சென்னை மண்ணுக்கென்று ஏதோ விசேஷம் இருக்கிறது போலும். சென்னை மாநகரமாக அது உருவெடுக்கும் முன்பே இந்த விசேஷம் ஏற்பட்டு அதன் பிறகும் நீடித்து வந்திருக்கிறது.
எங்கெங்கோ பிறந்து எவ்வாறெல்லாமோ அலைந்து திரிந்தானபின் சென்னையில் வந்து அடங்கிய சித்தர்கள் பலர். சென்னை தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இன்று வடசென்னையின் ஒரு பகுதியாகவே கருதப்படும் திருவொற்றியூர் கடற்கரையில் சமாதி கொண்ட பட்டினத்தார், காவிரிப்பூம் பட்டினத்துக்காரர்தான். அவர் கையில் இருந்த பேய்க் கரும்பின் கசப்பு திருவொற்றியூர் என்கிற இன்றைய சென்னையின் தலைமாட்டுக்கு அவர் வந்த பிறகுதான் இனித்தது. அவ்விடத்தையே தமது உடல் ரீதியான நடமாட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாகப் புரிந்து கொண்டு அதையே தனது அடக்கத் தலமாகத் தேர்ந்து கொண்டுவிட்டார், பட்டினத்தார்.
ராமேசுவரம் தீவில் உள்ள பாம்பனில் பிறந்தாலும் சமாதிகொள்ளச் சென்னையைத் தேர்ந்துகொண்ட இன்னொரு சித்தர் பாம்பன் குமரகுருபர தாச சுவாமி. முதலில் வட சென்னையில் வைத்தியநாத முதலி தெருவின் அப்போதைய 40 ஆம் இலக்கமிட்ட வீட்டில் தங்கிய பாம்பன் சுவாமி, பின்னர் சீடர் சின்னசாமியால் திருவல்லிக்கேணிக்கு அழைத்து வரப்பட்டு 1929 ஆம் ஆண்டு திருவான்மியூரில் இன்றைய கலாட்சேத்திராவுக்கு அருகிலேயே லட்சுமிபுரம் முத்து லட்சுமி சாலையில் சமாதி கொண்டுவிட்டார்.
பாம்பன் சுவாமி போலவே வெளியூரில் பிறந்து வளர்ந்தாலும் சென்னைக்கு வந்து சேர்ந்து பாம்பன் சுவாமியின் சமாதிக்கு அருகிலேயே தானும் சமாதி கொண்டவர் சக்கரையம்மா. திருவண்ணாமலை போளூர் அருகில் உள்ள தேவிகாபுரத்தில் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிறந்த அனந்தாம்பா, அக்கால வழக்கப்படி விவரந் தெரியாத வயதிலேயே திருமண பந்தத்தால் பிணைக்கப்பட்டு, பருவம் வந்தபின் சென்னை கோமளீஸ்வரன் பேட்டைக்கு (இன்றைய காயலான் கடை புதுப்பேட்டைதான்!) கொண்டுவரப்பட்டவர். சிறுபெண்ணாயிருக்கையிலேயே ஆன்மிக நாட்டம் மிகுந்து தான் பிறந்த தேவிகாபுரத்திற்குப் பெயர்க் காரணமாய் அமைந்த பெரிய நாயகி அம்மன் கோயிலில் கருவறையைப் பார்த்தவாறு மணிக் கணக்கில் கண் மூடிக் கிடந்தவள் அனந்தாம்பா. அவளது ஆன்மிகத் தேடலுக்கு இடையூறு விளையக் கூடாது என்பதற்காகவேதானோ என்னவோ அவளுக்கு வாய்த்த கணவன் மனைவியை முற்றிலுமாகப் புறக்கணித்து அற்ப சுகங்களில் மூழ்கிக் கிடக்கிறவனாக அமைந்தான். அப்படியும் அனந்தாம்பாவுக்கு இல்லற நிர்பந்தம் ஒரு சிறிதும் இருக்கலாகாது என்பதுபோல் சீக்கிரமே இறந்தும் போனான். அன்னந்தாம்பாளால் இப்போது எவ்விதத் தளையும் இன்றி இரவு பகல் வேறுபாடின்றி ஆன்மிக உணர்வுடன் உள்முகமாகத் தன்னை நோக்கிக் கொண்டிருப்பதிலேயே காலத்தைக் கழிக்க முடிந்தது. தேவிகாபுரத்தில் இருந்த நாட்களிலேயே தன் சகோதரன் போளூரில் இருந்தபடியால் அங்கு சென்று சில தினங்கள் கழித்த அனந்தாம்பா, போளூர் அருகிலேயே வில்வாரணி என்னும் இடத்தில் உள்ள நட்சத்திரக் குன்றின் மேல் ஒரு பாழ் மண்டபத்தில் தன்னந் தனியே வாழ்ந்த குணாம்பா என்ற சந்நியாசினியால் ஆட்கொள்ளப்பட்டு ஸ்ரீ சக்கர உபாசனை மார்க்கத்தை மேற்கொள்வதற்கான உபதேசமும் பெற்றார். சிறு பெண்ணான தன்னால் நினைத்தபோது வந்து தரிசிக்க இயலாதே என்று ஏங்கிய அனந்தாம்பாவைக் கண்டு மனம் இரங்கிய குணாம்பா, உடலை லேசாக்கிப் பறவையைப் போல் பறக்க முடிகிற லஹிமா என்கிற சித்தை அருளி, நினைத்தபோது எங்கு வேண்டுமா னாலும் சுதந்திரப் பட்சியாய்ப் போய் வா என்று அனுப்பி வைத்தார்!
மனிதர் பறவைபோல் பறப்பதென்பது சாத்தியமே இல்லை என இதனை விஞ்ஞான அறிவின் தாக்கம் மிகுந்த இன்றைய மனித மனம் தர்க்கிப்பதில் வியப்பில்லை. ஆனால் தூய உள்ளத்துடன் எளிய வாழ்க்கை வாழ்ந்து, வாய்மை தவறாதவர் எனப் பெயர் பெற்றவரான திரு. வி. கலியாண சுந்தர முதலியாரே இந்தப் பெண் சித்தர் பறவையைப் போலப் பறந்து வந்து மாடியிலே அமர்ந்து இளைப்பாறியதைக் கண்டதாகச் சாட்சியம் அளிக்கிறார், உள்ளொளி என்ற தமது சிறு நூலில்.
நீண்ட காலம் ஸ்ரீ சக்கர உபாசனை செய்து கனிந்த அனந்தாம்பா, அதன் காரணமாகவே சக்கரத்தம்மா என அழைக்கப்படத் தொடங்கி, சாமானிய மக்கள் நாவில் சக்கரை அம்மாவாகி விட்டார்!
எழுத்தறிவில்லாத விதவைப் பெண்மணியாக அனந்தாம்பா கோமளீஸ்வரன் கோயில் வாசலில் அமர்ந்து அவ்வப்போது அட்டகாசமாகச் சிரிப்பதைக் கண்டு சித்த சுவாதினமற்றவர் என்று தற்செயலாக அவரைக் கண்டு எடைபோட்ட சென்னை மயிலாப்பூர் டாக்டர் எம். சி. நஞ்சுண்ட ராவ், எந்நேரமும் ஆனந்தமாக இருப்பதுதான் நமது இயற்கை என்பதால் எதிரே தென்படுவதையெல்லாம் வேடிக்கை பார்த்துச் சிரித்து மகிழ்வதாக அந்த அம்மா சொல்லக்கேட்டு அந்தக் கணமே அவர் சாதாரணமானவர் அல்ல எனப் புரிந்து கொண்டார். அம்மையார் அத்வைத உணர்வின் உச்ச நிலையில் இருப்பதை வெகு விரைவில் அறிந்து அவரையே தமது குருவாகவும் வரித்துக்கொண்டார். சுவாமி விவேகானந்தர் பிரபலமடையாத நிலையில் சென்னை வந்தபோதே அவரை இனங்கண்டு உபசரித்து அடிபணிந்த நஞ்சுண்ட ராவுக்கு அனந்தாம்பாவைச் சரியாக அடையாளம் காண்பதில் சிரமம் இருக்கவில்லை.
1901 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 28 ஆம் நாள் தமது சடலத்தைத் துறந்த குருமணி சக்கரையம்மாவுக்குத் திருவான்மியூரிலேயே சமாதிக் கோயில் ஒன்றைச் சிறிய அளவில் எழுப்பினார் நஞ்சுண்ட ராவ். இன்று அந்தக் கோயில் கலாட்சேத்திரா சாலையும் காமராஜர் சாலையும் சந்திக்கும் இடத்திற்கு அருகிலேயே ஆன்மிக அலைகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. அங்கு அமைதியான சூழலில் நறுமணச் செடி கொடி மரங்களுக்கிடையே விளங்கும் தியான மண்டபம் ஆன்மிக நாட்ட முள்ளவர்களுக்கெல்லாம் ஒரு வரப் பிரசாதம்போல் அமைந்து விட்டது.
சென்னை மாநகரம் முழுவதுமே இப்படிப் பல சித்தர்கள் நடமாடி, அடக்கமும் ஆகியிருக்கிறார்கள். ஆனால் சென்னை ஒருங்கிணைந்த ஒரு மாநகரமாக உருவாகிக்கொண்டிருக்கையிலேயே அதன் ஒரு பகுதி சித்தர் ஒருவரின் பெயரால் அழைக்கப்பட ஆரம்பித்துவிட்டது எத்தனை பேருக்குத் தெரியும்?
இன்று வட சென்னையில் தண்டையார்பேட்டை என மருவியுள்ள தொண்டியார்ப்பேட்டை உண்மையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த குணங்குடி மஸ்தான் என்கிற ஸூஃபி சித்தரின் நினைவாகச் சூட்டப்பட்ட பெயர்தான். குணங்குடி என்று தொண்டிக்கு அருகில் ஓர் ஊர் இருப்பது உண்மைதான் என்றாலும் மஸ்தான் சாகிப் பெயருக்கு முன் உள்ள முன்னொட்டு அந்த ஊரைச் சுட்டுவதல்ல. குணம் என இறைச்சக்தியையும் குடி எனத் தனது ஆன்மாவையும் குறிப்பாலுணர்த்திப் போவோம் குணங்குடிக்கு என்று அத்வைத நிலையில் பாடிக்கொண்டிருந்த மஸ்தான் சாகிபின் உண்மைப் பெயர் அப்துல் காதர். மஸ்த் என்றால் வெறி என்று பொருள். ஆன்மிக வெறியில் எந்நேரமும் திளைத்துக் கொண்டிருந்ததால் அப்துல் காதர் மஸ்தான் ஆகிவிட்டார்.
”ஐயன் குணங்குடியானை யன்றி வேறுண்டென்று உள் ஆய்ந்து பார்த்தேன் ஐயன் குணங்குடியானை யன்றி வேறொன்றும் என்னுள்ளாய்க் காணேன் ஐயன் குணங்குடியோனே யானே என்று அறிந்த பின்பு என் அறிவாய் நின்ற ஐயன் குணங்குடியானே யதிமோகத் திருநடன மாடுவானே”
என்றெல்லாம் அத்வைத உணர்ச்சிப் பெருக்கில் பாடிக் கொண்டு இருந்ததால் ஏக இறைவன் என்பதாக ஒருவர் இருக்கிறார், அவர்முன் அனைவரும் அடிபணிய வேண்டும் என்கிற இஸ்லாமின் இறைக் கோட்பாட்டிற்கு முற்றிலும் முரணாக அவர் பேசுவதாக இஸ்லாமிய மதத் தலைவர்கள் குற்றம் சாட்டி அவரைப் புறக்கணித்துவிட்டனர். போதாக்குறைக்கு சக்தி, சிவம் எனக் குறியீடுகளாக அவர் பாடலில் தத்துவப் பிரயோகங்கள் நிரம்பியிருந்தது அவரை அந்நியப்படுத்தி விட்டது. எனினும் முஸ்லிம் சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் அவரைக் கொண்டாடத் தவறவில்லை.
மஸ்தான் சாகிப் சென்னை வந்து சேர்ந்தபோது அவருக்கு ராயபுரத்தில் ஒரு ஆசிரமம் (தைக்கா) அமைத்துக் கொடுத்தார் பாவா லப்பை என்கிற வணிகப் பிரமுகர். மஸ்தான் சாகிப் தொண்டியிலிருந்து வந்தவராகை யால் அவர் வசித்த தைக்கா தொண்டியார் தைக்கா என அடையாளம் சொல்லப்பட்டு, காலப்போக்கில் அந்தப் பகுதியே தொண்டியார்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.
குணங்குடி மஸ்தான் 1835 ஆம் ஆண்டு சமாதியடைந்ததையொட்டி அவர் வாழ்ந்த இடமே ஒரு தர்காவாய், நம்பினோருக்கு அடைக்கலமாக இருந்து வருகிறது. சித்த புருஷர் மஸ்தானை இஸ்லாம் மத ரீதியாகப் பிடிவாதமாய்ப் புறந்தள்ளிவிட்ட போதிலும் முஸ்லிம் சமுதாய ஏழை எளிய மக்களும், ஸூஃபிகளை ஏற்கும் மனப்பான்மையுள்ள முஸ்லிம் அறிவாளிகளும் ஹிந்துக்களும் இன்றளவும் தண்டையார்பேட்டை மார்க்கெட் அருகில் உள்ள குணங்குடியார் அடக்கத் தலம் வந்து வணங்கிச் செல்கிறார்கள்.
- ஸ்ரீ கிருஷ்ண ஆலனஹள்ளியின் வனக்கோயில் (தமிழில் ராஜேஸ்வரி கோதண்டம்.) நூல் பார்வை
- வைரமுத்து படைப்புகளில் வாழ்வியல் சடங்குகள்
- சித்தர் பெயரால் சென்னையில் ஒரு பகுதி
- இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் குடும்பத்தலைவி சித்திரிப்பு
- சங்க கால சோழநாட்டு ஊர்கள்
- முள்வெளி- அத்தியாயம் -1
- என் சுவாசத்தில் என்னை வரைந்து
- ‘பெற்ற’ மனங்கள்…..
- பழமொழிகளில் அளவுகள்
- ஜீன்கள்
- நிழல்-பதியம் இணைந்து குறும்படப் பட்டறை
- இந்திய மொழி இலக்கியங்களை பிரெஞ்சு நண்பர்களுக்கு அறிமுகப் படுத்தும் ஒர் வலைப்பூ
- தில்லையில் கள்ள உள்ளம்…
- சோவின் ‘ என்று தணியும் இந்த சுதந்திர தாகம் _ மேடை நாடகம் (நகலச்சு)
- வெறும் தோற்ற மயக்கங்களோ?
- பஞ்சதந்திரம் தொடர் 36 – இரந்துண்ணும் நிலை எப்படி?
- குளவி கொட்டிய புழு
- அணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வரும் தவறான கருத்துக்கள்
- காரைக்குடியில் கம்பன் விழா
- சிந்தனைக்கூடமா ? காசாப்புக்கடையா ?
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 16
- ஆணவம்
- தேவனும் சாத்தானும்
- சொல்லாமல் போனது
- காந்திகிராம ஃபோட்டோ ஒன்று – அம்மா, மாமாஜி படம்
- கொன்றை பூக்கள் உதிரத் துவங்கின…
- உஷாதீபனின் “தனித்திருப்பவனின் அறை” சிறுகதைத் தொகுப்பிற்கு எழுத்தாளர் திரு நரசய்யா அவர்கள் அளித்துள்ள முன்னுரை
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18
- நீலகேசி காட்டும் உயிர்ஓர்மை (அல்லது) முக்கூட்டு மருந்து
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 12) எழில் இனப் பெருக்கம்
- ஷண்முகராஜின் ‘ ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி ‘
- ரஸ்கோல்நிக்கோவ்
- இறையன்பு எழுதிய “ஓடும் நதியின் ஓசை”- விமர்சனம்
- பேனா பேசிடும்…
- என்னவென்று அழைப்பது ?
- ”கீரை வாங்கலியோ…கீராய்…!”
- கலாசாரத் தொட்டில்
- “ஊசியிலைக்காடுகள்”
- முன்னணியின் பின்னணிகள் – 33
- தாகூரின் கீதப் பாமாலை – 5 காதல் பித்து
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி ரெண்டு
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 5