பிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா

This entry is part 34 of 38 in the series 20 நவம்பர் 2011

முதல் நாள் நிகழ்வுகள் : சனிக் கிழமை 12 .11 .2011 .பிற்பகல் 3 மணி.
மங்கல விளக்குகளுக்குத் திருமிகு ஆதிலட்சுமி வேணுகோபால் இணையர் ஒளியூட்டிய பின்,
கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசன், செயலர் பேரா. பெஞ்சமின் லெபோ, பொருளாளர் திருமிகு தணிகா சமரசம்
ஆகிய மூவரும் கம்பன் வாழ்க, கன்னித் தமிழ் வாழ்க’ என்று உரத்த குரலில் கம்பன் வாழ்த்தை முழங்கினர்.
ஆறு காண்டங்களின் கடவுள் வணக்கப் பாடல்களையும் அழகாகப் பாடினார் மகளிரணி உறுப்பினர் கவிஞர் சரோசா தேவராசு.
மகளிரணி உறுப்பினர்கள்,’வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்று பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளில் தமிழ்த் தாயை வாழ்த்திப் பாடினர்.
நாட்டியகலாசோதி செல்வி சாரநாயகி கோபாலகிருட்டிணன் அளித்த பரத நடன விருந்துடன் விழா சிறப்பாகத்தொடங்கியது.

பிரான்சு கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி பாரதிதாசன் நகையும் சுவையுமாக வரவேற்புரை வழங்கினார்.
புதுச்சேரி அரசில் சமூகத் துறை, சுற்றுலாத் துறை அமைச்சர் மாண்புமிகு பெ. இராசவேலு அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.
பத்தாம் ஆண்டுக் கம்பன் மலரை, புதுவைக் கம்பன் கழக இணைச் செயலர், நல்லாசிரியர் கி. கலியாணசுந்தரம் வெளியிட்டார்.
‘கம்பனில் பண்பாடு’ தலைப்பில் தமிழருவி மணியன் உரையாற்றினார்.

இடையே -தாய்க் கழகமான புதுவைக் கம்பன் கழகத்தின் சார்பில், அதன் இணைச் செயலர் நல்லாசிரியர் கி.கலியாணசுந்தரம் அவர்கள்
வழக்கம் போல், பிரான்சு கம்பன் கழகச் செயற்குழு உறுப்பினர்களுக்கும் மகளிரணி செயற்குழு உறுப்பினர்களுக்கும் பொன்னாடை போர்த்தினார்கள்.
இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் அவர்கள் தம் உரையைத் தொடங்கினார். தலைப்பு : ‘தெய்வக் கவியில் தெய்வப் புலவன்’.
தெய்வமாக் கவி கம்பனின் காவியத்தில் திருவள்ளுவரின் குறளமுதம் எப்படி எல்லாம் நிறைந்துள்ளது, எங்கெல்லாம் கரைந்துள்ளது,
எவ்வாறெல்லாம் மறைந்துள்ளது என இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் உரை தந்தார்.

தொடர்ந்து , கம்பன் கழகக் கவிஞர் தேவராசு, புத்வைக் கவிஞர் திருமதி வைத்தி. கச்தூரி கவிமலர் வழங்கினர்.
பின், நகைச்சுவைத் தென்றல் திருவாரூர் இரே. சண்முகவடிவேல் அவர்கள் தலைமையில் பட்டிமன்றம் தொடங்கியது.
தலைப்பு : ‘இன்றைய வாழ்வுக்குப் பெரிதும் வழிகாட்டுபவன்… ‘கும்பகருணனா ? வீடணனா?’
வீடணன் பக்கம் முனைவர் பர்வின் சுல்தானா, கவிஞர் பாரீசு பார்த்தசாரதி,திருமதி சுகுணா சமரசம்  சிறப்பாக வாதிட்டனர்.
கும்பகன்னனுக்காக வக்காலத்து வாங்கியவர்கள் : திருமதி லூசியா லெபோ., திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால், கவிஞர் அருணா செல்வம்.
நலமுற தத்தம் வாதங்களை வைத்தனர். இன்றைய வாழ்வுக்கு நல்ல வழி காட்டுபவன் வீடணனே எனத்திருமிகு இரெ .சண்முகவடிவேல் அவர்கள் நல்லதொரு தீர்ப்பை வழங்க பட்டிமன்றம் இனிதாக நிறைவு உற்றது.முதல் நாள் விழாவும் முடிவு பெற்றது.

மறு நாள் காலை 11 மணி அளவில் இரண்டாம் நாள் விழா நடைபெற்றது.
கவிமணி விசயரத்தினம் இராசலட்சுமி இணையர் மங்கல விளக்கேற்ற
திருமதி சரோசா தேவராசு கடவுள் வணக்கம் பாட இளையோரணி  தமிழ்த் தாய்  வாழ்த்து பாடினர்.
சிறு பெண்கள் நடனம் ஆடினர். கம்பன் கழகச் செயலர் பேரா. பெஞ்சமின் லெபோ
வரவேற்புரை நிகழ்த்தினார்.
புதுச்சேரியின் சாதனைச் சிகரம் வே.பொ.. சிவக்கொழுந்து தொடக்க உரை நிகழ்த்தினார்
விழாவுக்குத் தலைமை தாங்கியவர் புதுவை கல்விச் செம்மல் முனைவர் வீ . முத்து அவர்கள்.
பெண்மையை எப்படி எல்லாம் கம்பன் ஏற்றிப் புகழ்ந்து போற்றி உள்ளான் என விரிவாகத் தம் தலைமை உரையில் எடுத்துரைத்தார்,
பேராசிரியர் கலியன் எதிராசன். இவர் பரோடா நகர்த் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக 26 ஆண்டுகள் பணியாற்றியவர்.
தேனுரை அளிக்க வந்திருந்த முனைவர் பர்வின் சுல்தானா,  ’கம்பனில் பெண்மை’ என்னும் தலைப்பில் கேட்டார்ப் பிணிக்கும் தகைமையோடு உரையாற்றினார்

பிற்பகல் 3 .00 மணி அளவில்
இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் தலைமையில் ; தொடங்கியது சுழலும் சொற் போர்.

தலைப்பு :‘கம்பனைக் கற்போர் நெஞ்சத்தில் களிநடம் புரிவது – நீதியின் மேன்மையா ? தமிழின் இனிமையா?  காக்கும் இறைமையா? சகோதரப் பெருமையா?
முனைவர் பர்வின் சுல்தானா நீதியின் மேன்மைக்காக வாதாடப் பேரா. பெஞ்சமின் லெபோ ‘தமிழின் இனிமை’க்காகக் குரல் கொடுத்தார்.
காக்கும் இறைமைக்’குக் கொடியும் குடையும் பிடிக்க எழுந்தார் நகைச்சுவைத் தென்றல் இரே. சண்முகவடிவேல்.
‘சகோதரப் பெருமையே’  எனப் பாசத்தோடு பேச வந்தார் கவிஞர் சரோசா தேவராசு.
‘நீதியின் மேன்மை’,  ’காக்கும் இறைமை’, ‘சகோதரப் பெருமை’…ஆகிய வண்டிகளை இழுத்துச் செல்வது
தமிழின் இனிமைதான்” என்று சொல்லி நல்லதொரு தீர்ப்பை வழங்கித் தாம்
என்றுமே இலக்கியச்  சுடர்தான் என்று மீண்டும் நிறுவினார் இராமலிங்கம்.

இந்தியத் தூதரகத்தின் அதிகாரி திருமிகு கன்யலால் அவர்கள் தமிழில் வணக்கம்’ சொல்லி ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
அவர் உரையைத் தமிழில் மொழி பெயர்த்தவர் : பேரா பெஞ்சமின் லெபோ..

இறுதி நிகழ்ச்சியாக வழக்காடு மன்றம் நடைபெற்றது. நடுவர் திருமிகு தமிழருவி மணியன்.
மக்கள் சார்பாக மன்னர்கள் மீது வழக்கு தொடுத்தவர் இலக்கியச்சுடர் த. இராமலிங்கம்
வழக்கை மறுத்தவர் நகைச்சுவைத் தென்றல் இரே. சண்முகவடிவேல்.
நகையும் சுவையுமாகப் பட்டிமனறம் நடைபெற்றது. தீர்ப்பு வழங்கிய நடுவர்,
‘மன்னர்கள் குற்றவாளிகளே’ என்று நிறைவு செய்தார்.

இரு நாள்களும் ,

வாழ்த்துக் கவிதை, கவிமலர், பரத நாட்டியங்கள் நடைபெற்றன.

விருந்தினர்க்கும் மேடையில் பங்குகொண்டவர்களுக்கும் அரும்பணி ஆற்றியவர்களுக்கும்… எனப் பலருக்கும்
கம்பன் கழகத் துண்டு,    சான்றிதழ், நின்வுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
கம்பன் பட்டயம் நால்வருக்கும் கம்பன் விருது
பதின்மருக்கும்  அளித்துக் கம்பன் கழகம் பெருமை கொண்டது.

கம்பன் கழகப் பொருளாளர் திருமிகு சமரசம் தணிகா நன்றியுரை கூற விழா இனிதே முடிவுற்றது.
விழா  நிகழ்சிகளைச்  சுவை குன்றாமல் தொகுத்து வழகியவர் பேரா. பெஞ்சமின் லெபோ

செய்தி : புதுவை எழில் ; படங்கள் : திருமதி லூசியா லெபோ, செல்வன் பால்ராசு தேவராசு. .

 

விழாக்களின் முழு வருணனைகளை ‘வல்லமை’ இணையதளத்தில் காணலாம் ;

பின்னூட்டம் இடுபவர்கள் அங்கும் இடலாம்.:
முதல் நாள் :
http://www.vallamai.com/archives/10383/

இரண்டாம் நாள்
http://www.vallamai.com/archives/10517/

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Series Navigationகஸ்ட்டம்ஸ் கட்டிடத்தில் மோகினிப்பிசாசுநானும் பிரபஞ்சனும் கட்டுரை குறித்து சில கருத்துகள்:
author

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சு

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *