மாரியம்மன் கோவில்தான் பொன்மலை ரயில்வே காலனிக்குள் இருக்கும் கடைசி பஸ் ஸ்டாப். ஆனால் பஸ்ஸைவிட்டு இறங்கிக் கோவில்பக்கம் நடக்காமல் நேராக வடக்குப் பக்கம் நடந்தால் வரும் மண் ரோட்டில் வலது புறம் திரும்பினால் இருக்கும் நான்கு வீடுகள் கொண்ட ப்ளாக்கில் கோடி வீடுதான் என் நண்பன் ராஜேந்திரன் வீடு. ராஜேந்திரனின் அக்காவும் என் அக்காவும் வகுப்புத் தோழிகள் என்பதால் அவன் வீட்டிற்கு அடிக்கடி கணக்கு நோட்டு, ரெகார்ட் நோட்டு என எதையாவது வாங்க என் அக்கா என்னை ஏவி விட்டுக்கொண்டே இருப்பாள். வகுப்பறையில் பாடங்களை எழுதாமல் ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்காமல் என்னதான் செய்வாளோ தெரியாது. அவள் அப்படி இருந்ததுவும் நல்லதாகத்தான் போயிற்று. நானும் பெரிய மனுஷன் மாதிரி, ” க்ளாஸ்ல என்னதாண்டி பண்ணுவ ” ? என்று கொஞ்சம் குரலை சத்தமாக்கிக் கேட்க ஆரம்பிக்கும்போதே என் கையில் ரெண்டு பைசாவையோ அல்லது ஏதாவது மிட்டாயையோ அழுத்திவிடுவாள். ஆனால் நானும் ராஜேந்திரனும் ஒரு நாள் கூட படிப்பு சம்பந்தமாக எந்தவிதமான பரிவர்த்தனைகளும் செய்துகொண்டதே இல்லை.
ராஜேந்திரன் வீட்டுக்குப் பக்கத்து வீடு, பட்டாபிராமன் நாயுடு என்கிற ஒர்க் ஷாப்பின் சீஃப் மெக்கானிகல் எஞ்சினீயர் அலுவலகத்தில் வேலை செய்கிற ஹெட் க்ளார்க்கின் வீடு. ஒருமுறை சந்தைக்குப் போய்விட்டு வரும்போது அப்பா அவரைப் பார்த்து ” குட் மார்னிங் ” என்று வணக்கம் சொன்னபோது அவர் ஒன்றுமே சொல்லாமல் பார்க்காத மாதிரி போனார். பக்கத்தில் வந்துகொண்டிருந்த அப்பாவுக்குத் தெரிந்த ஒருவர் ” நீங்க கூப்பிட்டது சார் காதுல விழல போல இருக்கு ” என்று சொன்னது உண்மையாயிருக்குமென நினைத்து அப்பா, ” பட்டாபி, குட் மார்னிங்க் ” என்று இன்னும் கொஞ்சம் சத்தமாகச் சொல்ல, இந்த முறையும் அவர் பார்க்காமல் போக, பக்கத்தில் வந்துகொண்டிருந்தவர் அப்பாவுக்கு அவ்வளவுதான் மரியாதை என்கிற மாதிரி ஒரு சிரிப்பு சிரித்தவுடன் கோபமான அப்பா, ” க்காளி! கிறுக்குப்பய! இவனெல்லாம் ஒர்க் ஷாப் பட்ஜெட் போட்டு ரயிலு எங்க வாழப்போறது? ” என்றார். சமயம் தெரியாமல், ” இவருதான் ரயில்வே பட்ஜெட் போடறாராப்பா ?” என்று நான் கேட்டதில் இன்னும் கோபமாகிப் போன அப்பா வேறு நாலு ஸ்ட்ராங்கான கெட்டவார்த்தைகள் போட்டு ” இவன் ஷாப்புக்கு போட்ற பட்ஜெட்டே ததிங்கினத்தானா இருக்கு. இன்னும் மொத்த ரயிலுக்கே பட்ஜெட் போட்டான்னா ரெண்டு வருஷத்தில ரயிலு காலியாய்ப் போயிடும் ” என்றார். அது என்ன ததிங்கினத்தான் பட்ஜெட் என்று எனக்குப் புரியவில்லை. ஆனாலும் இப்போது அப்பாவிடம் அதற்கு அர்த்தம் கேட்கமுடியாது. ஆனால் கொஞ்ச தூரம் நடந்தபின் அப்பா மனசு சமாதானமாகி, ” நல்ல வேலக்காரன்தான்! ஆனா கிறுக்கு ” என்று எனக்கு பதில் சொல்லுவதுபோல அவர் தன்னையே திருத்திக்கொண்டார்.
உண்மையில் பட்டாபிராமன் கிறுக்கு என்றுதான் தோன்றியது. வேஷ்டிக்குள் சட்டையை ‘ இன்’ பண்ணிக்கொண்டு, சோடாபுட்டிக் கண்ணாடியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பிதுங்கி வெளியே விழுந்துவிடுமாறு துருத்திக்கொண்டிருக்கும் கண்களைத் தேவை இல்லாமல் மேலும் விரித்து அவர் பெண் பூங்கோதை என்கிற கோதையிடம் ஹிஸ்டீரிக்கலாகக் கத்தும்போது இவர் எப்படி ரயில்வேக்கு பட்ஜெட் போடமுடியும் என்று பார்ப்பவர்களுக்கெல்லாம் கவலை வரத்தான் செய்யும். அவரை மேலும் ஹிஸ்டீரிக்கலாகக் கத்தவைக்கவென்றே அவ்ர் வீட்டில் ரெண்டு மாமரங்கள் வீட்டின் பின்புறம் அவர் பெண் பூங்கோதையைவிடச் செழிப்பாக வளர்ந்திருந்தன. பட்டாபிராமன் மாமாவை நாங்கள் ‘ நாயுடு மாமா ‘ என்றுதான் அழைப்போம். ஒருதடவை என்கூட வந்த என் தம்பி ராஜா பட்டாபிராமன் மாமாவை நான் நாயுடு மாமா என்று கூப்பிடுவதைப் போலவே அவரின் அருமைப்பெண் கோதையை ‘ நாயுடு அக்கா ‘ என்று கூப்பிட்டதில் நாயுடு மாமா மஹா ருத்ரராகி மாங்குச்சியை எடுத்துக்கொண்டு என் தம்பியை அடிக்கக் கிளம்பிவிட்டார். அப்படிப் பசங்களை அடிப்பதற்காக அவர்களைத் துரத்துவது வழக்கம்தான். மாமரங்கள் நன்றாகக் காய்த்திருக்கும்போது அந்த ஏரியாவின் விடலைகளும் சின்னவர்களும் கல்விட்டெறியும்போது அவர்வீட்டிற்குள்ளும் வீட்டின் மேலும் விழும் கற்கள் எழுப்பும் சப்தம்தான் அவரை மாங்குச்சியை வைத்துக்கொண்டு பசங்களை விரட்டவைக்கும். ஒவ்வொரு முறையும் இந்தத் தொந்தரவு தாங்காது மாமரங்களை வெட்டிவிடவேண்டும் என்று சொல்லிக்கொண்டுதானிருந்தார்.
அந்த வருடம் ஃபெப்ரவரி மாதத்தில் அந்த மாமரங்கள் பூவிட ஆரம்பிக்கும்போதிலிருந்தே நாயுடு மாமா சற்று சரியாகத்தான் இல்லை. அவர் பெண் கோதையும் சதாசர்வ காலமும் கையில் ட்ரான்ஸிஸ்டரோடு விவித் பாரதி மயக்கத்தில் இருந்துகொண்டிருந்ததோடல்லாமல் எப்போதும் ஆண் பிள்ளைகளோடேயே பேசிக்கொண்டிருந்ததில் பெண்ணின் மேலிருந்த கோபத்தைத் தன் மனைவியிடம் அடிக்கடிக் காண்பித்துக்கொண்டிருந்தார். கொஞ்ச நாளில் மாமரத்தில் நிறைய பிஞ்சுகள் சிரித்துக்கொண்டிருந்தன. உருண்டை உருண்டையாக, அந்தப் பெண் கோதையின் கண்களைப் போலவே மாவடுக்கள் நிறைந்து அந்த மாமரங்கள் பச்சைக்கண்களால் சிரித்துக்கொண்டிருந்தன. அம்மா போனதடவை சந்தைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த அப்பாவிடம், ” நல்ல உருட்டை வடுவா இருந்தா ஒரு பத்து கிலோ மாவடு வாங்கிண்டு வாங்கோ ” என்று இட்ட கட்டளை அப்பாவிற்குப் பிடிக்கவில்லை. அவர் தன் கண்களை மாவடு மாதிரி உருட்டி, ” காசு இருந்தா உங்கப்பங்கிட்ட வாங்கிக்குடு. பத்து என்ன இருபது கிலோவே வாங்கிண்டுவரேன் ” என்று அனாவசியமாக, செத்துப்போன என் தாத்தாவிடம் காசு கேட்கச் சொன்னதில் கோபமான அம்மா, அன்று சமைக்காது சுவரோரமாய்ப் படுத்துவிட்டாள். அம்மாவின் கோபம் தாங்காத எனக்கு, மாவடுவை எதற்குக் காசுகொடுத்து வாங்கவேண்டும்; நாயுடு மாமா வீட்டு மரங்களிலிருந்து பறித்துக் கொண்டால் என்ன என்ற விபரீத எண்ணம் திடீரென வந்துவிட
ஒரு சின்ன பையோடு என் மானசீக பைக்கை விரட்டிக்கொண்டு கிளம்பிவிட்டேன்.
நாயுடு மாமா வீட்டின் முன் பக்க வராண்டாவில் பெரிய பெரிய கோடுபோட்டத் தாள்களில் நிறைய நம்பர்களை எழுதிவைத்துக்கொண்டு, பென்சிலை அவ்வப்போது உதடுகளில் தட்டிக்கொண்டு நெற்றி சுருங்க யோசித்துக்கொண்டிருந்தார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒருவரிடம், ” இந்த ஃபைனல் மாடிஃபிகேஷன் ப்ரொஜெக்ஷன் ரெண்டு நாளைக்குள்ள அனுப்பியாகணும். அனுப்பாட்டா கழுத்துக்குக் கத்திவச்சுடுவான் எங்க ஒர்க்ஸ் மேனேஜர். நீ இன்னிக்கு இங்க உக்காந்து முன்னாடியே என் கழுத்த அறுக்காத. அடுத்த வாரம் வா. பாக்கலாம் ” என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் உட்கார்ந்திருந்தவர் எழுந்து போவதற்கான அறிகுறியே தெரியவில்லை.
நான் இதுதான் சமயம் என்று நைஸாக வீட்டின் பின்பக்கம் மாமரங்கள் இருக்குமிடம் நோக்கி நகர்ந்தேன். அங்கு ஏற்கனவே என் நண்பன் ராஜேந்திரன் தனியாக கோலி விளையாடிக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததில் சந்தோஷமாகி ” வாடா விளையாடலாம் ” என்றான். நான் வந்த நோக்கத்தை அவனிடம் சொல்லி அவன் பதிலுக்குக் காத்திராமல் மரத்தின் மீது விருவிருவென ஏறஆரம்பித்துவிட்டேன். ஒரு கிளையின் மீது சற்று வாகாக உட்காரலாம் என்று நின்ற போதுதான் மரம் முழுக்க நிறைய கட்டெறும்புகளும் சுள்ளெரும்புகளும் ஊர்ந்துகொண்டிருந்தது தெரிந்தது. என் சட்டையிலும் ட்ரௌசரிலும்கூட எறும்புகள் இருந்தன. ஒருமுறை கட்டெறும்பு ட்ரௌசரினுள் புகுந்து எக்குத்தப்பான இடத்தில் கடித்ததில் பட்ட அவஸ்தையை யாரிடமும் சொல்லமுடியாமல் தவித்தது ஞாபகம் வந்தது. ஆனாலும் மாவடுதான் எனது இலக்கு என்ற லட்சிய வெறியோடு நான் மரக்கிளையை உலுக்கினவுடன் வீலென்ற ஒரு பெண் குரல் அலறியதைக் கேட்டவுடன் என் சப்த நாடியும் அடங்கிப் போய்விட்டது. சற்று நிதானித்து என்ன சபதம் என்று பார்ப்பதற்காகத் தலையைக் குனிந்தால் அங்கே வீட்டிற்குள் கோதை அக்கா குளிப்பதற்காக நின்று கொண்டிருந்தது தெரிந்தது. என் தலையை மாத்திரம் பார்த்துவிட்டு யாரோவென நினைத்து அவள் கத்தியதில் நாயுடு மாமா ” ஏமீராஆஆஆ.. ” என்று கத்திக்கொண்டே பின் பக்கம் வேஷ்டி அவிழ்ந்துவிழ ஓடிவந்தார். விஷயத்தின் விபரீதம் புரிந்து நான் பதினைந்தடி உயரத்திலிருந்து குதிக்க முயன்றபோது விஷயம் புரியாமால் ” ஏய், என்னடா” என்று பயந்துபோய் கீழே நின்ற ராஜேந்திரன் வேறு அலற நல்லவேளையாக நான் குதித்ததில் கொஞ்சம் சிறாய்ப்புகளோடு தப்பித்தேன். குதித்தவுடன் ராஜேந்திரனையும் இழுத்துக்கொண்டு அவன் வீட்டிற்குள் நுழைந்து ” உஷ்” என்று சைகையாலேயே அவனை அடக்கிவிட்டேன். ராஜேந்திரன் அம்மா எங்களைப் பார்த்து ‘ என்னடா” என்று கேட்டபோது ” ஒண்ணுமில்ல, விளையாடறோம் ” எனச் சொல்லிச் சமாளித்தேன். கொஞ்ச நேரம் கழித்து வெளியே போய்ப்பார்த்த போது பெரிய கும்பல் நின்று கொண்டிருக்க நாயுடு மாமா ஒரு அண்ணனைப் பிடித்து கைகளைக் கட்டிக்கொண்டிருந்தார். ” என்ன ஒரு அயோக்கியத்தனம் பாருங்க! எல்லாம் கலிகாலம்தான். மரத்துல ஏறி நின்னு குளிக்கிற பொண்ண பாக்கிறதுன்னா இவன என்ன செய்யறது ? ” என்று ஒருவர் கேட்க அந்த அண்ணனைப் போலிஸில் ஹேண்ட் ஓவர் பண்ணச் சொல்லியும், கட்டி வைத்து உறிக்கச் சொல்லியும் இன்னும் என்னென்னவோ ஆளாளுக்கு அட்வைஸ் செய்து கொண்டிருந்தார்கள். கோதை அக்கா உள்ளே உக்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். அடிக்கடி பிடித்துவைத்திருந்த அண்ணனைப் பார்த்து விசும்பிக்கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் நாயுடு மாமா வீட்டு முன்பக்கத்தில் யாரோ நுழைவதுபோல நிழலாடியதில் பயந்து நான், ” திருடன் திருடன் ” என்று கத்த பின் பக்கம் இருந்த எல்லா கும்பலும் ” எங்க ? ” என்று கத்திக்கொண்டே முன்பக்கம் ஓடிவர மாட்டிக்கொண்ட அண்ணன் இதுதான் சமயமென்று கோதையைப் பார்த்துக்கொண்டே ஓடிப்போனது. கடைசியில் வீட்டிற்குள் வந்துபோனது நாயுடு மாமாவுடன் முன் பக்கம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த ஆள் எனத் தெரிந்ததில் சலிப்பான நாயுடு மாமா எல்லோரையும் போங்க என்று விரட்டிவிட்டு கொஞ்ச நேரம் படுத்துவிட்டார்.
ஒருமணி நேரம் கழித்து எழுந்த நாயுடு மாமா அவரின் பட்ஜெட் பேப்பர்களைத் தள்ளிவைத்துவிட்டு, ” டேய் வெங்குட்டு! இஞ்ச வாடா” என்று காலையிலிருந்தே பழியாய் அவரிடம் உட்கார்ந்திருந்த ஆளை அழைத்து, ” இது என்னன்னு தெரியுமாடா உனக்கு? வருஷ ஆரம்பத்துல போட்ட பட்ஜெட்டை, மாசாமாசம் ஆறசெலவப் பாத்துக்கிட்டே வந்து அந்த செலவுக்குத்தக்கண ஆகஸ்ட்டு மாசம், டிசம்பர் மாசம்னு ரெண்டு தவணை பட்ஜெட்டத் திருப்பி ஒருக்கா மாத்தணும். அத்தோட இல்லாம இப்ப கடேசியா ஒருக்கா திருப்பிப் பாத்து இன்னும் பணம் எதுனாச்சும் வேணுமா இல்ல இருக்கிறதே ஜாஸ்தின்னா வாங்கினதில மிச்சப்படும்கிறத திருப்பிக்கொடுக்கிறமான்னு ரொம்ப கவனமாப் பாக்க வேண்டிய ஃபைனல் மாடிஃபிகேஷன் இது. காலயிலேந்து இங்க நடக்கற கூத்துல நான் என்னத்தப் பாக்கறது? இதுல நீ வேற இன்னிக்கு எனக்கு? எங்க அந்த உயிலு? ” என்று அந்த மனிதர் கொண்டுவந்திருந்த பேப்பர்களை வாங்கி வேகமாய் ஒருமுறை படித்துவிட்டு, பென்சிலால் சில திருத்தங்களைச் செய்துவிட்டு, ” இத பாரு! உங்கப்பா என்னப் படிக்க வச்சு ஆளாக்கினதுக்கு, நாஞ்செய்யற நன்றி இது! எம்பொண்ண ஒம்புள்ளக்கிக் கட்டிவச்சு சீரங்கத்தில இருக்கிற இந்த வீட்ட சீதனமாக் கொடுத்திடலாம்னு இருந்தேன். அது நடக்காது போலருக்கு. சரி போ! ஒன் கஷ்டத்துக்கு இல்லாம பின்னால இது எதுக்கு. பேரு ஊரு மத்தெதெல்லாம் சரியா இருக்கான்னு பாத்துட்டு வக்கீல்கிட்ட கையெழுத்து வாங்கிக்க! அடுத்த வாரத்தில ரெஜிஸ்ட் ரேஷன் வச்சுக்கலாம் ” என்றார்.
இவற்றையெல்லாம் சமையல்கட்டுச் சுவற்றின் பின்புறம் மறைந்து பார்த்துக்கொண்டிருந்த கோதையக்கா என்னை சைகையால் கூப்பிட்டாள். ” என்ன ” என்று பக்கத்தில் போய்க் கேட்டபோது உருண்டை மாவடு நிறைந்த ஒரு பையை என் கையில் கொடுத்தாள். ராஜேந்திரன் பக்கத்திலிருந்து சிரித்துக்கொண்டிருந்தான்.
— ரமணி
- அன்புத் தம்பி புனைப் பெயருக்கு
- முள்வெளி – அத்தியாயம் -3
- சந்திரா இரவீந்திரன் ‘நிலவுக்குத் தெரியும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு
- ஏப்ரல் 29, 21: பாரதிதாசன் பிறந்த நாள்-மறைந்த நாள் நினைவுச் சிறுகதை: ஒரு சந்திப்பு, ஓர் அங்கீகாரம்
- தகழியின் ’செம்மீன்’ – ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் புதிதாய்
- தங்கம்
- தமிழில் ஒலிவடிவமும் சொல்லமைப்பும்- மற்ற மொழிகளோடு ஒரு ஒப்பீடு
- கொசுக்கள் மழையில் நனைவதில்லை.
- கவிஞர் சக்திஜோதியின் ‘நிலம் புகும் சொற்கள்’கவிதை தொகுப்பின் அறிமுகமும் விமரிசனமும்
- சுணக்கம்
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து – தீ வளர்க்கும் தியானம் – 5
- ஒரு வேண்டுகோள்:உதவிக் கரங்களை எதிர்பார்க்கும் ஞானாலயா
- சங்ககிரி ராஜ்குமாரின் ‘ வெங்காயம் ‘
- பஞ்சதந்திரம் தொடர் 37 38 – சோமிலகன் என்ற நெசவாளி
- Behind the Beautiful Forevers- ’கேதரின் பூ’வின் புத்தகத்தை முன்வைத்து
- சோபனம்
- குதிரை வீரன்
- கடைசித் திருத்தம்
- தூக்கணாங் குருவிகள்…!
- யானைமலை
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) அங்கம் -2 பாகம் – 18
- அரிமா விருதுகள் 2012
- விளையாட்டு
- புதுப்புனல் விருது 2012 ஏற்புரை – நானும் என் ஸ்குரூ டிரைவரும்
- மொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை!
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -20
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் துருவங்களில் நோக்கிய தோரண ஒளிவண்ணங்கள் (Aurora) !
- “சூ ழ ல்”
- வார்த்தைகள்
- ஓ… (TIN Oo) ………….!
- உங்களில் யார் அடுத்த பிரபுதேவா
- அதுவே… போதிமரம்….!
- சவக்குழி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 14) எழில் இனப் பெருக்கம்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்து நாலு
- தாகூரின் கீதப் பாமாலை – 7 இனியது வாழ்க்கை.
- பழமொழிகளில் கிழவனும் கிழவியும்
- “சமரசம் உலாவும்……..”
- எஸ்.ஷங்கரநாரயணனின் ம.ந.ரா.பற்றிய கட்டுரை
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – – 7
- Ku.Cinnappa Bharathy Award 2011