சித்ராங்கிக்கு தீட்சதர்மேல் மரியாதை இருக்கின்றது. அவர் வரும்போதெல்லாம பள்ளியறை கதவைத் திறக்கக் கடமைப்பட்டவள். மற்றவர்களுக்கு வேண்டுமானால் தில்லைநாதர் படியளக்கலாம். மீனாம்பாளுக்கும் சித்ராங்கிக்கும் அவர்தான் பரமன்
14. மனதில் கவலை இரையை அண்மித்த சிலந்திபோல உட்கார்ந்திருந்தது. கைக்கெட்டிய தூரத்தில் எண்ணையின்றி பொசுங்கும் திரியின் வாசம் கவனத்தை அதிகம் ஈர்க்கவில்லை. மதியம் கோவிலுக்கும் போகும் முன் உடுத்திய பட்டுபுடவையை பாரமாக உணர்ந்தபோதும் அவிழ்த்துபோட ஆர்வமின்றி சோர்ந்திருந்தாள். கடந்த சில நொடிகளாக நகங்களைக் கடித்து துப்ப ஆரம்பித்து, இப்போது நக இடுக்கு சதைப்பற்றுகளை பற்கள் கடித்தன. சூடியிருந்த மல்லிகைப் பூச்சரம், அரையிருட்டில் வாழ்ந்து முடித்த கிழம்போல தரையிற்கிடந்தது இரண்டாம் சாமம் கழிந்திருக்கும்போல தோன்றியது. சிறுக்கி எங்கே போய்த் தொலைந்தாள்? எதற்காக இன்றைக்கு இவ்வளவு தாமதம்? போனேன் வந்தேனென்று வரவேண்டாமா?. இதற்குமுன் எப்போதெல்லாம் செண்பகம் இப்படி காத்திருக்க வைத்தாளென்று மனம் அசைபோட்டது: ஆடிப்பெருக்கின்போது கொள்ளிடக்கரையில் ஜெகதீசனைப் பார்த்துவருகிறேனெனச் சொல்லிப் போனவள் திரும்ப வெகுநேரம் ஆனது. வண்டியின் தலைமாட்டில் நின்றிருந்த சித்ராங்கி திருவிழாவிற்கு வந்த ஆண்களில் பார்வையையையும், கசிந்த ஏளனப்புன்னகையையும் காணச் சகியாமல் வண்டிக்குள் அமர நினைத்ததும், அதனைத் தொடர்ந்து ஏர் காலில் கால்வைத்து ஏறமுயன்று புடவைத் தலைப்பு காலில் சிக்க மல்லாந்து விழ அங்கிருந்த மனிதர்கூட்டம் கொல்லென சிரித்தது, நினைவுக்கு வந்தது. பிறகு செண்பகத்தைத் தேடி கொள்ளிடக்கரையில் அலைய வேண்டியிருந்தது. வெகுநேரம் கழித்து செண்பகம் திரும்பிவந்தாள். ஜெகதீசனைக் காணாததால் பிற இடங்களிற் தேடியதாக சமாதானம் கூறினாள். பிறகொருமுறை தனது தகப்பன் காய்ச்சலில் கிடப்பதாகவும், சுக்கு கஷாயம் போட்டுக்கொடுத்துவிட்டு இரண்டுநாழிகையில் திரும்புவேன், அம்மாவிடம் சொல்லவேண்டாம், எனக் கூறிச்சென்றாள். சொன்னதுபோல இரு நாழிகைக்குள் திரும்பவில்லை. மீனாம்பாள் மகளை கோபித்துக்கொண்டாள். கிணற்றடியில் போட்ட பாத்திரங்கள் அப்படியே கிடக்கின்றன. ஒன்று தமது தகப்பனுக்குக்குத் சிசுருட்சை முடித்துவிட்டு வந்திருக்கலாம் இல்லை இங்கேயாவது சில்லறைவேலைகளை முடித்துச் சென்றிருக்கலாம் இப்படி எதுவுமின்றி, உன்னை ஒரு பெரிய மனுஷியாக பாவித்து உத்தரவு வாங்கிச் சென்றால் என்ன அர்த்தம். நீ செல்லம் கொடுத்து கொடுத்து அவளைக் குட்டிசுவராக்கிவிட்டாயென்று, மீனாம்பாள் திட்டித் தீர்த்தாள். போததற்கு செண்பகம் சென்ற ஒரு நாழிகையில் காய்ச்சல் தகப்பன் பெண்ணைத் தேடி இவர்கள் வீட்டிற்கு வந்தார். இரண்டு நாழிகையில் திரும்புவதாகச் சொல்லிச் சென்றவள் மூன்று நாழிகை எடுத்துக்கொண்டு திரும்பிவந்தாள். மீனாம்பாள் செண்பகத்தைக் கண்டித்தபோது சித்ராங்கி குறுக்கிடவில்லை. செண்பகத்தின் மீது அவ்வளவு கோபமிருந்தது. எங்காவது போகட்டும், தம்மிடம் செண்பகம் உண்மையாக நடந்துகொள்ளவில்லையே என்ற வருத்தம் சித்ராங்கிக்கு. அன்றைக்கு வருத்தத்தை தோழி கொண்டுவந்த இவளுக்குப் பிடித்த பொரிவிளங்காய் உருண்டை தீர்த்து வைத்தது. அன்றைய தினம் தீட்சதர் வீட்டிலிருந்தும் பொரிவிளங்காய் உருண்டை வந்திருந்தது.
மீனாம்பாள் இரண்டொருமுறை கதவைத் தட்டி செண்பகத்தை எங்கே அனுப்பினாய் என்று கேட்டாள். அவளுக்குச் செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கர் சிதம்பரம் வருகிறார் என்ற தகவல் கிடைத்திருந்தது. கோவிந்தராஜர் திருப்பணி வேலைக்கு வரும் கிருஷ்ணப்ப நாயக்கர் செஞ்சியில் ஓரிருகிழமைகள் தங்கக்கூடும். அப்படி தங்க நேர்ந்தால் சித்ராங்கியைத் தேடி நாயக்கர் பல்லக்கு வரக்கூடும். வீடெங்கும் மாக்கோலம் போடவேண்டும் பனைக்குருத்து மற்றும் மாவிலைகொண்டு தோரணம் கட்டவேண்டும். நாயக்கருக்குப்பிடித்த அப்பமும் அதிரசமும் வீட்டிலிருந்துபோகவேண்டும். செண்பகத்திற்கு வேலைகள் இருந்தன. இதுபோன்ற நேரத்தில் செண்பகத்தை ஊர்மேயவிட்டுவிட்டு எதற்காக கைபிசைந்து கொண்டிருக்கவேணுமென்பது மீனாம்பாளுக்குள்ள கவலை.
கடந்த காலங்களைக் காட்டிலும் செண்பகத்தின் தாமதம் இம்முறை கூடுதல் சஞ்சலத்தில் சித்ராங்கியை ஆழ்த்தியிருந்ததற்கு ஜெகதீசன்மீது அவளுக்கிருந்த பிரேமை காரணமாக இருக்கலாம். வெகுநாட்களாக தம்மை அலட்சியம் செய்யும் ஜெகதீசனிடமிருந்து எப்படியேனும் சித்ராங்கிக்குச் சாதகமாக ஒரு பதிலை தோழி கொண்டுவருவாளென்ற நம்பிக்கையும் அந்த நம்பிக்கை பலிக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பும் அதிகம். முன்னெப்புமில்லாத அளவில் ஜெகதீசன்மீது மோகத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. வாழ்கிறாள். அவனைப்பற்றிய ஏக்கத்திலேயே தன்னுயிர் பிரியநேருமென்ற அச்சம். செண்பகம் கொண்டுவரும் பதிலில் அவள் விதியும் எழுதப்பட்டிரு க்கிறது. அதை நினைக்கவும், செண்பகத்திற்கென தமது காத்திருப்பை ஒரு பாரமாக உணர்ந்தாள். கிருஷ்ணபுர நாயக்கருக்கு அடங்கிய சோழகன் அவளை கவர்ந்து சென்றிருப்பானோ? என்ற கிலேசமும் மனதிலுதித்தது. இக் கவலையை அம்மாவிடம் பகிர்ந்துகொள்ளலாமா என்று கூட நினைத்தாள். ஆனால் மீனாம்பாள் இதுபோன்ற அச்சங்களை காதில்வாங்க மாட்டாள். அவளுக்கு செண்பகம் தைரியமானவள். ராட்சஷி, எமனையே தின்று ஏப்பமிடக்கூடியவள். எனவே மீனாம்பாளிடம் சொல்லி எதுவும் ஆகப்போவதில்லை.
கிருஷ்ணபுரம் ஆட்சியின்கீழ் மூன்று பாளையக்காரர்கள் இருந்தார்கள். வேலூர் பகுதிகளுக்கு லிங்கம்ம நாயக்கர், கெடிலம் ஆற்றங்கரையில் திருவதி அரசன், கொள்ளிடத்துப்பக்கம் தீவில் கோட்டைகட்டி ஆளும் எண்பது வயது கிழவன் சோழகன் மூன்றாவது ஆசாமி. மூன்று பாளையக்காரகளில் கொள்ளிடக்கிழவன் கிருஷ்ணப்ப நாயக்கரிடம் செல்வாக்கு மிகுந்தவன். சிதம்பரம் கிழவன் நிர்வாகத்தின்கீழ் வருகிறது. கிழவனைப் பற்றிய வதந்திகள் ஏராளம். பெண்களை அடிக்கடி தூக்கிச்செல்வான் என்று பேச்சு. எதிர்ப்பவர்களை தீவுக்கோட்டையை சுற்றியுள்ளை அகழியில் வளர்க்கும் முதலைகளுக்கு இரையாக்குவதாகவும் கூறினார்கள். தில்லைநாதரிடம் ‘தோழிக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாதென்று’ வேண்டிக்கொண்டாள். ‘விக்கினங்களின்றி திரும்பி வந்தால், திரிபுரசுந்தரிக்கு நெய்விளக்கு ஏற்றுவதாகவும் பிரார்த்தித்துக்கொண்டாள்
ஓரிடத்திலும் நிலைகொள்ளாமல் தவித்தாள். சிறிது நேரம் கட்டிலுக்கும் சுவருக்குமாக இருந்த இடைவெளியில் நீளவாட்டில் நடப்பாள். கால் வலித்ததென்றால் கட்டில் தலைமாட்டில் பொத்தென்று வேகமாக உட்காருவாள், விழுவாள். மூக்கை உறிஞ்சும் சத்தம் வரும். தலையின் வலப்பக்கம் முன்புறத்தில் இருந்தகை நழுவி கன்னத்தை அடைந்திருக்கும். அதுநாள்வரை காணாதவள்போலவும் அப்போதுதான் முதன்முறையாக உணர்ந்தவள்போலவும் கன்னத்தில் கடுகுபோல தட்டுப்பட்ட பருவை விரல்கொண்டு கிள்ளுவதுபோல பாசாங்கு செய்து அவ்வலியின் சுகத்தை அனுபவித்தாள். மனதிலிருந்த நெருக்கடிக்கிடையிலும் அவ்வலி இதமாக இருந்தது. சிறிதுநேரம் தலைவலிகண்டவள்போல இருகைகளிலும் தலையைக்கொடுத்து கால்களைத் தொங்கவிட்டபடி அமர்வாள். பின்னர் அவற்றை மடித்து பின்புறம் நகர்ந்துகொள்வாள். சட்டென்று தலையணையில் விழுவாள். கால்களிரண்டையும் பின்புறம்தொட மடித்துக்கொண்டு வெகு நேரம் சிந்தனையின்றி படுத்திருப்பாள். தெருவில் மரங்கள் காற்றில் அசைந்தால்கூடபோதும் உறக்கத்திலிருந்து விழித்தவள்போல சன்னலை நோக்கி ஓடுவாள் இருட்டிலிருந்து ஏதேனும் மனித உயிர்கள் விடுபடுகிறதா என்று தேடுவாள். எத்தனை முறை சன்னலைத் தேடி அதுபோல ஓடியிருப்பாளென்ற எண்ணிக்கை இல்லை. சன்னற்கம்பிகளை வெகுநேரம் பிடித்தபடி கால் கடுக்க நின்றவள் சன்னல் கீழே தரையில் அமர்ந்து உறங்கிப்போனாள். யாரோ நடந்து வருவது போல சப்தம். உதறிகொண்டு எழுந்து நின்றாள். பார்வை வீதியில் பதிந்தது, வலப்புறமாக யாரோ வருகிறார்கள். இருட்டில் ஆணா பெண்ணென்ற அடையாளம் தெரியவில்லை. வேப்ப மரத்தை ஒட்டி நின்று கமறுவது கேட்டது. ஆண்- தீட்சதர். சித்ராங்கிக்கு தீட்சதர்மேல் மரியாதை இருக்கின்றது. அவர் வரும்போதெல்லாம பள்ளியறை கதவைத் திறக்கக் கடமைப்பட்டவள். மற்றவர்களுக்கு வேண்டுமானால் தில்லைநாதர் படியளக்கலாம். மீனாம்பாளுக்கும் சித்ராங்கிக்கும் அவர்தான் பரமன். மீனாம்பாளிடம்கூட ஒரு முறை கனகசபையில் தீபாரதனையை முடித்துவிட்டுத் திரும்பும்போது சித்ராங்கி கேட்டாள்.,” நியாயமாகப் பார்த்தாள் நாம் தீட்சதரைத்தானே கும்பிடவேண்டும். மீனாம்பாள், “தப்பு தப்பு அப்படியெல்லாம் துடுக்குத்தனமாக பேசக்கூடாதென்று அடக்கிவிட்டாள்”.
தீட்சதருக்காக நடைவாசற்கதவை மீனாம்பாள் திறப்பது தெரிந்தது. அம்மா என்னவோ கேட்கிறாள், ‘நீங்கள் இன்று வருவதாக சொல்லவே இல்லையே?” என்கிற ஆச்சரியத்துடன் கூடிய வினாவாக அது இருக்கலாம். ஏனெனில் மீனாம்பாள் தீட்சதர் வருவாரென்று இவளிடம் சொல்லவில்லை. மஞ்சத்தில் சலவைத் துணிகள் விரிக்கவில்லை. நெய்விளக்கு ஏற்றப்படவில்லை. மீனாம்பாள் கேள்விக்கு அவ்ருடைய பதில் என்னவாக இருக்குமென யோசித்துக்கொண்டிருக்கும்போதே நடையைக் கடந்து காலடியோசைகள் அறையை நெருங்கியிருந்தன.
கதவைத் திறக்க தயங்கினாள். திறக்கும் மனநிலையிலும் அவளில்லை. இருந்தாலும் பூனைபோல நடந்து மூடியிருந்த கதவிற்கிடைத்த கோடுபோன்ற சந்திற் கண்களைப் பதித்து கூடத்தைப் பார்த்தாள். இருட்டில் ஆணுபெண்ணுமாய் தழுவிக்கொண்டிருக்கும் இரு உருவங்கள் தெளிவற்றுத் தெரிந்தன.
” உன் வீட்டிற்கு வருவது அநேகமாக இதுதான் கடைசியாக இருக்கலாம்”- தழுதழுத்த குரலில் தீட்சதர்
.” இதென்ன சின்ன குழந்தை மாதிரி அழுதுகொண்டு, சித்ராங்கியை கூப்பிடட்டுமா?”,
” வேண்டாம். உன்னைப்பார்க்கவேண்டுமென்றுதான் வந்தேன். உனது அறை வசதியாக இருக்குமா, போகலாமா?”
“ம்..”
– இருட்டில் இருவரும் தழுவியபடி நடந்துசெல்வதை பார்த்தபடி நின்றிருந்தாள். ————————-
- பஞ்சதந்திரம் தொடர் 29- முட்டாள் நண்பன்
- ஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட மேரி ஃபிலோமினா
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 5) எழில் இனப் பெருக்கம்
- ஜே.கிருஷ்ணமூர்த்தி-மனக்கட்டுப்பாடு தியானத்துக்கு உதவாது – பகுதி 2
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 12
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -59)
- குறி மூன்றாவது இதழ் – ஒரு பார்வை
- சிற்றிதழ் அறிமுகம் – ‘ நீலநிலா ‘
- வளவ.துரையனின் நேர்காணல்
- சுஜாதாவின் ” சிவந்த கதைகள்” நாவல் விமர்சனம்
- ஜென் ஒரு புரிதல்- பகுதி 30
- பழமொழிகளில் நிலையாமை
- சுகனின் 297வது இதழ் – ஒரு பார்வை
- சுதந்திரம் … கம்பிகளுக்குப் பின்னால்
- நினைவுகளின் சுவட்டில் – (84)
- வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே…
- கவிஞர் தேவதச்சனுக்கு விளக்கு விருது
- புகுஷிமா விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் -1
- நூல் மதிப்புரை – செல்லம்மாவின் அடிச்சுவட்டில்…
- இந்திய பிரெஞ்சு பண்பாட்டு உறவுளை மேம்படுத்தும் வகையில் சந்திப்பு
- முன்னணியின் பின்னணிகள் – 25
- சுப்ரமணிய சுவாமியும் – சுப்ரீம் கோர்ட்டும்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 9
- காமம்
- கவிதை கொண்டு வரும் நண்பன்
- சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் – கருத்தரங்கம்
- உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள் –முன்னுரையாக சில வார்த்தைகள்
- பேஸ்புக் பயன்பாடுகள் – 1
- தற்கொலை
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் 8
- மும்பை தமிழ் அமைப்புகள் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா