எனது இலக்கிய அனுபவங்கள் – 8 கம்பாசிட்டர் கவிதை

This entry is part 19 of 32 in the series 24 ஜூலை 2011


1970 களில் புதுக்கவிதை பற்றிய வாதப் பிரதிவாதம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், நான் ஒரு சின்ன ஊரின் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பாடம் தவிர்த்த ‘நல்லொழுக்கக் கல்வி’ போன்ற வகுப்புகளில் மாணவர்களுக்கு நான் நவீன இலக்கியப் படைப்பு களையும், படைப்பாளிகளையும், சிற்றிதழ்களையும் அறிமுகப்படுத்தி வந்தேன்.

அப்போது ‘எழுத்து’வில் சி.சு.செல்லப்பா அவர்கள், ‘புதுக்கவிதை’ அறிமுகத்தை ஒரு வேள்வி போலச் செய்து வந்தார். புதிய சோதனை முயற்சிகளையும், புதிய படைப்பாளிகளையும் ‘எழுத்து’வில் அறிமுகப்படுத்தி வந்தார். அவரது புதுக் கவிதைப் பிரச்சாரத்துக்கு ஆதரவும், கண்டனமும் நிறைய எழுந்தன. அவரது முயற்சிகளைக் கேலி செய்தும் மலினப்படுத்தியும் பலர் பேசியும், எழுதியும் வந்தனர். சி.சு.செ வின் முயற்சி அசலானதுதான் என்றாலும், கவிதை எழுத முடியாதவர்கள் அவர் காட்டிய பாதை என்று சொல்லி ‘புதுக்கவிதை’ என்ற பெயரில் அந்த இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும்படி, புற்றீசல்களாய்ப் பெருகி வாராந்திரிகளிலும், திடீர்ச் சிற்றிதழ்களிலும் எழுதினார்கள். பொருளோ கவிநயமோ இல்லாத சக்கைகளாக, வெற்று வார்த்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக எழுதியும், வார்த்தைகளைக் கூட கால், அரையாக ஒடித்து அடுக்கியும் புதுக்கவிதை என்று சொல்லி எரிச்சலூட்டினார்கள். இதை ‘சோ’ கேலி செய்து ‘கம்பாசிட்டர் கவிதை’ என்று ‘துக்ளக்’கில் எழுதினார்.

எனது பள்ளி இறுதி வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பில் இது பற்றிக் கேட்டான். ‘கம்பாசிட்டர் கவிதை’ என்றால் என்ன என்று கேட்டான். உடனே நான் மாணவர்கள் ஒவ்வொருவரையும், வாய்க்கு வந்த ஏதாவது ஒரு வார்த்தையைச் சிந்திக்காமல் உடனடியாகச் சொல்லும்படி சொன்னேன்.

ஒருவன் ‘நள்ளிரவு’ என்றான். அதனைக் கரும்பலகையில் எழுதினேன். அடுத்தவன் ‘பச்சரிசி’ என்றான். முதல் வார்த்தைக்கு அடியில் அதை எழுதினேன். அடுத்தடுத்து சொல்லப்பட்ட ‘வெள்ளிக்கிழமை’, ‘ஓடினான்’, ‘வயிற்றுவலி’, ‘பரப்பு’, ‘முழு நிலவு’, ‘போயேபோச்சு’, என்பனவற்றைத் தொடர்ந்து எழுதி, ‘போதும்! அடுத்தவன் ஒரு தலைப்பு சொல்லு’ என்றேன். ‘ஓடாதே’ என்று ஒருவன் சொன்னான். அதைத் தலைப்பாக எழுதினேன். அது இப்படி அமைந்தது;

ஓடாதே!

————

நள்ளிரவு

பச்சரிசி

வெள்ளிக்கிழமை

ஓடினான்

வயிற்று வலி

பரப்பு

முழுநிலவு

போயேபோச்சு.

”இதுதான் கம்பாசிட்டர் கவிதை! இப்போது நீங்கள் எல்லோருமே கவிஞர்கள்!” என்றேன். மாணவர்கள் சிரித்தார்கள்.

”சிரிக்கிற விஷயமல்ல இது! இப்படி – சி.சு.செல்லப்பா அவர்களின் புதுக்கவிதை முயற்சியைச் சீரழிக்கிற கேவலத்தைத்தான் ‘சோ’ கேலி செய்து எழுதினார். ‘மக்களே போல்வர் கயவர்’ என்று வள்ளுவர் சொன்னபடி, இந்தப் போலிகள் நல்ல கவிதைப் பயிருக்குக் களை போன்றவர்கள். இவர்களை இனம் கண்டு ஒதுக்க வேண்டும்” என்று சொல்லி சி.சு.செ பற்றியும் அவருடைய ‘எழுத்து’ பத்திரிகை பற்றியும், புதுக்கவிதை படைப்பாளிகள் சிலரையும், அவர்களது கவிதைகளையும் அறிமுகப்படுத்திப் பேசினேன்.

வீட்டுக்கு வந்த பின், ஒரு நல்ல காரியம் செய்த திருப்திக்கிடையே ஒரு குரூர ஆசையும் எழுந்தது. நான் தலைமை ஆசிரியராகுமுன் 20 ஆண்டுகளுக்கு முன்பு பட்டதாரி ஆசிரியராக எனது ஊரில் பணியாற்றிய போது, இதுபோல் என்னால் இலக்கிய அறிமுகம் பெற்ற மாணவர்களில் சிலர் இப்போது ஆசிரியர்களாக, இலக்கியப் பிரக்ஞை மிக்கவர்களாக உயர்ந்திருக்கிறார்கள். அவர்களில் இரண்டு பேர் மேற் சொன்ன புரியாத போலிக் கவிதைகளைப் புரிந்ததாகப் பம்மாத்து பண்ணி, ‘கடவுளைக் காண மூக்கை அறிந்து கொண்டவன் கதை’யாய், ‘புரிய வில்லை’ என்று சொன்னவர்களைப் புழுவைப் போல நோக்கி ‘ஞானசூன்யங்களா’ய்க் கருதுகிறவர்கள். தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பது போல என்னிடமே என் கவிதைப் புரிதலைப் பற்றி, மதிப்பீடு செய்பவர்கள். அவர்களிடம் இந்தக் கவிதையைக் காட்டி சீண்டிப் பார்க்க வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது.

அடுத்தமுறை ஊருக்குப் போன போது அவர்கள் இருவருமே தனித்தனியாக எனக்கு எதிர்ப்பட்டாரகள். முதலில் சந்தித்தவரிடம் இந்தக் கவிதையைக் காட்டி கருத்துக் கேட்டேன். அவர் கவிதையை வாங்கி ஜாதகக் குறிப்பைப் பார்க்கிற மாதிரி சற்று எட்ட வைத்துப் பார்த்து, தலையை அசைத்தபடி, ”படிமம் பிரமாதம் சார்! உள்ளடக்கம், உருவம் நல்லா வந்திருக்கு. தலைப்பு பிரமாதம்! யார் எழுதினது சார் இது? நீங்கதான் கவிதை எழுத மாட்டீங்களே!” என்றார். ”உன்னைப்போல என் மாணவன் தான். பள்ளி இறுதி வகுப்பு” என்றேன். ”அட்டே! பள்ளி இறுதி வகுப்பு மாணவனா? அதற்குள் இவ்வளவு முதிர்ச்சியா?’ என்று அவர் புருவம் உயர்த்தினார். ‘ஒரு மாணவன் இல்லையப்பா – ஒன்பது மாணவர்!” என்று குறும்பாய்ச் சிரித்தேன். ”என்ன சொல்றீங்க? ஒம்பது மாணவர்களா இதை எழுதினாங்க?” என்று வியப்புக் காட்டினார். ”ஆமாம்” என்று அந்த கவிதை பிறந்த கதையைச் சொல்லி, அவரது பாராட்டை இடித்துக்கூறி ”இதுதான் உங்களுடைய புரிதலின் லட்சணம்!” என்றேன். அசடு வழிந்தபடியே அவர் விடை பெற்றார்.

அடுத்து அன்று மாலையே எதிர்ப்பட்ட மற்றவரிடமும் கவிதையைக் காட்டிக் கருத்துக் கேட்டேன். அவரும் அசடு வழிந்ததை ரசித்தேன்.

எல்லோரிடமும் இந்த விளையாட்டு பலித்து விடவில்லை. சென்னையில் ஒரு தடவை மார்க்ஸ் முல்லர் பவனில் நடந்த புதுக்கவிதை பற்றிய கூட்டத்தில் கவிஞர் ஞானக்கூத்தன் பேசிய போது சென்றிருந்தேன். அவர் என் நெடு நாளைய நண்பர். அவரது பேச்சு முடிந்து கலந்துரையாடலின் போது, இந்தக் கவிதையைக் காட்டிக் கருத்துக் கேட்டேன். வாங்கிப் பார்த்த அவரது முகம் சுருங்கியது. ”வேண்டாம் சபா! வேண்டாம் இந்த சோதனை விளையாட்டு! தயவு செய்து கேலி செய்ய வேண்டாம்” என்று கவிதையைத் திருப்பித் தந்தார். அவர் அசலான கவிஞர் எனபதால் போலியைப் பார்த்ததுமே இனம் கண்டு விட்டார.

கூட்டம் முடிந்ததும் அவரை அணுகி அந்தக் கவிதையின் பின்னணியைச் சொல்லி, அவரைப் புண்படுத்தி இருந்தால் பொறுத்தருள வேண்டினேன். பெருந்தன்மையுடன் அவர் அதைப் பெரிது படுத்தாமல், ”இபடித்தான் போலிகள் எங்கும் புகுந்து நம் முயற்சிகளைப் பாழ் படுத்துகிறார்கள். ஆனால் கால ஓட்டத்தில் போலிகள் காணாமல் போய்விடுவார்கள். அசல் நிற்கும்” என்றார்.

அது இன்று உண்மையாகி விட்டது. புதுக்கவிதைக்கு இன்று அந்தஸ்து கிடைத்து விட்டது. 0

வே.சபாநாயகம்

Series Navigationகாதல் பரிசுசெல்வராஜ் ஜெகதீசனின் ‘ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’- ஒரு பார்வை
author

வே.சபாநாயகம்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *