மகிழ்ச்சிக்கான இரகசியம் இரகசியம் : ரோண்டா பைரன் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு

This entry is part 36 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

மகிழ்ச்சிக்கான இரகசியம்
===============================

இரகசியம் : ரோண்டா பைரன் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு

ஒரு காலத்தில் துப்பறியும் நூல்கள் விற்பனையாவது போல இப்போது தன்னம்பிக்கை நூல்கள் விற்பனையாகின்றன. படைப்பிலக்கியம் தரும் மன எழுச்சியும் தன்னம்பிக்கையும் வாழ்வு பற்றிய தரிசனமும் இந்திய சமூகத்தின் அரசியல் நெறிமுறையிலிருந்து நழுவி விட்டதன் அடையாளமாக்க்க் கூட இதை ஒரு வகையில் கொள்ளலாம். வாசகர்கள் இன்றைக்கு பல்துறை சார்ந்த விடயங்களைப் படித்துத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

தன்னம்பிக்கை சார்ந்த துறைக்கும் அதிக அளவு வாசகர்கள் இருக்கிறார்கள்.

அவ்வகை நூல்களின் தொடர்ந்த வாசிப்பு அவர்களின் தினசரி
செயல்பாட்டினைத் தீர்மானிக்கிறது. வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிக்கும் அந்த ரகசியத்தை கண்டடைகிற காரியத்தில் நூலின் ஆசிரியர் ரோண்டா பைரன் ஏடுபட்டிருக்கிறார். கண்டடைந்த ரகசியத்தில் பணம் சம்பாதித்தல், உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுதல், சக உறவுகளை மரியாதையோடு நடத்துதல் , தனக்குள் இருக்கும் மகிழ்ச்சியைக் கண்டடைதல் என்ற ரீதியில் பயன்படுத்துவது பற்றிய ஆக்கபூர்வ முறைகள் இதில் தரப்பட்டுள்ளன. இந்த முறைகளை ஆசிரியர் ரோண்டா பைரனே வெளிப்படுத்தியிருந்தால் அது ஒரு வகை ’ தெய்வீக உபதேச கூட்ட முறையாகப் போய்விடும் என்று அவர் நூலசிரியர்கள் , மத போதகர்கள் , திரைப்படத்துறையினர் என்று பலரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டும் துணைக்கழைத்தும் வெளியிட்டிருக்கிறார். கடவுள், ஜோதிடம், போன்ற விடயங்கள் நம்பிக்கையுடன் அணுகுவது போலவே இவர்கள் கூறும் “ ரகசிய முறைகளினை “ வெகு நம்பிக்கையோடு அணுகுகிற போதுதான் நூலில் தொடர்ந்து பக்கங்களை விரட்ட முடியும்.

இல்லாவிட்டால் ஏமாற்றம்தான் மிஞ்சும். அதுவும் நெருக்கடியான நேரங்களில் பணம் வந்து கொட்டுவது, நம்பிக்கையோடு இருந்தக் காரணத்தினாலேயே புற்று நோய் உட்பட பெரும் வியாதிகள் தொலைந்து
போவதும் பற்றின பல குறிப்புகளை பகுத்தறிவோடும்

விஞ்ஞானக்கண்னொணோட்டத்தோடும் அணுகுகிறபோது இது போன்ற
நூல்களின் ஆதாரமே அடிபட்டுப் போகும் . அதையும் ஒரு புறம்
இப்புத்தகத்தோடு வைத்துக் கொண்டு அணுகுவது தொந்தரவு தரும்
விசயமே. இந்நிலையில் தெய்வ நம்பிக்கை போல் இவ்வகையான
புத்தகங்கள் ரகசியங்கள் வாழ்க்கையை மேம்படுத்தவே என்ற ஒரே
நம்பிக்கையை வளர்த்துக் கொண்டாலே இது போன்ற ‘ இரகசியங்களை ‘ அணுக முடியும். அவ்வாறு நம்பாமலும் , பகுத்தறிவைப் புறக்கணிக்காமலும் இப்புத்தக வாசிப்பை மேற்கொண்ட எனக்கு இது ஒரு வெறும் புத்தகவாசிப்பே என்ற கருத்தைப் பதியச் செய்தது. அதன் மறுபுறமான பலன் தரும் ரகசிய முறைகளையும் கொஞ்சம் இதில் பார்க்கலாம்.

இவ்வகை நூல்கள் பெரும்பாலும் பணம் சம்பாதிப்பது அல்லது பணம் வந்து சேர்வது பற்றியே பெரும்பாலும் பேசும். பணம் வேண்டும் என்று சிந்திப்பதாலேயே பணம் வந்து விடும். பணத்தைக் கொண்டு வர மிகவும் சக்தி வாய்ந்த ஒரு வழிமுறை பணத்தைப் பிறருக்குக் கொடுத்தல் என்பது பற்றியும் இவை பேசும். செல்வமும், ஆன்மீகமும் தண்ணீரும் எண்ணெயும் போல் ஊறிக் கிடக்க வேண்டும். இதற்கான ஈர்ப்பு விதியை படைப்பமைப்பின் சகலமும் சார்ந்திருக்கும் ஒரு போதும் பிறழாத மாபெரும் விதி என்று அழைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மகிழ்ச்சியாகவும் பிரமாதமாகவும் ஒருவர் இருப்பதாகக் கற்பனைத்துக் கொள்வதே மகிழ்ச்சியின் அடிப்படையாக இருக்கிறது. வியாதி இருந்தாலும் அதை எண்ணத்தில் உதறித் தள்ளுவதை அடிப்படையாக்கக் கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. ஆற்றலால் முழுமையடைந்த காந்தமான ஒருவரும் எல்லாவற்றையும் உள்னோக்கி இழுத்துக் கொள்ள முடியும். பிரபஞ்சமே எண்ணத்திலிருந்து பிறப்பதால் பிரபஞ்சத்தையே எண்ணங்களால் மாற்ற முடிவதைப் பற்றியும் இதில் சொல்கிறார்கள். மேற்கத்திய சமூக அமைப்பும், நடைமுறைகளும் இதற்கு ஒத்துழைக்கும்படியாக இருக்கலாம். ஆனால் இந்திய நடைமுறைகளும், சூழல்களும் அவ்வாராக இருப்பதாக்ச் சொல்ல முடியாது.

இக்கணத்தில் சந்தோசமாக இருங்கள். மன மகிழ்வான உணர்வைப் இப்புத்தகத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்றால் “ இரகசியத்தின் “ முக்கியமான பகுதி உங்களுக்குள் கிடைத்து விட்டது என்று சொல்லலாம். என்று ஒரு முனைவரின் கூற்று இதில் இடம் பெற்றிருக்கிறது.

இப்புத்தகத்தின் கருத்துக்களை பங்களித்தோரின் பட்டியல் ஆச்சர்யப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. ‘ சிக்கன் சூப் பார் தி சோல் “ என்ற 10 கோடிப் பிரதிகள் விற்ற நூலின் ஆசிரியர் ஜான் கேன் பீல்டு முதல் முதல் மூன்று கோடிப்பிரதிகள் விற்ற ‘ மென் ஆர் ப்ர்ம் மார்ஸ், விமன் ஆர் பிரம் வீனஸ் ஆசிரியர் ஜான் கீரே வரை உள்ளார்கள். கற்கும் திறனில் குறைபாடு உடையவராக இருந்த ஜான் டிமார்டினி முதல் பில் ஹாரிஸ் போன்ற பெரும் பேச்சாளர் வரை இருக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன் நடைபாதை ஓரம் வசித்த ஜோ விட்டாலே முதல் ப்ரோ ஆலன் உல்ப் போன்ற இயற்பியலாளர்கள் கூட இதில் இருக்கிறார்கள். அனைவரும் தேவ தூதுவர்களோ அல்லது மதப்பிரச்சாரக்காரர்களோ, மனோவியாதியின் ஒரு வகை எல்லைக் கோட்டைத் தாண்டியவர்களோ என்ற அய்யத்தை இந்நூலின் பல பக்கங்கள் யதார்த்த வாழ்வின் நடை முறைகளை சேர்த்து வைத்துப் பார்க்கிறபோது எண்ணத் தோன்றுகிறது. இந்நூலின் வடிவத்தை திரைப்பட குறுந்தகடாக மூன்று ஆண்டுகள் கண்டபோது பிரமித்துப் போனேன். அந்த பிரமிப்பு மட்டுமே நம்பிக்கையை ஆழமாகத் தந்துவிட முடியாது என்று எண்ணுகிறேன்.

தமிழ் மொழிபெயர்ப்பாளர் பி.எஸ்.வி.குமாரசாமி பற்றிய குறிப்புகள் இந்நூலில் இடம் பெறவில்லை.இன்றைக்கு குறிப்பிடத்தக்கதாக விளங்கும் “பூவுலகின் நண்பர்கள்” குழுவின் முன்னோடிகளில் முக்கியமானவராக விளங்கியவர். வெளிநாடு, வேறு துறை அக்கறை காரணமாய் இன்று மொழிபெயர்ப்பு துறையில் ஆழமான சுவடுகளில் பதித்து வருபவர் பாவ்லோ கொய்லோவின் “ சஹீர் “ போன்ற உலகப் படைப்பளிகளின் தலை சிறந்த நாவல்களை மொழிபெயர்த்திருப்பவர். எனவேதான் படைப்பியக்கச் செயல்முறை பற்றி அவர் மொழி பெயர்த்திருக்கும் பகுதிகள் சிறந்த இலக்கிய அம்சங்களுடன் விளங்குகின்றன.படைப்பியக்கச் செயல் முறைகளான கேளுங்கள், நம்புங்கள்,மற்றும் பெறுங்கள் என்பதை இந்த நூலின் மூலம் வலியுறுத்துகிறார். குமாரசாமியின் வாழ்க்கைச் செயல்பாட்டிலும் இதை சுலபமாக இனம் காண முடிவது ஆரோக்கியமானது.

– சுப்ரபாரதிமணியன்

விலை: ரூ295/- பக்கங்கள்: 210. மன்சுல் பதிப்பகம், போபால்
வெளியீடு: MANJUL PUBLISHING PVT.LTD.
2ND FLOOR: USHA PREET COMPLEX
42, MALVIYA NAGAR, USHA PREET COMPLEX,
BHOPAL-462003.

நூல் அறிமுகம்: சுப்ரபாரதிமணியன், 8/2635, பாண்டியன் நகர், திருப்பூர்- 641602.

Series Navigationபேசும் படங்கள்கலித்தொகையின் தலைவி தோழி உரையாடலில் திருமணம்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *