மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 1

This entry is part 1 of 38 in the series 20 நவம்பர் 2011

நாகரத்தினம் கிருஷ்ணா

———
வணக்கம் நண்பர்களே

இரண்டுவருடங்களுக்கு முன்பு புதுச்சேரியில் நண்பரொருவர் புதுச்சேரியைச் சேர்ந்த திராவிடப்பேரவை பொதுசெயலாளர் திரு. நந்திவர்மன் என்ற நண்பரை அறிமுகப்படுத்தினார். இச்சந்திப்பின்போது எனது நீலக்கடல் நாவலை அவருக்கு அளித்தேன். அவர், தாம் ‘The New Indian Express’ க்கென எழுதிய கட்டுரைகளின் தொகுப்பொன்றை ( Tamil Civilization ) எனக்கு அளித்தார். பிரான்சுக்குத் திருப்பியதும் அக்கட்டுரைகளை படித்துக்கொண்டிருந்தபொழுது அவற்றுள் The Grandeur of Senji port என்ற கட்டுரை எனது கவனத்தை பெற்றது. அதில் அவர் தெரிவித்திருந்த தகவல்கள் எனக்கு சுவாரஸ்யமாக இருந்தன. பிரெஞ்சு அரசாங்கத்தின் கீழைநாடுகளுக்கான கலை பண்பாட்டுத்துறை வெளியிட்டிருந்த ஒரு நூலைபற்றியும் நண்பர் அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். செஞ்சியைப்பற்றி நாவலெழுதும் ஆர்வம் என்னுள் முகிழ்த்தது. விருப்பத்தை நண்பருக்கு எழுதினேன். மறுமுறை பயணம் செஞ்சியைப்பற்றிய தேடலில் கழிந்தது. நண்பர் ஆறாண்டுகாலம் செஞ்சியில் தங்கியிருந்து ஆய்வு செய்து செஞ்சி காவலரண் பற்றி எழுதியிருந்த ஆய்வாளர் ழான் தெலோஷ் என்பவரை பின்னர் அறிமுகப்படுத்தினார். பல அரிய தகவல்கள் கிடைத்தன. செஞ்சியைப்பற்றிய தகவலறிய சில்ல நல்ல நூல்களையும் அவற்றை எழுதிய ஆசிரியர் பெயர்களையும் அப்பிரெஞ்சு ஆய்வாளர் கூறினார். செஞ்சியைப்பற்றி பாரீஸிலும் சேசுசபயினரின் பயணக்குறிப்புகளிலும் தகவல்கள் கிடைத்தன. சேசுசபையினரைச்சேர்ந்த அருட்தந்தை பிமாண்டா செஞ்சியை ட்ராய் நகரத்தோடு ஒப்பிடுகிறார். செஞ்சி என்றவுடன் நாடோடிபாடல்களால் அறியப்பட்ட தேஜ் சிங் என்ற தேசிங்கு ராஜனே நினைவுக்கு வருவான். உண்மையில் அவன் பதவியில் இருந்தது பத்து மாதங்களே. நாராயணப்பிள்ளை என்பவர் எழுதிய கர்னாடக ராஜாக்கள் சரிதம் என்ற நூல் செஞ்சிக்கோட்டையின் வரலாற்றை கி.பி 1200 ஆனந்த கோனார் என்பவர் தொடங்கிவைத்ததாக தெரிவிக்கிறது. ஏறக்குறைய 130 ஆண்டுகள் கோனார்கள் செஞ்சிக்கோட்டையை ஆள்கின்றார்கள். பின்னர் குறும்பர்கள், நாயக்கர்கள், பீஜப்பூர் சுல்தான், மராட்டியர், மொகலாயர், ஐரோப்பியரென பலரிடம் இக்கோட்டை கைமாறி இருக்கிறது.

இன்று செஞ்சியென பலரும் அழைத்தாலும் தொடக்ககாலத்தில் அதாவது பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டுவரை அதற்கு கிருஷ்ணபுரம் என்றே பெயர். காரணம் கோனார்கள் தொடங்கி, குறும்பர்கள், நாயக்கர்களென வைணவ மதத்தைசேர்ந்தவர் ஆண்டிருக்கிறார்கள். செஞ்சிக்கு இரண்டரைகல் தொலைவிலிருக்கும் சிங்கவரம் விஷ்ணு செஞ்சி என்று அழைக்கப்பட பிறபகுதி சிவ செஞ்சி என்று அழைக்கப்பட்டிருக்கிறது. யுத்தத்திற்கு செல்வதற்கு முன் அனந்த சயனனாக படுத்திருக்கும் ஸ்ரீ ரங்கநாதரிடம் தேசிங்கு ராஜன் உத்தரவு கேட்டானென்றும் யுத்தத்தின் முடிவை அறிந்த நாராயணன் அனுமதிகொடுக்க மறுத்து முகத்தைதிருப்பிக்கொண்டாரென்றும் சொல்லப்படுகிறது. ஒரே கல்லில் செதுக்கபட்டுள்ள இந்த இருபத்துநான்கடிநீள சுதையைக்காண கண்கோடிவேண்டும். அத்தனை பிரம்மாண்டம். பின்னர் பீஜப்பூர் சுல்தான்கள் பாதுஷாபாத் என்று செஞ்சியை அழைத்தார்கள். மராட்டியர்கள் சண்டி என்று பெயர் சூட்டினார்கள்.மொகலாயர்கள் நஸரத் கத்தா என்று பெயர் வைக்க, பதினேழாம் நூற்றாண்டில் செஞ்சியென்று அழைக்கத்தொடங்கியவர்கள் பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும். செஞ்சியை ஆண்ட நாயக்கர்களில் கிருஷ்ணப்ப நாயக்கர் முக்கியமானவர்.

திரு நந்திவர்மன், பிரெஞ்சு பேராசிரியர் நாயகர், ஆய்வாளர் ழான் தெலொஷ் அனைவருக்கும் எனது நன்றிகள். பிரசுரிக்கும் திண்ணை இதழுக்கும் எனது நன்றிகள்.

பணிவுடன்
நாகரத்தினம் கிருஷ்ணா
.

1. – ‘செஞ்சி அழிந்து சென்னை பட்டினம் உருவாயிற்று’

– அப்படீங்களா?

– உன் பேரு என்னன்னு சொன்ன?

– ஹரிணி.

– ஊரு புதுச்சேரின்னு சொன்ன ஞாபகம்?

– இப்போதைக்கு புதுச்சேரி. ஆனால் பிரான்சு நாட்டுலேயிருந்து வந்து மூன்று மாதமாகுது-

பதிலைக்கூறுகிறபோது அவளுடைய தலை மென்மையாகக் குலுங்கியதில் முன்புற கேசம் முகத்தில் விழுந்தது, அதை நளினமாக ஒதுக்கினாள். உதடுகள் உச்சரிக்கபட்ட வார்த்தைகளுக்கேற்ப முன்புறம் அநிச்சையாக குவிந்து இயல்புநிலைக்கு மீண்டன.

– சித்தமுன்னேதானே சொன்னாங்க அதற்குள்ள மறந்திட்டீங்களா, பாரீசுலே இருக்காங்க. நம்ம நாட்டுலேயிருந்து அங்கே போனவங்க. செஞ்சியப் பத்தி தெரிஞ்சுக்கணுமாம். புதுச்சேரியிலே பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்தவர் ஒருவர் இவங்களை அறிமுகப்படுத்தினார்.

தும்பைப்பூப்போல வேட்டி, அதற்கு ஏற்றார்போல வெள்ளை அரைக்கை சட்டை. முதுமையிற் சுருங்கியிருந்த தசை வரிகளில் சாம்பல் பூத்திருந்தன. அதில் வெள்ளி இழையைப் பதித்ததுபோல கொசகொசவென்று ரோமங்கள். கிண்ணிகோழியின் கழுத்தை நினைவூட்டும் வகையில் நெஞ்சில் தசைகள் ஆடிய முகத்தில் கிள்ளுவதற்கு சதையில்லை. இமைகளிரண்டும் நாமக்கட்டியில் இழைத்ததுபோல இருந்தன. முகத்தை மழுங்கச் சவரம் செய்திருந்தார், பின்புறம் வாரியிருந்த நரைத்த கேசம். முதியவர் அருகிலேயே முக்காலியொன்றில் அமர்ந்திருந்த கண்ணன் தன்னுடைய குரலை வழக்கம்போல உயர்த்திப்பேசினான்.

புதுச்சேரியில் ஹரிணியிடம் கிழவரின் வயதுப்பற்றிபேச்சுவந்தபோது கண்ணன் அவளிடம் தாத்தாவின் வயது தோராயமாக தொண்ணூறு இருக்கலாமென்று கூறியிருந்தான் ஆனால் அவரைபார்த்து அப்படியொரு முடிவை எடுக்க முடியவில்லை.மனிதர் இந்த வயதிலும் கவர்ச்சிகுறையாமலிருந்தார்.

-உங்களுக்கு தொண்ணூறு வயதென்று உங்கப் பேரப்பிள்ளை சொன்னார்.

– அவனுடைய வாலிபத்தை உறுதிப்படுத்த, என்னைக் கிழவனென்று சொல்லியாகணும், அதற்கு எனது வயது ஒரு கருவி. 1920லே பிறந்தேன். பதினெட்டுவயசிலே ஆசிரியர் பயிற்சிபள்ளியிலே படிக்கிறபோதே அக்கா மகளை கட்டிக்கிட்டு, பத்தொன்பதுவயசுலே ஒரு மகனுக்குத் தந்தை ஆனேன். அது ஒரு காலம். இப்பவும் பத்து கி.மீட்டர் தொடர்ந்து நடக்க முடியும். என் பேரனுக்கு சாத்தியப்படுமாண்ணு தெரியலை.

இளைஞனும், யுவதியும் சூழ்நிலை மறந்து சிரிக்கிறார்கள். பெரியவர் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்.

– ஏன்? உங்கவயதை நீங்க ஏத்துக்க மாட்டீங்களா?

– உண்மையை மறுக்கவா முடியும். ஏண்டா தம்பி உங்க அம்மாகிட்டே சொல்லி, இந்தப்பிள்ளைக்கு காப்பிபோட்டுக்கொடுக்கச்சொல்லக்கூடாது?

– வீட்டில் பாலில்லை, ஆண்டாளம்மா மகன் கோவிந்தனை மெயின் ரோட்டுக்கு பிளாஸ்க் கொடுத்து அனுப்பியிருக்காங்க. சைக்கிளில் போயிருக்கிறான். வருகிற நேரம். உங்க செஞ்சி நாவலை இவங்க படித்துப் பார்க்கணுமாம்.

– எதற்காக, அதை படித்து என்ன ஆகப்போகிறது. அதை மறந்து வருஷக் கணக்காகுது.

– உங்க பேரப்பிள்ளை சொன்ன தகவல்கள்தான் காரணம். எனக்குள்ள செஞ்சியின் ஆர்வத்தை உங்க எழுத்தும் அதிகப்படுத்தியிருக்கு. புதுச்சேரியில் செஞ்சிக்கோட்டையைப் பற்றி ஆர்வங்கொண்ட ழான் தெலோஷ் என்ற பிரெஞ்சுக்காரர் இருக்கிறார். அவரை சென்று பார்த்தேன். அவர்தான் உங்க பேரனை அறிமுகப்படுத்திவர். பிறகு நீங்கள் தெரிய வந்தீர்கள், உங்கள் நாவல் தெரியவந்தது.

– ஏம்மா நீ போலீஸெல்லாம் இல்லையே?

– ஐய்யயோ அப்படியெல்லாமில்லை? ஏன் கேட்கறீங்க?

– இங்கே இரண்டுமாதத்துக்கு முன்னே கோட்டைக்குள்ளே அத்தனை காவலையும் மீறி கமலக்கன்னியம்மாள் கோவிலிலே ஓர் இளம்பெண்ணை பலி கொடுத்திருந்ததாக செய்தி கூட வந்ததே?

– இவர் அதைப்பற்றி சொல்லவே இல்லையே?

– எனக்கு சொல்லணுமென்று தோணலை, இறந்த பெண்ணின் தலை இன்னமும் கிடைக்காததால் ஊர் வம்புகள் நிறைய. செஞ்சிக்கோட்டைப்பற்றின பெருமைகளுக்கு இதுபோன்ற தகவல்கள் உதவுமான்னு தெரியலை. தாத்தா நாவலிலும் இது பற்றி சொல்லியிருக்கார் ஒரு புதிரா நீளுது – படிக்க சுவாரஸ்யமா இருக்கிறது என்பதைத் தவிர வேறு பார்வைகள் எனக்கில்லை. – கண்ணன் இடையிற்குறுக்கிட்டுப் பேசினான்.

தாத்தா சடகோபன் பிள்ளை கண்களை மூடியபடி அந்த உரையாடலிருந்து தாற்காலிகமாக தம்மை வெளியில் நிறுத்திக்கொண்டிருந்தவர் போலிருந்தார்.

– நான் போலீஸ் இல்லையென்றாலும், சீனிவாசாச்சாரி என்பர் எழுதிய செஞ்சி வரலாற்றின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பை படிச்சிருக்கேன். அதிலே கமலக் கன்னிஅம்மன் கோயில் முகப்பில் ஒரு கல்லில் ஒரு வில் ஐந்து அம்புகள், ஒரு எருமை, ஒரு செம்மறி ஆடு, நான்குமனித தலைகள் என்றிருப்பதாக தகவல். விலங்குகளை மாத்திரமல்ல மனிதர்களைக்கூட பலிகொடுத்தற்கான ஆதாரம் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. நீங்களும் அதைப் படிச்சிருப்பீங்க இல்லையா?

கிழவர் ஹரிணியின் வார்த்தைகளை மெதுவாக உள்வாங்கிக்கொண்டவர்போல இரண்டொரு விநாடிகள் காத்திருந்து தலையாட்டினார். அவரிடமிருந்து வேறு பதில்களில்லை. ஹரிணி தொடர்ந்தாள்.

– கண்ணன் சொல்வதுபோல, இப்போதைக்கு அதைத் தெரிந்து ஆகப்போவதொன்றுமில்லை. எங்க அம்மா கால்பட்ட இடங்களையெல்லாம் தொட்டுபார்க்கவேண்டுமென்று கனவுகள். இந்தியாவுக்கு வரவேண்டுமென்று விரும்பினேன். சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவங்கள் அந்த ஆசையை நிறவேற்றின என்று சொல்லணும். கைப்பையை எடுத்துக்கொண்டு ஏதோ தெருவில் உள்ள கடைக்கு ரொட்டி வாங்கிவர புறப்பட்டவள்போல விமானம் ஏறிட்டேன். இங்கே வந்த இரண்டுவாரங்களில் புதுச்சேரி அலுப்பது போலிருந்தது. ஒரு மாறுதலுக்காக புதுச்சேரிக்கு அருகில் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது எனக் கேட்ட பொழுது சிலர் திருவண்ணாமலை காஞ்சிபுரம் என்றார்கள், வேறுசிலர் சென்னை மகாபலிபுரம் என்றார்கள். அப்போதுதான் நான் சொன்ன பிரெஞ்சுக்காரர் செஞ்சியைப்பற்றிக் கூறினார். அவர் இங்கே குஜராத், திருச்சி மாணவர்களோட பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வேறுகோணத்துலே செஞ்சியை ஆய்வு செய்திருக்கிறார். அது நூல் வடிவத்திலே பிரெஞ்சுலே வந்திருக்கிறது. ஆங்கிலத்துலேயும் இருக்கணும். கிடைத்தால், கொண்டுவந்து தருகிறேன் படித்துப்பாருங்கள். எனக்கு இப்போதைக்கு உங்க நாவலின் கையெழுத்து பிரதி தேவை. கண்ணன் அதை புத்தகமாகக் கொண்டுவர நீங்கள் தொடக்கத்தில் முயற்சித்ததாகவும் வாய்ப்பு அமையாததால் அம்முயற்சியை கைவிட்டதாகவும் சொன்னார். எனக்குத் தெரிஞ்சவங்க மூலமா புத்தகமா கொண்டு வர முயற்சிக்கிறேன்.

இளம்பெண் கூறிய யோசனையின் பாரத்தை உணர்ந்தவர்போல சாய்வு நாற்காலியில் இருகைகளையும் தலைக்குப் பின்புறம்கொடுத்து மெல்ல பின்பக்கம் முதியவர் சாய்ந்தார். இமைகளை அரைக்கண்மூடி யோசிப்பதுபோல படுத்திருந்தார். பின்னர் விடுபட்டவர்போல எழுந்து உட்கார்ந்தார். முகவாயை வலது கையைத் தொடையில் ஊன்றி நிறுத்தியவர், உதடுகளை அதிகம் பிரிக்காமல் பேசினார்.

– ஹரிணி!

– ம்.. சொல்லுங்க

– உண்மையைச் சொல்லணும்னா, நீ சொன்ன வார்த்தையை பலபேரு சொல்லிட்டாங்க, அதனால உன் வார்த்தைகள்மேலே எனக்குப் பெருசா அபிப்ராயங்களில்லை. அக் கையெழுத்துப் பிரதியை எப்போதோ தொலைத்து தலை முழுகியிருக்கணும். ராத்திரி பகலா தூக்கமில்லாம ஒரு வெறியோடு எழுதினது. அத்தனையும் விழலுக்கிறைச்ச நீரானதுலே ரொம்ப வருந்தியிருக்கேன்.

ஹரிணி பெரியவரின் முகத்தைப்பார்த்தாள் விழிவெண்படலத்தை நீர் கவ்வியிருந்தது. கண்ணனனும் பெரியவரின் வேதனையை உணர்ந்தவன்போல தலை கவிழ்ந்திருந்தான். ஓரிரு நொடிகள் அமைதியாக இருந்த ஹரிணி பின்னர் சூழலின் இறுக்கத்தை தளர்த்த நினைத்தவள்போல:

– நீங்கள் மேலே சொல்லுங்கள், என்றாள்.

– நான் ஒரு தமிழ் வாத்தியார். இங்கிருந்து மேற்கால ஆறுகல் தொலைவில் இருக்கும் ஆலம்புண்டி சொந்த கிராமம். வெள்ளிமேடுபேட்டையிலே எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துத் பொதுத் தேர்வில் தேறியதும் திண்டிவனத்தில் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்தேன். பரிட்சையில் தேர்வானதும் அரசாங்கத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணி கிடைத்தது. செஞ்சிக்கு உத்தியோக நியமனம் பெற்றுவந்தேன்.

– தொடக்கப்பள்ளி ஆசிரியராக இந்த ஊருக்கு வந்தீர்கள்.

– ஆமாம் நாற்பது ஆண்டுகள் தொடர்ந்து இந்த ஊரில் தங்க நேரிட்டது ஆரிரியராக பதவியேற்றபொழுது இருபத்தொன்று வயது. மீசை போதாதென்று தீக்குச்சி கரியில் உதட்டில் கோடிட்டுக்கொண்டு பள்ளிக்கு சென்றுவந்திருக்கிறேன். ஒருமுறை மதிய உணவிற்காக பள்ளியிலிருந்து ஜெயங்கொண்டானை நோக்கி வந்துகொண்டிருந்தபோது உன் வயதுப் பெண்ணொருத்தி தலையை முடிக்காமல் பின்புறம் பரத்திபோட்டு, இரண்டு கைகளும் தலையைத் தாங்கிக்கொண்டிருக்க காணிக்கல்லில் அமர்ந்திருந்தாள். பொதுவாக ஆடுமாடு மேய்க்கும் ஒன்றிரண்டு பையன்கள் பெண்களை வழியிற் பார்க்க நேர்வதுண்டு, ஆனால் அருகில் அதற்கான அறிகுறிகள் எதுவுமில்லை. அவள் தோற்றமும் ஏழைப் பெண்ண்ணுக்கு உரியதில்லை. அவளைச் சேர்ந்தவர்கள் யாரேனும் அருகில் தென்படுகிறார்களா என்றும் பார்த்தேன். கண்ணுக்கெட்டியவரை ஒருவருமில்லை. அவளை நெருங்க நெருங்க சைக்கிள் பிரீவீலின் சப்தம் அதிகரித்து மனப்பிராந்தியை உருவாக்கியிருந்தது. சரீரத்தில் குளிர் இறங்குவதைபோல உணர்ந்தேன். கால்கள் தயங்க நின்றேன். வேற்றுமனிதரின் வருகையை உணர்ந்தவள்போல கைகளை முகத்திலிருந்து விடுவித்து எழுந்து நின்றாள். என்னை வெறித்துபார்த்தாள். பிறகு விடுவிடுவென்று நடந்து பட்டாபிராமன் கோவிலைக் கடந்துசென்றாள். இரண்டு மாதங்கள் கழிந்திருக்கலாம். ஒரு நாள் மாலை உடல் உபாதைக்காக மல்லிக்குளம்வரை நானும் சக ஆசிரியர் ஒருவரும் போயிருந்தோம். திரும்புகிறபொழுது பார்த்தால் நான் முன்பு பார்த்த பெண்ணே ஒரு குன்றின்மீது தனித்து அழுதுகொண்டிருப்பதுபோல தெரிந்தது. எங்களுக்கு அவள் ஒற்றை அழுகுரல் தெளிவாகக் கேட்டது. நண்பரிடம் ஏற்கனவே அவளைச் சந்தித்த தகவலைக்கூறி வாயேன் அருகில் செல்லலாம் என்றேன். அவர் முகம் பேயறைந்ததுபோல ஆனது. அந்தப் பக்கம் போகவேண்டாம். பார்த்தும் பார்க்காததுபோலவும் போய்விடலாம் என்றார். ஏன்..என்று கேட்டேன். அடுத்தமுறை தனியாக வரும்போது இப்படி அந்தப் பெண்ணைப் பார்க்க நேர்ந்தால் மனசுலே விபரீதமா ஏதவாது ஆசையை வச்சுகிட்டு நெருங்கிடப்போறே. அப்புறம் பிணமாதான் திரும்பணும். அது கன்னிமார் சாமிண்ணு ஊர்ல பேச்சு. அவளுடைய சகோதரிகளை எந்த காலத்துலேயோ கெடுத்ததுக்கு இவளும் அப்பப்போ வந்து ஆண்களைத்தேடி பழிவாங்கிட்டு இருக்காளாம். எச்சரித்த நண்பர் உண்மையில் பயந்திருந்தார். அடுத்த நாள் அவருக்கு வைத்தியரைக் கூப்பிட வேண்டியிருந்தது.

– பிறகு?

– நண்பரின் எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டு அவளைத் தேடிபோக ஆரம்பித்தேன். இந்த கன்னிமார்கதைக்கும் மலைகளுக்கிடையிலும் ஏதோ ஒருவித ஒற்றுமை நிலவுவதாக மனம் சொன்னது. ராஜகிரியும், கிருஷ்ணகிரியும், சங்கிலி துர்க்கமும் பிறவும் கன்னிமார் கதை மூலம் ஏதோவொரு உண்மையை உணர்த்த முயல்வதாக நினைத்தேன். மலைகளுக்கு மனிதர்கள் இழைத்த சேதமும், அவற்றைச்சாட்சியாக வைத்து அரங்கேற்றிய சம்பவங்களும் ஓயாமல் திரும்ப திரும்ப எனக்குள் மனித உயிர்களாக என்னுள் அலைந்தன. ஆண்டுகள் பல கடந்த பின்னரும் மனிதனின் அடிப்படை பண்புகள் இந்த மலைகளைப்போலவே நிலைத்திருப்பது மற்றுமொரு அதிசயம். உன் பெயர் என்னண்ணு சொன்ன?

– ஹரிணி

– அம்மா பேரு?

– பவானி.

– ம். பெயர்தான் வேற., அதற்கேற்ப உனது புறவாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கலாம். மற்றபடி ஏதோ ஒன்றா இந்த உலகம் தோன்றியபோதே நீ இருந்திருப்ப, அண்மையிலே உனக்கு பவானிண்ணு பேரு பிறகு ஹரிணிண்ணு பேருவச்சிக்கிட்டே. அப்படித்தான் மனித வாழ்க்கையை பார்க்கணும். நாம காட்டுமிராண்டிண்ணு சொல்கிற அன்றைய மனிதனைதேடி நம்மைப்பத்தி ஒரு வார்த்தை சொல்லுண்ணா அநேகமாக நம்மை காட்டுமிராண்டிகளென்று சொல்லிவிட்டு அவன் சிரிக்கலாம். இப்படியொரு பார்வையை வரலாற்றின் வைத்தால் களப்பிரர்காலத்தைக்கூட பொற்காலமென்று எழுதலாம். அப்படித்தான் எனது நாவலை எழுதினேன். அந்த நாவலில் வரும் மனிதர்களைப் பார்த்தேன். எனக்கு நானும் நீயும் இதோ எனது பேரனென்று சொல்லிக்கொண்டு அமர்ந்திருக்கிறானே இவனும் நேற்றைய மனிதர்களின் தொடர்ச்சி. மனிதர் பண்பில் மாற்றமென்பதே இல்லை. அன்று நடந்தோம் இன்று காரில் போகிறோம். அடிப்படையில் நோக்கமொன்றுதான். இதில் கோளுக்கும் நாளுக்கும் செய்ய ஒன்றுமில்லை. வழக்கமாக யாரிடமும் எனது நாவலை கொடுப்பதில்லை. இவன் சொல்கிறானேயென்று கொடுகிறேன். இவனுக்கு இரண்டுமாதத்திற்கு ஒரு முறையாவது அதைத் திரும்பவும் வாசிக்கணும். எனக்கென்று இருக்கும் ஒரே வாசகன். ஆகையால் உன்னிடத்திலிருந்து பத்திரமா கொண்டுவந்து சேர்த்துடுவான் என்கிற நம்பிக்கை இருக்க்கிறது.

– கண்ணன்.!

– சொல்லுங்க.தாத்தா.

– கொண்டுவந்து கொடேன்.

ம்… உள்ளேசென்ற கண்ணன் அடுத்த கால்மணி நேரத்தில் திரும்பவந்தான். கையில் பைண்டு செய்யப்பட்ட மூன்று தடித்த நோட்டுகள். அவன் வரவும் காத்திருந்ததுபோல இளம்பெண்ணொருத்தி கையில் செம்பும் இரண்டு தம்ளர்களுமாக கால்களைத் தேய்த்துவந்தாள். அவளைத் தொடர்ந்து நடுத்தரவயது பெண்மணி.

– இவள் என் தங்கை பெயர் கலா. இது என் அம்மா – கண்ணன்.

– வணக்கங்க.

– நான் குருடிண்ணு சொன்னியா? – கையில் காப்பி செம்புடன் நின்றிருந்த இளம்பெண்ணின் குரல்

கணத்தில் பகல் வெளிச்சத்தையும் கடந்து மெல்லிய கருநிழலொன்று அவ்விடத்தில் சூழ்ந்ததைப்போல ஹரிணி உணர்ந்தாள். ஒரு சில நொடிகள் அங்கே நிசப்தம். அனைவர் பார்வையும் புதிதாக வந்திருந்த பெண்ணின் மீதிருந்தது. நடுத்தரவயது பெண்மணியின் கண்களில் கண்ணீர் அரும்பியிருந்ததைக் ஹரிணி கவனித்தாள்.

– உங்கள் சந்தோஷத்தை குலைச்சுட்டேனா? அம்மா உடனே கண்ணீர் விட்டிருப்பாங்களே- சொல்லிவிட்டு பெண் கலகலவென்று சிரித்தாள்.

– இந்தாங்க நீங்க காப்பி குடிங்க. குருடியை குருடிண்ணு சொல்லாம எப்படி சொல்வதாம். அப்படிச்சொல்வதன்மூலம் நான் நிமிர்ந்து நிற்கிறேன். ஒருவகையான தற்காப்பு யுத்தம். பரிதாபப் பார்வையின் தாக்குதலை சமாளிக்க தாத்தா கையளித்த ஆயுதம்.

– ஆமா உங்க தற்காப்புக் கலையை நீங்கரெண்டுபேருந்தான் மெச்சிக்கணும். வெடுக்கென்று நடுத்தரவயது பெண்மணியிடமிருந்து பதில்.

பேச்சின் போக்கை மாற்ற முனைந்தவள்போல காப்பி தம்ளரை, ஹரிணி கையில் வாங்கி கிழவரிடம் கொடுத்தாள். மற்றொரு தம்ளரை கையில் எடுத்துக்கொள்ள, பார்வையற்ற தனது குறையை ஒளித்து ஒரு சராசரி பெண்போல ஹரிணி நீட்டிய கையிலிருந்த தம்ளரைத் தொட்டுப்பார்த்து செம்புலிருந்த காப்பியை சிந்தாமல் அதில் ஊற்றினாள். ஹரிணி போதுமென்று சொல்வதற்கு முன்பாக தம்ளர் நிறைவதைக் காதில் வாங்கியவள்போல சரியாக நிறுத்தினாள். மற்றொரு தம்ளர் இப்போது கண்ணன் கைக்குப் போனது. இம்முறையும் காப்பியை அளவாக ஊற்றி செம்பை நிமிர்த்தியதுகண்டு ஹரிணி வியந்தாள். வியப்பில் இமைக்க மறந்த கண்களை பார்வையற்ற பெண்ணிடமிருந்து அகற்றாமல், ஹரிணி காப்பியை உறிஞ்சி முடித்தாள்.

– உங்கள் நாவலின் கையெழுத்துப் பிரதியில் இப்போதைக்கு ஒன்றைமட்டும் எடுத்து செல்கிறேன். நான் புறப்படவேண்டும், மாலை எட்டு மணிக்கு புதுச்சேரியிலிருக்கவேண்டும் – ஹரிணி.

– நான் ரோட்டுவரை வரட்டுமா? பஸ் ஸ்டேண்டுக்குக்கே போயிடுங்க. அதுதான் நல்லது. கொஞ்சதூரத்துலே சரவணா தியேட்டர் வந்திடும், இடது பக்கம் பார்ந்தீங்கன்னா காந்தி பஜார். அதைக் கடந்தா இல்லை அங்கே யாரையாவது கேட்டீங்கன்னா பஸ் ஸ்டேண்டை காட்டுவாங்க – கண்ணன்.

– ஞாபகத்தில் இருக்கிறது. அடுத்தவாரம் முழுவதும் புதுச்சேரியில்தான் இருப்பேன். புதுச்சேரிக்குவர நேரந்தால் தொலைபேசியில் அழையுங்களேன்.

– தற்போதைக்கு புதுச்சேரி வரும் எண்ணமில்லை. பார்க்கிறேன்.

பெரியவர் சடகோபன் பிள்ளையைப் பார்த்து கும்பிட்டாள். கண்ணன் கையெழுத்து பிரதிகளில் ஒன்றை ஹரிணியிடம் பையில் போட்டுக் கொடுத்தான்.

– நன்றி – என்றாள் அவனைப் பார்த்து. பிறகு கிழவரைபார்த்து ‘வரேன் தாத்தா’- என்றாள்.

கலாவின் அருகே சென்றவள் அவளை இறுக அணைத்து இரு கன்னங்களிலும் மாறிமாறி இரண்டுமுறை முத்தமிட்டாள். பிறகு முகவாயை செல்லமாக கிள்ளி, வரட்டுமா? அடுத்தமுறை நிறைய பேசுவோம் என்றாள். அவளும் தலையாட்டினாள்.

– பார்த்து போயுட்டுவாம்மா. புதுச்சேரிக்கு நேராகப் போகிற திருவண்ணாமலை பஸ் வரும் அதில் ஏறு. திண்டிவனத்தில் பஸ் மாறும் பிரச்சினை இருக்காது- பெரியவர்.

– ஆனால் பல நேரங்களில் அதில் புதுச்சேரிவரை நின்றுகொண்டு போகவேண்டியிருக்கும். பார்த்து எது சரிவருமோ அந்த பஸ்சை எடுங்கள். அடிக்கடி பஸ்ஸிருக்கு. – கண்ணன்.

மீண்டும் எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு ஹரிணி புறப்பட்டாள். போகும் போது மீண்டும் கலாவை இறுக அனைத்து முத்தமிட்டாள்.

– உனக்காகவே இந்த வீட்டுக்கு அடிக்கடி வருவேன். இப்போது புறப்படட்டுமா?

– சரிக்கா.

– வரேங்க – கண்ணன் அம்மாவிடம்.
– ம்.. என்றாள். பிறகு முகத்தில் சிறியதாக ஒரு புன்னகையை இறக்குமதி செய்து தலையை ஆட்டினாள்.

பெரியவர் நீங்கலாக மூவரும் வெளியில் வந்து வீட்டு வாசலில் நின்றார்கள். கலாவின் மனதில் தனது வடிவம் எப்படி பதிந்திருக்குமென கற்பனை செய்தபடி ஹரிணி நடந்தாள்.

2. பயந்ததுபோலில்லை, செஞ்சியில் ஏறும்போதே மூன்று பேர் கொண்ட இருக்கையில் ஒரு மூதாட்டி நகர்ந்து இடம் கொடுத்தார். பெண்மணிக்கு நன்றி கூறிவிட்டு அமர்ந்தாள். அப்பெண்மணி ஒரு சில கணங்கள் இவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்தாள். சினேக பாவத்துடன் மெல்ல சிரித்துவிட்டு தன் இடுப்பிலிருந்த சுருக்குப் பையிலிருந்த வெற்றிலையை மெல்லத் தொடங்கினாள். வெற்றிலையை மெல்லும்போதெல்லாம் காவியேறிய அவள் பற்களையும் உதடுகளின்கோடியில் துளிர்த்தடங்கிய உமிழ்நீரும், அதன் மணமும் இவளுக்குக் குமட்டிக்கொண்டுவந்தன. கைக்குட்டையை விரல்களில் பிடித்து நாசிதுவாரங்களுன் வாசல்களை அடக்க இவள்செய்த முயற்சியை, பெண்மணி விரும்பவில்லை என்பதைக் கண்களிற் படித்ததும் முகத்தைத் திருப்பி எதிர்திசையில் இவளைக்கடந்துகொண்டிருந்த காட்சிகளில் லயித்தாள். தமது கைப்பையிலிருந்த கண்ண னுடைய தாத்தா கொடுத்துவிட்ட பிரதியைப்பிரித்து படிக்கலாமா என்று தோன்றியது. பிறகு எண்ணத்தைத் தள்ளிபோட்டாள். பேருந்து ஓடிக்கொண்டிருக்க சாலையோரத்தில் தெரிந்த கடைகளும் சிறு சிறு வீடுகளும், தேநீர் கடைகளும், தொங்க விடப்பட்டிருந்த தினசரிகளும், வார இதழ்களும், தேநீர் உறிஞ்சும் மனிதர்களும், அவசரமாய் வந்து பிரேக் அடித்து நிற்கும் இரு சக்கர மோட்டார் சைக்கிளும், தலையில் சுமையுடன் வேட்டியை ஒதுக்கி சிறுநீர்கழிக்கும் ஆசாமியும் இயற்கையின் விநோதப் பிரதிகளாகப் தெரிந்தார்கள், இது போன்ற காட்சிகளில் லயிக்கிறபோதெல்லாம் அக்காட்சிகும்பலில் பவானி அம்மாவும் சிரித்துக்கொண்டு நிற்பதுபோலிருந்தது. பழைய புகைப்பட ஆல்பமொன்றின் பக்கங்களை புரட்டும் மனோ பாவத்தில் இருந்தாள். கண்ணன் தாத்தா கூறியிருந்ததுபோல பாவனி அம்மாவின் இடத்தில் தன்னை நிறுத்தி ஆறுதல் கண்டாள். இப்புதிய சிந்தனை அவளது பயணத்தை கூடுதலாக நியாயப்படுத்துவதுபோல இருந்தது, வெகுநாட்களுக்குப் பிறகு மனதில் இளங்குளிர்போல மகிழ்ச்சி வீசியது. அரும்பிய கண்ணீரை யாரும் பார்ப்பதற்கு முன்பே துடைத்துக்கொண்டாள். சந்தோஷத்தைக் கெடுக்க நினைத்தவள்போல பவானி அம்மாவைத் தள்ளிவிட்டு எலிஸபெத் முல்லர் முன்னாள் நிற்பதுபோல இருந்தது: ‘ஏய் ஹரினி! உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் நானும் உன்னைத் தேடிவருவேன்’, முகத்தில் வன்மம் தெறிக்கப் பேசுகிறாள்.

ஹரிணி இந்தியாவுக்கு வருவதென தீர்மானித்தது ஒரு தற்செயல் நிகழ்வு. சில நேரங்களில் படகு நீர்வேகத்திற்கு உட்பட்டு இழுத்துசெல்லப்படுவதில்லையா இப் பயணமும் அதுபோல நிகழ்ந்தது. தற்செயலென்று மொக்கையாகச் சொல்லிவிடுவதில் அவளுக்கு உடன்பாடில்லை. தனது உயிரில் இலைக்குள் பச்சையம்போல இந்தியா ஒளிந்திருக்கிறதென்பதை கடந்த சில வருடங்களாகவே உணர்ந்திருந்தாள், என்றபோதிலும் இப்பயணம் எதிர்பாராததுதான் என்பதை திரும்பத் திரும்ப முனுமுனுத்து அவளுடைய மனதை நம்பும்படி செய்தாள். திட்டமிடல்களால் உயிர்வாழ்க்கையை முன்நடத்திசெல்ல நாம் விரும்பினாலும், எதிர்பாராததும் இணைந்ததுதான் வாழ்க்கை. இன்று இதைச்செய்யவேண்டும் நாளை அவரைச் சந்திக்கவேண்டுமென்று தனது நாட்குறிப்பில் நாள் நேரத்தை ஹரிணி வழக்கப்படுத்திக்கொண்டு வெகு நாட்களாகின்றன. அவளுடன் பிரான்சுநாட்டில் பணிபுரிந்த சிரில் என்பவன் திட்டமிடலில் அதிகக் கவனம் செலுத்துகிறவன், நொடிகள் கூட அவனுடைய நிகழ்ச்சிநிரலில் தவிர்க்க முடியாதவை. இருந்தபோதிலும் எதிர்பாராதது வாழ்க்கையில் ஒரு விபத்துபோல நிகழ்கிறது. கொஞ்சம் யோசித்து பார்த்தாள். அவள் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களையெல்லாம் வரிசைப்படுத்தினாள், அவற்றில் எவை எவை தன்னால் தீர்மானிக்கப்பட்டவை என பார்த்தபொழுது ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. திருப்பங்களே இதுவரை அவளை வழிநடத்தியிருக்கின்றன. இதுதான் நிரந்தரமென நேர்க்கோட்டில் வாழ்க்கை சொல்லப்படவில்லை. ஒருமுறை காலையில் வழக்கம்போல அலுவலகத்திற்குச் செல்ல காரை எடுத்தால் முன் டயரில் காற்றில்லை. பேருந்து எடுக்க வேண்டியிருந்தது. ஓடிக் களைத்து பேருந்து நிறுத்தம் சென்றால் கண்ணெதிரே எட்டு முப்பது பேருந்து தவறிப்போனது. ஒன்பது மணிக்கு பேருந்து பிடித்து பத்து மணிக்கு அலுவலகத்தில் நுழைந்தால், வழக்கத்திற்கு மாறாக அதிகாரி இடத்தில் வேறொரு ஆள், பவ்யமாக நிற்கும் அதிகாரி புதியவரை தலைமை இயக்குனரென அறிமுகப்படுத்துகிறார். இயக்குனரின் பார்வையிலே எச்சரிக்கைக்கான அறிகுறிகள். இவற்றில் எதுவும் திட்டமிடலால் நிகழ்ந்தவை அல்ல. பவானி, தேவசகாயம், மத்மசல் எலிசபெத் முல்லர், அரவிந்தன், காவல்துறை அதிகாரியென திட்டமிட்டு தனது நாட்குறிப்பில் தேதியையும் நேரத்தையும் கணக்கிட்டு சந்திக்க நேர்ந்தவர்கள் அனைவருமே அவள் பாதையை மாற்றி எழுதியிருக்கிறார்கள். கண்ணனும், அவன் தாத்தா சடகோபன் பிள்ளையும், தங்கை கலாவும் வேறு திசைகளை காட்டலாம். நில நடுக்கம், சுனாமியென இயற்கையின் செயல்பாடுகளிலேயே எதிர்பாராதவைகள் ஓர் அங்கம் என்கிறபொழுது அவற்றைச் சார்ந்துவாழும் உயிர்களும் தமது தினசரிகளில் குறுக்கிடும் எதிர்பாராதவைகளை தவிர்க்கவா முடியும்? பெரியவர் சடகோபன் பிள்ளை, கோளென்செய்யும் என்கிறார்? எனக்கோ இந்த எதிர்பாராததை யார் நடத்துவதென்று கேள்வி? ஆச்சரியமாக இருந்தது. மேற்கத்திய மண்ணில் அவள் கேள்விகள் மரபுகளுக்கு எதிராக அந்த மரபு போதித்த நம்பிக்கைகளுக்கு எதிராக. இந்திய மண்ணில் வேறு ஹரிணி. பவானி அம்மாவைப்போலவே எதிலும் நிலைத்த முழுமையான நம்பிக்கை அவளுக்கில்லை. ‘பிறரைப்போல நாம் இருப்பதிலை என்பதிருக்கட்டும் சில நேரங்களில் நாமாகக்கூட நாமிருப்பதில்லையென்று’ அம்மாவின் நண்பர் கிருஷ்ணா சொல்வார். அப்படியுமிருக்கலாம். ‘ நான் யாரென்ற கேள்வி வேண்டாம். எப்போதும் இப்படியே இருப்பேனென்று எதிர்பார்க்கவும் செய்யாதே’. என மிஷெல் •பூக்கோ வற்புறுத்துவதும் இந்த உண்மையைத்தானே.

புதுச்சேரிக்குப் போறீங்களா? என்ற கேள்வியைக்கேட்டு வலப்பக்கம் திரும்பினாள். ஒரு கை நடைபாதை கம்பியிலும் மற்றகையை இவளுடையை இருக்கையின் பின்புறத்திலும் நாகரீகமின்றி ஊன்றியிருந்த இளைஞனிடமிருந்து கேள்வி. பதில் சொல்ல விருப்பமின்றி மீண்டும் தலையைத் திருப்பவேண்டியிருந்தது. பவானி அம்மா புதுச்சேரிக்கும் சென்னைக்குமாக பயணிக்கிறபோதெல்லாம் சாலையோர புளியமரங்கள், குலைகுலையா காய்த்துத்தொங்கும் தென்னைகள் ஆகியவற்றை இரசித்துபார்ப்பேன் என்று சொல்லியிருக்கிறாள். புளியமரத்தின் அடுக்கடுக்கான சிறு இலைகளையும் சடைசடையாகத் தொங்கி சலசலக்கும் புளியம்பழங்களையும் அவளை இளம்வயதில் கவர்ந்ததாகச் சொல்லியிருந்தாள். ஆனால் சாலையை அகலப்படுத்துவதாகச்சொல்லி மரங்களை வெட்டியிருக்கவேண்டும், கண்ணுக்குத் தெரிந்தவரை வெயிலே தகதகவென்று எல்லாமுமாக எங்கும் வியாபித்திருந்தது. காய்த்துக்கொண்டும் குலை தள்ளிக்கொண்டும் சாலைகளில் மரங்களாக நிற்கவும் அதற்குத் தெரிந்திருந்தது.

பேருந்து புதுச்சேரியை நெருங்குவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. இந்தியாவில் பேருந்துகளில் பயணம் செய்ய ஆரம்பித்ததுமே சாலையில் அம்மா கூறியிருந்த மரங்களைக் காணாதது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. நடத்துனர் விசிலை ஊத பேருந்து நின்றது, மக்கள் கொத்து கொத்தாக நின்றுகொண்டிருந்தார்கள். கட்சிகொடிகளும், டிஜிட்டல் பேனர்களும் வரிசையாக நான்கு பக்கங்களிலும் நிறைந்திருக்கக் கண்டாள். அநேகமாக கால் மணி நேரத்தில் பேருந்து புதுச்சேரியை அடைந்துவிடும். கடலோரமாக அவள் எடுத்திருக்கும் வாடைகைக் குடியிருப்புக்குப்போக அரைமணி நேரமாகலாம். பேருந்து நிறுத்தத்திலேயே எங்கேயாவது நல்ல ஓட்டலில் இரவு உணவை முடித்துவிடுவதென தீர்மானித்துக்கொண்டாள்.

இரவு உணவை ஒரு சிறிய உணவு விடுதியில் முடித்துக்கொண்டு அவள்தங்கியிருந்த குடியிருப்பை அடைந்தபொழுது கைக்கெடிகாரத்தைப் பார்த்தாள், ஒன்பது மணி ஆகியிருந்தது. திட்டமிட்டதுபோல எட்டுமணிக்கு வந்திருந்தால், போட்டோ கிராபரிடம் சென்று எடுத்திருந்த போட்டோக்களை வாங்கிவந்திருக்கலாமே என்று தோன்றியது. அவரிடம் எட்டுமணிக்கு வருவதாகச்சொல்லியிருந்தாள். வேலைக்கார பெண்மணி கௌசல்யா போகவில்லை காத்திருக்கிறாள். தெருவாசல் கேட்டைத் தள்ளியதும் வாசற்படிக்கு மறுபக்கம் கதவருகே நிற்கும் வீட்டுக்கார அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தவள், பேச்சை நிறுத்தினாள்.

– கௌசல்யா அம்மா! நீங்கள் வீட்டிற்குப்போயிருக்கலாமே?

– இல்லைம்மா, அறியாத வயசு. காலம் கெட்டுகிடக்குது. நீங்க திரும்பரவரை மனசு கெத்துகெத்துண்ணு இருக்குது. உங்களைப் பார்த்துட்டேன் நிம்மதியா வீட்டுக்குத் திரும்பறேன்.

– அந்தம்மா சொல்றதும் நியாயம்தான். அவங்க எப்போ உன்கிட்டே சொல்லாம வீட்டுக்குக் கிளம்பியிருக்காங்க- வீட்டுக்கார அம்மாள் பரிந்துகொண்டு வந்தாள்.

– மணி ஒன்பது ஆகப்போகுது. ஏதோ நினைப்புலே நானும் அதிசயமாக ஓட்டலில் சாப்பிட்டு வந்துட்டேன்.

– அப்படியா, நீங்க எந்நேரமானாலும் வீட்டுக்கு வந்து சாப்பிடறவங்களாச்சேன்னு தோசை மாவை எடுத்து வச்சேன்.

– ஒகே. பிரச்சினையில்லை நீங்க கிளம்புங்க. ஒன்பதுமணிக்குமேலே நீங்கதான் தனியா வீட்டுக்குத் திரும்பணும்.

– பழகின ஊருதானே அந்த அம்மாவிற்கு என்ன பயம்? – மீண்டும் வீட்டுக்கார அம்மாள்.

– ஆமாம்மா எனக்கென்ன பயம்?

– சரி சரி சொல்லிக்கொண்டிருக்காதீங்க, கிளம்புங்க நாளைக்குக் காலையிலே பார்ப்போம்.

உத்தரவை ஏற்பவள்போல வேலைக்கார அம்மாவின் தலை மேலும் கீழுமாக இருமுறை அசைந்தது. அவள் புறப்பட்டு வெளிசுவர் கேட்டை மூடி மறைந்ததும் ஹரிணி வீட்டுக்கார அம்மாவைப் பார்க்க, நிலைவாசற் கதவைப் பிடித்துக்கொண்டிருந்த அந்த அம்மாள் ஒதுங்கி வழிவிட்டாள், என்ன சமைத்தாளோ மசாலா வாடையில் உடல் மணந்தது, அவளை அவசரமாகக் கடந்து நடைக்குள் வரவும், வீட்டுக்கார பெண்மணி மாடிப்படிகளுக்கான மின்சார விளக்கைப் போட்டாள். இரண்டிரண்டு படிகளாகப் பிடித்து மாடிக்கு வந்தாள்.

கடலின் இரைச்சல் தெளிவாகக் கேட்டது, சிறிது நேரம் திறந்த மாடியில் நின்று கண்களை மூடி கடலோசையை காதில் வாங்கினாள் மனதிற்கு இதமாக இருந்தது. பின்னர் வலப்புறமாக நடந்து மின்சார விளக்கை போட்டவள் கதவைத்திறந்தாள். இதுவரை இல்லாத களைப்பு திடீரென்று முளைத்து தன்னைச்சுற்றிக்கொண்டதுபோல இருந்தது. கைப்பையிலிருந்த கண்ணன் தாத்தாகொடுத்த பிரதியை மேசைமேல் எடுத்துவைத்துவிட்டு கைப்பையை நாற்காலியில் தொங்கவிட்டபடி ஒப்பனை அறைக்குள் நுழைந்தாள்.

வெந்நீரை திறந்துவிட்டு தண்ணீர் தொட்டியை நிரப்பி வெகுநேரம் கிடந்தாள். எவ்வளவு நேரம் இருந்திருப்பாளென தெரியாது. கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. வீட்டுக்கார அம்மாவாகத்தான் இருக்கும் இருங்கம்மா இந்தோ வந்திடறேன், என அவளை ஓரிருநிமிடங்கள் காத்திருக்க வைத்தாள். தேங்காய்ப்பு துவாலையால் அவசரமாக அவசரமாக உடலை துடைத்தபடி, கதவைத் திறந்தாள். வீட்டுக்கார அம்மாள். படியேறிவந்ததில் மூச்சிறைத்தது. ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசினாள்.

– இது பிரான்சு இல்லை. வீட்டிலே இருந்தாலும் உடை விஷயத்துலே கொஞ்சம் கவனமா இருக்கனும். எனக்குப்பதிலா வேறு யாராச்சுமிருந்தா என்ன நடந்திருக்கும்.

– இல்லை நீங்கதானேன்னு அலட்சியமா இருந்துட்டேன். இனி கவனமாக இருக்கேன். என்ன விஷயம் சொல்லுங்க.

– உன்னைத்தேடி இரண்டு பையன்கள் வந்தாங்க. அவனுகளை பார்த்தா நல்லவிதமா தெரியலை. எங்கேண்ணு கேட்டாங்க. வெளியிலே போயிருக்காங்கண்ணு சொன்னேன். வெளியிலே நிண்ணு கொஞ்சம் நேரம் ஏதோ பேசிக்கிட்டிருந்தாங்க. மோட்டார் சைக்கிளில் வந்திருந்தாங்க. பிறகு போய்ட்டாங்க.

– அப்படியா? ஆச்சரியமா இருக்கே. எதற்காக தேடினோம்னு சொல்லலையா?

– சொல்லலை. பார்க்க ரௌடிபசங்க மாதிரி இருந்தாங்க.

– வேலைக்கார அம்மா கௌசல்யா அப்போது இல்லையா?

– இருந்தாங்க ஆனால் அவங்ககிட்டே எதற்காக சொல்லணுமென்று விட்டுட்டேன்.

– நன்றிம்மா. நான் பார்த்துக்கறேன்.

– கதவைத் தாழ்ப்பாள்போட்டுட்டு படும்மா.

என்றவள் மெதுவாக நடந்து மாடிப்படிகளில் இறங்கினாள். அவள் காலடிகள் படிகளில் இறங்கி மௌனிக்கும்வரை யோசித்தவளாய் கதவருகில் நின்ற ஹரிணி கதவை மூடினாள் .இரண்டு இளைஞர்களை பற்றிய நினைப்பு அவள் துவாலையை உதறிவிட்டு ஒரு நைட்டியை அணியும்வரை மனதிலிருந்தது. பிரிட்ஜிலிருந்து ஒரு கிண்டர் கேக்கைப் பிரித்து வாயில் வைத்துக் கடித்தாள். அறைவிளக்கை அணைத்துவிட்டு, கட்டிலருகே போடப்பட்டிருந்த சிறுமேசையிலிருந்த மின்சாரவிளக்கை ஏற்றினாள். செஞ்சியிலிருந்து இரவல் வாங்கிவந்திருந்த பிரதியை கையிலெடுத்துக்கொண்டு கட்டிலில் மார்புகள் அழுந்த கவிழ்ந்து படுத்தாள். கைப்பிரதியைப் பிரித்துவைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தாள் முதல் ஐந்து நிமிடங்கள் கிழவரின் கையெழுத்தைப் புரிந்து கொள்வதில் சிரமங்கள் இருந்தன. கதையின் போக்கில் எழுத்திலிருந்த சங்கடங்கள் மெல்ல மெல்ல மறையலாயின.
(தொடரும்)

Series Navigationரவுடிச் சாமியும் ரங்கமன்னாரும்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *