சந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம்

This entry is part 18 of 42 in the series 22 மே 2011


வசந்தகாலம் துவங்கியதால் சாலையின் இருபுறமும் பசுமை துளிர்க்க ஆரம்பித்து விட்டது.அமெரிக்க கிராமபுற சாலையொன்றில் தனியாக என் காரில் ஊர்ந்து கொண்டிருந்தேன்.கேரிகன் பிரதர்ஸ் வைனரி 1 மைல் என்ற போர்டு என்னை வரவேற்றது.வைனரியை நெருங்கினேன்.காரிகன் பிரதர்ஸின் உருவம் தாங்கிய பெரிய விளம்பரம் வெளியே என்னை வரவேற்றது.

சாதா விவசாயிகள்…குடும்ப தொழிலாக விவசாயம் செய்து மது விற்கிறார்கள்.சர்வசாதாரணமாக விளம்பரம் செய்கிறார்கள்.எந்த பிரச்சனையுமின்றி தொழிலில் ஈடுபடுகிறார்கள்.அமெரிக்க அரசு மதுவிற்பனையை தேசியமயமாக்கவில்லை.மது விற்க மந்திரியின் கையை காலை பிடித்து லைசென்ஸ் வாங்க வேண்டியதில்லை.மதுக்கடை  ஏலத்துக்கு கட்டு கட்டா பணத்தை பெட்டியில் வெச்சுட்டு ஏலத்துக்கு சிண்டிகேட் போட்டு அலையவேண்டியதில்லை…சாராய பிசினஸ் செய்ய ரவுடிகளும், குண்டர்களும் வேண்டியதில்லை.

காரிகன் பிரதர்சை மாபியா பிரதர்ஸ் ஆக்காத சுதந்திர பொருளாதாரத்துக்கு என் நன்றியை செலுத்தினேன். சோஷலிச பொருளாதாரத்தால் கிரிமினல் ஆன சந்தன கடத்தல் வீரப்பன் ஞாபகம் மனதில் எழுந்தது

சந்தனமரம் பண்டைய இந்தியாவில் மிக்க மதிப்புடைய பொருள்.கர்னாடகா, கேரளா, தமிழகம் ஆகிய வனபகுதிகளில் மட்டுமே விளைவது. திப்பு சுல்தான் காலத்தில் போர்களுக்கு நிதி வேண்டும் என்ற நோக்கில் சந்தனமர வளர்ப்பை தேசிய மயமாக்கினார்.1792ல் போடப்பட்ட இந்த சட்டம் அதன்பின்னர் வந்த கர்னாடகம், மெட்ராஸ் ராஜ்ஜியம் அரசுகளால் தொடர்ந்து பின்பற்றபட்டு இந்தியா சுதந்திரம் வாங்கி திப்புசுல்தான் ஆண்ட பகுதிகள் மூன்று மாநிலங்களாகி பிரிந்த பின்னரும் சட்டபுத்தகத்திலேயே இருந்து வந்தது.

நிர்மூடத்தனமான இந்த சட்டபடி சந்தன மரம் முழுக்க அரசுக்கே சொந்தம்.உங்கள் வீட்டில் சந்தன மரம் வளர்த்தாலும் அதை வெட்டினால் அது அரசுக்கே சொந்தம்.தண்ணி ஊற்றும் உரிமை மட்டும் தான் உங்களுக்கு.இப்படிப்பட்ட சோஷலிச சட்டத்தால் சந்தனமரத்தை தனியார் யாரும் வளர்ப்பதில்லை.வளர்த்தால் அரசுக்கு பதில் சொல்லி மாளாது.மரம் வளர்க்க, வைக்க,வெட்ட என அனைத்துக்கும் லைசென்ஸ்.

இப்படி சந்தனமர மதிப்பு சந்தைவிலைகுட்படாமல் அரசின் கட்டுபாட்டில் இருந்ததால் சந்தன மரம் நியாயமான வழியில் சந்தன தைல தொழிற்சாலைகளுக்கு கிடைப்பது குதிரை கொம்பு என்றானது. உங்களுக்கு சந்தன கட்டை வேண்டுமெனில் அரசுக்கு மனுபோட்டு அவர்கள் கோட்டாவில் உங்களுக்கு சந்தன மரத்தை ஒதுக்கும் வரை காத்திருக்க வேண்டும்.அல்லது சந்தனகடத்தல் காரர்களிடம் சந்தனமரத்தை வாங்கவேண்டும்.

காட்டில் இயற்கையாக விளையும் சந்தனமரத்தை வெட்டினால் அரசு வன இலாகா அதிகாரிகள் பிடித்து தண்டிப்பார்கள்.இப்படி விதிமுறைகள் இருந்ததால் வழக்கம் போல வன இலாகா அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சந்தனமரம் வாங்கி விற்பது அரசிடம் கோட்டா முறையில் சந்தன கட்டைகளை வாங்கி விற்பதை விட லாபகரமான தொழிலானது.இப்படிபட்ட சோஷலிச பொருளாதார முறையில் உருவான கள்ள சந்தையின் விளைவே வீரப்பன். அவன் செய்தது என்னவோ காட்டில் இயற்கையாக கிடைக்கும் மரத்தை வெட்டியது.அது சட்டபடி குற்றம் என்றானதால் அவன் க்ரிமினலானான்.அதன்பின் கொலைகள், கொள்ளை,கடத்தல் என அவன் கொடும் தீவிரவாதியாக மாறியது தனி கதை.

சந்தனமரத்தை சுதந்திர பொருளாதார அடிப்படையில் யார் வேண்டுமானால் உற்பத்தி செய்யலாம், வெட்டலாம், விற்கலாம் என அனுமதி இருந்திருந்தால் சந்தனவீரப்பன் போன்ற கிரிமினல்களே உருவாகாமல் தடுத்திருக்க முடியும் என்பது தான் வருத்தமான செய்தி.அடிப்படையில் சந்தன மரம் என்பது இய்றகையான ஒரு மரம். அதை மற்ற மரங்களை போல சுதந்திரமாக பயிர் செய்ய, வெட்ட, விற்க அனுமதி இருந்தால் இன்று சந்தன மர கடத்தல் இத்தனை லாபகரமான தொழிலாக மாறியிருக்காது

அரசு இப்படி லைசென்சிங் முறையை பின்பற்றும்போது பொருள்களுக்கு தட்டுபாடு ஏற்படுவதும், அதன் மூலமாக கடத்தல் லாபகரமான பிசினஸ் ஆவதும் உலகெங்கும் நாம் காண இயலும். அமெரிக்காவில் முன்பு மதுவிலக்கு அமுலில் இருந்தபோது அல்கஃபோன் போன்ற மாபியாக்கள் கள்ள சாராய பிசினஸில் இறங்கி கொள்ளை லாபம் பார்த்தனர்.மதுவிலக்கு ஒழிந்ததும் மாபியா ராஜ்ஜியம் உடனடியாக முடிவுக்கு வந்தது. இந்தியாவில் 1992க்கு முன்பு முன்பு தங்க கட்டுபாட்டு சட்டம் அமுலில் இருந்தது.இதன் விளைவாக 80களில் தங்க கடத்தல் மிகபெரும் லாபகரமான பிசினசாக இருந்தது.80களில் வந்த திரைப்படங்களை பார்த்தீர்கள் என்றால் அதில் கோல்ட்பிஸ்கட் கடத்தல் செய்யும் பல கடத்தல்காரர்களை பற்றிய படங்கள் இருக்கும்.1992ல் மன்மோகன் தங்கநகை கட்டுபாட்டு சட்டத்தை ஒழித்தவுடன் இன்று தங்க கடத்தல் பெருமளவு ஒழிந்துவிட்டது.

அரசு சந்தை பொருளாதாரத்தில் தலையிடுவதால் தான் பற்றாகுறை, கோட்டா, லஞ்ச ஊழல் ஆவது ஆகியவை நடக்கின்றன.அரசு நிர்வாகத்தில் இருக்கும் மின் உற்பத்தி, சந்தனமர பிசினஸ், ரேஷன் கடை, போக்குவரத்து போன்றவற்றை பாருங்கள்.அனைத்திலும் தட்டுபாடு, மக்கள் அவதிபடுவது, வாடிக்கையாளரை கிள்ளுகீரையாக நடத்துவது, கோட்டா முறை, ரேஷன் முறை ஆகியவையே காணப்படும்.

அரசின் சைஸ் குறைந்து இத்துறைகள் தனியார் மயம் ஆகாமல் தேசம் முன்னெற்றம் அடைவது என்பது வெறும் கனவாகவே இருக்க முடியும்.

 

Series Navigationஅரசியல் குருபெயர்ச்சிமுகபாவம்
author

செல்வன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *