எனது இலக்கிய அனுபவங்கள் – 7 எழுத்தாளரும் புத்தக வெளியீடும்

This entry is part 17 of 34 in the series 17 ஜூலை 2011

இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் இப்போது புத்தகப் பதிப்புகள் புற்றீசல் போல் புறப்பட்டு வாசகர்களைத் திணற அடிக்கின்றன. பரம்பரை வணிக வெளியீட்டாளர்களுக்குச் சவால் விடுவதைப் போன்று இன்றைய புதிய பதிப்பாளர்கள் அச்சு நேர்த்தியிலும் கட்டமைப்பிலும் ஆங்கில நூல்களுக்கு இணையாகப் பதிப்பித்து சாதனை புரிந்து வருகிறார்கள். அவர்கள் போக, கணினிப் பயன்பாடு வசப்பட்டதனால் கிராமங்களில் கூட, அரும்பு விடும் படைப்பாளிகள் தாங்கள் எழுதிப் பார்த்த கன்னிப் படைப்புகளை – அதிகமும் கவிதைகளே – 40, 50 சேர்ந்தவுடன் தம் சொந்தச் செலவில், இணையத்திலிருந்து பதிவிறக்கிய அழகான படங்களை அட்டையில் தாங்கி புத்தகங்களை அச்சிட்டு, கையோடு வெளியீட்டு விழாவும் அரசியல்வாதிகள் போல் வெளிச்சம் போட்டு நடத்துவதும் அதிகரித்து வருகிறது. இதில் நூறு விழுக்காடு பேர்களும் சிறு பத்திரிகையாளர் களைப்போல் கையைச் சுட்டுக் கொண்டு பரதவிப்பதையும் பார்க்க முடிகிறது.
முன்பெல்லாம் பத்திரிகைகளில் நிறைய எழுதிப் புகழ் பெற்ற பிரபல எழுத்தாளர்கள் கூட ஒரு புத்தகம் கூட வெளியிடமுடியாத நிலை இருந்தது. எழுத்தாளர் ‘தேவன்’ அதற்கு உதாரணம். விகடனில் தான் அவரது படைப்புகள் எல்லாம் வெளியாயின. அவரது ஆயுட்காலம் வரை அவற்றின் உரிமை விகடனிடமே இருந்து, அவர் காலமான பின்னரே உரிமையைப் பெற முடிந்தது. அவர் தன்னுடைய எழுத்து நூலானதைப் பார்க்காமலே இறந்து போனது பெரிய சோகம். பத்திரிகைகளில் எழுதியவற்றின் உரிமை படைப்பாளிகளுக்கு இல்லா திருந்ததும், தமது புதிய படைப்பை பத்திரிகையில் வெளியிடாமல் நேரிடையாக தாமே தம் செலவில் பிரசுரிக்க வசதியற்றிருந்ததும், விஷப்பரீட்சையில் இறங்கப் பயந்ததும் காரணங்களாகும். டாக்டர் மு.வ அவர்கள்தான் துணிந்து எந்தப் பத்திரிகையிலும் எழுதாமல் நேரடியாகத் தன் நூல்களை வெளியிட்டுப் பிரபல மானவர். பிரபலமானாரே தவிர தன் புத்தகங்களால் அவர் பொருளீட்டியதாகச் சொல்ல முடியாது. ஏனெனில் தம் எழுத்துக்களைப் பிரசுரகர்த்தகர்களிடம் ‘அவுட்ரைட்’டாக சொற்ப தொகைக்கு விற்று விடும் சூழ்நிலையே அப்போது இருந்தது. டாக்டர் மு.வ அவர்கள் இலட்சக்கணக்கில் விற்ற தனது ‘திருக்குறள் தெளிவுரை’யை அப்படி அவுட்ரைட் ஆக, பிரபலமாகாத ஆரம்ப காலத்தில் விற்று விட்டதால் இன்று வரை அமோக லாபம் பெற்று வருவது அதை வெளியிட்ட ‘சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்’ தான்.
அப்போதெல்லாம் கை எடை பார்த்து, குத்து மதிப்பாக அரிய நூல்களை எல்லாம் நூறுக்கும் இருநூறுக்கும் வாங்கிக் கொண்டு, படைப்பாளிகளின் உரிமையைப் பறித்துக் கொள்ளும் பகல் கொள்ளை நடைபெற்று வந்தது. அகிலன், ஜெயகாந்தன் போல மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற எழுத்தாளர்கள் தலையெடுத்த பின் தான், ‘ராயல்டி’ என்கிற படைப்பாளிக்கு ஓரளவு நியாயம்செய்கிற முறை வந்தது. அதாவது, நூல் விற்பனையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை படைப்பாளிக்குத் தருவது. அதிலும் சில கெட்டிக்காரப் பதிப்பாளர்கள் விற்பனையைக் குறைத்துச் சொல்லி ஏமாற்றுவதும் உண்டு. ஜெயகாந்தன் போல கிராக்கி அதிகம் இருந்தாலொழிய, ‘உங்கள் நூல் விற்கவே இல்லை’ என்று நாமம் போடுவதும் உண்டு. இது பற்றி அகிலன் அவர்கள் ஒருமுறை, ‘வெள்ளைத்தாள் வியாபாரிகள், ஓவியர்கள், அச்சகத்தார் போன்ற வர்களிடமெல்லாம் இவர்களது ஏமாற்று வேலை நடக்காது. காசு கொடுத்தால் தான் அவர்களிடம் காரியம் நடக்கும். ஆனால் யாரால் பிழைப்பு நடக்கிறதோ அந்த எழுத்தாளர்களிடம் மட்டும் பேரம் பேசவும், கடன் சொல்லவும், ஏமாற்றவும் அவர்களுக்கு முடிகிறது’ என்று அப்போதே புத்தக வெளியீட்டில் எழுத்தாளர்களின் அவல நிலை பற்றி எழுதினார். புத்தகம் வெளியானால் போதும் என்ற ஏக்கத்தால் அந்தக் கொடுமைக்கெல்லாம் படைப்பாளிகள் தெரிந்தே உடன்பட்டார்கள். சில பதிப்பகத்தத்தார் ‘அவுட்ரைட்’டாக வாங்கிய நூல்களை ஆசிரியர் பெயர் போடாமல், தங்கள் பதிப்பக ஆசிரியர் குழு என்று போட்டு அதிலும் படைப்பாளிகளை வஞ்சித்ததும் உண்டு. இப்போது பதிப் புரிமைச் சட்டம் வந்த பிறகு படைப்பாளிகளின் உரிமை பாதுகாக்கப்படுகிறது.
ராயல்டி முறை இல்லாமல், பாரத்துக்கு( 16 பக்கம்) இவ்வளவு என்று பேசிக்கொண்டு ‘உரிமை ஆசிரியருக்கே’ என்று அச்சிட்டு ஒரு பதிப்போடு நிறுத்திக் கொள்வதும் நடக்கிறது. இதிலும் கூட முதல் பதிப்பை மட்டும் சொல்லி விட்டு, அடுத்தடுத்த பதிப்புகள் பற்றி மூச்சுக் காட்டாமல் ஏமாற்று பவர்களும் உண்டு. தெரிந்து படைப்பாளி கேட்டால் ஏதோ கொஞ்சம் கொடுத்துத் தப்பித்துக் கொள்வார்கள். எப்போதும் இழப்பவர் படைப்பாளி யாகவே இருக்கிறார்.
இப்போதெல்லாம் இளம் படைப்பாளிகள் எழுதத் தொடங்கியதுமே – தம் எழுத்தை பத்திரிகைகளில் பார்க்கும் வாய்ப்பு இல்லாததால் – தாமே வெளியிட அவசரப்பட்டு, ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு இலவசமாக 200 பிரதிகளை வழங்கிவிட்டு மீதியை வீட்டில் அடுக்கி வைத்து கறையானுக்கு இரையாக்கு வதும், வைக்க இடமில்லாதவர்கள் எடைக்குப் போடுவதுமான சோகமும் நடக்கிறது.
என் நண்பர் ஒருவர் – நிறைய பத்திரிகைகளில் எழுதி பிரசுரமும் கண்டவர் – தன் படைப்புகளை நூலாக வெளியிட எந்தப் பதிப்பகமும் கிடைக்காமல் விற்பனை சிரமம் தெரிந்தும், மனைவியின் வளையல்களை அடகு வைத்துப் பணம் புரட்டி புத்தகம் போட்டார். மேலே சொன்னபடி இலவசப் பிரதிகள் தான் செலவாயின. நூற்றுக்கணக்கில், வைக்க இடமில்லாமல் வாடகை வீட்டில் பிரதிகள் சீரழிவதில் எரிச்சலுற்ற அவரது மனைவி ‘பேசாமல் மணிமுத்தாநதியில் கொண்டு போய்ப் போடுங்கள்’ என்றார். அதை என்னிடம் சொல்லி நண்பர் வருத்தப் பட்டபோது, நான் சொன்னேன்: ‘அதுவும் கூட சாத்தியமில்லை. மணிமுத்தாநதி வறண்டு கிடக்கிறது!’. ஒராண்டிற்குப் பின் எங்கள் மணிமுத்தாநதியில் வெள்ளம் வந்தபோது நான் நண்பரிடம் மனைவியின் யோசனையை நினைவூட்டினேன். அவர் ‘அதற்கு அவசியமில்லாமல் நான் வேறோரு நதியில் போட்டு விட்டேன்’ என்றார். விவரம் கேட்டபோது, ஒரு பிரபல விற்பனையாளரிடம் நூல்கள் தேங்கிக் கிடப்பதைப் பற்றி புலம்பியபோது, அவர் ‘இங்கேகொண்டு வந்து போடுங்கள். நான் தள்ளி விடுகிறேன்’ என்று சொன்னதை நம்பி மூட்டை கட்டி அவரது கடைக்கு லாரி சர்வீஸ் மூலம் அனுப்பி வைக்க, அவரும்சொன்னபடி தள்ளி(!) விட்டிருக்கிறார். அதாவது தன் கடைக்கு வந்தவர் போனவருக்கெல்லாம் சினிமா நோட்டீஸ் போல இலவசமாக வாரி வழங்கி விட்டார்! லாரி செலவும் சேர்ந்ததுதான் மிச்சம்.
இன்னொரு நண்பர் – குழந்தை இலக்கியப் படைப்பாளி. நிறைய கண்ணன், கோகுலம் போன்ற இதழ்களில் எழுதிப் பிரபலமானவர் – என் எச்சரிக்கையையும் மீறி சொந்தமாக அவரது நூல்களை வெளியிட்டார். அவரது தைரியத்துக்குக் காரணம் விற்பனை செய்ய அவருக்கு வாய்ப்பிருந்தது தான். அவர் ஒரு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர். அதனால் தன் சக தலைமை ஆசிரியர்கள் மூலம் அவர்களது பள்ளி நூலகங்களுக்குக் கொஞ்சம் பிரதிகளை விற்க முடிந்தது. எவ்வளவு தான் அப்படி விற்று விட முடியும்? அப்பாவியான அவர் தன்னிடம் பவ்யமாய் நடந்து கொண்ட ஆசிரியர்களை நம்பி, அவர்களது வகுப்பு மாணவர்களிடம் கொஞ்சம் பிரதிகளை விற்கக் கொடுத்தார். பிரதியாக – தாமதமாக வருதல் போன்ற சலுகைகளை உத்தேசித்து, சிலர் விற்றுக் கொடுத்தார்கள். பண நெருக்கடி உள்ள சிலர், இதைப் பணம் கிடைக்கும் ஒரு வழியாக் கருதி விற்று எடுத்துக் கொண்டு ‘இன்னும் பையன்களிடமிருந்து பணம் வரவில்லை’ என்று டபாய்த்தார்கள். விஷயமறிந்து இவர் கடிந்து கொண்ட போது, மேலிடத்துக்கு ‘தன் புத்தகங்களை விற்கச் சொல்லி தொந்தரவு செய்கிறார்’ என்று புகார் எழுதி விட்டார்கள். அதிலிருந்து மீள அவருக்குப் பெரியபாடாகி விட்டது. இந்தச் சிரமங்களை எல்லாம் நன்கு அறிந்திருந்ததால், சொந்தமாக நூல் வெளியிடும் விஷப் பரீட்சையில் நான் இறங்கவே இல்லை.
எவ்வளவோ துர்அதிஷ்டங்களுக்கு இடையே ஏதிர் பாராத அதிர்ஷ்டங் களும் எனக்கு நேர்வதுண்டு. அதில் இந்த நூல் வெளியீடும் ஒன்று. எழுதிப் பத்து ஆண்டுகள் ஆகியும் பிரசுரம் காணாத என் முதல் நாவலில் அக்கறை கொண்டு, என் நண்பர் குறிஞ்சிவேலன் அவர்கள், தன் நண்பரும் உறவினருமான குறிஞ்சிப்பாடி மணியம் பதிப்பக உரிமையாளரிடம் சொல்லி வெளியிட வைத்தார். அவரும் தன் நண்பருக்காகத் தட்ட முடியாமல் அரை மனதுடன் வெளியிட்டார். என் அதிர்ஷ்டம் 1994ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் நாவலுக்கான கோவை ‘கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை’ யின் 10 ஆயிரம் ரூபாய் பரிசு அந்த நாவலுக்கும், பதிப்பாளருக்கு 2500 ரூபாயும் கிடைக்கவே என் எழுத்தின் மீது அவருக்கு நம்பிக்கை பிறந்து தொடர்ந்து என் நூல்களை இன்று வரை அவர் வெளியிட்டு வருகிறார். பிறகு இன்னும் சில பதிப்பகங்களும் என் நூல்களை வெளியிட வாய்ப்பு கிடைக்க, நான் மட்டும் இந்த பதிப்புப் பிரச்சினையிலிருந்து தப்பித்திருக்கிறேன்.
எல்லோருக்கும் இப்படி நேர்வதில்லை தான். இன்று சில புதிய பிரசுரகர்த்தர் கள் புதிய எழுத்தாளர் என்று உதாசீனப் படுத்தாமல் தரம் பார்த்து வெளியிட்டு ஊக்குவிப்பது, பிரசுரம் காணாத தரமான படைப்பாளிகளுக்கு நம்பிக்கை தரும் விஷயமாகும். பிரசவம் எவ்வளவு கஷ்டமானது என்று தெரிந்திருந்தும் பிள்ளை பெற்றுக் கொள்ள ஆசைப்படுவது போல, எல்லா எழுத்தாளர்களும் சிரமம் இருந்தும் தமது நூல்களை வெளியிட விரும்புவதில் ஒரு ரகசியம் இருக்கிறது. நீங்கள் எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும், புகழ் பெற்றவராக இருந்தாலும், உங்கள் எழுத்து அச்சாகி நூலாக வந்தால்தான் போட்டிகளுக்கு அனுப்பி அது தேர்வு செய்யப்படும் வாய்ப்பு கிட்டும். அதன் மூலம் பரிசோ பிரபலமோ அப்போது தான் சாத்தியமாகும். 0

Series Navigationகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் ? (தொடர்ச்சி)உருமாறும் கனவுகள்…
author

வே.சபாநாயகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *