பெரிய அவசரம்

This entry is part 32 of 39 in the series 18 டிசம்பர் 2011

மாரியம்மன் கோவில் பஸ் ஸ்டாப்தான் கடைசி ஸ்டாப். நிறைய தூங்குமூஞ்சி மரங்களும் ஒன்றிரண்டு வேப்பமரங்களும் சூழ்ந்த இடத்தில், பஸ்கள் ஒரு அரைவட்டமடித்து, கடல் அலைமேல் பயணம்போல் இரண்டு பள்ளங்களில் குதித்தெழுந்து, எல்லை தாண்டி வந்த பக்கத்துத்தெரு நாயைப்பார்த்து நம் நாய் ஆக்ரோஷமாய் உறுமுவதைபோல் ஒரு சவுண்டைக்கொடுத்துவிட்டுப் பின் சாந்தமாகிப்போகும். வந்த உடனே பஸ்கள் கிளம்பிப்போவது என்பது எப்போதாவதுதான். ஸீட்டிற்குக் கீழே போட்டிருந்த சூடான டவலை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு ட்ரைவர்கள், கண்டக்டர்களோடு அந்தப் பெரிய தூங்குமூஞ்சி மரத்தின் மறைவில் “டவுன்லோட்” பண்ணிவிட்டுத்தான் நாயர்கடை நோக்கிப்போவார்கள். அந்த மரத்தின் தேன்காய் எப்படி அதன்பின்னும் இனிப்பாக இருந்தது என்பது எங்களுக்குப் புரியாததாகவே இருந்தது. அந்தமரத்தின் வாகான கிளையில் வைத்திருந்த “சிவந்த மண்” படப் போஸ்டரில் சிவாஜி கணேசன் காலை அகற்றிவைத்து முகத்தில் ஒரு அவசரத்துக்கான பாவனையைக் காண்பித்துக்கொண்டிருந்ததும், பஸ் பணியாளர்கள் அதைப் பார்த்தேயாக வேண்டியிருந்ததாலும், பஸ்ஸைவிட்டிறங்கியதும் நாயர்கடைக்குச் செல்வது அவர்களுக்கு முதல் செயலாக இல்லாது இரண்டாவது செயலாக ஆகிப்போவதாக வெங்கடேசன் கருத்து தெரிவித்திருந்தான். அவன் இதைப்போல எங்களின் பலவிதமான செயல்களுக்கான ஆழ்மன ரகஸ்யங்களை “இண்டெர்ப்பிரட்” செய்து சொல்வதால் பின்னாளில் பெரிய மனோதத்துவ நிபுணனாக வருவதற்கான சாத்தியக்கூறுகள் அவனிடம் இருப்பதாக எங்கள் சீனியர் செல்லமாணிக்கம் உறுதியாக நம்பினான்.

டீக்கடை நாயர் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருப்பவர். அவரின் மலையாளம் கலந்த தமிழ்போலவே அவர் போடும் டீயும் சுவையாக இருக்கும். டீ போடாத சமயங்களில் கர்ச்சீஃபைத் அடித்துத் துவைப்பதுபோல் புரோட்டா மாவை சின்னப் பலகையில் அடித்துக்கொண்டிருப்பார். அவரது பேத்தி ரேவதி ஸ்கூல் போய்வந்த நேரங்கள் தவிர மற்ற சமயங்களில் கடைக் கல்லாவில் உட்கார்ந்திருப்பாள். திருட்டு “தம்” அடிப்பதற்கு செல்லமாணிக்கம் அந்தக்கடைக்கு பஸ் வராத நேரமாகப் பார்த்து எப்போதாவது போய்க்கொண்டிருந்தவன், கொஞ்ச நாட்களுக்குப்பின் அடிக்கடி சென்றுவர ஆரம்பித்தான். டயபட்டிஸ்காரர்களின் ரெகுலர் அவஸ்தையைப்போல அவன் நாயர்கடையைச் சுற்றிவந்துகொண்டிருந்தான், குறிப்பாக சாயங்காலங்களில். ரேவதி, நாயரின் தமிழ்போலல்லாது, பேசும்போது சப்தத்திற்கு அதிகம் மூக்கைப் பயன்படுத்தாதிருந்தாள். ஆனால் அவள் விஷயத்தில் செல்லமாணிக்கம் மூக்கை நுழைப்பதாக வெங்கடேசன் மெதுவாக என்னிடம் சப்தம் கொடுத்துக்கொண்டிருந்தான். இத்தனைக்கும், செல்லமாணிக்கம் ரேவதிக்கு அவ்வப்போது பாடங்களில் சந்தேகங்களை மட்டுமே தெளிவுபடுத்திக் கொண்டிருந்தான். ஸ்பெஷல் அட்டென்ஷனாக அவள் கேட்காமலேயே அங்கு கணக்கும் ஆங்கிலமும் புழங்கிக்கொண்டிருப்பதாகவும், மொழியும் கணக்கேயில்லாமல் இருப்பதால் கொஞ்சம் “க்ளோசாக” கவனிக்கவேண்டும் என்றும் வெங்கடேசன் எச்ச்ரிக்கை மணி அடித்துக்கொண்டேயிருந்தான். ரேவதியோ மிகவும் சின்னப்பெண். எட்டாம் வகுப்போ என்னவோதான் படித்துக்கொண்டிருந்தாள். காதல் கீதல் என்பதற்கான வயசொன்றும் இல்லை. அவள் கண்களிலும் எந்தக் கல்மிஷமும் இல்லாததுபோல்தான் இருந்தது. ஆனாலும் மனோதத்துவ நிபுணன் சொல்கிறானே! எனக்குக்கூட செல்லமணிக்கம் கொஞ்சம்கொஞ்சமாக தமிழையே மூக்கால் பேசுவதுபோல்தான் பட்டது.

செல்லமாணிக்கம் எங்களுக்கு சீனியர் மட்டுமல்ல. வள்ளுவர் ஸ்கௌட் க்ரூப் என்ற சாரண இயக்கத்தின் தலைவன். கிட்டத்தட்ட சாரண இயக்கத்தைத் தோற்றுவித்த லார்ட் பேடன் பௌலைப் போன்ற முக ஜாடை வேறு இருந்தது அவனுக்கு. பேடன் பௌலும் சின்ன வயதிலேயே திருட்டு தம் அடித்தாரா என்பதற்கான சரித்திர ஆதாரம் ஏதும் எங்களிடம் இல்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் அவன் எங்களுக்கு க்ளாஸ் எடுக்கும் அழகே தனியாக இருக்கும். சுலபமாகவும், சுருக்கு வழியிலும் டெண்ட் போடுவதற்கும், மோர்ஸ் கோட் என்னும் தந்திகொடுக்கும் சங்கேதக் குறியீடுகளின் மர்மச் சொடுக்குகளை அவிழ்ப்பதற்கும், ஆபத்து சமயங்களில் முதலுதவி எப்படிச் செய்யவேண்டும் என்பதையும் அவன் சிறப்பாகச் சொல்லிக்கொடுப்பான். முதலுதவிப் பாடத்தில் செயற்கை ஸ்வாசம் கொடுக்கும் ” மவுத் டு மவுத் ” முறையைப் பற்றி எங்களுக்குச் சொல்லிகொடுத்ததைவிட பெண்கள் அமைப்பான ” கைட்ஸ்” களுக்கு விளக்கமாகச் சொல்லிக்கொடுப்பதாக வெங்கடெசன் வள்ளுவர் சாரணக் குழுவின் அமைப்பாளரான குஞ்சிதபாதத்திடம் சொன்னபோது அவர் ” அப்படியா! வள்ளுவர்னா காமத்துப்பால் இல்லாமல் இருக்குமாய்யா “என்று ஜோக்கடித்துவிட்டுப் போய்விட்டராம். எனக்கு ஒன்றும் வெங்கடேசன் சொல்வதுபோல் வித்தியாசமாகத் தெரியவில்லை. ஆனால் செல்லமாணிக்கம் ஸ்ட்ரிக்ட் பேர்வழி. சொல்லிக்கொடுத்ததை கொஞ்சம் தப்பாகச் செய்துவிட்டாலும் தாறுமாறாகத் திட்டுவான். அதுவும் காம்பெடிஷன் சமயங்களில் ப்ராக்டிஸ் செய்யும்போது எங்களுக்கு எப்போது அடிவிழும் என்றே தெரியாது. எப்படி நிதானமாக அவசரப்படவேண்டும் என்று டெண்ட் போடும்போது அவன் சொல்லிச் செயவதெல்லாம் சுலபமாகத்தான் இருக்கும். ஆனால், நான் செய்யும்போது கோணல்மானலாகப்போய்விடும். ஊசிவேறு விரல்களில் குத்தி ரத்தம் வந்துவிடும். டெண்ட் பயிற்சியோடு முதலுதவிப் பயிற்சியும் நடப்பது போலாகிவிடும். என்னைவிட வெங்கடேசன்தான் அதிகம் அடிவாங்குபவனாக இருந்தான். இருப்பினும், வெங்கடேசன் சமையல் செய்வதில் கில்லாடி. அவன் அம்மா அடிக்கடி கோபித்துக்கொண்டு அவளுடைய அம்மா ஊருக்குப்போய்க் கொண்டிருந்ததால், பெரிய பையனான இவன் தான் சமையல் பொறுப்பை ஏற்க வேண்டியதாயிற்று. சாரண இயக்கப்போட்டிகளில் ரவா உப்புமா செய்வதுதான் ப்ரதானம். அவர்கள் கொடுக்கும் சுள்ளிகளை ஒரே நெருப்புக் குச்சியில் எரியவைத்து உப்புமா செய்யவேண்டும். ஸ்கௌட் காம்பெடிஷனோ சரியாக ஆடி மாசத்தில்தான் நடக்கும். வெட்டவெளியில் பேய்க்காற்று அடிக்கும்போது ஒரே தீக்குச்சியால் சுள்ளிகளைப் பற்றவைக்காமல்போனால் , உப்புமாவை அறுசுவை அரசு நடராஜனே வந்துசெய்தாலும் பத்துக்கு மூன்று மார்க்தான் கிடைக்கும்.

ஒரே நெருப்புக்குச்சியில் அடுப்பைப் பற்றவைக்க, செல்லமாணிக்கம் எப்படி சிகரெட் பற்றவைக்கும்போது தீக்குச்சியைக் கிழித்தவுடன் இரண்டு கைகளாலும் எல். ஐ. சி லோகோவை மிஞ்சுமாறு அரவணைத்து அக்கினிக்குஞ்சைக் காப்பாற்றுகிறான் என்பதைக் கவனித்துத் தானும் அதுபோல் செய்ய வெங்கடேசன் பெருமுயற்சி எடுக்க ஆரம்பித்து அவன் செல்லமாணிக்கத்தைவிடச் சிறுவயதிலேயே நிகோடினினுக்கு நிரந்தர பக்தனாகிப்போனான். செல்லமாணிக்கம் நாயர்கடைப் பக்கம்போகாத, ஆனால் ரேவதி கடையில் இருக்கும் சமயமாகப் பார்த்து வெங்கடேசன் அங்கு ஆஜர் ஆகிக்கொண்டிருந்தான். வெங்கடேசனுக்குப் படிப்பு சொல்லிக்கொடுக்கும் பாசாங்கெல்லாம் இருக்கவில்லை. ஆனால் ரேவதியைக் கவர ஏதாவது செய்யவேண்டும் என யோசித்துகொண்டேயிருந்த்ததில், நாயர் கடைக் கணக்கில் அவன் பெயரில் கடன் தான் ஏறிக்கொண்டிருந்தது. வெங்கடேசனின் “அக்னி” சாட்சிகொண்ட பெருந்தவத்திற்கு ஒரு பலன் கிடைத்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை, டி. எஸ். ராமனாதன் ஆக்கிக்கொண்டிருந்த நாயர் கடை ரேடியோ ஒரு நாள் பாடிக்கொண்டேயிருக்கும்போது சங்கராபரணம் சங்கர சாஸ்திரிகளைப்போல் ப்ராணனை விட்டுவிட, ரேடியோ இல்லாத டீக்கடை – அதுவும் ரேவதி இருக்கும் நாயர் கடை – அப்படி ஒரு அமங்கலக் கோலத்தில் இருப்பதைப் பார்க்கச் சகிக்காது, ஓடிப்போய்த் தன் வீட்டிலிருந்த ட்ரான்சிஸ்டரை எடுத்துக்கொண்டுவந்து கடையின் முன்பக்கத்தில் வைத்து ரேவதியின் மதிப்பில் பன்மடங்கு உயர்ந்துபோனான். வெங்கடேசனின் அம்மாதான் அவர்கள் வீட்டில் பாட்டு கேட்கும் ஒரே ஜீவன் . ( என் ஜீவன் பாடுது…. உன்னைத்தான் தேடுது … என்ற பாட்டு அவர்களுக்கு ரொம்பப்பிடித்த பாட்டு ) வழக்கம்போல் நடக்கும் வீட்டுச் சண்டையின் விளைவாக முன் தினம்தான் கோபித்துக்கொண்டு அவர்கள் அம்மா வீட்டிற்குப் போய்விட்டிருந்ததால், ட்ரான்சிஸ்டரை யாரும் தேடப்போவதில்லை என்ற தைரியத்தில் இப்படிச் செய்திருந்தான். ஷார்ட் வேவ் , மீடியம் வேவ் என்று பல்வேறு அலைகளில் பன்னாட்டு நிகழ்ச்சிகளை ரேவதிக்குக் காணிக்கையாக்கி மகிழ்ந்து கொண்டிருந்தாலும் , நாயர் அதன் கழுத்தை விவித பாரதியை நோக்கியே திருப்பிக்கொண்டிருந்தார். ” எங்கிருந்தோ வந்தான் ” என்று சீர்காழி கோவிந்தராஜன் ஓங்கிக்குரல் எழுப்பிப் பாடிக்கொண்டிருந்த ஒரு சாயங்கால வேளையில் இருபத்தொண்ணாம் நம்பர் பஸ் தனது ஒயிலாட்டக் குலுக்கல்களை முடித்து நின்றபோது, அதிலிருந்து வெங்கடேசனின் அம்மா இறங்கி, நேராக நாயர் கடைக்கு வந்ததைக் கடைசி நிமிடத்தில் கவனித்த வெங்கடேசன், ஜாண்ட்டி ரோட்ஸ் போலப் பாய்ந்து, கடையின் கதவில் மாட்டியிருந்த ட்ரான்சிஸ்டரைப் பிடுங்கி ஒரு ஸ்ப்லிட் செகண்டில் அதை லாவகமாக பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த பானையில் போட்டுவிட்டு சிட்டெனப் பறந்துவிட்டான். தாய் வீட்டிலும் சண்டை ஏற்பட்டதால், குறுகிய காலத்திலேயே தனது அக்ஞாதவாசத்தை முடித்துக்கொண்டு வந்துவிட்ட அம்மா தனது நொந்துபோன இதயுத்துக்கு ஒத்தடம் கொடுக்கும் அருமருந்தான விவித்பாரதிக்காக “ரேடியோ பெட்டியைத்” தேடியபோது, அவ்வளவு சீக்கிரம் அம்மா அதைத்தேடுவார்கள் என எதிர்பார்க்காத வெங்கடேசன் அது ” பூனை தட்டிவிட்டுக் கீழேவிழுந்து உடைந்து போய்விட்டதாகச் ” சொன்ன இன்ஸ்டன்ட் பொய்யை அந்தத் தாய் தன் போதாத காலத்தில் அதுவும் நிச்சயம் நடந்திருக்கும் என நம்பி அமைதி ஆகிவிட்டது வெங்கடேசனுக்கு நல்லகாலமாகிப்போனது. இப்போது நாயர் கடையில், பானைக்குள்ளிருந்த அந்த ட்ரான்சிஸ்டரிலிருந்து வழிந்த நாதம் ரேவதிக்கும் நாயருக்கும் பிடித்துப்போக அது கடையின் ரகஸ்யமான ” பான சோனிக் “ஆகிப்போனது.

இவ்வாறாக நாட்கள் நகர்ந்துகொண்டிருந்த போது, செல்லமாணிக்கத்தின் வெகு சிறப்பான ஆசிரியம்கூடப் பலனளிக்காது , வெங்கடேச விளைவுகளால் ரேவதி வெகு சுமாரான மதிப்பெண்களே பெற்றிருந்த அந்த “அரைப்” பரீட்சையின் ஒரு டிசம்பர் நாளில் செல்லமாணிக்கம் தன் ப்ரஸித்திபெற்ற உரிமையான கோபத்தை ரேவதியிடம் காண்பித்த போது, அந்தப்பெண் அழுத அழுகையில், நாயர் செல்லமாணிக்கத்தைப் பார்த்து, ” பட்டி மகனே! நீ ஒந்நும் இ குட்டிக்குப் பாடஞ்சொல்லித் தரவேண்டா! ” என்று நிர்தாட்சயமாகச் சொன்ன நாளில் செல்லமாணிக்கத்திற்கு சிகரெட் பற்றவைக்க நிறைய தீக்குச்சிகள் தேவையாயிருந்தது. அதே கோபத்தோடு வெங்கடேசனையும் நாயர் கடிந்துகொண்டபோது அது தேவையற்றது என்று ரேவதிசொன்னதில் உஷாரான நாயர், ரேவதியைக் கடைப்பக்கம் வரவிடாமற் செய்துவிட்டதோடு அவளது படிப்பையும் நிறுத்திவிட்டார். வெங்கடேசன் மட்டும் கொஞ்ச நாட்கள் அந்தப்பக்கம் அலைந்துகொண்டிருந்தான். ஒரு நாள் நாயர், அவன் அந்தப் பக்கம் வரும்போது, வெ ந் நீரை வீசி எறிந்தார். நல்லவேளை அது அவன் மீது படாமல் போனது.

வெங்கடேசன் சின்னப்படிப்புகளையெல்லாம் முடித்துவிட்டு, ரீஜினல் எஞ்சினியரிங்க் கல்லூரியில்” சிவில்” படித்துக்கொண்டிருக்கும்போது யாரும் எதிர்பாராத வகையில் ஒரு மார்கழி மாதத்து வெள்ளிக்கிழமையில் மாரியம்மன்கோவிலில் வைத்து ரேவதியைக் கல்யாணம் செய்து கொண்டுவிட்டான். அவன் அம்மாவோ அப்பாவோ நாயரோ யாருமே வராததுமாத்திரம் அல்ல, எங்களுக்குக்கூடத் தெரியாமல் இப்படி ஒரு காரியத்தைச் செய்துவிட்டிருந்தது பேரதிர்ச்சியாகத்தான் இருந்தது. இதையெல்லாமல் மறந்துபோய் பலவருடங்களானபின் ஒரு நாள் பெருமாள் ஸேவிக்க நின்று கொண்டிருந்தபோது, பெருமாளுக்குத் திருவாராதனம் நடந்து கொண்டிருந்தது. மணிக்கதவு திருக்காப்பு செய்து நெய், வெல்லம், வேளையம் அமுதுசெய்வித்து, சின்னப் பெருமாளுக்கு திருமஞ்சனம் ஆனபின் பெரிய பெருமாளுக்கு ‘ பெரிய அவசரம்” அமுது செய்யக்காத்திருந்தார்கள். ” என்ன செய்யறாங்க “? என்ற குரல் எங்கேயோ கேட்டதாக இருக்கத் திரும்பிப்பார்த்தால், வெங்கடேசன் அவன் குடும்பத்துடன் நின்றுகொண்டிருந்தான். குசல விசாரிப்புகளெல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்தபின் பழைய நாட்களை அசை போட்டுகொண்டிருந்தபோது, ” அப்படி என்னடா கல்யாணத்திற்கு அப்போது அவசரம்”? என்று அடக்கமுடியாமல் கேட்டபோது ” பெரிய அவசரந்தான்” என்றான். ரேவதி வெட்கத்தில் தலை குனிந்துகொண்டிருந்தாள்.

— ரமணி

Series Navigationபச்சைக் கூடு-பேசுவதற்கு பறவைகள் இல்லைஅவன் இவன் அவள் அது…!
author

ரமணி

Similar Posts

4 Comments

  1. Avatar
    சபீர் says:

    //”பெரிய அவசரந்தான்”//

    என்னதான் க்ளோஸ் ஃபிரன்ட்ஸாக இருந்தாலும் ‘பெரிய அவசரத்தை’ ஏற்பாடு செய்த மேட்டரை சொல்லவே மாட்டோமே..ஐ மீன். மாட்டாய்ங்களே.

  2. Avatar
    Natarajan says:

    Fine, as usual! You bring the situations & faces(blurred) alive in our mind. LIC Brand, Rava Uppuma, mouth-to-mouth resuscitation, Baton Paul, on top half-curve negotiating bus, 21’s Oilattam, Venkat’s mother,..I can enlist..something Gnapagam varudhae..Gnapagam Varudhae..pokkishamaga …nenjil pudhaindha ninaivugal gnanapagam varudhae..

  3. Avatar
    Kannan says:

    பெரிய அவசரம் நல்லாவே இருக்கு.
    நாயர் கடையில், பானைக்குள்ளிருந்த அந்த ட்ரான்சிஸ்டரிலிருந்து வழிந்த நாதம் ரேவதிக்கும் நாயருக்கும் பிடித்துப்போக அது கடையின் ரகஸ்யமான பானா சோனிக்-‘பானை’ சோனிக் “ஆக்கியிருக்கலம்.

  4. Avatar
    Srinivasan says:

    As usual Ramani’s realism and humour in narration is in plenty ‘peria avasaram’ also. Nidhanamaga padithu enjoy pannalam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *