சீக்கிரம் இருட்டிவிடுகிறது இப்போதெல்லாம். இரவு போர்த்திக்கொள்ளும் அளவுக்குக் குளிர்கிறது. வெயில் சாய்ந்தபின் நிறைய விதமான பூச்சிகள் வீட்டிற்குள்ளும் வெளியிலும் மொய்த்தெடுக்கின்றன. பல வண்ணங்களிலும் அளவுகளிலும் பறந்தோ ஊர்ந்தோ வந்துவிடுகின்றன. சில புழு போல தவழ்ந்து போகிறதே என்று நினைக்கும்போதே அவை சட்டெனத் தாவிப் பறக்கும். இவற்றை விரட்டுவதும் கஷ்டம். கால் கைகளில் உட்கார்ந்தால் கூடப் பரவாயில்லை. முதுகில்போய் உட்கார்ந்து கடிக்கும். அடிக்கும்போது விட்டலாச்சார்யா படம்போல மாயமாய் எங்கோ போய்விடும். எப்போதாவது தவறி சரியாக அடித்துவிட்டால், சாவதற்குமுன் சுள்ளென்று கடித்துவிட்டுத்தான் சாகும். கடித்த இடத்தில் பத்து நிமிஷம் எரிச்சல் தாங்காது. கிரிக்கெட்டில் அப்போதுதான் நம்மாள் விக்கட்டோ, எதிர் அணி பாட்ஸ்மேன் சிக்ஸரோ விழ/ அடிக்க எரிச்சல் இன்னும் அதிகமாகும்.
இன்னும் ஓரிரு நாட்களில் வடகிழக்குப்பருவ மழையின் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆரம்பித்துவிடுமாம். ” ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைக்கரவேல் ” என்று ப்ரார்த்தித்துக் கொள்வோம். மழைக்காலமும், பனிக்காலமும் சுகமானவை என்ற கண்ணதாசன் பாட்டு ஞாபகம் வருகிறது. எவ்வளவு உண்மையானது அது. ஆஸ்த்மாக்காரர்கள் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். நம்ம ஊர் மழையெல்லாம் மழையே அல்ல. ஆனாலும், ஐப்பசி, கார்த்திகையில் வெல்வெட் தூரலில், அம்மாமண்டபத்தில் குளித்துக்கொண்டே எதிர்க்கரையைப் பார்த்தால், மலைக்கோட்டையை ஒரு பாலிதீன் பையில் போட்டு வைத்தாற்போலிருக்கும். கான்க்ரீட் பாலம் வாகன விரைவிற்கு அதிர ராத்திரியில் காவிரியில் நியான் விளக்கு வெளிச்சம் நடுங்கிக்கொண்டிருக்கும். சின்ன வயதில் கயிற்றுக் கட்டிலின்கீழ் நானும் தம்பியும் சாக்குப்பைக்குள் ஒடுங்கிக்கொண்டு குளிரை வெற்றிகொள்வோம். எங்கோ தூரத்தில் ஒலிபெருக்கியிலிருந்து வழிந்து ஈதரைப் பிளந்துகொண்டு வரும் சீர்காழி கோவிந்தராஜனின் முருகன் பாடல்கள் வேலையும் மயிலையும் அனுப்ப, தைரியமாய்த் தூங்கிப்போவோம். ஆனால் இப்போதோ அந்தப்பாடல்கள் என்னை ஏனோ தூங்கவிடுவதில்லை. ” கந்தன் எழில் காண இந்த இரு விழிகள் எந்த வகை போதும் “, “தெய்வமே தமிழ் தெய்வமே “, ” பால முருகன் விளையாடல் ” போன்ற பாடல்களின் நயம் செறிந்த எளிமையும், சீர்காழியின் உருகிக் குழைந்து நெஞ்சை நிறைக்கும் குரலும் கேட்கும் போதெல்லாம் இசையின் மகத்துவம் தூங்கவிடாமல்தான் செய்துவிடுகிறது .
ரயில்வே காலனியின் மையத்தில் இருக்கும் மாரியம்மன் கோவில் கார்த்திகை மார்கழியில் ரொம்ப பிசியாக இருக்கும். சரியாக, கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் சபரிமலைக்குப் போகும் முதல் பேட்ச் மாலை போட்டுக்கொள்வதற்காக விழாக்கோலம் காணும் கோவிலில் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதகளம்தான். பக்கத்துவீட்டுப் பையன் கணேசன் உடம்புக்கு வந்து பிழைத்ததே பெரிது என்றிருந்த வருடத்தில் அவன் அப்பா, அவனுக்கும் அந்த வருடம் இருமுடி கட்டிவிட முடிவெடுக்க அவன் கன்னிசாமி ஆகிவிட்டான். எங்கள் நண்பர்குழாமிற்கு அவன் ஒரிஜினல் பெயரால் கணேசன் என்று கூப்பிடுவதா அல்லது கன்னிசாமி என்றழைப்பதா எனத்தெரியாமல் ” கன்னி கணேசா “என்றுகூட ஒருவன் கூப்பிட்டுக்கொண்டிருந்தான். சிலசமயம் அவனை, சின்னசாமி என்றும் சில பெரியசாமிகள் அழைத்தனர். ஆனால் அவனோ, இப்படியெல்லாம் கூப்பிட்டால் திரும்பிப்பார்க்காமல், அவன் பட்டப்பெயரான “ரவுடி ” என்றழைத்தால் மாத்திரம் ரெஸ்பாண்ட் பண்ணியதால் அவன் அதன்பின் ” ரவுடிசாமி ” ஆகிப்போனான். மாலை போட்டுக்கொண்ட முதல் நாளிலிருந்து பஜனை உண்டு. காலையில் நான்கு மணிக்கே அவனைப் படுக்கையிலிருந்து எழுப்பமுடியாது தூக்கிக்கொண்டுபோய் தலையில் தண்ணீரைக்கொட்டிவிட அவன் அலறலில் நாங்கள் எல்லோரும் எழுந்துவிடுவோம். குளித்தபின் சாம்பிளுக்கு சுவற்றில் அடித்த சுண்ணாம்பு மாதிரி விபூதியைப் பூசிக்கொண்டு நிற்கும் அவனுடன் கோவிலுக்குக் கிளம்பிவிடுவோம் . முன்தினம் இரவு சாப்பிட்ட மூன்று இட்லிகள் சாப்பிட்ட சிலமணித்துளிகளிலேயே வயிற்றுக்குள் பஸ்மாகிவிட அந்த அதிகாலையில் அவன் பசியில் காதடைக்க உட்கார்ந்திருக்கும்போதுதான் பஜனையின் ஆரம்பத்தை ” சாமியேய்ய்ய்ய்ய்ய் ..” என்று குருசாமி ரொம்ப நேரம் மூச்சடிக்கி இழுத்து அறிவிக்க , அவர் நிறுத்துவதற்கு முன்னாலேயே ரவுடிசாமி ” சரணமைய்யப்பா ” எனக்கத்திவிடுவான். மீண்டும் குருசாமி ” நோ பால் ” போட்ட பின் அடுத்த பால்போட ரெடியாகும் பேஸ் பௌலர் மாதிரி உரத்த குரலில் இன்னும் அதிகமாக மூச்சிழுத்து ” சாமியேயேயே….ய்ய்ய் ” என ஆரம்பிப்பார். இம்முறை ரவுடிசாமியின் கவனம் பக்கத்தில் வைத்திருந்த வாழைப்பழ சீப்பின்மீது விழுந்துவிட அவன் , குருசாமி முடித்தபின் பதில் சரணம் சொல்லாது விட்டுவிட்டான். அவனுடைய தகப்பன் சாமி தொடையில்தட்ட எல்லோரும் முடித்தபின் இவன் தனியாக ” சரணமைய்யப்பா ” என்று அலறினான். இப்படியாக அன்று முதலில் இருந்தே ஸ்ருதி சேராமல் தவித்துக்கொண்டிருந்தவன், கொஞ்ச நேரத்தில் பஜனையின் உக்ரம் அதிகமாகும்போது கரஸ்பாண்டிங்காக பசியும் ஜாஸ்தியாக வீரமணியின் பாடலை அனைவரும் லயித்துப் பாடிக்கொண்டிருக்க ” தேக பலம் தா ” என்ற வரி வரும்போது திடீரென விழித்துக்கொண்டவன்போல அதற்கு அடுத்த வரியை இவன் சொந்த சரக்கில் ” வாழைப் பழம் தா ” எனப்பாடி விட்டான். முதல் முறை இவன் சொன்னதை சரியாகக் கவனிக்காத குருசாமி அடுத்தடுத்து இவன் கண் போன திசையை வைத்து இவனது ” வாழைப் பழம் தா ” வைக் கண்டுபிடித்துவிட்டார். தகப்பன் சாமி, குருசாமியின் முகக்குறிப்பறிந்து இவனை வெளியில் கூட்டிவந்து வயிற்றுக்குக் கொடுத்தபின் மீண்டும் பஜனையில் உட்காரவைத்தார். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே ரவுடிசாமி தூங்கிவிழ நாங்கள் அவனை வீட்டிற்கு அழைத்து வந்து படுக்க வைத்துவிட்டுப் பின் ப்ரஸாதம் வாங்கிக்கொள்ள வந்துவிட்டோம். அந்த முறை கொஞ்சம் சிரமப்பட்டவன், அடுத்த தடவையிலிருந்து மிகுந்த கிரமத்துடன் சபரி மலைக்குப் போய்வர ஆரம்பித்துவிட்டான். சென்ற வருடம் கணேசனைப் பார்த்தபோது, தொடர்ந்து நாற்பத்திரண்டு வருடங்கள் இருமுடி கட்டி ஐயப்ப தரிசனம் செய்துவருவதாகச் சொன்னான். அவனே இப்போது பெரிய குருசாமியாகி நம்பியார் மாதிரி இருந்தான். அவனுடன் பேசிவிட்டுத் திரும்பும்போது, ஒரு சீப்பு வாழைப்பழம் கொடுத்தனுப்பினார் அவன் மனைவி.
* * * * * ********************************
பெரிய கோயிலில் ஊஞ்சல் உற்சவம் ஆரம்பித்து இன்று ஐந்தாம் திருநாள். மூன்று நாள்தான் சேவிக்க முடிந்திருக்கிறது என்று அலுத்துக்கொள்கிறாள் அக்கா. வயதான பாட்டிகளெல்லாம் குச்சி ஊன்றிக்கொண்டாவது வந்து சேவித்துவிடுகிறார்கள். மழையோ, பனியோ அல்லது வெயிலோ எவ்வாறேனும் கோயிலுக்கு வந்துவிடும் பக்தியை வேறெங்கும் பார்க்கமுடியாது என்றுதான் தோன்றுகிறது. ராத்திரி ரெண்டு மணிக்குப் பெருமாள் புறப்பாடு என்றாலும் பத்துக் கிழவிகள் மஃப்ளர் கட்டிக்கொண்டாவது வந்து நிற்கிறார்கள். கீழே விழுந்து நமஸ்கரிக்க முடியவில்லை என்றாலும் பாவனையாக சேவிக்கிறார்கள். கைகளையே பைனாகுலர்களாக்கி பெருமாளைக் கிட்டக்கொண்டுவந்து பார்க்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன் பார்த்த பெருமாளை ஞாபகத்திலிருந்து பிடுங்கிக்கொண்டு வந்துவிடுகிறதோ என்னவோ அந்த பைனாகுலர் கைகள். இதில் பாசாங்கு ஒன்றும் தெரியவில்லை. இவர்களெல்லாம் த்வாபர யுகத்துப் பிறவிகளோ அல்லது கோபிகைகளோ ஒன்றும் புரியவில்லை. ஆனால் பெருமாள் சேவிக்க வெளியூர்க்காரர்கள் யாரையும் விடாதபோதும் வீட்டிலும் மற்றவர்களிடமும் சண்டைபோடும்போதும் இவர்கள் எப்படி மாறிப்போய் விடுகிறார்கள் என்பதும் புரியவில்லை.
ஊஞ்சல் உற்சவத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்து கிழவிகள் பக்கம் போய்விட்டது எழுத்து. பெருமாளுக்கு தினமும் ஒரு அலங்காரம். பதக்கமும், நகைகளும், மாலையும் கண்ணைப்பறிக்கும். ஊஞ்சல் புதுசு. பழசை ஏறக்கட்டிவைத்து ஏழெட்டு வருஷமாச்சு. பழைய ஊஞ்சலின் கம்பீரமும் அழகும் புதியதில் இல்லை. பெருமாள்கூட இதில் கொஞ்சம் அசௌகர்யமாய்த்தான் உட்கார்ந்திருப்பதுபோலத் தோன்றுகிறது . கம்பத்தடி ஆஞ்சனேயர் சன்னதிக்குப் பக்கத்தில் இருக்கும் மண்டபம்தான் ஊஞ்சல் மண்டபம். அந்த மண்டபத்தில் ஒரு சிற்பம் உண்டு. இரண்டு தலை உள்ள பறவை ஒன்று தன் இரண்டு அலகுகளிலும் இரண்டு கால்களிலும் மொத்தம் நான்கு யானைகளைப் பற்றிக்கொண்டு பறந்து கொண்டிருக்கும்.” நானே நான்கு யானைகளை அனாயாசமாகத் தூக்கவல்லவனாயின், நான் வணங்கும் பெருமாள் எவ்வளவு பலசாலி?” என்று ஆணவம் கொண்ட அரக்கனுக்கு பதில் சொன்ன பறவை அது. பெருமாள் அந்த தூணுக்குப் பக்கத்தில்தான் ஏளியிருப்பார் ( எழுந்தருளியிருப்பார் ). ஊஞ்சலை மெல்லக் குழந்தையைத் தூங்கப்பண்ணுவதுபோல ஆட்டிவிட்டுக்கொண்டிருப்பார்கள். கீழே நாதஸ்வரக்காரர் ஊஞ்சல் அசைவிற்கு இசைவாக வாசித்துக்கொண்டிருப்பார். இசைத்துக்கொண்டிருக்கும் ஊஞ்சல் பாடல்கள் ரியால்ட்டி ஷோக்களில் பாடப்படும் மெட்லே போலத் தொடர்ந்து ஒரே ராகத்தில் அமைந்த பாடல்களாகவே இருக்கும். பெருமாளுக்கு முன் இரண்டு பேர் சாமரம் வீசுவர். அப்துல் காதிரும் ஹர்பஜனும் கலந்த பௌலிங்க் ஆக் ஷனில் சாமரம் வீசுவதைப் பார்க்க ஸ்வாரஸ்யமாய் இருக்கும் . ஊஞ்சலாட்டமும், சாமரம் போடுபவர்கள் ஆட்டமும் பெருமாளைச் சேவிக்கவிடாமல் பக்தர்களையும் ஊஞ்சலாட வைக்கும். இங்குதான் கிழவிகளின் தொல்லை தாங்காது. அங்கும் இங்கும் நகர்ந்து கையிலுள்ள குச்சியால் யார் காலையாவது குத்திவிடுவார்கள். குத்திவிட்டு, கீழேகுனிந்து காணாமல்போகாத காசைத்தேடுவர்கள். என்னவோ ஏதோவென்று எல்லோரும் கீழே குனியும்போது மாத்திரம் பெருமாளை நன்றாகச் சேவித்து விடலாம். தீர்த்தம் சடாரி வாங்கிக்கொள்ள இவர்கள் முண்டியடித்து ஓடும்போது நம்மாழ்வாரே பயந்துவிடுவார். இதோ அடுத்தது நமக்குத்தான் என்று நான் சடாரிக்காகத் தலைகுனிந்து நிற்கையில் ( இங்கேயும் ரோஸ்டர் பாய்ண்ட் உண்டோ என்னவோ) ரொம்ப நேரமாகியும் தலையில் படாது நிமிர்ந்துபார்க்கும்போது ‘ டங் ‘ கென்று சடாரி தலையில் விழும். அப்போதும் ரெண்டு பாட்டிகள் தத்தளித்துக்கொண்டு பக்கத்தில் நிற்பார்கள். பல்லே இல்லாத நிலையிலும் திருத்துழாயை ( துளசியை ) வாங்கிக்கொண்டு, ரெண்டு இலையைப் பிய்த்துப்போட்டுக்கொண்டு நகர்வார்கள் தொண்டையில் சிக்கிக்கொண்ட துளசியால் ஊரே பயப்படும்படிக்கு தும்மலும் இருமலும் இடியுடன்கூடிய மழையாய் வர்ஷிக்கும் இவர்கள் எச்சில். இவர்களை வீட்டில் யாரும் தேடவும் மாட்டார்கள். ” பெருமாள் கிட்ட போகவேண்டியது பெருமாள் கோயிலுக்குத்தான் போயிருக்கும் ” என விட்டு விடுவார்கள். பொங்கலோ புளியோதரையோ கோயிலில் இனாமாகக்கிடைத்துவிடும். குழைந்துபோயிருக்கும் பொங்கலும், விரைத்து நிற்கும் புளியோதரையும் இவர்கள் வயிற்றை ஒன்றும் செய்யாது. பெருமாள் கோயில் ப்ரஸாதம் சாப்பிட்டு இதுவரை யாரும் பரமபதிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. மடப்பள்ளிக்குள் போனால் ஒரு வேளை அந்த பாக்யம் கிடைக்கலாமோ என்னவோ!
— ரமணி
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 1
- ரவுடிச் சாமியும் ரங்கமன்னாரும்
- தமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை
- அர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்..
- அப்பா
- பழமொழிகள் கூறும் உதவி எனும் வாழ்க்கை நெறி
- பா. சத்தியமோகன் கவிதைகள்
- தலைமை தகிக்கும்…
- நானும் அசோகமித்திரனும்
- குறுங்கவிதைகள்
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 19
- அந்த நொடி
- முள் எடுக்கும் முள்
- வாசிப்பு அனுபவம்
- இதுவும் அதுவும் உதுவும் – 5
- இந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா ? அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா ?
- பம்பரம்…
- கவிதைகள்: பயணக்குறிப்புகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் ! (கவிதை -52 பாகம் -1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -5)
- இந்துக்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை
- பஞ்சதந்திரம் தொடர் 18 சமுத்திரமும் நீர்க்குருவியும்
- தமிழ் விக்கிப்பீடியா ஒரு ஊடகப் போட்டி
- வாப்பாவின் மடி
- ப்ளாட் துளசி
- தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்
- கூடிக்களிக்கும் தனிமை
- கை மாறும் கணங்கள்
- வாசிப்பும் வாசகனும்
- முகம்மது யூனுஸ் அறிஞர் அண்ணாவை ஹாங்காங்கில் சந்தித்தது பற்றிய உரை
- மகா சந்திப்பொன்றில்
- நடுநிசிகோடங்கி
- கஸ்ட்டம்ஸ் கட்டிடத்தில் மோகினிப்பிசாசு
- பிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா
- நானும் பிரபஞ்சனும் கட்டுரை குறித்து சில கருத்துகள்:
- முன்னணியின் பின்னணிகள் – 14 சாமர்செட் மாம்
- மியன்மார் பாரம்பரிய இசை
- மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 16