வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து.

This entry is part 32 of 45 in the series 4 மார்ச் 2012

— தமிழ்மணவாளன்

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

அண்மையில், ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ என்னும் திரைப்படம் வெளியான போது, பரவலாக பலரது பாராட்டுகளையும், குறிப்பிடத்தக்க ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது. வியாபார ரீதியிலான படங்களுக்கு மத்தியில் அவ்வப்போது வித்தியாசமான அம்சங்களுடன் சில படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

’தம்பி வெட்டோத்தி சுந்தரம்’வியாபார ரீதியிலான அம்சங்களைக் கொண்ட படம் தானெனினும், அழுத்தமான கதையின் துணையோடு அதனை பூர்த்தி செய்திருந்தது எனலாம்.

படித்த, பட்டதாரி இளைஞர்களுக்கு, பணிவாய்ப்பு மறுக்கப் படுமேயானால், அவர்களின் பாதை தடம் மாறிப் போகும் என்பதை, உண்மை நிகழ்வின் பின்புலத்தோடு பேசிய படம்.

திரையரங்கில் அதனைப்பார்த்து விட்டு, கல்கி பத்திரிகையில் விமர்சனம் எழுதியிருந்தேன்.

அந்தத் திரைப்படத்தின் இயக்குனர் V.C வடிவுடையான் அவர்களுக்கு தொலைபேசியின் வாயிலாக எனது வாழ்த்துகளையும்,பாராட்டுகளையும், கருத்துகளையும் பதிவு செய்தேன்.

நேர் சந்திப்பில், திரைப்படங்கள் குறித்தும், இன்றைய திரைப்படச்சூழல் குறித்தும் அளவளாவிக் கொண்டிருந்த போது, அவர் தன்னை இயக்குனர் என்பதோடு எழுத்தாளர் என்பதையும் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

அத்தோடு,அவர் எழுதிய நூல்களையும் வாசிக்கக் கொடுத்தார். அவர் பதினோரு நூல்களின் ஆசிரியர் என அறிய வரும்போது மிகவும் ஆச்சர்யப்பட்டேன்.

வீட்டிற்கு வந்து நூல்களை வாசித்துப் பார்த்த போது, ஒரே ஒரு நாவல் தவிர்த்து பிற நூல்கள் யாவும் வாழ்வியல் நூல்களாக இருப்பதை அறிய முடிந்தது.

தொடர்வதற்கு முன் பட்டியலைத் தந்துவிடுகிறேன்.

வெட்டவெளி தேவதை-நாவல்

சற்று மாறுதலாய் யோசி-வாழ்க்கை மாறும்

மனம் வெறும் வெற்றுக் காகிதம்

மரணமே பிறப்பின் வாசல்

காமசூத்ராவைக் கடந்து வா

தீ வளர்க்கும் தியானம்

காதல் ஹார்மோன்கள்

காமமும் தியானமும்

நீ வாழும் உலகம்

ஐம்புலன்களை அறிதலும்-வெற்றி பெறுதலும்

ஆழ்மனம்

பார்த்தவுடன் மெல்லிய பிரமிப்பு ஏற்பட்ட்து.காரணம், ஜே.கே, ஓஷோ போன்ற தத்துவ மேதைகள், உளவியலாளர்கள்,ஞானிகள்,எனப்பலரும், மேற்சொன்ன விஷயங்கள் பற்றி ஏராளமாய் பேசியிருக்கிறார்கள்;எழுதியிருக்கிறார்கள்.

அதுபோலவே,சுயமுன்னேற்றம் சார்ந்த நூல்கள், மேலாண்மை சார்ந்த, பிரச்சனைகளை எதிர்கொள்வது பற்றிய நூல்கள் ஆங்கிலத்தில் ஏராளமாய் வெளிவந்துள்ளன.

தமிழில்,மெர்வின், M.S உதயமூர்த்தி, இறையன்பு,சோமவள்ளியப்பன் உட்பட மிகச்சிலரே இத்துறை சார்ந்த நூல்களை எழுதிவருகிறார்கள். சிவசங்கரியின் ‘சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது’வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அந்தவகையில், வடிவுடையான் ஓர் இடத்தை அடைவதற்கான முகாந்திரம் இருப்பதாக உணர முடிகிறது.

வாழ்க்கை,வாழ்க்கையை வசப்படுத்தும் அல்லது வசமிழக்கச் செய்யும் காதல், காமம், ஆன்மீகம் என எல்லாத்துறைகள் குறித்தும் இவரால் எழுத முடிகிறது.

எண்ணம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது எனில்,எண்ணம் சார்ந்த,சிந்தனை சார்ந்த, செயலூக்கம் தரவல்ல செய்திகளையும் தீர்வுகளையும் இவரது சிறப்பம்சமாகப் பார்க்கலாம்..

’அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு’

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவன் எழுதினான்.

’உயிர்களிடத்தில் அன்பு வேணும்’

என்று இந்த நூற்றாண்டில் பாரதி எழுதினான்.

பாரதிக்கும் வள்ளுவனுக்கும் இடையேயும் பலர் எழுதினார்கள். பாரதிக்குப் பின்னும் பலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

மானுடத்தின் உச்சத்தை மிச்சமின்றிப் பாதுகாப்பது அன்பு மட்டுமே என்பதில் அணுவளவும் ஐயமில்லை.ஆயினும், அதனைத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு படைப்பாளிக்கும் அதுகுறித்துச் சொல்வதற்கு அவசியமும் கடமையும் உருவாகிறது.

அதே நேரம், பேசுவதைப் பேசுவதில் மிகுந்த எச்சரிக்கை அத்தியாவசியமானது.’புதிதாய்ச் சொல்வது’ அல்லது ‘புதுவிதமாய்ச் சொல்வது’,என்பதே படைப்பின் சிறப்பு.

வடிவுடையான், மனத்தின் ஆழமான பகுதிகளின் செயல்பாடுகள் பற்றியும்,அகோரிகளின் அகவாழ்வு குறித்தும்,இன்ன பிற விஷயங்களை எல்லாம் ,எளிய முறையில் எல்லா வாசகனையும் சென்றடையும் முனைப்புடன் எழுதியிருக்கிறார்.அதற்கு அவரின் உரைநடையில் உள்ள எளிமை கை கொடுக்கிறது.

ஒவ்வொரு விஷயத்தைப் பற்றி இதுகாறும் உலகியல் வழக்கில் உள்ள முன்வைப்புகளையும்,கருத்துகளையும் கேள்விக்குள்ளாக்குவதோடு,புதிய கோணத்தில் அணுக முயற்சிக்கிறார்.

அந்த நூல்களில் உள்ள செய்திகளையும், கருத்துகளையும்,அவற்றின் மீதான எனது பார்வையையும், திண்ணையில் தொடர்ந்து, ஒவ்வொரு நூல் குறித்தும் எழுதலாம் என்றிருக்கிறேன்.

வாசகர்களின் பின்னூட்டம் அதற்கு பலம் சேர்க்குமென நம்புகிறேன்.

Series Navigationபருந்தானவன்நீ, நான், நேசம்
author

தமிழ்மணவாளன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    R. Jayanandan says:

    நல்ல எழுத்தக்களையும், சிந்தனையாளர்களையும் அடையாளம் காண்பதும்,அதனை குறித்து எழுதுவதும், கலைஞர்களின் கடமை. அதனை தொடர்ந்து செய்யுங்கள்.
    வாழ்த்துக்கள்.

    இரா.ஜெயானந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *