ப.மதியழகன் கவிதைகள்

This entry is part 19 of 46 in the series 5 ஜூன் 2011

தொலைந்து போனவர்கள்

 

சொல்லி வைத்தாற் போல

மழை வந்தது

காகிதக் கப்பல்

இலக்கின்றி நகர்ந்தது

தேவதையின்

பக்கத்து வீட்டுக்காரருக்கு

கனவுகள் இலவசம்

ஞானம் தேடுபவர்கள்

ஏன் தாடி வளர்க்கிறார்கள்

வேட்டுச் சத்தத்தோடு

வழியனுப்ப வேண்டுமென்று

எந்த மனிதன் எழுதி வைத்தான்

உதிரும் இலைகள்

வெற்று வெளியில்

வார்க்கும் கவிதை

கடல் கானம் பாடியது

கரை அதைக் கேட்டுக்

கிறங்கியது

வானம் ஊஞ்சலாடியது

திருவிழாவில்

தொலைந்தவர்களெல்லாம்

அடுத்த திருவிழாவில்

அகப்படாமலா போய்விடுவார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பள்ளிப் பிராயம்

 

மதிய உணவருந்த

வெறுங் கால்களுடன்

தார் சாலையில்

ஓட்டமெடுப்போம்

பாடத்தை கவனிக்காமல்

எப்போது மணியடிக்கும்

என்று கடிகாரத்தை

பார்த்திருப்போம்

காசு கொண்டு வராதவர்களின்

வயிற்றுப் பசியை

புளிய மரம் தீர்த்து வைக்கும்

மரக்கட்டையை

மட்டையாக்கி

கிரிக்கெட் விளையாடுவோம்

குளத்து நீரை

கலங்கடித்து

குதித்து மகிழ்வோம்

வாத்தியாருக்கு

பட்டப் பெயர் வைத்து

அவர் வீட்டின் முன்பு

கத்துவோம்

டூரி்ங் டாக்கீஸ்

மணலில் அமர்ந்து கொண்டு

கதாநாயகி தோன்றும்

இடமெல்லாம்

கைதட்டுவோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

வாசல்

 

வைகறையில் கூவும் குயில்

தன் இணையைத் தேடியழும்

பூக்கள் வலை விரிக்கும்

வண்டுகள் தேன் குடிக்கும்

மலைமுகட்டில் பரிதி முளைக்கும்

ஒளியரசன் தேர் ஜெயிக்கும்

ககன வெளியில் முகில் அலையும்

தென்றல் வந்து தோள் தழுவும்

அந்தி மழை மண் நனைக்கும்

அடுக்களையில் பால் கொதிக்கும்

பறவையெல்லாம் கூடடையும்

இடுகாட்டில் பிணம் எரியும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

துளித் துளியாய்

 

நேற்றைய கனவில்

நீ வந்தாய்

மற்றவர்கள் பொறாமை கொள்ள

உச்சி முகர்ந்து சென்றாய்

உனது பாடலில்

இழையும் சோகம்

எதனால் தீர்ந்து போகும்

சத்தமில்லாமல் முத்தம்

கேட்டால்

பொய் கோபம் கொண்டு

முகம் திருப்பிக் கொள்கிறாய்

இருளடைந்த வாழ்க்கையில

ஒளிச்சுடராய் நீ வந்தாய்

சுவர்க்கத்துக்கு போகும்

பாதையில்

என்னை அழைத்துச் சென்றாய்

நீல வண்ணத்தில்

ஆடை அணிகிறாய்

பறக்க நினைத்ததும்

சிறகை விரிக்கிறாய்

கானம் பாடியே

மழையை அழைக்கிறாய்

பேய் மழையில்

தேகம் நனைக்கிறாய்

காதல் பாடத்தை

கற்றுக் கொடுக்கிறாய்

புரியாமல் விழிக்கும்போது

தலைகோதி விடுகிறாய்.

 

 

 

 

 

 

 

பரிசு

 

உன் பேரழகை

கண்ணாடி தான்

முதலில் காண்கிறதா

மென்பஞ்சுப் பாதங்களை

அலைகள் வந்து

தழுவுகிறதா

உனக்கு மட்டும் எப்படி

மேகம் குடை பிடிக்கிறது

கண்கள் வழியே

எப்படி இதயத்திற்குள்

நுழைய முடிகிறது உன்னால்

கனவில் கூட

முத்தத்தைத் தரவும் பெறவும்

ஏன் மறுக்கிறாய்

புத்தகத்திற்கு நடுவே வைத்த

புகைப்படம் தொலைந்து போக

நிழற்படத்தை தொலைத்ததற்காக

எனது நிழல் என்னை வெறுத்தது

சந்திரனே தேயும் போது

உனது முகம் மட்டும் எப்படி

பூரண நிலவாய்

எனது கவிதை வரிகளைவிட

அழகாய் இருக்கிறது

உன் குழந்தை முகம்

நீ பரிசாகத் தந்த

கைக்கடிகாரத்தை

நான் கழட்டுவதே இல்லை.

 

 

 

 

 

 

 

 

கைவண்ணம்

 

தேகச் சுடர் வழியே

தெரிகிறதா உள்ளொளி

ஊமை வெளியைப் பற்றி

ஏளனமாய் சிரிக்கிறது

பாஷைகள்

கரையோரம் இசைபாடி

யாசகம் கேட்கும்

அந்தக இளைஞன்

வீணையை உயிர்ப்பித்ததற்காக

நன்றி சொல்லும் கலைமகள்

காற்றலைகளில்

மிதந்து வரும் கானம் யாருடையது

அண்டப் பேரண்டப் பெருவெளியில்

உறங்குகிறான் ஒருவன்

படைத்த களைப்பு நீங்க

கனவு வழிப்பாதையில்

திசைகளற்றுப் போகும் கணத்தில்

ஒளிரும் மின்மினிப்பூச்சி

யாருமற்ற இரவில்

நிலவின் கிரணங்களைப்

பருகும் மரங்கள்

மறைப்பை அகற்றினர்

வெண்திரையில் ஓவியனின்

தூரிகை விளையாடியுள்ளதைக்

கண்டு மயங்கினர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

ப.மதியழகன்

 

Series Navigationஎனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கருசிற்சில
author

ப மதியழகன்

Similar Posts