இலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள்

This entry is part 15 of 33 in the series 11 செப்டம்பர் 2011

– இந்திக ஹேவாவிதாரண
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை

சித்திரவதையென்பது, மனித வர்க்கத்தினால் தனது சக மனிதர்களுக்கு இழைக்கப்படும் மிகவும் கீழ்த்தரமான செயல்களிலொன்று என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது. இலங்கை கூட அதனை ஏற்றுக் கொண்டு ‘1994ம் ஆண்டின் 22ம் இலக்கச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அச் சட்டத்தின் மூலம் குரூர, மனிதாபிமானமற்ற மற்றும் அவமரியாதையான சித்திரவதைகளுக்கு எதிராக நடந்துகொள்ள வேண்டுமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு நடந்துகொள்வதற்காக காவல்துறையினருக்கு பூரண அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, நாட்டின் சாதாரண பொதுமக்கள் எந்தவிதமான சித்திரவதைகளுமற்று வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தப்படுவதே இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பிறகு, சித்திரவதையைத் தடுப்பதற்காக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல்துறையினராலேயே அதிகளவில் மக்கள் சித்திரவதைகளுக்கும், குரூரமான நடவடிக்கைகளுக்கும் ஆளாகியுள்ளனர்.

சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு கடந்த 17 வருட காலத்துக்குள் நாட்டின் மிகப் பரந்தளவிலான மக்கள் தொகையினர் மீது காவல்துறையினரால் பல்வேறு விதமான சித்திரவதைகளும், குரூர நடவடிக்கைகளும் பிரயோகிக்கப்பட்டுள்ளன. தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக எனக் கூறி நடத்தப்படும் இச் சித்திரவதைகளினதும் குரூர நடவடிக்கைகளினதும் காரணத்தால் பொதுமக்கள் இறந்துபோன, ஊனமான நிலைக்கு ஆளாகிய மற்றும் நிகழ்ந்த அவமானத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் அனேகம்.

இங்கு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு மிகவும் வருந்தத்தக்கதாக 2002 ஆம் ஆண்டில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அது, ஹினிதும எனும் பிரதேசத்தில் 10, 12 வயதுகளையுடைய பாடசாலை மாணவர்கள் இருவரை, திருட்டொன்றை நடத்தியதாகக் குறிப்பிட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டதாகும். தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக எனக் கூறி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் இருவருக்கும் முழங்காலில் இருக்கப் பணித்தல், காதுகளிரண்டையும் பிடித்துக் கொண்டு உயரப் பாய்தல், கால்களை கம்புகளால் தாக்குதல், நகங்களுக்குள் பல்வேறு விதமான பொருட்களை உட்செலுத்துதல், அந்தரங்க உறுப்புக்களை இழுப்பறையொன்றுக்குள் தள்ளிப் பூட்டுதல் போன்ற குரூரமான சித்திரவதைகள் காவல்நிலையத்துக்குள் வைத்து இச் சிறுவர்கள் மீது பிரயோகிக்கப்பட்டுள்ளன.

அன்றிலிருந்து காவல்துறையினரால் பிரயோகிக்கப்பட்ட பல்வேறு விதமான சித்திரவதைகளும் மிக வருந்தத்தக்கதான சம்பவங்களாக மக்கள் மத்தியில் சென்றடைந்த போதும், பாரிய அளவிலான சித்திரவதைகளும் குரூரமான நடவடிக்கைகளும் சம்பந்தமான நிலைப்பாடு இன்னும் இரகசியமான முறையிலேயே இருக்கிறது.

அண்மையில் மிகப் பெரியளவில் பிரசித்தமான சம்பவமாக அங்குலானை காவல்துறையினரால் இளைஞர்கள் இருவர் பல்வேறு விதமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டதன் பிற்பாடு சுட்டுக் கொல்லப்பட்டதைக் குறிப்பிடலாம். அப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரைக் கிண்டல் செய்ததே, 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி நடைபெற்ற இச் சம்பவத்தின் பின்னணியாக அமைந்திருந்தது. கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கிணங்கி சட்டத்தைக் கையிலெடுத்த காவல்துறையினர், இளைஞர்கள் இருவரையும் பல்வேறு சித்திரவதைகளுக்கும் ஆளாக்கிய பின்னர் சுட்டுக் கொன்றிருந்தனர்.

2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04ம் திகதி உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்று வந்த நிபுன ராமநாயக்க எனும் மாணவனைத் தாக்கியதற்கு எதிராக இன்னும் ஒழுங்கான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உயர் காவல்துறை அதிகாரியொருவரின் மகனுடன் ஏற்பட்ட சிறு தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு காவல்துறை அதிகாரிகள் சிலரால் கடத்திச் செல்லப்பட்ட இம் மாணவன் மிகவும் மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். பிறகு இம் மாணவன் தாக்கப்பட்டது சம்பந்தமாக மாணவனின் தாயாரினால் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டது. காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இம் முறைப்பாட்டைப் பதிவு செய்த குறிப்புப் புத்தகம் கூட தற்பொழுது காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளது. இது நம் நாட்டு காவல்துறையினர், மாணவனொருவனை மிக மோசமான முறையில் தாக்கி, பிரசித்தமான இரண்டாவது சம்பவமாகும்.

இதற்கு மேலதிகமாக கல்கிஸ்ஸ பிரதேசத்தில், இரயிலொன்றுக்கு கல்லெறிந்ததாகக் குறிப்பிட்டு மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனொருவரை கடற்கரையில் வைத்துத் தாக்கி, அவரை கடலில் மூழ்கி இறக்கும்படி செய்ததுவும், தெமட்டகொட பிரதேசத்தில் ஹோட்டலொன்றில் கடமை புரிந்த இந்திய சமையல்காரரொருவரைக் கொல்லத் திட்டமிட்டதுவும் இந் நாட்டில் குரூர சித்திரவதைகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் காவல்துறையினரே. கொட்டாவ பிரதேசத்து காவல்நிலையத்துக்குள் வைத்து இளைஞரொருவரைத் தாக்கி, கை விலங்குடனேயே இறப்பை எய்தச் செய்ததுவும், சிறையறைக்குள் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் குறிப்பிட்டு சடலத்தை உறவினர்களிடம் கையளித்ததுவும் கொட்டாவ காவல்துறையினராலேயே நடைபெற்றது.

தலங்கம பிரதேசத்தில் ஒருவர் திருடனொருவனைப் பிடித்து கைவிட்டதால், அந் நபரை திருடனெனக் கூறிக் கைது செய்ததில் மனமுடைந்து, காவல்துறையினரின் சித்திரவதைகளைத் தாங்க முடியாததன் காரணத்தால்தான் இறந்துபோனார்.

இவ்வாறாக பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் குரூர சித்திரவதைகளுக்கு மேலதிகமாக பாதாள உலகோடு சம்பந்தப்பட்ட நபர்கள் சிக்கும்போது எந்தவொரு சட்டத்தையும் பின்பற்றாது அவர்களைச் சுட்டுக் கொல்வதுவும் இந் நாட்டில் அமைதியைக் காப்பதற்காக இருக்கும் காவல்துறையினரே. காவல்துறை மீது வெடிகுண்டெறிய முயற்சித்தல், துப்பாக்கியால் சுட முயற்சித்தல் மற்றும் தப்பிச் செல்ல முயற்சித்தல் ஆகிய காரணங்களைக் காட்டி இவ்வாறான நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சட்டத்தைத் தமது கையிலெடுத்து செயலாற்றி வரும் காவல்துறையினருக்கு எதிராக இன்றும் கூட நீதி நிலைநாட்டப்படவில்லை. இதில் கடந்த ஆகஸ்ட் 24ம் திகதி புதன்கிழமையன்று கிரிந்திவலை காவல்நிலையத்தில் நடைபெற்றதை மிகவும் அண்மையில் இடம்பெற்ற சம்பவமாகக் குறிப்பிடலாம்.

ரதாவான பிரதேசத்தில் இடம்பெற்ற சிறிய சம்பவமொன்றை அடிப்படையாகக் கொண்டு 38 வயதேயான சமிந்த சனத்குமார எனப்படும் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். எந்தவொரு சுகவீனமுமற்ற நிலையிலிருந்த இந் நபர் காவல்நிலையத்துக்குள் வைத்து மிகவும் மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். இதனால் கடும் சுகவீனமுற்ற இந் நபர் காவல்துறையினரால் ரதாவான ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிறகு இந் நபரின் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் இந் நபர் சுகவீனமுற்ற காரணத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை வீட்டினராலேயே அனுமதிக்கப்பட்டதாகச் செய்து தரும்படியும் வீட்டினரிடம் கேட்டுள்ளனர். வீட்டினரால் அவ் வேண்டுகோள் மறுக்கப்பட்டுள்ளது. உடனே காவல்துறையினர், ரதாவான வைத்தியசாலைக்குச் சென்று வீட்டினராலேயே இந் நோயாளி அனுமதிக்கப்பட்டதாகக் குறிப்பிடும்படி வைத்தியசாலை அதிகாரிகளை வற்புருத்தியுள்ளனர். எனினும் அதுவும் மறுக்கப்பட்டுள்ளது.

பிற்பாடு, சம்பந்தப்பட்ட நபர் மிகக் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அங்கிருந்து வத்துபிடிவல ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறகு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் கதைக்க முடியாத நிலையில் மிக மோசமான உடல்நிலையோடு இருக்கும் இந் நபரின் முடிவு என்னவாகும் என்பதை எம்மால் கூற இயலாது. இலங்கை காவல்துறையானது, சித்திரவதைக்கு எதிராக நடந்துகொள்வது இவ்வாறுதானா?

– இந்திக ஹேவாவிதாரண
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

Series Navigationவைகையிலிருந்து காவிரி வரைமாணவ பிள்ளைதாச்சிகள்
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *