live.com

Series Navigationஎருமைப் பத்து
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *