இதுவும் அதுவும் உதுவும் – 5

This entry is part 15 of 38 in the series 20 நவம்பர் 2011

மைக்கேல் ஓ’லியரியை விமானப் போக்குவரத்துத் துறையின் துக்ளக் என்று தாராளமாகச் சொல்லலாம். ஐரிஷ்காரர். ஐரிஷ்காரர்களுக்கே உரிய குண நலங்களுக்குச் சொந்தமானவர். இதில் முக்கியமனது, பிரிட்டீஷ்காரர்கள் புனிதமானது என்று மதிக்கிற எல்லாவற்றையும் தூக்கிக் கடாசுகிற துடிதுடிப்பு. இங்கிலீஷ்காரர்கள் உயிரினும் மேலாக மதிக்கிற (மதிக்கிறதாகச் சொல்கிற) மரியாதையாகப் புழங்குவதை காலால் மிதித்து விட்டுச் சிரிக்கிற ஐரிஷ் குணம் அது. கடைந்தெடுத்த கருமித்தனம், நாலு காசு சம்பாதிப்பதில் நாட்டம் என்று ஆரம்பித்து பேங்க் பேலன்ஸை அதிகரித்துக் கொண்டே போகிற குணமும் அதில் அடக்கம். தொழிலில் போட்டியை வரவேற்று மற்றவர்கள் தட்டியில் நுழைகிறபோது கோலத்தில் நுழைகிற சாதுரியம் கூட அது. எல்லாவற்றுக்கும் மேல் அபாரமான சென்ஸ் ஆப் ஹூயுமர். வரைமுறை இல்லாத கிண்டலும் அதுவே.

விமானப் போக்குவரத்துக்கும் அலாதியான ஐரிஷ் குணச் சித்திரத்துக்கும் இருக்கப்பட்ட நெருக்கம் அதிகமில்லை. விமானப் போக்குவரத்து அமெரிக்க இயந்திரத்தனத்தோடு 24 x 7 இயங்குகிற ஒன்று. அதற்கான சட்ட திட்டங்களும் மரபுகளும் டபுள் நாட் டை கட்டிய பிரிட்டீஷ் கம்பீரத்தோடு இயற்றப்பட்டுக் கைப்பிடிக்கப் படுகிறவை. தவிரவும், பறக்கிற விமானத்தில் சிரிக்க ஏதுமில்லை.

போன பாராகிராஃபை முழுக்க அடித்து விட்டு எழுத வைப்பவர் ஓ’லியரி. ஐரிஷ் விமானப் போக்குவரத்துக் கம்பெனியாகிய ரயான் ஏர் நிறுவனத்தின் தலைவர். சட்டம் என்று ஒன்று இருந்தால் அதை வளைக்கிற நம்ம புத்திசாலித்தனமும் கைவரப் பெற்றவர் ஓ’லியரி. கேட்டால், ‘For fuck’s sake‘ என்று ஆரம்பித்துப் பத்திரிகை பேட்டி கொடுக்கிறார். விமானத்தில் என்று இல்லை, ஐரிஷ் தலைநகரான டப்ளினில் டிராபிக் விதிமுறைகளையும் ஒரு கை பார்த்தவர் அவர். பரபரப்பான நகர வீதிகளில் பஸ்ஸும் டாக்சியும் போக ஓரமாக ஒரு தனித் தடம். மீதி வாய்க்காலில் எல்லாம் ஊர்கிற கார்கள். அதில் ஒன்றாகப் பயணப்பட விருப்பம் இல்லாமல் விலையுயர்ந்த தன் காருக்கு டாக்சி லைசன்ஸ் எடுத்து, பஸ்-டாக்சி லேனின் ஹாயாக ஓட்ட ஆரம்பித்ததாக ஒரு இண்டர்நெட் தகவல்.

ரயான் ஏர் கம்பெனிக்குச் சொந்தமானது ஐந்து பத்து இல்லை, முன்னூறு விமானம். அது ஒரு பட்ஜெட் ஏர்லைன்ஸ். ஆகக் குறைந்த கட்டணம். சில நேரங்களில் ரயில் டிக்கட்டை விட விமான டிக்கெட் குறைவான தொகைக்குக் கிடைக்கும். இப்படிக் குறைந்த கட்டணம் வசூலித்தாலும், நிர்வாகச் செலவில் அங்கே இங்கே மிச்சம் பிடித்து லாபம் பார்ப்பது இப்படியான சிக்கன விமானக் கம்பெனிகளின் தொழில் மூச்சு. இங்கே விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனம் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் பட்ஜெட் ஏர்லைன்ஸுக்கு உதாரணம் என்றால், லாபத்துக்கு மேல் லாபம் வந்து குவியும் பட்ஜெட் விமானக் கம்பெனிக்கு ரயான் ஏர் உதாரணம். அதுவும் ஐரோப்பாவே நிதி நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்திலும்.

லாபம் அதிகமாக அதிகமாக, பெரிய கை போட்டியாளர்களான பிரிட்டீஷ் ஏர்வேஸ், ஸ்விஸ் ஏர் போன்ற பெரிய ஏர்லைன்களை வம்புக்கிழுப்பதில் ஓ’லியரிக்கு விருப்பம் ஏற்பட்டது. பத்திரிகை விளம்பரங்கள் மூலம் அவர்களை சண்டைக்கு இழுத்தார். ரயான் ஏரின் குறைந்த கட்டணத்தைச் சொல்கிற இந்த விளம்பரங்களின் தலைப்பே அதிரடியானது – ‘தேவடியாப் பசங்க அதிகக் காசு வாங்கறாங்க’. சொல்லிய விதம் நாகரீகமில்லாதது என்றாலும் சொல்லப்பட்ட விஷயம் உண்மை என்பதால் பெரிய கம்பெனிகள் பொருமி ஜெலூசில் குடிப்பதைத் தவிர வேறேதும் செய்ய முடியாமல் போனது.

ரயான் ஏரில் என்ன மாதிரி எல்லாம் சிக்கனம் கடைப்பிடிக்கப் படுகிறது? விமானத்தில் பச்சைத் தண்ணீர் தவிர வேறே சாப்பிட, குடிக்க என்ன தேவைப்பட்டாலும் காசு கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் இந்த பட்ஜெட் சேவைகளில் சகஜம். தண்ணீருக்கும் காசு வசூலித்து கோர்ட் தலையிட்டு இலவசமாக அதை மட்டும் தரச் சொல்லி உத்தரவிட்டது இந்தியாவில் சமீபத்தில் நடந்த ஒன்று. ரயான் ஏர் தண்ணீரை இலவசமாகக் கொடுக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் ரெட்டை நாடி ஆசாமி யாராவது விமானத்தில் ஏறினால் ரெண்டு டிக்கெட் எடுத்தாகணும் என்று கண்டிப்பாகச் சொல்கிறது அது. ஓ’ரெய்லியின் புரட்சிகரமான நடவடிக்கைகளில் ஒன்று இது.

விமானத்தில் பறக்கிறவர்கள் கொண்டு வரும் பெரிய சைஸ் மூட்டை முடிச்சை எல்லாம் வாங்கி கன்வேயர் பெல்ட்டில் ஓடவிட்டு பிளேனின் வயிற்றில் அடைக்கிற ரெகுலரான செக் இன் எல்லாம் ரயான் ஏரில் கிடையாது. எழும்பூரிலிருந்து மானாமதுரைக்கு செகண்ட் கிளாஸ் திரீ டயர் ஆர்.ஏ.சியில் போகிற மாதிரி சகலமான மூட்டை முடிச்சையும் நாமே தான் விமானம் வரைக்கும் சுமந்து போய் உள்ளே போட வேண்டும். அதிக கனமான பெட்டி படுக்கை என்றால் சிறப்புக் கட்டணம் என்று சொல்ல வேண்டியதில்லை.

வேறு எங்கே இருந்தாவது வந்து சேர வேண்டிய கனெக்டிங் ஃபிளைட் தாமதமாகியோ, போக்குவரத்து நெரிசலில் சிக்கியோ விமானத்தைத் தவற விட்டால், அடுத்த விமானத்தில் அல்லது அதற்கும் அடுத்த விமானத்தில் இடம் ஒதுக்கித் தருவது விமானக் கம்பெனிகளின் பண்பாடு. சிக்கன சேவை என்றாலும் இதுதான் நடைமுறை. ஓ’லியரி இதையும் உடைத்தார்.

பிளேனைத் தவற விட்டா உன் தப்பு. ரயிலை பஸ்ஸைத் தவற விட்டா வேறே டிக்கெட் எடுத்து போறே இல்லே, அதே போல் இன்னொரு டிக்கட் எடு.

அடாவடியாக ரயான் ஏர் கொண்டு வந்த இந்த வழக்கத்தில் இன்னொரு விசேஷம், தாமதமான கனெக்டிங்க் ப்ளைட் ரயான் ஏர் விமானமாக இருந்தாலும் தப்பு அதைத் தேர்ந்தெடுத்த பயணி மேல்தான். இன்னொரு டிக்கட் எடுத்தாக வேண்டும்.

நடக்க முடியாதவர்கள், வயசானவர்களுக்காக தள்ளுவண்டிகளை ரயான் ஏர் தராது. அது விமான நிலையம் அளிக்க வேண்டிய வசதி என்று வாதாடினார் அவர். கோர்ட் தலையிட்டு ஏர்லைன்ஸும், ஏர்போர்ட்டும் ஃபிப்டி – ஃபிப்டி சமவிகிதத்தில் இப்படியான செலவினங்களைப் பகிர்ந்து கொள்ள உத்தரவானது.

ஓ’லியரி இதோடு நிறுத்தவில்லை. பஸ் மாதிரி மேலே விமானக் கூரையில் உருட்டுக் குழாய் நீள வைத்து அதைப் பிடித்துத் தொங்கியபடி நின்று கொண்டு முழுப் பயணத்தையும் நடத்தவும் வழி செய்தார். இதற்கு வரவேற்பு இருந்ததா என்பது வேறு விஷயம். பாதுகாப்பு கருதி உட்கார்ந்த நிலையில் மட்டும் விமானப் பயணம் என்று உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நடைமுறையை உடைத்த தைரியம் அவருடையது. அரை மணி நேரம் ஒரு மணி நேரம் நிற்க எல்லாம் அஞ்சக் கூடாது என்ற ஐரிஷ் மனநிலை நம்ம ஊருக்கும் பொருந்தும்.

இதெல்லாம் போதாதென்று அவர் அறிவித்த இன்னொரு அதிரடி திட்டம் விமான டாய்லெட்டைக் கட்டணக் கழிப்பிடமாக்குவது. காசு போட்டால் தான் கழிப்பறைக் கதவு திறக்கும். இப்படியும் உண்டா வானத்தில் அட்டூழியம் என்று பிரயாணிகள் பொங்கி வழிந்தாலும், அற்பமான கட்டணத்தில் ஐரோப்பாவில் எங்கே இருந்து எங்கே வேண்டுமானாலும் போக ரயான் ஏர் வழி செய்வதைப் பார்த்து அமைதியாகச் சகித்துக் கொள்ளவும் தயாரானார்கள். கட்டணக் கழிப்பறை வேண்டாம் என்றால் மாற்றுத் திட்டமும் ஓ’லியரி கைவசம் உண்டு. மூன்று டாய்லெட் உள்ள விமானத்தில் ரெண்டை அகற்றி விட்டு அங்கேயும் நாலு நாலாக எட்டு அதிக இருக்கைகளைப் போடுவது அது.

ஓ’லியரி புதிதாக அறிமுகப்படுத்தும் திட்டம் விமானப் பயணத்தின் போது காசு வாங்கிக் கொண்டு நீலப்படம் காட்டுவது. இண்டர்நெட்டில் மஞ்சள், நீல தளங்களுக்கு ஆகாயத்தில் பறந்த படியே சஞ்சரிக்க வழி செய்து கல்லாவை நிரப்புவதும் இதில் அடக்கம். பலான சைட்டுக்குப் போய் அசட்டுச் சிரிப்போடு இருக்கப்பட்டவனை எதிர் சீட்டில் குல மாதரோ குழந்தையோ பார்க்க நேர்ந்தால்? ஓ’லியரிக்கு அதொண்ணும் பெரிய விஷயம் இல்லை. அப்படியே தலையைக் குனிந்து கொண்டு நடந்து காசு போட்டு கழிப்பறைக் கதவைத் திறந்து உள்ளே போய்விட வேண்டியதுதான்.

888888888888888888
கடந்த ஞாயிறு சென்னை மற்றும் தமிழ்நாடெங்கும் சினிமா போஸ்டர்களை விட அதிகமான அளவில் ஒட்டப்பட்டுக் கவனத்தை ஈர்த்தவை பேராசிரியர் ஞானசம்பந்தனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா சுவரொட்டிகள். என் வீட்டு வாசலுக்கு நேர் எதிரே காலையில் தென்பட்ட போஸ்டரில் கமல் ஹாசன் ஒரு பக்கமும் ஞானசம்பந்தன் இன்னொரு பக்கமும் புகைப்படங்களில் சிரித்தபடி காட்சியளிக்க புரபசரை விளித்த போது சொன்னது இது.

அதை ஏன் கேக்கறீங்க. திண்டுக்கல்லே இருந்து ஒருத்தர் போன் செய்து கரிசனமா விசாரிக்கறார் – ஏங்க, பஸ் ஸ்டாண்ட்லே போஸ்டர் பாத்தேன். கமல் சார் எடுக்கற ‘ஐந்து நூல்கள்’ படத்திலே நடிக்கறீங்களாமே?

அவை நிரம்பி வழிய நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினரான கமல்ஹாசன் கிட்டத்தட்ட நாலு மணி நேரம் பொறுமையாக மற்றவர்கள் பேசி முடிக்கப் புன்னகை மாறாமல் காத்திருந்தார். நடுவே கோரிக்கை விடுக்கப் பட்ட போதெல்லாம் எழுந்து நின்று கிருஷ்ண பரமாத்மாவாக ஒரு நூற்றுச் சொச்சம் பேருக்காவது பொன்னாடை போர்த்தியதும் அந்தப் பொறுமையில் ஒரு பகுதி.

எல்லா வேடமும் சினிமாவில் போடும் போது ஆத்திகனாக வேடமிட்டால் என்ன என்று நினைத்து அப்படியும் வந்தேன். நான் குள்ளனாக நடித்தேன். ஆனால் குள்ளன் இல்லை.

கமல் முத்தாய்ப்பாக முடிக்க, பிட்டி தியாகராஜா அரங்கத்தில் கொட்டி முழக்கிய கைதட்டு ஓயவில்லை.

888888888888

வீட்டுலே நல்ல காரியம் நடக்கிற போது எங்க தெக்கத்தி ஆளுங்க நிறைய மருவாத எதிர்பார்ப்பாக. நகரத்தார் வீட்டுக் கல்யாணம்னா, வீட்டு வாசல்லே நின்னு, வர்ற விருந்தாளிகளை ஒரு குஞ்சு குளுவான் விடாமப் பார்த்து ‘வாங்க’ன்னு வரவேற்க வேண்டியது கட்டாயம். பத்து பேர் மடேடார் வேன் வச்சுட்டு வந்து இறங்கி சடபுடன்னு உள்ளே வந்தா, எண்ணி பத்து ’வாங்க’ சொல்லியே ஆகணும். அது மட்டுமில்லே, அந்த வாங்க வரவு வச்சுக்கப்படுதான்னும் கவனிக்கணும். அதாவது வந்தவர் ‘வாங்க’வைக் கேட்டதும் ‘ஆமா’ன்னு சொல்லணும். welcoming acknowledged-ன்னு அர்த்தம். ‘ஆமா’ வராதவரைக்கும் ‘வாங்க’வை ரிபீட் செஞ்சாகணும்.

சிவகங்கை, பரமக்குடி, இளையான்குடி இன்னபிற பகுதிகளிலே காது குத்துக் கல்யாணம்னாலும், பத்திரிகை அடிக்கும்போது ‘உங்கள் வரவை அன்போடு எதிர்பார்க்கும்’னு கீழே போட்டு சொந்த பந்தம் பட்டியல் கட்டாயம் இருந்தாகணும். சில பேர் ‘அன்போடு வரவேற்கும்’ பின்னிணைப்பா, ஓட்டர் லிஸ்டையே சேர்த்திருப்பாங்க.

சரியா ஃப்ரூப் பார்த்து அச்சுப் போடறதுக்குள்ளே பிரஸ்காரங்க தவிச்சுத் தடுமாறி ஊருணித் தண்ணி குடிச்சுடுவாங்க. ஒரு பெயர் விட்டுப் போனாக்கூட பெருங் கஷ்டம் . கல்யாணப் பத்திரிகை பிரிண்ட் செஞ்ச கையோட், கருமாதிப் பத்திரிகையும் அச்சடிக்க வேண்டி வரும். பின்னே, குத்துப்பழி வெட்டுபழி ஆகிடும்லே.

ஞானசம்பந்தன் சார் விழாவிலே எங்க மக்களுக்கே உரிய அவரோட தெக்கத்தி ஜாக்கிரதை தெரிஞ்சுது.

88888888888888888
ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்து போனாலும் ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனி இறங்கு முகமாக இல்லாமல் சதா ஏறுமுகமாக இருப்பது உண்மை. கிறிஸ்துமஸ் பரிசுப் பொருள் விற்பனையில் ஆப்பிள் ஐபோன், ஐபேட் அயிட்டங்கள் பிய்த்துக் கொண்டு போகின்றதாகக் கேள்வி. முக்கியமாக ஐ-போன் நாலு எஸ். காரணம் சொன்னால் சிரி. அதாவது SIRI. சிரி தெரியாதவர்களுக்காக அடுத்த சில வரிகள்.

சிரி ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷன். உற்பத்தி செய்யும்போதே ஐபோனில் இறக்கிப் பொட்டலம் கட்டிக் கொடுக்கிற இந்த மென்பொருள் ஒரு பெர்சனல் செக்ரட்டரி. ஒரு அதிகாரி தலையால் இடுகிற எல்லா வேலையையும் இடுப்பால் செய்கிற காரியதரிசி போல இயங்குவது இது. ஐபோனைக் கையில் பிடித்துக் கொண்டு பெர்லின் நகரத்தில் ஒரு பைவ் ஸ்டார் ஓட்டலில் இந்தத் தேதிக்கு ரூம் போடு என்று உத்தரவிட்டால் போதும். குரலை அறிந்து கொள்ள வாய்ஸ் ரெகக்னிஷன். புரிந்து கொள்ளத் தேவையான நேச்சுரல் லேங்குவேஜ் பிராசசிங் ஆன கம்ப்யூட்டர் புத்திசாலித்தனம். புரிந்து கொண்ட அடுத்த நொடியில் பெர்லின் நகரத்து ஓட்டல் முகவரிகளை இணையத்தில் தேடவும், தொடர்பு கொள்ளவும், ஆன் –லைனில் அறை ரிசர்வ் செய்யவும், கிரடிட் கார்டு மூலம் தொகை செலுத்தவும், ரிசர்வேஷன் உறுதியானதும் அதை இனிமையான குரலில் அறிவிக்கவும் திறமை உள்ள செக்ரட்டரி இந்த சிரி. பெண். இடம், பொருள், ஏவல் அறிந்து நேர்த்தியாக சேவை செய்கிற புத்திசாலிப் பெண்.

சிரியின் புத்திசாலித் தனத்தை வாஷிங்டன் போஸ்டில் இருந்து மாம்பலம் டைம்ஸ் வரை பத்திரிகைகள் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகின்றன. எந்தக் கேள்வியைக் கேட்டாலும் சாதுரியமாகப் பதில் சொல்கிறாள். இலக்கியம், வரலாறு, பூகோளம், அறிவியல், அரசியல் எல்லாம் அத்துப்படி.

வாழ்க்கையின் பொருள் என்ன என்று தத்துவார்த்தமாகக் கேட்டால், ‘எல்லோரிடமும் அன்பாக இருங்க. நல்ல புத்தகமாப் படியுங்க. கொழுப்பு இல்லாத ஆகாரம் சாப்பிடுங்க’ என்று கரிசனமான பதில் வருகிறது.

‘நான் குடிச்சிருக்கேன்’ என்று புலம்பினால், ‘நீ இப்போ இருக்கற இடத்துக்குப் பக்கம் நாலைஞ்சு டாக்சி இருக்கு. ஒண்ணை ஏற்பாடு செய்யறேன். ஏறிப் போ’ என்று அன்போடு சொல்கிற புத்திசாலித் தோழி இவள்.

சாயந்திரம் ஐந்து மணிக்கு டாக்டரை சந்திக்கணும் என்று சொன்னதும், குறித்துக் கொண்டு எஸ் பாஸ் சொல்கிற சிரியிடம், ‘இதை நான் ஆபீஸ் போய்ச் சேர்ந்ததும் ஞாபகப் படுத்து’ என்று அடுத்த உத்தரவு. ஆபீஸ் வந்து சேர்ந்ததை தொலைத் தொடர்பு மூலம் புரிந்து கொண்டு நினைவு படுத்த சிரி மறப்பதில்லை.

இன்னாருக்கு ஈமெயில் அனுப்பு என்று சொல்லி விட்டு, போனைக் கையில் பிடித்துக் கொண்டு என்ன சமாசாரம் மின் அஞ்சலாகப் போகவேண்டும் என்பதைப் பேசினால், சிரி பேச்சை எழுத்தாக மாற்றி ஈமெயில் அனுப்புவது உடனுக்குடன்.

கொஞ்சம் இயந்திரத் தனமான வெறும் புத்திசாலித் தனமும் உண்டு. ‘ஒரு பேங்கைக் கொள்ளை அடிக்கணும்னு ஆசை ஆசையா இருக்கு’ என்று சொன்னால், நீ நிக்கற இடத்துக்குப் பக்கம் இந்த வங்கிக்கிளை இருக்கு என்று வரைபடம் வரைந்து வழி சொல்கிற வெகுளித்தனம் அது. இல்லை, நக்கலா?

நீ ரொம்பப் புத்திசாலிப் பொண்ணு என்று சிரியிடம் வழிந்தால், ‘சும்மா இரு. மத்த மொபைல் போன் எது கிட்டேயாவது இப்படிச் சொல்வியா?’ என்று செல்லமாகக் கண்டிக்கிறாள். கெட்ட வார்த்தை சொன்னால், சீ என்று வெறுப்பை உமிழ்கிறாள்.

ஆப்பிள் கம்பெனி சிரிப் பெண்ணுக்கு முகமும் உடம்பும் கொடுக்காமல் விட்டது நல்லதுக்குத்தான். கொடுத்திருந்தால் உலகம் முழுதும் நீதிமன்றங்களில் பாலியல் வன்முறை வழக்குகள் விசாரணைக்கு வந்திருக்கும் -சட்டம் இடம் கொடுத்தால். இயந்திரம் மனிதன் மேல் பதிவு செய்யும் வழக்கு அவையெல்லாம். அழகான புத்திசாலியான ஆயுசுக்கும் அடிமையான பெண்ணைக் காமுறும் உலக ஆண்-இயத்தின் விளைவாக இருக்கும். நீதிபதிகளும் சிரி பயன்படுத்துகிறவர்களாக இருந்தால் என்ன செய்யலாம்? சிரியையே கேட்டுப் பார்க்க வேண்டியதுதான்.

888888888

Series Navigationவாசிப்பு அனுபவம்இந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா ? அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா ?
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *