பஞ்சதந்திரம் – தொடர் – நூல்வரலாறு

This entry is part 33 of 34 in the series 17 ஜூலை 2011

நூல் வரலாறு

உலக இலக்கியத்தில் முன்வரிசையில் முதலிடம் பெற்று விளங்குவது பஞ்சதந்திரம்.

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர், 1859-ம் ஆண்டில் இந்நூலை ஜெர்மன் மொழியில் தியோடோர் பென்•பே (Theodor Benfey) அவர்கள் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்துதான் பஞ்சதந்திரத்தின் வரலாற்றை ஆராய்வதில் பல அறிஞர்கள் ஈடுபட்டனர். பல்வேறு நாடுகளின் இலக்கியங் களை ஒன்றோடு ஒன்று ஒப்புநோக்கி ஆராயும் விஞ்ஞானத்துறை என்பதே இதிலிருந்துதான் ஆரம்பமாயிற்று என்று கூறப் படுகிறது.

இந்நூலின் வரலாற்றை ஆராய்ந்த அறிஞர் யோஹான் ஹெர்டல் அவர்கள் இது கி.பி. முன்றாவது நூற்றாண்டில் நூல் வடிவத்தில் இந்தியாவில் இருந்தது என்கிறார். என்றாலும், நூல் வடிவம் பெறுவதற்கு முன்பே, இந்திய மக்களிடையே பல நூற்றாண்டுகளாகப் பஞ்சதந்திரம் கர்ணபரம்பரையாக வழங்கி, மக்களின் கருத்திலும் கற்பனையிலும் கலந்து விட்டிருக்கிறது என்பது உண்மை.

இதன் மூலநூல் சம்ஸ்கிருத மொழியுடன் நெருங்கிய தொடர்புள்ள பைசாச-பிராகிருதம் என்ற மொழியில் இருந்தது. அந்நூல் என்றோ அழிந்து மறைந்து போயிற்று.

இந்த மூலநூல் பண்டைக்கால பாரசீக மொழி (பஹ்லாவி மொழி) யில்தான் முதன் முதலாக, கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு மத்தியிலே, மொழிபெயர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விரைவிலேயே கி.பி. 570ம் ஆண்டில் சிரியாக் மொழியிலும் அரபு மொழியிலும் மொழிபெயர்ப்புக்கள் வெளியாயின. பல பாட பேதங்களுடன் பாரசீக மொழியில் ஏழு திருத்தப் பதிப்புக்களும், அரபு மொழியில் பத்துத் திருத்தப் பதிப்புக்களும் வெளிவந்தன.

பஹ்லாவி மொழிபெயர்ப்பை மூல நூலாகக்கொண்டு கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பாவில் மொழிபெயர்ப்புக்கள் வெளிவரலாயின. பதினைந்தாவது நூற்றாண்டு முடிவதற்குள் கிரேக்கம், லத்தீன். ஸ்பானிஷ், இத்தாலி, ஜெர்மன், ஆங்கிலம், பண்டை ஸ்லவொனிக், செக், மொழிகளில் பஞ்சதந்திரம் வெளி வந்தது. தற்சமயம் 200 திருத்தப் பதிப்புக்களுடன் ஐம்பது மொழிகளின் பஞ்சத்திரம் உலகமெங்கும் வழங்கி வருகிறது.

பஞ்சதந்திரத்தின் மூலநூல் காஷ்மீரத்தில் தோன்றியது என்கிறார் ஹெர்டல் அவர்கள். தென்மேற்கு இந்தியாவில் தோன்றியிருக்கக்கூடும் என்று பிராங்கிலின் எட்கர்டன் அவர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள். ஆனால், இதைப் பற்றி எட்கர்டன் அவர்களுக்கே ரொம்பவும் சந்தேகம் உண்டு. இருவருடைய அபிப்பிராயங்களுக்கும் போதிய திடமான ஆதாரங்கள் இல்லை.

மூலநூல் மறைந்த பிறகு, அதன் திருத்தப் பதிப்புக்களாக, பல பேதங்களுடன், வெளிவந்த நான்கு தனித்தனி நூல்களில் பஞ்சதந்திரம் இடம்பெற்று வந்திருக்கிறது. அவையாவன: (1) தந்த்ராக்யாயிகா என்கிற நூல், இந்நூலை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து 1909-ம் ஆண்டில் ஹெர்டெல் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். (2) தென்னாட்டு பஞ்சதந்திரம் என்கிற பிரதியொன்றும் உண்டு. இது தெற்கு, தென் மேற்கு இந்தியாவில் வழங்கி வந்தது. இதற்கு நேபாள மொழியில் ஒரு கிளை நூல் உண்டு. இவ்விரண்டையும் ஆதாரமாகக் கொண்டு வங்காளத்தில் 14-வது நூற்றாண்டில் ஹிதோபதேசம் வெளிவந்தது. இதை நாராயணர் என்பவர் இயற்றினார். இதில் பஞ்சதந்திரக் கதைகள் எல்லாம் இடம்பெற்றிருக்கவில்லை. பல மாறுபாடுகளும் காணப்பட்டன. சில புதிய கதைகள் வேறு நூல்களிலிருந்து எடுத்துப் புகுத்தப் பட்டிருந்தன. இருந்தபோதிலும், ஹிதோபதேசம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிம் மிகவும் பிரபலமடைந்தது. (3 மற்றும் 4) அழிந்துபோன பிருஹத் கதை என்கிற நூலை ஆதாரமாகக் கொண்டு எழுந்த பிருஹத் கதா மஞ்சரி என்கிற நூலும், கதா சரித் சாகரம் என்கிற நூலும் பஞ்சதந்திரக் கதைகளைத் தாங்கி வெளிவந்தன.

இவற்றில் §க்ஷமேந்திரர் எழுதிய பிருஹத் கதா மஞ்சரி என்கிற நூல் பஞ்சதந்திரக் கதைகளை ஒரு சில பக்கங்களில் சுருக்கமாகச் சொல்லி முடித்து விடுகிறது. பல கதைகள் இல்லை. ஆகவே பஞ்சதந்திரத்தின் முழு உருவத்தையும் அதிலிருந்து தெரிய முடியாது.

சோமதேவர் எழுதிய கதா சரித் சாகரம் என்கிற நூலைப் பார்ப்போமானால், அதில் பஞ்சதந்திரதில் முகவுரையாகக் கூறப்படும் கதை இடம் பெறவில்லை. ‘மித்ரபேதம்’ (நட்பு அறுத்தல் என்கிற முதல் தந்திரத்தில் மூன்று கதைகளும், ‘அசம்பிரேக்ஷ்ய காரித்வம்’ (கவனமற்ற செய்கை) என்கிற ஐந்தாவது தந்திரத்தில் இரண்டு கதைகளும் அந்த நூலில் இடம் பெறவில்லை. பிருஹத்கதாமஞ்சரியிலும் கதாசரித்சாகரத்திலும் பஞ்சதந்திரத்திலுள்ள நீதிவாக்கியங்களும், பழமொழிகளும் அநேகமாக அறவே நீக்கப்பட்டு கதைகள் மட்டும் கூறப்பட்டுள்ளன.

இவ்விரு நூல்கள் போக, ஜைனத் திருத்தப் பதிப்புகள் என்று இரண்டு பதிப்புகள் வேறு உண்டு. “டெக்ஸ்டஸ் சிம்பிளிசியோர்” (Textus Simplicior) என்கிற முதலாவது பதிப்பு கி.பி. 900-1199ம் ஆண்டுகளுக்கு இடையே நிலவி வந்தது; மத்திய, மேற்கு இந்தியாவில் பிரபலமாக இருந்துவந்தது. இந்நூலில் ஐந்தாவது தந்திரம் முற்றிலும் புதிதாக இருக்கிறது. மூலக்கதை கிளைக்கதையாக மாற்றப் பட்டும், கிளைக்கதைகள் மூலக்கதைகளாகவும் மாற்றப்பட்டும் காணப்படுகிறது. பஞ்ச தந்திரத்தில்லாத வேறு கதைகள் சில, ‘காமண்டகி’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டு புகுத்தப்பட்டுள்ளன.

இரண்டாவது ஜைனத் திருத்தப்பதிப்பு பூர்ணபத்திரர் என்கிற ஜைன முனிவர் இயற்றியது. இது கி.பி. 1199-ம் ஆண்டில் இயற்றப்பெற்றது. ஆரம்பத்தில் குறிப்பிட்ட தந்த்ராக்யாயிகா என்கிற நூலையும், கடைசியில் குறிப்பிட்ட “சிம்பிளிசியோர்” பதிப்புப் பிரதியையும், அடையாளம் தெரியாத வேறு சில நூல்களையும் ஆதாரமாகக் கொண்டு பூர்ணபத்திரர் இந்தத் திருத்தப்பதிப்பை இயற்றினார். இதனை 1908-ம் ஆண்டில் ஹெர்ட்டல் அவர்கள் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டார்கள்.

இந்தத் தமிழ் மொழிபெயர்ப்புக்கு பூர்ணபத்திரரின் பிரதியே மூல நூலாக அமைந்துள்ளது.

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 9பனியுகத்தின் தோற்றமும், மாற்றமும் ! கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும் -2
author

க்ருஷாங்கினி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *