பழமொழிகளில் நிலையாமை

This entry is part 12 of 31 in the series 5 பிப்ரவரி 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

உலகிற்குப் பல்வேறு சிறப்புகள் உண்டு. அதில் ஒன்று தான் நிலையாமை. எதுவும் இவ்வுலகில் நிலையற்றதாகும். அதனால் தான் தொல்காப்பியர், ‘‘நில்லா உலகம் புல்லிய நெறித்தே’’ என்று குறிப்பிடுகின்றார். வள்ளுவரும்,

‘‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை படைத் திவ்வுலகு’’

என்று இவ்வுலகின் சிறப்பினைக் குறளில் தெளிவுறுத்துகின்றார். இவ்வுலகம் நிலையாத் தன்மை உடையதாகும்.

நிலையாமையை நமது முன்னோர்கள் காலங்காலமாக மக்களுக்கு எடுத்துரைத்து வந்துள்ளமையும் சிந்தனைக்குறியதாகும் நிலையில்லா இவ்வுலகில் மாந்தர்கள் நிலையானவை என்று கருதி பல்வேறுவிதமான அநீதிகளைச் செய்துவருகின்றனர். அவர்களைத் திருத்துகின்ற வண்ணம் பல்வேறு நீதிநெறிகளைப் பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர்.

நிலையாமை வகை

இவ்வுலகம் மட்டுமல்லாது இவ்வுலகத்தில் உள்ளபொருள்களும் நிலையில்லாத் தன்மையுடையன. உடல் நிலையாமை, செல்வம் நிலையாமை, பொருள் நிலையாமை என நிலையாமை பலவகைப்படும் பழமொழிகளில் உயிர், உடல் நிலையாமைகளே அதிகம் இடம்பெறுவது நோக்கத்தக்கது.

உடல் நிலையாமை

உடலை மெய் என்பர். ஆனால் அது பொய். எப்படி அது பொய்யாகும்? என்று பலர் நினைக்கலாம். ஒருவர் நறுமணக் குளியல் பொருள்களைக் கொண்டு உடலை நன்கு தூய்மைப்படுத்திவிட்டுக் குளித்துவிட்டு வருகிறார். வந்தவுடன் துவட்டிவிட்டுத்தன்னை அழகுபடுத்திக் கொள்கிறார். பின்னர் அவர் தனது வாயைக் கையில் அல்லது உடலில் ஏதாவதொரு பகுதியில் எச்சில்பட ஒற்றி எடுத்து அதைத் துடைத்துவிட்டு முகர்ந்து பார்த்தால் உடல் நாற்றமடிக்கும். இப்பொழுதுதானே நறுமணப் பொடிகளைப் போட்டுக் குளித்துவிட்டு வந்தோம். தற்போது தீய மணம் வீசுகிறதே என்று நாம் வியந்து போவோம். குளித்தது மெய். ஆனால் அது நிலையானதாக இருந்ததா? இல்லையே! குளித்ததைச் சிலவினாடிகளில் பொய்யாக்கி விட்டதே. அதனால்தான் சான்றோர்,

‘‘பொய்யெல்லாம் ஒன்றாகப் பொதிந்து வைத்த

பொய்யுடலை மெய் என்றால் மெய்யாய் விடுமோ பராபரமே’’

என்று கூறினார் போலும்.

பல பொய்களை இவ்வுடல் தன்னுள் பொதிந்து வவைத்திருக்கின்றது. இளங்குழவி, குழவி, குழந்தை, சிறார், விடலை, குமரன், இளைஞன், நடுத்தர வயதினன், முதிர்ந்தவன், மிகவும் முதிந்தவன்(கிழடு, வங்கிழடு) எனப் பல்வேறு காலநிலைமைகளில் உடல் வளர்ந்தாலும் அவை அனைத்தும் நிலையற்றதன்மைகளாகும். அழகு என்று நாம் நினைப்பது அடுத்த கட்டத்தில் அருவருப்பை நல்கக் கூடியதாக அமைகிறது. அதனால்தான் இவ்வுடலைப் பொய் என்று நமது முன்னோர்கள் கூறினர் எனலாம்.

இவ்வுடல் நின்றால் அழகுற இருக்கும். பலரும் போற்றுவர்.. ஆனால் அஃது விழுந்து விட்டால் யாரும் அதனைப் போற்றமாட்டார்கள் . இழிவாகக் கருதி அப்புறப்படுத்தவே நினைப்பர். இதனை,

‘‘நின்னா(நின்றால்) நெடுஞ்சுவரு

விழுந்தா(ல்) குட்டிச்சுவரு’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.

அவர் நெடிதாக நிற்கும்போது அதற்கு மதிப்பதிகம். அது கீழே விழுந்துவிட்டால் மற்றவர்களால் கீழ்த்தரமானதாகக் கருதப்படும். மனித உடலும் இத்தகையதே ஆகும். மேற்குறித்த பழமொழி இத்தகைய உடல் நிலையாமையையே குறித்து நிற்கிறது. சுவர் என்பது உடலைக் குறிக்கின்ற குறியீடாகும்.

மனிதனின் நினைப்பு

நிலையில்லாத் தன்மையை மனிதர்கள் பார்க்கின்றனர். ஆனால் அதனை உணர்ந்து அதன்வழியில் பாடம் கற்றுக் கொண்டு நடந்தார்களா? எனில் இல்லை எனலாம். யாரும் எவரும் நிலையாமையை உணர்ந்து நடந்து கொள்வதில்லை.

மகாபாரதத்தில் நச்சுப் பொய்கை என்ற சுவையான பகுதி ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் அசரிரீ என்ற யட்சனுக்கும் தருமபுத்திரனுக்கும் இடையே நிகழும் உரையாடல் சிறப்பிற்குரிய ஒன்றாகும். அசரிரீயானது தருமபுத்திரனைப் பார்த்து,

‘‘உலகில் எது ஆச்சரியமானது?’’

என்று கேட்க அதற்கு தருமபுத்திரன்,

‘‘இறந்த மனிதனைப் பார்த்து இறக்கப்போகும் மனிதர்கள் அழுவதே மிகப்பெரிய ஆச்சரியம் ஆகும்’’

என்று குறிப்பிடுகின்றான். இறக்கும் மனிதரை்களைப் பார்த்தும் மனிதன் திருந்தாது தாம் நிலையாக இருப்போம் என்று கருதி தீயவழிகளில் பொருள்களைச் சேகரிக்கின்றான். அது மட்டுமல்லாது இறந்தவனைப் பார்த்து சிலர் வருந்தாது இழிவாகக் கூறிச் சிரிக்கின்றனர். அது தவறானதாகும். தாமும் ஒருநாள் அது பொன்று ஆவோம் என்று யாரும் உணர்வதுமில்லை. அறிவதுமில்லை. இவர்களது நிலையை, உள்ளத்து உணர்வை,

‘‘பழுப்போலையைப் பார்த்து

குருத்தோலை சிரித்ததாம்’’

(பழுப்பபோலை-இறந்தவர்கள், குருத்தோலை-இறக்கப் போகின்றவர்கள்)

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இப்பழமொழிக்கு வயதானவர்களைப் பார்த்து இளமையானவர்கள் சிரித்ததைப் ஒப்பாகக் குறிப்பிடுவர். இங்கு பழுப்போலை என்பது வாழ்ந்து முடிந்தவர்களைக் குறிக்கும். வாழ்ந்து முடிந்து இறந்தவர்களைப் பார்த்து தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று இருமாப்புக் கொள்ளக் கூடாது. அந்த நிலை தமக்கம் வரும் என்று உணர்ந்து செயற்பட வேண்டும் என்ற பண்பாட்டினை இப்பழமொழி நமக்கு தெளிவுறுத்துகின்றது.

உயிர், உடல் நிலையாமை

உயிர் பறவை போன்றது. உடல் பறவை வாழும் கூடுபோன்றது. அதனால்தான்,

‘‘குரும்பைத் தனித்தொழிய புள் பறந்தற்றே’’

என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

உயிர் உள்ளவரை மட்டுமே உடலுக்கு மதிப்பு. உயிர் இல்லை எனில் உடல் அதுவாக அதாவது உயர்திணையாக வழங்கப்பட்டது அஃறிணையாக மாறி வழங்கப்படும். தலையில் முடி (மயிர்) இருக்கும்போது அதைச் சிறப்பாகக் கவனித்துச் சிறப்பாகப் பாதுகாப்பர். அது உதிர்ந்து கீழே விழுந்துவிட்டால் அதற்கு மதிப்பே இல்லை. அதுபோன்றே உயிர் இருக்கும் வரை உடலை மதிப்பார்கள். உயிர் இல்லை எனில் அதனை இழிவாகக் கருதுவர். இதனை மனிதர்கள் யாவரும் அறிந்து உணர்ந்து கொண்டு வாழ வேண்டும் என்ற நன்னெறியை,

‘‘உயிரும் மயிரும் ஒண்ணுதான்’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது.

தலைமுடி எப்போது கீழே உதிர்ந்து விழும் என்று யாராலும் கூற இயலாது. பழம் பழுத்துவிடில் அது கிளையில் தங்காது விழுந்து விடும். அதுபோன்று உடல் தளர்ந்து முதிர்ந்து நோயுற்று விட்டால் உயிர் நிலையாது. இதனை உணர்ந்து மனிதர்கள் வாழ வேண்டும் என்ற கருத்தினை,

‘‘பழம் பழுத்தா கொம்புல தங்காது’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

பழம் பழுத்தல் என்பது வயது முதிர்தல், உடல் தளர்தல், நோயுறலைக் குறிக்கும். உயிர் உடலிலிருந்து வெளியேறும் அத்தகைய நிலையையே இப்பழமொழி விளக்குகின்றது.

நிலையாமையை உணர்ந்து பேராசையை விடுத்து இவ்வுலகில் நல்வாழ்வு வாழ வேண்டும் என்று இப்பழமொழிகள் நன்கு நமக்கு புலப்படுத்துகின்றன. நிலையாத் தன்மையை உணர்ந்து மனிதன் தவறினைச் செய்ய அஞ்சுவான். அப்போது சமுதாயத்தில் குற்றங்கள் குறையும் என்ற கருத்தையும் இப்பழமொழிகள் நமக்கு உணர்த்துகின்றன. இப்பழமொழிகள் உணர்த்தும் அத்தகைய நேர்மை மிகு வாழ்வினை வாழ்ந்து மனித குல உயர்வுக்கு வழிவகுப்போம்.

Series Navigationஜென் ஒரு புரிதல்- பகுதி 30சுகனின் 297வது இதழ் – ஒரு பார்வை
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *