இராணுவமும், யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையும்!

This entry is part 11 of 39 in the series 18 டிசம்பர் 2011

– கெரபொத்தா

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

வரலாற்றில் அதிகமாகத் தண்டனைகள் வழங்கப்பட்ட பூமியை அணைத்தபடி ஏ9 வீதி சாய்ந்திருக்கிறது. பாரிய கலவரமொன்றில் யுத்த டாங்கிகளாலும் கனரக வாகனங்களாலும் துளைக்கப்பட்ட காயங்கள் எக்கணத்திலும் மீண்டும் கிளரப்பட இடமிருக்கிறதெனத் துப்பாக்கிகளும் பங்கர்களும் இராணுவ முகாம்களும் எதிர்வு கூறுகின்றன. முட்புதர்களிடையே ஒளிந்திருக்கும் நிலக்கண்ணி வெடிகள் குறைந்தபட்சம் ஒரு பனங்காயாவது தனது உடலின் மீது விழும்வரை காத்திருக்கின்றன. நாற்புறத்திலும் கேட்கும் சிங்களக் குரல்கள் ‘இம்முறை வந்திருப்பது விருந்தாளிகளாகவல்ல, நிரந்தரமாகத் தங்குவதற்கே’ எனக் கத்திச் சொல்கின்றன. ‘மனிதாபிமான நடவடிக்கை’யின் பின்னணியில் வந்திருக்கும் வியாபார நிறுவனங்கள், வாழ்க்கைப் போராட்டமானது இன்னும் முடிவுக்கு வரவில்லையெனக் கூறியபடி வேலைவாய்ப்புகளோடு காத்திருக்கின்றன. இது யுத்த காலத்துக்குப் பிறகு, வவுனியாவுக்கு அடுத்தபடியாக இருக்கும் உலகத்தின் இன்றைய நிலைமையாகும்.

தொழிலொன்றைச் செய்தல், உணவு பானங்களைத் தயாரித்தல், வீடுகளைக் கட்டுதல், மகிழ்வாக இருத்தல், வணக்க வழிபாடுகளை மேற்கொள்ளல் போன்ற இன்னும் மக்களிடையே மறைந்துவிடாத அனைத்தும் சாதாரணமாகப் பொதுமக்கள் சமூகமொன்றுக்குள் மனிதர்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த நடவடிக்கைகளாகும். யுத்தத்தின் காரணமாக மேற்சொன்ன நடவடிக்கைகளுக்குத் தொடர்ச்சியான தடங்கல்கள் ஏற்படுவதே பொதுமக்கள் சமூகத்துக்குத் தலைவலியாக அமைகிறது. இன்னுமொரு புறத்தில் ஏதேனுமொரு குழுவினரது வாழ்க்கை முறைகளுக்கு, நடைமுறையிலிருக்கும் அரசியல் நிலைமையானது தடங்கலாக அமைவதற்கு எதிராகத்தான் யுத்தமொன்று உருவாகிறது.

யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னரைப் போலவே, யுத்தகாலத்திலும்கூட வவுனியாவைத் தாண்டிய உலகத்தின் மீது சுமத்தப்பட்ட தடங்கல்கள் காரணமாக மனித உயிர்களைத் தியாகம்செய்ய நேர்ந்தது. இன்று யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. எனினும் யுத்தம் முடிவுற்ற பிற்பாடு மீள அளிக்கப்படும் எனச் சொல்லப்பட்ட பொதுமக்களது வாழ்க்கையானது, வவுனியாவைத் தாண்டிய உலகுக்கு மீள அளிக்கப்பட்டிருக்கிறதா என்பதே கேள்வியாக உள்ளது. காட்சிப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கொஞ்சம் ஒதுக்கிப் பார்க்கும்போது, அவ்வாறான அமைதியான வாழ்க்கையொன்று அங்குத் தென்படுவதில்லை. வவுனியாவைத் தாண்டிய மக்களது வாழ்க்கை எதிர்பார்த்த இடத்தை விடவும் மிகவும் கீழேயே இன்றும் உள்ளதென்பதை, இலங்கையை முன்மாதிரியாகப் பார்ப்பவர்களிடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

ஏ9 வீதியில் அமைந்திருக்கும் அனேகமான உணவகங்களில் மரக்கறி ரொட்டிகளைத் தயாரிப்பதும் தேநீர் தயாரிப்பதும் இராணுவத்தினராலேயே நடைபெறுகின்றன. மிகவும் ஒழுங்கான முறையில், தூய்மையாக (இராணுவ ஒழுங்குகளுக்கு அமைய) நடாத்தப்பட்டுவரும் இந்த உணவகங்களின் உரிமையாளர்கள் வேறு யாருமல்ல, பாதுகாப்பு அமைச்சுதான். இவ்வாறு இராணுவத்தால் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது யுத்தத்தின் பிறகு மக்களுக்கு மீள அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட பொதுமக்களது வாழ்க்கையும் அவர்களது வாழ்வாதாரங்களும்தாம்.

அநுராதபுரம் ஸ்ரீ மஹாபோதியை வணங்கச் செல்கையில் பிரபாகரனைக் கொன்ற இடத்தையும் பார்த்துவிட்டு வரவென இப்பொழுதும் வரிசையாகச் சென்றுகொண்டிருக்கும் தெற்கின் மக்களால் இந்த உணவகங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. பாதுகாப்பு அமைச்சானது, இந்த வருமானத்தின் மூலம் இம்மக்களை அச்சுறுத்தவெனவே இன்னுமின்னும் ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது. இல்லாவிடில் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் சேமிக்கிறது. யுத்தத்தின் பிறகு ஏ9 வீதியோரத்தில் கடையொன்றை நிறுவிக்கொள்ளக் கனவுகண்ட மனிதன் இராணுவ உணவகமொன்றில் சிங்களத் தேநீரைச் சுவைத்துவிட்டு வீடு செல்கிறான்.

இராணுவமானது மாலை நான்கு மணி தாண்டியதன் பிறகு விளையாடத் தொடங்குகிறது. மைதானங்களில் விளையாடப் பந்துகளை எடுக்கிறது. ஏ9 வீதியில் சைக்கிள்களில் ஓடுகிறது. எனினும் விளையாடக்கூடிய சாதாரண இளைஞர், யுவதிகளைக் காண முடியவில்லை. ஒன்று, விளையாடியவர்கள் இன்னும் அகதி முகாம்களில் இருக்கக்கூடும். இல்லாவிடில் வீட்டைவிட்டும் வெளியே வராதிருக்கக்கூடும்.

அனுராதபுரம், மாத்தறை, அவிஸ்ஸாவெல்லையைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் (இராணுவப் படையினர்) ஓமந்தை மைதானங்களில் பந்து விளையாடுகையில் ஓமந்தை இளைஞர், யுவதிகள் அகதிமுகாம்களுக்குள்ளோ வீடுகளுக்குள்ளோ அடங்கியிருக்கக்கூடும். ஓமந்தைக் கொண்டாட்டங்கள் இராணுவத்தால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

சந்திக்குச் சந்தி நிறுவப்பட்டிருக்கும் புத்தர் சிலைகள், பௌத்த விகாரைகள் நாம் மாங்குளத்தில் இருக்கும்போதும் மஹரகமயில் இருப்பது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கின்றன. இராணுவமானது, மதத்தைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறது. இவ்வாறு அடிக்கொன்றாக நிறுவப்பட்டிருக்கும் பௌத்தக் குறியீடுகளின் காரணமாகத் தாம் வேற்று மனிதர்கள் என்றே மக்களுக்குத் தோன்றுகிறது. இப்புத்தர் சிலைகளுக்குப் பக்கத்திலேயே ‘ஒரே இனம், ஒரே நாடு’ என ஆங்கிலத்திலும் தமிழிலும் விசாலமான விளம்பரக் கட்அவுட்கள் நிறுவப்பட்டுள்ளன. சிலவேளை, இராணுவமானது ‘ஒரே இனம், ஒரே நாடு’ என்பதில் சிங்களப் பௌத்தர்களை மட்டுமே காண்பதாக இருக்கக்கூடும். ஆகவே இவ்வாறு தெற்கிலிருந்து சென்றுள்ள இராணுவமானது வவுனியாவைத் தாண்டி இன்னுமொரு தெற்கை உருவாக்குகையில் அப்பிரதேசத்து மக்களின் வாழ்க்கையைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

இன்று வவுனியாவைத் தாண்டியுள்ள மக்களின் வாழ்க்கை எவ்வாறாயினும் அப்பிரதேசங்களில் இன்னுமொரு தெற்கு உருவாக்கப்பட்டுக்கொண்டிருப்பது மட்டும் தெளிவானது. இராணுவத்தின் தெற்கு மனிதர்கள் வடக்கில் மரக்கறி ரொட்டிகளைத் தயாரிக்கையில், பந்து விளையாடுகையில், புத்தரை வணங்குகையில் அப்பிரதேசத்து மக்கள் ‘வாய்ச் சொல் தவறினால் மரணம்’ என்பதை நன்கு அறிந்திருப்பதால் அமைதியாக இருக்கின்றனர். தெற்கின் கலாசாரங்கள் எந்தளவு வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றதெனில் இன்று தெற்கின் குளியல் இடங்களிலும் கூரைகளிலும் பதுங்கியிருக்கும் ‘கிறீஸ் பூதங்கள்’கூட* வடக்குக்கும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

வவுனியாவைத் தாண்டியுள்ள மக்களின் வாழ்வாதாரங்கள், சந்தோஷங்கள், சமயம் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் இப்போது இராணுவத்தால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதோடு, இன்று உண்மையில் வடக்கில் பொதுமக்களது வாழ்க்கையை வாழ்வது இராணுவத்தினர் மட்டுமே. சாதாரண வாழ்க்கையொன்றைக் கனவுகண்ட மக்கள் யுத்தகாலத்தைப் போலவே இப்பொழுதும் தமது வாழ்க்கையைத் தியாகம்செய்தபடியிருக்கிறார்கள்.

இங்குக் காணப்படும் முக்கிய அம்சமானது தெற்கின் வாழ்க்கையை வடக்கில் கழிப்பதற்காக அரசாங்கத்தால் இராணுவத்துக்கு ஊதியம் வழங்கப்படுவதாகும். ஆகவே இராணுவமானது அந்த ஊதியத்தைப் பெற்றுக்கொள்ள இன்னு மின்னும் கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய வேண்டும், பந்து விளையாட வேண்டும், புத்தர் சிலைகளை நிறுவ வேண்டும், கிறீஸைப் பூசிக்கொள்ள வேண்டும்.

– கெரபொத்தா

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

Series Navigationசுஜாதாமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 5
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *