நிர்மல்
சிறு வயதிலிருந்தே தொடர்ந்து வரும் சுபாவமாதலால் காரணமெல்லாம் தெரியாது. எப்போதாவது பொது இடத்தில், பின்னிருந்து யாராவது தன் பெயரைச் சொல்லி அழைத்தால், திக்கென்றிருக்கும் அவனுக்கு. யாரென்று திரும்பிப் பார்த்தால் யாராவது நண்பர்களாகத் தானிருக்கும். அவ்வளவு ஏன், தெருவில் யாரோ யாரையோ ‘ஏய்!’ என்று ஒரு குரல் கொடுத்தால் போதும். தன்னைத் தான் கூப்பிடுகிறார்களோ என்று பயம் சூழ்ந்து கொள்ளும். பின்னால் திரும்பிப் பார்க்கவே அச்சப்படுவான். அன்று அப்படி யாரும் அவனை அழைக்கவில்லை. ஆனாலும் நடப்பவை வழமைக்கு மாறாக விசித்திரமாகவே இருந்தன.
எப்போதுமே மற்றவர்களின் கவனம் தன் மீது படுவதை அவன் விரும்புவதில்லை. சூரிய ஒளி படும்போது கண்கள் கூசுமே அதுபோல உணர்வான். பூச்சியைப் போல அறைக்கு வருவதும் போவதுமாக இருப்பான். வாழ்க்கை, தேதிகள், கிழமைகளைக் கூட அறிந்துகொள்ளத் தேவையில்லாதபடிக்குச் சீராகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் அன்று காலையிலேயே பொதுவெளியில் துகிலுரிக்கப்பட்டுவிட்டாற்போல் இரு முறை நிற்கப் போகிறோம் என அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
அறையிலிருந்து கிளம்பி கொஞ்ச தூரம் தான் சென்றிருப்பான். பைக் பஞ்சர். அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் எல்லாரும் இவனையே பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது. குனிந்தபடியே வண்டியைத் தள்ளிச் சென்று தன் அறைமுன் நிறுத்திவிட்டு நடக்கத் தொடங்கினான்.
பேருந்தில் சரியான கூட்டம். ஒருத்தரையொருத்தர் நெருக்கிக் கொண்டு நின்றிருந்தனர். கால்சட்டைப் பையிலிருந்த பயணச் சீட்டை ஆயிரத்தெட்டாவாது தடவையாக தொட்டுப் பார்த்துக் கொண்டான். நான்கைந்து பேர் அவனை ஒட்டிக் கொண்டு நின்றிருந்தனர். எறும்பு புற்றின் மேல் நின்றுகொண்டிருப்பது போலிருந்தது. உடம்பு முழுக்க எறும்புகள். எப்போது இறங்கிப் போகலாம் என்றிருந்தது.கொஞ்ச தூரம் தள்ளி நின்றிருந்த ஒருவன் இவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
கடைசி முறை அவன் இவ்வளவு கூட்டத்தில் நின்றிருந்தபோது, ரயிலில் இருந்தான். இடுப்பில் ஏதோ குத்திக் கொண்டிருப்பதாய்த் தோன்ற, திரும்பிப் பார்க்கையில், பின்புறம் நின்றிருந்தவனின் குறி விறைத்திருந்தது. பதறியடித்து அடுத்த ரயில் நிலையத்தில் வண்டியிலிருந்து இறங்கி ஓட ஆரம்பித்தான். நினைக்கையிலேயே அருவருப்பாக இருந்தது. அந்த நிகழ்வைப் பற்றிய சிந்தனை பிடிக்காததால் வேறெதைப் பற்றியாவது மனதைச் செலுத்த வேண்டுமென்று நினைத்துக் கொண்டான். சற்று முன்னே ஒரு பெண் அமர்ந்திருந்தாள். பார்க்க சுகுணாவைப் போலவே இருந்தாள். சுகுணாவைப் பற்றிய நினைவு மனதை அமைதியடையச் செய்தது. “பெண் பற்றிய நினைவுகள்! என்னவெல்லாம் செய்கின்றன!”, என்று ஆச்சரியப்பட்டான். “விதவிதமாக அணியப்படும் ஆடைகளும் , நண்பர்களுடனான அரட்டைகளிலிருக்கும் நையாண்டிகளும், கணினி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கிச்சுகிச்சு மூட்டும் கருத்துக்களும், சாப்பிடும் உணவு வகைகளும், பண்டிகைக் கொண்டாட்ட முறைகளும், நடந்துகொள்ளும் விதங்களும், பேச்சு மொழியும், கேட்கும் இசையும், சிந்தனைகளும், நோட்டங்களும் மற்றெல்லாமுமே அவற்றின் பின்னே பெண்ணை அடைவதைப் பற்றிய கற்பனைகளைக் காரணமாகக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான இளைஞர்களின் ஒரு நாளைய முதல் மற்றும் இறுதி சிந்தனைகள் ஏதாவது ஒரு பெண்ணைப் பற்றியதாக இருக்கக் கூடும். ஒருவேளை நம் எதிர்பார்ப்புக்கேற்ப ஒரு பெண் கிடைத்து விட்டால் முப்பது நாட்களுக்குப் பின் நம்மில் பாதி இளைஞர்களுடைய சிந்தனைகளாவது இந்தப் பெண்களைத் தாண்டிச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதுவும் உத்தரவாதமில்லை.” தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். தற்செயலாகப் பார்த்தவன் எதிரே நின்றிருந்த அந்த ஆள் இன்னும் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டு சிறிது அதிர்ச்சியானான். அவன் இறங்கவேண்டிய நிறுத்தம் இன்னும் இரண்டு நிறுத்தங்கள் தள்ளி இருந்தது. இருந்தாலும் பேருந்து கிளம்ப்பும் நேரத்தில் சட்டென முடிவெடுத்தவனாய் ஓடிச் சென்று இறங்கி விட்டான். மெதுவாக நடக்கத் தொடங்கினான். சட்டை வியர்வையில் நனைந்திருந்தது. கொஞ்சதூரம் சென்றதும் மனதுக்குள் சிரித்துக் கொண்டான். “பைத்தியக்காரத் தனமாக, யாரோ ஒருவனின் பார்வைக்கு பயந்து இறங்கி வந்துவிட்டேனே! நான் செய்ததை நண்பர்களிடம் கூடப் பகிர்ந்து கொள்ள முடியாதே”, என்று நினைத்துக் கொண்டான். திடீரென அந்த விபரீத எண்ணம் தோன்றியது. “ஒரு வேளை, இப்போது அவன் பின்னால் வந்து கொண்டிருப்பானோ?”. பின்புறம் திரும்பிப் பார்க்கவே அச்சமாக இருந்தது. கொஞ்ச நேரமாக அமைதியாய் இருந்த மனது மீண்டும் படபடக்கத் தொடங்கியது. “சீய்! என்ன இது, குழந்தைத் தனமாக நினைத்துக் கொண்டு!”, என்றபடி திரும்பிப் பார்த்தான். அந்த ஆள் இவனைக் கண்ணிமைக்காமல் பார்த்தபடியே பின்னால் வந்து கொண்டிருந்தான்.
காதின் மிக அருகே காலை பதினொரு மணிச் சங்கு ஊதப்படுவதைப் போல ‘கொய்ங்ங்ங்’, என்று கேட்டது. நெஞ்சு அலையலையாய் விம்மி அடங்கியது. இரண்டு நாட்கள் முன்பு, வேகமாக பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, சட்டென்று சாலையின் குறுக்கே ஓடி வந்து வண்டியை மறித்த போக்குவரத்துக் காவலர் இதே உணர்ச்சியைக் கிளப்பியதாக நினைத்துக் கொண்டான். அவனையும் அறியாமல் நடையின் வேகம் கூடி இருந்தது. “தன் பாட்டுக்குச் சாலையில் சென்று கொண்டிருக்கும் ஒருவனைப் பார்த்து நான் ஏன் காரணமின்றி அச்சப்பட வேண்டும்”, என்று கூறி மனதைத் திடப்படுத்த முயன்றான். ‘இன்னும் ஒரு மைல் தூரம் தானிருக்கும். வேகமாய் நடந்தால் இன்னும் பத்துப் பதினைந்து நிமிடத்தில் சென்று விடலாம்.’ மறுபடியும் சிந்தனையை வேறு எதிலாவது செலுத்த முயன்றான். “சுகுணா அலுவலகம் வந்திருப்பாள். ராகவனும் வந்திருப்பான். இன்னும் அரை மணிநேரத்தில் தேநீர் குடிக்கப் போக வேண்டி வரும். அதற்கு முன் குறைந்தபட்சம் மின்னஞ்சல்களை மட்டுமாவது படித்து பதிலளித்து முடித்து விடவேண்டும்.” சிந்தனை எங்கெங்கோ ஓடிக் கொண்டிருந்தாலும், டைம்பாம் ‘டிக்’கிக் கொண்டிருப்பதைப் போல உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகப் பதற்றம் அதிகரித்துக் கொண்டிருந்தது.
தன் மனதின் போக்கை நினைத்துச் சிரித்துக் கொண்டான். கையில் பத்து காசு இல்லை. மூன்று மாதங்களாக வங்கியிலிருந்து கடன்காரர்கள் நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாட்களாக உடம்பு சரி இல்லை. வீட்டின் நிலை பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. இத்தனை பெரிய பிரச்சினைகளையும் முந்திக் கொண்டு வந்து நின்று, எல்லாவற்றையுமே அரை மணி நேரமாக மறக்கடித்து விட்டிருக்கிறது இந்தச் சிறிய சிக்கல். தன்னையுமறியாமல் பின்னால் வருபவனைப் பற்றிச் சிந்திக்கத் துவங்கிவிட்டதை உணர்ந்ததும் மீண்டும் மனதை அவிழ்த்துவிட்டான். அருகிலிருந்த டீக்கடையில் தொங்கிக் கொண்டிருந்த செய்தி விளம்பரத்தை நோட்டம் விட்டபடியே நடந்தான். “மத்திய அமைச்சர் கல்பனாத் ராய் சென்னை வருகை.” “கல்பனாத் ராய்”.
“மறுபடியும் திரும்பிப் பார்க்கலாமா?”, என யோசித்தான். தைரியம் வரவில்லை. நடையின் வேகத்தை இன்னும் கொஞ்சம் கூட்டினான். ஏறக்குறைய ஓட ஆரம்பித்திருந்தான். ஒன்றிரண்டு பேர் விசித்திரமாகப் பார்ப்பது போலிருந்தது. முந்தைய நாள் சாலையைக் கடக்க ஓடுகையில், பேனா நடுரோட்டில் விழுந்து விட, திரும்ப ஓடிப் போய் எடுத்தால் எல்லாருடைய கவனத்திற்கும் ஆளாக வேண்டிவருமோ என நினைத்துத் திரும்ப வந்தது மனதில் மின்னி மறைந்தது. மூச்சு வாங்கியது. “கல்பனாத் ராய்”.
அலுவலகத்தை நெருங்கிவிட்டிருந்தான். சட்டென புதிய சிந்தனை ஒன்று பிறந்தது. “இது கனவா?”. திடுக்கிட்டு விழித்து, அதுவரை நிகழ்ந்து கொண்டிருந்தவையெல்லாம் கனவென்றிருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டான். தன் நடத்தையில் அது எந்த விதமான மாறுதலைத் தோற்றுவிக்கும் என்று யோசித்தான். “இந்த நிகழ்வு ஒரு கனவென்றால், என்னைப் பின்தொடர்ந்து கொண்டிருப்பது மனசாட்சியாகத் தானிருக்கும். இந்தக் கனவின் முடிவில், என்னிடமிருக்கும் ஒரு தவற்றையாவது திருத்திக் கொள்வேன்.”
“கல்பனாத்ராய்”.
அன்றுவரை வாழ்க்கையில் என்ன தப்பெல்லாம் செய்திருக்கிறான் என்று யோசனை செய்யத் தொடங்கினான். பெரிதாக ஒன்றும் இருந்ததாகத் தெரியவில்லை, சிறு சிறு பொய்கள், கோபங்கள், பயங்கள், வெளிக் காட்டிக் கொள்ளாத பொறாமைகள், எல்லாரிடத்தும் இருக்கும் அளவேயான தன்முனைப்பு – இவற்றைத் தவிர. தீவிரமாக யோசித்தபின் இவ்வரிசையில் மேலும் ஒன்று. கொஞ்சம் சுயநலம். “சுயநலம்!”, என்றதும் சட்டென உரைத்தது. சாலையில் இப்படி ஒருத்தன் இவனைத் துரத்திக் கொண்டிருக்கும்போதும் ஆங்காங்கே நின்றிருந்த மனிதர்கள் என்னவென்று கூடக் கேட்காமல் வேடிக்கை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவ்வளவு பேருக்கு நடுவே சென்றுகொண்டிருக்கும்போதும் அவனைத் தனிமை சூழ்ந்து கொண்டது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. திருவிழாவில் வழிதவறிப் போய்விட்ட குழந்தை தன் தாயைத் தேடுவதைப் போல, சுற்றும் முற்றும் கண்கள் அலைந்தன. அவர்களில் யாராவது ஓடிவந்து அவனை மீட்டு விட மாட்டார்களா எனும் ஏக்கம் இருள் போன்று படர்ந்திருந்தது. அவன் பார்வை அங்கே சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த ஒரு பெண்மணியின் மீது நின்றது. அவளும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. “என்னது இது?” என்கிற பொருள்பட எதையோ அவள் உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். கறுப்பாகவும், உடல் வற்றிப்போயும், முகம் முழுக்கப் பருக்களோடும் காட்சியளித்தாள். கையில் கிழிந்த பை ஒன்றை வைத்திருந்தாள். முகத்தில் கஷ்டப்படும் மனிதர்களுக்கே உரிய அழகு குடிகொண்டிருந்தது. சாதாரண நாளில் அந்தப் பெண்ணை அவன் கவனித்திருக்கக் கூட வாய்ப்புகள் குறைவு. அன்று ஏனோ ஓடிச் சென்று அவள் கால்களைக் கட்டிக் கொண்டு, கதறியழ வேண்டும் போலிருந்தது. அவன் கண்கள் அவளை நோக்கி, தன்னைக் காப்பாற்றச் சொல்லிக் கெஞ்சின. அவள் தன்னைப் போல சுயநலம் கொண்டவளாக இருக்கமாட்டாள் எனத் தீர்க்கமாக அவன் மனம் நம்பியது. ஆனாலும் வெளிப்படையாக அவளிடம் உதவி கேட்கக் கூச்சமாக இருந்தது. ஒருவேளை அந்தப் பெண்மணி இவனுடைய நிலைமையில் இருந்தால் உதவியிருப்பானா என்று நினைத்துப் பார்க்கும்போது, தன் மீதே கோபம் கோபமாக வந்தது. “அவன் ஏன் காரணமில்லாமல் உன்னைத் துரத்துகிறான்”, எனத் தொடங்கி, “உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சினையோ! நான் உங்கள் இருவரில் நான் யாரை ஆதரிப்பது?”, எனத் தொடர்ந்து, “என்ன சிக்கலாயிருந்தால் எனக்கென்ன? உன்னை மீட்கப் போய் நான் எதிலாவது மாட்டிக் கொண்டால்? நான் உண்டு என் வேலையுண்டு என்றிருக்கிறேன். ஆளை விடு!”, என்று கழன்று கொண்டிருப்பான். இவ்வாறாகச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே அவனையுமறியாமல் அவளைத் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டிருந்தான்.
“கல்பனாத்ராய்”.
பின்னால் திரும்பிப் பார்த்தான். பின்தொடர்ந்து கொண்டிருந்தவன் மிக அருகே வந்து விட்டிருந்தான். வேறு வழியின்றி, கண்களில் நீர்வழிய, திபுதிபுவென ஓட ஆரம்பித்தான். இப்போது யாரும் பார்ப்பார்கள் என்ற கூச்சம் இல்லை. மானத்தை விடப் பிழைத்திருத்தல் முக்கியமாகப் பட்டது. சாலையில் கந்தலான உடைகளுடன் காண்பவர்களிடமெல்லாம் கெஞ்சிக் கெஞ்சிப் பிச்சையெடுத்துக்கொண்டிருப்பவர்கள் மனக்கண்ணில் தோன்றி மறைந்தார்கள். பின்கழுத்தில் துரத்திக் கொண்டிருப்பவனின் மூச்சுக் காற்று விழுந்துகொண்டிருப்பதாய்த் தோன்றியது. அப்போதுதான் கவனித்தான். உதடுகள் பதற்றத்தில் “கல்பனாத்ராய்”, என்ற வார்த்தையைத் திரும்பத் திரும்ப முணுமுணுத்துக் கொண்டிருந்தன.
சற்று தொலைவில் ஓடி வந்து கொண்டிருக்கும்போதே அலுவலக வாயிலில் நின்றிருந்த காவலாளி விசித்திரமாகப் பார்த்தான். வேறு யார் யார் தன்னை வெறித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்க நேரமில்லை. கதவை நெருங்கியதும் நுழைவு அட்டையைக் காண்பிக்க, கதவு திறந்து கொண்டது. இவனையுமறியாமல் மிருகத்தைப் போலக் கத்திக் கொண்டே உள்ளே நுழைந்தான். இனி வேறு வழியில்லை என நினைத்த நொடியில் மனதில் ஆழ்ந்த அமைதி ஏற்பட்டது. இனி தன் கையில் எதுவுமில்லை எனத் தெளிவானது. மனதிலிருந்த பயம் சட்டென விலகியது. படபடப்பு இல்லை. ஆழ்கடலிலிருப்பது போன்றதொரு அமைதி. திரும்பிப் பார்த்தான். துரத்தி வந்தவன் இவன் மீது பாய்ந்தான். இவனைத் தரையில் தள்ளி, மேலே ஏறி அமர்ந்து, கன்னங்களில் மாறி மாறி அறைந்துகொண்டிருந்தான். காட்சிகள் கறுப்பு வெள்ளையில் தெரியத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாகக் கலக்கமடந்தன. கண்கள் கலங்கியதன் காரணமாக இருக்கலாம். இரண்டு மூன்று காவலாளிகள் ஓடிவந்து அவனைப் பிடித்தனர். “யாரு சார் நீங்க? எதுக்கு சார் அடிக்கறீங்க?””எனக்கு அவன் காசு தரணும் சார். தரணும்.””காசா?” எல்லாரும் என்னைப் பார்த்தனர். நான் விழித்தேன். அவர்களில் ஒருவர் அவனிடம் திரும்பி ,”எவ்வளவு சார் தரணும்?”, என்றார். கொஞ்சம் தடுமாறியவன், “பன்னெண்டு ரூபா தரணும் சார். இல்ல, பதிமூணு.” “என்னது? பதிமூணு ரூபாயா?”, என்றார் மற்றொரு காவலாளி. “ஆமா நீயும் தான் பதினைஞ்சு ரூபா தரணும்”, என்று அவர் மேல் பாய்ந்து நான்கு அறைகள் வைத்தான். எல்லாரும் ஓடிப் போய் அவனைப் பிடித்து இழுத்துச் சென்றனர். ஏதோ முணுமுணுத்துக் கொண்டே சென்றான். இவன் இன்னும் தரையில் தான் கிடந்தான். இப்போது தான் ஒவ்வொரு முகமாகப் பார்க்க ஆரம்பித்தான். கண்கள் ஒரே முகத்தைத் தான் தேடின. சுகுணா!அவள் கூட்டத்தில் ஒரு ஓரமாக நின்றிருந்தாள். முகத்தில் ஒரு ஏளனச் சிரிப்பு. கைகள் வாயைப் பொத்திச் சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தன.
நொடியில் மனதில் அவளைப் பற்றிக் கொண்டிருந்த தேவதைப் பிம்பம் உடைந்தது. மனதிலிருந்த ஏக்கமும், தவிப்பும் சுய எள்ளலாக மாறின. அங்கிருந்தவர்கள் முன்பு அம்மணமாக நிற்பதைப் போன்றிருந்தது. எக்காரணம் கொண்டும் அவள் முன் அழக்கூடாது என்று சபதம் செய்துகொண்டான். ஆனாலும் கண்களில் சாரை சாரையாக வழிந்துகொண்டிருக்கும் நீரைக் கட்டுப் படுத்துவதொன்றும் அவ்வளவு சுலபமாக இல்லை. மெதுவாக எழுந்து நின்றான். முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டான். எல்லாரும் பிணங்களைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தனர். தூணின் பின்னால் ஒளிந்து நின்றுகொண்டிருந்த ராகவன் மெதுவாக அருகில் வந்தான். “என்னடா ஆச்சு?”, என்று அப்பாவியாய்க் கேட்டான். “இது ஒரு விளையாட்டு மச்சி, என் முறை முடிஞ்சுது. அடுத்து நீ ஓடுவியாம், அந்த ஆள் தொரத்துவானாம். ஆரம்பிக்கலாமா?”, என்றான் இவன். திகைத்துப் போன ராகவன், பின் மெதுவாகச் சிரிக்க முயற்சித்தான். எல்லாரும் முணுமுணுத்துக்கொண்டே, அவரவர் இருக்கைக்குப் போக, நண்பர்கள் இருவரும் தேநீர் அருந்தச் சென்றார்கள்.
– நிர்மல்
- ஸ்ரீ கிருஷ்ண ஆலனஹள்ளியின் வனக்கோயில் (தமிழில் ராஜேஸ்வரி கோதண்டம்.) நூல் பார்வை
- வைரமுத்து படைப்புகளில் வாழ்வியல் சடங்குகள்
- சித்தர் பெயரால் சென்னையில் ஒரு பகுதி
- இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் குடும்பத்தலைவி சித்திரிப்பு
- சங்க கால சோழநாட்டு ஊர்கள்
- முள்வெளி- அத்தியாயம் -1
- என் சுவாசத்தில் என்னை வரைந்து
- ‘பெற்ற’ மனங்கள்…..
- பழமொழிகளில் அளவுகள்
- ஜீன்கள்
- நிழல்-பதியம் இணைந்து குறும்படப் பட்டறை
- இந்திய மொழி இலக்கியங்களை பிரெஞ்சு நண்பர்களுக்கு அறிமுகப் படுத்தும் ஒர் வலைப்பூ
- தில்லையில் கள்ள உள்ளம்…
- சோவின் ‘ என்று தணியும் இந்த சுதந்திர தாகம் _ மேடை நாடகம் (நகலச்சு)
- வெறும் தோற்ற மயக்கங்களோ?
- பஞ்சதந்திரம் தொடர் 36 – இரந்துண்ணும் நிலை எப்படி?
- குளவி கொட்டிய புழு
- அணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வரும் தவறான கருத்துக்கள்
- காரைக்குடியில் கம்பன் விழா
- சிந்தனைக்கூடமா ? காசாப்புக்கடையா ?
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 16
- ஆணவம்
- தேவனும் சாத்தானும்
- சொல்லாமல் போனது
- காந்திகிராம ஃபோட்டோ ஒன்று – அம்மா, மாமாஜி படம்
- கொன்றை பூக்கள் உதிரத் துவங்கின…
- உஷாதீபனின் “தனித்திருப்பவனின் அறை” சிறுகதைத் தொகுப்பிற்கு எழுத்தாளர் திரு நரசய்யா அவர்கள் அளித்துள்ள முன்னுரை
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18
- நீலகேசி காட்டும் உயிர்ஓர்மை (அல்லது) முக்கூட்டு மருந்து
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 12) எழில் இனப் பெருக்கம்
- ஷண்முகராஜின் ‘ ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி ‘
- ரஸ்கோல்நிக்கோவ்
- இறையன்பு எழுதிய “ஓடும் நதியின் ஓசை”- விமர்சனம்
- பேனா பேசிடும்…
- என்னவென்று அழைப்பது ?
- ”கீரை வாங்கலியோ…கீராய்…!”
- கலாசாரத் தொட்டில்
- “ஊசியிலைக்காடுகள்”
- முன்னணியின் பின்னணிகள் – 33
- தாகூரின் கீதப் பாமாலை – 5 காதல் பித்து
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி ரெண்டு
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 5