செண்பகத்தின் கைக்குப்பதிலாக வேறொரு கையை பிடித்திருந்தாள். அந்த வேறொரு கை பெண்ணுக்குரியதுக்கூட அல்ல ஆணுக்குரியது வெட்கமாகப் போய்விட்டது. அவனும் அப்போதுதான் உணர்ந்திருக்க வேண்டும். கையை உதறினான்.
9. ஜெகதீசனை முதன் முதலாக பார்க்க நேர்ந்தது திருவிழாக் கும்பலொன்றில். உள்ளூரிலல்ல இருபது கல் தொலைவிலிருந்த சீர்காழியில். சித்ராங்கி பாவாடை சட்டையில் அந்திச்சூரியன்போல ஜொலித்த காலம். அப்போதும் செண்பகம்தான் அவளுக்குத் துணை. மீனாம்பாள், சத்த வண்டி அமர்த்த முலைப்பால் உற்சவத்திற்கு வந்திருந்தார்கள். சித்திரை திருவாதிரையில் பிரம்மோற்ஸவம் தொடங்கும். இதில் 2ம் நாள் சம்பந்தருக்கு பிரம்ம தீர்த்த கரையில் அம்பாள் பால் தந்த உற்சவம். ஞானசம்பந்தருக்கு நைவேத்யம் செய்த பாலை பிரசாதமாக சாப்பிட்டால் மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். மீனாம்பாளுக்கு மறுபிறவி வேண்டாமென்பதில்லை, ஆனால் மீண்டும் ஒரு தாசியாக பிறவியெடுக்க அவள் தயாரில்லை. மகளுக்கும் சேர்த்தே பால் பிரசாதத்தை ஊட்டுவதென வந்திருந்தாள். இவர்களுடைய வண்டி கோவிலை நெருங்கும்போது கூட்டம் அலைமோதியது. ஆங்காங்கு வண்டிகள் நிறுத்தபட்டு குழந்தைகளின் அழுகுரல்கள், அவர்களைச் சமாதானபடுத்தும் பெண்களின் குரல்கள்; ‘இதென்ன கூட்டம் நான்கு வருடத்திற்கு முன்னே பார்க்க வேணுமே’, என்ற பேச்சு; போனமுறை வந்தபோது குழந்தையின் அரசிலையை தொலைத்து பிரம்ம தீர்த்தங்கரை மண்ணை சலித்துக்கொண்டிருந்தது கவனமிருக்கட்டும்’, என்பது போன்ற எச்சரிக்கைகள்; சாணத்தின் மணம், மாட்டு மூத்திரத்தின் வீச்சம்; மல்லிகை, இருவாட்சி, தாழம்பூக்களின் நறுமணம்; அவற்றில் வாடியவைகளின் துர்நாற்றம்; மனித சரீரத்தின் வேர்வையென எல்லாம் கலந்த கலவையை அங்கே உணரமுடிந்தது.
வண்டியை கோவிலெதிரே இருந்த மண்டபத்துக்கருகில் வண்டிக்காரன் நிறுத்தினான். இந்த இடம் தான் நமக்குத் தோதானது. நான் இங்கேயே இருக்கிறேன் நீங்கள் நிதானமாக சாமியை தரிசித்துவிட்டுவாருங்கள் என்றவன் ஏர்காலிலிருந்து குதித்தான். மாடுகளைத் தும்பிலிருந்து விடுவித்தான். நடந்து வந்த களைப்பில் முன்காலை மடித்து அவை தரையில் படுத்தன. வண்டியின் பின்புறம் கீழே இருந்த துலாவில் அவைகளுக்காக வைக்கோல் கட்டொன்று ஊசலாடியபடியிருந்தது. அதிலிருந்து கொஞ்சத்தை உருவியெடுத்து அவைகள் எதிரே உதறினான். மாடுகளிரண்டும் வெண்டயங்கள் குலுங்க வைக்கோலை முட்டி தலையை ஒருமுறை சிலுப்பி வாய்கொள்ள எடுத்து மென்றன. அதை பார்த்ததாலோ என்னவோ சித்ராங்கிக்கும் பசிவந்திருக்க வேண்டும், அம்மா பசிக்கிறதென்றாள். கொண்டுவந்திருந்த திணை அடையையும், முறுக்கையும் தின்று தீர்த்தாகிவிட்டது. அப்படி யென்ன குலைபோகிற பசி. கொஞ்சம் பொறுக்கக்கூடாதா? என்றாள் மீனாம்பாள். சித்ராங்கியின் முகம் வாடிப்போனது. பெண்ணின் முகத்தை பார்க்க மீனாம்பாளுக்கு எப்படி இருந்ததோ, மனம் இளகியது. “குளத்திலிறங்கி கைகால் அலம்பி வாருங்களேன்”, என்றாள். அடுத்தகணம் சித்ராங்கியின் முகம் மலர்ந்தது. குளத்தை நோக்கி ஓடினாள். சின்ன எஜமானியைத் தொடர்ந்து ஓடுவதா அல்லது இங்கேயே நிற்பதா என்று புரியாமல் செண்பகம் நின்றாள். ‘ஏண்டி உலக்கை மாதிரி நிற்கிறாய், அக்காள் பின்னால் ஓடு. கணுக்கால் தண்ணீரில் நின்று காரியத்தை முடித்துக்கொண்டு சீக்கிரம் திரும்புங்கள், என்ற எச்சரிக்கை செய்தாள். பெண்கள் இருவரும் சுருக்காக திரும்பினார்கள். கட்டுசாத மூட்டையை அவிழ்த்து பசியாறினார்கள்.
பிரகாரத்திற்குள்ளிருந்து மேள சத்தமும் நாதஸ்வரமும் கலந்து வந்தன. உற்சாகமடைந்த சித்ராங்கி செண்பகத்தை இழுத்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்துவிட்டாள், மீனாம்பாள் மூச்சிறைக்க அவர்களைப்பின் தொடர்ந்து ஓடிவரவேண்டியிருந்தது. இவர்கள் பிரகாரத்திற்குள் நுழைய கூட்டம் முண்டி அடித்துக்கொண்டு இவர்களை நோக்கி முன்னேறியது. சன்னதி மண்டபத்திலிருந்து திருஞான சம்பந்தர் பல்லக்கில் வந்துகொண்டிருந்தார். பல்லக்கை நோக்கி சித்ராங்கி ஓடினாள். ஓடினவள் கூட்டத்தில் கலந்தாள். செண்பகம் தேடினாள். சித்ராங்கி யைக் காணவில்லை. தேடினாள். மீனாம்பாள் அதுகளோடு போட்டிபோட நம்மால முடியாதென ஓரு ஓரமாக நின்று சாமியை கும்பிட்டாள். ஊர்வலத்தோடு கலந்து பிரம்ம தீர்த்தங்கரையை அடைந்தபோதுதான் திரும்பிப்பார்த்தாள். செண்பகத்தின் கைக்குப்பதிலாக வேறொரு கையை பிடித்திருந்தாள். அந்த வேறொரு கை பெண்ணுக்குரியதுக்கூட அல்ல ஆணுக்குரியது வெட்கமாகப் போய்விட்டது. அவனும் அப்போதுதான் உணர்ந்திருக்க வேண்டும். கையை உதறினான்.
சித்ராங்கி செண்பகத்தைத் தேடினாள். அவள் விழிகள் கலவரத்துடன் கூட்டத்தைப்பார்த்தது. தவிர பார்வையை சூழ்ந்து நின்ற மனிதர்களைக் கடந்து ஓட்ட முடியவில்லை. பதட்டத்துடன் திசை தெரியாமல் ஓடினாள். கொஞ்சம் தூரம் மணலில் ஓடியதும் நின்று மூச்சுவாங்கினாள். திரும்பவும் பார்வையை சுழலவிட்டாள். செண்பகம் தெரிவதாக இல்லை. தாய் மீனாம்பாளாவது கண்ணிற்படுகிறாளா என்று பார்த்தால். இல்லை. மனதிற் கவலை புகுந்துகொண்டது. ஊர்வலம் வந்த வழியைப்பிடித்து திரும்பவும் கோபுர வாயில் மண்டபத்தின் எதிரே இருக்கும் வண்டித் திடலுக்குப் போவதுதான் உத்தமமென்று முடிவெடுத்தபோது சற்றுமுன் இவள் தவறுதலாக கைப்பிடித்திருந்த இளைஞன் எதிரில் வந்தான். அவனைப்பார்த்ததும் தனக்கேற்பட்ட சங்கடத்தை முறையிடலாம்போல தோன்றியது. அவனை முதன் முறையாக ஏறிட்டுப்பார்த்தாள். பழகிய முகம்போல இருந்தது.
வேட்டியை மடித்துக்கட்டியிருந்தான். பட்டு உத்தரீயம் மார்பையும் முதுகையும் சேர்த்து மறைத்திருந்தது; வேட்டிக்கும் உத்தரீயத்திற்கும் இடையில் தெரிந்த வயிறும் சதைபற்றுடனமிருந்த நாபிக் கமலமும் அவள் நெஞ்சத்தில் மணிகளை அசைத்தது. அவளுடைய தோளில் கைவத்து ‘வா’ என்று சைகைக் காட்டினான். அவள் சிறிது தயங்குவது கண்டு, ‘பயப்படாதே என்பின்னால் வா!’ என்றான். அவளுக்குத் தைரியம் பிறந்திருந்தது. முதன் முறையாக அவனிடம் வாய்திறந்து பேசினாள்.
– என்னுடைய அம்மா வந்திருக்கிறார்கள். என்னுடைய சேடியும் உடன் வந்திருக்கிறாள். அவர்கள் இங்குதான் எங்கோ இருக்கிறார்கள்.
– கண்டுபிடிக்கலாம் என்னுடன் வா.
இம்முறை உரிமையுடன் அவளுடைய கையுடன் அவனுடையைக் கோர்த்துக்கொண்டான், அவள் தயக்கத்தை அலட்சியம் செய்பவன்போல முன்னால் நடந்தான். கனவில் நடப்பதுபோல பின் தொடர்ந்தாள். வெகு நீளமாக தட்டைப்பந்தல் போட்டிருந்தது. கூட்டம் கூட்டமாக மக்கள். இளம்வயது பிள்ளைகள் ஓடிப்பிடித்து விளையாடுகின்றன. பெற்றோர்கள் அவர்களை துரத்திச்சென்று முதுகில் அடித்து இழுத்து வருகிறார்கள். ஒரு பெண்மணி தட்டிலிருந்த வாழைபழத்தை கணவனிடம் கொடுக்கிறாள். வாங்கியவர் திரும்பியபோது சித்ராங்கிமேல் மோதவிருந்தார். இளைஞன் கணத்தில் அவளை தனக்கான இழுத்து அம்மோதலைத் தவிர்த்து வேகமாய் நடந்தான். சித்ராங்கியின் கவனம் அப்போதுகூட எங்கேனும் மீனாம்பாளோ, செண்பகமோ கண்ணிற்படுகிறார்களாவென்று தேடியது. பந்தலை நீளவாட்டத்தில் முழுவதுமாகக் கடந்து வலது பக்கம் திரும்புகையில் மாவிலை தோரணத்தை அறுத்துவிடக்கூடாது என்பதுபோல தலையை இருவரும் ஒரே நேரத்தில் இறக்கி மடைபள்ளியை அடைந்திருந்தார்கள். அங்கிருந்த திண்ணையொன்றில் நாலைந்து பெரிய மனிதர்கள் அமர்ந்திருக்கிறார்கள். நடு நாயகமாக அமர்ந்திருந்த நபரை சிதம்பரத்தில் கோவிலிலும் பிற முக்கிய அலுவல்களிலும் கண்டிருக்கிறாள். சிகையை பின்புறம் உலரவிட்டு, சற்றுமுன்புதான் குளித்ததன் அடையாளமாக தேகத்தில் ஈரம் சொட்டுகிறது, காதுகளிளிலிருந்த வைரக் கடுக்கன்களிரண்டும் கண்களைக் கூசின. தடித்த உதடுகளுக்கு மேலும் முகவாயிலும் மழுக்க சிரைத்திருந்தபோதிலும் ஒன்றிரண்டு ரோமங்கள் வெள்ளையாகத் தெரிந்தன.
– ஜெகதீசா என்ன இது? அவள் கையை விடு.- பெரியவர்தான் முதலில் பேசினார்.
– இவர்களும் நம்ம ஊருதான் மாமா. இவளை சிதம்பரத்தில் பார்த்திருக்கிறேன். கோவிலுக்கு அம்மாவும் பெண்ணும் நாள் தவறாமல் வருவார்கள். அவர்களும் நம்மைப்போல திருவிழாக் காண வந்திருக்கிறார்கள். வந்த இடத்தில் அம்மாவை தவற விட்டிருக்கிறாள்.
– ஐயா! இந்தப் பெண், மேலத் தெரு நம்முடைய மீனாம்பாள்- என ஆரம்பித்த ஒருவன், தனது தவற்றை உணர்ந்தவன்போல ‘நம்முடைய’ என்ற சொல்லை விலக்கி மீண்டும் வாக்கியத்தை முதலிலிருந்து ஆரம்பித்தான். ‘மீனாம்பாள் பெண்ணாக இருக்கவேண்டும். தோற்றத்தைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது, என்றான்.
தீட்சதருக்கு அவள் மீனாம்பாவின் மகள் என்று பார்த்த மாத்திரத்தில் புரிந்தது. அம்மாவையும் மகளையும் கோவிலில் சேர்ந்தார்ப்போல அடிக்கடி பார்ப்பவர்தானே.
– பெண்ணே, உன் அம்மாவின் பெயரென்ன? என்ற தீட்சதரின் பார்வை அவளைக் கூசச்செய்தது. அவள் அச்சத்தைபோக்க ஒரு துணை தேவை என்பதைப்போல உணர்ந்தாள். இளைஞனைத் தேடினாள். எதிரிலிருந்த கூட்டத்தில், பெரியவரிடமிருந்து பத்தடிதள்ளி ஒருவித பயபக்தியுடன் கைகட்டிக்கொண்டு நிற்கிறான். தீட்சதரின் கண்களைப்பார்க்க அஞ்சியவளாய் நிலத்தைப்பார்த்தாள்.
– உன் தாயார் யாரென்று கேட்டது காதில் விழவில்லை.
விழுந்தது என்பதுபோல தலையை ஆட்டினாள்.
– என்னது இது? பூம் பூம் மாடுபோல தலையை ஆட்டிக்கொண்டு. உன் அம்மா பெயரை சொல்லித் தொலையேண்; வாயிலென்ன கொழுக்கட்டையா வைத்திருக்கிறாய். – அதட்டலாக கூட்டத்திலிருந்து ஒரு குரல்.
– மீ-னா-ம்-பா-ள்!- வார்த்தை ஒவ்வொரு எழுத்தாக வெளிப்பட்டது. சொல்லும்போதே குரல் தழுதழுத்தது. அழுதுவிடுவாள் போலவிருந்தது.
கூட்டம் கொல்லென்று சிரித்தது. மெரியவர் அவர்களைப்பார்த்து முறைத்தார். அமைதியானார்கள்.
– வேறுயார் உங்களோடு வந்தது
– செண்பகம்! எனது சேடி.
– சேடி! தேவைதான். மீண்டும் ஒன்றிரண்டுபேரின் கள்ள சிரிப்பு.
– நடேசா! எங்கே இருக்கிறாய்.
– இதோ இங்கேதான் இருக்கிறேன் அண்ணா, ஏன்? என்ற நடுத்தர வயது ஆசாமி திண்ணையிலிருந்து இறங்கி வேட்டியை ஒரு முறை கௌபீனம் தெரிய அவிழ்த்துக் கட்டியவர் வாயிலிருந்த தாம்பூலத்தை நிலத்தில் துப்பினார். அப்படி துப்புகிறபோது தாம்பூலச் சாறு காற்றில் பறக்காமலிருக்க எச்சரிக்கையாக உள்ளங்கையை விரித்து செங்குத்தாக வாயறுகே நிறுத்தினார். பின்னர் தாட்சாயினியை நெருங்கினார்.
– கொஞ்சம் இப்படி வா. அநேகமாக இந்தப்பெண்ணின் தாயார் என்கிறவள் வண்டித் திடலில்தான் இருக்கவேணும். இவளை அழைத்துப்போய் விட்டுவிட்டு வா. – மீண்டும் தீட்சதர்
– அதற்கென்ன அண்ணா, செய்தால் ஆயிற்று என்ற நடேசன் கடைவாயில் சிக்கியிருந்த புகையிலைத் துணுக்கை விரல்விட்டு எடுத்து, விரலீரத்தை அங்கவஸ்திரத்தில் துடைத்துக்கொண்டே, ‘பெண்ணே! புறப்படு போகலாம்’, -என்றார்.
சித்ராங்கிக்கு இளைஞனை பார்க்கவேண்டும்போல இருந்தது. தலையை உயர்த்தி கூட்டத்தில் தேடினாள். சற்று முன்புவரை நின்ற இடத்திலேயே கைகட்டிக்கொண்டு அடக்கமாக நிற்கிறான். இவள் பிறமனிதர்களை அலட்சியம் செய்து துணிச்சலுடன் போய்வருகிறேன் என்பதுபோல தலையை ஆட்டுகிறாள். இளைஞனிடத்தில் எவ்வித பதிலும் அதற்கில்லை, பிரக்ஞைகள் அற்றவன் போல நின்றுகொண்டிருந்தான். இவளுக்கு ஆத்திரமும் அழுகையும் முட்டிக்கொண்டு வந்தது. அதை மறைக்க முயன்றவளாய் கணத்தில் தலையைத் திருப்பிக்கொண்டு தன்னருகே நின்றிருந்த நடேசன் என்பவர் வருகிறாரா இல்லையா என்று கூட பாராமால விடு விடுவென காலை மணலில் அழுந்தப் பதிந்து நடந்தாள். பின்னால் அந்த மனிதர் ஓடி வருகிறார் என்பது புரிந்தது.
-தொடரும்-
- செல்லச்சாமியின் வாழ்வில் ஒரு தினமும் , பெருமாள் முருகனும்
- இருட்டறை
- தமிழ்ஹிந்து நடத்தும் உடையும் இந்தியா? புத்தக வெளியீட்டு விழா ஜனவரி-3, 2012 (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணிக்கு சென்னையில்
- ‘‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’’
- ஓர் பிறப்பும் இறப்பும் ….
- கல்வி குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம்
- இருத்தலுக்கான கனவுகள்…
- நினைவுகளின் சுவட்டில் – (81)
- புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்…
- வாழ்ந்து முடிந்த வரலாறு – என்.எஸ்.ஜெகன்னாதன் – சில நினைவுக்குறிப்புகள்
- ரௌத்திரம் பழகு!
- என்றும் மாறாத தமிழ் வெகுஜனப் பத்திரிகைச் சூழல்
- மனசா? உண்மையா?நம்பிக்கை. விளையாட்டுப் பிள்ளை
- தி கைட் ரன்னர்
- 2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்
- “யாத்தே யாத்தே” களின் யாப்பிலக்கணம்
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 7
- ஒரு நூற்றாண்டுக் கழிவுகள்
- நிழல் வலி
- இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுசக்தியிலிருந்து மின்சார உற்பத்தி
- பட்டி டு சிட்டி – நூல் மதிப்புரை
- புத்தாண்டு முத்தம்
- சொல்லாதே யாரும் கேட்டால்
- தென்றலின் போர்க்கொடி…
- Delusional குரு – திரைப்பார்வை
- துளசிச்செடி நிழலில் கண்டெடுத்த குழந்தை
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 4
- தனாவின் ஒரு தினம்
- வம்சி சிறுகதைப் போட்டி முடிவுகள்
- பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை
- கவிப்பொழுதின் அந்திமக்காலம்…
- சங்கத்தில் பாடாத கவிதை
- நீயும் நானும் தனிமையில் !
- கம்பன் மணிமண்டபத்தில் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் கம்பர் போற்றிய கவிஞர் என்ற தலைப்பில் உரை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) களிப்பும் துக்கமும் (On Joy and Sarrow) (கவிதை – 52 பாகம் -1)
- சிந்தனைச் சிற்பி
- ஜென் ஒரு புரிதல் – 25
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 52
- முன்னணியின் பின்னணிகள் – 20 சாமர்செட் மாம்
- பஞ்சதந்திரம் தொடர் 24 சந்நியாசி பாம்பை மணந்த பெண்
- அணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 3