.
கி.பி. 2000த்துக்கு முன்னால் என் இலக்கிய வாசிப்பு தினத்தந்தி, சிகப்பு நாடா, இந்துநேசன் என்கிற செய்தித் தாள்களிலும், பி.டி. சாமி, சாண்டில்யன் என்கிற நாவல் வாசிப்பிலும் தான் இருந்தது.. இவைகளை இலக்கிய வாசிப்பு என்று யாரேனும் ஒப்புக் கொண்டால்..
அடிப்படையில் நான் ஒரு வணிக இதழ் வாசகன். எனக்குத் தெரிந்ததெல்லாம் குமுதம், ஆனந்த விகடன், பின்னாளில் சாவி, குங்குமம் எனலாம். சுஜாதாவை நான் அவ்வண்ணமே அடையாளம் கண்டு கொண்டேன். ஆரம்பத்தில் அவரது எழுத்து கூட எனக்கு ஜேம்ஸ் ஹேட்லி சேஸைத்தான் ஞாபகப்படுத்தியது. பெரிதாக தாக்கம் ஒன்றுமில்லை. ஒரு சர்க்கஸ் கலைஞனைப்போல் அவர் வாசகர்களை இழுக்க கையாண்ட யுக்திகள் எனக்கு அறவே பிடிக்கவில்லை.
மில்லேன்னியம் ஆண்டில் எனது இளைய சகோதரன், கொஞ்சம் ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், வண்ணநிலவன் என்று பேசிக் கொண்டு திரிந்தவன், எனக்கு இலக்கிய சிந்தனை அமைப்புப் பற்றிச் சொன்னான். என்னதான் நடக்குது என்கிற க்யூரியாஸிட்டியில் அங்கே போனேன்.
அசோகமித்திரன் என்கிற பெயரை பலரும் உச்சரிக்க அங்குதான் கேட்டேன். ஆகா ஒகோ என்கிற இவரது படைப்புக்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று என் உள்மனது வேதாளம் உத்தரவிட்டது.
பட்டினப்பாக்கம் கிளை நூலகத்தில் அ.மி.யின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று கிடைத்தது. அதை வாசிக்க ஆரம்பித்தவுடன் அவர் கதைகளின் கிளெடிலாஸ்கோப் தன்மை புலப்பட்டது. கொஞ்சம் மரியாதை வர ஆரம்பித்தது.
2002ல் சிறகு இதழ் ஆரம்பிக்கப்பட்டு சொற்ப பிரதிகளே அதுவும் கணினி அச்சாக வெளியிட்டபோது பால்நிலவன் முத்துராமன் பற்றி சொன்னார்.
‘ அடுத்த இதழுக்கு முத்துராமன் கதையைக் கேட்டு வாங்கிடலாம் ‘
‘ யாரு? ‘
‘ இலக்கியத்துல ஆர்வமுள்ள ஒரு இளைஞர்.. தனியார் கம்பெனியில் வேலை பாக்கறார்.. காந்தியைப் பற்றி ஒரு கதை எழுதி வச்சிருக்கார். கேட்டு வாங்கிடலாம்..’
இரண்டாவது இதழிலேயே காந்தி பற்றிய கதையா.. நாம என்ன தேசபக்தி இதழா நடத்துறோம் என்கிற வகையில் எண்ணங்கள் ஓடியது என் உள்மனதில்.. ஆனால் இதுதான் வேண்டும் என்று டிமாண்ட் பண்ணுகிற அளவில் சிறகு அப்போது இல்லை..
எல்டாம்ஸ் ரோடில் வானவில் பண்பாட்டு மையம் என்கிற அமைப்பு ஒரு கிருத்துவ கழகத்தின் அரங்கில் நடந்த தேவதேவன் கவிதை வாசித்த ஒரு இலக்கியக் கூட்டத்தில் முத்துராமனைச் சந்தித்தேன். அவர் தன் கதையைப் பற்றி பேசியதை விட அசோகமித்திரனைப் பற்றி பேசியதுதான் அதிகம்.
சில விசயங்கள் எனக்கு ஆச்சர்யத்தைத் தந்தன. முத்துராமன் அ.மி.யின் சிறுகதைகள் பால் ஈர்க்கப்பட்டு எப்படியோ அவரது தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து அவருடன் பேசியது, ( அப்போதெல்லாம் அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.. இப்போதெல்லாம் அவரைப் பார்க்கக் கூட குடும்பத்தினரின் அனுமதி வேண்டும்), எழுதும் கதையை அவரிடம் படித்துப் பார்க்கச் சொல்லி அனுப்புவது, அவர் சொல்லும் குறைகளை அவர் பாணியிலேயே செப்பனிட்டுத் திருத்துவது, திருத்திய கதையை மீண்டும் அனுப்பி அவர் எந்தப் பத்திரிக்கைக்கு அனுப்பச் சொல்கிறாரோ அதற்கு அனுப்புவது.. அது பிரசுரமும் ஆவது..
‘ கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் மேட்டர் மாதிரி இருக்குதே’
சிரித்தார்.. கதை கொடுத்தார்.. வெளியிட்டேன்.. அது வெளிவந்த இதழைக் கொண்டு போய் கொடுக்க அவர் அலுவலகத்துக்குப் போனேன்.
‘ அசோகமித்திரன் கதையில ஒரு நக்கல் நையாண்டி இருக்கும்.. அது அவர் பேச்சிலும் உண்டு.. இன்னிக்கு அவரப் பத்தி ஒரு ஆவணப்படம் இருக்கு.. வர்றீங்களா?’
படம் முழுக்க டைட் க்ளோஸப்.. வெறும் அசோகமித்திரன் தான். சுருக்கம் விழுந்த நீண்ட முகம், நீண்ட மூக்கு, அதில் உட்கார்ந்திருக்கும் பழைய மூக்குக் கண்ணாடி.. இவரா இத்தனைக் கதைகளை எழுதியவர்?
அவரைப் பற்றிய ஆவணப்படத் திரையிடலுக்கு அவரே வருவார் என்று நான் எதிர் பார்க்கவில்லை. பேசினார். சன்னமான குரல்.. கொஞ்சம் கவனம் பிசகினால் வார்த்தைகள் விடுபட்டுப் போகும் நம் செவிகளுக்கு.
பின்னாளில் பல கூட்டங்களில் அவர் பேசக் கேட்டேன். தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் உரையாற்றக் கூடியவர் என்பதும் ஆங்கிலச் சிறுகதைகள் எழுதி இருக்கிறார் என்பது எனக்குக் கிடைத்த கூடுதல் தகவல்கள்.
மைலாப்பூர் ரானடே நூலகத்தின் மாடியில் நடைபெற்ற தீம்தரிகிட ஞானியின் வருடாந்திரக் கூட்டத்தில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார் அ.மி. வலுக்கட்டாயமாக நானே அவரருகில் போய் அமர்ந்து கொண்டு பேச்சுக் கொடுத்தேன். சிறகு பற்றிச் சொன்னேன். இதழ் கொடுத்தேன். முகவரி வாங்கிக் கொண்டேன்.
‘ சிறகுக்கு ஏதாவது எழுதுங்களேன்..’
‘ என்னை எதுக்கு எழுதச் சொல்றீங்க.. நிறைய எழுதியாச்சு.. உங்க பத்திரிக்கை நீங்க எழுதுங்க, தப்பில்ல..’
கூட்டம் முடிவதற்கு முன்னரே கிளம்பிவிட்டார்.. எனக்கும் சுவாரஸ்யமில்லை.. அப்போது மா என்கிற பத்மாவுக்கும் எக்குதப்பு கேள்வி கேட்ட ஒரு இளைஞனுக்கும் காரசார விவாதம் நடந்து கொண்டிருந்தது. ஏறக்குறைய குழாயடி ரேஞ்ச். அ.மி.யை பின் தொடர்ந்தேன். எங்கே கிளம்பி விட்டார்? எப்படி போவார்? வாகனம் இருந்தால் வீட்டை நோக்கி நடையைக் கட்ட வேண்டியதுதான்..
மனிதர் மெல்ல நடந்து லஸ் கார்னரில் இருக்கும் பேருந்து நிற்குமிடத்திற்கு போய்க் கொண்டிருந்தார். பெரிய எழுத்தாளர், வயதானவர்.. எத்தனை வாசகர்கள், ரசிகர்கள் இருப்பார்கள்.. ஒரு பய கூட இல்லை. பரிதாபமாக இருந்தது. நிகழ்வு அமைப்பாளர் களாவது ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டாமோ? பாவம் ஞானியைக் குறை சொல்ல முடியாது. அன்றைக்கு அவருக்கு குடும்பச் சிக்கலைத் தீர்க்கவே நேரம் சரியாக இருந்திருக்கும்.
‘ வணக்கம் சார்.. பஸ்லெயா போறீங்க.. யாரும் துணைக்கு வரலியா? ‘
‘ வாங்க ரவிச்சந்திரன்..( ஆச்சர்யம் பெயர் ஞாபகம் இருக்கிறது) யாரும் வரமாட்டாங்க.. என்னையே போகக்கூடாதுன்னு சொல்வாங்க.. நான் ஞானிக்காக வந்தேன்.. எட்டாயிருத்து.. வேளச்சேரி போகணும்..’
அப்போதெல்லாம் வேளச்சேரிக்கு ஒன்றோ இரண்டோ தான் பேருந்துத் தடங்கள். அவர் போக வேண்டிய தடம் எண் வந்தவுடன் கும்பலை ஒதுக்கி வழி ஏற்படுத்தி அவரை பத்திரமாக உள்ளே அனுப்பினேன். குனிந்து கையசைத்தார். நிறைவாக இருந்தது.
பேருந்துக்காக காத்திருந்த நேரத்தில் நடந்த சம்பாஷணை சுவையானது.
‘ எங்கே வேலை பாக்கறீங்க?’
சொன்னேன்.
‘ அந்த வங்கியா? அங்கே ராமன் ஒருத்தன் இருந்தான்.. நான் கணையாழியில வேலை பாத்திட்டிருந்த சமயம்.. நான் மேலே ஒரு அலுவலகத்தில் வேலை பாத்திட்டிருந்தேன். அவனை பாக்கும்போதெல்லாம் சொல்வான்.. சார் சொல்லுங்க நான் ஹெல்ப் பண்றேன்.. எனக்கு இலக்கிய ஆர்வம் உண்டு சார்.. அடுத்த இதழ் கணையாழி ரெடியான உடனே அவன வரச்சொன்னேன்.. அஞ்சலுக்கு பெயர் ஒட்டணும், தபால் தலை ஒட்டணும் இந்த மாதிரியான வேலைகள் இருந்தது.. ‘
‘ வந்தானா?’
‘ ம்ஹ¥ம்.. எனக்கு வெளியூர் போகணும்.. மன்னிச்சுக்கங்க ‘ ன்னு கழண்டுக்கிட்டான். இத மாதிரி ஒரு தடவை இல்ல.. பல தடவை.. அதனாலதான் வங்கி ஊழியர்கள் இலக்கியம் அது இதுன்னா நான் நம்பறதில்ல..’
சா. கந்தசாமியின் வீட்டில் நடந்த இலக்கியக் கூட்டத்தில் அசோகமித்திரன் பேசினார். முடிவில் கேள்வி பதில் செஷன் இருந்தது. நான் கேட்டேன்..
‘ ஏன் சார் அந்தக் கதையில் கடைசியில் அந்தப் பஸ்ஸை விபத்துக்குள்ளாக்கிட்டீங்க.. இன்னமும் அந்தக் கடைசி வரி எனக்கு மறக்கல.. சாலையோரத்தில் அந்த பஸ் செங்குத்தாக நின்றுகொண்டிருந்தது.. ஏன் ‘
‘ அது பஸ் அதனாலதான்..’
காவ்யாவின் கூட்டங்கள், தமிழச்சி தங்கபாண்டியன் பிரபலமாக ஆகாத காலத்தில் கலந்து கொண்ட அசோகமித்திரனின் ஆங்கில கதைகளின் வாசிப்புக் கூட்டம் என பல முறை அ.மி.யைச் சந்தித்திருக்கிறேன். இன்னமும் தான் ஒரு பெரிய எழுத்தாளர் என்கிற ஒளிவட்டம் அவர் தலையைச் சுற்றி இருக்கவில்லை.
அவரிடமிருந்து வருடத்திற்கு ஒரு முறை ஒரு கடிதம் வரும். அதை அப்படியே ஸ்கேன் செய்து வெளியிடுவேன் சிறகு இதழில்.. பக்கத்திலேயே அதன் வரிகளை அச்சிட்டிருப்பேன். ஏனென்றால் அவரது கையெழுத்து அப்படி..
கொஞ்ச காலமாக அவரிடமிருந்து கடிதம் காணவில்லை..
அசோகமித்ரன் ஆர் யூ ஆல்ரைட்?
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 1
- ரவுடிச் சாமியும் ரங்கமன்னாரும்
- தமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை
- அர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்..
- அப்பா
- பழமொழிகள் கூறும் உதவி எனும் வாழ்க்கை நெறி
- பா. சத்தியமோகன் கவிதைகள்
- தலைமை தகிக்கும்…
- நானும் அசோகமித்திரனும்
- குறுங்கவிதைகள்
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 19
- அந்த நொடி
- முள் எடுக்கும் முள்
- வாசிப்பு அனுபவம்
- இதுவும் அதுவும் உதுவும் – 5
- இந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா ? அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா ?
- பம்பரம்…
- கவிதைகள்: பயணக்குறிப்புகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் ! (கவிதை -52 பாகம் -1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -5)
- இந்துக்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை
- பஞ்சதந்திரம் தொடர் 18 சமுத்திரமும் நீர்க்குருவியும்
- தமிழ் விக்கிப்பீடியா ஒரு ஊடகப் போட்டி
- வாப்பாவின் மடி
- ப்ளாட் துளசி
- தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்
- கூடிக்களிக்கும் தனிமை
- கை மாறும் கணங்கள்
- வாசிப்பும் வாசகனும்
- முகம்மது யூனுஸ் அறிஞர் அண்ணாவை ஹாங்காங்கில் சந்தித்தது பற்றிய உரை
- மகா சந்திப்பொன்றில்
- நடுநிசிகோடங்கி
- கஸ்ட்டம்ஸ் கட்டிடத்தில் மோகினிப்பிசாசு
- பிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா
- நானும் பிரபஞ்சனும் கட்டுரை குறித்து சில கருத்துகள்:
- முன்னணியின் பின்னணிகள் – 14 சாமர்செட் மாம்
- மியன்மார் பாரம்பரிய இசை
- மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 16