பழமொழிகளில் திருமணம்

This entry is part 20 of 34 in the series 17 ஜூலை 2011

முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
திருமணம் தனி மனிதனை சமூகத்தில் மதிப்புள்ளவனாக ஆக்குகிறது. சமுதாயத்துடன் நெருங்கிய தொடர்புக்குத் திருமண உறவு ஒரு காரணமாக அமைகின்றது எனலா. ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைவதும், திருப்புமுனையை ஏற்படுத்துவதும் திருமணமே ஆகும்.
இத்திருமணத்தைப் பற்றிய பழமொழிகள் பல வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பழமொழிகள் பண்டைக் காலத்தில் நிகழ்ந்த திருமணப் பழக்கவழக்கங்களை எடுத்துரைக்கின்றன. திருமணத்தின்போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை நமது முன்னோர்கள் பழமொழிகளாக்க் கூறினர். இப்பழமொழிகள் நமது வாழ்க்கைக்கு வழிகாட்டுபவனவயாக அமைகின்றன.
உள்ளுர் சம்பந்தம்
திருமண உறவினை,“சம்பந்தம்“ என்று குறிப்பிடுவர். சம+பந்தம்-சம்பந்தம் என்றாயிற்று. சம்மான உறவு(பந்தம்-உற) என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். இச்சம்பந்தம் என்ற திருமணத்தை உள்ளுரில் செய்து கொள்ளக் கூடாது என்று நம்முன்னோர் கூறியுள்ளனர்.
ஏன் உள்ளுரில் பெண்பார்த்துத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று கூறினர்? இதற்குப் பல்வேறுவிதமான காரணஙய்கள் உள்ளன. பெண்ணை உள்ளுரில் மணம் செய்து கொண்டால் அவள் எப்போதும் தனது பிறந்தகத்துக்திற்கே சென்று அங்கேயே தங்கி விடுவாள். அதுமட்டுமல்லாது வீட்டில் கணவன், மனைவிக்கிடையே ஏதேனும் சிறு ச்ச்சரவுகள் ஏற்பட்டால் உடனே பெண்ணானவள் அதனைத் தனது பிறந்தகத்தில் கூறி குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்திவிடுவாள். இதனால் குடும்பம் சிதைவடைய வாய்ப்புள்ளது. மேலும் பெண்ணின்மீது பெற்றோர்களுக்கு அதக அளவு அன்பு இருக்கும். இதனால் அவளைப் பாதுக்க்க்கவேண்டும். அவள் கண்கலங்கக் கூடாது என்ற எண்ணத்தில் தங்களை அறியாமலும், தாங்கள் செய்வது தவறு என்று தெரிந்து கொள்ளாமலும் பெண்ணின் குடும்ப விவகாரங்களில் தலையிட்டுப் பிரச்சனைக்கு வழிவகுப்பர். இதனாலும் பல பெண்களின் வாழ்க்கையானது சீர்குலைந்திருக்கின்றன. இவ்வாறெல்லாம் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நம்முன்னோர்கள்,
“உள்ளுரில் பெண்ணும் வெளியூரில் மண்ணும் ஆகாது“
என்றும்,
“உள்ளுருச் சம்பந்தமும் உள்ளங்கைச் சிரங்கும்
அரித்து கொண்டே இருக்கும்“
என்றும் பழமொழிகளைக் கூறியுள்ளனர் எனலாம்.
உள்ளுரில் பெண் எடுத்தால் மேற் கூறிய பிரச்சனைகள் எற்படும். வெளியூரில் நிலம் வாங்கினால் அதனைப் போய் அடிக்கடி பார்க்க முடியாது போய் வேறொருவர் உரிமை கொண்டாடுவதற்கு வாய்ப்பேற்பட்டுவிடும். உள்ளுரில் பெண் எடுத்தாலும் அடிக்கடி பார்த்துப் பார்த்துப் பெண்ணின் குடும்பமும்ம், ஆணின் குடும்பமும் முன்னேற வழியில்லாது போக நேரிடும். இதனையே மேற்கூறிய பழமொழி நமக்குத் தெளிவுறுத்துகின்றது.
உள்ளங்கையில் சாரி சிரங்கு இருப்பின் நமநமவென்று அரித்துக் கொண்டே இருக்கும். விரைவில் ஆறாது துன்பத்தைத் தரும். இது உள்ளுரில் திருமணம் செய்து கொள்வதற்கும் பொருந்தும். தங்களின் பெண் நன்றாக வாழவேண்டும் என்று கருதி அதிக உரிமை எடுத்துக் கொண்டு பெண்வீட்டார் தங்களது மருமகன் வீட்டுப் பிரச்சனைகளில் அதிகம் தேவையின்றித் தலையிடுவர். இதனால் பல பிரச்சனைகள் ஏற்படும். அதனாலேயே வெளியூரில் பெண் எடுக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் பழமொழிகள் வாயிலாக்க் கூறினர்.
சிலர் வெளியூர் சென்று வர அச்சப்பட்டுக்கொண்டு உள்ளுரில் திருமணம் பேசி முடிக்கக் கருதுவர். இது தவறான ஒன்றாகும் என்று நமது முன்னோர்கள் கருதினர். உள்ளுரில் பெண் எடுக்க்க் கூடாது என்று கூறியதோடு மட்டுமல்லாது அவரை இழிவாகவும் பழித்துக் கூறினர். அவ்வாறு உள்ளுரில் பெண் எடுப்பவரை,
“நடக்கச் (நடப்பதற்கு) சங்கடப்பட்டுக் (துன்பப்பட்டு) கொண்டு சிற்றப்பன் வீட்டில் பெண் கேட்டானாம்“ (சிற்றப்பன்-சிறிய தந்தை)
என்ற பழமொழி இழிவாக இடித்துரைப்பது போன்று அமைகின்றது. வெகுதொலைவில் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று கூறினால் அது வேண்டாம் இங்கேயே பிறிதொன்றைப் பார்த்து வாங்கிவிடலாம் என்பவரைப் பார்த்தும் இப்பழமொழியைக் கூறுவர்.
நல்ல பண்பா பெண்ணாகவும், அவளது குடும்பம் நல்ல பண்புமிக்க குடும்பமாகவும் இருந்தால் உள்ளுரில் இருப்பவர்களே அப்பெண்ணை மணம் செய்து கொடுக்குமாறு பெண்கேட்டு வருவார்கள். இஃது உலக இயல்வு. அதுபோல ஒரு ஆடவன் நல்ல பண்புள்ள, ஒழுக்கமுடையவனாகவும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனாகவும் இருப்பின் உள்ளுரில் அவனுக்குத் தங்களது பெண்ணைக் கொடுப்பதற்கு முன்வருவர்.
பெண்ணோ ஆணோ பண்பிலியாக இருப்பின் அவர்களை ஒருவரும் மதித்து அவர்களைத் திருமணம் செய்து கொள் மாட்டார்கள். இதனை,
“நல்ல மாடுன்னா (என்றால்) உள்ளுருக்குள்ளே
(உள்ளுரில்) விலைபோகும்“
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. அதனால் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஒழுக்கத்துடன் பண்புடையவர்களாகப் பிறர் மதிக்கும் வண்ணம் வாழ்தல் வேண்டும் என்ற பண்பாட்டினையும் இப்பழமொழி வலியுறுத்துவதாக அமைந்துள்ளது எனலாம்.
பெண் பார்த்தல்
திருமணத்திற்குத் தற்போது போல பழங்காலத்தில் பெண்பார்க்க வில்லை. வேளாண்மையே தலாயாய தொழிலாக விளங்கியதால் அத்தொழில் சிறந்த பெண்களையே ஆண்கள் விரும்பி மணந்தனர். பெண்களைத் தற்போது பெண்வீட்டிற்குச் சென்று பார்ப்பது அரிது. விவசாய வேலை பார்க்கின்றபோதே மணமகனின் சகோதரி பெண்ணைப் பார்த்து தனது சகோதரனுக்கு ஏற்றவளா? என்று அறிந்து மணப்பெண்ணைத் தேர்ந்தெடுத்தாள். நம்முனோரின் இத்தகைய வழக்கத்தை,
“களைவெட்டினது மாதிரியும் இருக்கும்
தம்பிக்குப் பொண்ணுப் பார்த்த்து மாதிரியும் இருக்கும்“
என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது.
களை வெட்டும்போது பயிரை வெட்டிவிடாது களைகளை நன்கு வெட்டி எடுத்துப் போட்டுவிட்டுப் பயிருக்கு நன்கு மண்ணை அணைத்துவிட்டு வேகமாக்க் களைவெட்டிக் கொண்டே வரவேண்டும். இதனை வைத்தே ஒரு பெண்ணின் திறமையை அறிந்து கொண்டு அவளை மணமகனின் சகோதரி தனது இளைய சகோதரனுக்கு மணப்பெண்ணாகத் தேர்ந்தெடுத்தாள். இத்தகைய நமது முன்னோரின் வழக்கத்தை உள்ளீடாக இப்பழமொழி கொண்டுள்ளது எனலாம்.
திருமணத்தை முடித்தல்
திருமணம் இருமனம் மகிழ்கின்ற வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாகும். திருமணம் இருதரப்புக்கும் (மணம் செய்து கொள்வோர், கொடுப்போர்) மகிழ்ச்சியைத் தருகின்றது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நிகழும் திருமணம் இன்பமயமானதாகும். இங்ஙனம் அமையும் திருமணத்தின் சிறப்பை உணர்ந்தே நமது முன்னோர்கள்,
“திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது“
என்று கூறினர். இத்திருமணத்தை நடத்தி முடிப்பது எளிமையாதன்று. உற்றார் உறவினர் உள்ளிட்டோரை ஒவொன்றுக்கும் சென்று அழைத்து அவர்களை ஒருங்கிணைத்துத் திருமணத்தை நடத்துதல் வேண்டும்.
உறவுகள் ஒன்று சேரும் உன்னத விழாவாகத் திருமணம் திகழ்கின்றது எனலாம். ஒவ்வொரு உறவினரையும் ஒன்று சேர்ப்பது என்பது இயலாத ஒன்றாகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணமுடையவராக இருப்பர். இவர்களை ஒன்று கூட்டி எந்தக் குறாபடுமில்லாது திருமணத்தை நடத்துதல் வேண்டும். அதனால்தான்,
“கல்யாணத்தைப் (திருமணம்) பண்ணிப் பார்
வீட்டைக் கட்டிப் பார்“
என்று நமது முன்னோர்கள் திருமணத்தைப் பற்றிக் கூறியுள்ளனர்.
வீட்டைக் கட்டும்போது ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்துக் கட்ட வேண்டும். ஏனெனில் நீண்ட காலம் அது நிலைத்து நிற்க வேண்டும். அதுபோன்று திருமணம் என்பதும் வாழையடி வாழையாகத் தொடர்ந்து நிலைத்து நிறக்கக் கூடிய ஒரு உறவுப் பாலமாகும். அதனால் திருமணத்தை ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தல் வேண்டும்.
“திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்“
என்ற பழமொழி திருமணத்தின் முக்கியத்துவத்தை விளக்குகின்றது. பயிர் எங்ஙனம் விதை தந்து அதிலிருந்து பயிர் வந்து மீண்டும் அதிலிருந்து விதை வந்து தொடர்ந்து சுழற்சியாக வருகிறதோ அதுபோல கணவன் மனைவி-குழந்தைகள் அவர்களது குழந்தைகள் எனத் தொடர்ந்து உறவுகள் காலங்காலமாக வந்து கொண்டே இருக்கும் ஒரு தலைமுறையின் தொடக்கமாகத் திருமணம் விளங்குவதை மேற்குறிப்பிட்ட பழமொழி விளக்குவது நோக்கத்தக்கது.
பெண் பார்த்தல், நிச்சயம் செய்தல், அழைப்புக் கொடுத்தல், மனை போடுதல், உள்ளிட்ட திருமணம் சார்ந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றிற்கும் உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்று கூறி அவர்களை அழைத்து வந்து திருமணத்தை முடித்தல் வேண்டும் என்பதை,
“ஆயிரம் முறை போய்ச் சொல்லி
ஒரு கல்யாணத்தை முடிக்க வேண்டும்“
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
இப்பழமொழியை இன்று,
“ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை முடிக்கணும்“
என்று தவறாக வழங்குகின்றனர். இதனால் இதன் பொருள் முற்றிலும் மாறுபட்டு விளங்குவத நோக்கத்தக்கது. உறவுகளை ஒன்று சேர்க்க வேண்டுமெனில் அவர்களுக்கு முக்கியத்துவம் தந்து பலமுறை அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று கூறி திருமணத்தை முடித்தல் வேண்டும் என்று இப்பழமி மூலம் சுற்றந்தழுவி வாழ வேண்டும் என்ற பண்பாட்டினை நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.
பெண் கொடுப்பது – பெண் எடுப்பது
யார் யாருக்குப் பெண்ணைக் கொடுப்பது? யாரிடமிருந்து பெண் எடுப்பது? என்பதும் பழமொழிகளில் விளக்கப்பட்டிருக்கின்றது. யாருக்கு வேண்டுமானாலும் பெண் கொடுத்துவிடுவது இயலாத ஒன்றாகும். அதுபோல யார் வீட்டிலிருந்தாவது பெண்ணைத் திருமணத்திற்கு எடுத்துவிட இயலாது. தன்மானம் உள்ளவனுக்குப் பெண்ணைக் கொடுக்க வேண்டும். அவனே மணந்து கொண்ட பெண்ணை நன்கு வாழ வைப்பான். மேலும் தனது சொந்த உழைப்பில் ஈட்டிய பொருள்களை வைத்தே இல்லறம் நடத்த விரும்புவான். அதுபோன்று எவ்வளவு கோபமாகப் பேசினாலும் பொறுத்துக் கொண்டு அமைதியாக விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் இருப்பவர் வீட்டிலிருந்து பெண் எடுத்தல் வேண்டும். அவ்வாறு பெண் எடுத்தால் எந்தவித இடையூறுகளும் ஏற்பட்டாது என்பதை,
“ரோசக் காரனுக்குப் பெண்ணைக் கொடு
மழுங்கப்பயல் வீட்டிலிருந்து பெண்ணை எடு“
(ரோசக் காரன்-தன்மானம் உள்ளவன், மழுங்கப்பயல்-கோபப்படாதவன்)
என்ற பழமொழி வாயிலாக நமது முன்னோர் விளக்கி இருப்பது நோக்கத்தக்கது. இல்லறம் வளமாக இருக்க மேற்குறித்த வகையில் பெண் எடுப்படுத் கொடுப்பதும் போன்ற நிகழ்வுகள் அமைதல் நலம் என்பதை இப்பழமொழி தெளிவுறுத்துகின்றது.
உறவினர்களுள் சிலர் திருமணத்தைத் தடுத்து நிறுத்த முயற்சிப்பர். ஏதேனும் சில பொய்யான காரணங்களைக் கூறித் திருமணத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவர். அவர்களின் கருத்துக்களுக்கு இடங்கொடுக்காது திருமணத்தை நடத்துதல் வேண்டும் என்பதை,
“சீப்பை(தலைவாரும் சீப்பு) ஒளித்து வைத்தால்
கல்யாணம் நின்று போய்விடுமா?“
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. தேவையற்ற காரணங்களுக்காகத் திருமணம் தடைபடுமாயின் பல்வேறுவிதமான துன்பங்களை மணமகள், மணமகன் வீட்டார் இருவரும் சந்திக்க நேரிடும். அதனால் திருமணத்தை நிறுத்தாது அதனை நடத்தி முடித்தல் வேண்டும் என்பதனையும் இப்பழமொழி உள்ளீடாக்க் கொண்டு விளங்குகின்றது. இங்கு சீப்பு என்பது சரியற்ற பொருத்தமில்லாத காரணங்களைக் குறிக்கின்ற குறியீட்டுச் சொல்லாக அமைந்துள்ளது எனலாம்.
பொன் நகை
திருமணம் என்றால் பெண் வீட்டார் பெண்ணிற்குப் பொன்னாலான நகைகளைச் செய்து போட வேண்டும் என்பது வழிவழியாகத் தொடர்ந்து சமுதாயத்தில் நிகழ்ந்து வருகின்றது. பொன் நகை இல்லை என்றால் அதற்காகப் பெண்ணை வேண்டாம் என்று கூறக் கூடாது. பொன்னைவிடப் பெண் உயர்ந்தவள் எனக் கருதிப் பெண்ணை மணந்து கொள் முன்வர வேண்டும். திருமணங்களில் பென் நகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க்க் கூடாது என்பதை,
“பொன்னை வைக்கிற எடத்துல (இடத்தில்)
பூவை வைக்கிறோம்“
என்ற பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் வலியுறுத்தினர். பொன் நகைக்கு ஆசைப்பட்டு பெண்கைளை நிராரிக்கக் கூடாது என்பதையும் மேற்குறித்த பழமொழி எடுத்துரைக்கின்றது.
பெண் – கண் போன்றவள்
பெண்ணை நமது முன்னொர்கள் உயர்வாக்க் கருதினர். அவளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஒரு பெண்ணை ஒரு ஆடவனுக்குத் திருமணம் செய்து கொடுக்கும்போது கவனமாக இருந்து செயல்படவேண்டும். ஆடவன், பண்பும், ஒழுக்கமும் நிறைந்தவனா? அவனது குடும்ப்ப் பின்னணி என்ன, அவனது பணி என்ன? என்பன போன்ற பல்வேறு விதமான கருத்துக்களை எல்லாம் ஆராய்ந்து அவ்வாடவனுக்குத் தங்களது பெண்ணை மணம் முடித்துக் கொடுக்க வேண்டும்.
ஏனெனில் பெண்ணானவள் கண்ணைப் போன்றவள். கண்ணுக்குப் பாதிப்பு ஏற்படின் எதையும் பார்க்க இயலாது வாழ்வு இருண்டு விடும். அதுபோல ஒருவனைப் பற்றி நன்றாக விசாரிக்காது அவனுக்குப் பெண்ணை மணம் முடித்துக் கொடுத்தால் பெண்ணின் வாழ்க்கை இருண்டுவிடும். இதனை உணர்ந்து பெண்ணின் பெற்றோர்கள் செயல்பட வேண்டும் என்பதை,
“பெண்ணைக் கொடுத்தோமோ?
கண்ணைக் கொடுத்தோமோ?“
என்ற பழமொழி விவரிக்கின்றது.
தனது மகள் புகுந்த வீட்டில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் அதனைப் பொறுமையாகச் செயல்பட்டு அத்தவறைக் களைதல் வேண்டும். எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுத்துவிடுதல் கூடாது. அதனால் பெண்ணின் வாழ்வு பாழாகிவிட வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து பெண்ணின் பெற்றோர்கள் நடந்து கொள்ளவேண்டம் என்றும் இப்பழமொழி தெளிவுறுத்துகின்றது.
மேலும் சில பெண்ணின் தயார் தனது மகளின் புகுந்த வீட்டுப் பிரச்சனைகளில் லையிட்டு சிறிய தவறுகளைக்கூடப் பெரிதாக்கி விடுவர். பிரச்சனைக்கு இவர்களே காரணமாக ஆவதும் உண்டு. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுத் தங்களது மகளை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து வைத்துக் கொள்வர். இது தவறான செய்கையாகும். இதனால் தாயே தனது பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்த்தைப் போன்றதாகிவிடும். இதனைத் தவிர்த்தல் வேண்டும் என்பதை,
“வாழ்கின்ற பெண்ணைத் தாயர் கெடுத்தது மாதிரி“
என்ற பழமொழி எடுத்து விளக்குகின்றது.
பெண் பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பவளாக இருத்தல் வேண்டும். உறவுகளை மதித்துத் திருமணத்தை நடத்துதல் இன்றியமையாத்தாகும். பொன்னிற்கு ஆசைப்பட்டுப் பெண்ணை மணக்க மறுக்கக் கூடாது. தனது மகள் வீட்டுப் பிரச்சனைகளில் பெண்ணைப் பெற்றோர்கள் தேவையின்றி தலையிடுதல் கூடாது. நல்ல பண்பான தகுதியான மணமகனுக்குத் தங்களது பெண்ணை மணம் செய்து கொடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு பண்பாட்டு நெறிகளை நம்முன்னோர்கள் திருமணம் பற்றிய பழமொழிகளில் நமக்கு வழங்கியுள்ளனர்.

Series Navigationவேறெந்த சொற்களும் அவனிடம் மிச்சமில்லைஅன்னையே…!
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *