பழமொழிகளில் அளவுகள்

This entry is part 9 of 42 in the series 25 மார்ச் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

பழந்தமிழகத்தில் பல்வேறுவிதமான அளவுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. நீட்டலளவை, நிறுத்தல் அளவை, முகத்தலளவை உள்ளிட்ட அளவுகளுக்குப் பல்வேறுவிதமான பெயர்கள் வழக்கத்திலிருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்தனிப் பெயர்களால் வழங்கப்பட்டு வந்தது. இவ்வளவுப் பெயர்கள் நம் முன்னோர்களின் கணக்கியலறிவிற்குச் சான்றாக அமைந்துள்ளன. இவ்வாறு வழங்கி வந்த அளவுப் பெயர்களைப் பழமொழிகளில் அமைத்து நமது வாழ்விற்குரிய பண்பாட்டு நெறிகளை நமது முன்னோர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

அளத்தல்

நமது முன்னோர்கள் ஒவ்வொரு பொருளையும் அளப்பதற்குத் தனித்தனியான அளவுப் பெயர்களைப் பயன்படுத்தி வந்தனர். நெல் உள்ளிட்ட தானியங்களை அளப்பதற்கு, குறுணி, மரக்கால், பதக்கு, முக்குறுணி, நாழி, போது, ஒரு போது, ஒரு கலம், ஒரு பொதி ஆகிய அளவைப் பெயர்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுள்,

1மரக்கால் – 4 படி

பதக்கு – 2 படி

குறுணி – 1 படி

போது – 8 படி

ஒரு போது – 9 படி

1 கலம் – 12 மரக்கால்

1 பொதி – 60 மரக்கால்

நாழி – 1 உழக்கு(கால்படி)

ஆகிய அளவுகள் பயன்பட்டு வந்தன. இவை முகத்தல் அளவைப் பெயர்கள் என்று வழங்கப்படுவது நோக்கத்தக்கது. முகந்து அளப்பதால் முகத்தல் அளவை எனப்பட்டது.

நூறும் குறுணியும்

நூறு எண்ணிக்கையில் அதிகமான அளவாகும். எவ்வளவு நல்ல பொருளாக இருந்தாலும் அதில் சிறிதளவு அல்லது சிறுதுளி கெட்ட பொருளைக் கலந்து விட்டால் அந்நல்ல பொருள் கெட்டுவிடும். நல்லவர் தீயவர்களுடன் கலந்து பழகினால் அந்நல்லாரும் பண்புகெட்டு தீ நெறியில் சென்றுவிடுவார். இதனை,

‘‘நூத்தக் கெடுத்துச்சாம் குறுணி’’

என்ற பழமொழி எடுத்துரைக்கிறது. நூறு என்பது நூறுபடி அரிசியுடனோ, நெல்லுடனோ குறுணி(ஒருபடி) பதரோ தேவையற்ற பொருளையோ கலந்துவிட்டால் நூறு பொருள்களும் சீர்குலைந்துவிடும். இப்படிழமொழியைப் போன்று,

‘‘ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதும்’’

என்ற வழக்குத்தொடர் அமைந்துள்ளது ஒப்புநோக்கத்தக்கதாகும்.

குறுணி – பதக்கு

குறுணி என்பது ஒருபடி அளவைக் குறிக்கும். இரண்டு படிகள் கொண்டது பதக்கு என்ற அளவுப் பெயரில் வழங்கப்படுகிறது. சிலருக்கு எவ்வளவுதான் நன்மையானவற்றை எடுத்துக் கூறினாலும் அவர் தன்னையும் தன் தவறினையும் திருத்திக் கொள்ள மாட்டார்கள். தவறான வழியிலேயே சென்று கொண்டிருப்பர். பிறர் கூறுவதில் நன்மையான கருத்துக்கள் இருப்பினும் அவற்றைப் புறந்தள்ளிவிடுவர். இவர்களின் இத்தைகய மனப்பண்பினை,

‘‘அமுக்கி அமுக்கி அளந்தாலும் குறுணி பதக்காகாது’’

‘‘கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்காகாது’’

என்ற பழமொழிகள் புலப்படுத்துகின்றன. இப்பழமொழிகளைப் போன்று,

‘‘பாடிப் பாடிக் குத்தினாலும் பதறு அரிசி ஆகாது’’

‘‘பாடிப் பாடிக் குத்தினாலும் பதறு பதறுதான்’’

என்ற பழமொழிகள் அமைந்திருப்பது நோக்கத்தக்கது.

நெல்லைப் படியில் அழுத்தி அழுத்தியோ அல்லது கீழே கொட்டிக் கொட்டியோ அளந்தாலும் இரண்டுபடியாகிய பதக்கு நெல்லாக ஆகாது. ஆகவும் முடியாது. அதுபோல் உள்ளீடற்ற பதறினைப் பாடிப்பாடி வெகுநேரம் உரலில் போட்டுக் குற்றினாலும் அப்பதறானது அரிசியாக ாறாது. பதறாகவே இருக்கும். அதுபோன்றே தீயவர்களம், தீய மனம் படைத்தோரும் எவ்வளவு தான் நல்லவர்கள் நல்ல கருத்துக்களைக் கூறினாலும் அவர்கள் திருந்த மாட்டார்கள் என்ற கருத்தினை இப்பழமொழிகள் எடுத்துரைக்கின்றன.

மகாபாரதத்தில் வரும் துரியோதனன் தீய மனம் படைத்தவன். அவன் பீஷ்மர், துரோணர், கண்ணன் உள்ளிட்ட பலரும் பல வகையிலும் நல்ல கருத்துக்களைக் கூறித் திருந்தி வாழ்வாயாக என்று கூறியபோதும் அவன் தனது மனநிலையோ, தீய எண்ணத்தையோ, செயல்களையோ கைவிடவில்லை. மாறாக மேலும் மேலும் தீயனவற்றைச் செய்து கொண்டே இருந்தான். முடிவில் தான் மட்டுமல்லாது தன்னைச் சார்ந்தவரின் அழிவுக்கும் காரணமாக அமைந்தான்.

இராவணனுக்குப் பலர் நல்லறிவுரைகளைக் கூறியபோதும் அவன் அவற்றை ஏற்றுக் கொள்ளாது பிடிவாதமாகவே இருந்தான். அதனால் அவனும் அவனது குலமும் அழிந்து போயினர். நல்லவர்கள் கூறும்போது அவற்றை ஏற்றுக் கொண்டு தீயனவற்றைக் கைவிட்டு நல்வாழ்வு வாழ வேண்டும் என்று அளவு குறித்த பழமொழிகள் தெளிவுத்துகின்றன எனலாம்.

சாண் – முழம்

கையை விரித்து அதில் கட்டைவிரலின் நுனியில் இருந்து சுண்டுவிரல் நுனிவரை உள்ளதுவரை ஒரு சாண் என்றும் விரல்களின் நுனிப்பகுதியிலிருந்து முழங்கைவரையிலும் உள்ள அளவு ஒரு முழம் என்றும் வழக்கில் மக்களால் வழங்கப்படுகிறது. இவ்வளவுகளை வைத்து வாழ்க்கையின் பல்வேறு சூழல்களை நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.

சிலர் மிகவும் கடினமாக உழைப்பர். ஆனால் அவர்களது வாழ்வு முன்னேற்றமில்லாது துன்பம் நிறைந்ததாகக் காணப்படும். உழைத்தாலும் அதற்கேற்ற உயர்வு கிடைக்காது இழப்பே அதிகமாக இருக்கும். துன்பத்திற்கு மேல் துன்பமாக அவர்களைத் தாக்கும்போது அவர்கள் மனம் நொந்து,

‘‘சாண் ஏறுனா முழம் சருக்குது’’

என்று கூறுவர்.

சாண் என்பது சிறிய அளவு. முழம் பெரிய அளவு கொண்டது. சிறிது முன்னேற்றம் காணப்பட்டால் இழப்பு அதைவிட இருமடங்காக ஏற்படுகிறது என்பதையே மேற்குறித்த பழமொழி எடுத்துரைக்கிறது. இதனை வழக்கில் ஒருபடி மேலே ஏறினால் பத்துப்படி கீழே இஙை்க வேண்டியுள்ளது என்றும் மக்கள் வழங்குகின்றனர்.

உடம்பில் எத்தனை உறுப்புகள் இருந்தாலும் தலையின்றேல் அதனை யாரும் முழுமையான உடல் என்று கூற மாட்டார்கள். மாறாக முண்டம் என்று கூறுவர். மேலும் உடலுறுப்புகளில் தலையே முதன்மையான உறுப்பாக விளங்குகிறது. தலைபோன்றே சமுதாயத்திலும் சிலர் முதன்மையாக இருந்து அனைத்தையும் செயல்படுத்துவர். அவர்கள் இல்லை என்றால் அச் செயல் சிறப்படையாது. இதனை,

‘‘எண்சாண் உடம்புக்குத்தலையே பிரதானம்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு உயிரின் உடலும் அவ்வுயிரின் கையளவில் எட்டுச்சாண் அளவு இருக்கும். எட்டுச் சாண் உடம்பில் ஒரு சாண் அளவுள்ள தலையே முதன்மையானதாக விளங்குகிறது. உடலை இயக்கும் மையச் செயலகமான மூளை இத்தலைப்பகுதியிலேயே அமைந்துள்ளது.

தலையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும் இப்பழமொழி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தலைமை சரியாக இருந்தால் மற்றவர்கள் அனைவரும் சரியாக இருப்பர். தலைமை சரியில்லையென்றால் அடுத்துள்ள அனைத்தும் சரியற்று அமைந்துவிடும். தலையில் உள்ள மூளைப்பகுதி சரியாக இல்லையென்றால் பிற உறுப்புகளும் சரியாக இயங்காது என்பதை இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.

சமுதாயத்தில் ஆண், பெண் என்ற இருவர் சேர்க்கையால் உருவானது. ஆணும், பெண்ணும் இணைந்ததே உலகம். இதில் ஆண் உயர்வு, பெண் தாழ்வு என்ற பாகுபாட்டிற்கே இடமில்லை. ஆனால் இன்றைய சமுதாயத்தில் ஆண் பிள்ளையையே விரும்புகின்றனர். ஆண் பிறந்தால் வரவு என்றும் பெண் பிறந்தால் செலவு என்றும் கருதுகின்றனர். ஒருவருக்குக் குழந்தை பிறந்தால் அவரிடம் சென்று,

‘‘என்ன வரவா? செலவா’’

என்று கேட்கின்றனர். இன்னும் சிலர் ஒருபடி மேலேபோய்,

‘‘குழந்தை உனக்கா? ஊரானுக்கா?’’

என்று கேட்கின்றனர். உனக்கா என்றால் ஆண் குழந்தை என்றும், ஊரானுக்கா எனில் வேறு இடத்திற்குச் சென்று வாழக்கூடிய பெண்குழந்தை என்றும் பொருளாகும். இதனைத் தவறாகவும் பொருள் கொள் வாய்ப்புள்ளது.

இதனால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகின்றது. ஆண் குழந்தைகள் தான் உயர்வு என்ற மனப்பான்மை சமுதாயத்தில் நிலவுகிறது. இதனை,

‘‘சாண்பிள்ளை யானாலும் ஆண்பிள்ளையில்ல’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. சிறுவனாக , சிறு குழந்தையாக இருந்தாலும் சமுதாயப் பழக்க வழங்கத்தில் ஏதேனும் உறவு முறைகளில் செய்முறை செய்ய வேண்டி இருந்தால் ஆண் குழந்தை வயதில் சிறியவனாக இருந்தபோதிலும் அவன் கையில் கொடுத்துச் செய்யுமாறு கூறுவர். இவ்வாறு செய்வதே மக்களிடத்தில் பெரு வழக்காக உள்ளது என்பதனை இப்பழமொழி தெளிவுறுத்துகிறது. இப்பழமொழி வழக்குத் தொடர் போன்று காணப்பட்டாலும் அஃதன்று. பழமொழியே ஆகும். ஆண் வர்க்கத்தினை உயர்வாகக் கருதக் கூடிய சமுதாயத்தின் உளநிலையை இப்பழமொழி சித்திரிக்கின்றது.

தலைக்கு மேலே வெள்ளம்

வாழ்வில் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் பிரச்சனையே வாழ்க்கையாக இருந்தால் அது வாழ்க்கையாக இராது. வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாவிட்டாலும் வாழ்வு சீராகாது. சுவைக்காது. ஒருவர் கவனமுடன் செயல்பட்டாலும் அவரையும் மீறி பிரச்சனைகள் தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. அதனைக் கண்ட அவர் இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்று பிரச்சனைகளை அதன் போக்கில் விட்டுவிடுவர். இது பல இடங்களிலும் நடைபெறும் ஒன்றாகும். இத்தகைய நிலையை,

‘‘தலைக்கு மேல வெள்ளம் போனபின்னால

சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன?’’

என்ற பழமொழி உணர்த்துகிறது. சிக்கல்கள் மிகுதியாக ஏற்பட்ட பின்னால் சிறிய அளவுள்ள (சாண்) பொருளோ, பெரிதாகவே(முழம்) உள்ள பொருள் இழப்போ ஏற்பட்டால் என்ன ஆகிவிடப் போகிறது என்பதனைஇப்பழமொழி தெளிவுறுத்துகிறது.

முழம்

பொருள் உள்ளவனே பிறருக்குக் கொடுக்கிறேன் என்று கூற முடியும். பொருள் இல்லையெனில் வெறும் வார்த்தையினால் நான் தருகிறேன் என்று கூறுவதில் எவ்விதப் பொருத்தமுமிராது. அதுபோலக் கையில் பொருள் இருந்தால்தான் நாம் வாங்க நினைக்கின்ற பொருள்களைக்கூட வாங்க முடியும். இல்லையெனில் எதுவும் வாங்க முடியாது. பொருள் இன்றி வெறும் கையுடன் இருந்தால் மனிதனால் எதனையும் வாங்கவோ, கொடுக்கவோ இயலாது. இதனை,

‘‘வெறுங்கையில முழம் போடமுடியுமா?’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது.

பூவோ, வேறு ஏதேனும் ஒன்றிருந்தால் மட்டுமே அளவெடுக்க முடியும். இல்லையெனில் எச்செயலையும் செய்ய இயலாது. பொருள் இல்லை என்றாலும் இதுபோன்ற நிலையே ஏற்படும். அதனால் நேரிய வழியில் பொருளை உழைத்துச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கை மகிழ்வுடன் இருக்கும். பொருளாதாரத்தின் இன்றியமையாத தன்மையை இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர் எடுத்துரைத்துள்ளனர்.

குறுணி

அனைவராலும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள இயலாது. அவரவர் சக்திக்கு ஏற்பவே அவர்கள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வர். உதாரணத்திற்கு ஒருவர் சிறிதளவே உண்ணும் பழக்கம் உடையவரெனில் அவரை அளவுக்கு அதிகமான உணவை உண்ணுமாறு கூறினால் அவர்களால் அதனை ஏற்றுக் கொள்ள இயலாது. அதனால் அதனை வேண்டாம் என்று மறுப்பார். அதுபோல் ஒருவரால் செய்ய இயன்ற செயலை மட்டுமே செய்யுமாறு கூற வேண்டும். மாறாக இயலாத செயலைச் செய்யுமாறு வற்புறுத்தக் கூடாது. இதனை,

‘‘கொள்ளாதவன் குண்டியில குறுணிய வச்சுத் திணிச்ச மாதிரி’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

கொள்ளாதவன் என்பது ஏற்றுக் கொள்ளாதவன் அல்லது செயலைச் செய்ய இயலாதவன் என்று பொருள்படும். குறுணி என்பது சிறிய அளவு அதைவிடச் சிறிய அளவையே கொள்ள இயலாதவனிடம் குறுணியை ஏற்றுக் கொள் என்று திணித்தால் ஏற்றக் கொள்ளமாட்டான். சிறிதளவு சுமையைத் தாங்க இயலாதவன் தலையில் மேலும் சுமையை ஏற்றி வைத்தாலும் அவனால் சுமக்க முடியாது. ஒருவனால் என்ன செய்ய இயலுமோ அதனை மட்டுமே செ்யதல் வேண்டும் என்ற வாழ்வியல் உண்மையை இப்பழமொழி விளக்குகிறது.

மாப்பவுன்

வீசை, மா, பலம், தோலா, எடை(பத்துக் கிலோ கொண்டது), கூறு, போன்றவை நமது முன்னோர்கள் பயன்படுத்திய நிறுத்தல் அளவைகளாகும். இங்ஙனம் நிறுத்தலளவைகள் பலவகையாக இருந்தாலும் ஒவ்வொரு பொருளையும் அளக்கும் அளவைகள் தனித்னியாக வழக்கத்திலிருக்கின்றன. தங்கமாகிய பொன்னை, பவுன், சவரன், ன்றிமணி, மா என்ற அளவுகளாலும் அளப்பர்.இந்த அளவுகளை வைத்தும் சிலரின் பண்புகளை நம்முன்னோர்கள் விளக்கிக் கூறியுள்ளனர். எந்த வேலையாக இருப்பினும் சிலர் அதில் சிறிதளவாவது தனக்குரிய லாபத்தினைப் பார்த்துவிடுவர். தனது உறவினர், நண்பர் என்றெல்லாம் அவர் பார்க்க மாட்டார். தமக்கு லாபம் கிடைத்தால் போதும் என்று அவர் செயல்படுவார். இத்தகையோரின் பண்பினை,

‘‘தாய்ப்பவுன் ஆனாலும் தட்டான் மாப்பவுன் எடுப்பானாம்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. ‘பவுன்’ என்பது 8கிராம் ஆகும். மா என்பது மிகச் சிறிய அளவாகும். தாயினுடைய தங்கமாக இருந்தாலும் அதில் சிறிதளவு தங்க வேலை செய்பவர் (தட்டான் – தங்கத்தைத் தட்டுபவர், தங்கவேலை செய்பவர்) எடுத்துவிடும் இயல்பினை உடையவராவார். எதிலும் லாபம் பார்க்கும் பண்புடையவர்களை இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் காட்சிப்படுத்துவது சிறப்பிற்குரியதாகும்.

காதம்

நிலத்தை அளப்பதற்குக் குழி, வேலி, காணி, மா, மாகாணி, குறுக்கம், ஓராள் நடவு, என்ற அளவுப் பெயர்கள் மக்களிடையே வழங்கப்பட்டு வருகின்றன. நீண்ட தொலைவை, மைல், ஒருகல், ஒருகாதம், காவதம், ஒரு பர்லாங் போன்ற அளவுகளில் நமது முன்னோர்கள் குறித்தனர். மைல், கல் என்பன பொது அளவுகள் ஆகும். இதில் ஒரு பர்லாங் என்பது கூப்பிடுதூரம் என்ற அளவிலும் வழங்கப்படுகிறது. காதம் என்பது நீண்ட தூரத்தைக் குறிக்கும் அளவாகும். இக்காதம் என்பதைக் காவதம் என்றும் கூறுவர். இவ்வளவுகள் தற்போது வழக்கில் மக்களால் வழங்கப்படவில்லை. பர்லாங், ஒரு கல் என்ற அளவுகளே பெரும்பாலும் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒருவன் அடக்கத்துடன் வாழ்தல் வேண்டும். அப்பொழுதுதான் அவன் வாழ்வில் பெருமை அடைவான். அடக்கமின்றி நடந்தால் சிறுமையே அடைவான். இதனை,

‘‘காலால நடந்தால் காதவழி போகலாம்

தலையால நடந்தால் போக முடியுமா?’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.

இயல்பாகக் கால்களால் நடந்து போனால் நெடுந்தொலைவு வரை போகலாம். தலைகீழாக நடந்து சென்றால் சிறிது தூரம் வரைகூடப் போக முடியாது. அடக்கத்துடன் வாழ்ந்தால் நீண்ட நாள் புகழோடு வாழலாம். ஆனால் அடக்கமின்றி வாழ்ந்தால் நீண்ட நாள் வாழ முடியாது என்ற வாழ்க்கைத் தத்துவத்தை எளிமையாக இப்பழமொழி புலப்படுத்துகிறது.

அளவுகள் பொருள்களை அளப்பதற்கு மட்டும் பயன்படவில்லை. வாழ்க்கையையும் அளந்தறிவதற்கு உறுதுணையாக உள்ளன. அளவுகள் வாழ்க்கைத் தத்துவங்களை எளிமையாக விளங்குவதற்குாக முன்னோர்களால் பழமொழிகளில் எடுத்தாளப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. எதிலும் அளவுடன் வாழ்ந்து அளவற்ற மகிழ்வான வாழ்வை வாழ்வோம்!

Series Navigation‘பெற்ற’ மனங்கள்…..ஜீன்கள்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *