சில மனிதர்கள்…

author
2
0 minutes, 4 seconds Read
This entry is part 40 of 43 in the series 29 மே 2011

லலிதா, அலுப்போடு கைப்பையை தூக்கி மேஜையில் போட்டு, “உஸ், அப்பாடா, என்ன வெயில்” எனச் சொன்னவாறு சேரில் அமர்ந்தாள். பக்கத்து இருக்கையிலிருந்து கல்பனா, “என்ன, போன வேலையெல்லாம் முடிச்சாச்சா?” எனக் கேட்டாள். “ம், பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டிட்டேன்! பர்மிஷன் நேரம் முடியறத்துக்குள்ள ஆஃபீஸ் வரணுமேன்னு ஆட்டோ பிடிச்சு ஓடி வந்தேன், யாராச்சும் என்னைத் தேடினாங்களா?” என வினவினாள்.

“ஆட்டோவில் எப்படி ஓடி வந்தே?” என்று கிண்டலடித்த கல்பனா, ‘மானேஜர் இன்னிக்கு ஒரு கல்யாணத்துக்கு போயிருக்கார், இன்னும் வரலை! ஸோ, இன்னிக்கு ஆஃபீஸே ரிலாக்ஸ் தான் இதுவரைக்கும்! இவ்ளோ பயப்படற நீ, உன் ஹஸ்பெண்டை விட்டு பணம் கட்டச் சொல்லியிருக்கலாமில்ல?’ என்றாள். “அவர் திடீர்னு ஆஃபீஸ் விஷயமா டூர் போயிருக்கார்” என்று அலுப்புடன் சொல்லிவிட்டு, “டீ வந்துட்டுப் போயாச்சா, தலைய வலிக்குது, வேலையை முடிக்கணும் வேற” என்றாள். கல்பனா அவள் முகத்தை ஊன்றிப் பார்த்துவிட்டு, “வெயில் மட்டும் இல்லை, வேறு ஏதோ பிரச்னை இருக்கு, என்ன சொல்லு.  உன் அம்மா, குழந்தைங்க உடம்புக்கு ஏதாச்சும்…” என்றாள். “அம்மா தாயே, அதெல்லாம் ஒண்ணுமில்ல, இப்போ வேலையைப் பார்ப்போம், லன்ச் ஹவர்ல சொல்றேன்” என்றாள் லலிதா.

மதியம் கல்பனாவும் லலிதாவும் அவரவர் டிஃபன்பாக்ஸைத் திறந்து, பகிர்ந்து சாப்பிட்டவாறே பேச ஆரம்பித்தனர். லலிதா கல்பனாவிடம், “நான் என் ஒண்ணு விட்ட அண்ணாவும் அவர் மனைவியும் என் வீட்டுக்குப் பக்கத்தில் தான் இருக்காங்கன்னு சொல்லியிருக்கேன் இல்லையா? அவர்கள் இருவருக்கும் எல்லார் வீட்டு விஷயங்களையும் விவரமாகக் கேட்டு வைத்துக் கொள்வது தான் முக்கிய பொழுதுபோக்கே!” என்று ஆரம்பித்தாள்.  கல்பனா, “ஆமாம், இருவரும் வயதானவர்கள், தங்கள் அனுபவத்திலிருந்து அட்வைஸ் சொன்னால் நல்லதுதானே!” என்றாள். லலிதாவோ, “அட்வைஸா, சொல்..வாங்களே; ஒரு பிரச்னையைச் சொன்னா, அது எப்படியெல்லாம் நமக்கு எதிரா நடக்கும்னு சொல்லுவாங்க.  மனசே டிஜக்ட் ஆயிடும்.  எதற்கும் உதவவும் மாட்டார்கள், இந்த ஸ்கூல் ஃபீஸ் கூட போன வருஷம் திருப்பதி போக வேண்டியிருந்ததால் அவர்களைக் கட்டச் சொன்னேன்-  தெரியாது என்று சொல்லிட்டாங்க! இது தவிர, ஒவ்வொரு விஷயத்தையும் என்னிடம், என் அம்மாவிடம், என் கணவரிடம், என் பசங்களிடம் என்று தனித்தனியாகக் கேட்கறாங்க – க்ராஸ் வெரிஃபிகேஷன் மாதிரி!  வேற வழியேயில்லாம், இப்போது எல்லா விஷயங்களையும் அது நல்லபடியா நடந்து முடிஞ்சவுடனே தான் நான் அவங்களிடம் சொல்றேன். ”

“இதுக்கும் நீ இன்னிக்கு முகம் வாடியிருப்பதற்கும் என்ன சம்பந்தம்?” என்று கல்பனா கேட்க, லலிதா சொல்லலானாள். ‘ “பசங்க ஸ்கூலில் இன்னிக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டும் நாள்னு ஆஃபீஸுக்கு பர்மிஷன் போட்டேனில்லையா, வழக்கமாக 9 மணிக்கெல்லாம் ஆஃபீஸ் கிளம்பும் நான், ஸ்கூல்-கவுண்டர் 9.30 மணிக்குத் தானேன்னு நெட்டில் மெயில் செக் செய்து கொண்டிருந்தேன்.”

“இதில் என்ன, மெயிலில் மோசமான தகவலா?” என்றாள் கல்பனா. லலிதா, “இல்லைம்மா, நான் பாட்டுக்கு சுவாரஸ்யமா நெட் பார்க்கும்போது அந்த அண்ணியிடமிருந்து ஃபோன். பொதுவாக இவர்கள் ரொம்பக் கேள்வி கேட்டுக் குடைவதால் என் குழந்தைகள் காலர் ஐடியில் இவர்கள் ஃபோன் நம்பரைப் பார்த்தால் எடுப்பதே கிடையாது – நான் தான் ஃபோனை எடுக்க வேண்டும். இந்த வழக்கத்தின்படி நான் ஃபோனை எடுத்து விட்டேன். அண்ணி என்னிடம். “லலிதாதான் பேசறியா, ஒண்ணுமில்ல, எங்களுக்கு, உன் அம்மாவுக்கு எல்லாம் தாயாதி ஒருத்தர் இறந்துட்டார்; அவர் இறந்து மூணு நாளாகிறது. இன்னிக்கு வியாழக்கிழமை, உன் அம்மா கோயிலுக்குப் போவாள். பத்து நாள் கோவிலுக்குப் போக வேண்டாம்னு சொல்லத் தான் ஃபோன் பண்ணினேன்’ என்றார். நான் அந்தத் தாயாதி யார் எனக் கேட்டேன். அவர் என் தாத்தாவின் சகோதரரின் பிள்ளையின் மருமகள் என்றும் பிள்ளை பெயர் தான் தெரியும் என்றும் இறந்த பெண்ணின் பெயரும் தெரியாது என்றும் சொன்னார். இவர்களுக்கு மூன்று நாட்கள் முன்பே விஷயம் தெரிந்திருந்தும் ஃபோன் செய்ததின் நோக்கம் என் அம்மா கோயிலுக்குப் போகக் கூடாது என்பது எனக்குப் புரிஞ்சது. நான் விடாமல், ‘என் அம்மாவிற்கு இவர்களைத் தெரியுமா’ என்று கேட்டேன். தெரிய வாய்ப்பில்லை என்று சுற்றி வளைத்துச் சொன்ன பதிலில் தெரிந்து கொண்டேன். ஃபோனை வைத்தவுடன் மறுபடி அழைத்தார்; “ஆமா, நீ ஏன் ஆஃபீஸ் போகலை? அண்ணா கேட்கச் சொன்னார்” என்றார். “லேட்டாகப் போகிறேன்” என்று சொல்லி வைத்து விட்டேன்’ என்று நீளமாகச் சொல்லி முடித்தாள்.

“இதில் உன் பிரச்னை என்ன?” என்று கல்பனா கேட்டாள். “உனக்கே தெரியும், ஆர்த்ரைடிஸ் வந்த என் அம்மா வெளியில் போவதே வாரம் ஒருமுறை கோயிலுக்குத் தான். அந்த இறப்புச் செய்தியை முன்பே சொல்லியிருக்கலாம். அம்மா வழக்கமாக கோயிலுக்குக் கிளம்பும் நேரம் தெரிந்து, நான் ஆஃபீஸ் போன பிறகு தான் என் அம்மாவிடம் சொல்லணும்னு மெனக்கெட்டு ஃபோன் பண்றாங்க பார், அது தான் தாங்க முடியலை” என்றாள் லலிதா.

“உன் அம்மா என்ன சொன்னார்?” என்றாள் கல்பனா. லலிதா, “அம்மா என் குழந்தைகளுடன் கோயிலுக்குப் போகக் கிளம்பிக் கொண்டிருந்தார்; அம்மாவிடம் பூரா விஷயத்தையும் சொன்னேன். இறந்தவர், அவர் குடும்பத்தவர்- யாரென்றே தெரியாது என அம்மாவும் சொன்னார். அம்மாவைக் கோயிலுக்குப் போகச் சொல்லிவிட்டு நான் கிளம்பி விட்டேன். ஸ்கூல் வேலை முடிந்தபின் ஆட்டோவில் வரும்போது ஃபோன் பண்ணினேன். கோவிலுக்குப் போகவில்லையாம்” என்று சொல்லி முடிக்கும் போது லலிதா கண்கள் கலங்கியிருந்தன. கல்பனா, “விடு, அந்த அண்ணா, அண்ணியைப் பற்றித் தெரிந்து கொண்டே ஏன் வருத்தப்படறே?  சில மனிதர்கள் இப்படித் தான்… எல்லாரும் ஒரே மாதிரி இருந்தா, வாழ்க்கையில் உப்புசப்பே இருக்காது,  நீ கொண்டு வந்த உப்புமா மாதிரி!” என்று தோழியை புன்முறுவலிக்க வைத்தாள்!

 

 

Series Navigationவழக்குரை மன்றம்’ரிஷி’யின் கவிதைகள்:
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    middleclassmadhavi says:

    கதையைப் பிரசுரித்தமைக்கு திண்ணைக்கு நன்றி!

    கமெண்டுக்கு கார்த்திக்குக்கு நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *