பழமொழிகள் கூறும் உதவி எனும் வாழ்க்கை நெறி

This entry is part 6 of 38 in the series 20 நவம்பர் 2011

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் யாராவது ஒருவரின் உதவி எப்போதும் தேவைப்டுகிறது. பிறரது உதவி இன்றியாராலும் இவ்வுலகில் வாழ முடியாது. ஏனெனில் பிறரைச் சார்ந்து வாழக் கூடியநிலையிலேயே இறைவனால் உயிர்கள் அனைத்தும் படைக்கப்பெற்றுள்ளன. எனக்குப் பிறர் உதவி தேவையில்லை என்று யாரும் கூற முடியாது. ஏதாவது ஒரு காலகட்டத்தில் பிறரது உதவியை மனிதன் நாட வேண்டி உள்ளது.

இவ்வுதவியினை உபகாரம், தர்மம், என வடமொழியில் குறிப்பிடுவர். நன்றி, அறம் என்றும் இவ்வுதவியினைக் குறிப்பிடுவர். மனிதன் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு வாழ வேண்டும். இதனை வலியுறுத்த நமது முன்னோர்கள் பழமொழிகள் பலவற்றினைக் கூறியுள்ளனர்.

உதவி வாழ்

எனக்கு மட்டும் பிறர் உதவி செய்ய வேண்டும். ஆனால் நான் யாருக்கும் உதவி செய்யமாட்டேன் என்று சிலர் இருப்பர். அவ்வாறு இருப்பது கீழ்த்தரமான செயலாகும். நாம் உதவினால் மட்டுமே பிறரும் நமக்கு உதவி செய்வர். இதனை உணர்ந்து நாம் நடந்து கொள்ள வேண்டும். இம் மனிதப் பிறவி எடுத்ததே பிறருக்கு உதவுதற் பொருட்டே ஆகும்.அதனை மறந்து மனிதன் இருத்தல் கூடாது. உதவக் கூடிய வனாக ஒவ்வொரு மனிதனும் இருத்தல் வேண்டும் என்பதனை,

‘‘முன்கை நீண்டாத்தானே முழங்கை நீளும்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

முன்னங்கை நீளும் போது முழங்கை நீளும். அப்போதுதான் முழுமையான கையும் நீண்டு வேலை செய்யும். கையை நீட்டாது அப்படியே வைத்திருந்தால் ரோக நோய் பிடித்தவரைப் போன்றும், வாத நோய் வந்தவைரைப் போன்றும் இருக்கவேண்டிய நிலை ஏற்படும்.

இங்கு முன்னங்கை, முழங்கை என்பது உதவுதலைக் குறிக்கும். முன்னங்கை என்பது நாம். முழங்கை என்பது பிறர். நாம் உதவினால் மட்டுமே பிறர் நமக்கு உதவி செய்வார் என்பதையே இப்பழமொழி சுட்டுகிறது.

உதவி வீணாகாது

செய்த உதவி வீணாகாது. அது நமக்கு ஏதாவதொரு வகையில் எப்போதாவது பயன்தரும். நாம் யாரேனும் ஒருவருக்கு உதவி செய்துவிட்டு மறந்து விட்டாலும்கூட அது பின்னொருநாளில் நமக்கு யார் வாயிலாகவாவது கிடைக்கும். அதனால் நாம் பிறருக்கு உதவி செய்தல் வேண்டும்.

மண்ணில் இட்ட விதை எவ்வாறு தப்பாது முளைக்குமோ அது போன்று நாம் செய்த உதவி ஒருபோதும் வீணாகாது. இதனை உணர்ந்து நாம் யாருக்காவது உதவுதல் வேண்டும். உதவி செய்வதைக் கைவிட்டுவிடுதல் கூடாது என்ற பண்பாட்டு நெறியை,

‘‘செஞ்ச உதவியும் இட்டுவைத்த விதையும் வீணாகப்போகாது’’

என்ற முதுமொழி தெளிவுறுத்துகிறது. பலன் கிடைத்தாலும், கிடைக்காதிருந்தாலும் நாம் பிறருக்கு எவ்வகையிலாவது உதவுதல் வேண்டும். உதவுவதை வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கைக்கொண்டு மனிதன் வாழ வேண்டும் என்ற வாழ்வியலறத்தையும் மேற்குறித்த பழமொழி வலியுறுத்துகின்றது.

உதவி-தலைகாக்கும்

செய்த உதவி ஒருவரின் குடும்பத்தையும், உயிரையும் காக்கும். மகாபாரதத்தில் 18-ஆம் நாள் அன்று கர்ணனுக்கும், அர்ச்சுனனுக்கும் நேரிடையாகப் போர் ஏற்படுகிறது. கர்ணன் பல்வேறு ஆயுதங்களை ஏவிப் போர்புரிகிறான். அதுபோன்று அர்ச்சுனனம் பல்வேறு ஆயுதங்கைளக் கொண்டு போர்புரிகின்றான். போர் உச்சநிலையை அடைகிறது.

பலரின் சாபங்களாலும், தெய்வத்தாலும் கைவிடப்பட்ட கர்ணனை அர்ச்சுனன் வீழ்த்துகிறான். கர்ணன் போர்க்களத்தில் வீழ்ந்து கிழக்கிறான். அர்ச்சுனனால் முழுமையாகக் கர்ணனை அழிக்க முடியவில்லை. ஏனெனில் கர்ணன் செய்த தர்மம்(உதவி) அவனது உயிரைப் பாதுகாக்கின்றது. தன்னால் கர்ணனை முழுமையாக அழிக்க முடியவில்லையே அதற்கு என்ன காரணம் என்று அர்ச்சுனன் கண்ணனிடம் வினவ, கண்ணனோ,

‘‘அர்ச்சுனா, கர்ணன் செய்த உதவியே அவனது உயிர் போகாமல் காத்து நிற்கின்றது. அதனால் தான் உன்னால் அவனை முழுமையாக வீழ்த்த முடியவில்லை. உலகில் அவனைப் போன்று உதவியளிப்பதில் சிறந்தவர் யாருமில்லை. நான் சென்று அவனைக் காத்து நிற்கும் தர்மத்தினால் ஏற்பட்ட புண்ணியத்தைப் பெற்று வருகிறேன். அதன்பின் அவன் இறந்து விடுவான்’’

என்று கூறி அந்தணர் வடிவில் சென்று கர்ணனிடம் யாசித்து அவன் உதவி செய்ததால் ஏற்பட்ட புண்ணியத்தைப்(நன்மை) பெற்று அவனுக்கு வரமளித்து மீள்கிறான். கர்ணன் உயிர் துறக்கிறான். அதனால் ஒருவர் செய்த தர்மம் அவருக்கோ அல்லது அவரது சந்ததியினருக்கோ உறுதுணையாக அமையும். இதனை மனதில் இருத்திப் பிறர்க்கு நம்மாலியன்ற உதவிகளைச் செய்தல் வேண்டும் என்ற கருத்தினை,

‘‘தர்மம் தலைகாக்கும்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

கர்ணன் செய்த தர்மமே இறுதிவரைஅவனது உயிரைக் காத்து நின்றது அத்தர்மமே அவனது யெரைக் காலம் உள்ளளவும் மக்களின் மனதில் இடம்பெறச் செய்து கொண்டிருக்கின்றது. இதனை அனைவரும் உணர்ந்து நம்மாலான உதவிகளைப் பிறர்க்குச் செய்தல் வேண்டும் என்ற அறச் சிந்தனையையும் இப்பழமொழி நமக்கு உணர்த்துகின்றது.

செய்த உதவியைக் கூறாதே

நாம் ஒருவருக்குச் செய்த உதவியை மறந்து விடவேண்டும். அதனை எலலோரிடமும் கூறித் தற்பெருமை அடித்துக்கொள்ளக் கூடாது. அவ்வாறு கூறினால் அவ்வுதவி கீழ்த்தரமானதாக ஆகிவிடும். இதனை,

‘‘முன்கை செஞ்சது முழங்கைக்குத் தெரியக் கூடாது’’

‘‘இடது கை செஞ்சது வலது கை அறியக் கூடாது’’

என்ற பழமொழிகள் எடுத்துரைக்கின்றன.

முன்கை-முழங்கை, இடது கை- வலதுகை இரண்டும் அடுத்து அடுத்து உள்ள. அதுபோன்று நாம் செய்த உதவியைப் பிறர் அறியுமாறு சொல்லுதல் கூடாது. அதுவே சிறந்தது. உயர்வானதும் ஆகும். உடம்பில் உள்ள கைகளே அறியக் கூடாது எனும்போது பிற மனிதர்கள் அறியலாமா? அறிதல் கூடாது. அது சாலச்சிறந்தது என்ற பண்பினை இப்பழமொழி உணர்த்துகிறது.

தானாய்த் தின்பவன்

சிலர் எந்த நிலையிலும் எந்தச் சூழலிலும் பிறர்க்கு உதவி செய்ய மாட்டார்கள். தாம் உதவக்கூடிய வாய்ப்பு இருந்தாலும், உதவி செய்தாலும் எதுவும் குறையாது எனும் நிலையிலும் கூட ஒரு சிலர் உதவ முன்வர மாட்டார்கள். அத்தகையோரை,

‘‘எச்சில் கையால் கூட காக்கையை ஓட்டமாட்டான்’’

என்ற தொடர் படம்பிடித்துக் காட்டுகிறது. உணவு உண்பவன், காகம் வரஅதனை விரட்ட உண்ட ககைகளைப் பயன்படுத்தினால் கையில் ஒட்டியிருக்கும் சோறு கீழே உதிரும் என்றுகருதி விரட்ட மாட்டான். அத்தகைய ஈயாத பண்புள்ளவனையே மேற்குறித்த தொடர் தெளிவுறுத்துகிறது.

இத்தகையோர் தாம் மட்டும் அனுபவிக்க வேண்டும். பிறருக்கு எள்ளளவும் கொடுக்கக் கூடாது என்றுநினைப்பர். இவர்களை ‘உலோபி’ என்று குறிப்பிடுவர். இவர்கள் இறுதியில் இழிவாகவே இறப்பர் என்பதனை,

‘‘தனாய்த் தின்னு வீணாய்ப்போகாதே’’

என்ற பழமொழி அறிவுறுத்துகின்றது.

தான் மட்டும் உண்டு அனுபவிக்கும் சுயநலத் தன்மையைப் பிறர்க்கு உதவாத பண்பைக் கைவிட்டு வாழ்தல் வேண்டும். அவ்வாறில்லாது ஒருவன் வாழ்ந்தால் அவனது வாழ்க்கை வீணாகக் கழிந்து விடும். அதாவது பொருளற்றதாகி விடும்.இதனை உணர்ந்து தாமும் உண்டு, பிறர்க்கும் கொடுத்து வாழ வேண்டும் என்ற பண்பட்ட வாழ்க்கை நெறியை இப்பழமொழி எடுத்துரைக்கிறது. இப்பழமொழியுடன்,

‘‘தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு’’

என்ற குறளும் ஒப்பு நோக்கத்தக்கதாக அமைந்துள்ளது.

உதவுபவனைத் தடுத்தல்

ஒருபோதும் ஒருவர் மற்றவருக்கு உதவுவதைத் தடுத்தல் கூடாது. அது ஒரு பாவச் செயலாகும். தானும் கொடாது, பிறரையும் கொடுக்க விடாது இருப்பது தவறான ஒன்றாகும். சிலர் இதை வேண்டுமென்றே செய்வர். இவ்வாறு செய்தால் இவர்கள் கீழான நிலையினை அடைவர். கொடுப்பதைத் தடுப்பவர் அடையும் நிலையை வள்ளுவர்,

‘‘கொடுப்பது அழுக்க றுப்பான் சுற்றம்

உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்’’

என்று கூறுகிறார். வள்ளுவரின் இக்கருத்தை,

‘‘தானும் செய்யமாட்டான் செய்றவனையும் விடமாட்டான்’’

என்ற பழமொழி வழிமொழிவதாக அமைந்துள்ளது. இப்பழமொழியை,

‘‘தானும் படுக்க மாட்டான் தள்ளியும் படுக்க மாட்டான்’’

என்றும் வழக்கில் வழங்குவர்..

தானும் உதவாது பிறரையும் உதவவிடாது இருப்பது கேட்டினைத் தரும். அதுபோன்று ஒருவருக்குக் கொடுக்கும் கூலியையும் தடுத்து நிறுத்தக் கூடாது. அங்ஙனம் செய்வது உழைப்பவனின் வயிற்றில் அடிப்பதைப் போன்றதாகும். ஒருபோதும் அத்தகைய இழி செயலை ஒருவர் செய்யக் கூடாது என்பதை,

‘‘கொடுக்கிற கூலிக்குக் குறுக்கே நிற்காதே’’

என்ற பழமொழி வலியுறுத்துகிறது.

உழைப்பிற்கேற்ற நியாயமான கூலியை வழங்குதல் வேண்டும். அதோடு மட்டுமல்லாது அவ்வாறு கூலி கொடுப்பதையும் தடுத்து நிறுத்துதல் கூடாது. அது மனித உரிமை மீறலாகும் நியாயமான நேர்மையான உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறுவது உழைப்பவருடைய உரிமையாகும். ஆனால் அதனைக் கொடுக்க விடாது தடுப்பது மனித உரிமை மீறலான செயலாகும் என்ற அரிய உண்மையையும் மனித உரிமை மீறலுக்குரிய அறைகூவலாகவும் இப்பழமெழி அமைந்திலங்குகிறது.

உதவி –உபத்திரவம்

சிலர் உதவி செய்வர். சிலர் உதவி செய்யாமல் இருப்பர். இன்னும் சிலர் உதவாவிட்டாலும் பிறர்க்குக் கெடுதல் செய்வர். இத்தகையோர் பிறரைத் துன்புறுத்தி இன்பம் காண்பவர் ஆவார்.. இவர்கள் தங்களது குணத்தை ஒருபோதும் மாற்றிக் கொள்ளமாட்டார்கள். பிறரின் துன்பத்தைக் கண்டு இன்பம் அடைந்து கொண்டே இருப்பர். இத்தகைய கொடிய பண்பினை ஒருவர் கைவிட வேண்டும் என்பதனை,

‘‘உதவி செய்யாட்டியும் உபத்திரவம் செய்யாதே’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

இங்கு உபத்திரவம் என்பது துன்புறுத்துதல், தீமை செய்தல் எனும் பொருளில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நல்லது ஒருவருக்குச் செய்யவில்லை என்றாலும் தீமையைச் செய்தல் கூடாது என இப்பழமெழி வலியுறுத்துகிறது. இக்கருத்திகொப்ப புறநானூற்றில்,

‘‘நல்லது செய்தல் ஆற்றீராயினும்

அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்

எல்லாரும் உவப்பது’’ (புறம்.,195)

என்ற நரிவெரூஉத் தலையாரின் பாடல்வரிகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உதவி செய்பவர் – உதவி பெறுபவர்

யாருக்கு உதவுகிறோம் என்பதைப் பொறுத்தே உதவியானது மதிப்புப் பெறுகிறது. உதவி செய்பவர் தான் உதவி செய்யப் போகும் ஆள் அதற்கு உகந்தவரா? அவ்வுதவி நியாயமானதா? அதனால் உதவி பெறுபவர் துன்பம் குறையுமா? என்பதையெல்லாம் அறிந்துணர்ந்து செய்தல் வேண்டும். இதனை,

‘‘பாத்திரம் அறிந்து பிச்சைபோடு

கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.

பசித்திருப்பவனின் பாத்திரத்தில் உணவு விழுகின்றபோது உணவு அமிழ்தமாகத் தெரியும். உண்பவன் வீணாக்காது உண்பான். அவனது பசி நீங்கும். அவன் வாழ்த்துவான். அவனுக்குச் செய்த உதவி மதிப்புப்பெறும். அதுபோன்று நல்ல குடும்பத்தை அறிந்து பெண்ணைக் கொடுத்தால் அப்பெண்ணின் வாழ்க்கையும் அவள் புகுந்த வீட்டின் வாழ்க்கையும் சிறக்கும். அதனால் உதவி பெறுவோர்க்கு உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறது? அவ்வுதவி பெறுவதற்குத் தகுந்தவரா? என்பதை அறிந்த பின்னர் உதவி செய்தல் வேண்டும் என்ற காலத்திற்கேற்ப பண்பாட்டு விழிப்புணர்வு நெறியை இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது. இப்பழமெபழியின் கருத்து,

‘‘உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து’’

என்ற குறட்பாவிற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பது ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

உலகில் பிறந்தது உதவுவதற்கே என்பதை அறிந்து நாம் வாழ வேண்டம். உழைத்துச் சேர்ப்பது துன்பத்தில் உழல்பவரின் துன்பத்தைத் துடைப்பதற்கே என்பதை அறிந்து பிறரருக்கு உதவி செய்து அவர்களையும் மகிழ வைத்து நாமும் இன்புற்று வாழ்வோம். அங்ஙனம் வாழ்வதே உன்னதமான உயர்ந்த வாழ்க்கை ஆகும். அத்தகைய உயர் வாழ்வை வாழ அனைவரும் முயல்வோம். வாழ்க்கை வசப்படும்.

Series Navigationஅப்பாபா. சத்தியமோகன் கவிதைகள்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *