தகழியின் ’செம்மீன்’ – ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் புதிதாய்

This entry is part 5 of 41 in the series 8 ஏப்ரல் 2012

 

தகழியின் ’செம்மீன்’ என்ற மகத்தான மலையாள நாவலின் ஆங்கிலப் பதிப்பு வெளியாகி( 1962)  ஐம்பது ஆண்டுகள் நிறைவாகின்றன. மலையாள நாவல் 1956-ல் வெளியானது. ஐம்பது ஆண்டுகள் கழிந்தும்  நாவல் வாசகர்களை இன்னும் புதிதாய் வசப்படுத்துகிறது. அண்மையில் தான் முதல் முதலாக செம்மீன் நாவலை வாசித்தேன். சுந்தர ராமசாமியின் தமிழாக்கம் அது. இரண்டே நாட்களில் வாசிப்பு வாசிப்பைத் தூண்ட வாசித்து முடித்து விட்டேன். தகழி இந்த  நாவலை இருபது நாட்களுக்குள் எழுதி முடித்து விட்டாராம். ஆச்சரியமில்லை. எழுதும் போது எழுதுவதே எழுதுவதைத் தூண்டி அவர் இந்த நாவலை முடித்திருக்க வேண்டும். கதை தகழியாயிருக்க வேண்டும். தகழி கதையாகியிருக்க வேண்டும்.

கறுத்தம்மா? என்று அடிவயிற்றிலிருந்து குரலெடுத்து அலறுகிறான் பழனி. சூறைக் காற்றில் உக்கிரம் கொண்டிருக்கும் ஆழ்கடல் தோணியிலிருந்து  அவன் அலறல் எதற்கு? கடலுக்குச் செல்லுகிற கணவனின் உயிர் கரையில் இருக்கும் மனைவியிடம் தான் இருக்கிறது. கடற்கரை மீனவர்கள் நம்பும் தொன்மம் இது. ’தன் கறுத்தம்மா தவம் காத்திருப்பாள்; தன் உயிர்க் கயிற்றைப் பிடித்திழுத்துக் கரை சேர்த்து விடுவாள்’ என்று பழனியின் அலறல் வீறிடுகிறது; விண்ணப்பிக்கிறது கறுத்தம்மாவோ தன் பரீக்குட்டியைத் தழுவிக் காதலில் தோய்ந்திருக்கிறாள் கரையில். தோணியை ஆழ்கடலில் இழுத்துச் சென்று கொண்டே இருக்கும் சுறா மீனோடும் சூழும் அலை அரவங்களில் சீறும் கடலோடும் போராடும் பழனியை ஒரு ராட்சஸ அலை முறியடித்து மூழ்கடித்துப் போகிறது. ஆரத் தழுவிக் கொண்டு இரு உடல்கள்- கறுத்தம்மாவும், பரீக் குட்டியும்- கரையில் ஒதுங்கின. கறுத்தம்மவின் பெண் குழந்தை ‘ அம்மா; அப்பா’ என்று அனாதையாய் அலறியபடி அழுது  கொண்டிருந்தது. தூண்டிலை விழுங்கி விட்ட சுறா மீனும் அடுத்த ஊரில் கடற்கரையில் ஒதுங்கியது.

மேற் சொன்னது தகழியின் ‘செம்மீன்” நாவலின் இறுதிப் பகுதியின் சுருக்கம். கதையின் முடிவின் உருக்கமும் வெறுமையும் கடல் போல் பரந்திருக்கிறது. மீனவர்களின் வாழ்க்கையின் எளிமை போல் நெத்தியில் அடிக்கிறது. எப்படி மனித வாழ்வு பல்வித உணர்வுகளில் அலைக்கழிக்கப்படுகிறது? அந்த அலைக்கழிப்புகள் கடல் அலைகள் போல் இல்லையா?  நில்லாத கடல் அலைகளோடு  தங்கள் வாழ்க்கையை இணைத்துக் கொள்ளும் மீனவர்களின் வாழ்க்கையின் நிச்சயமென்ன? அதன் உண்மையென்ன? பெண்கள் மேலான கற்பு நிலையில் அது கட்டமைக்கப்பட்டு விடுமா? அது ஆணாதிக்கமா இல்லையா என்றெல்லாம் விவாதிக்கலாம். அது சரியா தவறா என்று வாதிக்கலாம். மனத்தின் அலைக்கழிப்புகளில், வாழ்க்கை மதிப்பீடுகளை வெல்லும் உருக்கங்களை அடைகிறது.  ஆழ் கடலில் ராட்சஸ மீன் இழுத்துப் போனது போல் தான் கறுத்தம்மா மேலான சந்தேகம் பழனியை இழுத்துப் போனது; ஒருவனுக்கு மனைவியாகியும், ஒரு குழந்தைக்குத் தாயாகியும் கடலில் துள்ளி விளையாடும் செம்மீனாக கறுத்தம்மாவால் இருக்க முடியவில்லை. பால்ய காதலை மறக்க முடியாமல், கடற்கரையில் பாடிக் கொண்டே இருக்கும் தன் பரீக்குட்டி மேல் தான் அவளுக்கு   ஆசை. கடலை  விட்டுக் கரையில் துள்ளிச் சாகும் செம்மீனாய் அவனோடு சாவில் வாழ்க்கையை இணைத்துக் கொள்கிறாள் கறுத்தம்மா. நாவலின் ஈர்ப்பும் உயிர்ப்பும் இந்த சோக முடிவிலா? அதுவும் சமூகம் கட்டமைத்த  வாழ்க்கையை மீறிக் கண்டடையும் காதலில் கறுத்தம்மா என்ற ஒரு பெண்ணை முன்னிறுத்துவதாலா? அவள் சமூகம் நம்பும் ஒரு தொன்மத்தை மீறிக் கடலுக்கு மாசு கற்பித்து விட்டால் என்பதாலா? அது மாசு தானா? இதற்கு முன்னால் யாரும் கடலுக்கு இப்படிப்பட்ட மாசு கற்பிக்கவில்லையா? இது கறுத்தம்மாவே கேட்டுக் கொண்டிருந்த கேள்வி தானே. ஒரு முஸ்லீம் வியாபாரியைக் காதலித்தது தவறா? காதலித்ததால் அவள் கெட்டுப் போனவள் ஆகி விடுவாளா? அப்படித் தானென்று சமூகத்தின் அவநம்பிக்கை அவள் எங்கு சென்றாலும் துரத்தியதே. பிறந்த ஊரை விட்டு கணவன் ஊருக்குச் சென்ற பின்னாலாவது அலர் இல்லாது போகும் என்றால் போகவில்லையே? தனது சுதந்திர உணர்வுகளுக்கும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் இடையிலான முரணில் அகப்பட்ட கறுத்தம்மாவுக்கு, கட்டிய கணவனுக்காய் தவம் காக்க முடியாது கடலில் சென்ற கணவனும் திரும்பி வாரானென்றாக ,விரும்பியவனோடு வாழ்க்கையை  முடித்துக் கொள்வது தான் முரணிலிருந்து தப்பும் வழியா? அது சரி தானா? வாழ்க்கையின் போக்குகளை நாவல் உள்ளது உள்ளபடியே படம் பிடிக்கும் போது மேற்சொன்ன கேள்விகளையும் நம்முள் எழுப்பிச் செல்கிறது.  ஆனால் இந்தக் கேள்விகளுக்குத் திட்டவட்டமான பதில்களில் நாவல் உறைந்து விடவில்லை. எப்படி வாழ்க்கை நதியை அறிவார்த்தமான தர்க்கங்களில் உறைய வைக்க முடியும்?

எப்படி கடலலைகள் போல் வாழ்க்கையில் நிகழ்வுகள் புரண்டு புரண்டு வருகின்றன? அதனால் எப்படி மனிதர்கள் நிலை மாறி மாறிப் போகிறது?     தோணியும் வலையும் இல்லாமல் இருந்த செம்பன் குஞ்சு தோணியும் வலையும் சொந்தமாய் வாங்கி  ஒரு பிரமுகனாகிறான்.  கடைசியில் மிஞ்சியது என்ன? மனைவி இல்லை; குழந்தைகள் இல்லை; தோணியும் வலையும் இல்லை. பைத்தியமாகிப் போகிறான். பரீக்குட்டி செம்பன் குஞ்சுவுக்குப் பணம் கொடுத்து வியாபாரமும் அழிந்து ஒன்றுமில்லாமல் உருக்குலைந்து போய் விட்டான். அனாதையான பழனி, கறுத்தம்மாவைக் கைப்பிடித்த பின்னாலாவது ஒரு பிடிப்பிருக்கும் என நினைத்தான். ஆனால் ஊர் கறுத்தம்மவின் பழைய கதையை அவன் பின்னால் பேசப் பேச அந்தப் பிடிப்பும் கை கூடவில்லை. சக மீனவர்களும் அவனைக் கடல் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளாமல் கைவிட தன்னந்தனியனாய்க் கடலில் மீன் பிடிக்கப் போகும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். கடைசியில் வாழ்க்கையில் மிஞ்சுவது என்ன? தனிமையும் வெறுமையும் தாமா? தகழியின் நாவலின் ஈர்ப்பும் உயிர்ப்பும் இந்த அடிப்படைக் கேள்விகளில் நிலை கொண்டுள்ளது.

நாவல்  நமக்கே தெரியாது நம்முள்ளிருக்கும் வஞ்ககங்களையும், நல்லெண்ணங்களையும் துல்லியமாக்குகிறது. பரீக்குட்டியின் பணத்தில் தோணியும் வலையும் வாங்கினாலும், செம்பன் குஞ்சுவுக்கு பரீக்குட்டிக்கு வியாபாரத்திற்கு மீன்களைத் தர வேண்டும் என்ற நினைப்பே இல்லை. பணம் பிரதானமாகிறது. அவனுக்கு பரீக்குட்டிக்குத் தர வேண்டிய கடன் குறித்து அக்கறையே இல்லை. கறுத்தம்மாவுக்கு கடனைத் திருப்பித் தர வேண்டும் என்ற மன அரிப்பு அவனைக் காதலிப்பதால் என்பதை விட, பெற்ற கடனைத் திருப்பித் தர வேண்டும் என்ற அற நிலைப்பாட்டில் வேரூன்றி இருக்கிறது. இதற்கு மாறாய், பரீக்குட்டியின் கறுத்தம்மா மேலான காதலிலில்  ஒரு சுயநலச் சாயல் இல்லாமல் இல்லை. அவன் கறுத்தம்மாவின் தந்தை செம்பன் குஞ்சுவுக்கு கடனுக்குத் தரவில்லையென்று உதவியதிலும் கறுத்தம்மா மேல் காதலால் என்பதை செம்பன் குஞ்சு அவனைக் குற்றம் சாட்டும் போது அவன் மெளனமாயிருக்கிறான். அவன் அப்பாவி என்பதால் உண்மையாகவே கூட உதவியிருக்கலாம். ஆனாலும் கறுத்தம்மாவைக் காதலித்ததால் அவன் செய்த உதவி மேல் கருநிழல் படர்கிறகிறதா? அது அவன் குற்றமா? செம்பன் குஞ்சுவுக்குப் பணம் சேர்ந்ததும், வயதாகியும் இன்ப சுகம் காணும் விழைச்சு ஏற்படுகிறதே. அது அவனது மனைவி சக்கியின் மரணத்துக்குப் பின் இன்னொருத்தியை மணந்து நிறைவேறி, இறுதியில் அல்லலாகிப் புதிதாய் மணந்தவளையே வீட்டை விட்டு விரட்டி விடும் அவலத்தில் முடிகிறது. இப்படி மனதின் சந்து பொந்துகளில் அரவங்களென உறங்கிக் கிடக்கும் உணர்வுகளையெல்லாம் நாவல் எதார்த்தமாய்க் கையாள்கிறது. கிடைத்து விரும்பாத பழனியோடான  வாழ்வுக்கும், விரும்பி பரீக்குட்டியோடு கிடைக்காது போன வாழ்வுக்கும் இடையில் அகப்பட்டுத் தத்தளிக்கும் கறுத்தம்மாவின் மனவோட்டங்களைக் நுணுக்கமாய் சித்தரிக்கிறது நாவல். சின்ன வயதிலிருந்து நேசித்த கடற்கரையிலிருந்து பிரிய நேரும் கறுத்தம்மாவுக்கு கடற்கரையில் கிடக்கும் தோணியின் மறைவுக்கும் சென்று பார்த்துப் பிரிய வேண்டியிருக்கிறது. கட்டிய கணவனின் பக்கத்தில் படுத்திருந்து பரீக்குட்டியை நினைத்துக் கொண்டு ‘எனக்கு அவனிடம் ஆசை தான்’ என்று முணுமுணுக்க, ஆசை என்று கேட்ட கணவன் யாரிடம் என்று கேட்கும் போது ‘உன்னிடம்’ என்று கறுத்தம்மா பச்சைப் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது.

நாவல் கேரளக் கடற்கரை வாழ் மீனவர்களின் வாழ்க்கையைச் சுற்றிப் பிண்ணப்பட்டிருப்பதால் அவர்களின் சமூக அமைப்புகள், பிரிவுகள், கட்டுப்பாடுகள், நம்பிக்கைகள்  என்ற பன்முக தளங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் அலைக்கழிக்கும் பேராசை, கோபதாபம், பொறாமை,சந்தேகம், விரக்தி, வீர்யம், சோகம், நேசம்  என்ற பல்விதமான உணர்வுகளில் குழைத்துக் குழைத்துச் சொற்சித்திரம் தீட்டி நாவல் நகரும் போது வாழ்க்கையின்  இருண்மை, வெறுமை  என்ற அடிப்படையான கேள்விகளையும் எழுப்பிக் கொண்டே நகர்கிறது. இது தான் தகழியின் இந்த நாவலின் மகத்தான வெற்றி. கறுத்தம்மாவும் பரீக்குட்டியும் விரும்பிய வாழ்க்கை அவர்களுக்கு அமையவில்லை.  பழனிக்கு அவன் விரும்பிய வாழ்வு அமையவில்லை. செம்பன்குஞ்சு புதிதாய்க் கட்டியவளோடு விரும்பிய வாழ்க்கை விரும்பியது  போல் அமையவில்லை. இது தான் வாழ்க்கையின் புரியாத புதிர். எப்போதும் வேறு விதமாய் வாழ்க்கை அமைந்திருக்கலாம் தான். ஆனால் வாழ்க்கையில் வைக்கும் ஒவ்வொரு எட்டும், அடுத்த எட்டை நிச்சயிக்கும் போது எப்படி வாழ்க்கையை விரும்பியபடி முதலிலிருந்து மறுபடியும் ஆரம்பிப்பது? வாழ்க்கை ஒரு சங்கிலி. அது தனிப்பட்டது இல்லையே. கிடைத்து விரும்பாத பழனியோடான கறுத்தம்மா வாழ்க்கை, விரும்பும் பரீக்குட்டியோடான கிடைக்காத வாழ்வோடு சம்பந்தப்பட்டுள்ளது. ஒரு வேளை வாழ்க்கையை முடித்துக் கொள்ளாமல் பரீக்குட்டியோடு  கறுத்தம்மா வாழ்க்கையை அமைத்திருந்தால் கூட, பழனியோடான வாழ்க்கையின் நிழல் வீழாமல் விரும்பும்படியாய் இருந்திருக்குமா? அதற்காக வாழ்க்கையின் பின்னிய சிக்கலைத் தீர்க்க கறுத்தம்மா பரீக்குட்டி போல் வாழ்க்கையை முடித்துக் கொள்வது விடுதலையா? வாழ்க்கையின் இருண்மையும் வெறுமையும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வெவ்வேறு தளங்களில் படர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அது எப்படி கறுத்தம்மாவின் வாழ்க்கையில் பரீக்குட்டியின் நிழல் படர்ந்து கொண்டே இருந்ததோ அது போல் தான். ஒவ்வொருவருக்கும் ஒரு விரும்பிய வாழ்க்கை ஒரு கனவாய் மனத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கத் தான் செய்கிறது. ஒரு ஜென் கவிஞன் சொல்வான்:

நான்

நிஜத்தை நிஜமென்று

ஒப்புக் கொள்ள முடியாது.

பிறகு எப்படி

ஒரு கனவை ஒரு கனவென்று

ஒப்புக் கொள்வது?

(I cannot accept

the real as real;

Then how do I accept

a dream as a dream)

கறுத்தம்மவின் சாவு இந்த வரிகளில் உயிர் பெறுகிறதா?

தகழியின் நாவலில் வாசிக்கும் போது எழும் இவை போன்ற  எண்ணங்களில் தாம் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும்  ’செம்மீன்’ வாசிப்பு  இன்னும் புதிதாய் இருக்கும் இரகசியமும், இனியும் புதிதாய் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் மனத்தில் பதிவாகிறது.

Series Navigationஏப்ரல் 29, 21: பாரதிதாசன் பிறந்த நாள்-மறைந்த நாள் நினைவுச் சிறுகதை: ஒரு சந்திப்பு, ஓர் அங்கீகாரம்தங்கம்
author

கு.அழகர்சாமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *