1) சூழலியல் அரசியலை தன் எழுத்தின்வழி ஆய்வாளர் மா.அமரேசன் எழுதிச் செல்கிறார்.இயற்கையின் சமன்குலைவு இதன் மையமும் விளிம்பும் சார்ந்த பார்வையாக மாறியுள்ளது.பெளதீகச் சூழலுக்கும் மனிதன் உருவாக்கும் பண்பாட்டுச் சூழலுக்கும் இடையிலான முரணும் விலகலும்நிகழ்ந்தவண்ணம்உள்ளது.பெளதீகச்சூழல்இயற்கைச்சார்ந்தது.நிலவியல்,தாவரங்கள்.வனங்கள்,காணுயிரிகள்,நீராதாரம்,காலநிலை,காற்றின் தூய்மை என விரிந்து செல்கிறது. மனித உழைப்பின் ஊடாக உருவாகியுள்ள விவசாய உற்பத்தி முறைகள் ,நகர உருவாக்கம் கட்டமைத்த வாழிடங்கள் , நம்பிக்கைகளின் வழியிலான சமயம் சாதி வாழ்வியல் சடங்கியல்கள் என பண்பாட்டுச் சூழல் உருவாகிறது.பிறிதொரு நிலையில் சொல்லப் போனால் உயிருள்ள ஜீவராசிகளுக்கும் உயிரற்ற பெளதீக ,இரசாயன பொருட்களுக்கும் இடையிலான மோதலாகவும் வெளிப்படுகிறது.
அமரேசனின்சூழலியல் நோக்கு வனம்,நீர்,நிலம்,விளிம்புநிலைமக்கள் என்பதான பொருண்மைகளின் வழி சமூக பண்பாட்டு அரசியலைப் பேசுகிறது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் நவீன பொருளாதார வளர்ச்சிக் கோட்பாடுகளால் சிதைவுறும் அடித்தள மக்களின் வாழ்நிலையை கவனத்தில் கொள்ளவைக்கிறது.பழங்குடி சமூக உணவுதேடலும், வேட்டையாடலும்,புராதன விவசாய உற்பத்தி முறையும் மாறுபாடடைந்து நிலமானிய சமூக உற்பத்திமுறையாகவும்,எந்திரங்களின் கண்டுபிடிப்பால் உருவான தொழிற்சமூக அமைப்பாகவும் உருவாகியுள்ளன.நில உடமையாளன் – விவசாயத் தொழிலாளி,ஆலைமுதலாளி-தொழிலாளி என்பதான உற்பத்திசார்ந்த உறவுகளும் இதன்வழியாக மூலதனப் பெருக்கமும் உருவாகிறது. பின்நவீனச் சமூக நிலையில் கார்ப்பரேட் முதலாளியம் திணிக்கும் நுகர்வியக் கலாச்சாரம் முதன்மை பெறுகிறது.ஒரு பொருளின் பயன்பாட்டுமதிப்பு,பரிமாற்றமதிப்புத் தாண்டி ஊடகவெளியின் விளம்பரங்களால் உருவாக்கப்படும்குறியீட்டுமதிப்புஇதில்முக்கியமானதாகும்.இவ்வகையில்தொழிற்மயமாதலும்,நகரமயமாதலும் சமூக வாழ்வில் நிகழ்த்தியுள்ள சூழலியல் பிரச்சினைகளின் மதிப்பீடாகவும் கூட அமரேசனின் எழுத்துக்களை உற்றுநோக்கலாம்.
ஐரோப்பிய நாடுகள், ஆபிரிக்க ஆசிய அரபுநாடுகளில் பன்னாட்டு தொழில்நிறுவனங்களை உருவாக்கி இயற்கை வளங்களை சுரண்டுவதையும், ராணுவ மேலாதிக்கத்தின் வழியாக அரசியல் காலனிகளை உருவாக்கி நுகர்வியச் சந்தையாக மாற்றுவதையும் அமரேசன் சுட்டிக் காட்டுகிறார். முதல் உலகப் போரில் அமெரிக்கா, ஜப்பானை பணியவைக்க ஹிரோஷிமாமீது அணுகுண்டுவீசி எண்பதினாயிரம் மக்களை கொன்றதின் வரலாற்றிலிருந்து துவங்கி பெட்ரோல் அரசியலை முன்வைத்து அமெரிக்கா நிகழ்த்திமுடித்த ஈராக் யுத்தம் வரையிலான மறுகாலனிய அரசியல் பேச்சை அமரேசன் முன்னெடுத்துச் செல்கிறார்.
2) பசுமைக்குடில் விளைவு(கிரீன் ஹவ்ஸ் எபக்ட்)பற்றி1827 களில் பரோன் ஜீன் பேஸ்டிஸ்டி பெருனர் பேசியுள்ளார். சீர்த்தன்மையற்ற காலநிலை நிலவும் குளிர்பிரதேசங்களில் தாவரங்களை வளர்ப்பதற்கு கண்ணாடியிலான மூடப்பட்ட அமைப்புமுறைக்கு பசுமைவீடு என்றுபெயர். சூரியனிலிருந்து உள்வரும் வெப்பக்கதிர்கள் காற்றை ஊடுருவி பூமியை அடைந்து உறிஞ்சல்,தெறித்தல்.சிதறல் மூலமாக கடல்,நிலம்,தாவரம் போன்றவற்றை வெப்பமாக்குகிறது.பின் அது நெட்டலை கதிர்வீசலாக வான்வெளிக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. இதில் பெரும்பகுதி காற்றுமண்டலத்தால் உறிஞ்சப்பட மீதி வான்வெளிக்கு அனுப்பப்படுகிறது.ஒருபகுதி மீள்கதிர்வீசலாக பூமிக்கு திருப்பி அனுப்பப் படுகிறது சூரியனில் உள்வரும் வெளிச் செல்லும் சக்தியானது காற்றுமண்டலத்தில் உள்ள சிஒ2,சிஹெச்4,என் ஒ 2,ஒ3,-ஹெச்2ஒ,சிஎப்சிஎஸ் போன்றவற்றால் உறிஞ்சப்படும் செயல்திறன் பசுமைக்குடில் விளைவாகக் கருதப்படுகிறது.
நவீன வாழ்வியலில் தொழிற்சாலைகளின் உருவாக்கமும் பெருவளர்ச்சித்திட்ட கட்டுமானங்களும் புவிவெப்பமாதலையும் வனங்களின் அழிப்பையும் நிகழ்த்துகிறது.இயற்கை சமன்குலைவை ஏற்படுத்துகிறது.மனிதநாகரீகத்தை மரனத்தின் விளிம்புக்கு அழைத்துச் செல்கிறது.தொழிற்சாலைகள் உருவாக்கும் நச்சுவாயுக்கள் ஒசோன் படலத்தை பாதிக்கும்போது சூரியக் கதிர்களின் ஊடுருவல் தங்குதடையின்றி விரைவாக பூமியை வந்தடைகிறது.புவிவெப்பமாதால் ஏற்படுகிறது. காற்றழுத்த மண்டலத்தால் புயல்களும்,சுழற்காற்றும் உருவாகின்றன. தாவரங்கள்,காடுகளின் அழிப்பால் சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பக்கதிர்களை உள்வாங்கமுடியாமல் போகிறது.புவிவெப்பமாகும் போது பனிமலைகள் உருகிவழிந்து கடலின் நீர்மட்டம் உயர்கிறது.பூமியின்மட்டம் கடலைவிட கீழிறங்குகையில் அழிவு ஏற்படுகிறது.அணுமின்நிலைய கட்டுமானங்களும்,அணுமின்நிலையக் கழிவுகள் உள்படதொழிற்சாலைகள் உருவாக்கும் அபாய நச்சுக் கழிவுகள் கடலில் கலக்கிறது. கடல்வாழ் உயிரினங்கள் அழிப்பும் இதன்வழி நிகழ்கிறது.
இத்தகையதான இயற்கை சமன்குலைவு பேரபாயத்தை ஏற்படுத்துவதை அமரேசன் விவரிக்கிறார். தமிழகத்தில் வனங்கள் பதினேழு சதவிகிதம் மட்டுமே உள்ளது. இது முப்பத்துமூன்று சதவிகிதமாக இருந்திருக்கவேண்டும். 40 ஏக்கர் வனப்பகுதி அழியும்போது 1500 பூந்தாவர இனம்,700 மரவகை,400 பறவை இனங்கள்,150 பூச்சி இனம், 100 ஊர்வன இனம்,40 வகை நிலம் நீர்வாழ் உயிரிகள் அழிந்துவிடுகிறன. இதனை சவ்வாது மலைக் காடுகள் குறித்த நடைமுறை ஆய்வின் வழியாக மேலும் விவரனை செய்கிறார். சவ்வாது மலைக்காடுகளில் 15780 தாவரங்கள்,45000 வகை தாவரங்கள்,10000 வகை மூலிகைகள்,வரை உள்ளன.இந்துஸ்தான்லீவர்,டாபர் இமாலயா குழுமம்,அமிர்தாஞ்சன்நிறுவனம் என பன்னாட்டு நிறுவனங்களின் நுழைவு பழங்குடி மக்களின் நிலங்களை பறித்து அம்மக்களை நாடோடிகளாக அலையவிடுகிறது.காடழித்து கார்ப்பரேட் நிறுவனங்கள்,பெருமுதலாளியம் தேயிலைத்தோட்டங்களையும் ,பெருநகர கட்டுமானங்களையும் உருவாக்கும் போது வனவிலங்குகளின் பாதைகளும்,இருப்பிடங்களும் அழிக்கப்படுகின்றன.யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நீராதாரம்தேடி சமவெளிப் பகுதிக்கு இடம்பெயர்வதும் அடிக்கடி நிகழ்கிறது.
இந்திய அரசு பன்னாட்டு நிதிநிறுவனங்களின் உதவியோடு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடும் சமூகவனக்காடு வளர்ப்புத் திட்டங்களால் ஏன் வனப்பரப்பை அதிகரிக்க முடியவில்லை என்ற கேள்வியையும் விமர்சனத் தொனியோடு முன்வைக்கிறார்.இதற்குத் தீர்வாக ஒவ்வொரு குடிமகனையும் மரக்கன்று நட்டு வளர்க்கச் சொல்வதையும் வளர் இளம்பெண்களுக்கான ரத்தசோகை தடுப்புக்காக வழங்கப்படும் இரும்புச் சத்துமாத்திரைக்குப் பதிலாக வீட்டுக்கு பத்து பழமரங்கள் வழங்கச்சொல்வதும்ஆளும்அரசுகளின்போலிமையானகருத்தாடல்களைமறுஉற்பத்திசெய்வதாகவேதெரிகிறது.சொந்தவீடற்றவர்கள்,நடைபாதைவாசிகள்,நகரமயமாக்கலின் பெருக்கம், அடுக்குமாடிகுடியிருப்புகள் என்பதான மாறிவரும் வாழ்வியல் சூழலில் மரம்நடுதல் விழாக்கள் அரசியல் நாடகங்களாகவே மாறிப் போயுள்ளன.
3)அமரேசனின் நீர் அரசியல் குறித்த விவாதங்களும் மிக முக்கியமானவை.இவற்றில் ஒன்று வறட்சி தொடர்பானது. இராஜஸ்தானிற்குப் பிறகு வறட்சி மாநிலமாக தமிழகம் ஆகியிருப்பதும், குடிமராமத்து முறை பேணப்படாததால் நதிகள் பொலிவிழந்ததும் ,நீர்நிலைஆக்ரமிப்பு, நீர்மேலாண்மையின்மைமழைநீர்வீணடிப்பு,காடுகள் அழிப்பு எனத் தொடரும் காரணங்கள் நீரற்ற வறட்சிச் சூழலை உருவாக்கியுள்ளதாக குறிப்பிடுகிறார்.
தமிழகத்தின் காவிரி,தென்பண்ணை,பாலாறு,செய்யாறு உள்ளிட்ட நதிப்படுகைகளின் நிலமை மோசமாயிருப்பதும்,நதிநீர் ஆதாரங்களை முறையாக பராமரிப்பு செய்யாததுபற்றியும் ஓடும் நதிகளில் தொழிற்சாலைக் கழிவுகள் கலந்து மாசடைந்து நதியே நஞ்சானது பற்றியும் குறிப்பிடுகிறார். மதுராகோட்ஸ்,சன்காகித ஆலை,சங்கர் சிமெண்ட், ஸ்பிக் அனல்மின்நிலையக் கழிவுகள் தாமிரபரணியிலும் திருப்பூரில்உள்ளஎழுநூறுக்கும்மேற்பட்டசாயப்பட்டறைகழிவுகள்,நொய்யல்நதியிலும்,விஸ்கோஸ்,மேனிண்டியா, சர்க்கரை ஆலைக் கழிவுகள் பவானி நதியிலும்,வேலூர்,ஆம்பூர்,வாணியம்பாடி வாலாஜா ராணிப்பேட்டை பகுதிகளில் செயல்படும் 1200க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் பாலாற்றிலும் கலந்து நதிகள் மாசடைவது குறித்த தகவல்களை போதிய விளக்கங்களோடு வெளிப்படுத்துகிறார். இதுபோன்றே நதிப்படுகைகளை அழித்தொழிக்கும் மணல் கொள்ளை குறித்த கவனிப்பையும் , அண்டைமாநில அரசுகள் நதிகளின் நடுவே கட்டப்படும் அணைக்கட்டுகள் பாசனவசதி பெறும் நிலப்பரப்பை பாதிப்பதையும் கூறுகிறார். நீர்மாசுபடுதலுக்கு முக்கிய ஆதாரமாக திருவள்ளுவர் மாவட்டம் கூவம் பகுதியிலிருந்து உற்பத்தியாகி 72 கிமீ தூரம் பாய்ந்து சென்னை சேப்பாக்கம் கடலில் கலக்கும் கூவம் நதியில் கழிவுகள் மட்டும் 84 சதவிகிதம் உள்ளது.இதில் ஐந்துமணிநேரத்திற்கு மேல் மீன்கள் உயிர்வாழமுடியாது. குடிநீர் பஞ்சம் கிராமப் புறங்களில் நிலவுவதும் குடிநீர் பாலைவிட அதிகவிலையில் மினரல்தண்ணீராய் சந்தைப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதும்,இன்னும் சில நிகழ்வுகளாக உள்ளன.இதற்கிடையே குடிநீர் தவிர்த்த துப்புரவு மற்றும் குளிர்விப்புப் பணிக்கு மேற்குலக நாடுகளைப் போல் கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் திட்டம் செயலாக்குதல் குறித்து பரிந்துரையும் செய்கிறார்.
அமரேசன் நீரரசியல் குறித்த விவாதத்தில் புலப்படாத தண்ணீர்(வெர்ச்சுவல் வாட்டர்) வணிகம் பற்றி புதியதொரு கருதுகோளை தமிழறிவுச் சூழலுக்கு அறிமுகப்படுத்துகிறார்.ஒரு பொருளின் தயாரிப்பு, சந்தைப்படுத்துதல்,தொடர்பான செயல்பாடுகளில் கண்ணுக்குப் புலனாகாத வகையில் உட்புதைந்திருக்கும் தண்ணீரின் அளவீடு குறித்தும்குறிப்பாக 1 கிலோ அரிசி உற்பத்திக்கு 2000லிட்டர் என அளவைகளின் அடிப்படையில் நாம் அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் பொருளினால் மிச்சமாகும் தண்ணீரை நமக்குத் தரச் சொல்லலாம் எனவும் அவரது நுட்பமான மதிப்பீடு தென்படுகிறது.
நதிநீர் ஆதாரங்களை நிர்வகிக்கும் பொறுப்பு மாநில அரசின் வசம் இருப்பதிலிருந்து கிராம பஞ்சாயத்துக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் இருப்பதையும் , கேரளாவில் இது உள்ளூர் பஞ்சாயத்துவசம் இருப்பதால் கோக் நிறுவனத்திர்கு எதிரான பிளிச்சாடாபகுதியின் மக்கள்போராட்டம் வெற்றி பெற்றதையும் குறிப்பிடுகிறார்.
பன்னாட்டு வணிக நிறுவனங்களின் ,பெருமுதலாளிய நிறுவனங்களின் நவீன ரக செயற்கைபான உற்பத்தி கொக்கோகோலா,லிம்கோ,மிராண்டா,பெப்சி என சந்தைப் படுத்துகிறது.இது ஒருவகையில் நமது கிராமப்புற இயற்கைப் பானங்களான இளநீர்,நொங்கு,பதனீர் உள்ளூர் நன்னாரி சர்பத் என அனைத்தின் நுகர்வையும் உற்பத்தியையும் இல்லாமல் ஆக்கிவிடுகிறது. ஒற்றைப்படுத்தப்பட்ட உலகமயமாக்கலுக்கு எதிராக வட்டார அடையாளங்களையும் உற்பத்தி பொருட்களையும் முன்நிறுத்தவேண்டிய அரசியல் கடமையையும் அமரேசன் நிறைவேற்றியுள்ளார்.
4) நமதுகாலத்தின் குரலாக கூடங்குளத்திலும் அணுமின்நிலைய கட்டுமானங்களின் மீதான மக்களின் எதிர்ப்புணர்வை முக்கியமானதாகச் சொல்லலாம். 1969 – ல் சுவிட்சர்லாந்து நாட்டின் லுசன்ஸிலும்1979 –ல் அமெரிக்காவின் மூன்றுமைல் தீவிலும் 1986-ல் ரஷ்யாவின் உக்ரைன் பகுதி செர்னோபிலும் நிகழ்ந்த அண் உலைவெடிப்பின் அபாயங்களும் ஐம்பதுமைல் சுற்றளவில் மக்கள் வாழும் பகுதி மரணபிரதேசமாக மாறியதும் வரலாற்றில் பதிவாகியுள்ளது.
சுப. உதயகுமாரன் தந்து ஆய்வொன்றில் இவ்வாறு கூறுகிறார். ஆபிரிக்காவில் குளிர்காலத்தை கழித்துவிட்டுத் தமது உறைவிடமான ஸ்காண்டிநேவியா நோக்கி சென்றுக் கொண்டிருந்த பல்லாயிரக் கணக்கான பறவைகள் செர்னோபில் வழியாக பறக்க நேரிட்டது.பாவம் பின்லாந்துநாட்டு எல்லையில் கூட்டங்கூட்டமாக இறக்க நேரிட்டது.செர்னோபில் விபத்தால் நேரடியாகவும்,மறைமுகமாகவும் பாதிப்புக்கு உள்ளான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பல்லாயிரக்கணக்கில் இறந்திருப்பதாகவும் இன்றளவும் துன்புறுவதாகவும் பல ஆய்வுகள் சுட்டுகின்றன.
ஜப்பானில் மார்ச் 2011 ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக ஆழிப்பேரலை உருவாகி கடல்நீர் உள்நுழைந்து புகுஷிமா அணு உலை வெடித்துச் சிதறியது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாகி அணுசக்தி அகதிகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.ஐம்பது கிமீ சுற்றளவில் கதிரியக்க வீச்சின் காரணமாக காற்றிலும் உணவுப் பொருளிலும் மிக அதிக நச்சுத்தன்மை கலந்துள்ளது.. 1984ம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள பன்னாட்டு நிறுவன யூனியன் கார்பைடு நிறுவனத்தில் வேதிப் பொருள் கசிவு காற்றில் கலந்ததில் இருபத்தைந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.இத்தகு பின்னணியில்தான் தொழில்மயமாதலின் முக்கியக் கூறுகளில் ஒன்றான அணுமின் நிலையங்கள் தொடர்ந்து மக்களை சாவின் விளிம்பில் கொண்டு நிறுத்துவதாகவும் அச்சுறுத்தி பீதி ஊட்டுவனவாகவும் அமைந்துவிட்டன. அமரேசனின் சூழலியல் சிந்தனைகளை தொகுத்து பகுப்பாய்வு செய்யும்போது அணுமின்நிலைய கட்டுமான அரசியலையும் இணைத்தே நாம் வாசிக்க வேண்டியது உள்ளது.
தமிழக அறிவுச் சூழலில் வளர்ச்சி குறித்த விவாதங்கள் பொருளாதார திட்டங்கள் அனைத்தும் நடுத்தர ,அடித்தள,விளிம்புநிலை மக்களுக்கு எதிரானவையாகவே இருக்கின்றன. சமச் சீரான வளர்ச்சி என்பது இல்லாமல் தனியார்களையும் கார்ப்பரேட் முதலாளியத்தையும் மையப்படுத்தியே இவை உருவாகியுள்ளன. நிலம் தன்னகத்தே கொண்ட கனிம வளங்களை அகழ்தலும் பயன்படுத்தலும் சார்ந்த செயல்பாட்டில் டிம்கோ எனப்படும் புவியியல் மற்றும் கனிம வளங்கள் பிரித்தெடுக்கும் சுரங்கத் தொழில் நிறுவனம் ஜிண்டால் குழுமத்தோடான ஒப்பந்தம் வழியாக கொள்ளை போவதையும் சுட்டிக் காட்டுகிறார்.
மலைசார் இடங்கள், சரணாலாயங்கள் ,நீர்வீழ்ச்சி,புராதன சின்னம்,புனிதத் தலம் சார்ந்து சுற்றுலாதலங்களின் உருவாக்கம் பெருநிறுவனங்களின் கட்டுமானங்கள் அப்பகுதி மக்களின் நிலங்களை இழந்தவர்களாகவும் தினக்கூலிகள்,கொத்தடிமைகளாய் தங்கள் நிலத்திலேயே வேலை செய்பவர்களாகவும் மாற்றியுள்ளது.
5) சமகால தமிழ்சிந்தனைமரபில் இடம்பெறும் விவாதங்களில் பெண்ணியமும்,தலித்தியமும் இரு முக்கியப் போக்குகளாக உள்ளன.ஆண்கள் பெண்களுக்காக முன்வைத்த விடுதலைச் சிந்தனைகளிலிருந்து மாறுபட்டு இரண்டாம்பாலினமாக பெண் ஆக்கப்பட்ட நிலையிலிருந்து பெண்ணுக்காக பெண் பேசும் சிந்தனைகள் மிதவாத , தீவிர,தலித்தியப்பெண்ணியமாக உருவாகி வந்துள்ளது.சமயம்,சமூகம்,அரசியல் பண்பாட்டுத் தளத்தின் ஆண்மேலாதிக்கத்தை கட்டுடைத்தல் என்பதும் பெண்மொழி, பெண்ணிய அரசியலாகவும் உருப் பெற்றுள்ளது.மார்க்ஸியப் பெண்ணியம் உழைப்புத் தளத்தில் நிகழ்ந்துள்ள பாலின அடிப்படையிலான ஊதியச் சமமின்மை , பொருளாதாரச் சுரண்டல் சார்ந்த உண்மைகளை நோக்கிப் பயணப்படுகிறது.பெண்ணுரிமைச் சார்ந்த பெண்சிசுக் கொலை தடுப்புச் சட்டம்,வரதட்சணை ஒழிப்புச் சட்டம், பாலியல் வல்லுறவு தண்டனைச் சட்டம் என்பதான பாதுகாப்புச் சட்டங்கள் இருந்தும் பெண்ணின் வாழ்தல் குறித்த பிரச்சினைப்பாடுகளை அமரேசன் பேசுகிறார். குடும்ப அமைப்புக்குள் கணவனின் கொடுமையால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் 58 சதவிகிதமாகவும், சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் 33 சதவிகிதமாகவும் உள்ளனர் என்பதை வெளிப்படுத்துகிறார்.இத்தோடு சமூக அளவில் சுமங்கலித் திட்டத்தில் தனியார்தொழில் அதிபர்கள், ஆலைமுதலாளிகளால் கிராமத்து பெண்கள் ஏமாற்றப் படுவதையும் குறிப்பிட்டுச் சொல்கிறார். வங்கிக் கடன் பரிவர்த்தனை சார்ந்த செயல்பாடுகளில் முடங்கிப் போகும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் நிலைபாடும் இதில் உள்ளடங்கும்.
அதிகாரப் பரவலாக்கம் எனும் கருதுகோளை வந்தடையும் அமரேசன் கட்சி அரசியல் நோக்கங்களுக்காகவும் பெருமுதலாளிய ஒப்பந்தக்காரர்களுக்காகவும் புதிய மாவட்டம் உருவாக்குவதையும் இதற்கென 200கோடிக்கு மேல் செலவிடுவதையும் விமர்சனப்படுத்துகிறார். இதற்கான மாற்றுஅரசியலாக நிலம்சார் விளிம்புநிலை சமூகமான தலித்துகளுக்கும் ,கடல்சார் விளிம்புநிலைச் சமூகமான மீனவர்களுக்கும் தனி ஊராட்சிகளை உருவாக்கம் செய்வதும் ,ஊராட்சி அளவிலான அதிகாரங்களின்வழியாக சமச்சீரான வளர்ச்சியை நோக்கி செல்வதற்குமான திறப்புகளை உருவாக்குகிறார்.கிராமநிர்வாக ரீதியாக பேணப்படும் பதிவேடுகளின் நில ஆதாரங்களின் உரிமை குரித்த கவனிப்பு பெறுவதற்கும், தலித்துகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை பிறசாதியினர் ஆக்ரமிப்பு செய்திருப்பதிலிருந்து விடுதலை செய்வதற்குமான உரிமை மீட்பு பிரகடனத்தையும் ஒருசேர அமரேசன் முன்வைக்கிறார்.
அமரேசனின் இத்தொகுப்பு சுற்றுச் சூழலியல் ஆர்வலர்களுக்கும்,உலகமய,தனியார்மய எதிர்ப்புணர்வுமிக்க சமூக அக்கறைமிக்க சிந்தனையாளர்களுக்கும், விளிம்புநிலை மக்களின் நலன்கள்பால் கரிசனம் கொள்ளும் செயல்பாட்டாளர்களுக்கும் ஒரு ஆயுதமாக சுழல்கிறது
- சுஜாதாவின் ஏறக்குறைய சொர்க்கம்
- நெடுந்தொகையில் வழிபாட்டு முறைகள்
- நிறையும் பொறையும்
- அந்தக் குயிலோசை…
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 23
- “சாதீயத்தை வளர்க்கும் மதச்சடங்குகள்”
- கதாக.திருமாவளவனின் ‘ வெண்மணி ‘
- செல்வ ( ஹானஸ்டு ) ராகவன்
- திண்ணையில் கண்ணம்மா பாட்டி
- சுஜாதா
- இராணுவமும், யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையும்!
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 5
- முகமற்றவனின் பேச்சொலி
- ப்ளாட் துளசி – 1
- தேனும் திணை மாவும்
- பஞ்சதந்திரம் தொடர் 22 – சுயநலக்கார நரி
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 1
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -4)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆண்மையின் உட்கரு (கவிதை -54)
- மீன் குழம்பு
- இந்தியா – ஒரு பெரிய அங்காடி தெருவாகுமா?
- பாரதிக்கு இணையதளம்
- என்னின் இரண்டாமவன்
- இரு வேறு நகரங்களின் கதை
- மார்கழிப் பணி(பனி)
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 2
- சந்தனப் பூ…..
- வேறு ஒரு தளத்தில்…
- வம்பளிப்புகள்
- பச்சைக் கூடு-பேசுவதற்கு பறவைகள் இல்லை
- பெரிய அவசரம்
- அவன் இவன் அவள் அது…!
- காதல் கொடை
- அன்பின் அரவம்
- சுனாமியில்…
- பொருள்
- கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் – 2
- முன்னணியின் பின்னணிகள் – 18 சாமர்செட் மாம்
- ஏனென்று தெரிய வில்லை