(68) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 45 of 46 in the series 5 ஜூன் 2011


சுமார் ஆறு மாத காலம் இருக்கும். கிருஷ்ணமூர்த்தியின் குடும்பம் என் வீட்டில் தங்கியிருந்தது. குழந்தைகள் என்னிடம் மிகுந்த பாசத்துடன் ஒட்டிக்கொண்டிருந்தன. இப்போது அவர்கள் இல்லை. வீடு வெறிச்சோடிக்கிடந்தது. ஆனால் சுகமோ துக்கமோ இம்மாதிரியான மனச்சலனங்கள் அதிக நாட்கள் நீடிப்பதில்லை

 

.வீடு காலியானதும் நண்பர்கள் மறுபடியும் வந்து குழுமத் தொடங்கிவிட்டார்கள். தேவசகாயம் கூட தனக்கென ஒரு வீடு அரசு கொடுத்திருந்த போதிலும், “இது தாங்க நம்ம வீடு. அது வெறும் கெஸ்ட் ஹவுஸ் தான். அப்பப்ப யார் வேணும்னாலும் அங்கே போய் தங்கிக்கலாம். ஆனா இதுதானே பழகின இடம் என்றார். கொஞ்ச நாட்களில் அவர் ஊரிலிருந்து வேலு என்ற தன் நண்பரையும் அழைத்திருந்தார். அவரும் எங்களோடு தங்கினார். வேலுவுக்கு ஒரு வேலை பாத்துக் கொடுங்களேன் உங்க ஆபிஸில் என்று கேட்டார் தேவசகாயம். நான் என்ன யாருக்கும் வேலை தேடித்தரும் நிலையிலா இருந்தேன்?. இப்போது நான் வேறொரு ஆஃபீசுக்கு மாற்றப்பட்டிருந்தேன். வேறென்றால் எங்கோ தூரத்தில் அல்ல. அதே பெரிய கட்டிடத்தில் ஒரு சூப்பிரண்டெண்டிங் என்ஜினீயர் ஆஃபீஸில். தர்ம ராஜன் என்று பெயர் சூப்பிரண்டெண்டிங் என்ஜினியருக்கு. அவருக்கு உதவியாக ஜே ஆர் லாமெக் அவரும் ஒரு என்ஜினியர் தான். தர்மராஜன் ஹிராகுட் அணையோடு மின் உற்பத்திக்கும் உற்பத்தியான மின்சக்தியை வெளியே எடுத்துச்செல்ல ட்ரான்ஸ்மிஷன் வேலைகளுக்கும் பொறுப்பாவார். லாமெக் தமிழ் நாட்டின் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கிறித்துவர். நான் இந்த அலுவலகத்திற்கு பதவி உயர்வில் மாற்றப்பட்டிருந்தேன். பதவி உயர்வு என்றால், கீழ்நிலை குமாஸ்தா(LDC) விலிருந்து ஒரு படி உயர்ந்து மேல்நிலை குமாஸ்தா(UDC)வாகியிருந்தேன். அங்கு எனக்கு நல்ல பெயர்.” யாரையும் எதுவும் சந்தேகங்களோ, சொல்லிக்கொடு என்றோ கேட்பதில்லை. தானாகவே யோசித்து என்ன செய்யவேண்டும் என்று செய்து கொள்கிற ஆள். என்னை ஒரு தடவை கூட இந்த கேஸை எப்படி கையாள்வது என்று கேட்டதில்லை,” என்று எங்கள் சூப்பிரண்டெண்ட்ண்ட் பட்டாச்சார்யா மர்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.  இதனால் என் தலை கொஞ்சம் கூடவே நிமிர்ந்து உயர்ந்து விட்டதாகத் தோன்றியது. .

 

பட்டாச்சார்யா வங்காளி. கொஞ்சம் குள்ளமான மனிதர். அவருடைய பண்பும் மென்மையுமான பழகும் குணம் அவரவர் குணத்துக் கேற்ப ஒன்று மரியாதை உணர்வை வேண்டும். அல்லது வேறு சிலரை,, கேலி செய்யத் தூண்டும். எனக்கு அவரைப் பார்த்தால் மிகவும் பாவமாகவும் இருக்கும். இரக்கமும் தோன்றும். அதோடு மரியாதையும் கலந்து வரும். என்ன இருந்தாலும் அவர் எனக்கு மூத்த அதிகாரி. அவருடைய மனைவி அவரை விட ஏழு அல்லது எட்டு அங்குலம் உயரமானவள். நல்ல அழகி. நல்ல அழகி என்றால் எங்கள் இரண்டு காலனிகளிலும், மகாநதிக்கு அக்கரையிலிருந்த ஹிராகுட்டிலும் இக்கரையிலிருந்த புர்லாவிலும் அவள் போன்ற அழகி இன்னொருத்தி இல்லை. எங்கள் ஊர் க்ளியோபாட்ரா தான்.. அவர்கள் இருவரும் சேர்ந்து மாலையில் காலாற நடை போவது காலனியில் எல்லோரும் காண விரும்பிக் காத்திருக்கும் காட்சி. தனியாகத் தான் செல்வார்கள். குழந்தைகள் இல்லை. ஊரின் பொறாமைக்கு ஆளாகலாம். அதுவே பட்டாசார்யாவின் உயரைத்தை சில அங்குலங்கள் கூட்டி அவரை நிமிர்ந்து நடக்க வைக்கும். ஆனால் கேலிக்கு ஆளாவது பாவம். அதுவும் நடந்தது. ஒரு நாள் பட்டாசார்யா எங்களில் சிலரை தேனீர் அருந்த வீட்டுக்கு அழைத்திருந்தார். போயிருந்தோம். எங்களை வரவேற்பதில் அவ்வளவாக அந்த அம்மையார் அவ்வளவாக உற்சாகம் காட்டவில்லை. என்று தோன்றியது. நாங்கள் பாட்டாசார்யாவின் கீழ் வேலை செய்பவர்கள். எங்களை வரவேற்றார் பட்டாசார்யா. உட்கார வைத்தார். பேசிக்கொண்டிருந்தோம். தன் மனைவிக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார். அம்மையார் சற்றுக் கழித்து உள்ளே போனார். பின்னர் தான் தெரிந்தது தேனீரோடு அவர் திரும்பிய போது. எங்களுகெல்லாம் தேனீர் கொடுத்தார். ஆனால் தன் கணவருக்குக் கொடுக்கவில்லை. பட்டாசார்யாவுக்கு முகம் சுண்டியது. “கீ ஹொயேச்சு?, ஏக்ட்டு அமாகெ திபே நா கி?. அமார் சா கொதாய்?” (என்ன ஆச்சு?. எனக்கும் கொஞ்சம் டீ கொடுக்க மாட்டியா?} என்று கேட்டார் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு.  “நா துமி காபே நா. எக்கொனி துமி கேயெச்சு. கொத்தோ பார் சா காபே துமி (ஊஹூம் நீ சாப்பிடக் கூடாது. இப்போதானே சாப்ப்ட்டே. எத்தனை தடவை சாப்பிடுவே நீ” என்று அந்த அம்மையார் வெடுக்கென கடிந்து சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டார். நாங்கள் இருக்கும் போது கொஞ்சம் புன்னகையோடு மென்மையாகச் சொல்லியிருக்க்லாம் என்று தோன்றிற்று. எங்களில் யாருக்கும் வங்காளி தெரியாது என்றே பாவனை செய்தோம் வெளியில் எல்லோரும் சொல்வதன் நிருபணமோ அது என்று நினைத்தோம். “யார், பீபீ ஸே டர்தா பஹூத் ஹை யார்” (பொண்டாட்டி கிட்டே பயப்படுகிற ஆசாமி} என்பது அனேகமாக ஊர் வழக்கு. அது கேலிக்குப் பிறந்த கற்பனை அல்ல. நடப்பதைத் தான் சொல்கிறார்கள் என்று தெரிந்தது.

 

பட்டாசார்யா என்னேரமும் வெத்திலை போட்டுக் குதப்பிக் கொண்டே இருப்பார். அதோடு ஜர்தாவும் (புகையிலை) சேர்ந்ததோ என்று சந்தேகம் எங்களுக்கு. வெத்திலைக் குதப்பலோடு தான் அவர் எங்களோடு பேசுவதைப் பார்த்திருக்கிறோம். தர்மராஜன் அழைத்தால் என்ன செய்வார் என்பது தெரியாது. பார்த்ததில்லை. இத்தோடு சோடா புட்டி கண்ணாடி வேறு. அவருக்கு கொஞ்ச நாளில் கண் பார்வை மங்கிக்கொண்டு வந்தது. ”கல்கத்தா போகணும் போய் டாக்டரிடம் காட்டணும்,” என்று சொல்லிக் கொண்டிருந்தவர் ஒரு நாள் திடீரென கல்கத்தா போய்த் திரும்பினார். பல் எல்லாம் காவியேறி கெட்டு விட்டதென்றும் அதனால் எல்லா பற்களையும் எடுத்து விட்டு புது செட் கட்டிக்கொள்ளவேண்டும் என்று டாக்டர் சொன்னதான், புதுசாக பல் செட் ஒன்றுடன் அவர் திரும்பிய போது தோற்றம் அளித்தார்.  எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவருக்கு அதிகம் போனால் 40 வய்து இருக்கும். இப்போது பல் செட். புர்லா வாசிகளில் அவரைத் தெரிந்தவர்களுக்கு, திருமதி பட்டாசார்யா இதை எப்படி எடுத்துக் கொண்டிருப்பார் என்ற கவலையில் ஆழந்தனர். பட்டாசார்யாவுக்கு இனி ஜர்தாவோடு வெத்திலை எப்படி போடுவது என்ற பிரசினை முன்னிற்கும் என்று நான் நினைத்தேன். வெத்திலை, பாக்கு, சுண்ணாம்பு புகையிலை எல்லாவற்றையும் போட்டு நீட்டிய கால்களுடன் உட்கார்ந்து இடித்துக்கொண்டிருக்கும் கிழவிகளை நிலக்கோட்டையில் பார்த்த காட்சிகள் நினைவுக்கு வந்தது. ஆனால் 1953 லேயே அவை சரித்திரமாகிவிட்ட  பழமையைப் பின்னோக்கும் நினைவுகள் தான். இருப்பினும் இது இன்னமும் மோசமான விளைவுகளுக்கு இழுத்துச் சென்றது. ஒரு மாதம் கழிந்தது. பட்டாசார்யாவின் கண் பார்வை இன்னமும் மோசமாகவே மறுபடியும் கல்கத்தா போய்வந்தார். இம்முறை ஒரு செகண்ட் ஒபீனியன் (இன்னொரு டாக்டரின் ஆலோசனை) பெற்றுத் .திரும்பி வந்தபோது அவர் சொன்ன செய்தி அவருக்கு மாத்திரம் அல்ல எங்களுக்கும் அதிர்ச்சியாகவும் சிலருக்கு மனவேதனை தருவதாகவும் இருந்தது. இரண்டாம் ஆலோசனை தந்த டாக்டர் சொன்னாராம் “ ”பற்களை எடுத்திருக்க வேண்டாம். அதற்கும் உங்கள் கண் பார்வை மங்கிப் போவதற்கும் சம்பந்தமில்லை” என்று. என்ன சொல்ல!. ஊரே பொறாமைப் பட வைக்கும் அழகு படைத்த பெண்ணை துர்காதேவி  அவருக்கு மனைவியாகக் கொடுத்துக் கடாட்சித்தாள். . எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய அருளா அது? ஆனால் அவர் வாழ்க்கையின் நிம்மதியைக் குலைக்கும் இத்தனை மன வேதனைகளையுமா துர்கையம்மன் அந்த அருளோடு பாலித்திருக்கவேண்டும்?

 

என் பிரதாபங்களைச் சொல்லிக்கொண்டிருந்தேன். இடையில் பட்டாசார்யாவும் அவர் நினைப்பு வந்ததும் அத்தோடு அவர் அழகு மனைவியும் உடன் வந்து குறுக்கிட்டு விட்டார்கள். குறுக்கிட்ட காரணத்தை நான் இன்னும் சொல்லவில்லை. தேவசகாயம் தன் ஊர் நண்பரை புர்லாவுக்கு வேலை தேடித்தருவதாகச் சொல்லி அழைத்து வந்தார் என்று சொன்னேன். அந்த நண்பர் வேலுவும்  என் அறையில் தான் வாசம். கல்யாணம் ஆகிவிட்டது. குடும்பப் பொறுப்பு அவர் தலைமேல். வேலை தேடியாக வேண்டும். பின்னர் புது மனைவியை அழைத்து வரவேண்டும். குடும்ப வாழ்க்கை தொடங்க வேண்டும். என் புதிய ஆஃபீஸில் எங்கள் சூப்பிரண்டெண்டிங் என்ஜினியருக்கு உதவியாளராக வந்த ஜே ஆர் லாமெக்கைப் பற்றிச் சொன்னேன். தில்லி அமைச்சரகத்திலிருந்து ஒரு பழைய கேஸ் ஒன்று ஹிராகுட் அணை நிர்வாகத்துக்கு வந்து அது சுற்றிச் சுற்றி கடைசியில் ஜே ஆர் லாமெக்கிடம் வந்து சேர்ந்தது. அவர் அந்தப் பெரிய ஃபைல் கத்தையைப் பார்த்து” இந்தத் தலைவேதனை என் கிட்டே தானா வரணும்? என்று அலுத்துக்கொண்டிருந்த போது நான் அவர் முன்னே உட்கார்ந்திருந்தேன். “சாமிநாதன், இந்த ஃபைலைப் பார்த்து என்ன செய்யவேண்டும் என்று சொல். சரி வேண்டாம். முழுமையாக ஒரு சம்மரி ஒன்று தயார் செய்து கொடு போதும். நான் தர்மராஜனிடம் பேசிக்கொள்கிறேன்” என்று சொன்னார். அடுத்த நாள்முழுதும் அந்த ஃபைலைப் படித்து சுருக்கமாக எல்லா அம்சங்களையும் உள்ளடக்கி ஒரு சம்மரி தயார் செய்து கொடுத்தேன். லாமெக்குக்கு ஒரே சந்தோஷம். “சாமிநாதன், ஒரு பெரிய வேலை செய்து என் காரியத்தைச் சுலபமாக்கி யிருக்கிறாய். ஒண்ணு சொல்லட்டுமா? எனக்கு ஒரு ஸ்டெனோ டைபிஸ்ட் வேணும். உனக்கு யாரையாவது தெரியுமா? ஒரு நல்ல உபயோகமான ஆளைப் பிடிச்சுக் கொடுத்தா நீயும் அந்த ஸ்டெனோ டைபிஸ்டை உபயோகப்படுத்திக்கொள்ளலாம். உன் நேரம் அனாவசியமா செலவாகாது” என்றார். எனக்கு சந்தோஷமாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. நான் ஒரு(UDC) மேல் நிலை குமஸ்தா. எனக்கும் என் அதிகாரிக்கும் ஒரே ஸ்டெனோ டைபிஸ்டா? இடையில் இருக்கும் பட்டாசார்யா நான் ஒரு ஸ்டெனோ டைபிஸ்டுக்கு டிக்டேஷன் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் என்ன நினைப்பார் என்று யோசித்தேன்.

 

அன்று மாலை வீடு திரும்பியதும் தேவசகாயத்திடம் சொன்னேன். வேலுவுக்கு வேலை கிடைக்கலாம், எங்கள் ஆபீஸிலேயே. அவருக்கு டெஸ்ட் வைப்பார்கள். அதில் தேறினால் நாளைக்கே அவருக்கு வேலைக்கான ஆர்டர் கிடைத்து விடும் என்றேன்.  இரண்டு பேருக்குமே ஏதோ டெர்பி லாட்டரி விழுந்த மாதிரி சந்தோஷம்.

 

மறு நாள் வேலுவை லாமெக்கின் முன் நிறுத்தினேன். அவர ஆச்சரியப்பட்டுப் போனார். அசகாய சூரனாக இருக்கிறானே, என்ன சொன்னாலும் இவன் செய்துவிடுகிறானே என்று திகைத் தாரோ என்னவோ. வேலு அவருக்கு வைத்த டெஸ்டில் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், லாமெக்குக்கு ஒரு ஸ்டெனோ டைபிஸ்ட் கிடைக்கப் போவதை நினைத்து, “பரவாயில்லை, போகப் போகக் கத்துக்கொள்வார். புதுசு அப்படித்தான் இருக்கும்” என்று சொல்லி வேலுவை தர்மராஜனிடம் சொல்லி வேலைக்கு அமர்த்தினார். அப்போதெல்லாம் எங்கள் அணைக்கட்டு நிர்வாகத்துக்கு எங்கள் இஷடப்படி வேலைக்கு உரியவர்களைத் தேர்ந்து அமர்த்தலாம். இப்போது போல U,P,S.C. மூலம் தான் ஆட்கள் எடுக்கவேண்டும் என்பது என்பதில்லை.

 

லாமெக் வேலுவிடம், “வேலு இங்கே அப்படி ஒன்றும் அதிகம் வேலை இல்லை. அப்பப்போ சாமிநாதனும் உங்களுக்கு வேலை கொடுப்பார், சரிதானா?” என்றார். வேலுவுக்கும் சந்தோஷம் தான்.

 

அன்றிலிருந்து அந்த அணைக்கட்டு ஆபீஸிலேயே ஒரு அப்பர் டிவிஷன் க்ளார்க்குக்கு ஸ்டெனோ டைபிஸ்ட் கொடுக்கப் பட்டிருப்பது, எங்கள் எலெக்ட்ரிகல் சர்க்கிள் செக்‌ஷனில் மாத்திரமல்ல, எல்லோரையும் பொறாமைப் பட வைத்தது. நான் ஒரு இஞ்ச் அதிகம் வளர்ந்துவிட்டதாக பிரமையில் மிதந்தேன். ஒரு நாள் நான் வேலுவுக்கு டிக்டேஷன் கொடுத்துக் கொண்டிருந்த போது, பட்டாசார்யா பார்த்துவிட்டு, ”:சாமிநாதன் வேலையை முடித்துவிட்டு என் ரூமுக்கு வா, கொஞ்சம் வேலை இருக்கு,” என்று சொல்லி போனதைப் பார்த்து எல்லோரும் திக்கித்துப் போனார்கள். அந்த நிமிஷம் நான் இன்னும் ஒரு இஞ்ச் வளர்ந்தேன்.   .

(தொடரும்)

 

 

 

 

Series Navigationசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 38இற்றைத் திங்கள் – பாபா ராம்தேவ் , அன்னா ஹஸாரே போராட்டங்கள்
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *