பழமொழிகளில் உடம்பும், உடல் நலமும்

This entry is part 30 of 41 in the series 13 நவம்பர் 2011


முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் வடிவம், தோற்றம் கொடுப்பது உடல் ஆகும். இவ்வுடல் உயிர் தங்கி இருப்பதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. இவ்வுடலைக் கூடு என்றும் உயிரை அதில் தங்கும் பறவை என்றும், உடலை மெய் என்றும் உயிரை ஆவி என்றும் பலவகைகளில் கூறுவர். உடலும் உயிரும் ஒன்றை ஒன்று சார்ந்து விளங்குகின்றன.

ஒன்றற்கு ஒன்று ஆதாராமாக இவை விளங்குவது குறிப்பிடத்தக்கது. இவற்றில் ஏதும் ஒன்றில்லாவிடினும் ஒன்றுஇயங்காது. உடலை உடைக்கு ஒப்பாகக் கூறுவர். உயிர் தேவையான உடலைத் தேடிப் போய்விடும். அப்போது உயிரற்ற உடல் கிழிந்த சட்டை போன்று பயனற்றுப் போய்விடும் என்பர்.

உயிர் அழிவில்லாதது. ஆனால் உடல் அழியும் தன்மை கொண்டது என்று ஆன்ம ஞானிகள் கூறியுள்ளனர். இவ்வுடம்மை வைத்துப் பல்வேறு வாழ்வியல் விளக்கங்களை நம்முன்னோர்கள் பழமொழிகள் வாயிலாகக் கூறியுள்ளனர்.

உடல் – பெருத்தல் – இளைத்தல்

உடல், உயிர் இரண்டையும் இலக்கண நூலார் எழுத்துக்களடன் ஒப்பிட்டுக் கூறுவர். நன்னூலார்,

‘‘உடம்பும் உயிருமாம் முப்பது முதலே’’

என்று முதல் எழுத்துக்கள் குறித்து குறிப்பிடுகின்றார். (உடல் – மெய்யெழுத்து, உயிர் – உயிரெழுத்து)

இவ்வுடல் பெருத்துவிட்டால் நடக்கவோ ஓடவோ முடியாது. பல்வேறுவிதமான உடல் சார்ந்த நோய்கள் ஏற்பட்டுவிடும். அதனால் உடலை எப்போதும் போன்று ஒரோமாதிரியாகப் பெருக்கவிடாமல் வைத்துக் கொள்ள வேண்டும். இதனை,

‘‘உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக்கூட ஆகாது

சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ (சரீரம்-உடல்)

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

உதியம் என்பது ஒரு வகை மரமாகும். பப்பாளி, முருங்கை போன்று எளிதில் ஒடியும் தன்மை கொண்டது. வைரமில்லாதது. அது பெருத்தால் வீட்டிற்குப் போடும் உத்திரத்திற்குக் கூட ஆகாது.அது போன்று சரீரமாகிய உடல் பெருத்துவிட்டால் எத்தகைய வேலை செய்யவும் இயலாது. ஒன்றுக்கும் இவ்வுடலால் உதவாது நோயின் இருப்பிடாக மாறிவிடும் என்பதை இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.

சரி உடல் பெருத்துவிட்டது. என்ன செய்யலாம்? என்று வினவுபவர்களுக்கு நம் முன்னோர்கள்,

‘‘உடம்பு இளைக்க ஓடணும்’’

எனப் பழமொழி வாயிலாக வழி கூறியிருப்பது நோக்கத்தக்கது. பெருத்த உடம்பு இளைக்க சிறிது தூரம் நாள்தோறும் ஓடினால் உடல் இளைத்து நலமுடன் இருக்கும். இப்பழமொழி மக்களுக்கா உடற்பயயிற்சி முறையைக் கூறி உடல் நலத்தை வலியுறுத்துகின்றது.

உடம்பு – சுவர்

உடலை சரீரம், மெய், கூடு, என்று கூறுவது போல சுவருக்கும் உடம்பை ஒப்பிட்டுக் கூறுவர். சுவரில் படம் வரையலாம். சுவரில்லை எனில் படம் பரைய முடியாது. அதுபோன்றே உடல் நோயுடையதாக இருந்தால் எதனையும் செய்ய இயலாது. உடல் நலமுடன் இல்லை எனில் உயிர் இராது. அழிந்து விடும். உடல் நலமில்லா மனிதன் எந்த ஒரு குறிக்கோளையும் அடைய முடியாது. அதனால் உடலை நன்கு பேணிக் காக்க வேண்டும் என்ற வாழ்க்கை நெறியை,

‘‘சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும்’’

‘‘சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையலாம்’’

என்ற பழமொழிகள் விளக்கியுரைக்கின்றன.

பதினெண் சித்தர்களுள் ஒருவரான திருமூலர்,

‘‘உடம்பாற் அழியின் உயிரால் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!’’

என்று திருமந்திரத்தில் கூறுவதற்கு மேற்குறித்த பழமொழி எளிய விளக்கமாக அமைந்துள்ளது. திருமூலரின் பாடலை, ‘இரத்தினச் சுருக்கமாகப்’ பழமொழி வாயிலாக நமது முன்னோர் எடுத்துரைத்திருப்பது போற்றுதற்குரியதாகும்.

உடல் – உறவினர்

உடல் இளைத்துத் துரும்பாகி விட்டால் ஒருவரும் மரியாதை கொடுக்க மாட்டார்கள். உடலிளைத்தல் என்பது இரு வகையில் நிகழும். ஒன்று நோயால் இளைக்கும். மற்றொன்று வறுமையின் கொடுமையினால் இளைக்கும். இரண்டிலும் இளைத்திருந்தாலும் அவருக்குச் சமுதாயத்தில் மதிப்பு என்பது இராது.

நோயாளருக்கும், வறுமையுற்றோருக்கும் சமுதாயத்தில் மதிப்புக் குறைவு. இவர்களை அவர்களுடன் பிறந்தவர்கள் கூட ்மதிக்க மாட்டார்கள். இதனை,

‘‘உடம்பெளைச்சா உடன் பிறந்தார்

வீட்டுக்குக் கூடப் போகாதே’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.

வறுமையின் காரணமாக ஒருவர் தன்னுடன் பிறந்தவர் வீட்டிற்குச் சென்றால் அவரைச் சரியாக வரவேற்று அவருக்கு உதவி செய்யமாட்டார்கள். அவமதிப்பே அவருக்கு நேரும். நோயாளருக்கும் இந்நிலையே ஏற்படும். இதனை உணர்ந்து உடலை நலத்துடன் வைத்து உழைத்து நன்னிலையில் வாழ முற்பட வேண்டும் என்ற பண்பட்ட வாழ்க்கை நெறியை இப்பழமொழி உணர்த்துகிறது.

உடம்பும் – கடனும்

சிலர் கடன் கிடைக்கிறதென்று அனைவரிடமும் கடனை வாங்கிக் கொண்டே இருப்பர். மேலும் ஒரு கடனை அடைக்க புதிய கடன் ஒன்றை வாங்குவர். இன்னும் சிலரோ கடனாலேயே வாழ்க்கையை ஒட்டுவர். கடனைக் கண்டவரிடத்தில் எல்லாம் வாங்கிவிட்டு விருப்பப்பட்ட உணவுகளை நன்கு உண்டு கடன்காரர் வந்து கேட்கும்போது பணம் இல்லை என்று தாங்கள் கொடழுத்த உடலைக் காட்டி மிரட்டுவதைப் போல் பேசுவர்.

கடன் கொடுத்தவர் சற்று உடல் வலிமையில் குறைந்தவராக இருந்தால் பயந்துபோய்விடுவர். வலிமை மிகுந்தவராக இருப்பின் நன்றாக உதைத்துவிட்டுச் செல்வார். அவ்வாறு உதைத்தாலும் கடன் வாங்குபவர் வாங்கிச் செலவு செய்து கொண்டே இருப்பார் என்பதனை,

‘‘கடன ஒடன வாங்கி உடம்பத்தேத்து

கடன்காரன் வந்தால் உடம்பைக் காட்டு’’

என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.

உடம்பை வலிமையாக வைத்துக் கொண்டு கடன் கொடுத்தவர்கள் வந்து கேட்கும்போது அவனது உடலைப் பார்த்துப் பயந்துபோய்க் கடனைக் கேட்காமலேயே சென்றுவிடுவர். இவனை ஒன்றும் செய்ய முடியாது என்று முடிவு செய்துவிடுவர். இதனை இப்பழமொழி விளக்கினாலும் கடன் வாங்கினாலும் நாணயமாக, நேர்மையாக அதனைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அதிலிருந்து தவறுதல் கூடாது என்ற கருத்தையும் இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.

உழைப்பும் – உடம்பும்

உழைப்பு உடலையும், வாழ்வையம் வலிமையாக்குகிறது. உழைக்காதிருப்பின் உடல் சோம்பலுக்கு ஆட்பட்டு வலிமைகுன்றி விடுகிறது. உழைப்பதிலும் உண்மையாக உழைத்தல் வேண்டும். ஏதோ உழைத்தல் என்ற பெயரில் ஒப்புக்காக உழைத்தல் கூடாதுர். உண்மையாக உழைத்தல் வேண்டும். அவ்வாறு உழைத்துக் கிடைக்கும் பணமே உடலில் சாரும் என்பர்.  இல்லை எனில் அஃது உடலுக்கு நோயை வரவழைக்கும். இதனை உணர்ந்து எந்த வேலையை ஏற்றுக் கொண்டாலும் அதில் நேர்மையாக உழைத்துப் பொருளீட்டினால் மட்டுமே அது நலம்பயக்கும் என்பதை,

‘‘ஒழுங்காக உழைத்தால்தான் உடம்புல ஒட்டும்’ஷ

என்ற பழமொழி விளக்குகிறது. உழைத்தால் மட்டுமே உடலில் ஆற்றலாக அது தங்கும். இல்லையெனில் அது கழிவாகக் கழிந்து விடும் என்ற அரிய வாழ்வியல் உண்மையை மக்களுக்கு இப்பழமொழி அறிவுறுத்துவதாக அமைந்துள்ளது.

உடலை, உப்பிருந்த பாண்டம், ஓட்டை வாசல், கூடு என்றெல்லாம் கருதி அலட்சியப்படுத்தாது அதனைக் கண்ணுங் கருத்துமாகக் காத்து நோயின்றி நேர்மையான வாழ்க்கையை வாழ்வதற்கு இப்பழமொழிகள் வாயிலாக நம்முன்னோர்கள் வழிகாட்டுகின்றனர். முன்னோர் மொழியைப் பொன்னேபோற் போற்றிப் புகழ்பெற்று உலகில் வாழ்வோம்.

 

Series Navigationசிலையில் என்ன இருக்கிறது?தமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழமை குறும்படங்கள் திரையிடல்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Comments

  1. Avatar
    pudukkottaiyan says:

    சிலர் கடன் கிடைக்கிறதென்று அனைவரிடமும் கடனை வாங்கிக் கொண்டே இருப்பர். மேலும் ஒரு கடனை அடைக்க புதிய கடன் ஒன்றை வாங்குவர். இன்னும் சிலரோ கடனாலேயே வாழ்க்கையை ஒட்டுவர். கடனைக் கண்டவரிடத்தில் எல்லாம் வாங்கிவிட்டு விருப்பப்பட்ட உணவுகளை நன்கு உண்டு கடன்காரர் வந்து கேட்கும்போது பணம் இல்லை என்று தாங்கள் கொடழுத்த உடலைக் காட்டி மிரட்டுவதைப் போல் பேசுவர்.

    universal truth

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *