கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் ? (தொடர்ச்சி)

This entry is part 16 of 34 in the series 17 ஜூலை 2011

நாகரத்தினம் கிருஷ்ணா

ஹாமில்டன் பிரபு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினர். ராயல் ஏர் •போர்ஸ் என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் விமானப் படைபிரிவில் மூத்த ராணுவ அதிகாரியுங்கூட. சம்பவம் நடந்த அன்று அதாவது 1941ம் ஆண்டு மே மாதம் 10ந்தேதி இரவு டர்ன்ஹௌஸ்லிருந்த அவரது அலுவலகத்திற்கு அவசரமாக ஒரு தொலைபேசி அழைப்பு. ஜெர்மானிய விமானப்படைக்குச் சொந்தமான மெஸெர்ஷ்மிட் 110 ரக விமானமொன்று இரவு பத்துமணி எட்டு நிமிட அளவில் பிரிட்டிஷாருக்குச் சொந்தமான நார்தம்பர்லேண்ட் கடற்கரைப் பகுதியில் காணநேர்ந்ததாக தகவல் தெரிவிக்கிறார்கள். ஹாமில்டனுக்குச் சந்தேகம், தகவல் தவறானதாக இருக்குமோவென்ற ஐயம். விமானப்படையில் பொறுப்பினை வகித்த அளவில் மெஸெர்ஸ்மிட் 110 ரக விமானத்தின் பயண தூரத்தின் தகுதி எனவென்று அவருக்குத் தெரியும். பிரிட்டிஷாரின் எல்லையைக் கடந்து தனது பறக்கும் தூரத்தை அதிகரித்து ஆபத்தை தேடிக்கொள்வதற்கான முகாந்திரமில்லை என்பதை அவரது விமாநங்களைப் பற்றிய அறிவு தெளிவுபடுத்தியது.

– அப்படியே முடிந்தாலும் ஜெர்மனிக்குத் திரும்ப அதற்கு எரிசக்தி போதாதே, என்று சொல்லிக்கொண்டார்.

சில நொடிகளுக்குப்பிறகு இரண்டாவது முறையாக தொலைபேசி ஒலிக்கிறது. கையிலெடுத்து தகவலை உள் வாங்கிக்கொண்ட ஹாமில்டனின் முகம் இறுகிப்போனது. வான் குடை உதவியுடன் குதிந்திருந்த ஜெர்மன் ஆசாமி தனது பெயர் ஆல்•ப்ரெட் ஹொர்ன் என்று தெரிவித்துக்கொண்டதாகவும், அவரைச் உடனே சந்திக்க விரும்புவதாகவும் இம்முறை தொலைபேசியின் மறுமுனையிலிருந்தவர்கள் கீறியிருந்தார்கள். ஒருமுறைக்கு இருமுறை அப்பெயரை தனக்குள் அவர் முனுமுனுத்துக்கொண்டபோதிலும் அப்போதைக்கு எந்த முடிவிற்கும் அவரால் வர இயலவில்லை. அப்படியொரு பெயரை இதற்கு முன்பு கேட்டிருந்த ஞாபகமில்லை. யுத்த மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் எதிரிமுகாமைச் சேர்ந்த ஒருவன் தன்னைச் சந்திக்க விழைவது வியப்பினை தந்தது. மறுநாள்காலை கிளாஸ்கோவுக்கு நேரில் செல்வதென்று தீர்மானித்தார். விடிந்தது. திட்டமிட்டதுபோல மறுநாள் கிளாஸ்கோ மருத்துவமனையொன்றில் பிரிட்டிஷ் படைப்பிரிவொன்றின் பலத்தக் காவலுடன் சேர்க்கப்பட்டிருந்த ஜெர்மானிய விமானியை சந்திக்கவும் செய்தார். ஆனால் ஜெர்மன் ஆசாமி அப்படியொரு வார்த்தை வெடியைக் கொளுத்திபோடுவானென அவர் கிஞ்சித்தும் நினைத்து பார்த்தவரல்ல.

பரஸ்பரம் முகமனுக்குப் பிறகு, ஜெர்மன் ஆசாமி பேசினான்.

– நான் ருடோல்ப் ஹெஸ், என் பெயரை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீங்க

– ருடோல்ப் ஹெஸ்?

– ம்… மனிதாபிமான அடிப்படையில் உங்களுக்குதவ வந்திருக்கேன்.

உண்மைதான், ஹாமில்டன் பிரபுவிடம் ஹெஸ்ஸைப் பற்றிய கேள்விஞானங்கள் ஏராளம். ஆனால் இப்படி இரத்தமும் தசையுமாக அந்த மனிதரை அதுவும் பிரிட்டிஷ் மண்ணில் சந்திக்க நேருமென கனவு கண்டவரல்ல. எனினும் கண்முன்னே நடப்பதை நம்புவதா? கூடாதா என்ற குழப்பம். வந்திருப்பவன் ஒருவேளை பைத்தியக்கார ஆசாமியாக இருப்பானோ? நாம்தான் தீர யோசிக்காமல் வந்துவிட்டோமோ? என்றெல்லாம் கேள்விகள்கேட்டு தலையிலடித்து கொள்ளாத குறை.

ஹாமில்டன் தன் கண்களையே நம்பமுடியவில்லை. ருடோல்ப் ஹெஸ் ஜெர்மானிய அதிகார வரிசையில் முக்கியமான நபரென்று அவருக்கு நன்றாகவே தெரியும், ஆனால் அந்நபரை இப்படி யுத்த காலத்தில் பிரிட்டன் எல்லைக்குகுள் சந்திக்கநேருமென்றோ, எதிரெதிரே அமர்ந்து உரையாடமுடியுமென்றோ நினைத்துப்பார்த்ததில்லை. இவைகளெல்லாம் கேலிகூத்தென்று மனதிற் தோன்றியது. இருதரப்பிலும் ஒருவர்கூட இதை நம்பமாட்டார்களென்ற அப்போதைய அவரது தீர்மானத்தை பின்னாளில் வரலாற்றாசிரியர்கள் பலரும் அப்படியொரு முடிவுக்குத்தான் எவரும் வரமுடியுமென்று எழுதினார்கள். ஹாமில்டன் குழப்பத்திலிருக்க நமது ஜெர்மானிய கதாநாயகனுக்குப் பொறுப்புகள் கூடின. தம்மைப் யாரென்று நிரூபிப்பது அவசியமென்று உணர்ந்தார்.

– மிஸ்டர் ஹாமில்டன் உங்களுக்கு ஹௌஸ்ஷோபரைத் தெரியுமில்லையா? அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். உங்கள் தரப்பில் எனது விருப்பங்களை, யுத்தத்தைப் பற்றிய எனது கருத்துக்களை புரிந்துகொள்ளகூடிய ஒரே நபர் நீங்கள்தான் என்று அடித்துக்கூறினார். நாமிருவரும் சந்திக்க வேண்டுமென்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் 23ந்தேதி, உங்களுக்கு கடிதங்கூட போட்டிருந்தாரே, மறந்து விட்டீர்களா என்ன?

– இல்லை. ஆனால் உங்களைச் சந்திப்பதுபற்றிய யோசனை எதையும் அக்கடிதம் தெரிவிக்கவில்லையே!

– கடந்த டிசம்பருக்குப் பிறகு இங்கே வருவதற்கு மூன்றுமுறை முயன்றுவிட்டேன். நான்காவது முறைதான் முடிந்தது. கடந்தகால முயற்சிகளின் போது ஒவ்வொரு முறையும் கைவிட நேர்ந்ததற்கு மோசமான வானிலைதான் காரணம். மோசமாக இருந்ததால் திரும்பிப்போக நேர்ந்தது. அடுத்து லிபியா போரில் நீங்கள் வெற்றிபெற்றிருந்த நேரத்தில் உங்களுடன் போர் நிறுத்தம் பற்றி பேசுவதும் சரியல்ல. ஜெர்மானியர்களான நாங்கள் பயந்துவிட்டோம் அதனாற்தான் சமாதானம் பேசவந்திருக்கிறோமென நீங்கள் நினைத்திருக்கக்கூடும். இப்போது வடக்கு ஆப்ரிக்காவில் எங்கள் கை மேலோங்கி இருப்பதுடன், கிரேக்க நாட்டையும் எங்கள் வசம் கொண்டுவந்திருக்கிறோம். ஆக உங்களுடன் சமாதானம் பேச இதுதான் நல்ல தருணம். ஜெர்மானிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான நான் நேரில் வந்திருப்பதைவைத்து அமைதியை நிலைநாட்டுவதில் எனக்குள்ள அக்கறையையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டுமென எதிர்பார்க்கிறேன். •ப்யூரெர்(இட்லர்), யுத்தத்தில் இறுதி வெற்றி எங்களுக்குத்தான் என்பதில் உறுதியாய் இருக்கிறார். போரில் இறுதிவெற்றியைத்தான் கணக்கில்கொள்ளவேண்டும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வரலாறு எங்கள் வெற்றியை உறுதிசெய்யும். எனினும் ய்நாம் யோசிக்கவேண்டும். தேவையின்றி உயிரிழப்பு எதற்கு. இருதரப்பிலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு நாம் ஏன் காரணமாக வேண்டும்.

ஹாமில்டன் பிரபுவுக்கு குழப்பம் நீங்கியிருந்தது. எதிரே உட்கார்ந்திருப்பவனை நம்பத்தான் வேண்டும். கார்ல் ஹௌஷோபெர் என்ற மந்திரச் சொல் அவர் நினைவுப்பெட்டகத்தைச் சட்டென்று திறந்தது. கடந்த கால காட்சி கண்முன்னே விரிந்தது. 1940ம் ஆண்டு டிசம்பர் மாதம், உண்மையாகவே அவர் பெயருக்குப் பிரத்தியேக கடிதமொன்று வந்திருந்து. ஹௌஷோபெர் என்ற ஜெர்மானிய ராணுவ ஜெனரல் சந்திக்க வேண்டுமெனக் கேட்டு எழுதிய ஞாபகம், வேறு குறிப்பிட்டுச்சொல்லுபடி அக்கடிதத்தில் எதுவுமில்லை. ஆமில்டன் ஹௌஷோபெர் மகனை 1936ம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் விளையாட்டில்¢ல் சந்தித்திருந்தார். அக்கடிதத்தை தனக்கு மேலே உள்ளவர்களிடம் அனுப்பிவைத்தார். அத்துடன் எல்லாம் முடிந்தது. அச்சம்பவத்தைச் சுத்தமாக அதன்பின் மறந்திருந்தார். ஆக ஹெஸ் வந்திருப்பற்கு காரணமிருக்கிறது, நம்பத்தான் வேண்டும். அதிலும் இது ஹௌஷோபெர் சம்பந்தப்பட்ட விஷயம். மனிதர் சாதாரண ஆளல்ல ”Lebensraum” (வாழ்வாதாரம்),1 என்ற கோட்பாட்டுக்குச் சொந்தக்காரர், பின்னாளில் இட்லரின் அபிமானத்தைப் பெற்று நாஜிப்படையினர் பிற நாடுகள்மீது படையெடுக்க வழிவகுத்தக் கொள்கை. ஹௌஷோபெர் அறிவு ஜீவியுங்கூட. வெர்சாய் உடன்படிக்கைக்கு மாறாக ஜெர்மானிய எல்லைகளை விரிவுபடுத்த இட்லர் தீர்மானித்தபோது கார்ல் ஹௌஷோபெர் சிந்தனைதான் காரணமென்று சொல்லப்பட்டது. ஹௌஷோபெர் தகவலோடு வந்திருப்பது உண்மையாவென்று அறிவதற்குமுன்னால், ஏதிரே அமர்ந்திருக்கும் நபர் ஜெர்மானிய ராணுவ அதிகாரி ருடோல்ப் ஹெஸ்தானா என்று நீருபிக்கப்படவேண்டும். இருவருக்குமான உரையாடல் தொடர்ந்தது. வந்திருந்த ஆசாயின் பேச்சில் அதிகாரத்தின் வாள்வீச்சுகளை நிறையவே ஆமில்டன் உணர்ந்தார்.

– அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் முக்கிய பொறுப்புவகிப்பவர்களிடம் கலந்து ஆலோசித்து, அமைதியை திரும்பக்கொண்டுவருவது குறித்த யோசனைக்குத் தக்க பதிலை நீங்கள் சொல்லவேண்டும்.

– போர் தொடங்கியதிலிருந்து இங்கே இவர்தான் அவர்தானில்லை, பலர் முன் வரிசையில் இருக்கிறார்கள்.

– இனி நம் இரு நாடுகளுக்கிடையிலும் யுத்தமென்று ஒன்று வரக்கூடாது என்பதுதான் இட்லரின் எதிர்பார்ப்பு. அதற்கு சில நிபந்தனைகளையும் வைத்திருக்கிறார்.

– எப்படி?

– முதலாவது ஐரோப்பிய நாடுகளில் வலிமையான நாடென்று தலையெடுக்கும் எந்த நாட்டையும் எதிர்ப்பதென்கிற தமது புளித்துப்போன கொள்கையை பிரிட்டன் கைகழுவவேண்டும்.

– இப்போது சமாதானமாகப் போனாலும், வருங்காலத்திலும் நாம் சமாதானமாக வாழ்வோம் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

– ஏன்? எதற்காக நமக்குள்ள யுத்தம் வருமென்று சந்தேகிக்கறீங்க?

– இதை முன்பே உணர்ந்திருக்கவேண்டும். நமக்குள் பகமையை வளர்த்தாயிற்று. அமைதியை விரும்பிய எங்கள் மீது போர் திணிக்கப்பட்டதற்கு நீங்கள்தான் காரணம், இந்த நிலையில் எந்தவிதமான ஒப்பந்தம் இனி உடனடியாக அமைதியை நிலைநாட்ட உதவுமென நினைக்கிறீங்க.

ஹெஸ் யோசிப்பதுபோல இருந்தது அல்லது ஆமில்ட்டனின் ஆங்கிலம் விளங்கியதாவென்று தெரியவில்லை. தாம் சொல்லவந்ததை எதிராளிக்குப் புரியவைக்கும் அளவிற்கு இருந்த ஜெர்மானிய அதிகாரி, பிரிட்டிஷ்காரரின் ஆங்கிலத்தை புரிந்துகொள்ளத் தடுமாறினார். அவசியமென்றால் மொழிபெயர்ப்பாளரொருவரை ஏற்பாடு செய்யட்டுமாவென்று ஹாமில்டன் கேட்க, செய்யுங்கள் என்பதுபோல தலையாட்டினார். ஏற்பாடு செய்யப்பட்டது.

– தவிர, இவ் விஷயத்தில் அதற்கு முன்பாக நீங்கள் செய்ய வேண்டியவைகளென சில உள்ளன. ஆயுதமெதுமின்றி, தன்னிச்சையாக நான் வந்திருப்பதை பிரிட்டிஷ் மன்னர் ஏற்கும்படி உணர்த்தவேண்டும், அடுத்து ஜூரிச்சிலிருக்கும் எனது குடும்ப முகவரிக்கு நான் பத்திரமாக வந்து சேர்ந்திருக்கிறேன் என்ற தகவலை தெரிவிக்கவேண்டும். தவிர பத்திரிகையாளர்களுக்கு எனது வருகைக் குறித்து எவ்வித தகவலும் இப்போதைக்குக் கசியக்கூடாது.

– மன்னிக்கவேண்டும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சார்பாக எந்தவித வாக்குறுதியையும் உங்களுக்கு அளிக்க இயலாது. அதற்கான அதிகாரம் என்னிடமில்லை, என்பதைப் பொறுமையுடன் விளக்கிய பின்னர் காலதமதமின்றி தமது அலுவலகத்திற்கு ஹாமில்டன் பிரபு திரும்பினார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரென அவர் அறியப்பட்டிருந்தாலும், யுத்த பிரச்சினையில் சிக்கியிருந்த பிரிட்டனில் அவருக்குப் பெரிய அளவில் செல்வாக்குகளில்லை. வெளி விவகாரத்துறை அமைச்சகத்தின் துணை செயலராகவிருந்த சர் அலெக்ஸாண்டர் கடொகார் என்பரிடம் தகவலைக் கொண்டுபோக நினைத்தார். பலதடவை முயற்சி செய்து கடைசியில் அலெக்ஸாண்டரின் தனிச்செயலர் கிடைத்தார். அவரிடம் மிக முக்கியமானதும் அவசரமானதுமான ஒரு பிரச்சினைக்கு அலெக்ஸாண்டரிடம் பேசவேண்டுமென்ற வேண்டுகோள் வைக்கப்பட்டது. அவருடைய வேண்டுதலை ஒருவரும் மதிக்கவில்லை. முக்கிய பணிகளன்றி வேறு காரணங்களுக்காக வெளிவிவகாரதுறை துணை செயலரிடம் பேசவியலாதென்று அமைச்சகத்தின் தனிச் செயலர் கறாராகக் கூறிவிட்டார். வேண்டுமானால் பத்து நாளைக்குப் பிறகு ஏற்பாடு செய்யலாம். அதற்கு முன்பு அவரைச் சந்திக்க இயலாது என்பது அவரது பதில்.

ஹாமில்டனுக்குப் பொறுமையில்லை. அங்கே இங்கேயென்று தொடர்புகொண்டு பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து பொறுமையாக விளக்கி ஒருவழியாக வின்ஸ்டன் சர்ச்சில் அலுவலகத்தை நெருங்க முடிந்தது. பிரச்சினையின் தீவிரத்தைப் பிரதமர் அலுவலகம் புரிந்துகொண்டிருக்கவேண்டும்; பிரதமரைச் சந்திக்க அனுமதி கிடைத்தது. தமது அலுவலகத்திலிருந்து உடனே புறப்பட்டு பிறபகல் நார்த்ஹோ¡ல்ட் என்ற இடத்தை அடைந்தார். அங்கே அவரிடம் அதிகாரி கொடுத்த முத்திரையிட்ட ரகசிய உறையில் ஆக்ஸ்போர்டிலிருந்து ஒரு சில மைல்கள் தொலைவிலிருக்கும் கிட்லிங்க்டன் வருமாறு சொல்லப்பட்டிருந்தது. தமது வார இறுதியைக் கழிப்பதற்கென்று பிரிட்டிஷ் பிரதமர் டிஷ்லிபார்க்கை சேர்ந்த மாளிகைக்கு வந்திருந்தார். ஆகக் கிட்லிங்டனிலிருந்து வேறொரு காரில் டிஷ்லி பார்க்கிற்கு ஆமில்டன் அழைத்துச் செல்லப்பட்டார். டிஷ்லிபார்க்கைக் கார் அடைந்தது. இரண்டாயிரம் ஹெக்டார் கொண்ட நிலப்பரப்பு. பிரமுகர்களை வரவேற்பதற்கென்று மாத்திரம் ஏழு விசாலமான கூடங்கள். இருபத்து நான்கு படுக்கை அறைகள். பத்து குளியல் அறைகள், 30 காட்டேஜ்களென்று வால்ட்டர் ஸ்காட்டால் வர்ணிக்கபட்ட பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பெரிய மாளிகை.

உள்ளே நுழைந்ததுமிருந்த கூடத்திற் பொறுப்பிலிருந்த பெண்செயலாளர் தொலைபேசியில் தெரிவித்துக்கொண்டிருந்த செய்தி, நாடு இதுவரை காணாத போர்த்தாக்குதலை சந்தித்துக்கொண்டிருக்கிறதென்பதை வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருந்தது. குறிப்பாக லண்டன் மாநகரம் முழுவதும் குண்டுவீச்சில் சின்னாபின்னமாகிக்கொண்டிருந்தது. பலியானவர்கள் எண்ணிக்கையைக் கணக்கிடகூட இயலாத நிலை. தீயை அணைப்பதற்குப் போதுமான தண்ணீருக்கும் ஆட்களுக்கும் பற்றாகுறை. ஒரே நேரத்தில் பல முனை தாக்குதகள். ஹாமில்டனை சர்ச்சிலிடம் அழைத்துபோனபோது, இரவு உணவை முடித்திருந்தார்.

– சொல்லுங்க, இவ்வளவு பிரச்சினைகளுக்கிடையில் உங்களுக்கென்ன என்னைச் சந்திக்கவேண்டுமென்கிற அப்படியென்ன தலைபோகிற அவசரம்.

– மிஸ்டர் பிரைம் மினிஸ்ட்டர்- அதை நான் உங்கள் உதவியாளர்களை வைத்துக்கொண்டு சொல்ல முடியாது. நாமிருவரும் தனியே பேசவேண்டிய தகவல்.

சர்ச்சில் சுற்றியிருந்த மனிதர்களைப்பார்த்தார், புரிந்துகொண்டவர்களைபோல அவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். வான் வெளியைக் கவனித்துக்கொண்ட சர் ஆர்ச்சி பால்ட் சென்கிளேரை உரையாடலில் கலந்துகொள்ள அனுமதித்தார்கள். ஹாமில்டன் நடந்ததனைத்தையும் விளக்காமாக பிரதமரிடம் தெரிவித்தார். கடைசியில், ஜெர்மனிய விமான அதிகாரியின் புகைப்படமொன்றையும் பிரதமரிடம் காணபித்தார். உண்மைதான் வந்திருக்கிற ஆள் சாதாரண நபரல்ல, இட்லருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஜெர்மன் அதிகாரக் கட்டிலில் இருக்கும் ஹெஸ் என்பவர்தான், சந்தேகமில்லை. இப்பிரச்சினையில் தனது கருத்தென்று எதையும் சொல்லாதது ஆமில்டனுக்கு ஆச்சரியம். பின்னர் ஒரு முறை இது பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆமில்டன், ‘ ஏதோ நான் உளறுகிறேன் என்பதைப் போல அன்றைய தினம் சர்ச்சிலுடைய பார்வை இருந்தது.’ என்று கூறுகிறார்.

– நல்லது, ஹெஸ் பற்றிய பிரச்சினையை இப்போதைக்கு எடுக்கவேண்டாம். மார்க்ஸ் சகோதரர்கள்(2) பார்க்க போகணும்.

சர்ச்சில் குணத்தை அறிந்தவர்களுக்கு, அவரது நடத்தையில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. படம் திரையிடப்படவிருந்த கூடத்திற்கு சர்ச்சிலும் ஆமில்டனும் பிறரும் வந்தார்கள். இருக்கையில் உட்கார்ந்த மறுகணம் ஆமில்டனுக்கு நல்ல உறக்கம். விழித்தபோது நல்லிரவு கடந்திருந்தது. திரைப்படமும் முடிந்திருந்தது. திரைப்படம் சர்ச்சிலுக்கு அன்றைய பிரச்சினைகளிடமிருந்து சற்றுநேரம் விடுபட உதவியிருக்கவேண்டும். சற்று முன்புவரை அவரிடமிருந்த சோர்வுகள் இப்போதில்லை. ஹாமில்டனிடம், ஜெர்மானிய அதிகாரி ஹெஸ்குறித்து இரண்டு மணிநேர உரையாடலை சர்ச்சில் நடத்தினார். இன்னதென்றில்லை பல கேள்விகள், கற்பனைக்கெட்டாத கேள்விகள். அவ்வளவிற்கும் பொறுமையாக முடிந்த அளவு தமக்குத் தெரிந்த தகவல்களைப் பதிலாக ஆமில்டன் கூறினார். அடுத்து சர்ச்சில் இப்பிரச்சினையில் ஹாமில்டன் கருத்தென்ன என்பதையும் அக்கறையுடன் கேட்டார்.

– ஹெஸ்தானா? நன்றாகத் தெரியுமா?

– அப்படித்தான் நினைக்கவேண்டியிருக்கிறது. இல்லையெனில் ஹௌஷோபெர் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

-ம் அப்போ பழத்தில் புழு வந்து சேர்ந்ததுபோல- சர்ச்சில் முனுமுனுக்கிறார்.

மறுசாள் காலை சர்ச்சில், ஹாமில்டன் பிரபு, அதிகாரிகளென்று ஒரு சிறுகுழு இலண்டன் புறப்பட்டது. பத்துமணிக்கெல்லாம் 10, டௌனிங் தெருவிற்கு வந்து சேர்ந்தார்கள். உடனே வெளிவிவகாரத்துறை அமைச்சருக்குத் தகவல் போயிற்று. நண்பகல் சர் அலெக்ஸாண்டர் கடோகர், இவான் கிர்க்பட்றிக்கை தொலைபேசியில் பிடித்தார், உடனடியாக வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திற்கு வரும்படி கட்டளை பிறந்தது. கிர்க்பட்றிக் பி.பி.சி.யில் ஐரோப்பிய இயக்குனராக பணியாற்றியபோது 1933லிருந்து 1938 வரை பெர்லினின் இருந்திருக்கிறார். நாஜி அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் தமது பணிக்காரணமாக சந்திக்க நேர்ந்திருக்கிறது. ஆக அவருக்கு ‘ஹெஸ்’ ஸ¤ம் அறிமுகமாகியிருந்தார். ஹெஸ்ஸை சந்திக்குபடி கிர்க்பட்றிக் கேட்டுக்கொள்ளபட்டார்.

– உங்களால ஹெஸ்ஸை அடையாளப்படுத்த முடியுமில்லையா?

– நிச்சயமா, -கிர்க்பட்றிக்.

கிர்க் பட்றிக்கிற்கும், ஹாமில்டனுக்குமாக விமானமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு ஓன்பது மணி இருபது நிமிட அளவில் டர்ன்ஹௌஸை அடைந்தபோது இருவருமே களைத்திருந்தார்கள். வந்தவர்கள் உட்காரகூடநேரமில்லை. தொலைபேசி மணி, மறுமுனை குரல்

– ஜெர்மன் வானொலியில் ஹெஸ் காணவில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். அவரை உடனடியாக நீங்கள் இருவரும் சென்று பார்க்கவேண்டும்.

– அவர் மருத்துவமனையில் இருக்கிறார். மருத்துவமனை பக்கத்திலில்லை.

– என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ, உடனடியாக உங்கள் அறிக்கை எங்கள் கைக்கு வந்தாக வேண்டும்.

ஆமில்டனும் கிர்க் பட்றிக்கும் ஹெஸ் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையை அடைந்தபோது நல்லிரவுக்கும் மேல் ஆகியிருந்தது. மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிற எல்லா நோயாளிகளையும் போலவே பைஜாமாவுடன் இரும்பு கட்டிலொன்றில் ருடோல்ப் ஹெஸ் படுத்திருந்தார். கிர்க்பாட்றிக்கை பொறுத்தவரை ருடோல்ப் ஹெஸ்போன்றவர்களை எப்பொழுதுமே ஆடம்பரமும் அதிகாரமும் கலந்த சூழலில் பார்த்து பழகியிருந்தார். “ஹெஸ்ஸ¤டன் பொருந்தாத எளிமையும் அமைதியும் நிலவிய மருத்துவமனையின் சூழலை ஏற்றுக்கொள்ள தடுமாறினேன்”, பின்னர் தெரிவித்திருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோதிலும் ஜெர்மன் நாட்டு அதிகார மையத்தின் ஆளுமை தற்போதைக்கு இங்கிலாந்தில் கைதி. “உறக்கத்திலிருந்த அந்த மனிதர் எழுப்பப்பட்டதுமே என்னை யாரென்று புரிந்துகொண்டார்” என்றார் கிர்க்பட்றிக்.

ஆமில்டனுக்கும், கிர்க்பட்றிக் இருவருக்கும் நாற்காலிகள் கொண்டுவரப்பட்டன. கைதியருகே அமர்ந்தார்கள். ஹெஸ் பத்திரமாக தம்வசம் வைத்திருந்த ஒரு சிறிய குறிப்பேட்டை எடுத்துவைத்துக்கொண்டார். எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டிருப்பாரென நினைக்கிறீர்கள் 90 நிமிடம், ஒன்றரை மணிநேரம் இட்லர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதெல்லாம் வருத்தங்கள். ஆமில்டனோ, கிர்க்பட்றிக்கோ இடையில் குறுக்கிடவில்லை. அமைதியாக தங்கள் வியப்பினைமுகத்தில் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக கேட்டபடி இருந்ததனர். இடையில் அவசரமாக தொலைபேசி. கிர்க் பத்ரிக்கை அழைப்பதாக செய்தி.

– என்ன நடக்கிறது சந்தித்தீர்களா இல்லையா?

– சந்தித்தோம். மனிதர் ஹெஸ் என்பது உறுதி. சந்தேகமேயில்லை

– அவர் முடிவாக என்னதான் சொல்லவருகிறார்?

– கடந்த ஒன்றரை மணிநேரமா நாங்க அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம், ஆனாலும் இன்னும் முடிவை எட்டவில்லை.

மீண்டும் கிர்க்பத்ரிக் ஹெஸ் இருந்த அறைக்குத் திரும்பினார். இம்முறை ஹெஸ் நேரடியாக விஷயத்திற்கு வந்தார். ஏழாம் எட்வர்டை பற்றிய நூலொன்றை சில மாதங்களுக்கு முன்பு தற்செயலாக வாசித்ததாகவும், நேர்மையாக சார்பற்று எழுதப்பட்டிருந்த அந்நூல் அவரது மனமாற்றத்திற்குக் காரணமென்றும் கூறினார். அடுத்தடுத்து இங்கிலாந்து செய்யும் தவறுகளே ஐரோப்பிய பிரச்சினைகள்அனைத்துக்கும் காரணமென்றார்: 1904லிருந்தே இங்கிலாந்து பிரான்சுடன் சேர்ந்துகொண்டு ஜெர்மனுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பித்தது. 1914ல் தொடங்கிய யுத்தத்திற்கு இங்கிலாந்துதான் காரணம், ஜெர்மனல்ல. 1939ம் ஆண்டு இங்கிலாந்து மாத்திரம் போலந்து நாட்டை ஜெர்மனுக்கு எதிராக தூண்டாடாமல் இருந்தால், அவர்கள் தங்கள் நிபந்தனைகளுக்குக் கட்டுபட்டிருப்பார்கள். எனவே இரண்டு யுத்தங்களுக்குமே இங்கிலாந்துதான் காரணமென்று இட்லர் நினைப்பதாக ஹெஸ் கூறினார்.

பிரிட்டிஸ் அரசாங்கம் யுத்தத்தில் தோற்பது நிச்சயம். எங்கள் வசமிருக்கிற விமானங்களின் தரத்தையும் எண்ணிக்கையும் அமெரிக்கா, இங்கிலாந்து என சேர்ந்துவந்தாலும் ஈடு செய்யமுடியாது. எங்களிடமுள்ள பயிற்சிபெற்ற விமானிகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகம். இப்போதைக்கு விமானப் படை பலத்தில் எங்களை வெல்லும் நிலையில் நீங்களில்லை. எனினும் இட்லர் பொறுமை காத்தார். 1940ல் ஜெர்மன் எல்லைக்குள் நீங்கள் விமானப்படை தாக்குதலைத் தொடங்கியபொழுது ஓரிரு நாட்களில் நிறுத்திக் கொள்வீர்களென நினைத்தார். தவிரவும் இட்லருக்கு பிரிட்டிஷ் புராதன மற்றும் கலாச்சாரச்சின்னங்களை மீது பற்றுதலுண்டு. பதில்தாக்குதலைத் தொடுக்க பல வாரங்கள் நாங்கள் காத்திருந்ததையும் நீங்கள் மறந்துவிடக்கூடாது. எங்கள் கப்பல் படை வலிமையும் இளப்பமானதல்ல. நூற்றுக்கணக்கான நீர்மூழ்கிக்கப்பல்கள் ஜெர்மன் கப்பல் கட்டுந்தளங்களில் தயாராகிக்கொண்டிருக்கின்றன. ஓரிரு நாட்களில் உங்கள் நாட்டிற்கான அனைத்து கடல்வழிகளும் அடைக்கப்படும். என்ன செய்யபோகிறீர்கள். ஆனால் ஜெர்மனில் நிலைமைவேறு. உணவுப் பொருள்களென்றாலும், அத்தியாவசியப் பொருள்களென்றாலும் கணிசமாக சேமிப்பில் இருக்கின்றன. உள்நாட்டில் திட்டமிட்டு உற்பத்தியிருப்பதோடு, எங்கள் ஆக்ரமிப்பில் உள்ள நாடுகளிலிருந்தும் கொண்டுவரபட்ட பொருள்கள் கையிருப்பில் உள்ளன. அடுத்து ஜெர்மன் மக்களும் தங்கள் தலைவனை முழுமையாக நம்புகிறார்கள். ஆக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எங்கள் கை ஓங்கியிருக்கிறது.

– பிறகு எதற்காக இங்கே வந்தீர்கள்.

– சொல்கிறேன். போரினால் என்ன லாபம் சொல்லுகுங்கள். பல்லாயிரக் கணக்கான உயிர்பலியையும், எளிதில் சீரமைப்பபடமுடியாத அழிவுகளையும் தவிர்த்து வேறென்ன காணப்போகிறோம். நான் இங்கே வந்திருப்பது எங்கள் •ப்யூரெருக்குத் தெரியாது. தன்னிச்சையாகத்தான் வந்தேன். போரில் வெல்வதென்பது உங்களுக்குச் சாத்தியமே இல்லையென்ற நிலையில், சமாதானமாக போவதுதான் புத்திசாலித்தனமென்று அறிவுறுத்த வந்தேன். தவிர இட்லருக்கும் எனக்குமான நட்பு மிக நெருக்கமானது. ஏறக்குறைய பதினெட்டு ஆண்டுகளாக அவரோடு பழக்கம். அவருக்கு உண்மையில் இங்கிலாந்துமீது எவ்வித தப்பான எண்ணமுமில்லை. உலகமனைத்தையும் ஜெர்மன் கீழ் கொண்டுவரவேண்டுமென்ற எண்ணமெல்லாம் பலரும் நினைப்பதுபோல எங்களுக்கில்லை. எங்கள் ஆர்வமனைத்தும் ஜெர்மன் மற்றும் ஐரோப்பாவின் நலன்களன்றி வேறு கனவுகளில்லை. குறிப்பாக நாளை பிரிட்டிஷ் முடியாட்சிக்கு வீழ்ச்சியெனில் முதலில் வருந்துவது அவராகத்தானிருக்கும்.

(தொடரும்)

—————————————————————
1. http://en.wikipedia.org/wiki/Lebensraum

2. Marx Brothers – – ஐம்பதுகளில் புகழ்பெற்றிருந்த அமெரிக்க சகோதர்கள் நடிப்பில் வெளிவந்த திரைபடங்கள் நகைச்சுவைக்குப் பெயர்பெற்றவை.

Series Navigationகாத்திருக்கிறேன்எனது இலக்கிய அனுபவங்கள் – 7 எழுத்தாளரும் புத்தக வெளியீடும்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *