எண்பதுகளின் இறுதியில் அலுவலக வேலையாக மாதத்துக்கு ஒருமுறையாவது அல்லது இரண்டுமுறையாவது கர்நாடகத்திலிருந்து சென்னைக்கு வந்துவிடுவேன். சென்னையில் எங்கள் தலைமை அலுவலகம் இருந்தது. பெரிய அளவில் கேபிள் சேமிப்புக்கிடங்கும் சென்னையில்தான் இருந்தது. நாங்கள் வேலை செய்யும் இடத்துக்கு கேபிள் உருளைகளை சென்னையிலிருந்துதான் சரக்குந்துகளில் ஏற்றி அனுப்புவார்கள். தமிழ் தெரிந்தவன் என்கிற காரணத்தை முன்னிட்டு இந்தப் பயணவாய்ப்பு எனக்குத் தரப்படும். அலுவலக வேலையை முடித்தபிறகு கிடைக்கிற குறைந்தபட்ச கால அவாகாசத்தை நண்பர்களைப் பார்த்து உரையாடவும் புத்தகக்கடைகளுக்குச் செல்லவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்னும் ஆசையால் உந்தப்பட்டு நானும் அந்த ஏற்பாட்டுக்கு உடன்படுவேன். சென்னைக்கு வரும் ஒவ்வொருமுறையும் திருவல்லிக்கேணியில் முருகேச நாயக்கர் மேன்ஷனில் வசித்துவந்த நண்பர்கள் பாலச்சந்திரன், பாலசுப்பிரமணியன் இருவருடன் தங்கிக்கொள்வேன். அப்போது பாலச்சந்திரன் இந்து நாளேடு அலுவலகத்திலும். பாலசுப்பிரமணியன் ஆந்திரவங்கியிலும் வேலை பார்த்துவந்தார்கள். வேலைகளையெல்லாம் விரைவில் முடித்துவிட்டுத் திரும்பிவந்த ஒரு நாள் மாலையில் ”சின்னக்குத்தூசியைப் பார்த்துவிட்டு வரலாமா?” என்று அழைத்தார் பாலச்சந்திரன். அக்கணம்வரை நான் அந்தப் பெயரைக் கேள்விப்பட்டதில்லை. அந்தப் பெயரின் வசீகரம் என் ஆவலைத் தூண்டியது. பெரியார் நடத்திவந்த குடி அரசு இதழில் ஆணித்தரமான சொற்களால் கச்சிதமான வாதங்களோடு பல கட்டுரைகளைத் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் எழுதிவந்தவர் குத்தூசி குருசாமி.. அவரைத் தன் குருவாக வரித்துக்கொண்டவர் தனக்குத்தானே சின்னக்குத்தூசி என்று புனைபெயர் சூட்டிக்கொண்டதாக பாலச்சந்திரன் சொன்னார்.
முருகேச நாயக்கர் மேன்ஷனிலிருந்து நடக்கிற தொலைவில்தான் இருந்தது அவர் அறை. அதுவும் ஒரு மேன்ஷன் அறைதான். அந்த மேன்ஷன் வாசலில் ஒரு பெட்டிக்கடை இருந்தது. வெற்றிலை, பாக்கு, வாழைப்பழங்கள், பீடி, சிகரெட் மற்றும் சில தின்பண்டங்கள் மட்டும் விற்கிப் சின்னக்கடை அது. படியேறும்போது பாலச்சந்திரன் அந்தக் கடைக்குள் உட்கார்ந்திருப்பவரை நன்றாகப் பார்த்துக்கொள்ளுமாறும் திரும்பும்போது அவரைப்பற்றிச் சொல்வதாகவும் அடங்கிய குரலில் சொன்னார். அதைச் சொல்லி முடிப்பதற்குள் நாங்கள் சின்னக்குத்தூசியின் அறை வாசலை அடைந்துவிட்டோம்.
செவ்வக வடிவத்தில் ஒரு சின்ன அறை. பின்பக்கத்திலோ, பக்கவாட்டிலோ சின்னதாக ஒரு ஜன்னல்கூட கிடையாது. கதவையொட்டி ஒரேஒரு ஜன்னல் இருந்தது. காற்றுக்கும் வெளிச்சத்துக்கும் இருந்த ஒரே ஆதாரம். வலது பக்கமும் இடது பக்கமும் இரண்டு ஒற்றைக்கட்டில்கள். ஒன்று அவர் படுத்துறங்க. இன்னொன்றில் பழைய நாளேடுகள், புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள் கட்டுக்கட்டாகக் கட்டப்பட்டு அடுக்கப்பட்டிருந்தன. இரண்டு கட்டில்களுக்கும் நடுவில் இரண்டு நாற்காலிகள். கட்டிலில் ஒருமுனையில் சுவரையொட்டி ஒரு நாற்காலி. மறுமுனையில் கதவையொட்டி இன்னொரு நாற்காலி. சுவரையொடிய நாற்காலியில் அவர் உட்கார்ந்திருந்தார். தும்பைப்பூ வண்ணத்தில் பளிச்சென மடிப்புக்குலையாத வேட்டி சட்டையோடு காணப்பட்டார். படிய வாரிய தலை. மீசையில்லாமல் நன்றாக மழிக்கப்பட்ட முகம். கருணை தெரியும் கண்கள். ஏதோ ஒரு திருமண வரவேற்புக்குக் கிளம்பி உட்கார்ந்திருப்பதுபோன்ற தோற்றம். எதிர் நாற்காலியிலும் கட்டிலிலும் நாலைந்து நண்பர்கள் அவரைச்சுற்றி உட்கார்ந்ததிருந்தார்கள். நாங்கள் உள்ளே நுழைவதைப் பார்த்ததும் இரண்டு நண்பர்கள் எழுந்து விடைபெற்றுச் சென்றார்கள். காலியான இடத்தில் நாங்கள் உட்கார்ந்துகொண்டோம்.
பாலச்சந்திரன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். நான் வணங்கினேன். ”தெரியுமே” என்று என்னைப் பார்த்துச் சிரித்தார். அவர் கண்கள் கட்டிலின்மீது அடுக்கப்பட்டிருந்த புத்தகக்குவியலில் எதையோ தேடியது. சட்டென்று ஒரு புத்தகத்தை உருவி தூசைத் தட்டிப் பிரித்தார். என் நாவல். சிதறல்கள். மெதுவாக எழுந்து வந்து என் கைகளை வாங்கி அழுத்திவிட்டு தோளைத் தட்டினார். ”நல்லா வந்திருக்குது. எனக்கு ரொம்பவும் புடிச்சிருக்குது” புன்னகையோடு சொன்ன அவர் முகத்தையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ”பாலச்சந்திரந்தான் படிங்க சார்னு கொண்டுவந்து கொடுத்தாரு” சொல்லிக்கொண்டே நாற்காலியைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தார். புத்தகத்தின் பல இடங்களில் அவர் அடையாளத் தாள் நறுக்கு வைத்திருந்தார். ஒவ்வொன்றாக எடுத்து ஒருகணம் பார்த்துவிட்டு நாவலின் அப்பகுதியைப் பற்றி விரிவாகப் பேசினார். மகிழ்ச்சி ஒருபுறம், கூச்சம் மறுபுறம் என நான் அவரையே வைத்தகண் வாங்காமல் பார்த்தபடி இருந்தேன், சுற்றியிருந்த நண்பர்களில் பெரும்பாலானவர்கள் அரசியலில் ஆர்வம் மிகுந்தவர்கள். இலக்கியம் பேசுவதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சட்டென்று அந்த உரையாடலில் ஊடுருவி, அரசியலின் திசையில் பேச்சை நகர்த்திச் சென்றார்கள். நான் அவரையே பார்த்தபடி மெளனமாக அமர்ந்திருந்தேன். அன்றைய முரசொலி நாளேட்டில் அவர் எழுதிய ஒரு கட்டுரையை ஒட்டி அந்த விவாதம் நிகழ்ந்தது. சிறிது நேரத்துக்குள் இரண்டு புதியவர்கள் வந்தார்கள். உடனே நாங்கள் எழுந்து வெளியேறி அவர்களுக்கு இடம்தர வேண்டியதாயிற்று. ஒருவர் கிடக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம் என்று திருக்கோயிலூர் கோயிலைப்பற்றிச் சொல்லக்கூடிய சொற்களை அவரிடமிருந்து விடைபெற்று வெளியேறும்போது நினைத்துக்கொண்டேன்.
திரும்பி வரும்போது பாலச்சந்திரன் அவரைப்பற்றி மேலும் சில தகவல்களைச் சொன்னார். இளமைக்காலம் முதலாக சின்னக்குத்தூசிக்கு இருந்த திராவிடர் இயக்கத் தொடர்பு, அவருடைய எழுத்தாற்றல், நினைவாற்றல், முரசொலியில் கருணாநிதிக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் அரசியல் கட்டுரைகளை எழுதிய ஆற்றல், எந்தப் பெருமையும் தனக்குரியதாக எண்ணாமல் வேலையையே குறிக்கோளாக நினைத்து உழைக்கும் வேகம் என நெடுநேரம் சொல்லிக்கொண்டே இருந்தார். சட்டென்று பெட்டிக்கடை நினைவுக்கு வந்ததுமே, நான் அதைப்பற்றி பாலச்சந்திரனுக்கு நினைவூட்டினேன். சின்னக்குத்தூசிக்கு நண்பர்களே பெரிய சொத்து. தன் மரணம் ஒருவேளை தற்செயலாக நிகழுமென்றால், அவசரச் செலவுக்குப் பயன்படுத்திக்கொள்ளும்படி ஒரு தொகையை அக்கடைக்காரரிடம் கொடுத்திருக்கிறார். அப்போதே அவர் பல நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். உயர் ரத்த அழுத்தம் இருப்பதால் இரவு நேரத்தில் விரைவில் உணவை உட்கொண்டுவிட்டு மாத்திரை சாப்பிட வேண்டும் என்பது மருத்துவர் ஆணை. ஆனால் நண்பர்களின் உரையாடல் தவிர்க்க முடியாமல் ஒவ்வொரு நாளும் நீண்டுவிடுகிறது. எப்படிச் சொன்னாலும் தடுக்க முடியவில்லை என்று சொல்லி ஆதங்கப்பட்டார் பாலச்சந்திரன்.
அந்தக் கடைக்கார்ரைப்பற்றி பிறகு சொல்வதாகச் சொன்ன விஷயத்தை நினைவூட்டினேன். சொல்லலாமா, வேண்டாமா என்று சிறிது நேரம் தயங்கிய பிறகுதான் பாலச்சந்திரன் சொல்லத் தொடங்கினார். சின்னக்குத்தூசிக்கு உயர் ரத்த அழுத்தம் உண்டு. சர்க்கரை நோயும் உண்டு. உட்கார முடியாத அளவுக்கு மூலவியாதியும் உண்டு. தன் மரணம் எக்கணமும் நிகழலாம் என்று அவருக்குத் தோன்றியபடி இருக்கிறது. தன் இறுதிச்சடங்குக்கான செலவுக்காக அந்தக் கடைக்காரரிடம் கொஞ்சம் தொகையைக் கொடுத்து வைத்திருக்கிறார். தன் நட்பின் அடையாளமாக அக்கடமையை அவர் செய்ய வேண்டும் என்பது அவர் கோரிக்கை. கேட்கும்போது எனக்கும் ஒருகணம் நெகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள நட்பின் ஆழத்தையும் நம்பிக்கையையும் நினைத்து ஆச்சரியமாக இருந்தது. கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட நட்பு என்றார் பாலச்சந்திரன். அபூர்வமாக சிலருக்கு மட்டுமே அப்படிப்பட்ட நட்பு வாய்க்கும். அந்தச் செய்தியை உள்வாங்கிக்கொண்டு நான் அமைதியாகவே இருந்தேன்.
அடுத்த நாள் அதிகாலையில் மறுபடியும் அவரைப் பார்க்க இருவரும் சென்றோம். ஏறத்தாழ ஐந்தரை இருக்கும். அவர் குளித்து முடித்து வேலைக்குச் செல்லத் தயாராக இருந்தார். எங்களைப் பார்த்த்தும் புன்னகைத்தபடி வரவேற்றார். அரைமணி நேரத்துக்கும் மேலாக எங்களோடு பேசிக்கோண்டிருந்தார். நான் அவருடைய இளமைக்காலத்தைப் பற்றியும் புத்தக ஆர்வத்தைப்பற்றியும் அரசியல் ஆர்வத்தைப் பற்றியும் கேட்டேன். தன் அம்மாவைப்பற்றி நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார் அவர். வீடுகளில் வேலை செய்யப் போகும்போது அம்மாவோடு சென்று, அவர் திரும்பிவரும்வரையில் பொழுதுபோக்காகப் படிக்கத் தொடங்கி பிறகு அதுவே பழக்கமாகிவிட்டது என்றார். ஆசிரியர் பயிற்சிப் படிப்பு படித்தும்கூட ஆசிரியராகச் செல்லவில்லை. காங்கிரஸ் தொடர்பு, காமராஜரோடு தொடர்பு என வேறொரு உலகம் அவருக்காகக் காத்திருந்தது. பிறகு பெரியாரோடு பழகத்தொடங்கி, திராவிடர் கழகத்தோடு இயங்கி, திராவிடர் முன்னேறக்கழகத்தோடு இறுதியாக தன்னை இணைத்துக்கொண்டார். இயங்கியது அரசியல் தளமென்றாலும் இலக்கியவாசிப்பை ஒருபோதும் கைவிடவில்லை அவர். தனக்குப் பிடித்த எழுத்தாளராக அவர் தி.ஜானகிராமனைச் சொன்னார். அவருடைய எல்லா நாவல்களையும் அவர் படித்திருந்தார். தி.மு.க.வோடு இணைந்து செயல்பட்டாலும், அதன் தலைமைப்பொறுப்பில் உள்ளவர்களோடு நெருங்கிப் பழகுகிறவராக இருந்தாலும் ஒருபோதும் அவர் தனக்குரிய எல்லையை மீறியதில்லை. தனக்கென அவர் ஒன்றையும் அவர்களிடமிருந்து பெற்றதில்லை. தி.மு.க.வின்மீது அவருக்கும் விமர்சனம் இருந்தது. வெளியேறும் அளவுக்கு அது கடுமையானதல்ல என்றபோதும் அதன் செயல்பாட்டில் பெரிதும் நிராசை கொண்டவராகவே இருந்தார் அவர். மோகமுள் நாவலை அடுத்து அவர் சிங்காரம் நாவல்களைப்பற்றிப் பெருமையாகச் சொன்னார். சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதையை மிகவும் பிடித்த்து என்றார். நாவலாக இல்லாத, நினைவிலிருக்கும் ஒரு பழைய புத்தகத்தைப்பற்றிச் சொல்லுமாறு நான் கேட்டேன். அவர் அக்காலத்தில் வெளிவந்த பேர்ல் பப்ளிகேஷன் புத்தகங்கள் தன்னைப் பெரிதும் கவர்ந்தன என்றார். ”சர்வாதிகாரியும் சந்நியாசியும்” புத்தகத்தை மறக்கமுடியாது என்றார். அன்று நாங்கள் இரண்டு சுற்று காப்பி அருந்தினோம். வெயில் உறைப்பதற்கு முன்னால் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டால்தான் தனக்கு நல்லது என்று சொல்லி விடைபெற்றுச் சென்றார்.
அன்றுமுதல் சென்னைக்குச் செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் நான் அவரைப் பார்த்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டேன். பெரிதும் அந்த அதிகாலை வேளையில் தனிமையில் பேசுவதைத்தான் நான் விரும்பினேன். பாலச்சந்திரன் திருவல்லிக்கேணியிலிருந்து வேறொரு இடத்துக்குச் சென்றுவிட்டார். அவர் துணை கிடைப்பது அரிதாக இருந்தது. ஒரு கட்ட்த்தில் தனியாகவே சென்று சந்திக்கத் தொடங்கினேன். அவருடைய அறை கலகலப்பான அறை. எல்லாத்தரப்பு நிலைகளிலும் அவருக்கு நண்பர்கள் இருந்தார்கள். தி.மு.க.வை வேப்பங்காயாக நினைக்கிற காங்கிரஸ், அ.தி.மு.க. இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்கூட அவருக்கு நண்பர்களாக இருந்தார்கள். எந்த முன்முடிவும் இல்லாமல் எல்லாரையும் நேசிக்கக்கூடிய பண்பு அவரிடம் இருந்தது. அதுவே அவருக்கு நட்புகளைத் தேடித் தந்தது. அதிகாரத்துக்கு அருகில் இருந்தாலும்கூட அந்த அதிகாரத்தை முற்றிலும் விரும்பாதவராகவே அவர் இருந்தார். அவருடைய அரிய குணம் அது. அவருடைய அறையில்தான் நான் முதல்முறையாக பத்திரிகையாளரான மணாவைச் சந்தித்தேன். கவிஞர் சுகுமாரனையும் அவர் வழியாகவே சந்தித்தேன். அவரிடம் பகிர்ந்துகொள்ள எல்லோருக்கும் ஏதோ ஒரு விஷயம் இருந்தது. எல்லோருக்கும் எடுத்துச் சொல்ல அவருக்கும் விஷயம் இருந்தது.
எங்கள் நிர்வாகம் ஒரு கட்டத்தில் கர்நாடகத்துக்கான சரக்குக்கிடங்க்கை கர்நாடகத்திலேயே உருவாக்கவேண்டும் என்று திட்டமிட்டு குறுகிய காலத்திலேயே உருவாகிச் செயபடுத்தியது. அதன் காரணமாக என் சென்னைப்பயணங்கள் குறைந்துபோயின. ஆண்டுக்கு ஒருமுறைகூட அமைந்ததில்லை. அவரைப் பார்க்கும் தருணங்களும் குறைந்தன. முத்தாரத்திலும் நக்கீரன் இதழிலும் அவர் தொடர்ந்து எழுதிவந்தார். அவ்வப்போது அக்கட்டுரைகளைப்பற்றி நான் சின்னச்சின்னக் கடிதங்கள் அவருக்கு எழுதினேன். காலச்சுவடு இதழில் அவருடைய நேர்காணல் ஒன்று வந்திருந்தது. அதைக்குறித்தும் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு இதயம் தொடர்பான ஒரு பிரச்சனை வந்தது. அதையொட்டி மருத்துவம் வழங்கப்பட்டது. காற்றோட்டமே இல்லாத அவருடைய அறை உடனடியாக மாற்றப்பட வேண்டிய சூழ்நிலை உருவானது. அந்தத் தெருவிலேயே புதிதாக உருவாகியிருந்த இன்னொரு மேன்ஷனுக்கு அவர் குடிபுகுந்தார். நண்பர்கள் கட்டாயப்படுத்தி அந்த ஏற்பாட்டுக்கு அவரைச் சம்மதிக்கவைத்தார்கள். நண்பர் பாலச்சந்திரன் தொலைபேசியில் சொல்லித்தான் எல்லா விஷயங்களும் தெரிய வந்தன. எனக்கு அவரை உடனே பார்த்துப் பேச வேண்டும்போல இருந்தது. உடனே கிளம்பிச் சென்றேன். அந்த்த் தெருவின் அமைப்பே அப்போது மாறியிருந்தது. அந்தப் புதிய முகவரியை வெகுநேரம் தேடிய பிறகுதான் கண்டுபிடிக்கமுடிந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கச் சென்ற என்னிடம் அவர் சிறிதுநேரம் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்தார். சமீபத்தில் படித்த என் படைப்புகளைப்பற்றி நினைவிலிருந்து பேசினார். பேசி அவரை களைப்படைய வைக்கக்கூடாது என்பதால் விரைவிலேயே கிளம்பிவிட்டேன். முரசொலி பொறுப்பிலிருந்து முற்றிலும் அவர் விலகியிருந்த நேரம் அது. அவருடைய பற்றின் அளவு எனக்குத் தெரியும். அதனால் அந்த விலகல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பேச்சின் ஊடே விலகலுக்கான காரணம் கேட்டேன். கேட்டிருக்கக்கூடாதோ என்னமோ, வாய்வரை வந்ததை அடக்கத் தெரியாமல் கேட்டுவிட்டேன். காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் உறவு இருந்த நேரம் அது. நரசிம்மராவ் பிரதமராக இருந்த சமயம். அவரைப்பற்றியோ அல்லது அவருடைய மகனுடைய நடவடிக்கை பற்றியோ விமர்சனம் செய்து அவர் முரசொலியில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையின் சாரம் தில்லிக்கு மொழிபெயர்ப்பின் வழியாகத் தெரிவிக்கப்பட்டு, அதை தில்லி கருணாநிதியின் கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. அதைப் பார்த்து சீற்றம் கொண்ட கருணாநிதி சின்னக்குத்தூசியை நேரில் அழைத்து ”இது என்ன கட்டுரை? இப்படி எழுதலாமா? நான் கூட கட்டுரை எழுதுவேன், தெரியுமல்லவா?” என்று கேட்டிருக்கிறார். “தாராளமாக எழுதுங்கள். நான் எழுதினால் இப்படித்தான் எழுதுவேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார் சின்னக்குத்தூசி. அதற்குப் பிறகு அவர்களும் அழைக்கவில்லை. இவரும் செல்லவில்லை. அவருடைய தன்னம்பிக்கையும் தன்மான உணர்ச்சியும் அவர்மீதிருந்த மதிப்பை அதிகரிக்கவைத்தன.
இயக்கம் கைவிட்டாலும் அவருடைய நண்பர்கள் அவரை ஒருபோதும் கைவிடவில்லை. தன் குடும்ப உறுப்பினராக நினைத்து, கண்ணைப்போலக் காத்துவந்த நக்கீரன் கோபாலின் அன்பு மகத்தானது. இன்னும் பெயர் தெரியாத பல நண்பர்கள் அவ்ரோடு எப்போதும் இருந்தார்கள். மூன்று ஆண்டுகளுக்குமுன்னால் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்த சமயத்தில் ஒருமுறை அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். என் புதிய புத்தகமொன்றை அவருக்குத் தந்தேன். அப்போது வந்திருக்கக்கூடிய முக்கியமான புதிய புத்தகங்களைப்பற்றிக் கேட்டார். நான் சொன்னதைப் பெரிதும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டார்.
இரண்டு மாதங்களுக்கு முன்னால் சென்னைக்கு வந்த பிறகு அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். முதல் இரண்டு மூன்று வாரங்கள் வீடு கிடைப்பதற்கு பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல. அதனாலேயே நான் நினைத்ததைச் செயல்படுத்த முடியவில்லை. பாலச்சந்திரனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என் பிரச்சனைக்கு ஏதாவது ஆலோசனை சொல்லமுடியுமா என்று கேட்டேன். அவர் ”உடனடியாக சின்னக்குத்தூசியைச் சென்று பாருங்கள்” என்றார். ஆனால் அச்சமயம் அவர் அறையில் இல்லை என்றும் அடிக்கடி மருத்துவ உதவி தேவைப்படுவதால் அண்ணா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நிரந்தரமாக ஒரு அறையை ஏற்பாடு செய்து நண்பர்கள் தங்கவைத்திருக்கிறார்கள் என்றும் அங்கேயே சென்று சந்திக்கும்படியும் சொன்னார். யாராவது ஒரு வீட்டுத்தரகர் அவருக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும் என்றும் அவரிடம் நம்மைச் செலுத்தக்கூடும் என்றும் சொன்னார். எனக்கு என்னமோ அந்த ஆலோசனை சரியாகப் படவில்லை. மருத்துவரின் கண்காணிப்பில் உள்ள ஒருவரிடம் உதவி வேண்டி எப்படிச் செல்வது என்று நான்தான் கூச்சத்தால் தவிர்த்தேன். எப்படியாவது ஒரு வீட்டைப் பார்த்துக் குடியேறிய பிறகு ஓய்வாக ஒருமுறை சென்று அவரைச் சந்திக்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன். என்னைச் சந்தித்ததும் அவர் சொல்லவிருக்கும் வார்த்தைகளை நானாகவே கற்பனை செய்தபடி காலத்தைக் கழித்தேன்.
ஒருவழியாக வீடு கிடைத்துக் குடியேறினேன். ஆனாலும் ஒவ்வொரு வார இறுதியிலும் ஊரைப் பார்த்து ஓடுகிற பரபரப்பில் எனக்கு அவரைச் சந்திக்க நினைத்த ஓய்வு தினம் வாய்க்கவே இல்லை. அந்த வாய்ப்பே இனி ஒருபோதும் கிட்டாதபடி காலம் இப்போது அவரைத் தன்னோடு சேர்த்துக்கொண்டது. என் துரதிருஷ்டத்தை நினைத்து பெருமூச்சு விடுவதைத் தவிர என்னால் செய்யமுடிந்தது வேறொன்றுமில்லை.
சின்னக்குத்தூசியை நினைக்கும்தோறும் எனக்கு தாமரை இலையின் சித்திரம்தான் உடனடியாக மனத்தில் எழுகிறது. தடாகத்திலேயே மிதந்திருந்தாலும், தடாகத்தோடுதான் தன் வாழ்வு என்று வரையறுத்துக்கொண்டாலும் தண்ணீரோடு ஒட்டாமலேயே வாழ்ந்து மறைந்துவிடுகிறது தாமரை இலை. உடனிருந்தும் ஒட்டாத ஓர் உறவுக்கு என்ன பெயர் சொல்வது? அரை நூற்றாண்டுக்கும் மேலாக அதிகார இயக்கத்தோடு இணைந்திருந்தாலும் அதன் நிழல்கூட தன் மேல் படாமலேயே வாழ்ந்து மறைந்துவிட்டார் பெரியவர் சின்னக்குத்தூசி.
- கோமாளி ராஜாக்கள்
- மோனநிலை..:-
- பலூன்
- சொர்க்கவாசி
- பம்பரம்
- இவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12
- கலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்
- வழங்கப்பட்டிருக்கின்றதா?
- மிச்சம் !
- இருள் போர்வைகளின் முடிச்சுக்கள்
- தக திமி தா
- யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்
- ஒரு கொத்துப் புல்
- ராக்கெட் கூரியர்
- அடங்கிய எழுத்துக்கள்
- வட்டத்தில் புள்ளி
- வேரற்ற மரம்
- பிறப்பிடம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)
- ஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1 மே 20, 2011
- தொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்
- இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்
- “தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு
- ஏதுமற்றுக் கரைதல்
- போராட்டத்திலிறங்கும் இடம்பெயர்ந்த மக்கள்
- காஷ்மீர் பையன்
- பாதைகளை விழுங்கும் குழி
- பண்பாட்டு உரையாடல்
- பனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்
- தாமரை இலையும் சின்னக்குத்தூசியும்
- செக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்
- உறையூர் தேவதைகள்.
- காரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி
- குழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம்! (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)
- மீன்பிடி கொக்குகள்..
- செல்வி இனி திரும்பமாட்டாள்!
- வழக்குரை மன்றம்
- சில மனிதர்கள்…
- ’ரிஷி’யின் கவிதைகள்:
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)